ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Workers and students support Sri Lankan meetings on the struggle for Trotskyism

ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டம் பற்றிய கூட்டத்தை இலங்கை தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆதரிக்கின்றனர்

By our reporters
27 September 2018

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டு 80 வது ஆண்டு நிறைவையும் சோசலிச சமத்துவக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு 50 வது ஆண்டு நிறைவையும் முன்னிட்டு கூட்டங்களை நடத்துகிறது. அந்த கூட்டங்கள் அக்டோபர் 3 அன்று பேராதனை பல்கலைக்கழகத்திலும் அக்டோபர் 7 அன்று கொழும்பு புதிய நகர மண்டபத்திலும் இடம்பெறவுள்ளன.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் இரு கூட்டங்களதும் பிரதான பேச்சாளர் ஆவார். அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரான நோர்த், நான்கு தசாப்தங்களாக சர்வதேச சோசலிச இயக்கத்தில் முன்னணி பாத்திரத்தை வகித்துள்ளதோடு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு தொடர்பாக சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆளுமை கொண்டவராவார்.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பின் உறுப்பினர்கள், வேலைத்தளங்ளிலும், தொழிலாள வர்க்க பிரதேசங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் கூட்டத்திற்காக பிரச்சாரம் செய்கின்றனர். இந்த நிகழ்வுகளின் முக்கியத்துவம் பற்றி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களதும் கருத்துக்களில் தேர்வு செய்யப்பட்ட பகுதியை இங்கே வெளியிடுகிறோம்.

துசித

கொழும்பிலுள்ள பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபர மாணவரான துசித, தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கு ஒரு சர்வதேச இயக்கம் அவசியம் என்பதை ஒப்புக் கொண்டார். "தற்போதைய சூழ்நிலையில், சமுதாயத்தின் கீழ்மட்ட அடுக்குகளின் நலன்களுக்காக போராடும் ஒரு அரசியல் அமைப்பு எங்களுக்குத் தேவை", என்று அவர் கூறினார்.

"இலங்கையில், அரசியல்வாதிகள் சாதாரண மக்களைப் பற்றி ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் மக்களுடைய உண்மையான தேவைகளை உணரவில்லை. வளர்ச்சியடைந்த நாடுகள் என்று அழைக்கப்படுகின்றவை அல்லது வளர்ச்சியுறாத நாடுகள் என எதுவானாலும் சரி, ஏனைய நாடுகளிலும் இது வேறுபட்டது அல்ல, என்பதை நான் உங்களுக்கு செவிமடுத்த பின்னர் புரிந்துகொண்டேன்."

இலங்கை மாணவர்களின் தற்போதைய போராட்டங்களைப் பற்றி சுட்டிக் காட்டிய துசித கூறியதாவது: "எங்கள் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கல்வி தனியார்மயமாக்கல், பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமை மற்றும் கடுமையான வேலைவாய்ப்பு இன்மை ஆகியவை முக்கிய பிரச்சினைகள் ஆகும். இந்த நிலைமை பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய முடியாத இளைஞர்களுக்கு மோசமாக உள்ளது. நாம் எப்படி இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியும்?

தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய பிரச்சினைகளைத் தாங்களாகவே தீர்த்துக்கொள்ள போராடுவதற்காக ஐக்கியப்பட வேண்டும். "நீங்கள் சொல்வதில் இருந்து, நான்காம் அகிலத்தின் பலம் அதன் சர்வதேச வேலைத்திட்டத்திலேயே உள்ளது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஒரு சர்வதேச சோசலிசத் தலைவர் இலங்கையில் எங்களுடன் பேசுவதற்கு வருவது மிகவும் ஊக்கமளிக்கிறது."
 


தரிந்து

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மற்றொரு மாணவர் தரிந்து, சிறிது காலமாக தான் உலக சோசலிச வலைத் தளத்தை வாசித்து வருவதாகவும் நான்காம் அகிலம் பற்றி அவர் அறிந்திருந்தாலும் அதன் வேலைத்திட்டத்தை நெருக்கமாக ஆய்வு செய்யவில்லை, என விளக்கினார். "இன்றைய அரசியல் சூழ்நிலை மிகவும் சிக்கலானது, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இந்த சிக்கல் காரணமாக குழம்பிப்போயுள்ளனர்," என அவர் தெரிவித்தார்.

