Print Version|Feedback
Germany’s grand coalition promotes far-right secret service chief to state secretary
ஜேர்மனியின் மகா கூட்டணி இரகசிய சேவையின் அதிவலது தலைவரை அரசசெயலராக பதவி உயர்த்துகின்றது
By Ulrich Rippert
20 September 2018
இந்தாண்டின் ஆரம்பத்தில் ஜேர்மனியில் ஒரு கூட்டணி அரசாங்கம் அமைக்கப்படுவதற்கான பேச்சுவார்த்தைகளின் போதிலிருந்தே, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei – SGP) எச்சரிக்கையில், கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம், கிறிஸ்துவ சமூக ஒன்றியம் மற்றும் சமூக ஜனநாயக கட்சியை உள்ளடக்கிய இந்த கூட்டணி, பாசிசவாத ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியின் வேலைத்திட்டத்துடன் ஒத்த அதிவலது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு சதித்திட்டத்தின் விளைபொருள் என்று எச்சரித்தது.
இந்த வலதுசாரி சதி செவ்வாயன்று இரவு மீண்டுமொருமுறை வெளிப்பட்டது.
ஜேர்மன் இரகசிய சேவையான அரசியலமைப்பு பாதுகாப்புக்கான கூட்டாட்சி அலுவலகத்தின் (BfV) தலைவர் ஹன்ஸ்-கியோர்க் மாஸன், சமீபத்திய வாரங்களில், அதிகரித்தளவில் AfD இன் ஓர் ஆதரவாளராக மற்றும் ஆலோசகராக அம்பலமாக்கப்பட்டு வந்துள்ளார். BfV இன் வருடாந்தர பாதுகாப்பு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்னர் அவர் AfD உடன் கலந்தாலோசித்தார் என்பதும் வெளியானது. பின்னர், கடந்த மாதம் கெம்னிட்ஸ் இல் நடந்த நவ-பாசிசவாத கலகத்தைத் தொடர்ந்து, அதில் அதி-தீவிர வலது ஆர்ப்பாட்டக்காரர்கள் புலம்பெயர்ந்தவர்களாக அவர்கள் கருதியவர்களை தாக்கி வேட்டையாடும் காட்சிகள் படமாக்கப்பட்டிருந்த நிலையிலும், மாஸன் பகிரங்கமாக அந்த கலகக்காரர்களை பாதுகாத்ததுடன், அந்த பரபரப்பான காணொளிகளின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் எழுப்பினார்.
இது, மாஸன் இராஜினாமா செய்ய வேண்டுமென்ற கோரிக்கையோடு பாரிய போராட்டகளைத் தூண்டியது. வலதுசாரி வெளிநாட்டவர் விரோத கலகத்தை எதிர்த்தும், மாஸன் மற்றும் கிறிஸ்துவ சமூக ஒன்றியத்தின் (CSU) தலைவர் உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீகோவர் அதற்கு ஆதரவளித்ததை எதிர்த்தும் பத்தாயிரக் கணக்கானவர்கள் பல நகரங்களில் ஒன்றுகூடினர். கெம்னிட்ஸ் இல், “வலதுசாரிக்கு எதிரான ராக்" இசை நிகழ்ச்சியில் 70,000 பேர் ஒன்றுகூடினர். இத்தகைய நிலைமைகளின் கீழ், சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மாஸனை இனியும் BfV தலைவராக ஏற்க முடியாதென அறிவித்ததுடன், அவரை பதவிநீக்க கோரியது.
ஆனால் சீகோவர், இரகசிய சேவையை மேற்பார்வையிடுவது அவர் அமைச்சகத்தின் பொறுப்பாறுப்பு என்று அறிவித்து, பகிரங்கமாக மாஸனை ஆதரித்தார்.
அம்மூன்று கட்சி தலைவர்களது குடையின்கீழ் செவ்வாயன்று மாலை சந்தித்த அக்கூட்டணி குழு, மாஸனை BfV தலைவர் பதவியிலிருந்து மாற்றுவதற்கு உடன்பட்டது. ஆனால் பணிநீக்கம் செய்வதற்கு பதிலாக, அவருக்கு சீகோவரின் உள்துறை அமைச்சகத்தில் அரசு செயலர் பதவி வழங்கப்படவிருக்கிறது.
