Print Version|Feedback
Palestinians turn burial into act of defiance
Tens of thousands mourn Arafat in Ramallah
பாலஸ்தீனியர்கள் நல்லடக்கத்தை, எதிர்ப்புச் செயலாக மாற்றுகின்றனர்
ரமல்லாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அராபத்திற்கு இரங்கல்
By Chris Marsden
13 November 2004
வெள்ளியன்று யசார் அரஃபாத்தின் நல்லடக்கத்தின்போது பெரும் மக்கட்திரள் வெளிப்படுத்திய சோகம், இஸ்ரேலின் மிருகத்தனமான இராணுவ ஆக்கிரமிப்பிற்கு பாலஸ்தீனியருடைய தொடர்ச்சியான எதிர்ப்பை சக்திமிக்க வகையில் உறுதிப்படுத்துவதாக இருந்தது.
இந்த மக்களின் தன்னெழுச்சியான வெளிப்பாடு, தற்கால சகாப்தத்தில் அபூர்வமாகவுள்ள அரசியல் சின்னமாக அரஃபாத் எவ்வாறு இருந்தார் என்பதை காட்டியது; அவருடைய குறைகள் எவ்வாறாயினும், அவர் எவ்வாறு உண்மையான மக்கட்திரளை தன்வசம் ஈர்த்திருந்தார் என்பதும் தனது மக்களின் போராட்டங்கள் மற்றும் குறிக்கோள் இவற்றின் உருவகமாக பார்க்கப்பட்டார் என்பதும் நன்கு அறியப்படும்.
ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு இஸ்ரேலிய முற்றுகைக்குள் கட்டுண்டிருந்து அரஃபாத் வசித்திருந்த, ரமல்லா வளாகத்தில் இருந்த முக்கடாவில், சங்கமித்த பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கூடிய நிகழ்வானது, பாலஸ்தீனிய தலைவரை அவதூறுக்கு உட்படுத்தும் வகையில் டெல் அவிவும், வாஷிங்டனும் "பயங்கரவாதி" என்றும் "சமாதானத்திற்கு எதிரி" என்றும் கூறியதற்கு தக்க வகையில் விடையாக அமைந்தது.
ரமல்லாவின் தெருக்கள் அதிகாலையில் இருந்தே மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருந்தன. வளாகத்தின் சுற்றுச் சுவரின் மீது ஏறியும், கதவுகளை கடந்தும் இரங்கல் தெரிவிக்கும் மக்கள் கூட்டம் மிகுந்திருந்தது. எகிப்தில் ஒரு இராணுவ இறுதி மரியாதையை பெற்றுக் கொண்டபின், அரஃபாத்தின் சவப்பெட்டியைக் கொண்டு வந்த ஹெலிகாப்டர் இடத்திற்கு வந்தபோது பலரும் ஆகாயத்தை நோக்கிக் குண்டுகளை முழக்கினர்.
பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ஹெலிகாப்டரை நோக்கி விரைந்து ஓர் அடர்த்தியான மனிதச் சதுக்கத்தை வடிவமைத்தனர். கடலெனக் குழுமியிருந்த மக்கள் சற்றே வழிவிட்டு அராஃபத்தின் சவப்பெட்டியைக் கொண்டுவந்த ஜீப் வண்டிக்கு வழி பிரித்து விட்டனர். பின்னர் வாகனத்தைச் சூழ்ந்து, தொடர்ந்து "எங்களுடைய இரத்தம், எங்களுடைய ஆன்மாக்கள், அனைத்தும் உங்களுக்காகவேதான், யசார் அராஃபத்" என்று முழங்கி இசைத்த வண்ணம், பலரும் பெட்டியைத் தொட்டுவிடவேண்டும் என்ற கடின முயற்சியில் ஈடுபடும் நிகழ்வுகள் இருந்தன.
