Print Version|Feedback
Amid NATO threats, Russia launches largest war games since World War II
நேட்டோ அச்சுறுத்தல்களின் மத்தியில், ரஷ்யா இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய மிகப்பெரும் போர் ஒத்திகைகளை தொடக்குகிறது
By Alex Lantier
1 September 2018
இந்த செப்டம்பரில், யூரோ-ஆசியா எங்கிலும் நூறாயிரக்கணக்கிலான ரஷ்ய, நேட்டோ மற்றும் சீனத் துருப்புகள் போர் ஒத்திகைகளில் அணிதிரட்டப்பட இருக்கின்றன. இரண்டாம் உலகப் போர் முடிந்ததற்குப் பிந்திய காலத்தின் மிகப்பெரியவையாக இருக்கும் இந்த ஒத்திகைகள், அணு ஆயுத சக்திகளிடையேயான ஒரு மோதலின் அபாயத்தை நேரடியாக முன்நிறுத்துகின்ற இராணுவ மோதல்கள் மற்றும் பதட்டங்களின் ஒரு அதிகரிப்புக்கு மத்தியில் வருகின்றன.
ரஷ்ய கடற்படை மத்திய தரைக்கடலில் பல தசாப்தங்களில் அதன் மிகப்பெரும் நிலைநிறுத்தத்தை இன்று அமைக்கின்ற நிலையில், அந்தப் பிராந்தியத்திலான எட்டு-நாட்கள் கடல்-வான்வழி ஒத்திகைகளை மாஸ்கோ தொடக்குகிறது. இந்த ஒத்திகையில் 25 கப்பல்களும் கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து அணுத்தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட Tu-160 மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள் உள்ளிட்ட 30 விமானங்களும் இடம்பெறுகின்றன. இந்த ஒத்திகை தொடக்கூடிய பகுதிகளில் நடமாட்டம் நிறுத்தப்படுவதற்கும் அத்துடன் “கடல்வாகனங்கள் மற்றும் விமானங்களுக்கு ஆபத்தானதாக அறிவிக்கப்படுவதற்கு”ம் ரஷ்ய பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியது.
செப்டம்பர் 11 அன்று, ரஷ்யாவும் சீனாவும் கிழக்கு-ரஷ்யாவின் trans-Baikal பிராந்தியத்தில் Vostok-18 (”கிழக்கு-18”) தொடங்கவிருக்கின்றன. சோவியத் ஒன்றியத்தின் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய மிகப் பெரும் போர் ஒத்திகையாக இருந்த 1981 ஆம் ஆண்டின் Zapad-81 ஐ அளவில் விஞ்சுவதாக Vostok-18 இருக்கும். மலைப்பூட்டும் விதத்தில் ரஷ்யாவின் தரப்பில் இருந்து 300,000 துருப்புகள், 1,000 விமானங்கள், மற்றும் 36,000 கனரக வாகனங்களும் சீனாவின் தரப்பில் இருந்து 3,200 துருப்புகள், 30 விமானங்கள் மற்றும் 900 கனரக வாகனங்களும் இதில் இடம்பெறவிருக்கின்றன. மங்கோலிய துருப்புகளும் பங்குபெறவிருக்கின்றன.
செப்டம்பர் 3 அன்று, உக்ரேனில், ரஷ்ய எல்லையில் நடைபெறவிருக்கும் Exercise Rapid Trident 2018 ஒத்திகையில் 2,270 நேட்டோ துருப்புகள் பங்குபெறவிருக்கின்றன. ஆயினும் Trident Juncture 2018 என்ற, அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரை நோர்வேயில், இதுவும் ரஷ்யாவின் எல்லையில், நடைபெறவிருக்கின்ற, பனிப் போரின் முடிவுக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடக்கவிருக்கும் மிகப்பெரும் நேட்டோ போர் ஒத்திகைக்கான ஒரு முன்னுரையாக மட்டுமே அது இருக்கும். அந்த மிகப்பெரும் ஒத்திகையில் 40,000 நேட்டோ துருப்புகளும், அவற்றுடன் 130 விமானங்களும் மற்றும் 70 போர்க்கப்பல்களும் பங்குபெறவிருக்கின்றன. 8,000 துருப்புகள், 100 டாங்கிகள் மற்றும் 2,000 போர் வாகனங்களுடனான முன்கண்டிராத ஜேர்மன் பங்களிப்பு இவற்றில் முன்னிலையில் நிற்கவிருக்கிறது.