இது, பழைய ஸ்ராலினிசக் கட்சிகள், போலி-இடதுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற தொழிலாள வர்க்க விரோத அமைப்புக்களால் பரந்தளவில் உருவாக்கப்படும் திட்டமிட்ட குழப்பங்கள் மற்றும் மனச்சோர்வடையச் செய்வதன் விளைவாகும் என சோசலிச சமத்துவக் கட்சி ஆதரவாளர்கள் விளக்கினர்.

இலங்கையில் மற்றும் உலக அளவிலும் ஒரு பெரிய அமைப்பு முறையின் தோல்வியின் அறிகுறியே இந்த கல்வி நெருக்கடி என பெரும்பாலான மாணவர்கள் புரிந்துகொண்டுள்ளனர் என தரிந்து தெரிவித்துள்ளார். "ஆனால் நீங்கள் விளக்கியுள்ளபடி, இந்த நெருக்கடி மூன்றாம் உலகப் போராக மாற்றமடைகிறது. கொரிய தீபகற்பத்திலும் மத்திய கிழக்கிலும் உள்ள பதட்டங்களில் அத்தகைய மோதல்களின் அறிகுறிகள் பிரதிபலித்ததை நாம் ஏற்கனவே காண்கிறோம்." இந்த மோதல்கள் அமெரிக்க மற்றும் ஏனைய ஏகாதிபத்திய வல்லரசுகளால் தூண்டிவிடப்படுகின்றன, என அவர் கூறினார்.

அக்டோபரில் சோசலிச சமத்துவக் கட்சி நடத்தும் கூட்டங்கள், "சோசலிசத்தின் ஒரு உலகத் தலைவரான டேவிட் நோர்த்தின் உரையை கேட்க எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்," என அவர் மேலும் கூறினார்.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பின் உறுப்பினர்கள், கொழும்பு துறைமுகத் தொழிலாளர்களுடனும் கலந்துரையாடினர். அந்த தொழிலாளர்களில் கூட்டங்கள் சம்பந்தமாக தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியதுடன், நான்காம் அகிலத்தின் 80 ஆண்டுகால போராட்டத்தையும் பாராட்டினர்.

இரண்டு பிரதான முதலாளித்துவ கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் மீதான தொழிலாளர்களின் போலி நம்பிக்கை நீண்ட காலத்திற்கு முன்னரே சிதைத்துவிட்டதாக துறைமுக குமாஸ்தாவான சமந்தி கூறினார்.

"ஆனால், தங்களை சோசலிஸ்டுகள் என்று அழைத்துக்கொள்கின்ற மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற கட்சிகள், மக்களுக்கு சலுகைகள் வழங்க இந்த கட்சிகளுக்கு நெருக்குவாரம் கொடுக்கக்கூடும் என்று நாங்கள் நினைத்தோம். இந்த அணுகுமுறையின் பயனின்மை சமீப ஆண்டுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உண்மையான சுயாதீனக் கட்சியை கட்டியெழுப்புவதற்கான உங்களது திட்டத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்," என அவர் கூறினார்.

2008 ஆம் ஆண்டில் உலகளாவிய நெருக்கடியின் விளைவாக கப்பல் போக்குவரத்து சரிந்து வந்தமை மற்றும் அது துறைமுகத் தொழிலாளர்கறளை எவ்வாறு பாதித்தது என்பதையும் சமந்தி விளக்கினார். "எங்கள் மேலதிக நேர சம்பளம் கூட கட்டுப்படுத்தப்பட்டது. அந்த அதிர்ச்சியிலிருந்து துறைமுகம் மீளவில்லை, நாளுக்கு நாள் எங்கள் மீது சுமத்தப்படும் கஷ்டங்களால் நாங்கள் முறிந்து போயுள்ளோம். எங்கள் தேக்கநிலை அடைந்த சம்பளத்தைக் கொண்டு உயரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாதுள்ளது. அரசாங்கம் துறைமுகத்தை தனியார்மயமாக்க விரும்புவதால் எங்கள் வேலைகள் பாதுகாப்பாக இல்லை.

"உங்களுடன் பேசிய பின்னர், எங்கள் பிரச்சினைகளின் தோற்றுவாய் உலகளவிலானது என்பதையும் அவை தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்தால் மட்டுமே தீர்க்கப்பட முடியும் என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்," என்று அவர் தெரிவித்தார்.

