Print Version|Feedback
Ten years since the collapse of Lehman Brothers
லேஹ்மன் பிரதர்ஸ் பொறிவுக்குப் பிந்தைய பத்து ஆண்டுகள்
Nick Beams
15 September 2018
பத்து வருடங்களுக்கு முன்பாக இதேநாளில், உலக முதலாளித்துவ அமைப்புமுறையானது, 1930களது பெருமந்தநிலைக்குப் பிந்தைய காலத்தின் மிக நீண்டகால தாக்கங்களுடனும் மற்றும் அழிவுகரமான அதன் நெருக்கடிக்குள் நுழைந்தது. அதற்கு பத்தாண்டுகளின் பின்னரும், அந்த நிதி நெருக்கடியை உருவாக்கியிருந்த முரண்பாடுகளில் எதுவொன்றும் தீர்க்கப்படவோ அல்லது அதிலிருந்து மீள் எழவோ இல்லை. மேலும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் பிற முக்கிய மைய வங்கிகளால் டிரில்லியன் கணக்கான டாலர்கள் இறைக்கப்பட்டமை உள்ளிட, நிதி அமைப்புமுறை முழுமையாக பொறிந்து விடாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அந்தக் கொள்கைகள், இன்னும் பெரியதொரு பேரழிவுக்கான நிலைமைகளை மட்டுமே உருவாக்கியிருக்கின்றன.
158 ஆண்டு பழைய லேஹ்மன் பிரதர்ஸ் முதலீட்டு வங்கியை பிணையெடுக்கப் போவதில்லை அதன் திவால்நிலையைத் தடுக்கப் போவதில்லை என அமெரிக்க நிதி அதிகாரிகள் எடுத்த முடிவு தான் நெருக்கடியின் தோற்றத்திற்கான உடனடித் தூண்டுதலாக இருந்தது. ஒரு தொடர் வங்கிகள் மட்டுமன்றி ஒட்டுமொத்த நிதி அமைப்புமுறையும் பிணையெடுக்கப்படுகின்ற ஒரு பாரிய பிணையெடுப்பு வர வேண்டியதிருப்பதை அறிந்து அதற்கு அவசியமான நிலைமைகளை உருவாக்குவதற்காக பெடரல் ரிசர்வ் இந்த முடிவை திட்டமிட்டு எடுத்திருந்தது என்று கூறுவதற்கு கணிசமான ஆதாரங்கள் இருக்கின்றன.
முந்தைய மார்ச் மாதத்தில், Bear Stearns ஐ ஜேபி மோர்கன் கையகப்படுத்திய போது அதன் மீட்புக்காக Fed 30 பில்லியன் டாலரை ஏற்பாடு செய்தது. ஆயினும் அந்த சமயத்திலான Fed இன் சொந்த குறிப்புகளே தெளிவாக்குகின்ற படி, Bear Stearns நெருக்கடி ஒரு பெரும் பனிச்சிகரத்தின் வெறும் உச்சியாக மட்டுமே இருந்தது. “அந்த சமயத்தில் நிதிச் சந்தைகள் இருந்த எளிதில் நொருங்கத்தக்க நிலைமைகளை”யும் இதன் மறைவால் விளையக் கூடிய “எதிர்பார்க்கத்தக்க தொற்றுநிலை”யையும் கொண்டுபார்க்கையில், ஒரு பிணையெடுப்பை ஏற்பாடு செய்வது அவசியமாக இருந்ததாக Fed குறிப்பிட்டது. Fed தலைவரான பென் பெர்னான்கே பின்னர் அளித்த சாட்சியத்தில், ஒரு திடீர் செயலிழப்பு என்பது நிதிச் சந்தைகளிலான நிலைகளின் ஒரு “குழப்பமிக்க கட்டவிழலுக்கு” இட்டுச் சென்றிருக்கும் என்றார். Bear Stearns இன் பிணையெடுப்பு ஒரு தீர்வாக அல்ல, மாறாக பின்னர் வரவிருப்பதற்கு தயாரிப்பு செய்து கொள்வதற்கு கால அவகாசம் பெறும் முயற்சியில் தடுத்துவைக்கின்ற ஒரு நடவடிக்கையாக இருந்தது.
லேஹ்மென் மறைவு ஆரம்ப தூண்டுதலாக இருந்ததென்றால், அதற்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் வெளிப்பட்ட, டிரில்லியன் கணக்கான டாலர்கள் புழங்கிய சிக்கலான நிதித் தயாரிப்புகளது ஒரு அமைப்புமுறையின் மையத்தில் நின்றிருந்த அமெரிக்க காப்பீடு நிறுவனமான AIG உடனடி திவால்நிலைக்கு அண்மையில் இருக்கின்றது என்ற செய்தி தான் மிக முக்கிய நிகழ்வாக இருந்தது.
