Print Version|Feedback
Swedish election results in gridlock and growth of the far-right
சுவீடனில் இழுபறியான தேர்தல் முடிவுகளும் அதி-வலதின் வளர்ச்சியும்
By Gabriel Black
11 September 2018
நவ-பாசிச சுவீடன் ஜனநாயகக் கட்சியின் (Swedish Democrats) வளர்ச்சி மற்றும் அதனுடன் சேர்ந்து பிரதான நீரோட்ட அரசியல் கட்சிகளுக்கான, குறிப்பாக சமூக ஜனநாயகக் கட்சியினரை நோக்கிய உதாசீனம் ஆகியவை குறித்த பரவலான அச்சத்தின் மத்தியில் சுவீடன் தேசிய நாடாளுமன்ற தேர்தல் ஞாயிறன்று நடந்தது.
இத்தேர்தல் இரண்டு பிரதான கூட்டணிகளுக்கு இடையிலான ஒரு அரசியல் இழுபறி நிலையில் விளைந்திருக்கிறது. சமூக ஜனநாயகவாதிகள், இடது கட்சி மற்றும் பசுமைக் கட்சியினரது ஒரு கூட்டணியான “மத்திய-இடது” முகாம் 40.6 சதவீத வாக்குகளை வென்றது, மிதவாதிகள், மத்தியக் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி மற்றும் தாராளவாதக் கட்சி கொண்ட “கூட்டணி” என்றழைக்கப்படும் “மத்திய-வலது” முகாம் 40.2 சதவீத வாக்குகளை வென்றிருக்கிறது.
இரண்டு கூட்டணிகளுக்குமே சொந்தமான ஒரு அரசாங்கத்தை உருவாக்கப் போதுமான பிரதிநிதிகள் சுவீடன் நாடாளுமன்றத்தில் இல்லை. நாடாளுமன்றம் தொடங்கும் முன்பாக வரவிருக்கும் இரண்டு வாரங்களில், இரண்டு முகாம்களுமே எதிர்க் கூட்டணியின் பிரிவுகளுடன் பேரத்தில் ஈடுபடவோ இல்லையேல் சுவீடன் ஜனநாயகக் கட்சியினருடன் ஒரு உடன்பாட்டுக்கு முனைவதற்கோ முயற்சிசெய்யும்.
இந்த அரசியல் நெருக்கடியில் “ஆட்சியை தீர்மானிக்கும்” பாத்திரத்தை வகிப்பதன் மூலமாக சுவீடன் அரசியலை முழுமையாக வலதின் பக்கம் கொண்டு செல்வதற்கு தனது கட்சி முனையப் போகிறது என்பதை சுவீடன் ஜனநாயகக் கட்சியின் (Swedish Democrat) தலைவரான ஜிம்மி ஏக்கீசன் தெளிவுபடுத்தியிருக்கிறார். ஒரு தேர்தல் பேரணியில் அவர் இவ்வாறு கூறினார், “நாங்கள் நாடாளுமன்றத்தில் எங்களது பிரதிநிதிகளது எண்ணிக்கையைக் கூட்டுவோம், பின் வரவிருக்கும் வாரங்களில், மாதங்களில் மற்றும் ஆண்டுகளில் சுவீடனில் நடக்கவிருக்கும் சம்பவங்களின் மீது பெரும் செல்வாக்கை செலுத்துவோம்.”