கொழும்பு தெற்கு துறைமுக பார ஊர்தி பகுதியில் வேலை செய்யும் ரவீந்திர, இலங்கை ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், தற்போதைய அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களையும் கண்டனம் செய்தார். ஆனால் தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள பெரும் அரசியல் பிரச்சினைகள் காரணமாக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் "சாத்தியம்" பற்றி அவர் சந்தேகித்தார். "1917ல் ஒரு புரட்சியை வென்ற அர்ப்பணிப்பு கொண்ட தொழிலாளர்கள் இருந்தனர். இப்போது அந்த அர்ப்பணிப்பை நான் பார்க்கவில்லை. இந்த சூழ்நிலையை நாம் மாற்ற முடியும் என்று நினைக்கிறீர்களா?" என்று அவர் கேட்டார்.

சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரகர்கள், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்துவரும் தீவிரமயமாதல் மற்றும் சோசலிசத்தில் வளர்ந்துவரும் ஆர்வமும் அத்தகைய அர்ப்பணிப்பு கொண்ட தொழிலாளர்களின் ஒரு புரட்சிகர இயக்கத்தின் அபிவிருத்திக்கான அஸ்திவாரங்களை அமைத்துள்ளன என விளக்கினர். ரஷ்யப் புரட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாறு குறித்து ரவீந்திர சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுடன் கவனமாக கலந்துரையாடினார்.

சோசலிச சமத்துவக் கட்சி அரசியல் வேலைத்திட்டத்துடன் உடன்படுவதாக துறைமுக ஊழியரான துஷந்த தெரிவித்தார். "மக்களை அணிதிரட்டுவதற்காக அவர்களுக்கு கல்வியூட்டுவதற்காக நீங்கள் வீட்டுக்கு வீடு செல்ல வேண்டும்," என்று அவர் கூறினார்.

"ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவரை நாம் வெல்ல முடியுமானால், ஒரு புரட்சியின் மூலம் இந்த அமைப்பு முறையை மாற்றியமைப்பது சாத்தியமே. இப்போது இருப்பது அதே பழைய தலைமுறையல்ல. இந்த அமைப்பு முறைக்குள்ளே தமது பிள்ளைகளுக்கு எதிர்காலம் இல்லை என பெற்றோர்களும் அறிவர்." துஷந்த கூட்டத்திற்கு நன்கொடை அளித்ததோடு கொழும்பு கூட்டத்தில் கலந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

க.பொ.த. (சாதாரண தர) பரீட்சைக்கு தயாராகும் துறைமுக ஊழியரின் மகனான அமில, இலங்கையில் பொருளாதார நெருக்கடி பாடசாலை மாணவர்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை விவரித்தார். "நாங்கள் எங்கள் எதிர்காலத்தை பற்றி மிகவும் நிச்சயமற்று உள்ளோம்," என அவர் கூறினார். "மாணவர்களில் ஒரு மிகச்சிறு பகுதியினர் மட்டுமே அரசாங்க பல்கலைக்கழகங்களில் சேரும் வாய்ப்பை பெறுகின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள் ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர், பட்டதாரி ஆனவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லை."

இந்த நிலைமைகளாலும் உயர்ந்த மதிப்பெண்களை அடைவதற்கான கழுத்தை இறுக்கும் போட்டியினாலும் மாணவர்கள் அரசியல், கலை, இலக்கியம் அல்லது வேறு எந்த புத்திஜீவித்தனமான நடவடிக்கைகளிலும் ஈடுபடும் வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளது என அமில கூறினார். "பாடசாலை கல்விக்கு மேலதிகமாக நான் வாரத்திற்கு ஆறு நாட்களுக்கு தனியார் வகுப்புகளுக்கு செல்கிறேன். பெரும்பாலான நாட்களில் 9 மணிக்கு பின்னரே நான் வீடு செல்வேன்.

"கடந்தகாலத்தின் கொடூரமான அனுபவங்களின் காரணமாக எங்கள் பெற்றோர்கள் நாங்கள் அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்க முனைகிறார்கள், ஆனால் எங்கள் பிரச்சினைகளை சமாளிக்க ஒரு உண்மையான சோசலிச வேலைத்திட்டம் தேவை என்பதை ஒப்புக்கொள்கிறேன். மாணவர்கள் அரசியலில் நுழைந்து சோசலிசத்தைப் படிக்கத் தொடங்க வேண்டும்."