இந்த ஒத்திகைகளின் மிகப்பெரும் வீச்சு எங்கெங்கிலும் இருக்கின்ற உழைக்கும் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும். பிரதான சக்திகளது தலைநகரங்களில், மக்களின் முதுகுகளின் பின்னால், அரசு மற்றும் இராணுவ அதிகாரிகளது சதிக்குழுக்கள் பூமிக்கோளத்தை நாசம்செய்து பில்லியன் கணக்கான உயிர்களை காவு வாங்கக் கூடிய போர்களுக்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா-தலைமையிலான பல தசாப்த கால நேட்டோ போர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் பல்வேறு வெடிப்புப் புள்ளிகளிலும் பதட்டங்கள் புதிய உச்சங்களை எட்டியிருக்கும் நிலையிலும், நேட்டோவுக்கும் ரஷ்யா மற்றும் சீனாவுக்கும் இடையிலான நேரடியான மோதலின் அபாயம் குறித்து பகிரங்கமாக விவாதிக்கப்படுவதன் மத்தியிலும் இந்த ஒத்திகைகள் வருகின்றன.
இந்த வெடிப்புப் புள்ளிகளில் பின்வருவன அடங்கும்:
- வட கொரியாவுடன் -இது கிழக்கு ரஷ்யாவின் எல்லையில் அமைந்துள்ளது, அத்துடன் இந்த நாட்டை ட்ரம்ப் சென்ற வருடத்தில், “உலகம் ஒருபோதும் கண்டிராத ஆவேசத்தை”, அதாவது அணுஆயுதப் போரை, கொண்டு மிரட்டினார்- அமெரிக்காவின் பேச்சுவார்த்தைகள் முறிவு. இப்போது தென்கொரியாவில் இராணுவ ஒத்திகைகளை மீண்டும் தொடர்வதற்கு வாஷிங்டன் எச்சரித்துக் கொண்டிருக்கிறது, சென்ற ஆண்டில் நடந்த இந்த ஒத்திகையில் வடகொரியாவை குறிவைத்தான “முன்கூட்டித்தாக்கும்” தாக்குதல்களுக்கான பயிற்சியில் 23,000 அமெரிக்கத் துருப்புகளும் 300,000 தென்கொரியத் துருப்புகளும் பங்குபெற்றன.
- சிரியா மீது இன்னுமொரு ஆத்திரமூட்டலில்லாத நிலையிலான குண்டுவீச்சுக்கு வாஷிங்டன், இலண்டன் மற்றும் பாரிஸுக்கு காரணமளிப்பதற்கான ஒரு ஆத்திரமூட்டலாக, நேட்டோ-ஆதரவுடனான இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களின் கடைசிப் பிடியாக இருக்கின்ற சிரியாவின் இட்லிப் பிராந்தியத்தில் ஒரு இரசாயனத் தாக்குதலுக்கு ஐக்கிய இராச்சியத்தின் உளவுத்துறை தயாரிப்பு செய்து கொண்டிருப்பதாக ரஷ்யா கொடுக்கும் எச்சரிக்கைகள் தெரிவிக்கின்றன. ரஷ்ய கப்பல் வரிசையை எதிர்த்து நிற்பதற்காக அமெரிக்க வழிநடத்து ஏவுகணை அழிப்பான் USS Ross மத்திய தரைக்கடலுக்கு வந்து சேர்ந்திருக்கும் நிலையில், “நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று எங்களது மேற்குக் கூட்டாளிகளுக்கு வலுவான ஒரு எச்சரிக்கையை அனுப்பியிருக்கிறோம்” என்று வெளியுறவு அமைச்சரான சேர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார்.