உலகளாவிய நிதி அமைப்புமுறையின் இடைத்தொடர்புகளின் காரணத்தால், இந்த நெருக்கடி உலகெங்குமான நிதிச் சந்தைகளுக்கு, எல்லாவற்றிற்கும் மேல் அட்லாண்டிக் கடந்து ஐரோப்பாவிற்கு துரிதமாக விரிவடைந்து சென்றது. இங்குதான் வங்கிகள் எதன் பொறிவு நெருக்கடியின் உடனடித் தூண்டுபொறியாக இருந்ததோ அந்த அமெரிக்க துணை-அடமான வீட்டுக் கடன் சந்தைகளைச் சுற்றி உருவாக்கப்பட்டிருந்த புரிபடாத நிதிச் சாதனங்களில் முக்கிய முதலீட்டாளர்களாய் இருந்தன.
ஒவ்வொரு நெருக்கடியின் பெறுமதியாக இருப்பது என்னவென்றால், “சாதாரணமான” சமயங்களில் மறைந்திருக்கிற கீழமைந்த சமூக-பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை அது வெளிக்கொண்டுவருகிறது, தோலுரித்துக் காட்டுகிறது, என்று சரியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. 2008 பொறிவும் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்த நெருக்கடிக்கு முன்வந்திருந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளின் போது, குறிப்பாக 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய காலத்தில், முதலாளித்துவ வர்க்கமும் அதன் சித்தாந்தவாதிகளும் முதலாளித்துவ “சுதந்திர சந்தை”யின் மேலோங்கிய நிலையை மட்டுமல்ல, அது மட்டுமே ஒழுங்கமைக்கத்தக்க ஒரேயொரு சாத்தியமான சமூக-பொருளாதார வடிவமாக இருந்ததாகவும் பிரகடனம் செய்திருந்தனர். ஸ்ராலினிச ஆட்சியை சோசலிசத்துடன் தவறாக அடையாளப்படுத்துவதை தமக்கு அடித்தளமாக அமைத்துக் கொண்டு, அதன் கலைப்பானது மார்க்சிசம் என்றென்றைக்குமாய் இறந்து புதைக்கப்பட்டு விட்டதைக் குறித்ததாக அவர்கள் சாதித்தனர். குறிப்பாக, முதலாளித்துவ உற்பத்திமுறையின் அடிப்படையான மற்றும் தீர்க்கவியலாத முரண்பாடுகள் குறித்த மார்க்சின் பகுப்பாய்வு தவறு என நிரூபணமாகியிருந்ததாக கூறினர். தத்துவார்த்த பகுப்பாய்வு என்ற பேரில் கடந்து சென்றதன் மையமான அடித்தளமாக இருந்த, “திறம்படைத்த சந்தைகள் அனுமானத்தத்துவம்” (efficient markets hypothesis) என்பதாக அழைக்கப்பட்ட தத்துவத்தின் படி, முன்னேறிய தொழில்நுட்பங்கள் அபிவிருத்திகண்டிருந்த காரணத்தால் அனைத்து தகவல்களுமே முடிவெடுப்பதற்குள் விலைமதிப்பிடப்பட்டிருப்பதால் ஒரு நிதிப் பொறிவுக்கு சாத்தியமே இருக்கவில்லை என்று சொல்லப்பட்டது.
முதலாளித்துவ வர்க்கத்தின் மற்றும் அதன் சித்தாந்தவாதிகளின் போலிமருத்துவம் இந்தளவுக்கு வரைபடரீதியாக அம்பலப்பட்டிருக்கின்ற சந்தர்ப்பங்கள் அபூர்வமே.
நெருக்கடி வெடித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஜனாதிபதி ஜோர்ஜ் W. புஷ் “இந்த சனியன் கீழே போகிறது” என்று அறிவித்தார். அதன்பின், முதலாளித்துவத்தின் மற்றும் அதன் “சுதந்திர சந்தை”யின் உயர்மட்ட போதகரும், இப்போது கதிகலங்கி நின்று கொண்டிருந்தவருமான, அமெரிக்க பெடரல் ரிசர்வின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான், அமெரிக்க காங்கிரசில் சாட்சியமளிக்கையில், சந்தைகள் அவரது “மாதிரி” மற்றும் அதன் அனுமானங்களுக்கேற்றபடி நடந்து கொள்ளத் தவறிவிட்டன என்பதால் முற்றிலுமாய் குழம்பிப் போயிருப்பதாக கூறினார்.