பாலஸ்தீனிய நிர்வாகம் மேற்குக்கரை மற்றும் காசாப் பகுதியில், 40 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தது; லெபனான், ஜோர்டான் இவற்றில் உள்ள அகதிகள் முகாம்களிலும் இவ்வாறுதான் அனுசரிக்கப்படும்.
இஸ்ரேலில் பிரதம மந்திரி ஏரியல் ஷரோன், தன்னுடைய அரசாங்கம் அராபத்தை "உலக பயங்கரவாதத்தின் மூலோபாய வல்லுநர்" என இழிவாகச் சித்தரிக்கும் பிரச்சாரம் ஒன்றை அவர் இறந்தபின் மேற்கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில், வாஷிங்டனில் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ், அராபத்தின் மரணம் "சமாதானம் வருவதற்கு வழியமைக்கும் நிகழ்வு" என்று களிப்புடன் கூறினார்.
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீனியரின் சுய நிர்ணயப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி வந்தவரிடம் இஸ்ரேலுக்கும், வாஷிங்டனுக்கும் உண்மையில் என்ன பிரச்சினை? ஓர் ஊழல் மிகுந்த எடுபிடி என்ற பங்கை ஏற்க அவர் மறுத்துவிட்டார். பாலஸ்தீனியர்களை ஒரு சுவரெழுப்பப்பட்டுள்ள சேரிப்பகுதிக்குள், மேற்குக் கரை மற்றும் காசாவிற்குள் அடைத்து வைக்கவேண்டும் என்றுள்ள இஸ்ரேலிய-அமெரிக்கத் திட்டத்தை அவர் தழுவ மறுத்துவிட்டார்; தன்னுடைய மக்கள் அத்திட்டத்திற்கு எதிராக எழுச்சி செய்வதை நசுக்கவும் அவர் மறுத்துவிட்டார்.
அவருடைய வாழ்வின் கடைசி இரண்டு தசாப்தங்களில், அரஃபாத் ஒரு தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டிருந்தை அவர் கண்டார். மட்டுப்படுத்தல்களினாலும், ஆயுதமேந்திய போராட்டத்தின் மூலம் ஜனநாயக, மதச்சார்பற்ற பாலஸ்தீனத்தை ஏற்படுத்தும் தேசியவாத வேலைத் திட்டத்தில் அவர் இறுதியில் தோல்வி அடைந்ததை தொடர்ந்தும், அவர் வேறுவழியின்றி பல மோசமான சமரசங்களை ஏற்க நேரிட்டது. ஆனால் அவரிடம் இன்னும் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு அவர் இழிந்து செல்லத் தயாராக இல்லை.
ரமல்லாவில் குழுமியிருந்த மக்கட்திரளும், மேற்குக்கரை மற்றும் காசாப் பகுதியிலும் அதேபோல் கூடியிருந்த இன்னும் கூடுதலான பல்லாயிரக்கணக்கான மக்களும், வளாகத்திற்கு செல்லத் தடுக்கும் வகையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால் நிறுத்தப்பட்டவர்களும், இன்னும் இதேபோல் ஜோர்டானிலும் மற்றய இடங்களிலும் இருந்த அகதிகள் முகாம்களில் இருந்து தெருக்களுக்கு வந்தவர்களும் அராஃபத்தின் குறைகளை நன்கு அறிந்தவர்கள்தாம்.
சமீபத்திய ஆண்டுகளில் இவர்கள் அனைவரும் மோசமான கஷ்டங்களை அனுபவித்துள்ளனர். 1993ம் ஆண்டு ஒஸ்லோ உடன்பாடுகளில் கையெழுத்திட்டதற்கான அவருடைய முடிவைப் பலரும் வலுவாக ஏற்கவில்லை என்றாலும், முற்றுகைக்குட்பட்டிருந்த பாலஸ்தீனிய இடைக்கால அதிகாரத்திற்குள் நடைபெற்று வரும் பல விஷயங்களைப் பற்றி அவர்களில் பலரும் குறையைத்தான் கொண்டிருந்தனர். ஆனால் இந்த அதிருப்தியைப் பயன்படுத்திச் சுரண்டும் வகையில், சில அரசியல் சக்திகளும், செய்தி ஊடகப் பண்டிதர்களும் அரஃபாத்தை "சமாதான வழிவகைகளைத்" தடுக்கிறார் எனக் கூறும் பிரச்சாரத்தை, இதே மக்கள் இகழ்வுடன் நிராகரித்தனர்.
