ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Promotion of German secret service chief evokes the tradition of the Gestapo

ஜேர்மன் இரகசிய சேவை தலைவரின் பதவி உயர்வு கெஸ்டாபோ பாரம்பரியத்தை நினைவூட்டுகிறது

By Ulrich Rippert
21 September 2018

ஜேர்மனியின் உள்நாட்டு உளவுத்துறையின் (அரசியலமைப்பு பாதுகாப்புக்கான கூட்டாட்சி அலுவலகம், BfV) முன்னாள் தலைவர் ஹன்ஸ்-கியோர்க் மாஸன் அவர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, உள்துறை அமைச்சகத்தின் அரசு செயலராக பதவி உயர்த்தப்பட்டு ஒரு நாளைக்குப் பின்னர், உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீகோவர் (கிறிஸ்துவ சமூக ஒன்றியம், CSU) மாஸனின் புதிய பொறுப்புகளை அறிவித்தார்.

கடந்த மாதம் கெம்னிட்ஸில் நடந்த நவ-நாஜி கலகத்தில் பாசிசவாதிகள் வெளிநாட்டவர்களைத் தாக்கியதை மறுத்து, அவர்களை அவர் பகிரங்கமாக பாதுகாத்ததன் மூலம், அவர் மக்கள் சீற்றத்தையும் பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் தூண்டிவிட்டிருந்தார். மாஸனின் பாசிசவாத கருத்துக்கள் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்ற கோரிக்கைகளைக் கொண்டு வந்திருந்தன. ஆனால் அதற்கு பதிலாக, அவருக்கு பதவிஉயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில், சீகோவர் கடந்த சில மாதங்களாக "நெருக்கமாக மற்றும் நம்பிக்கைக்குரிய கூட்டுறவை" வழங்கியமைக்காக முதலில் அந்த முன்னாள்-உளவுத்துறை தலைவரை பாராட்டியதுடன், மாஸன் ஒரு முக்கிய முகமையின் தலைவராக "உயர் மதிப்பை" எடுத்துக்காட்டி இருப்பதாக தெரிவித்தார். பின்னர் அவர் அறிவிக்கையில், மாஸன், உள்துறை அமைச்சகத்தில் அரசு செயலராக அவரின் புதிய பதவியில், மத்திய போலிஸ், இணையவழி சோதனை மற்றும் மக்கள் மீதான கண்காணிப்பு என உள்நாட்டு கண்காணிப்புக்கான மூன்று முக்கிய துறைகளின் பொறுப்பை ஏற்றுக் கொள்வாரென அறிவித்தார்.

அவ்விதத்தில் மாஸன் கண்காணிப்பு அமைப்பின் முக்கிய துறைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பார் என்பதோடு, அவரின் முந்தைய பணியை விட இன்னும் கூடுதல் அரசியல் செல்வாக்கு கொண்டிருப்பார். எவ்வாறிருப்பினும் அவர் BfV மீதான கண்காணிப்பை ஏற்க மாட்டார். இது கூட்டணி குழுவில் ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பதாக சீகோவர் தெரிவித்தார். இந்த பொறுப்பு மற்றொரு அரசு செயலரான ஹன்ஸ்-கியோர்க் ஏங்கெல்க்க வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. பணியை இதுபோல பிரித்தளிப்பது எந்த விதத்திலும் உளவுபார்ப்பு சேவைகளில் மாஸனின் எதிர்கால செல்வாக்கைக் குறைத்துவிடாது. மாஸன் மற்றும் ஏங்கெல்க்க இருவருமே கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் நீண்டகால அங்கத்தவர்கள் என்பதோடு, கடந்த காலத்தில் நெருக்கமாக ஒருங்கிணைந்து பணியாற்றி உள்ளனர்.