முதலாளித்துவ ஒழுங்குமுறை குறித்த மையமான புனைகதைகளில் இன்னொன்றாகிய, அரசு என்பது ஒட்டுமொத்தமாக சமூகத்தின் நலன்களின் பேரில் சமூக மற்றும் பொருளாதார விவகாரங்களை நெறிப்படுத்த உறுதிபூண்ட ஏதோவொரு நடுநிலையான அல்லது சுயாதீனமான அமைப்பு என்று சொல்லப்பட்டதையும், இந்த நெருக்கடி வெட்டவெளிச்சத்தில் அம்பலப்படுத்தி விட்டிருந்தது.
அத்துடன் ”நவீன அரசின் நிர்வாகம் என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் பொதுவான விவகாரங்களை நிர்வகிக்கின்ற ஒரு குழுவே அன்றி வேறொன்றுமில்லை” என்ற 170 க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பாக விளக்கிக் கூறப்பட்ட, மார்க்சிசத்தின் இன்னுமொரு மையமான கூற்றையும் அது ஊர்ஜிதம் செய்தது.
நிதிப் பொறிவுக்கு கிட்டிய அப்பட்டமான வர்க்க பதிலிறுப்பு இதற்கு ஆகச்சிறந்த உதாரணமாய் அமைந்திருந்தது. எந்த நிதி உயரடுக்கின் ஊகவணிக, மற்றும் சில சந்தர்ப்பங்களில் முற்றுமுதல் குற்றவியல்தனமான, நடவடிக்கைகள் நெருக்கடியை தூண்டியிருந்ததோ, அதன் நட்டங்களை ஈடுசெய்வதற்காக Fed மற்றும் பிற அதிகாரிகளால் ஏற்கனவே உருவாக்கி வைக்கப்பட்டிருந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
நவம்பர் 4 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்வந்த சமயத்தில், வோல் ஸ்ட்ரீட் தனது ஆதரவை மெக்கெயினை விடவும் அதிகமாக ஒபாமாவிற்குப் பின்னால் நிறுத்தியது, ஊடகங்கள் “நம்பிக்கை” மற்றும் “நீங்கள் நம்பிக்கை வைக்கத்தக்க மாற்ற”த்திற்கான வேட்பாளராக அவரை விளம்பரப்படுத்தின. நாடாளுமன்றத்தின் மூலமாக 700 பில்லியன் டாலர் TARP சொத்து-வாங்கிக் கொள்ளும் திட்டம் நிறைவேறும்படி பார்த்துக் கொண்டதன் மூலமாக, ஜனநாயகக் கட்சியினர் பிணையெடுப்புக்கு ஏற்கனவே தமது கடமைப்பாட்டை உறுதியளித்திருந்தனர். அமெரிக்காவின் தேசியக் கடனிலான இந்த பாரிய அதிகரிப்பு கிட்டத்தட்ட எந்த விவாதமும் இல்லாமல் அங்கீகரிக்கப்பட்டது.
ஒரு புதிய அரசியல் புனைக்கதை உடனடியாக முன்தள்ளப்பட்டது உண்மையே. முழுமையான பொருளாதாரத்திற்கு (Main Street) உதவ வேண்டுமானால் முதலில் வோல் ஸ்ட்ரீட்டை பிணையெடுத்தாக வேண்டும் என்று மக்களிடம் சொல்லப்பட்டது. ஆயினும், இந்த பொய் வெகுவிரைவாக அம்பலப்பட்டது. இந்த நெருக்கடி தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு பாரிய தாக்குதலுக்கு தொடக்கப்புள்ளியாக இருந்தது. வங்கியாளர்களும் நிதி ஊகவணிகர்களும் தொடர்ந்தும் தத்தமது மேலதிக கொடுப்பனவு தொகைகளை பெற முடிந்த நேரத்தில், மில்லியன் கணக்கான அமெரிக்க குடும்பங்கள் தமது வீடுகளைத் தொலைத்தன. பத்து மில்லியன் கணக்கானோர் வேலையிழந்தனர்.
அடுத்துவந்த ஆண்டில், ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் செயலூக்கமான மற்றும் முழுமையான ஒத்துழைப்புடன் கிறைஸ்லர் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸை பிணையெடுக்க ஒபாமா நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மீட்பு நடவடிக்கையானது, சுரண்டலின் புதிய வடிவங்கள் -எல்லாவற்றையும் விட இரண்டு-அடுக்கு ஊதிய முறை மூலமாக- உருவாக்கப்படுவதில் விளைந்தது; அமசன் முன்னோடியாக மாறிய இன்னும் அதிக கொடூர சுரண்டல் வடிவங்களுக்கு பாதை அமைத்துத் தந்தது.