மேற்கத்தைய செய்தி ஊடகங்களும், ஏகாதிபத்திய சக்திகளும் சுட்டிக்காட்டிய அரஃபாத்திடம் இருந்ததாகக் கருதப்பட்ட குறைதான், அதாவது தன்னுடைய மக்களுடைய விடுதலைக்கு வாழ்வு முழுவதும் அவர் காட்டிய செயற்பிடிப்புதான், பாலஸ்தீனிய மக்கள் அவருடைய நினைவிற்கு பெரும் கெளரவத்தைக் கொடுக்க உறுதிபூண்டுள்ளதற்கான காரணமாகும்.
சாதாரண மக்களுடைய உணர்வையும், அரசியல் செல்வந்தத்தட்டினரின் உணர்வுகளையும் வியத்தகுமுறையில் பிரித்துக் காட்டும் வகையில் உள்ள இத்தகைய பிளவு, வெகு சில நேரங்களில் மட்டுமே இப்பொழுதுபோல் புலப்படுத்தப்பட்டுள்ளன. அரஃபாத்தை ஏகாபத்தியம் சார்பில் குறைகூறுவோர் அல்லது அவரை எதிர்ப்பவர்கள் --ஒரு புஷ்ஷோ, ஒரு பிளேயரோ உதாரணத்திற்கு, இறந்துபோனால்-- அவர்களுடைய உடனடி வட்டத்திற்கு அப்பால் வெகு சிலர்கூட அதைப்பற்றிப் பொருட்படுத்தமாட்டார்கள் என்று முழு நம்பிக்கையுடன் ஒருவர் கூறவியலும். அத்தகைய திடமற்ற மனிதர்களுக்கு மக்கள் கூட்டம் உண்மையில் இரங்காது; அவர்கள் செய்தி ஊடகத்தைத்தான் மக்களுடைய ஆதரவைக் காட்டும் வகையில் திரித்துக் காட்ட தனியாக பயன்படுத்த வேண்டியிருக்கும்.
ரமல்லாவில் வெளிப்பட்ட மக்கட்திரளின் தொகுப்பு, செய்தி ஊடகத்தால் "பெருங்குழப்பம்" என்ற விவரித்தலைப் பெற்றது. BBC நிருபர்களின் வலைத் தளத்தில், ஒரு செய்தியாளர் எழுதினார்: "இது திட்டமிட்டபடி நடந்துகொண்டிருக்கவில்லை. இது அனைத்துமே இப்பொழுது கண்ணியமற்றதாகத் தோன்றுகிறது."
மற்றொருவர் சேர்த்துக் கொண்டார்: "மக்கள் இறுதி ஊர்வல நடவடிக்கைகளை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு, தங்களுடைய விருப்பத்தின்படி அமைத்துக் கொண்டு, ஒவ்வொரு கட்டத்தையும் வழிநடத்திச் செல்லுகின்றனர் என்பதை மறுக்க முடியாது."
சடங்குகளின் முடிவில் வேறு ஒருவர் கருத்துத் தெரிவித்தார்: "கதிரவன் மறையும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மக்களுடைய தீவிர உணர்வும், உளப் பாங்கும் கூட குளிர்ச்சி அடையும் என்று நம்புவோமாக."
