Print Version|Feedback
America’s industrial slaughterhouse
அமெரிக்காவின் தொழில்துறை கொலைக்கூடம்
Jerry White
25 September 2018
2008 உலகளாவிய நிதியியல் பொறிவுக்குப் பிந்தைய தசாப்தத்தில் அமெரிக்காவின் வர்க்க உறவுகள் மீளக்கட்டமைக்கப்பட்டு வருவதன் விளைவுகளைக் குறித்து அரிதாகவே ஆய்வு செய்யப்பட்டவைகளில் ஒன்று, வேலையிடங்களில் உயிரிழப்புகள் மற்றும் காயமடைவதன் அதிகரிப்பாகும். பெருநிறுவன இலாபங்களின் அதிகரிப்பும் சாதனையளவுக்குப் பங்குச் சந்தை உயர்வும் தொழிலாளர்களின் நொருங்கிய எலும்புகளிலும் மற்றும் சடலங்களிலிருந்தும் அடையப்பட்டுள்ளன.
செப்டம்பரில் வெறும் இரண்டு நாட்களில் உள்ளூர் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட மரணகதியிலான விபத்துக்கள், பாதுகாப்பற்ற வேலையிட நிலைமைகளின் கொடூரமான நிலையை வெளிச்சமிட்டு காட்டின.
• செப்டம்பர் 12 இல், 47 வயதான தொழிலாளர் Luis Almonte நியூ யோர்க்கின் புரூக்ளினில் 20 அடி உயர சுவர் இடிந்து விழுந்ததில் புதையுண்டு மரணமடைந்தார்.
• அதே நாளில் பெயர் வெளியிடப்படாத ஒரு கனரக இயந்திர ஓட்டுனர் தீக்காயங்களால் இறந்து போனார், அதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் இண்டியானாவின் Dugger நகருக்கு அருகில் Peabody Energy நிறுவனத்தினது Bear Run நிலக்கரி சுரங்கத்தில் அவர் இருந்த வாகனத்தில் நெருப்பு பற்றிய போது அந்த காயங்கள் ஏற்பட்டிருந்தன.
• செப்டம்பர் 13 இல், 29 வயதான கட்டுமான தொழிலாளர் Marcus Dewayne Billingsley அலபாமாவின் பேர்மின்ங்காமில் ஒரு புதிய ஆடம்பர அடுக்குமாடி வீடு கட்டும் இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, கீழே விழுந்து மரணமடைந்தார்.
• செப்டம்பர் 13 அன்றே, 20 வயதான Tabor Daniel Hayes, ஜோர்ஜியாவின் ஹோலி ஸ்ப்ரிங்கிற்கு அருகே East Gate Pallet வேலைத்தலத்தில், மரம் அறுக்கும் கருவியில் அடிபட்ட தொழிலக விபத்தில் கொல்லப்பட்டார்.
• அதே நாளில், 24 வயதான ஃபோர்ட் நிறுவன தொழிலாளர் ஒருவரின் உடல், இவரின் பெயர் இதுவரையில் வெளியிடப்படவில்லை, மிச்சிகன் ஸ்டெர்லிங் ஹைட்ஸ் இன் ஃபோர்டு ஸ்டெர்லிங் ஆக்செல் ஆலையின் குளியலறைக்குள் கண்டெடுக்கப்பட்டது. இறந்து போன அவர் இரண்டு வயது குழந்தைக்கு தந்தையாவார். அவருக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறியதாக அவரின் சக தொழிலாளர்கள் போலிஸிற்குத் தெரிவித்தனர். குளியலறைக்குள் செல்லும் போது அவர் மயங்கி விழுந்திருக்கலாம் என்று அவர்கள் சந்தேகித்தார்கள்.