இதுதான் வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்பின் மறுபக்கமாகும், “எந்த ஒரு தீவிரமான நெருக்கடியையும் வீணடிக்காதீர்கள்” ஏனென்றால் அது “அதற்கு முன் உங்களால் செய்ய முடிந்திராத விடயங்களை செய்வதற்கு ஒரு வாய்ப்பு” தருகிறது என்று கூறிய ஒருசமயத்தில், ஒபாமாவின் அலுவலர்கள் தலைவராக இருந்த ரஹ்ம் இமானுவேலின் பிரகடனத்தை அடியொற்றி நடத்தப்பட்ட வர்க்க உறவுகளிலான ஒரு பாரிய மறுசீரமைப்பு.
இதேவித வர்க்க பதிலிறுப்பு எங்கெங்கிலும் காணக்கூடியதானது. நெருக்கடியின் ஆரம்ப விளைவுகள் சமாளிக்கப்பட்டு விட்ட பின்னர், ஐரோப்பாவின் முதலாளித்துவ வர்க்கம் இளைஞர்களது வேலைவாய்ப்பின்மையை வரலாறுகண்டிராத மட்டங்களுக்கு தள்ளுகின்ற ஒரு சிக்கன நடவடிக்கை முனைப்புக்கு தொடக்கமளித்தது. பிரிட்டனில் தொழிலாளர்கள் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் அவர்கள் கண்டிராத மட்டத்திற்கு உண்மையான ஊதியங்களில் ஒரு தொடர்ச்சியான வீழ்ச்சியை தாங்கி வந்திருக்கின்றனர்.
இந்த வர்க்க தர்க்கத்தின் மிகக் கொடுமையான வெளிப்பாடு கிரீசில், கடைசியாக 1930களின் பெருமந்தநிலையின் போது கண்டிருந்த மட்டத்திற்கான வறுமை மட்டங்களை திணித்ததில், கண்டிருந்தது. ஏராளமான பிணையெடுப்பு நடவடிக்கைகள் ஒருபோதும் கிரேக்க பொருளாதாரத்தை “மீட்பதை” நோக்கம் கொண்டவையாக இருக்கவில்லை, மாறாக அவை பெரும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு திருப்பிச் செலுத்துவதற்கான ஆதாரவளங்களை பிழிந்தெடுப்பதற்காக செலுத்தப்பட்டவையாக இருந்தன.
இந்த நெருக்கடி முதலாளித்துவ ஜனநாயகத்தின் உண்மையான இயல்பை வெளிக்கொண்டுவந்தது. யூரோ மண்டலமும் ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கான ஒரு பொறிமுறைக்கு மேலான எதுவொன்றும் இல்லை என்பதாய் அம்பலப்பட்டன. அதன் கட்டளைகளை நிறைவேற்றுவோரில் தலைமையில் இருந்தவர்களில் ஒருவரான, ஜேர்மனியின் முன்னாள் நிதி அமைச்சர் வொல்ஃவ்காங் ஷொய்பிள, மக்களின் எதிர்ப்புக்கு முகம்கொடுத்தபோது அறிவித்தவாறாக, “தேர்தல்கள் பொருளாதாரக் கொள்கையை மாற்றி விட அனுமதிக்கப்பட முடியாது.”
ஒவ்வொரு நாட்டிலுமான தொழிலாள வர்க்கம் தேக்கமடைகின்ற மற்றும் வீழ்ச்சி காணுகின்ற ஊதியங்களுக்கு, சரிந்து செல்கின்ற வாழ்க்கைத் தரங்களுக்கு, பாதுகாப்பான வேலைவாய்ப்பு என்பது அழிக்கப்படுவதற்கு மற்றும், சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் பிற பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும் விதமாய் சமூக சேவைகளிலான தாக்குதல்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், செல்வம் வருவாய் அளவுகோலில் மேல்நோக்கி உறிஞ்சப்படுகிறதான ஒரு உலகளாவிய அமைப்புமுறை உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை ஏராளமான அறிக்கைகளும் தரவுகளும் படம்போட்டுக் காட்டுகின்றன.
சமீபத்திய வெல்த்-X உலக அதி செல்வ அறிக்கை (Wealth-X World Ultra Wealth Report) கூறுவதன் படி, குறைந்தபட்சம் 30 மில்லியன் டாலர் சொத்து கொண்ட “அதி-உயர்ந்த நிகர சொத்துமதிப்பு” கொண்ட சுமார் 255,810 தனிமனிதர்கள் மொத்தமாய் கொண்டிருக்கக் கூடிய செல்வமானது, 5.6 பில்லியன் மக்களைக் கொண்ட உலக மக்களில் கீழிருக்கும் 80 சதவீதம் பேர் கொண்டிருப்பதை விட அதிகம். இந்தக் கூட்டத்தின் ஒட்டுமொத்த செல்வமானது 2016-17 இல் 16.3 சதவீதம் வரை அதிகரித்திருந்தது, இந்த அதிகரிப்பு வட அமெரிக்காவில் 13.1 சதவீதமாகவும், ஐரோப்பாவில் 13.5 சதவீதமாகவும் மற்றும் ஆசியாவில் 26.7 சதவீதமாகவும் இருந்தது.