மாஸன் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை, அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இப்போது அவர், BfV ஐ மேற்பார்வையிடும் மற்றும் வழிநடத்தும் அதிகாரம் கொண்ட அமைச்சகத்தில் உயர்பதவி பெறுகிறார். மாஸன் அவரது புதிய பதவியில் BfV ஐ மேற்பார்வையிடும் பொறுப்பு வகிக்க மாட்டார் என்று கூட்டணி தலைவர்கள் அறிவித்தாலும், இந்த வாதம் மதிப்பற்றது என்பதை சீகோவர் தெளிவுபடுத்தினார். மாஸனின் பணியை ஒரு முன்னணி அரசியல் அதிகாரியினது பணியாக மதிப்பிட்டிருப்பதாக சீகோவர் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார்.
மாஸன் சீகோவரின் வலதுகரமாக செயல்படுவார் என்பதற்கு அறிகுறிகள் உள்ளன. அவர் BfV இன் தலைவராக இருந்து பெற்ற சம்பளத்தைக் காட்டிலும் அரசு செயலராக அதிக சம்பளம் பெறவிருக்கிறார்.
இரகசிய சேவை தலைவர் பதவி யார் வகிப்பார் என்பது இன்னும் தெளிவாக இல்லை. ஆனால் இந்த இசை-நாற்காலி விளையாட்டை நிறைவு செய்ய உள்துறை அமைச்சகத்தின் தற்போதைய ஒரு அரசு செயலர் BfV க்கு நகர்த்தப்படலாம், இது உள்துறை உளவுச்சேவையை விமர்சங்களில் இருந்து பாதுகாத்து அதை பலப்படுத்தும்.
ஜேர்மன் அரசாங்கம் இன்னும் கூடுதலாக வலதுக்கு நகர்ந்ததன் மூலமாக, AfD மற்றும் அதன் நவ-பாசிசவாத ஆத்திரமூட்டல்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு விடையிறுத்துள்ளது. இந்த மகா கூட்டணி வெறுக்கப்படும் இரகசிய சேவை தலைவரையும் மற்றும் அவரது AfD-ஆதரவு கொள்கையையும் இன்னும் நேரடியாக அரசாங்கத்தினுள் ஒருங்கிணைத்து வருவதுடன், ஒரு புதிய தலைவரை நியமித்ததன் மூலமாக BfV இல் நீண்டகாலமாக நடந்து வந்துள்ள வலதுசாரி சூழ்ச்சியை மூடிமறைக்க முயன்று வருகிறது.
இந்த நிகழ்வுகளில் சமூக ஜனநாயகக் கட்சி ஒரு முக்கிய பாத்திரம் வகித்து வருகிறது. அரசு செயலராக மாஸன் பதவி உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில், அவரை நீக்க வேண்டும் என்ற SPD இன் கோரிக்கையும் இக்கூட்டணியிலிருந்து விலகிவிடுவோம் என்ற அதன் அச்சுறுத்தலும் சுத்தமான நாடகம் என்பதை அது எடுத்துக்காட்டியுள்ளது. அரசு எந்திரத்தினுள் மாஸன் பதவி உயர்த்தப்பட்டிருப்பதை SPD ஒரு வெற்றியாக கொண்டாடி வருகிறது.
யதார்த்தத்தில், என்ன விலை கொடுத்தாவது சமூக ஜனநாயகக் கட்சி புதிய தேர்தலை தவிர்க்க விரும்பியது. இது இன்னும் கூடுதலாக தனக்கான ஆதரவை இழந்துவிடுவோமோ என்ற அதன் அச்சத்தினால் கிடையாது, மாறாக அதிவலதுக்கு எதிராக போராட ஒவ்வொரு வாரயிறுதியிலும் பத்தாயிரக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி வருகின்ற ஒரு நிலைமையில் மற்றும் இந்த மகா கூட்டணியின் வலதுசாரி கொள்கைகளுக்கு பெருந்திரளான மக்களிடையே பலமான எதிர்ப்பு அபிவிருத்தி அடைந்து வரும் சூழலில் அது தேர்தல் நடத்த விரும்பவில்லை என்பதால் ஆகும்.
