Print Version|Feedback
New police raids and Europe-wide manhunt against G20 opponents
ஜி20 எதிர்ப்பாளர்களுக்கு எதிராக புதிய போலிஸ் சோதனைகளும், ஐரோப்பா-தழுவிய மனிதவேட்டையாடலும்
By Sven Heymanns
19 September 2019
கூட்டாட்சியின் மூன்று மாநிலங்களின் மிகப்பெரிய சோதனைகளில், போலிஸ் நேற்று காலை மொத்தம் 15 அடுக்குமாடி கட்டிடங்களில் சோதனை நடத்தி, ஒருவரைக் கைது செய்தது. போலிஸ் தகவல்களின்படி, அந்நடவடிக்கை கடந்த ஆண்டு ஜூலையில் ஹம்பேர்க் ஜி20 உச்சிமாநாட்டை சுற்றி நிகழ்ந்த கலகங்களில் பங்கெடுத்தவர்களாக சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு எதிராக நடத்தப்பட்டது.
ஓராண்டாக ஜி20 ஆர்ப்பாட்டக்காரர்களை, வெறுமனே போத்தில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்திற்குரியவர்களையும் கூட போலிஸ் பாரியளவில் ஒடுக்கி வந்துள்ள அதேவேளையில், கெம்னிட்ஸ், கோதென் மற்றும் ஏனைய நகரங்களில் புலம்பெயர்ந்தவர்களை, பத்திரிகையாளர்கள் மற்றும் இடதுசாரிகளை வேட்டையாடிய நவ-நாஜிக்களின் ஒட்டுமொத்த குழுக்களும் அரசு எந்திரத்தின் உயர்மட்டங்களில் இருந்து பாதுகாப்பைப் பெறுகிறார்கள்.
ஹம்பேர்க்கின் வின்டர்ஹூட் மாவட்டத்தில் 35 வயதான ஒருவர் செவ்வாயன்று கைது செய்யப்பட்டார். அவர் ஜி20 உச்சிமாநாட்டுக்கு முன்னரே Schanzenviertel பகுதியில் கலகங்களில் சம்பந்தப்பட்டவராக போலிஸ் க்கு அறியப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. Hamburger Morgenpost செய்தியின்படி, அவர் 19 முறை கற்கள் மற்றும் போத்தில்கள் வீசியதாகவும், இரண்டு பல்பொருள் அங்காடிகளில் கொள்ளையடித்ததாக அவர் குற்றஞ்சாட்டப்பட்டார். வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மற்றும் ஷிலேஸ்விக் கொல்ஸ்ரைன் மாநிலத்தில் அடுக்குமாடி வீடுகளிலும், டோர்ட்முண்ட நகரத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் அங்கே யாரும் கைது செய்யப்படவில்லை.
போலிஸ் தகவல்களின்படி, 10 க்கும் அதிகமான சந்தேகத்திற்குரியவர்கள் சம்பந்தமாக அந்த சோதனைகள் நடத்தப்பட்டன. அவர்கள் Schanzenviertel பகுதி கலகங்களிலும், அத்துடன் "நரகத்திற்கு வரவேற்கிறோம்" ஆர்ப்பாட்டத்திலும் பங்கெடுத்ததாக கூறப்படுகிறது. அவர்கள், ஏனையவற்றோடு சேர்ந்து, தீவிரமாக அமைதியைச் சீர்குலைத்ததாக, சட்ட அமலாக்க அதிகாரிகளை எதிர்த்ததாக, பல்பொருள் அங்காடிகளைத் தாக்கி சூறையாடியதாக குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். ஹம்பேர்க் போலிஸ் செய்தி தொடர்பாளர் திமோ ஷில் இன் தகவல்படி, சந்தேகத்திற்குரியவர்கள் அனைவருமே நீண்டகாலமாக விசாரணையாளர்களின் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளனர். கணினிகள், செல்போன்கள் மற்றும் ஏனைய பொருட்களையும் போலிஸ் பறிமுதல் செய்தது.