- கிழக்கு உக்ரேனில் உள்ள ரஷ்ய-ஆதரவுடனான பிரிவினைவாத டோனிட்ஸ்க் மக்கள் குடியரசின் தலைவரான அலெக்சாண்டர் சகார்செங்கோ நேற்று ஒரு பயங்கரவாத குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இந்தப் படுகொலையை கியேவில் இருக்கும் நேட்டோ-ஆதரவுடனான உக்ரேனிய ஆட்சியால் நடத்தப்பட்ட ஒரு படுகொலையாகப் பார்ப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியது.
போர் அபாயத்திற்கான பிரதான பொறுப்பு ஏகாதிபத்திய சக்திகளிடம், எல்லாவற்றையும் விட அமெரிக்கா மற்றும் முக்கிய மேற்கு ஐரோப்பிய சக்திகளிடமே உள்ளது. 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக்கும் அதிகமானதொரு காலத்தில், இவை, யூகோஸ்லாவியா தொடங்கி ஈராக் மற்றும் சிரியா வரையிலும், மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் அதனைக் கடந்து வரையிலும் யூரோ-ஆசியா எங்கிலும் மூர்க்கமான இராணுவத் தலையீடுகளை தீவிரப்படுத்தி வந்திருக்கின்றன. வாஷிங்டன் தனது வீழ்ச்சி காணும் உலக மேலாதிக்கத்தை காப்பாற்றிக் கொள்வதற்கு விழைந்த நிலையில், இந்தப் போர்கள் மில்லியன் கணக்கான உயிர்களைக் காவு வாங்கியிருக்கின்றன, ஒட்டுமொத்த நாடுகளையும் சீரழித்து விட்டிருக்கின்றன.
ஜனவரியில், ”பயங்கரவாதத்தின் மீதான போர்” நடத்துவதான நடிப்பைக் கைவிட்டு ரஷ்யாவையும் சீனாவையும் அதன் இலக்குகளாக அறிவித்த ஒரு புதிய தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தை வெளியிட்டபோது, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் பகிரங்கமாயின. அந்த ஆவணத்தை வழங்கிய அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலரான ஜேம்ஸ் மாட்டிஸ் ரஷ்யாவையும் சீனாவையும், அமெரிக்க-தலைமையிலான உலக ஒழுங்கிற்கு அச்சுறுத்தலான “திருத்தல்வாத சக்திகள்” என்று முத்திரை குத்தியதோடு, “பயங்கரவாதம் அல்ல, வல்லரசுப் போட்டி தான் இப்போது அமெரிக்க தேசிய பாதுகாப்பின் பிரதான கவனக்குவிப்பாகும்” என்றார்.
அமெரிக்க தேசியப் பாதுகாப்பு மூலோபாயத்திற்கும் உலகெங்கிலும் அமெரிக்க இராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதற்குமான பதிலிறுப்பே தங்கள் ஒத்திகை என்று மாஸ்கோவும் பெய்ஜிங்கும் அறிவிக்கின்றன. இந்த ஒத்திகைகள் வாஷிங்டனுக்கு ஒரு சமிக்கையாகவும் அத்துடன் “அதன் தேசியப் பாதுகாப்பு மூலோபாயத்திற்கான ஒரு பதிலிறுப்பாகவும், அத்துடன் தென் சீனக் கடல், தைவான் நீரிணை பகுதியிலுமான அமெரிக்க மற்றும் நேட்டோவின் நடவடிக்கைகள், அத்துடன் ரஷ்யாவின் மேற்கு எல்லையில் நாம் காணுகின்ற நிரந்தரத் துருப்புகளது நிலைநிறுத்தம் ஆகியவற்றுக்கான பதிலிறுப்பாகவும் இருக்கின்றன” என்று வெளியுறவுக் கொள்கை குறித்து எழுதும் மார்க் ஸ்லெபோடா (Mark Sleboda) கூறியதாக ரஷ்ய அரசு ஊடகம் மேற்கோளிட்டது.”