நிதி அமைப்புமுறையின் பிணையெடுப்புகள் மற்றும் அதனையடுத்து டிரில்லியன்கணக்கான டாலர்கள் உதவியளிக்கப்பட்டமை ஆகியவற்றின் முழுமையான முக்கியத்துவம் தெளிவாக இருக்கிறது. நிதி அமைப்புமுறையானது, பங்குச் சந்தையை அதன் மையமாக அமைத்துக் கொண்டு, செல்வத்தை சமூகத்தின் உயரடுக்குகளுக்கு இடம்மாற்றுகின்ற ஒரு பொறிமுறையாக செயல்படுவது என்கிற, முந்தைய தசாப்தங்களில் வளர்ந்துவந்த ஒரு நிகழ்முறையை நிறுவனமயமாக்குதலை இது கொண்டுவந்திருக்கிறது.
நிதி நெருக்கடி குறித்த அதன் பகுப்பாய்வில், உலக சோசலிச வலைத் தளம் ஆரம்பத்திலிருந்தே, ”மீட்சி” ஏற்படுவதற்கு இது ஒரு காலகட்டத்திற்குரிய நிகழ்வு இல்லை, மாறாக ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு நிலைமுறிவு என்பதை வலியுறுத்தியது.
அந்த பகுப்பாய்வு முழுமையாக ஊர்ஜிதம் செய்யப்பட்டிருக்கிறது. நிதிரீதியான ஒரு முழுமையான உருக்குலைவு தடுக்கப்பட்ட போதிலும், நெருக்கடிக்கு வழிவகுத்த இலாப நோக்கு அமைப்புமுறையின் நோய்கள் தீர்க்கப்பட்டிருக்கவில்லை. மாறாக, அவை புதிய மற்றும் இன்னும் தீங்கான வடிவங்களாக உருமாற்றமடைந்திருக்கின்றன, உருமாற்றப்பட்டிருக்கின்றன.
நிதி அமைப்புமுறையை “மீட்பதற்கு”ம், நெருக்கடிக்கு இட்டுச் சென்ற ஊகவணிகத்தின் அதேவடிவங்களை அவை மறுபடியும் தொடர்வதற்கு வழியளிப்பதற்குமாய் டிரில்லியன் கணக்கான டாலர்களை பாய்ச்சிய அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் பிற முக்கிய மைய வங்கிகளது நடவடிக்கைகள், மைய வங்கிகளே நேரடியாக சம்பந்தப்பட்ட ஒரு புதிய அழிவுக்கான நிலைமைகளை மட்டுமே உருவாக்கியிருக்கின்றன.
பொருளாதார மற்றும் நிதி வாழ்க்கையின் இந்த உண்மையை வரும் ஆண்டுதினத்தின் போது முதலாளித்துவ பகுப்பாய்வாளர்களும் பண்டிதர்களும் கொடுக்கின்ற வருணனையிலும் கூட கண்டுகொள்ள முடியும். 2008க்குப் பின்னர் நிதி அமைப்புமுறை “வலுப்படுத்தப்பட்டு” இருப்பதாக அவர்கள் பொதுவாக சாதிக்கிறார்கள் -பொறிவுக்கு முன்னரும் அது வலிமையானது என்றே கூறப்பட்டு வந்தது அத்துடன் பெருகும் அபாயங்கள் குறித்த எந்த எச்சரிக்கைகளும் முன்னாள் அமெரிக்க கருவூலச் செயலாளரான லோரன்ஸ் சம்மர்ஸ் போன்ற பிரபலங்களால் “தொழில்நுட்ப முன்னேற்றத்தின் எதிர்ப்பாளர்கள்” என்று கூறி நிராகரிக்கப்பட்டன என்பதை மனதில் கொண்டு பார்த்தால் இது முற்றிலும் பயனற்றதொரு திட்டவட்டம்- என்றாலும் கீழிருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டதாக பிரகடனம் செய்யும் தைரியம் அவர்களுக்குக் கிடையாது.
மாறாக, அடுத்த நெருக்கடியின் அழுத்துபொறி சென்றமுறை இருந்த அதேவாக இருக்கப் போவதில்லை மாறாக “வேறொரு நெருக்கடி அங்கே இருக்கும்” என்ற ஜேபி மோர்கன் தலைவரான ஜேமி டிமோனின் எச்சரிக்கைக்கு செவிசாய்த்து, அது எங்கே தாக்கப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் கண்ணுக்கெட்டிய வரை எங்கேனும் தென்படுகிறதா என்று பதட்டத்துடன் அவர்கள் தேடுகிறார்கள்.