உள்துறை அமைச்சகத்தில் மாஸனுக்கு வழியமைத்து கொடுப்பதில், மற்றொரு அரசு செயலர் தற்காலிக ஓய்வுக்கு செல்ல பலவந்தப்படுத்தப்பட்டுள்ளார். மாஸன் பிரதியீடு செய்த அந்த நபர், குந்தர் ஆட்லர், சமூக ஜனநாயக கட்சியின் (SPD) ஓர் அங்கத்தவர் என்பதுடன், கட்டுமானம் மற்றும் வீட்டுவசதிகளுக்கு முன்னர் பொறுப்பேற்றிருந்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் இருந்து வந்த ஆட்லெர் சமூக ஜனநாயக கட்சியின் முன்னாள் கூட்டாட்சி தலைவர் ஜொஹன்னஸ் ராவ் உடன் நெருக்கமாக பணியாற்றியவர் என்பதோடு, ஒரு சமூக சீர்திருத்தவாதி என்று பெயரெடுத்தவர். அட்லெருக்கு ஓய்வூ வழங்குவதை SPD எதிர்த்தது என்றாலும், அவர் அமைச்சகத்தில் அரசு செயலர்களின் நியமனத்தை அவர் மட்டுமே முடிவெடுப்பதாக சீகோவர் தெரிவித்தார்.

மாஸனின் பதவி உயர்வு மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மறுஒழுங்கமைப்பை பல ஊடக விமர்சனங்கள் விமர்சித்துள்ளன. இந்த சம்பவங்களை Süddeutsche Zeitung “அரசியல் ஏமாற்றத்திற்கான உதவிப்பொதி திட்டம்" என்று வர்ணித்தது. The taz பத்திரிகை "பேர்லினின் குழப்ப நாட்கள்" என்று குறிப்பிட்டது. “திருப்தியற்ற உடன்பாட்டின்" விளைவுகளைக் குறித்து Die Zeit எச்சரித்ததுடன், கூட்டாட்சி அரசாங்கம் மக்கள் மனநிலையை உணரும் திறனை இழந்துவிடும் அச்சுறுத்தலில் இருப்பதாக குறைகூறியது.

ஆனால் யாருமே உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை விளக்கவில்லை. ஹன்ஸ்-கியோர்க் மாஸன் ஒரு வலதுசாரி மற்றும் ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியின் ஆதரவாளர். ஒருசில நாட்களுக்கு முன்னர் தான், அவர் AfD மற்றும் CDU க்கு இடையே நெருக்கமான உறவை மட்டுமே உறுதிபடுத்தும் விதத்தில் ஜேர்மன் நாடாளுமன்றத்தின் (Bundestag) உள்துறை குழுவுக்கு கூறுகையில் அவர் 30 ஆண்டுகளாக CDU இன் அங்கத்தவராக இருப்பதாக தெரிவித்தார். இப்போது AfD ஆல் ஜேர்மன் நாடாளுமன்றத்தின் மற்ற கட்சிகளின் நிர்வாக மட்டங்கள், முன்னணி ஊடக நிறுவனங்கள் மற்றும் அரசு எந்திரத்தின் ஆதரவுடன் அதன் செல்வாக்கை விரிவாக்க முடியும். AfD இன் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்னர், அதன் தலைவர் அலெக்சாண்டர் கௌலாண்ட் 40 ஆண்டுகளாக CDU இன் அங்கத்தவராக இருந்து வந்தவராவார்.

மாஸன் BfV இல் அவரது நிர்வாக பதவியை AfD மற்றும் தீவிர வலதுசாரி வட்டாரங்களைப் பலப்படுத்துவதற்குப் பயன்படுத்தினார். அவர் முன்னணி AfD அரசியல்வாதிகளுக்கு ஆலோசனை வழங்க பல சந்தர்ப்பங்களில் அவர்களைச் சந்தித்தார். அவர் வருடாந்தர இரகசிய சேவை அறிக்கையில் AfD ஐ வலதுசாரி தீவிரவாத கட்சியாக பெயரிட்டு, அதை மீது கண்காணிப்பைத் தொடங்க வேண்டுமென கூறிய சில BfV அரசு அதிகாரிகளின் ஆலோசனைகளை ஒதுக்கித் தள்ளினார். உண்மையில் BfV அறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாக அதன் உள்ளடக்கங்களை AfD நிர்வாகிகளுடன் அவர் விவாதித்தார் என்பது வெளிப்படையாகும்.