அரசாங்கம் நடத்தும் மிகப்பெரிய ஆனால் செயற்கையான, அமைதியான, சடங்குகளைப் பார்த்துப் பழகியவர்களுக்கு ஒரு பீதி உணர்வுதான் ஏற்படும். அவர்கள் அரஃபாத் நல்லடக்கம் செய்யப்பட்டதை றொனால்ட் றேகனின் நல்லடக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தது போல் இருந்தது; றேகனுடைய இறுதிச் சடங்குகள் கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நாடுகளின் தலைவர்கள், தூதரக உயரலுவலர்கள் ஆகியோர் கலந்த முறையில் அமைக்கப்பட்டிருந்தது. இங்கோ, சில துயரம் தாங்கியோர் "ஜெருசலேத்திற்குச் செல்லுவோம்" என்று குரல் எழுப்பியபோது, சற்று பய உணர்வுதான் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.
அதிகாரபூர்வ பிரச்சாரத்திற்கு முற்றிலும் எதிரான வகையில் அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டிற்குமே, அரஃபாத்தின் உண்மையான புகழ் உயர்வு நன்கு தெரிந்திருந்ததோடு, பாலஸ்தீனிய மக்களிடம் அவர் தோற்றுவித்திருந்த மரியாதை, பிரியம் ஆகியவை தங்களுக்கு ஓர் அரசியல் அச்சுறுத்தல் என்ற கருத்தில் இருந்தன. எனவேதான், தான் ஜெருசலேத்தில் நல்லடக்கம் செய்யப்படவேண்டும் என்ற அவருடைய இறுதி விருப்பத்தை இஸ்ரேல் பொறுத்து ஏற்காததோடு, மேற்குக்கரையில் எந்த இடத்திலும் அவரை அடக்கம் செய்வதற்கும் விரும்பவில்லை.
இறுதியில் இந்த இடம் பாலஸ்தீனியர்களுக்குத்தான் என்று ஷரோன் அரசாங்கம் கட்டாயமாக ஏற்கப்பட வேண்டியிருக்கும் என்ற கருத்தில்தான், காசாவில் அராபத்தின் சடலம் புதைக்கப்படவேண்டும் என்ற இஸ்ரேலுடைய திட்டம் இருந்தது. அங்கு எந்த இறுதிச் சடங்குகள் நடந்தாலும் அது விரைவில் இஸ்ரேலியப் படைகளுடனான வன்முறைப் பூசல்களுக்கு வழி செய்துவிடும் என்ற பயமும் இருந்தது: இந்தப் பயமும் ஆதாரமுடையது என்றுதான் இறுதிச் சடங்குகள் காட்டின. எனவேதான் பாலஸ்தீனிய நிர்வாகம், வாஷிங்டன் தலையீட்டை நாடி அவருடைய நல்லடக்கம் ரமல்லாவில் நடத்துவதற்கு இஸ்ரேலை வற்புறுத்தியது.
வாஷிங்டன் உடன்பட்டது, இஸ்ரேலும் அதை ஏற்று செயல்பட்டது. முடிவாக அரஃபாத் ஒரு கல் தளக் கல்லறையில் புதைக்கப்பட்டார்: இதனால் பாலஸ்தீனிய நிர்வாகம், சுதந்திர பாலஸ்தீனத்திற்கு இறதியில் கிழக்கு ஜெருசலேம் தலைநகராக விளங்கப் போவதால், பின்னர் பெட்டி அங்கு கொண்டு செல்லப்படும் என உறுதி மொழியைக் கொடுக்க முடிந்தது. அவரது சவப்பெட்டியின் மீது, ஒரு நாள் அவர் புதைக்கப்படுவார் என பாலஸ்தீனியர்கள் நம்பும் ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியிலிருந்து கொண்டு வந்த மண்ணைத் தூவினர்.
