Print Version|Feedback
US push for sanctions of China over treatment of Uyghur minority
உய்கர் சிறுபான்மையினரை நடத்தும் விதம் குறித்து சீனாவிற்கு பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது
By Peter Symonds
4 September 2018
ட்ரம்ப் நிர்வாகம், சீனா மீது அதன் வர்த்தகப் போர் நடவடிக்கைகளை அதிகரித்துவருகின்ற நிலையில், செனட்டர் மார்கோ ருபியோ தலைமையிலான அமெரிக்க சட்டமியற்றுபவர்களின் ஒரு சக்திமிக்க குழு, கடந்த வாரம், மேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் முஸ்லீம் சிறுபான்மை இனத்தவருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு சீன அதிகாரிகளைப் பொறுப்பாக்கி குற்றம்சாட்டி, அவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றை வெளியிட்டது.
உய்கர் மற்றும் ஏனைய சிறுபான்மை இனத்தவருக்கு, அத்துடன் ஒட்டுமொத்த சீனத் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக, ஜனநாயக உரிமைகள் குறித்த மொத்த மீறல்களுக்கு சீன பொலிஸ்-அரசு இயந்திரம் தான் பொறுப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பொருளாதார வளர்ச்சி குன்றியும், சமூகப் பதட்டங்கள் பெருகியும் வருகின்ற நிலைமைகளின் கீழ், சீன கம்யூனிஸ்ட் கட்சி (Chinese Communist Party-CCP) ஆட்சி, எந்தவொரு எதிர்ப்பும் அதன் ஆட்சியை அச்சுறுத்தும் வகையிலான ஒரு பரந்த இயக்கத்தின் மையமாக மாறக்கூடும் எனக் கருதி கலக்கமடைந்துள்ளது.
இருப்பினும், மனித உரிமை மீறல்கள் மீதான வாஷிங்டனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவன ஈர்ப்பு என்பது, உய்கர் சிறுபான்மையினரை பாதுகாக்கும் விதமாக எதையும் செய்துவிடவில்லை. அதாவது, வெறுமனே சீன-விரோத உணர்வைத் தூண்டவும், பிரிவினைவாத இயக்கங்களை ஊக்குவிக்கவும் மட்டுமே இது நோக்கம் கொண்டுள்ளது. சீனா குறித்த காங்கிரஸ் நிறைவேற்று ஆணையத்திற்கு (Congressional-Executive Commission on China-CECC) ருபியோ தலைமை வகிக்கிறார், இது, அமெரிக்க அரசியலில் சீனத் தலையீடு பற்றிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் நிறைந்த அறிக்கை ஒன்றை கடந்த மாதம் முன்வைத்த ஒரு சீன-விரோத அமைப்பாகும். (பார்க்க: US report on Chinese “United Front Work” seeks to whip-up hostility towards China)
ருபியோ மற்றும் காங்கிரஸின் ஏனைய 16 உறுப்பினர்களும் கையெழுத்திட்ட இக்கடிதம், ஜின்ஜியாங் உய்கர் தன்னாட்சிப் பிரதேசத்திற்கான (Xinjiang Uyghur Autonomous Region) CCP செயலர் சென் குவாங்குவோ, மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ஏனைய அதிகாரிகள் ஆகியோர் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மைக் பொம்பியோ மற்றும் கரூவூலச் செயலர் ஸ்டீபன் முனுச்சின் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தது. மேலும், கண்காணிப்புத் திட்டங்களுக்கான அரசாங்க ஒப்பந்தங்களில் இருந்து, விதிமீறி இலாபம் ஈட்டியதாகக் கூறப்படும் Hikvision மற்றும் Dahua Technology போன்ற சீன நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கும் இது அழைப்பு விடுத்தது.
“ஒரு மில்லியன் அல்லது அதற்கு அதிகமாக இயன்றளவிற்கு உய்கர்கள் மற்றும் ஏனைய முஸ்லீம் சிறுபான்மை இனத்தவர்கள் ‘அரசியல் மறுகல்விக்கான’ மையங்கள் அல்லது முகாம்’களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை,” குறித்து “ஒரு கடினமான, இலக்குடன் கூடிய மற்றும் உலகளாவிய பதில் தேவைப்படுகிறது” என்று இந்தக் கடிதம் தெரிவித்தது. மேலும், சர்வதேச அரங்கில் “இந்த மனித உரிமைகள் நெருக்கடியை மேலும் தீவிரமாக்க விரும்பும் அரசாங்கங்களுடன் கூடிய வலுவான இராஜதந்திர ஈடுபாட்டுடன்” செயல்பட வெளியுறவுத்துறைக்கு அழைப்பு விடுத்தது.