ஹம்பேர்க் போலிஸ் நேற்றும் நான்கு "வன்முறை குற்றவாளிகள்" என்று குற்றஞ்சாட்டப்படுபவர்களுக்காக ஐரோப்பா தழுவிய தேடுதலைத் தொடங்கியது. அவர்கள் ஜூலை 7, 2017 இல் Elbchaussee தெருவில் கார்களுக்கு நெருப்பு வைக்கப்பட்டதில் சம்பந்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தேடப்படுபவர்களில் மூன்று ஆண்கள், ஒரு பெண்மணி; ஆண்களில் ஒருவர் பிரதானமாக பிரான்சில் வாழ்வதாக சந்தேகிக்கப்படுகிறது. சிறப்பு ஆணைக்குழு "Black Block” இன் தலைவர் ஜன் ஹெபர் கூறுகையில், சந்தேகத்திற்குரியவர்களின் நடவடிக்கைகள் ஒரு "அதிரடி நடவடிக்கையாக" இருப்பதாக தெரிவித்தார்—இந்த வார்த்தை வழமையாக சிவப்பு இராணுவ பிரிவு போன்ற பயங்கரவாதிகளுக்காக ஒதுக்கப்படுவதாகும்.
தேடப்படும் நபர்கள் எனப்படுபவர்களைக் காட்டும் பல புகைப்படங்களையும் போலிஸ் பிரசுரித்தது குறிப்பிடத்தக்கதாகும். அரசு வழக்கறிஞர் அலுவலகம் விண்ணப்பித்ததை அடுத்து அவற்றை பிரசுரிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக போலிஸ் செய்தி தொடர்பாளர் உடனடியாக வலியறுத்தினார். கடந்த டிசம்பர் மாதம், Bild பத்திரிகையின் ஒத்துழைப்புடன், போலிஸ் ஏற்கனவே நூற்றுக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் புகைப்படங்களை பிரசுரித்ததுடன், அவ்விதத்தில் பாரியளவில் அவர்களின் தனியுரிமைகளைச் சேதப்படுத்தியது. அந்நேரத்தில் WSWS எழுதியவாறு, “ஜேர்மன் கூட்டாட்சி குடியரசு ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பின்னர் இருந்து இதனுடன் ஒப்பிடத்தக்க எதுவும் இந்தளவுக்கு நடந்ததில்லை.” பல முதலாளித்துவ வர்க்க விமர்சகர்களும் கூட போலிஸின் நடத்தை "சட்டத்திற்கு விரோதமானது" என்று அறிவிக்கும் அளவுக்கு அந்நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கதாக இருந்தது.
கலகக்காரர்கள் என்று குற்றஞ்சாட்டப்படுபவர்கள் மீதான பாரிய போலிஸ் ஒடுக்குமுறை முற்றிலும் பாரபட்சமானது. அது பாதுகாப்பு எந்திரத்தின் அதிகாரங்களை இன்னும் கூடுதலாக பாரியளவில் அதிகரிப்பதை நியாயப்படுத்தவும் மற்றும் இடதுசாரி போராட்டக்காரர்கள் அனைவரையும் இன்னலுக்கு உள்ளாக்கி ஒடுக்குவதற்கும் தயாரிப்பு செய்யவும் சேவையாற்றுகிறது. ஜி20 உச்சிமாநாட்டைச் சுற்றி நடந்த வன்முறை பெரிதும் போலிஸால் தூண்டிவிடப்பட்டு, பின்னர் ஊடகங்களால் மிகைப்படுத்திக் காட்டப்பட்டது. போலிஸ் அறிக்கைகளின் அச்சமூட்டும் அனைத்து கட்டுக்கதைகளும், ஊடகங்களால் விமர்சனமின்றி கசியவிடப்பட்ட இவை, பின்னர் பொய்களென நிரூபணமாயின.
உதாரணத்திற்கு, போராட்டக்காரர்கள் கற்களையும் எரிபொருள் நிரப்பிய போத்தில்களையும் கட்டிட கூரைகளில் இருந்து வீச முயன்றார்கள் என்ற வாதத்திற்கு ஆதரவாக எந்த ஆதாரமும் வைக்கப்படவில்லை. தீவிர தேடல் நடவடிக்கைகள் மற்றும் கைரேகை ஆய்வுகள் நடத்தப்பட்ட போதும், அதுபோன்ற எந்த நோக்கத்தையும் போலிஸால் காட்ட முடியவில்லை, மேலும் விரிவான காணொளி உளவுபார்ப்பு இருந்ததற்கு மத்தியிலும், அவை பயன்படுத்தப்பட்டதற்கான தீர்க்கமான ஆவணங்களை எதையும் அவர்களால் சமர்பிக்க முடியவில்லை. உண்மையில் மாடியிலும் அல்லது மேற்கூரைகளிலும் இருந்தவர்களில் பலர் படமெடுக்கும் குழுவினர்களாகவோ அல்லது ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவர்களாகவோ காணப்பட்டார்கள்.
ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து போலிஸ் மீது "போத்தில்களும், உருட்டுக்கட்டைகள், வெடிகள் வேண்டுமென்றே வீசப்பட்டதாக" குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு ஒருசில வாரங்களுக்குப் பின்னர், கசியவிடப்பட்ட ஒரு போலிஸ் காணொளி மொத்த விபரங்களையும் தவறென காட்டியதாக ஒரு போலிஸ் அறிக்கையே குறிப்பிட்டது. போலிஸ் க்கு எதிராக பலம் பிரயோகிக்கப்படவில்லை என்பதை அக்காணொளி தெளிவாக காட்டியது, ஆனால் அதற்கு பதிலாக போலிஸ் தான் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி ஓடினார்கள், நீர்பீய்ச்சிகளைக் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்புறத்திலிருந்து தாக்கப்பட்டார்கள்.
இதற்கிடையே, போலிஸ் ஜி20 உச்சிமாநாட்டின் எதிர்ப்பு-போராட்டங்களுக்குள் தூண்டிவிடுபவர்கள் பலரை அவர்களே ஊடுருவவிட்டதாகவும் தெரிய வருகிறது. மே மாதம் ஜி20 போராட்டக்காரர் ஒருவருக்கு எதிரான ஒரு நீதிமன்ற வழக்கின் போது, சாக்சோனி போலிஸ் கைது பிரிவைச் சேர்ந்த சீருடை அணியாத போலிஸ் அதிகாரி ஒருவர், அவரும் அவரது ஏனைய மூன்று சக-கூட்டாளிகளும் "நரகத்திற்கு வரவேற்கிறோம்" ஆர்ப்பாட்டத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் மறைந்திருந்ததாக சாட்சி அளித்தார். கறுப்பு ஆடைகளை உடுத்தியிருந்த அவர்கள், “அவர்களின் மூக்கு வரையில் கருப்பு நிற முகத்துணி சுற்றியிருந்ததாக" அந்த விசாரணையின் அடிப்படையில் Der Spiegel குறிப்பிட்டது. “அதுபோன்ற உடைகளுக்காக எங்களை அந்த வேலையில் அமர்த்தியவரிடம் இருந்து நாங்கள் ஆடைகளுக்கான உதவித்தொகையாக பெற்றோம்,” என்று நீதிமன்றத்தில் அந்த போலிஸ் அதிகாரி தெரிவித்தார். ஹம்பேர்க் ஜேர்மன் போலிஸ் சங்கத்தின் தலைவர் ஜோகாயிம் லென்டர்ஸ் கூறுகையில், அதுபோன்ற நேரத்தில் இடதுசாரி ஆர்ப்பாட்டக்காரர்களுக்குள் சீருடை அணியாத போலிஸ் அதிகாரிகள் ஊடுருவுவது "பொதுவான நடைமுறை தான்" என்று விவரித்தார்.
“நரகத்திற்கு வரவேற்கிறோம்" ஆர்ப்பாட்டம் ஜி20 உச்சிமாநாட்டிற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் நடந்தது, அதில் பங்குபற்றியவர்கள் சிலர் முகத்தை மறைத்திருந்தார்கள் என்பதற்காக வெறும் ஒரு சில நூறு மீட்டருக்குப் பின்னர் போலிஸால் வன்முறையாக சிதறடிக்கப்பட்டது. இந்த நடைமுறை பின்னர் எண்ணற்ற ஏனைய போராட்டங்களில் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களைப் போலிஸ் கண்மூடித்தனமாக ஒடுக்குவதற்கு ஒரு போலிக்காரணமாக சேவையாற்றியது. ஓர் உள்நாட்டு போர் ஒத்திகை பாணியில், ஜேர்மனி எங்கிலும் இருந்து 20,000 க்கும் அதிகமான போலிஸ் அதிகாரிகள் ஹம்பேர்க்கில் ஒன்றுதிரட்டப்பட்டனர், அந்நகரமே எங்கெங்கிலும் காவற்படை பிரிவுகளது காவலரணாக மாற்றப்பட்டு, எண்ணற்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. ஏனைய விடயங்களோடு சேர்ந்து, எண்ணற்ற பத்திரிகையாளர்கள் ஓரளவுக்கு அவர்களின் செல்வாக்கை இழக்க நேர்ந்தது.
