Print Version|Feedback
Mélenchon’s Unsubmissive France opens summer school with overtures to right-wing parties
மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் வலதுசாரி கட்சிகளை அணுகும் நோக்குடன் கோடை வகுப்புகளைத் தொடங்குகிறது
By Francis Dubois
30 August 2018
ஜோன்-லூக் மெலோன்சோன் தலைமையிலான அடிபணியா பிரான்ஸ் (La France insoumise – LFI) இயக்கம் ஆகஸ்ட் 23-26 இல், மார்சைய்யில் அதன் கோடை வகுப்புகளை நடத்தியது. 3,000 பேரை ஒன்றுகூட்டியிருந்த அது குறித்து பத்திரிகைகளில் பரவலாக அறிவிக்கப்பட்டது. மெலோன்சோன், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு எதிரான "அனைத்து எதிர்ப்புகளையும்" ஒன்றுதிரட்டுவதற்கான அவரின் விருப்பத்தை வலியுறுத்தினார்.
மே-ஜூன் 1968 பொது வேலைநிறுத்தத்திற்கு பின்னர் இருந்து பிரான்சின் பிரதான சமூக ஜனநாயகக் கட்சியாக இருந்து வந்த சோசலிஸ்ட் கட்சி (PS) கடந்தாண்டு தேர்தலில் தோல்வியடைந்து மக்ரோன் தேர்வானதற்குப் பின்னர், மெலொன்சோனின் மூலோபாயம் தெளிவாகியுள்ளது. ஐரோப்பா எங்கிலும் இராணுவவாதம் மற்றும் சிக்கன கொள்கைகளுக்கு எதிராக சமூக கோபம் அதிகரித்து வருவதற்கு இடையே, மக்ரோன் மற்றும் சோசலிஸ்ட் கட்சிக்கு இடதிலிருந்து எந்தவொரு உண்மையான சோசலிச மாற்றீடும் மேலெழுந்து விடாது உறுதிப்படுத்தி வைக்க மெலொன்சோன் முயன்று வருகிறார். போர், சிக்கன நடவடிக்கைகள், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், தேசியவாதம் மற்றும் வெளிநாட்டவர் விரோத மனோபாவம் ஆகியவற்றுடன் பொருந்திய வகையில், மக்ரோனுக்கு எதிரான ஓர் "எதிர்ப்பை" கட்டமைப்பதே அவரது நோக்கமாகும்.
மார்சைய்யில், மெலொன்சோன் வலதுசாரி உட்பட அனைத்து கூட்டாளிகளுக்கும் திறந்திருக்கும் "கருத்துக்களின் சக்தியாக" தன்னைக் காட்டிக் கொண்டார்: “வலதிலும், கூட, அங்கே எதிர்ப்புகள் இருக்கலாம். மக்ரோன், அவரே கற்பனை செய்து பார்த்திராத ஒரு நீண்ட தடுப்பரண் எதிர்நிற்பதைக் காண்பார்,” என்றார்.
வலதுசாரி குடியரசுக் கட்சி (LR), சோசலிஸ்ட் கட்சி, ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), முன்னாள் சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பெனுவா அமோனின் Génération.s கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகளையும், மக்ரோனின் சொந்த குடியரசு அணிவகுப்பு இயக்கம் (LRM) மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) இன் உறுப்பினர்களையும் கூட மார்சைய்க்கு LFI அழைத்திருந்தது. இக்கட்சிகளின் அங்கத்தவர்கள் இராணுவம், ஐரோப்பிய ஒன்றியம், ஓய்வூதியங்கள் மற்றும் போலிஸ் சம்பந்தப்பட்ட விவாதக் குழுக்களுக்குத் தலைமை வகித்தனர். ஆனால் இறுதியில் மெலொன்சோன் நவ-பாசிசவாத அரசியல்வாதிகளை அழைப்பதில்லை என்று முடிவெடுத்திருந்தார்.