மாஸ்கோவும் பெய்ஜிங்கும் உலகளாவிய அணு ஆயுதப் போரின் சாத்தியத்திற்கு தயாரித்துக் கொள்ளும் பொருட்டு கூட்டான ஏவுகணை பாதுகாப்பு ஒத்திகைகளுக்குத் திட்டமிடுகின்றன, ஏனென்றால் “இருவரில் ஒருவரைச் சூழ்கின்ற எந்தவொரு மூலோபாய அணு மோதலும் இயல்பாகவே இருவரையும் ஈடுபடுத்தக் கூடியதாக ஆகும் என்பதை அவை முன்காண்கின்றன” என்று ஸ்லெபோடா பட்டவர்த்தனமாய் தெரிவித்தார்.
இந்த ஒத்திகைகள் “இரண்டு நாடுகளுக்கு இடையிலான மூலோபாய இராணுவக் கூட்டை வலுப்படுத்துவதற்கும், இரண்டு இராணுவங்களுக்கும் இடையிலான நட்பையும் ஒத்துழைப்பையும் ஆழப்படுத்துவதற்கும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கையாளுவதற்கு இரண்டு நாடுகளும் கொண்டுள்ள கூட்டான திறனை மேலும் ஊக்குவிப்பதற்கும்” நோக்கம் கொண்டவை என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
ரஷ்ய-சீன ஒத்திகைகளது வீச்சானது, மாஸ்கோவும் பெய்ஜிங்கும் அவை ஒரு முழுவீச்சிலான அணு ஆயுதப் போரின் விளிம்புக்கு தள்ளப்படக் கூடும் என்று முழுமனதாய் நம்புகின்றன என்று, ஏகாதிபத்திய நாடுகளது இராணுவ மூலோபாயவாதிகள் மற்றும் ஆளும் உயரடுக்கினரை நோக்கி கூறப்பட்ட ஒரு எச்சரிக்கையாகத் தென்படுகிறது.
இலண்டனின் மூலோபாய ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்திலும் பாரிஸில் உள்ள Fondation de recherche stratégique இலும் நன்கறிந்த மூலோபாயவாதியாக இருக்கின்ற பிரான்சுவா ஹைய்ஸ்பூர்க் இவ்வாறு ட்வீட் செய்தார்: “இந்த புதிய ஒத்திகையானது கௌரவ நோக்கங்களுக்காக பயன்படக் கூடியதைக் காட்டிலும் தாண்டிச் செல்கிறது. ரஷ்யாவின் செயலூக்கமான பணிநிலை இராணுவத்தின் 30 சதவீதத்தை இது ஈடுபடுத்துவதோடு, ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை நிதி ஒதுக்கீடானது அழுத்தத்தின் கீழிருக்கும் ஒரு சமயத்தில் இது மிகஅதிக செலவுபிடிப்பதாகவே இருந்தாக வேண்டும். பெரும்-வீச்சுடனான போர் மிக அதிக உடனடி எதிர்கால சாத்தியம் கொண்டதாக பார்க்கப்படுகின்ற போது மட்டுமே இது புரிந்து கொள்ளக் கூடியதாகும்.”
புரூசெல்ஸின் சுதந்திர பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜோனாதன் ஹோல்ஸ்லாக் South China Morning Post இடம் கூறுகையில் இந்த ஒத்திகைகள் “தாக்குதலுக்கு தயங்க வைப்பதற்கான சமிக்கை” என்று கூறியதோடு அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்: “மாஸ்கோவுக்கும் பெய்ஜிங்கும் இடையில் இன்னும் நிறைய அவநம்பிக்கைகள் இருக்கின்றன என்றபோதிலும், குறிப்பாக அமெரிக்காவுடனான உறவுகள் ஸ்திரமற்றதாகவே தொடரும் நிலையில், சீனாவுடன் இணைந்து வேலை செய்வதைத் தவிர்த்து, மேற்கின் தடைகளது பின்விளைவுகளைக் குறைப்பதற்கு சீனாவின் நிதி உதவி அவசியமாயிருக்கும் சூழலில், மாஸ்கோவுக்கு வேறுதேர்வு தெரியவில்லை என்பதையே இது காட்டுகிறது.”
மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கின் கொள்கையானது -இது இரண்டு நாடுகளிலும் இருக்கும் சோவியத்துக்குப் பிந்தைய முதலாளித்துவ சிலவராட்சிகளது திவாலான தேசியவாதத்தில் வேரூன்றியிருக்கிறது- ஏகாதிபத்திய போர் முனைப்பை எதிர்ப்பதில் எந்த முன்னோக்கிய வழியையும் வழங்கவில்லை. இந்த ஆட்சிகள் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தில் நிலவும் போர்-எதிர்ப்பு மனோநிலைக்கு விண்ணப்பம் செய்யத் திறனற்றவையாக இருக்கின்றன. மாறாக, பில்லியன் கணக்கான உயிர்களைப் பலிகேட்கக் கூடிய ஏகாதிபத்திய சக்திகளுடனான ஒரு முழு-வீச்சிலான போர் என்ற ஆபத்தில் இறங்குவதற்கும் அமெரிக்காவிடமும் மாஸ்கோ அதன் “மேற்குக் கூட்டாளிகள்” என்று வர்ணிக்கின்ற அமெரிக்காவின் கூட்டாளிகளிடமும் ஒரு உடன்பாட்டிற்காக கெஞ்சுவதற்கும் இடையில் அவை ஊசலாடுகின்றன.
ட்ரம்ப் ஐரோப்பாவை வர்த்தகப் போர் கொண்டு மிரட்டுகின்ற நிலையில், நேட்டோவை உடைத்து ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளை வாஷிங்டனுக்கு எதிராகக் கொண்டுவருகின்ற நம்பிக்கை மாஸ்கோவுக்கு கொஞ்சம் இருக்கிறது. சொல்லப் போனால், சிரியா விவகாரத்தில் துருக்கி மற்றும் பிரான்ஸ் -ஐரோப்பிய ஒன்றியத்தை இராணுவமயமாக்குவதற்கான திட்டங்களில் ஜேர்மனியின் பிரதான கூட்டாளி- இடம்பெறுகின்ற, வாஷிங்டன் இடம்பெறாத பேச்சுவார்த்தைகளுக்கான மாஸ்கோவின் ஆலோசனைகளுக்கு திறந்த மனதுடன் இருப்பதை பேர்லின் சுட்டிக்காட்டியிருக்கிறது. எப்படியிருப்பினும் இந்த திட்டம் திவாலானதாகும்: ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இராணுவ எந்திரங்கள், நேட்டோ ஒத்திகைகள் காட்டுவதைப் போல, ரஷ்யாவைக் குறிவைத்திருக்கும் நிலையில், அந்த இராணுவங்களைக் கட்டியெழுப்புவதற்கு நூறு பில்லியன் கணக்கான யூரோக்களை கொட்டுவதற்கு அந்நாடுகள் போடும் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாய் இது இருக்கிறது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போலவே, போட்டி முதலாளித்துவ அரசாங்கங்கள் உலகப் போரின் -இந்த முறை அணு ஆயுதங்களும் இடம்பெற்றதாக இருக்கும்- விளிம்பில் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. போரை நோக்கிய இந்த முனைப்பு தொழிலாள வர்க்கத்தின் ஒரு நனவான தலையீட்டுக்கு வெளியில் தடுத்து நிறுத்தப்பட முடியாது. பரந்த மக்கள் இந்த அபாயத்தின் அவசரத் தன்மையை உணராமல் இருக்கின்றனர் என்பதுதான் முக்கியமான அபாயமாகும். ஆகவே தான், ஒரு முதலாளித்துவ-விரோத மற்றும் ஏகாதிபத்திய-விரோத முன்னோக்கை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாள வர்க்கத்திலான ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதன் அவசர அவசியத்தின் மீது WSWS வலியுறுத்துகிறது.