நவ-நாஜி மற்றும் வெள்ளை-மேலாதிக்கவாத இயக்கத்தில் இருந்து தோன்றி வந்ததான, சுவீடன் ஜனநாயகக் கட்சி, 17.6 சதவீத வாக்குகளுடன் 349 தொகுதிகள் கொண்ட நாடாளுமன்றத்தில் 63 தொகுதிகளில் வென்று, சமூக ஜனநாயகக் கட்சியினர் மற்றும் மிதவாதிகளுக்குப் பிந்தைய மூன்றாவது பெரும் தனிக்கட்சியாக ஆகியிருக்கிறது. சுவீடன் ஜனநாயகக் கட்சி பெற்ற வாக்குகள், 2014 இல் 12.9 சதவீதமாக இருந்ததில் இருந்து அதிகரிப்பு கண்டிருக்கிறது என்றபோதும், கட்சியின் தேர்தல் வெற்றி, கருத்துக்கணிப்புகள் எதிர்பார்த்ததை விடவும் குறைவாகவே இருந்தன. அது கிட்டத்தட்ட 25 சதவீத வாக்குகளைக் கைப்பற்றும் என கோடையின் போது, சில கருத்துக்கணிப்புகள் கணித்திருந்தன.
சுவீடன் ஜனநாயகக் கட்சி, மக்களை தமக்கு செவிகொடுக்கச் செய்வதில் வெற்றி பெற முடிந்திருக்கின்றதென்றால், சுவீடனில் பாரம்பரியமான ஆளும் கட்சிகளது திவால்நிலையே அதற்கு காரணமாகும். வெவ்வேறான சமயங்களில், மிதவாதிகள், பசுமைக் கட்சியினர், இடது கட்சியினர், தாராளவாதக் கட்சியினர் மற்றும் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி வைத்து செயற்பட்டு வந்த சமூக ஜனநாயகக் கட்சியானது, பல தசாப்த காலமாக பெருகும் சமத்துவமின்மையையும் சமூக நலன்களது தேய்வையும் -குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு- மேற்பார்வை செய்து வந்திருக்கிறது. பல வருட கால ஊழல்கள், திறனின்மை மற்றும் ஏமாற்றுக்கள் ஆகியவை சமூக ஜனநாயகக் கட்சிக்கு தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒருகாலத்தில் கொடுத்து வந்திருந்த ஆதரவை அரித்துப்போகும்படி செய்திருக்கின்றன.
கடந்த நூறு ஆண்டுகளின் பெரும்பகுதியில் சுவீடனை ஆட்சி செய்து வந்திருக்கும் சமூக ஜனநாயகக் கட்சி, ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் அதன் மிகக்குறைந்த வாக்குகளைப் பெற்றிருக்கிறது. பாரம்பரியமாக இரண்டாவது பெரிய கட்சியாக இருந்து வந்திருக்கக் கூடிய மிதவாதிகளின் கட்சியும் தனக்கான ஆதரவில் ஒரு கூர்மையான வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது, 14 நாடாளுமன்ற இருக்கைகளைத் தொலைத்திருக்கிறது.
சுவீடனில் நடந்து கொண்டிருப்பவை, முதலாளித்துவ அமைப்புமுறையின் உலகளாவிய நெருக்கடியின் கீழ் ஐரோப்பா முழுமையிலும் மற்றும் உலகின் பெரும்பகுதியிலும் காணக்கூடியதாக இருக்கின்ற பொதுவான அரசியல் பாதைவழியையே பின்பற்றிச் செல்கிறது.
பிரான்சில், சோசலிஸ்ட் கட்சி அடிப்படையாக பொறிவு கண்டு, அந்த வெற்றிடத்தை அதி-வலதுகள் நிரப்பி வருகின்றன. ஜேர்மனியிலும் இதேபோல, பிரதான நீரோட்டக் கட்சிகள் மீதான வெறுப்பு சூழல் மற்றும் நவ-பாசிஸ்டுகளுக்கு இராணுவ-உளவு எந்திரத்தில் இருந்தும் ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளில் இருந்தும் கிடைக்கக் கூடிய ஆதரவு ஆகியவற்றின் ஒரு விளைவாய், ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக எழுந்திருக்கிறது.