அடிபணியா பிரான்ஸ் அதன் 2019 ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தையும் அறிவித்தது, அது “மக்ரோன்-எதிர்ப்பு வாக்கெடுப்பாக" இருக்க வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார். இந்த தேர்தல்களுக்காக, அடிபணியா பிரான்ஸ் ஸ்பெயினின் பொடெமோஸ், போர்ச்சுக்கல்லின் இடது அணி மற்றும் அயர்லாந்தின் சின் ஃபைன் போன்ற பிற போலி-இடது ஜனரஞ்சகவாத கட்சிகளுடன் ஒரு கூட்டணியை ஜோடித்துள்ளது. இந்த அமைப்புகள் அனைத்தினதும் முன்மாதிரியான, இப்போது பதவியில் இருந்து கிரேக்க தொழிலாளர்கள் மீது சிக்கன திட்டங்களைத் திணித்து வரும் சிரிசா குறித்து LFI ஒன்றும் குறிப்பிடவில்லை. ஆனால் அவர் கிரேக்க நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் Zoé Konstantopoulou உட்பட சிரிசாவின் முன்னாள் அங்கத்தவர்களுக்கு அழைப்புவிடுத்தார்.
அடிபணியா பிரான்ஸ் வர்க்கத்தை அடிப்படையாக கொண்டதல்ல, மாறாக முதலாளித்துவ வர்க்கம் மற்றும் செல்வச் செழிப்பான நடுத்தர வர்க்கம் உள்ளடங்கலாக "மக்களை" அடிப்படையாக கொண்டிருப்பதாக அது பிரகடனப்படுத்துகிறது, அவ்விதத்தில் அது சோசலிசத்தை அல்ல மாறாக "மக்களின் புரட்சியை" விரும்புகிறது. மெலொன்சோன் அடிபணியா பிரான்ஸ் வேட்பாளர்களை "சீட்டுக்குலுக்கல் முறையில்" தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது, அவர் எந்தவித சமூக அல்லது அரசியல் கோரிக்கைகளும் இல்லாமல், வெள்ளிக்கிழமை மார்சைய்யில் வீதிகளில் ஒரு "கொண்டாட்ட" அணிவகுப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
அடிபணியா பிரான்ஸ் இயக்கம் அதன் அரசியல் மறுநோக்குநிலையை ஏதோ புதியதைப் போல காட்ட முயல்கிறது, ஆனால் அது முன்மொழிந்து வரும் மறுகுழுவாக்கம் நிச்சயமாக புதியதல்ல. இன்னும் சொல்லப்போனால், அது பழைய ஒன்றின், தோல்வியடைந்த தொழிலாளர்-விரோத மற்றும் ட்ரொட்ஸ்கிச-விரோத அரசியல் சூழ்ச்சிகளின் இன்னும் கூடுதலான வலதுசாரி பதிப்பாகும். 1971 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் (ICFI) முறித்துக் கொண்ட பியர் லம்பேர் இன் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பிலிருந்து (Organisation communiste internationaliste – OCI) ஆரம்பித்த மெலோன்சோன், ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து முறித்துக் கொண்டிருந்த OCI போன்ற பல்வேறு குழுக்களால் ஆதரிக்கப்பட்டிருந்த, பிரான்சுவா மித்திரோன் தலைமையிலான PS-PCF இன் இடதுகளின் ஐக்கியத்தில் ஒரு முக்கிய நடவடிக்கையாளராக இருந்தார்.
மெலொன்சோன் 1997-2002 வரையில் சோசலிஸ்ட் கட்சி-பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி-பசுமை கட்சியின் "பன்முக இடது" அரசாங்கத்தில் ஒரு சோசலிஸ்ட் கட்சி அமைச்சராக இருந்தார், 2002 ஜனாதிபதி தேர்தல்களில் பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் இரண்டாம் சுற்றை கூட எட்ட முடியாமல் தோல்வியடைந்த போது, அந்த அரசாங்கம் இழிவுகரமாக தோற்று போனது, அத்தேர்தலில் ஜோஸ்பன் LR வேட்பாளர் ஜாக் சிராக் மற்றும் நவ-பாசிசவாத ஜோன் மரி லு பென்னுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருந்தார். 2009 இல் மெலொன்சோன் ஸ்தாபித்த, LFI இன் முன்னோடி அமைப்பான இடது கட்சி (PG), ஸ்ராலினிஸ்டுகளுடனும் மற்றும் இடது முன்னணி என்றழைக்கப்பட்ட NPA இல் இருந்து வந்த கூறுபாடுகளுடனும் அணி சேர்ந்திருந்தது.