அக்கூட்டணியை உருவாக்க சமூக ஜனநாயகக் கட்சி மாதக் கணக்கில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேரம்பேசியதும், அவ்விதத்தில் AfD ஐ நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வ எதிர்கட்சியாக ஆக்கியதுடன், அதற்கு அரசியல் சட்ட அங்கீகாரமும் அதிக முக்கியத்துவமும் வழங்கியதெல்லாம் அர்த்தம் எதுவுமில்லாமல் நடந்த விடயமில்லை.
ஏறத்தாழ எல்லா துறைகளிலும், இந்த புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் AfD இன் வலதுசாரி தீவிரவாத அரசியலுக்கு ஒத்திருக்கின்றன. இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கை இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய மிகப்பெரியதாக ஆக்க பாதுகாப்புத்துறை வரவு-செலவு திட்டக்கணக்கை இரட்டிப்பாக்க அக்கூட்டணி ஒப்புக் கொண்டது. அகதிகளை நாடு கடத்துவதையும் மற்றும் அவர்களுக்கான தடுப்புக்காவல் முகாம்களையும் மிகப் பெரியளவில் விரிவாக்குவதை, இந்த மகா கூட்டணி ஏற்றுள்ள சீகோவரின் "பெருந்திட்டம்" (master plan) உள்ளடக்கி உள்ளது. அதேநேரத்தில், போலிஸ் அரசு உள்கட்டமைப்பும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக சமூக ஜனநாயகக் கட்சியால் AfD நாடாளுமன்றத்திற்குள் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு வந்தபோது, SPD, AfD ஐ நோக்கி ஒரு "சக-சார்பான" அணுகுமுறையைக் கோரியது. AfD இன் முன்னணி அரசியல்வாதி ஸ்டீபன் பிரான்ட்னர், நாடாளுமன்ற நீதித்துறை குழு தலைவராக நியமிக்கப்பட்டதற்கு SPD க்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளார். பிரான்ட்னரை முன்மொழிந்த SPD இன் நாடாளுமன்ற துணை தலைவர் தோமஸ் ஓப்பர்மான் AfD இன் வோல்கிஷ்-தேசியவாத பிரிவின் ஒரு பிரதிநிதி என்பதோடு, வலதுசாரி தீவிரவாதி ஜார்ன் ஹோகே இன் நெருங்கிய கூட்டாளியும் ஆவார்.
அரசாங்கத்திற்கும் AfD க்கும் இடையிலான தொடர்பு மொத்தத்தில் இரகசிய சேவையில் மிகத் தெளிவாக இருந்தது. மாஸன் எண்ணற்ற சந்தர்ப்பங்களில் முன்னணி AfD அரசியல்வாதிகளைச் சந்தித்தார், அவர் அமைப்பின் திட்டங்கள் அரசு இரகசியமாக கருதப்படுகின்ற போதினும், அவை குறித்து அவர்களுடன் விவாதித்தார்.
இந்தாண்டின் இரகசிய சேவை அறிக்கை குறித்து மாஸன் பேசியதாக பிரான்ட்னரே உறுதிப்படுத்தி உள்ளார். AfD கட்சியோ, அல்லது அதன் நவ-பாசிசவாத பிரிவுகளோ, அல்லது எண்ணற்ற ஏனைய பிற வலதுசாரி தீவிரவாத குழுக்களோ எதுவுமே அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக, வலதுசாரி தீவிரவாதிகளை எதிர்க்கும் அமைப்புகள் "இடதுசாரி தீவிரவாதிகளாக" முத்திரைக் குத்தப்பட்டுள்ளன. ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) முதலாளித்துவம் மற்றும் தேசியவாதத்தை அது எதிர்ப்பதற்காக, அந்த அறிக்கையின்படி, முதல்முறையாக, “இடதுசாரி தீவிரவாத" அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸன் அரசியல்ரீதியில் AfD ஐ மற்றும் ஜேர்மனியில் உள்ள மிக வலதுசாரி வட்டாரங்களைப் பலப்படுத்த இரகசிய சேவையைப் பயன்படுத்தினார். அதற்கேற்ற வெகுமதி இப்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
2012 கோடையில் அவர் BfV தலைவராக பதவியேற்றார், அப்போது உளவுத்துறை முகமை ஆழ்ந்த நெருக்கடியில் இருந்தது. ஒன்பது மாதங்களுக்கு முன்னர், வலதுசாரி தீவிரவாத குழுவான தேசிய சோசலிஸ்ட் தலைமறைவு இயக்கம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த வட்டாரத்தில் இரகசிய சேவையின் பல உளவாளிகள் செயலூக்கத்துடன் செயல்பட்டு வந்தனர். அதற்கடுத்து பெரும் எண்ணிக்கையிலான கோப்புகளை BfV அழித்துவிட்டது. மாஸனுக்கு முன்பிருந்த Heinz Fromm அந்த குற்றச்சாட்டின் விளைவாக பலவந்தமாக நீக்கப்பட்டார்.