AfD இன் நபரான மாஸன் இப்போது உள்துறை அமைச்சகத்தில் ஒரு முக்கிய பதவி பெற்றுள்ளார். இது அரசு மற்றும் அரசு எந்திரத்தில் AfD இன் செல்வாக்கை பலப்படுத்துகின்ற அதேநேரத்தில் இந்த மகா கூட்டணி அரசாங்கத்தின் வலதுசாரி குணாம்சத்தையும் அடிக்கோடிடுகிறது.

மாஸன் இப்போது கூட்டாட்சி போலிஸ், இணையம் மீதான கண்காணிப்பு மற்றும் மக்கள் மீதான கண்காணிப்புக்கு பொறுப்பேற்றுள்ளார். ஒட்டுமொத்த கண்காணிப்பு எந்திரமும் பலப்படுத்தப்பட வேண்டும் மற்றும் மத்தியத்துவம் செய்யப்பட வேண்டுமென கடந்த காலத்தில் அவர் மீண்டும் மீண்டும் வலியறுத்தி உள்ளார்.

இப்போது மாஸன் உள்துறை அமைச்சகத்தில் பலமான மனிதராக உள்ளார், கண்காணிப்பு எந்திரத்தின் வெவ்வேறு பிரிவுகளை மத்தியத்துவம் செய்வதற்கும் போலிஸ் அரசு கட்டமைப்புகளைக் கட்டமைப்பதற்கும் பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த ஆண்டு உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் நடந்த விவாதங்கள் மற்றும் முடிவுகள் மீதான ஒரு பார்வை இதன் அர்த்தம் என்னவென்பதைத் தெளிவுபடுத்துகிறது. அந்த மாநாடு பேர்லினில் ஒருங்கிணைந்த பயங்கரவாத-எதிர்ப்பு மையம் (GTAZ) ஒன்றை அமைக்க உடன்பட்டது, அங்கே 40 க்கும் அதிகமான ஜேர்மன் கண்காணிப்பு முகமைகளின் பிரதிநிதிகள் ஒன்றே கட்டிடத்தில் பணியாற்றுவார்கள்.

ஆனால் இந்த மகா கூட்டணியின் முன்னணி பிரமுகர்கள் இன்னும் கூடுதலான போலிஸ்-அரசு நடவடிக்களை கோரியுள்ளனர். குறிப்பாக, அவர்கள் கூறுகையில், டிஜிட்டல் உளவுபார்ப்பு பிரிவில் நிறைய செய்யப்பட வேண்டியுள்ளது என்றும், ஒரு “முன்மாதிரி போலிஸ் சட்டம்” உருவாக்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்தனர். இது ஏதேனும் விதத்தில் சந்தேகத்திற்குரியவர்களாக கருதப்படும் எல்லா நபர்களையும் குழுக்களையும் உளவுபார்ப்பதற்கு அதிகாரிகள் பயன்படுத்தும் அனைத்து தரவு களஞ்சியங்களையும் ஒருங்கிணைப்பதை நோக்கமாக கொண்டது. கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட கண்காணிப்பு சட்டங்களைக் கொண்டு, எந்தவொரு ஜனநாயக மேற்பார்வையும் இல்லாமல் ஒட்டுமொத்த இரகசிய தரவுகளஞ்சியங்களை உருவாக்க முடியும்.