ஒப்பீட்டளவில் விரிவான நலன்புரி அரசைக் கொண்டிருந்த காரணத்தால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சீர்திருத்தவாதிகள் சுவீடனுக்கு பெரும்பாலும் முட்டுக்கொடுத்து வந்திருக்கின்றனர் என்றபோதும், மற்ற ஒவ்வொரு முதலாளித்துவ நாட்டிலும் போலவே, சுவீடனும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குள்ளாக ஆழப் பாய்ந்து கொண்டிருக்கிறது என்பதே யதார்த்தமாய் உள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின் (OECD) 2015 ஜனவரி அறிக்கை ஒன்று, 1985க்கும் 2010களின் ஆரம்பத்திற்கும் இடையிலான காலத்தில் சுவீடனில் சமத்துவமின்மை, OECD அமைப்பில் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட வேறெந்த நாட்டை விடவும் வேகமாய் வளர்ந்திருந்ததாக கண்டறிந்தது.
2014 இல், மொத்த செல்வத்தில் 68 சதவீதத்திற்கும் அதிகமாய் மக்கள்தொகையின் தலைமையில் இருக்கும் 10 சதவீதம் பேரிடம் இருந்ததாக, கிரெடிட் சுவிஸ் உலகளாவிய சொத்து அறிக்கை (Credit Suisse’s Global Wealth Report) கூறுகிறது. இந்த மட்டத்திலான செல்வக் குவிநிலை சுவிட்சர்லாந்தை தவிர்த்து ஐரோப்பாவிலுள்ள வேறெந்த நாட்டை விடவும் அதிகம் என்பதுடன், இதனையொத்த வளர்ச்சி கொண்ட ஐக்கிய இராச்சியம் (53 சதவீதம்), ஆஸ்திரேலியா (50 சதவீதம்) மற்றும் கனடா (57 சதவீதம்) போன்ற பல நாடுகளில் இருப்பதை விடவும் கணிசமாய் அதிகமானதாகும்.
நிதிமயமாக்கம் மற்றும் பங்குச் சந்தை மதிப்புகளின் அதிகரிப்பு ஆகியவற்றுடன் பிணைந்ததாயிருக்கின்ற, சுவீடன் சமூகத்தின் தலைமையில் இருக்கும் 10 சதவீதத்தின் சொத்துப் பெருக்கமானது, சுகாதாரப் பராமரிப்பு, ஓய்வூதியங்கள் மற்றும் கல்வி உள்ளிட்ட சமூக நலன்களில் பல ஆண்டுகால வெட்டுக்களுடன் சேர்த்து அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுகள் -குறிப்பாக வீட்டுவசதி- மற்றும் கண்ணியமான ஊதியமளிக்கப் பெறுகின்ற உற்பத்தித் துறை வேலைகளின் இழப்பு ஆகியவற்றையும் சந்தித்து வருகின்ற மில்லியன் கணக்கான சுவீடன் மக்களின் வாழ்க்கை அனுபவத்துக்கு முற்றிலும் நேரெதிரானதாக இருக்கிறது.
இத்தகைய சமூக சூழ்நிலைக்குள்ளாகத்தான், அதிவலதுகள் செவிமடுப்பைப் பெறவும் புலம்பெயர்ந்தவர்களை பலிகடாக்களாக பயன்படுத்தவும் முடிந்திருக்கிறது. 2015 இல், சுவீடன், அதன் அளவுடன் ஒப்பிடுகையில், ஐரோப்பாவில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான அகதிகளை அனுமதித்தது. மத்திய கிழக்கிலான அமெரிக்க தலைமையிலான போர் முனைப்பினால் (லிபியா மற்றும் ஆப்கானிஸ்தான் மீதானவை போன்ற போர்களில் சுவீடனும் பங்கெடுத்திருந்திருக்கிறது) நாசம் செய்யப்பட்ட பிராந்தியங்களில் இருந்து தப்பியோடி வந்த நூறாயிரக்கணக்கானோர் மீது மிகப் பெரும்பான்மையான மக்கள் அனுதாபத்தையும் அரவணைப்பையுமே வெளிப்படுத்தினர்.