இப்போதைய மிக சமீபத்திய அரசு புள்ளிவிபரங்களின்படி, 2016 இல் 5,190 தொழிலாளர்கள் வேலையிடத்தில் மரணமடைந்திருந்தார்கள், இது 2015 இன் 4,836 ஐ விட 7 சதவீதம் அதிகம். இதற்கு கூடுதலாக, இன்னும் 50,000 இல் இருந்து 60,000 தொழிலாளர்கள் நிலக்கரி தூசிகளைச் சுவாசித்ததால் ஏற்படும் நுரையீரல் மாசுபாடு (Black Lung), சிலிக்கான் சுவாசித்ததால் ஏற்படும் சிலிகோசிஸ் (silicosis), வேலையிட நச்சுக்களுக்கு உள்ளாவதால் ஏற்படும் பல்வேறு புற்றுநோய்கள் உள்ளடங்கலாக வாழ்க்கைதொழில் நோய்களால் இறந்து போகிறார்கள். அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 150 தொழிலாளர்களாவது தடுக்கக்கூடிய, மோசமான வேலையிட நிலைமைகளால் உயிரிழக்கிறார்கள்.
இதற்கு கூடுதலாக, 2016 இல் தொழில் வழங்குனர்களால் 2.9 மில்லியன் மரணம்விளைவிக்காத வேலையிட காயங்கள் மற்றும் பாதிப்புகள் அறிவிக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை, ஒட்டுமொத்த குறைமதிப்பீடு என்பதில் சந்தேகமில்லை, ஏனென்றால் தங்களின் காயங்களைத் தெரியப்படுத்தினால் நிர்வாகத்தால் பழிவாங்கப்படலாம் என்று பல தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர் என்பதுடன் பல நிறுவனங்கள் காயங்கள் மற்றும் பாதிப்புகளைக் குறித்து தெரியப்படுத்துவதே இல்லை.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிஜமான கூலிகள் வீழ்ச்சி அடைந்து வந்துள்ள நிலையில், தொழிலாளர்கள் பல்வேறு வேலைகளும். நீண்ட நேரம் வேலை பார்க்கவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் அதிகரித்த வேலைபளு மற்றும் அதிக உற்பத்தி இடைவிடாது கோரப்படுகிறது. UPS மற்றும் ஏனைய பண்டங்கள் வினியோகிக்கும் ஓட்டுனர்கள் எடுத்துச் செல்லும் கையடக்க கணினிகளில் இருந்து, அமேசன் தொழிலாளர்கள் மீது பரிசோதிக்கப்பட்டு வருகின்ற கைப்பட்டைகள் வரையில், அலுவலக பணியாளர்கள் தட்டச்சு பலகையில் என்ன தட்டச்சு செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் மென்பொருள் வரையில், பெருநிறுவனங்கள் வேலைகளை வேகப்படுத்தவும் மற்றும் தொழிலாளர்களிடம் இருந்து இன்னும் அதிக அதிகமாக உற்பத்தியைப் பிழிந்தெடுக்க புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
பெருநிறுவனங்களுக்கு இலாபங்கள் சம்பாதித்துக் கொடுத்த பிறகும் கூட, காயப்பட்ட தொழிலாளர்கள் பட்டினியில் கிடக்கவோ அல்லது வீடற்று கிடக்கவோ விடப்படுகிறார்கள். உலக சோசலிச வலைத் தளத்தில் பரவலாக பார்க்கப்பட்ட ஒரு காணொளியில், டெக்சாஸின் டல்லாஸ்-ஃபோர்ட் வோர்த் பகுதி அமேசன் தொழிலாளி அஞ்சலா ஷெல்ட்டன் வேலையின் போது அவர் மணிக்கட்டில் காயப்பட்டு வேலை செய்யவியலாது பாதிக்கப்பட்டதும் அந்த மிகப்பெரிய பண்டங்கள் வினியோக நிறுவனம் அவருக்கு எவ்வாறு வரிக்குப் பிந்தைய உதவித்தொகையாக வாரத்திற்கு வெறும் 7.14 டாலர் வழங்குகிறது என்பதை விவரிக்கிறார். டெக்சாஸின் ஹாஸ்லெட் அமசன் ஆலையில் பணியாற்றும் மற்றொரு அமசன் தொழிலாளர் காயங்களுக்குப் பின்னர் அவர் தனது காரில் வாழ நிர்பந்திக்கப்பட்டார்.