மக்ரோனின் சிக்கன நடவடிக்கை கொள்கைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் கோபத்திற்கு மத்தியில், அடிபணியா பிரான்ஸ் மற்றும் மெலொன்சோன் மட்டுமே மக்ரோன் அரசாங்கத்திற்கு ஒரே நம்பகமான எதிர்ப்பாக காட்டிக் கொண்டாலும், அதேவேளையில் அவர்கள் வெளிப்படையாகவே வலதுசாரி சக்திகளுடன் தொடர்புகளை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி வருகிறார்கள்.
அவரது கொள்கைகளில் மேலோங்கி நிற்கும் தேசியவாத கண்ணோட்டத்தை கோடை வகுப்பு உரையில், மெலொன்சோன் எடுத்துக்காட்டினார். அவர் தனது உரையில் ஏறத்தாழ பாதியை வாழ்க்கை முறை (lifestyle) மற்றும் சுற்றுச்சூழல் சம்பந்தமான பிரச்சினைகளுக்காக அர்பணித்திருந்ததுடன், பொதுவாக மனிதாபிமானம் குறித்து வரலாற்றுத்தன்மை இழந்த வெற்றுரைகளையும் அவற்றுடன் சேர்த்திருந்தார்: “நாம் அனைவரும் நீரின் குறியீட்டைக் கொண்டு அடையாளப்படுத்தப்பட வேண்டும் … நாம் மனிதயினத்தைக் காப்பாற்றுகிறோம்,” என்றார்.
மக்ரோனின் சமூக செலவின குறைப்பு கொள்கை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ குறித்த அவரின் அனைத்து விமர்சனங்களும், ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அடிப்படையாக கொண்டவை இல்லை, மாறாக பிரெஞ்சு அரசின் மூலோபாய தனியுரிமைகளை அடிப்படையாக கொண்டுள்ளன. “அவர்கள் பிரான்ஸைப் பலவீனப்படுத்தி ஐரோப்பாவைக் கட்டியெழுப்புகின்றனர். நம்மைப் பொறுத்த வரையில், நாம் பட்டவர்த்தனமாக வேண்டாம் என்று கூறுகிறோம்,” என்பதையும் தெரிவித்தார். “நாம் பிரான்சின் ஐந்தாம் குடியரசு அமைப்புகளை மதிக்கிறோம்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
இந்த பிரெஞ்சு தேசியவாத பெருமைபீற்றல் தீர்க்கமான ஏகாதிபத்திய வர்க்க நலன்களை எடுத்துரைக்கிறது. அடிபணியா பிரான்ஸ் அதன் உயர்மட்ட தலைமையிலேயே கூட, போலிஸ், உள்நாட்டு உளவுத்துறை மற்றும் சிறப்பு படைகளின் கூறுபாடுகளை உள்ளடக்கி உள்ளது, இவை மக்ரோன் மற்றும் சோசலிஸ்ட் கட்சிக்கு எதிராக போராடிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீது பல ஆண்டுகளாக வழமையாக தாக்குதல்கள் நடத்தி வந்துள்ளன.
மக்ரோன் தொழிலாள வர்க்கத்தின் மீது நிதிய பிரபுத்துவ தட்டுக்களின் தாக்குதல்களைத் திணிக்கிறார் என்பதற்காக மெலொன்சோன் மக்ரோனை விமர்சிக்கவில்லை, மாறாக ஜேர்மனிக்கு அவர் போதுமானளவுக்கு விரோதமாக இல்லை என்பதற்காகவே விமர்சிக்கிறார். ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலைக் குறிப்பிட்டு அவர் கூறுகையில், “திருவாளர் மக்ரோன் ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் [ஜேர்மன் சான்சிலர் அங்கேலா] மேர்க்கெலுக்கு எழுத்தராக மட்டுமே இருக்கிறார்,” என்றார். மேர்க்கெல் தலைமையிலான "வடக்கு ஐரோப்பாவுக்கு" எதிராக, முதன்முதலில் LR ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி அழைப்பு விடுத்தவாறு, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கான ஒரு செல்வாக்கு மண்டலத்தை ஸ்தாபிக்க "மத்தியதரைக்கடல் ஒன்றியம்" என்பதற்கான அழைப்பை மெலொன்சோன் மீண்டும் தொடங்கி வைத்தார்.