இந்தக் கடிதம் பிரசுரிக்கப்பட்டு சில நாட்களுக்குப் பின்னர், அமெரிக்க மற்றும் சர்வதேச செய்தி ஊடகம், சீனாவில் உய்கர் சிறுபான்மை இனத்தவர் மீதான துன்புறுத்தல் பற்றிய கூற்றுக்களை ஊதிப் பெரிதாக்குவதற்காக, இனப் பாகுபாட்டை அகற்றுவதற்கான (Elimination of Racial Discrimination) ஐ.நா. குழுவின் அறிக்கை ஒன்றைப் பயன்படுத்தியது. அப்போது, Los Angeles Times பத்திரிகை கூட, “இரகசிய தடுப்புக் காவல் மையங்களில் மில்லியனுக்கு அதிகமான முஸ்லீம்களை பிடித்து வைத்திருப்பதாக சீனாவை ஐ.நா. குற்றம்சாட்டுகிறது” என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையை வெளியிட்டது.
பயங்கரவாதத்தையும், மதத் தீவிரவாதத்தையும் எதிர்ப்பதற்கான சாக்குப்போக்காக பெரும் எண்ணிக்கையிலான உய்கர் இனக்குழுவினர் மற்றும் ஏனைய முஸ்லீம் சிறுபான்மையினர் மீது எவ்வித குற்றச்சாட்டோ அல்லது விசாரணையோ இல்லாமல் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் என்று தெரிவித்து, தனது கூற்றுக்கள் பற்றி தமக்குத் தாமே மிகவும் எச்சரிக்கையாக ஐ.நா. அறிக்கை உள்ளது. மேலும், கூற்றை ஆதரிக்க எந்தவித ஆதாரத்தையும் மேற்கோள் காட்டாமல், “அவர்களைப் பற்றிய மதிப்பீடுகள் பல்லாயிரக்கணக்கில் இருந்து மில்லியன் வரை உயர்வதாக உள்ளன” என்று இது அறிவித்தது.
ஐ.நா. குழுவிற்கான அதன் சமர்ப்பிப்புகளில், அமெரிக்க அடிப்படையிலான மனித உரிமைகள் கண்காணிப்பு (US-based Human Rights Watch), “குறைந்தபட்சம் பல்லாயிரக்கணக்கான உய்கர்கள்” அரசியல் கல்வி மையங்களில் எதேச்சதிகாரமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று கருத்துத் தெரிவித்தது. அத்துடன், சித்திரவதை மற்றும் இயக்கம் மீதான கட்டுப்பாடுகள், மதம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உட்பட, மனித உரிமை மீறல்கள் பற்றியும் இது குறிப்பிட்டது.
சீனா, ஐ.நா. குழுவிற்கான அதன் சமர்ப்பிப்புகளில், “மறுகல்வி மையங்கள் அல்லது தீவிரவாத-எதிர்ப்பு பயிற்சி மையங்கள் போன்றவை ஜின்ஜியாங்கில் இல்லை,” என்பதால், அத்தகைய இடங்களில் மில்லியன் கணக்கில் உய்கர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்ற கூற்றுக்கள் “முற்றிலும் பொய்யானவை” என்று கூறியது. இத்தகைய அறிவிப்புக்கள் நிச்சயமாக தவறானவை. ஏனென்றால், ஜின்ஜியாங்கில் பிரிவினைவாத உணர்வு குறித்து எழுந்த எந்தவித எதிர்ப்பு அல்லது வெளிப்பாட்டையும் பெய்ஜிங் இரக்கமின்றி அடக்கி ஒடுக்கியதுடன், செய்தி அறிக்கைகளையும் கடுமையாகத் தணிக்கை செய்தது என்பது தான் உண்மை.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் பெண் செய்தித் தொடர்பாளரான ஹூவா சன்னிங் என்பவர், “சீனாவின் இனக்குழுச் சிறுபான்மையர் கொள்கையும் மற்றும் அங்கு நிலவும் உண்மையான நிலைமையும் அமெரிக்காவின் அவர்களது விடயங்களை விட மிகவும் சிறந்ததாகவே உள்ளன” என்று கருத்துத் தெரிவித்ததன்மூலம் அமெரிக்க காங்கிரஸ் காரரின் பாசாங்குத்தனத்தைச் சுட்டிக்காட்டினார். இருப்பினும், ஜனநாயக உரிமைகள் மீதான கொடூரமான அமெரிக்கச் சான்று மற்றும் உலகெங்கிலும் உள்ள சர்வாதிகார ஆட்சிகளுக்கான அதன் ஆதரவு ஆகியவற்றை எடுத்துக்காட்டியதானது, CCP பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை நியாயப்படுத்தல் ஆகாது.