2016 இன் 5,190 உயிரிழப்புகளில், 970 —அல்லது ஐந்தில் ஒரு பங்கு—கட்டுமான தொழில்துறையில் நடந்திருந்தன. ஒவ்வொரு மாதமும், 80 கட்டுமான தொழிலாளர்கள் வேலையிட விபத்துக்களில் உயிரிழக்கின்றனர், இவற்றில் பெரும்பாலான உயிரிழப்புகள் கீழே விழுவதால் ஏற்படுகின்றன.
“அவர்கள் எங்களைக் கழுதைகளைப் போல கையாள்கிறார்கள்; அவர்கள் உங்களைக் கசக்கிப் பிழிந்து, தூக்கி எறிந்துவிடுவார்கள்,” என்று டென்னஸ்ஸியின் நாஸ்வெல் நிலைமைகளை விவரித்து கார்டியனுக்குக் கட்டுமான தொழிலாளர் எர்னெஸ்டோ ரிவேரா தெரிவித்தார், அங்கே 2016-2017 இல் 16 தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள்.
இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதையும் அதன் கொடூரத்தையும் கொண்டு பார்த்தால், பிரதான ஊடகங்களுக்கும் மற்றும் பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான அரசியல் கட்சிகள் இரண்டுக்கும் இவை குறித்து சுத்தமாக ஆர்வமில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1980 களுக்குப் பின்னர் இருந்து, ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருதரப்பினராலும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார நிலைமைகள் இரண்டுமே மோசமாக்கப்பட்டுள்ளன.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாக அமைப்பின் (OSHA) ஆய்வாளர்களது எண்ணிக்கை அம்முகமையின் வரலாற்றில் அதன் குறைந்தபட்ச மட்டத்திற்கு குறைந்துள்ளதுடன், இப்போது அது 1980 இல் ரோனால்ட் ரீகன் ஜனாதிபதி ஆன போது இருந்ததைக் காட்டிலும் குறைவாக உள்ளது, அப்போது அமெரிக்க பொருளாதாரம் அதன் இப்போதைய அளவை விட பாதியாக இருந்தது. தற்போது 1,821 மத்திய மற்றும் மாநில ஆய்வாளர்கள் 9 மில்லியன் வேலையிடங்கள் மற்றும் 130 மில்லியன் தொழிலாளர்களுக்குப் பொறுப்பாக உள்ளனர். அதன் அதிகார எல்லையின் கீழ் ஒவ்வொரு வேலையிடத்தையும் ஒரேயொரு முறை ஆய்வு செய்வதற்கே, அந்த மத்திய ஆணையத்திற்கு சராசரியாக 158 ஆண்டுகள் ஆகும்.
ஒபாமா நிர்வாகத்தின் எட்டு ஆண்டுகளின் போது, அந்த நிர்வாகம் முன்பினும் அதிகமாக உற்பத்தி அதிகரிப்புகளைத் திணிக்க பிரதானமாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தைச் சார்ந்திருந்த நிலையில், வேலையிட பாதிப்புகள் ஒரே சீராக அதிகரித்தன.
ட்ரம்ப் நிர்வாகம் அதன் உள்நாட்டு பொருளாதார கொள்கையின் மையத்தில் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகளுக்கான நெறிமுறைகளைத் தளர்த்தி உள்ளது. சுரங்க பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாக ஆணையத்தில் (MSHA) நிலக்கரி நிறுவனத்தின் முன்னாள் எஜமானர் David Zatezaloto ஐ நியமித்திருப்பது உட்பட, நெறிமுறை ஆணையங்களின் தலைவர் பதவிகளில் முன்னாள் பெருநிறுவன நிர்வாகிகளை நியமித்துள்ளது. Zatezaloto இன் நிறுவனமான Rhino Resources, குறைந்தபட்சம் ஒரு மேற்கு வேர்ஜினிய சுரங்க தொழிலாளரின் உயிரிழப்பிற்கு காரணமாகும் விதத்தில் பாதுகாப்பு விதிகளை மீறியிருந்ததாக, இப்போது அவர் தலைமையில் இருக்கும் MSHA ஆணையத்தாலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.