அந்த உச்சிமாநாட்டிற்கு ஒரு சில வாரங்களுக்குப் பின்னர், "இடதுசாரி தீவிரவாதிகள்" என்று குற்றஞ்சாட்டப்படுபவர்களது இத்தகைய "வன்முறை நடவடிக்கைகள்" பின்னர் "இடதுசாரிகளுக்கு" எதிராக முன்னொருபோதும் இல்லாத நடவடிக்கைக்குத் தயாரிப்பு செய்ய ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தப்பட்டன. ஏனைய விடயங்களோடு சேர்ந்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ், அப்போது நீதித்துறை அமைச்சராக இருந்த இவர், “இடதுகளுக்கு எதிரான ராக்" இசை நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஜேர்மன் தேசிய கட்சியின் (NPD) இளைஞர் அமைப்பு மற்றும் "சலாபிஸ்டுகளுக்கு எதிரான அடியாட்கள்" போன்ற வலதுசாரி தீவிரவாத குழுக்கள் அந்த போராட்டங்களில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தன என்ற உண்மை—மேலும் எண்ணற்ற நவ-நாஜிக்களும் அவற்றில் பங்கெடுத்திருந்தனர் என்பது—வெளிவரவே இல்லை.
ஜி20 உச்சிமாநாட்டின் சுற்றுவட்டத்தில் இடதுசாரி கலகங்கள் எனப்படுவது குறித்த சொல்லாடல்கள் நிஜமான நோக்கத்தை, அதாவது இடதுசாரி அரசியலை அரசியலமைப்புக்கு-எதிரானதாக குற்றகரமாக்குவது மற்றும் ஜி20 போராட்டக்காரர்களை வெறிப்பிடித்த இடதுசாரி தீவிரவாதிகளாக சித்தரிப்பதை மறைக்கிறது என்பதை, ஒரு சில வாரங்களுக்கு முன்னர் பிரசுரிக்கப்பட்ட, இரகசிய சேவையினது புதிய "அரசியலமைப்பு பாதுகாப்பு அறிக்கை" தெளிவுபடுத்துகிறது. 2017 இல் "இடதுசாரி தீவிரவாத கிளர்ச்சியின் அழுத்தங்கள்" அந்த உச்சிமாநாட்டில் "தீர்க்கமாக" மேலோங்கி இருந்தன. “போலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வன்முறையும் மற்றும் அங்கே நடத்தப்பட்ட வீதி குற்றங்களின் அளவும்" “வன்முறையை நோக்கிய வன்முறையான இடதுசாரி தீவிரவாதிகளுக்கு இடையே மேலோங்கி வருகின்ற மனோபாவத்திற்கு அதிர்ச்சியூட்டும் எடுத்துக்காட்டுகள்" என்று "இடதுசாரி தீவிரவாதம்" மீதான அறிமுக பகுதி குறிப்பிடுகிறது.
அதற்குப் பின்னர் இருந்து, ஜி20 போராட்டங்கள் குறித்த இந்த சித்தரிப்பு எந்தவொரு இடதுசாரி எதிர்ப்பையும் குற்றகரமாக்க பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சான்றாக, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei – SGP) எந்தவொரு வன்முறை நடவடிக்கையிலும் சம்பந்தப்பட்டிருந்ததாக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்ற போதும் கூட, இந்தாண்டு முதன்முறையாக இரகசிய சேவை அறிக்கையில் பெயரிடப்பட்டது. ஜி20 உச்சிமாநாட்டுக்கு வெறும் ஒரு சில வாரங்களுக்குப் பின்னர், அப்போதைய உள்துறை அமைச்சர் தோமஸ் டு மஸியர் ஹம்பேர்க்கில் நடந்த சம்பவங்களை இடதுசாரி வலைத் தளம் linksunten.indymedia க்கு தடைவிதிப்பதற்கான ஒரு சந்தர்ப்பதாக பயன்படுத்திக் கொண்டார்.