Print Version|Feedback
සමාජවාදී සමානතා පක්ෂයේ 50 වන සංවත්සරය සැමරීමේ දේශන:
කලාවේ ස්වාධීනත්වය ආරක්ෂා කිරීමට සහ මාක්ස්වාදී කලා විචාරය ස්ථාපිත කිරීමට ගෙනගිය අරගලය
சோசலிச சமத்துவக் கட்சியின் 50 வது ஆண்டு நிறைவு விரிவுரைகள்:
கலையின் சுயாதீனத்தை பாதுகாக்கவும் மார்க்சிச கலை விமர்சனத்தை ஸ்தாபிக்கவும் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
5 September 2018
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அதன் 50 வது ஆண்டு நிறைவுக்காக நடத்தும் விரிவுரை தொடரின் அடுத்த விரிவுரை, "கலையின் சுயாதீனத்தை பாதுகாக்கவும் மார்க்சிச கலை விமர்சனத்தை ஸ்தாபிப்பதற்கும் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்" என்ற தலைப்பில், செப்டம்பர் 13 அன்று மாலை 4 மணிக்கு கொழும்பு பொரளையில் உள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் இடம்பெறும்.
1970ல் ஸ்தாபிக்கப்பட்ட கூட்டணி அரசாங்கம், ஜனநாயக உரிமைகள் மீது நடத்திய தொடர் தாக்குதல்களுக்கு எதிராக முன்னெடுத்த கொள்கை பிடிப்பான பாதுகாப்பு பிரச்சாரத்தின் பிரதான அங்கமாகவே, சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.), கலை மற்றும் கலாச்சாரத்தில் தனது தலையீட்டைத் தொடங்கியது.
கூட்டணி அரசாங்கம், முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் மற்றும் கலாச்சார ஆதிக்கத்தை சவால் செய்த பல கலை படைப்புகளை தடை செய்தது. 1973ல் தனது செய்தித் தாளான தொழிலாளர் பாதையில் "கலையை வேட்டையாடுவதை நிறுத்து" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டு, அதற்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்க பு.க.க. முன்நின்றது.
பு.க.க. அறிக்கை, வர்க்கப் போராட்டத்திற்கும் கலைக்கும் இடையிலான உறவை ஸ்தாபித்தது. கலைத் துறையில் கலைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அவர்களால் தனியே தீர்த்துக்கொள்ள முடியாதவை என்றும், "கலைஞர்களும் ஆளும் வர்க்கத்தை தூக்கியெறியும் போராட்டத்தில் பங்குதாரிகளாக ஆவதன் மூலம் மட்டுமே அவற்றுக்கு தீர்வு காண முடியும்" என்றும் அது சுட்டிக்காட்டியது.
பு.க.க. அறிக்கை மற்றும் அது முன்னெடுத்த பிரச்சாரத்திற்கு சமாந்தரமாக, பல்வேறு கலை படைப்புகள் பற்றி தொழிலாளர் பாதை ஊடாக வெளிவந்த விமர்சனங்கள் மூலம் மார்க்சிச கலை விமர்சனத்தை ஸ்தாபிப்பதும் தொடங்கியது.
1979ல், லியோன் ட்ரொட்ஸ்கியின் "கலாச்சாரமும் சோசலிசமும்" நூலின் சிங்கள மொழிபெயர்ப்பை பு.க.க. முதல் முறையாக வெற்றிகரமாக பிரசுரித்தது. அத்துடன் அது கலை மற்றும் கலாச்சாரத்திற்கு ட்ரொட்ஸ்கி இட்டுநிரப்பிய அசாதாரணமான பங்களிப்பை கற்றுக்கொள்வதற்கு பு.க.க. உறுப்பினர்களுக்கு மட்டுமன்றி கலைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் வழி காட்டியது.
1986ல், அப்போதைய பு.க.க. பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரிய மற்றும் சுசரித்த கம்லத்தும் எழுதிய கற்பனா உலகவாதம், கலை இலக்கியம் மற்றும் மார்க்சிசம் என்ற நூல், பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திரவை முன்நிலையில் கொண்ட நிலைப்பாடுகளின் பிற்போக்கு உள்ளடக்கத்தை தெளிவுபடுத்த எடுத்த பொறுமையான மற்றும் அறிவார்ந்த முயற்சியாக இருந்தது. நிலை தடுமாறச் செய்யப்பட்டுள்ள மனிதனின் நனவை, கலை-இலக்கிய விமர்சனத்தின் அடித்தளமாக ஆக்கிக்கொள்கின்ற பிற்போக்கு கருத்துமுதல்வாதத்துக்கு எதிராக, “கலை-இலக்கியங்களை அணுகி அவற்றை திறனாய்வு செய்து, மனிதனின் நடைமுறையிலான புரட்சிகர செயற்பாடே ஒரே உண்மையான அடித்தளம்,” என இந்த நூலின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
மாதலே ஹபுகல என்ற பெயரில் தொழிலாளர் பாதை பத்திரிகைக்கு ஒரு தொகை கலை விமர்சனங்களை எழுதிய பியசீலி விஜேகுணசிங்க, இலக்கியம்-ஒரு சடவாத கற்கை, நவீன சிங்கள இலக்கிய விமர்சனம்- ஒரு மார்க்சிச கற்கை, சுசரித்த கம்லத்துக்கு எதிராக மார்க்சிச கலை விமர்சனத்தின் அடித்தளங்கள், ஆகிய மூன்று புத்தகங்கள் மூலம், இந்த தத்துவ அபிவிருத்திக்கு முக்கியத்துவமான பங்களிப்பைச் செய்தார்.
இந்த வேலைகள் மூலம், கலை மற்றும் கலாச்சார துறையில், வேறு எந்தவொரு அரசியல் அமைப்புக்கும் இல்லாத அதிகாரத்தையும் செல்வாக்கையும் பு.க.க./சோ.ச.க. நிலைநாட்டிக்கொண்டது.
1998ல், உலக சோசலிச வலைத் தளத்தை ஸ்தாபித்த பின்னர், அதை மையமாகக் கொண்டு, ஒட்டு மொத்த கலாச்சார துறை மீதும் மார்க்சிச ஆளுமையை நிறுவுவதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுக்கும் நடவடிக்கைகளுடன் சோ.ச.க. மேலும் மேலும் ஒருங்கிணைந்துள்ளது.
ஆகஸ்ட் 13 அன்று நடக்கவுள்ள விரிவுரை, கலையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் மார்க்சிச கலை விமர்சனத்தை ஸ்தாபிக்கவும் பு.க.க./சோ.ச.க. ஐந்து தசாப்தங்களாக முன்னெடுத்த போராட்டத்தை மீளாய்வு செய்து, இன்று தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் அதில் இருந்து கிரகித்துக்கொள்ள வேண்டிய அரசியல் மற்றும் தத்துவார்த்த படிப்பினைகளை ஆராயும். இந்த நிகழ்வில் பங்கேற்க, தொழிலாளர் இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.