“பாதுகாப்புக்கான ஐரோப்பா,” அதாவது ஓர் ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்திற்கு அவரின் எதிர்ப்பும், “நேட்டோவிலிருந்து வெளியேறுவதற்கு" அவர் அழைப்புவிடுப்பதும், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்கள், இராணுவ சுயஅதிகாரம் குறித்த அதன் பாசாங்குத்தனங்கள், அதன் அணுஆயுத படைகள் மற்றும் அதன் இராணுவம் ஆகியவற்றிற்கான ஊக்குவிப்பை அடித்தளத்தில் கொண்டுள்ளன.
ஒரு வலதுசாரி தேசியவாத தொனியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் தாக்கி, அவரது ஜேர்மன் கூட்டாளி Die Linke ஐ எதிரொலித்தார், புலம்பெயர்வு வெறுமனே கூலி மட்டங்களைக் குறைப்பதாக அவர் வாதிட்டார். புலம்பெயர்ந்தோர்களை "இத்தாலிய மக்கள் நிராகரிப்பதை" அவர் புரிந்து கொண்டிருப்பதாக அறிவித்து, இத்தாலியின் இப்போதைய நவ-பாசிசவாத தலைமையிலான அரசாங்கம் மற்றும் அதன் புலம்பெயர்ந்தோர் விரோத நிலைப்பாடுகளை மெச்சினார்.
ஒருநாள் முன்னர், அடிபணியா பிரான்சின் துணை தலைவர் Adrien Quatennens பாரீஸ் புறநகர் பகுதியில் ஒரு கத்திமுனை தாக்குதல் நடத்திய ஒருவரை சுட்டுக் கொன்ற போலிஸ் படைகளின் "திறமையை" பாராட்டி இருந்தார்.
2016 இல் அடிபணியா பிரான்ஸ் உருவாக்கப்பட்டதில் இருந்து மெலொன்சோன் முன்னெடுத்த தேசியவாத, சட்டம்-ஒழுங்கு மற்றும் வலதுசாரி கொள்கைகளுடன் தொழிலாளர்கள் கடுமையான அனுபவங்களைப் பெற்றுள்ளனர். 2016 இல் சோசலிஸ்ட் கட்சியின் தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களிலும் மற்றும் இந்தாண்டு மக்ரோனின் தேசிய இரயில்வே தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டங்களிலும் அவர்களது தலையீட்டின் இருப்புநிலை கணக்கு என்ன? என்று ஒருவர் கேள்வி எழுப்ப வேண்டும்.
தொழிற்சங்க அதிகாரத்துவம் 2016 தொழிலாளர் விதிமுறைகளை அழிக்கும் உடன்படிக்கைகளிலும் மற்றும் 2018 இரயில்வே தொழிலாளர் சட்டவிதிகளிலும் கையெழுத்திட்ட நிலையில் அதை ஆதரித்ததன் மூலமாக, மெலொன்சோன் அந்த போராட்டங்களை முட்டுச் சந்துக்கு இட்டுச் செல்ல உதவினார். மக்ரோனின் தொழிலாளர் உத்தரவாணைகள் மீதான செப்டம்பர் 23, 2017 போராட்டத்தில் அவர் செய்ததைப் போலவே, போராட்டங்களை தொழிற்சங்கங்களுக்கு அடிபணிய செய்வதற்கு மெலொன்சோன் மீண்டும் மீண்டும் அழைப்புவிடுத்தார்: “நாங்கள் அவர்களுக்குப் பின்னால் அணிதிரள தயாராக உள்ளோம். … தொழிற்சங்க அமைப்புகளின் பலம் எங்களுக்குத் தெரியும்.” அனைத்திற்கும் மேலாக, உழைக்கும் மக்கள் மீது சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதற்காக ஒரு போலிஸ் அரசு ஆட்சியைக் கட்டமைக்க நோக்கம் கொண்ட அவசரகால நிலைமைக்கு அடிபணியா பிரான்ஸ் தன்னை ஏற்புடையதாக ஆக்கிக் கொண்டது.
கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களில், இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் போது அவரது வாக்காளர்களே பெருவாரியாக மக்ரோன் மற்றும் நவ-பாசிசவாத வேட்பாளர் மரீன் லு பென் இருவருக்கும் எதிராக இருந்தபோதும், மெலொன்சோன் அதில் எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை. மக்ரோனை "தீமை குறைந்தவர்" என்று சந்தைப்படுத்த பிரெஞ்சு ஊடகங்களின் முயற்சிகளுக்கு ஒத்துழைத்ததன் மூலமாக, அவர் மறைமுகமாக மக்ரோனை ஆதரித்தார்.
இப்போதோ மெலொன்சோன் வலதுடனான அவரின் தொடர்புகளை வைத்து விளையாடுகிறார், அவர் கொள்கையின் வர்க்க தன்மை முன்பினும் அதிக தெளிவாக வெளிப்பட்டு கொண்டிருக்கிறது. அவசரகால நிலையின் அளவுகடந்த போலிஸ் அதிகாரங்களை கடந்த ஆண்டின் பயங்கரவாத-எதிர்ப்பு சட்டத்தில் கொண்டு வந்ததன் மூலமாக, அவற்றை நிரந்தரமாக்கிய மக்ரோனின் முடிவை மார்சைய்யில் அவர் ஒருபோதும் விமர்சிக்கவே இல்லை. இதில் அவர் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி மற்றும் தொழிலாளர் போராட்டம் (LO) அமைப்புகள் உட்பட ஒட்டுமொத்த உத்தியோகபூர்வ பிரெஞ்சு "அதி-இடதுடன்" இணைந்திருந்தார், இந்த அமைப்புகள் மக்ரோனின் இரயில்வே தனியார்மயமாக்கல் மீதான இந்தாண்டின் போராட்டங்களின் போது மெலொன்சோனுடன் ஒரு கூட்டணியில் இணைந்தன.
இது, போலி-இடதின் தேசியவாத மற்றும் இராணுவவாத கொள்கையையும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) பிரெஞ்சு பிரிவான Parti de l’égalité socialiste இன் (PES) முன்னோக்கையும் பிரிக்கும் பிளவை அடிக்கோடிடுகிறது. மெலொன்சோனின் ஜனரஞ்சகவாதம் மற்றும் வலதுசாரி உறவுகளை நிராகரித்து, முதலாளித்துவ ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராகவும், ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காகவும் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைப் பிடிப்பதற்காகவும் போராடும் ஒரு சர்வதேசவாத வேலைத்திட்டத்தை PES முன்னெடுத்துச் செல்ல முயன்று வருகிறது.
பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (PES) தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தைக் கொண்டு வர போராடி வருகிறது. அது ஒவ்வொரு தருணத்திலும் முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ கட்சிகளிடம் இருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிக்கவும், மற்றும் ஒரு சுயாதீனமான கொள்கைக்கு அடித்தளமிடவும் முயன்று வருகிறது. மக்ரோன் மற்றும் லு பென்னுக்கு இடையே அழுகிப் போன தேர்ந்தெடுப்புக்கு எதிராக, அது ஜனாதிபதி தேர்தலைச் செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்தது—உண்மையில் இந்தவொரு கொள்கை மெலொன்சோனுக்கான பரந்த பெரும்பான்மை வாக்காளர்களாலேயே கூட ஆதரிக்கப்பட்டது.
மக்ரோனின் சமூக செலவின குறைப்பு நடவடிக்கைகளை எதிர்த்து போராட, வேலையிடங்களில் தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களைக் கட்டமைக்குமாறு PES அழைப்பு விடுக்கிறது, இவை மக்ரோனின் சிக்கன கொள்கைகள் மீது கையெழுத்திட்டு வரும் முதலாளித்துவ-சார்பு கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான போராட்டங்களை ஒழுங்கமைக்கும். ஒரு போலிஸ் அரசைக் கட்டமைக்க முயன்று வரும் ஒரு திவாலான அரசியல் ஸ்தாபகத்துடன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைக் கட்டிப்போட நோக்கம் கொண்ட மெலொன்சோன் போன்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு மாற்றீட்டைக் கட்டமைக்க PES மட்டுமே போராடி வருகிறது.