வேலையிட உயிரிழப்புகள் மற்றும் காயப்படுதலின் அதிகரிப்புக்கும் தொழிற்சங்கங்கள் நேரடியாக பெருநிறுவன நிர்வாகம் மற்றும் அரசின் கருவியாக மாறியிருப்பதற்கும் இடையே ஒரு நெருக்கமான தொடர்பிருக்கிறது. இந்த அமைப்புகள், பெருநிறுவன அமெரிக்கா மற்றும் அதன் இரண்டு அரசியல் கட்சிகளது தாக்குதலுக்கு எதிரான தொழிலாளர்கள் எதிர்ப்பைத் திட்டமிட்டு ஒடுக்கி வந்துள்ளன. 1947 இல் அரசு மிகப்பெரும் வேலை நிறுத்தங்களைப் பதிவு செய்து வைக்க தொடங்கியதற்குப் பிந்தைய மிகக் குறைந்த வேலைநிறுத்த மட்டங்களுக்கு கடந்த தசாப்தத்தில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களைக் குறைத்துவிட்டுள்ளன.
தொழிற்சங்கங்களின் முதலாளித்துவ-சார்பு தலைமைக்கு மத்தியிலும், அவை, ஆலைகள், சுரங்கங்கள் மற்றும் நூற்பாலை தொழிலாளர்களின் மிகவும் உடனடி நலன்களுக்கு ஆதாயமாக சில குறிப்பிட்ட செயல்பாடுகளை செய்து வந்த காலமும் இருந்தது. தொழிலாளர்கள் வேலை விதிமுறை மீறல்கள் மற்றும் உற்பத்தி வரிசையின் வேகப்படுத்தல் குறித்து அவர்களின் ஆலை தொழிலாளர் குழு பிரதிநிதியிடம் குறை கூற முடிந்தது. அவர்கள் தங்களின் மனக்குறைகளை அவர்களின் குழு தலைவரிடம் பதிவு செய்ய முடிந்தது, அதன் விளைவாக அவை நிவர்த்தி செய்யப்படலாம் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். உடல்நல மற்றும் பாதுகாப்பு தொடர்பாக உள்ளூர் தொழிற்சங்கம் வேலைநிறுத்ததிற்குக் கூட அழைப்புவிட்டிருந்தது.
தொழிற்சங்கங்கள் இதுபோன்ற அனைத்து செயல்பாடுகளையும் நீண்டகாலத்திற்கு முன்னரே கைவிட்டு விட்டன. இதற்காக சுட்டிக்காட்ட வேண்டிய விடயம் பியட் கிறைஸ்லர் தொழிலாளர் எரிக் பார்சன்ஸ் க்கு சமீபத்தில் ஏற்பட்ட வாழ்வை-மாற்றியமைத்த காயமாகும், இவர் செப்டம்பர் 4 இல் இண்டியானாவின் கொகொமொ உருக்கு ஆலையில் அச்சுவார்ப்பு எந்திரத்தில் மாட்டிக் கொண்டார், இதில் அவரின் இடுப்பு மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் கடுமையான காயங்களும் அத்துடன் உடலுக்குள் இரத்த கசிவுகளும் ஏற்பட்டன.
ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்களின் சங்கம் ஒரு சுதந்திரமான விசாரணைக்கு அழைப்புவிடுக்கவில்லை என்பதை விட்டுவிட்டாலும் கூட, இந்த விபத்து குறித்து ஓர் அறிக்கை கூட வெளியிட கூட அக்கறை காட்டவில்லை. இது, இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுமார் 200 தீர்க்கப்படாத சுகாதார மற்றும் பாதுகாப்பு குறைப்பாடுகள் மீது கொகொமொ தொழிலாளர்கள் பெருவாரியாக வேலைநிறுத்தத்தை அங்கீகரித்து வாக்களித்தை அந்த தொழிற்சங்கம் புறக்கணித்திருந்த நிலைமைகளின் கீழ் நிகழ்ந்தது.