குறிப்பாக, ருபியோவும் அவரது சக சட்டமியற்றுபவர்களும், இதற்கு முன்னதாக இதே பாணியில் சுரண்டப்பட்ட நாடான திபெத்தைக் காட்டிலும் ஜின்ஜியாங் மீது அதிக கவனம் செலுத்தினர். அது ஏன் என்று அவர்களது கடிதம் குறிப்பிடுகிறது. அதாவது, சாலை இணைப்பு முன்னெடுப்பு (Belt and Road Initiative) மூலமாக தனது செல்வாக்கை விஸ்தரிக்க சீன அரசாங்கம் முயன்றுவரும் அதே நேரத்தில்,” அதன் துஷ்பிரயோகங்கள் மீதான “சர்வதேசக் கண்டனத்தை சீனாவின் தலைவர்கள் விரும்புகின்றனர் என்றதொரு கடைசி விடயத்தை” அது அறிவித்தது.
தரை மற்றும் கடல் மார்க்கமாக யுரேஷிய நிலப்பகுதியை இணைப்பதற்கான இரயில், சாலை, துறைமுகம் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் போன்றவற்றை கட்டமைப்பதற்கான ஒரு மாபெரும் சீன உள்கட்டமைப்புத் திட்டமாக சாலை இணைப்பு முன்னெடுப்பு என்பது உள்ளது. சீனாவைக் கீழறுக்கவும் மற்றும் அதனைச் சுற்றிவளைக்கவும் நோக்கம் கொண்ட, ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு” (“pivot to Asia”) எனும் திட்டத்திற்கு பதிலிறுப்பதில் முன்னேற்றம் கண்டு, பொருளாதார ரீதியாக யுரேஷியாவுடன் இன்னும் நெருக்கமாக ஒத்துழைக்கவும் மற்றும் சீனா தனிமைப்படுத்தப்படுவதைத் தடுக்கவும் பெய்ஜிங் முயன்று வருகிறது.
சீனாவின் மேற்குப்பகுதி மாகாணமான ஜின்ஜியாங், மத்திய ஆசியா வரையிலும் மற்றும் ஐரோப்பா வரையிலுமாக திட்டமிடப்பட்ட சாலை வழிகள் மற்றும் குழாய் வழிப்பாதைகளில் பெரும்பாலானவற்றை மையப்படுத்தியதாக உள்ளது. இந்நிலையில், ட்ரம்ப் நிர்வாகத்திற்கு முன்வைக்கப்பட்ட காங்கிரஸ் கடிதம், சாலை இணைப்பு முன்னெடுப்பை சீர்குலைக்கவும் மற்றும் சீனா தானாகவே உடையும் வாய்ப்புவளத்திற்கும், உய்கர் பிரிவினைவாதத்தைப் பயன்படுத்த வாஷிங்டனை ஊக்கப்படுத்த முனைகின்றது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சி.ஐ.ஏ. மற்றும் ஏனைய முகமைகள், உலகளாவிய ரீதியில் பல்வேறு உய்கர் மற்றும் திபெத்திய பிரிவினைவாத அமைப்புகள் உடனான நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ளன. Radio Free Asia என்ற அமெரிக்கப் பிரச்சார அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய முனிச் அடிப்படையிலான உய்கர் அமெரிக்க சங்கம் (Uyghur American Association) மற்றும் உலக உய்கர் காங்கிரஸ் (World Uyghur Congress) ஆகியவற்றிற்கு அமெரிக்க நிதியுதவி பெறும் ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை (National Endowment for Democracy) மூலமாக நிதி விநியோகங்கள் நடைபெற்றுள்ளன. இத்தகைய அமெரிக்க நடவடிக்கைகளை தங்களது சொந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு மற்றொரு நியாயப்படுத்துதலாக பெய்ஜிங் பயன்படுத்தியுள்ளது.
சீனாவிலுள்ள பல்வேறு சிறுபான்மை இனத்தவர்களுக்கான ஜனநாயக உரிமைகளை, அமெரிக்கா மற்றும் அதன் பல்வேறு கூட்டாளிகளின் பிற்போக்குத்தனமான சூழ்ச்சிகளின் மூலமாக வென்றெடுக்க முடியாது, மாறாக, சர்வதேசரீதியில் உண்மையான சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, அடக்குமுறை CCP ஆட்சிக்கு எதிரான ஒரு போராட்டத்தில் சீனா முழுவதிலுமான தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியம் கொள்வதனூடாக மட்டுமே அதை நிறைவேற்ற முடியும்.