இணையவழி சோதனை என்றழைக்கப்படுவது மற்றொரு திட்டமிட்ட நடவடிக்கையாக உள்ளது. இது அதிகாரிகள் நேரடியாக சென்று கணினிகளின் பதிவுத்தகடுகளை (hard disks) அணுக வேண்டிய அவசியமின்றி, "சந்தேகத்திற்குரியவர்களின்" கணினிகளை ஊடுருவி வாசிக்க அனுமதிக்கிறது. சந்தேகத்திற்குரியவர்களின் பதிவுத்தகடுகளை பறிமுதல் செய்வதை உள்ளடக்கிய, வீட்டுச் சோதனையிடுதல் போலன்றி, இப்போது குறிப்பிட்ட நபருக்குத் தெரியாமலேயே இணையவழி சோதனை நடத்தப்படும், அவ்விதத்தில் அதற்கு எதிராக அவரால் சட்டரீதியில் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியாது.

மாஸன் எதிர்காலத்தில் இணையவழி கண்காணிப்பு எனப்படும் இந்த துறைக்கும் பொறுப்பேற்கக்கூடும். சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் தரவுகளும் அவர் மேசைக்குச் செல்லும். அவர் அவற்றை மதிப்பிட்டு, AfD இன் அவர் நண்பர்களுக்கு அனுப்ப முடியும், இவர்கள் ஏற்கனவே போர் எதிர்ப்பாளர்கள், முதலாளித்துவத்தின் விமர்சகர்கள் மற்றும் சோசலிஸ்டுகள் அனைவரது பட்டியலையும் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நடவடிக்கைகள் ஜேர்மனியின் கடந்தகால பூதங்களை நினைவூட்டுகின்றன. ஜனவரி 1933 இல் நாஜிக்கள் அதிகாரத்திற்கு வந்த சிறிது காலத்திலேயே பெருந்திரளான கைது நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, அவர்களால் வைய்மார் குடியரசின் நெருக்கடி ஆண்டுகளின் போது முன்பே சேகரிக்கப்பட்டிருந்த பட்டியல்களைச் சார்ந்திருக்க முடிந்தது. இதுபோன்றவொரு ஒப்பீடு ஒரு மிகைப்படுத்தல் என்று யாரும் கருத முடியாது. அதிவலது நாஜி வகையிலான சர்வாதிகாரம் மீண்டும் வருவது சாத்தியமில்லை என்று கருதுவது இன்று மிகப்பெரிய ஆபத்தாகும்.

கடந்த ஆண்டு CDU கண்காணிப்பு ஆவணம் எனப்படுவதை அபிவிருத்தி செய்வதில் மாஸன் சம்பந்தப்பட்டிருந்தார். “நமது குடிமக்கள் மீதான கண்காணிப்புக்கு ஒரு பலமான சட்டத்தின் ஆட்சி" என்ற தலைப்பின் கீழ், அது எந்தவொரு சர்வாதிகாரியையும் பெருமைக் கொள்ளச் செய்யும் ஒரு நடவடிக்கைகளின் தொகுப்பை அது பரிந்துரைக்கிறது. அந்த ஆவணம் பின்வரும் வாக்கியத்துடன் தொடங்குகிறது: “மத்திய அரசாங்கம் மற்றும் நாட்டின் மாநிலங்களுக்கு இடையே, முக்கியமாக போலிஸ், உளவுபார்ப்பு சேவைகள் மற்றும் நீதித்துறையில் அதிசிறந்த கூட்டுறவு இருப்பது, நம் நாட்டின் பாதுகாப்பிற்கான முக்கிய வெற்றிக் காரணியாகும்.”

உளவுபார்ப்பு சேவைகள் மற்றும் போலிஸை பிரித்து அவற்றை ஒன்றிணைக்காமல் வைத்தமை, ஜேர்மனியில் போருக்குப் பிந்தைய ஒழுங்கமைப்பு கோட்பாடுகளில் ஒன்றாக இருந்தது, குறிப்பாக இது இந்த ஆவணத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதிகாரங்களை இவ்வாறு பிரித்து வைக்க வேண்டுமென்பதே நாஜி ஆட்சியின் வீழ்ச்சி மற்றும் அதன் உளவுத்துறையான கெஸ்டாபோ வகித்த குற்றகரமான பாத்திரத்திலிருந்து பெறப்பட்ட முக்கிய தீர்மானமாக இருந்தது.

ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கம் அந்நேரத்தில் தானே முன்வந்து இந்த தீர்மானத்திற்கு வரவில்லை; அதற்கு மாறாக அது 1949 இல் "போலிஸ் கடிதம்" எனப்பட்டதில் நேசநாட்டு அதிகாரங்களால் வலியுறுத்தப்பட்டது. ஜேர்மனி மறுஐக்கியத்துடன் அதன் முழு இறையாண்மையை மீண்டும் பெற்றதற்குப் பின்னர், அதிகாரங்களை இதுபோல பிரித்து வைப்பதற்கான செல்லத்தக்க காலம் அதிகரித்தளவில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டு வந்துள்ளது.

பேர்லின் Breitscheidplatz இல் நாசகரமான பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு சில வாரங்களுக்குப் பின்னர் —நான் இன்று அறிந்த வகையில், அது BfV இன் கண்களின் முன் நடத்தப்பட்டிருந்த நிலையில்—அப்போதைய உள்துறை அமைச்சர் லோதர் டு மஸியர் கடந்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் "அனைத்து கண்காணிப்பு முகமைகள் மீதும் கட்டுப்பாடு கொண்டிருக்கும் ஒரு ஆணையத்தை" அமைக்க அரசாங்கத்திற்கு அழைப்புவிடுத்தார். கூட்டாட்சி குற்றவியல் போலிஸ் அலுவலகம் மற்றும் கூட்டாட்சி போலிஸ் இன் அதிகாரங்கள் விரிவாக்கப்பட உள்ளன, அரசு BfV முகமைகள் கலைக்கப்பட்டு ஒரு மையப்படுத்தப்பட்ட உள்நாட்டு உளவுபார்ப்பு சேவையுடன் இணைக்கப்பட உள்ளன.

மத்திய போலிஸூம், மத்திய எல்லை போலிஸில் இருந்து உருவாகிய மற்றும் நிஜத்தில் எல்லை கண்காணிப்புக்கு மட்டுமே பொறுப்பான துணைஇராணுவப்படையும் எதிர்காலத்தில் தேசியளவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அளவுக்கு பலப்படுத்தப்பட உள்ளன. ஜேர்மன் இராணுவத்திற்கும் உள்நாட்டில் தலையீடு செய்ய அதிக அதிகாரம் வழங்கப்பட உள்ளது. “இந்த விவாதங்களை ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டிருந்திருக்க வேண்டும். இப்போது, ஒன்றும் செய்வதற்கில்லை,” என்று உள்நாட்டு அமைச்சர் டு மஸியர் எச்சரித்தார்.

போலிஸ் அரசை மீளஆயுதமயப்படுத்தும் இந்த வலதுசாரி திட்டநிரலுக்கு ஆலோசனை வழங்கவும் அமலாக்கவும், மாஸன் இப்போது உள்துறை அமைச்சகத்தில் பொறுப்பேற்றுள்ளார். BfV ஐ மேற்பார்வை செய்வது அவரின் உத்தியோகப்பூர்வ பொறுப்பல்ல என்ற உண்மை, அவர் இரகசிய சேவையுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணுகிறார் என்ற உண்மையை மாற்றிவிடாது.

மாஸன், சீகோவர், AfD மற்றும் அவர்களின் வலதுசாரி இனவாத கொள்கைகளுக்கு எதிராக ஆயிரக் கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்ற போதினும், ஆளும் கட்சிகள் இந்த வலதுசாரி திட்டநிரலை நடைமுறைப்படுத்தவும், அதிகரித்து வரும் எதிர்ப்பை ஒடுக்குவதற்காக ஒரு போலிஸ் அரசை ஸ்தாபிக்கவும் உடன்பட்டுள்ளன. பேர்லினில் இந்த மகா கூட்டணியின் வலதுசாரி சதியின் இயல்பு இதை விட தெளிவாக இருக்க முடியாது.