கடன் தான் 2008 நெருக்கடிக்கான ஒரு முக்கிய காரணமாக இருந்தது என்பதால், அதில் ஏதாவது முன்னேற்றம் நடந்திருக்கும் என்ற அத்தனை எதிர்பார்ப்புகளுக்கும் நேரெதிராக, உலகளாவிய கடன், இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 217 சதவீதமாக இருக்கிறது. இது 2007 க்குப் பிந்தைய காலத்தில் 40 சதவீதப் புள்ளிகள் அதிகரிப்பாகும் என்பதை சில பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மற்றவர்கள், வட்டி விகிதங்கள் முன்கண்டிராத அளவு குறைவாக இருந்தபோது ஊகத்திற்கு மூலஇடமாக இருந்த, ஆனால் இப்போது, வட்டி விகிதங்கள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில் பெரும் மறுநிதியாதாரப் பிரச்சினைகளை முன்வைக்கின்ற வளரும் சந்தைகள் எனச் சொல்லப்படும் நாடுகளில் டாலர்களில் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும் கடன்கள் -வட்டி விகிதங்கள் முன்கண்டிராத அளவு குறைவாக- இருந்தபோது ஊகத்திற்கு இடம்கொண்டதாக இருந்த இது, ஆனால் இப்போது, வட்டி விகிதங்கள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில் பெரும் மறுநிதியாதாரப் பிரச்சினைகளை முன்வைக்கிறது. திருப்பிச்செலுத்துவதில் பெருகிச் செல்லும் பிரச்சினைகளை தனி முக்கியத்துவம் கொடுத்துக் காட்டுகின்றனர்.
Fed மற்றும் பிற மைய வங்கிகள் ஏற்பாடு செய்து தந்திருக்கக் கூடிய அதி-குறைந்த வட்டியுள்ள பணத்தினால் எரியூட்டப்பட்டு, பங்குச் சந்தைகள் நிற்காமல் அதிகரித்துச் செல்வதாக தென்படுவது, இன்னுமொரு சாராரது கவலைக்குரிய பிரச்சினை. கணினி வர்த்தக அமைப்புகள் மூலமாக உலகளாவிய சந்தைக்குறியீடுகளுடன் பிணைந்த செயலற்ற முதலீட்டு நிதிகளின் (passive investment funds) அதிகரித்த பயன்பாடானது, சென்ற பிப்ரவரியில் நாள் வர்த்தகத்தில் வோல் ஸ்ட்ரீட் 1,600 புள்ளிகள் வரை சரிவு கண்டதைப் போன்ற “திடீர் பொறிவுகளின்” ஒரு வரிசையில் காண முடிந்ததைப் போல கீழ்நோக்கிய பாய்வை வலுப்படுத்தக் கூடிய போக்கையே கொண்டிருக்கிறது.
வெளிப்படையாக குறிப்பிடப்படுவதில்லை என்றபோதிலும் கூட, அவர்களின் மிகப்பெரும் கவலைக்கான மூலவளமாக இருப்பது, தொழிலாள வர்க்கத்தின் மீளெழுச்சியும் ஊதிய அதிகரிப்புக்கான நெருக்குதலும் ஆகும். வெளிப்படையாக விவாதிக்கப்படும் இடங்களில், இந்த அச்சமானது -ஒப்பீட்டளவில் சிறிய ஊதிய அதிகரிப்புகளின் செய்தியால் உருவாக்கப்பட்ட பங்குச் சந்தை வீழ்ச்சிகளில் இது வெளிப்பட்டது- பொதுவாக சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பால் உண்டான “அரசியல் பதட்டங்கள்” எனும் வார்த்தைகளைக் கொண்டு மறைக்கப்படுகின்றது.
போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் எந்த கட்டமைப்புக்குள்ளாக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் நகர்வுகளும் நிதியும் பாய்ந்திருந்ததோ அந்தக் கட்டமைப்பில் அடங்கியிருக்கும் புவியரசியல் கட்டமைப்புகள் மற்றும் உறவுகள் அத்தனையும் சிதறிக் கொண்டிருப்பது முதலாளித்துவ ஒழுங்கின் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மற்றும் ஆழமடைந்து சென்று கொண்டிருக்கும் நிலைமுறிவின் ஒரு மேலதிக வெளிப்பாடாக இருக்கிறது.