இதுபோன்றே அரேபிய முதலாளித்துவ வர்க்கமும் அரஃபாத்தின் இறுதி ஊர்வலம் ஒரு மக்கள் ஆர்ப்பாட்டமாக மாறி, தாங்கள் எவ்வாறு பாலஸ்தீனிய நலன்களை பலமுறையும் காட்டிக் கொடுத்துள்ளோம் என்பதை நினைவு படுத்திவிடக்கூடும் என்று கருதினர். பாலஸ்தீனிய மக்களிடம் அம்பலப்படக்கூடிய சூழ்நிலை இருக்கும் ஒரு சடங்கில் கலந்து கொள்ளுவதைக் கூட அவர்கள் நினைத்துப் பார்க்க முடியவில்லை. எனவே எகிப்து, ரமல்லாவில் அராஃபத்தின் இறுதி நல்லடக்கம் நடைபெறுவதற்கு முன்பு கெய்ரோவில் ஒரு சடங்கினை நடத்த விருப்பம் தெரிவித்தது.
உலகில் பெரும்பாலானோர், இறப்பில் அராஃபத்திற்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதை அறிந்திருந்தனர். நவம்பர் 11, வியாழக்கிழமை அன்று, ஒரு பிரெஞ்சு இராணுவ தளத்தில், பிரதம மந்திரி ஜோன் பியர் ரஃபரன் மற்றும் பாலஸ்தீனிய வெளிநாட்டு அமைச்சர் நபில், ஷாத் இருவரும் கலந்து கொண்டு, ஒரு பிரார்த்தனை நடத்தப்பட்ட பின்னர் அவருடைய உடல், அவர் பிறந்த கெய்ரோ நகரத்திற்கு விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.
அவருடைய சவப்பெட்டி முழு இராணுவ மரியாதைகளுடனும் வரவேற்கப்பட்டு, அவருடைய மனைவி சுஹா, எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கின் மனைவி சூசானால் வரவேற்கப்பட்டார்.
இதற்கு மறுநாள் ஒரு சடங்கு இருந்தது; இது பல வர்ணனையாளர்களாலும் அசாதாரணமான முறையில் மிகச் சுருக்கமாகக் குறிக்கப்பட்டது. இதில் ஜோர்டனின் அரசர் இரண்டாம் அப்துல்லா, லெபனான் நாட்டு ஜனாதிபதி ஊமிலே லாகோட், சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸ்ஸத், பாகிஸ்தானின் பிரதம மந்திரி செளகத் அஜீஸ், தென்னாபிரிக்க ஜனாதிபதி தாபோ எம்பிகி மற்றும் சிம்பாப்வேயின் றொபர்ட் முகாபே உட்பட பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஐரோப்பாவில் இருந்து நாட்டின் அரச தலைவர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை; ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கையின் தலைவரான ஜேவியர் சோலனா மற்றும் இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ ஆகியோர் பங்கு பெற்றனர். ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சரான ஜோஷ்கா பிஷ்ஷருடைய விமானம் தாமதமாக வந்ததால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.
திட்டமிட்டு குறைமதிப்பு செய்யும் நோக்கில், புஷ் நிர்வாகம், மத்திய கிழக்கில் தனது அரசாங்கப் பிரதிநிதியாக உள்ள வில்லியம்ஸ் பேர்ன்ஸை மட்டும் அனுப்பிவைத்தது.
இந்தச் சடங்கு கெய்ரோ விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இராணுவ வளாகத்தில் இருந்த மசூதிக்குள் நடைபெற்றது; இது வேண்டுமென்றே எகிப்திய மக்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது. அரஃபாத்தின் கொடியால் சுற்றப்பட்டிருந்த பெட்டி விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படும்போது ஒரு சிறிய இறுதி ஊர்வலம் இருந்தது; அதைத் தொடர்ந்து ஒரு குதிரை இழுக்கும் பீரங்கி வண்டியும் இராணுவ இசைக்குழுவும் வந்தன. இந்த ஊர்வலம் செல்லும் தெருக்கள் பொது மக்களுக்கு மூடப்பட்டுவிட்டன; ஒரு நிருபர் குறிப்பிட்டிருந்தபடி "மிக அதிக எண்ணிக்கையில் பாதுகாப்புப் படையினர்" காவல் காத்திருந்தனர். அனைத்து இல்லங்களின் கதவுகளும் ஜன்னல்களும் வழியெங்கும் மூடப்பட்டிருந்தன.