2015 முதலாக, இடது கட்சி தொடங்கி அத்தனை அரசியல் கட்சிகளுமே, குடியேற்ற விடயத்தில் கூர்மையாக வலதின் பக்கம் நகர்ந்திருக்கின்றன, சுவீடன் ஜனநாயகக் கட்சியின் இனவாதக் கொள்கைகளை தழுவிக்கொண்டு அவர்களது அரசியல் அந்தஸ்திற்கு வலுவூட்டியிருக்கின்றன. இப்போது புதிதாக குடியேற்றத்தினர் மிகச் சிறிய எண்ணிக்கையிலேயே உள்வருகின்றனர்.
இதனிடையே சுவீடனின் ஆளும் வர்க்கம் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் எதிர்பார்க்கப்படுகின்ற போரில் தனது பாத்திரத்தை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. சுவீடனின் ஊடகங்கள், ரஷ்யாவின் பால்டிக் விரிவாக்கம் குறித்த பரபரப்பான கதைகளின் அதிகமான நிரப்பல்களுடன், சுவீடனின் தேர்தலில் ரஷ்யா சம்பந்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது குறித்தும் பல கட்டுரைகளை வெளியிட்டன. சமூக நலஉதவிகள் வெட்டுமுனையின் கீழிருக்கின்றதொரு நேரத்தில், 2018க்கும் 2020க்கும் இடையிலான காலத்தில் இராணுவச் செலவினத்தை 8 பில்லியன் குரோனோருக்கும் (1 பில்லியன் டாலர்) அதிகமாய் உயர்த்துவதற்கு சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சியின் கூட்டணி சென்ற ஆண்டில் மிதவாதிகள் மற்றும் மத்திய கட்சியுடன் ஒரு உடன்பாட்டை எட்டியது.
சுவீடன் ஜனநாயகக் கட்சி பெற்ற வாக்கு விகிதம் ஊடகங்கள் கணித்ததை விடவும் மிகக் குறைவாய் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது சுவீடனின் பரந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது பரவலான இடது-சாரி மற்றும் குடியேற்ற-ஆதரவு மனோநிலைகளைப் பிரதிபலிக்கிறது. இந்த பாசிசக் கட்சி அதன் ஓடுபாதையில் தடுத்துநிறுத்தப்பட்டாக வேண்டும் என்ற உறுதியான தீர்மானத்துடன் பலரும் வாக்களித்துள்ளனர்.
ஸ்ராலினிச இடது கட்சிக்கான வாக்கு, 5.7 சதவீதத்தில் இருந்து 7.9 சதவீதமாக வளர்ச்சி கண்டிருப்பதும், இதேபோன்று அரசியல் தெளிவுபெறாத இடது மனோநிலையைப் பிரதிபலிப்பதாகும். உண்மையில் இடது கட்சியானது (38 சதவீதம்) சுவீடன் ஜனநாயகக் கட்சியை (36 சதவீதம்) விடவும் சற்று கூடுதலான அதிகரிப்பைக் கண்டிருந்தது.
ஆயினும், இடது கட்சியானது அரசியல்ரீதியாக ஒரு பிற்போக்கான பாத்திரத்தை வகிக்கிறது, இது தொழிலாள வர்க்கத்தின் கோபத்தை சமூக ஜனநாயகக் கட்சிக்குப் பின்னால் திருப்பிவிடுவதன் மூலம், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கம் அபிவிருத்தி காணவிடாமல் தடுத்து வைப்பதற்காய் செயற்படுகிறது. ஸ்காண்டிநேவியாவிலும் அத்துடன் ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் அதி-வலதுகளின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கு ஐரோப்பிய மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு உண்மையான சோசலிச இயக்கம் உருவாக்கப்படுவது அவசியமாயுள்ளது.