2008 நெருக்கடியை ஒட்டிய காலத்தில், உலக வர்த்தகம் 1930 ஐக் காட்டிலும் துரிதமானதொரு வேகத்தில் பொறிவைக் கண்டுவந்ததன் மத்தியில், ஜி20 இன் தலைவர்கள் 2009 ஏப்ரலில் ஒன்றுகூடினர். பெருமந்த சமயத்தில் ஒரு அழிவுகரமான பாத்திரத்தை வகித்ததும், 1929 அக்டோபரில் வோல் ஸ்ட்ரீட் பொறிவு கண்டதற்கு பத்தே ஆண்டுகளின் பின்னர் இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கான நிலைமைகளை உருவாக்குவதற்கு காரணமாக இருந்த பாதுகாப்புவாத வரிவிதிப்புக் கொள்கைகளின் பாதைக்கு மறுபடியும் போகப் போவதில்லை என்று அவர்கள் உறுதியெடுத்துக் கொண்டனர்.
ஆனால், ட்ரம்ப்பின் நிர்வாகமானது, 2008 பொறிவில் மிக தெளிவாக வெளிப்பட்ட அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ளும் முனைப்பில், முன்னெப்போதினும் விரிந்து செல்கின்ற வர்த்தகப் போர் நடவடிக்கைகளில் இறங்கும்நிலையில், அந்த உறுதிப்பாடும் சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.
பிரதான இலக்கு, குறைந்தபட்சம் இந்த கணம் வரையேனும், சீனாவாக இருக்கிறது. ஆயினும் ட்ரம்ப் நிர்வாகம் ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு பொருளாதார “எதிரி” என்று வகைப்படுத்தியிருப்பதோடு, அதற்கு எதிராக வர்த்தகப் போர் நடவடிக்கைகளை அமல்படுத்தியிருக்கிறது, இன்னும் நிறைய வரவுள்ளன.
ஓரளவு “மூலோபாய கூட்டாளி”களுக்கு எதிராகவும் சுங்கவரி விதிக்கின்ற அமெரிக்காவின் முடிவை அடுத்து 1974-75 உலகளாவிய மந்தநிலை மற்றும் போருக்குப் பிந்தைய எழுச்சியின் முடிவு ஆகியவற்றை ஒட்டி உலக முதலாளித்துவத்தின் விவகாரங்களை நெறிப்படுத்துகின்ற முயற்சியில் அமைக்கப்பட்ட முக்கிய முதலாளித்துவ சக்திகளது குழுவாக்கமாய் இருந்த ஜி7 கூட்டத்தில் ஏற்பட்ட விரோதத்துடனான உடைவுக்குப் பின்னர், ஜி7 இப்போது பெயரளவில் மட்டுமே இருக்கிறது.
உலகப் போர் இன்னும் வெடித்திருக்கவில்லை. ஆயினும் அணுஆயுத வல்லமை கொண்ட சக்திகளுக்கு இடையில் ஒரு மோதல் வெடிக்கத்தக்க ஏராளமான எரிபுள்ளிகள் காணப்படுகின்றன. சில உதாரணங்களை மேற்கோளிடுவதானால், மத்திய கிழக்கில், கிழக்கு ஐரோப்பாவில், வட கிழக்கு ஆசியாவில் மற்றும் தென் சீனக் கடலில் இருக்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது பொருளாதார வீழ்ச்சியைச் ஈடுசெய்ய தனது எதிரிகள் மற்றும் கூட்டாளிகளை விலையாகக் கொடுத்து யூரோ-ஆசியா பெருநிலப்பரப்பின் மீதான அதன் மேலாதிக்கத்தித்தை நிலைநாட்டுவதற்கு செய்கின்ற முனைப்புத்தான் ஒரு புதிய உலகளாவிய தீப்பற்றலுக்கான உந்துசக்தியாக இருக்கிறது.
அமெரிக்க அரசு எந்திரத்திற்குள்ளாக அரசு மற்றும் இராணுவ-உளவு எந்திரத்திற்கும் -இவற்றின் ஊதுகுழலாக இருப்பது ஜனநாயகக் கட்சி- ட்ரம்ப்பின் நிர்வாகத்திற்கும் இடையில் வெடித்திருக்கக் கூடிய உள்நாட்டுப் போரானது, இந்த இலக்கு எவ்வாறு அடையப்பட வேண்டும், அதாவது அமெரிக்காவின் முனைப்பு முதலில் ரஷ்யாவுக்கு எதிராக செலுத்தப்பட வேண்டுமா அல்லது சீனாவை நோக்கியா என்பது தொடர்பானதாகும் என்பது மிகப்பெரும் முக்கியத்துவமுடையதாகும். அதேநேரத்தில், இராணுவ மோதல்களது தீவிரப்படலுக்கு தயாரிப்பு செய்கின்ற விதத்தில் பெரும் சக்திகள் அனைத்துமே தத்தமது இராணுவ நிதிஒதுக்கீடுகளை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு நாட்டிலுமே அரசியல் அமைப்புமுறையானது ஆழமான நெருக்கடியால் சூழப்பட்டு நிற்கிறது. நெருக்கடியின் துரிதவேகமானது புறநிலை அபாயங்களுக்கும் வர்க்க நனவின் மட்டத்திற்கும் இடையிலான முரண்பாடுகளை அழுத்திக் கூறிக் கொண்டிருக்கிறது. வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதில் பல்வேறு போலி-இடது போக்குகளின் உடந்தையுடன் பழைய அதிகாரத்துவமய தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க அமைப்புகள் வகிக்கும் பிற்போக்கான அரசியல் பாத்திரம் தான் உலகளாவிய விதத்தில் தொழிலாள வர்க்கத்தின் நனவை அவசியமான வகையில் புறநிலை முதலாளித்துவ நெருக்கடி யதார்த்தத்தின் வரிசையில் நிறுத்துவதை சாதிப்பதற்கு தலைமை முட்டுக்கட்டையாக தொடர்ந்தும் இருந்துவருகிறது. ஆயினும் இந்தத் தளைகள் உடைக்கப்படும் விதமான நிலைமைகள் அபிவிருத்தி கண்டுவருகின்றன.
நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தில் லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார்: “பரந்த மக்களின் நோக்குநிலையானது முதலாவதாய், சிதைந்துகொண்டிருக்கும் முதலாளித்துவத்தின் புற நிலைமைகளாலும், இரண்டாவதாய், பழைய தொழிலாளர்’ அமைப்புகளது துரோகத்தனமான கொள்கைகளாலும் தீர்மானிக்கப்படுகிறது. இந்தக் காரணிகளில் முதலாவதே, நிச்சயமாக, தீர்மானகரமான ஒன்று: வரலாற்றின் விதிகள் அதிகாரத்துவ எந்திரத்தை விடவும் வலிமையானவை.”
அந்த முன்னோக்கு சர்வதேச அளவில், எல்லாவற்றுக்கும் மேல் உலக முதலாளித்துவத்தின் மையமான, அமெரிக்காவில், வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியில், இப்போது ஊர்ஜிதப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அத்தகையதொரு இயக்கத்திற்கு எதிராய் தமது ஆழமான பலவீனம் குறித்த நனவுடனும், அத்தகைய இயக்கத்தின் புரட்சிகரத் தாக்கங்கள் குறித்து முழுதாக அறிந்த நிலையிலும், ஒவ்வொரு நாட்டிலும் இருக்கின்ற ஆளும் வர்க்கங்கள் முன்னெப்போதினும் எதேச்சாதிகாரமான ஆட்சிவடிவங்களை அபிவிருத்தி செய்து கொண்டிருக்கின்றன.
தொழிலாள வர்க்கத்தின், எல்லாவற்றிற்கும் மேல் இளைஞர்களின் பரந்த பிரிவுகளின் மத்தியில், அரசியல் நனவு, அதாவது ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறை தான் அவர்களது எதிரி என்ற உண்மையான நிலவரம் குறித்த புரிதல், அபிவிருத்தி கண்டுவிடும் என்பது தான் ஆளும் வர்க்கங்களது மிகப்பெரும் அச்சமாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேல், நான்காம் அகிலத்தின் கோட்பாடுகளையும் வேலைத்திட்டத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகர சோசலிச இயக்கம் அபிவிருத்தி காண்பது குறித்து ஆளும் உயரடுக்கினர் அச்சம் கொண்டுள்ளனர். ஆகவே தான் இணையத் தணிக்கையின் மைய இலக்காக உலக சோசலிச வலைத் தளம் ஆகியிருக்கிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் மீது (Sozialistische Gleichheitspartei) ஜேர்மன் பெரும்கூட்டணி அரசாங்கம் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவதன் காரணமும் இதுதான்.
ஆயினும் அனைத்துலகக் குழுவின் வேலைகளை ஒடுக்குவதற்கான முயற்சிகள் தோல்விகாணும். வர்க்கப் போராட்டத்தின் மறுமலர்ச்சியானது உலகெங்கிலும் ICFI இன் வேலைகளை அபிவிருத்தி செய்வதற்கு புதிய சக்திகளை வழங்கும்.
2008 பொறிவானது, எல்லாவற்றிற்கும் மேல் தொழிலாள வர்க்கம் ஒரு உலகளாவிய நெருக்கடிக்கு முகம்கொடுத்து நிற்பதை விளங்கப்படுத்தியது. ஆகவே, இலாபத்திற்காய் அல்லாமல் மனிதத் தேவைகளை பூர்த்திசெய்வதற்காய் சமூகத்தை மீள்கட்டுமானம் செய்வதற்கான ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய எல்லைகள் மற்றும் தடைகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தை ஒரு உலகளாவிய மட்டத்தில் ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே இந்த நெருக்கடிக்கு தீர்வுகாணப்பட முடியும்.