வேலை வேகப்படுத்தல், பலவந்தமான மிகைநேர வேலை, பாதுகாப்பு விதிமீறல்கள், பழுதடைந்த உபகரணங்கள், நச்சார்ந்த இரசாயனங்கள் மற்றும் பாலியல் அவமானப்படுத்தல் உட்பட நிறுவனங்களது அன்றாட துஷ்பிரயோகங்களுக்கு எதிராக போராட, தொழிலாளர்களுக்கு புதிய அமைப்புகள் அவசியப்படுகின்றன. தொழிலாளர்கள் ஆலைகளில் சாமானிய குழுக்களைத் தேர்ந்தெடுக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி முன்மொழிகிறது, இது தான் தொழிலாளர்களின் தேவைகளுக்குப் பதிலளிக்கும் என்பதோடு, அவர்களின் நலன்கள் பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் இலாபங்கள் மற்றும் தனியுரிமைகளுக்கு அடிபணிய செய்யப்பட வேண்டுமென்ற வாதத்தை இது ஏற்காது.
இத்தகைய குழுக்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பைக் கண்காணித்து, வேலை வேகப்படுத்தல் மற்றும் மிகை சுமையேறிய வேலைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் அணிதிரட்டும் என்பதோடு, நாளொன்றுக்கு எட்டு மணி நேர வேலையை அமலாக்கும். பெருநிறுவனங்கள் மற்றும் அவற்றின் தொழிற்சங்க ஏவலாளிகள் நடைமுறைப்படுத்தும் பணியிட சர்வாதிகாரத்திற்கான எதிர்ப்பில், ஆலை குழுக்கள் சாமானிய தொழிலாளர்களின் விருப்பத்தை வலியுறுத்தும் என்பதோடு, உற்பத்தியைத் தொழிலாளர்களே கட்டுப்படுத்துவது உட்பட தொழில்துறை ஜனநாயகத்திற்கான ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும்.
வேலையிட பாதுகாப்பு அழிக்கப்படுவது ஓர் உலகளாவிய பிரச்சினையாகும். இம்மாத தொடக்கத்தில், துருக்கியின் இஸ்தான்புல்லில் ஒரு விமான நிலைய கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் ஒரு வேன் தங்களின் 17 சக தொழிலாளர்களைக் காயப்படுத்திய விபத்தை அடுத்து, வேலையை நிறுத்தினர். தொழிலாளர்களால் அதுவொரு "கல்லறை" என்று குறிப்பிடப்பட்ட அந்த வேலையிடத்தில் நடந்துள்ள பல தொழில்துறை விபத்துக்களில் அந்த வேன் மோதல் சமீபத்தியதாகும்.
ஒவ்வொரு நிலையிலும், கண்ணியமான மற்றும் பாதுகாப்பான வேலையிட நிலைமைகளுக்கான உரிமையானது உலகளாவிய பெருநிறுவனங்களின் இலாப நலன்களுடன் மோதுகிறது. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் மிகப்பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், தொழிலாளர்களோ முதலாளித்துவ கூலி அடிமைமுறையால் கொடூரமான வேலையிட நிலைமைகளுக்குள் பலவந்தப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு பகுத்தறிவார்ந்த மற்றும் மனிதாபிமான உற்பத்தி முறையை ஸ்தாபிக்க உற்பத்தி கருவிகளின் தனியுடைமை மீதான ஒரு தாக்குதல் அவசியப்படுகிறது. பெருநிறுவனங்களைப் பறிமுதல் செய்வதும், அவற்றை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றுவதும் அவசியமாகும். தொழிலாள வர்க்கத்தின் ஒரு பலமான சர்வதேச சோசலிச இயக்கத்தைக் கட்டமைப்பதன் மூலமாக மட்டுமே அதுபோன்றவொரு சோசலிச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.