மாஸன் அதிவலது தீவிரவாத குழுக்களுடனான உறவுளை நிறுத்தவில்லை, மாறாக அவற்றை பலப்படுத்தினார். 2015 இன் தொடக்கத்தில், அவர் Netzpolitik.org வலைப்பதிவின் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்தார். அவ்விதத்தில் அவர் பேச்சு சுதந்திரம் மீதான ஒடுக்குமுறையைத் தொடங்கி வைத்ததுடன், அதேவேளையில் AfD உடன் நெருக்கமான உறவுகளை ஸ்தாபித்தார்.
டிசம்பர் 2016 இல் பேர்லினில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் BfV பெரிதும் சம்பந்தப்பட்டிருந்ததமை முன்பை விட அதிகமாக இக்கோடையில் தெளிவானது. AfD ஐ பலப்படுத்துவதற்காக, அத்தாக்குதல் தேர்தல் ஆண்டின் ஆரம்பத்தில் பீதியூட்டும் சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிருந்தது என்பதை பல சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன.
மாஸனை ஊக்குவிப்பதற்கு அது தீர்மானித்திருப்பதுடன் சேர்ந்து, இந்த மகா கூட்டணி இரகசிய சேவையில் வலதுசாரி வலையமைப்புகளுக்கும் அதன் ஆதரவை வழங்கி, தற்போதைய அரசாங்கத்தின் தன்மை குறித்து எந்த ஐயத்திற்கும் இடம் வைக்கவில்லை.
ஆகவே தான் BfV ஐ கலைக்குமாறும், உடனடியாக புதிய தேர்தல்கள் நடத்த வேண்டுமென்றும் SGP கோருகிறது. மக்களில் பரந்த பெரும்பான்மையினர் இந்த அரசாங்கத்தின் வலதுசாரி கொள்கைகளை எதிர்க்கிறார்கள், அவை கடந்த ஆண்டு தேர்தல்களில் தோற்றவர்களால் மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேசி முடிக்கப்பட்டவையாகும்.
ஆளும் வர்க்கம் மற்றும் அதன் கட்சிகள் அனைத்தினது வலதுசாரி, எதேச்சதிகார மற்றும் இராணுவவாத கொள்கைகளை நிறுத்துவதற்குத் தகைமை கொண்ட ஒரே சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு, SGP, அதன் சக்திக்கு உட்பட்டு அனைத்தும் செய்து வருகிறது. இதை செய்வதற்கு ஒரு சோசலிச முன்னோக்கு தேவைப்படுகிறது.
இவை எமது கோரிக்கைகள்:
- மகா கூட்டணி, அரசு எந்திரம் மற்றும் அதிவலது தீவிரவாதிகளின் சூழ்ச்சியை நிறுத்து!
- இனியும் போர் வேண்டாம்! ஜேர்மன் மீண்டும் இராணுவவாத வல்லரசு அரசியலுக்குத் திரும்புவதை நிறுத்து!
- இரகசிய சேவையைக் கலைத்து விட்டு, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) மற்றும் பிற இடதுசாரி அமைப்புகளைக் கண்காணிப்பதை உடனடியாக நிறுத்து!
- தஞ்சம் கோரும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும்! அரசை இராணுவமயப்படுத்துவது வேண்டாம்! உளவுபார்ப்பு வேண்டாம்!
- சமூக சமத்துவத்திற்காக—வறுமை மற்றும் சுரண்டல் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்! மிகப்பெரும் செல்வந்தர்களின் செல்வங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் பொதுவுடைமை ஆக்க வேண்டும்!