Print Version|Feedback
India: Kerala floods death toll climbs to 445
இந்தியா: கேரள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 445 ஆக உயர்வு
By Sathish Simon and Deepal Jayasekera
27 August 2018
தென் இந்திய மாநிலமான கேரளாவில், கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டில் எதிர்கொள்ளப்பட்ட மிக மோசமான வெள்ளப் பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி தற்போது 445ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு மில்லியன் மக்களில், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் இன்னமும் 2,780 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர், இவர்கள் வெகு விரைவில் தங்களது வீடுகளுக்கு திரும்புவதற்கான சிறு எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
மில்லியன் கணக்கான கேரளப் பிரதேசவாசிகள், காலரா, வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, தைஃபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நீரினால் பரவும் நோய்களால் ஏற்படும் அபாயத்தை இப்போது எதிர்கொள்வதுடன், நச்சுப் பாம்புகள் மற்றும் ஏனைய ஊர்வனவும் அவர்களைக் கடிக்கின்ற ஆபத்தான சூழ்நிலையில், தற்போதைய மொத்தப் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தங்களது வீடுகளுக்கு திரும்ப முடிந்தவர்களோ மின்சாரம் மற்றும் குடி தண்ணீர் வசதிகளைப் பெற வழியின்றி கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சுமார் 50 துணை மின்நிலையங்களும் 16,158க்கும் அதிகமான மின்மாற்றிகளும் (transformers) கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், 2.5 மில்லியன் சொத்துக்களுக்கும் அதிகமானவற்றிற்கு விநியோகிக்கப்படும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
நீர் மட்டங்கள் குறைந்து வருகின்ற போதிலும், 100,000க்கும் அதிகமான வீடுகளை முழுமையாக மீள்கட்டமைக்க வேண்டிய நிலை அங்கு உருவாகியுள்ளது என்ற நிலையில், வெள்ளத்தில் இருந்து உயிர் பிழைத்தவர்களை அரசாங்கம் கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்குத் தாமே மேற்கொள்ள வேண்டிய ஒரு பணியாக அது உள்ளது. கடந்த புதனன்று, எர்ணாகுளம் மாவட்ட கோதாட் கிராமத்தில் வெள்ளத்திற்குத் தப்பியிருந்த அவரது வீட்டிற்கு 68 வயது முதியவரை அழைத்துச் சென்ற பின்னர், வாழ்வை வெறுத்து அவர் தற்கொலை செய்துகொண்டார். மேலும் இந்த வாரத் தொடக்கத்தில், வெள்ளத்தில் தனது பள்ளிச் சான்றிதழ்கள் அழிந்து போன காரணத்தால் 19 வயது இளைஞர் ஒருவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
கிட்டத்தட்ட 11,000 கிலோமீட்டர் அளவிலான சாலைகளும் 237 பாலங்களும் சேதமடைந்து, கேரள மாநில போக்குவரத்து அமைப்பு மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புக்குள்ளான பெரும்பாலான பகுதிகளை அரசாங்க அதிகாரிகளால் சென்றடைய முடியவில்லை என்பதால், மாநிலத்தின் விவசாயத் துறைக்கு ஏற்பட்டுள்ள பெரும் இழப்பு பற்றிய இறுதி மதிப்பீட்டை இன்னமும் கூட மேற்கொள்ள முடியவில்லை. மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட இடுக்கி மாவட்டத்தில் மொத்தம் 5.728 பில்லியன் ரூபாய் ($82 million) இழப்புடன் 10,000 ஹெக்டேருக்கு அதிகமான பரப்பளவு கொண்ட நிலங்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளன, இப்பகுதியில் ஏலக்காய், மிளகு, தேயிலை, பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கேரளப் பேரழிவின் ஆரம்ப மதிப்பீடு தற்போது 200 பில்லியன் ரூபாயாக ($3 billion) உள்ளது என்றாலும், இறுதி மதிப்பீட்டுத் தொகை அதைப்போல இருமடங்காக இருக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (United Nations Development Programme) மூத்த ஆலோசகரான G. பிரமோத் குமார் ஊடகத்தில் இவ்வாறு தெரிவித்தார்: “மொத்த இழப்பு என்பது அநேகமாக பில்லியன் கணக்கான டாலர்களைக் கடந்து அதிகரிக்கும். மிசிசிப்பி, கத்ரீனா மற்றும் தாய்லாந்து வெள்ளங்களைப் பற்றி சிந்தித்தோமானால், அனைத்துமே பல பில்லியன் டாலர்களைக் கடந்தன. இந்த அளவிற்கான சேதங்களை சரிசெய்ய பணத்தைத் திரட்டுவது என்பது மிகவும் கடினமானதே.”
இருப்பினும், கேரளாவில் நிகழ்ந்துள்ள இந்த மிகப்பெரிய சமூகப் பேரழிவானது இந்திய ஆளும் உயரடுக்கினரால் எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகளின் ஒரு நேரடி விளைவாகவே உள்ளது. மத்திய மற்றும் மாநில அளவில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் ஒன்றையொன்று குற்றம்சாட்டிக் கொள்கின்றனவே தவிர, மிக மோசமான நிலையில் தேவையாகவுள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு உள்கட்டமைப்பை வழங்க மறுத்துவிட்டன. அதற்குப் பதிலாக, அவர்கள் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பெருவணிக முதலீட்டாளர்களுக்கு வசதிகளையும் வரிவிலக்குகளையும் வாரி வழங்க அரசாங்க வளங்களைத் திசை திருப்பிவிட்டுள்ளனர்.
இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சி (BJP), இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPM) அல்லது காங்கிரஸ் கட்சி என எந்தவொரு கட்சித் தலைமையிலான இந்தியாவின் மத்திய மற்றும் கேரள மாநில அரசாங்கங்கள், மிகவும் இலாபகரமான கட்டுமான, சுரங்க மற்றும் காட்டையழிக்கும் தொழில்கள் ஆபத்தான சுற்றுச்சூழல் தாக்கத்தை விளைவிக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் அத்தொழில்களுக்கு ஊக்கமளித்து வந்துள்ளன.
இந்த பேரழிவிற்குப் பின்னர், ஆளும் உயரடுக்கின் அனைத்துக் கன்னைகளும் பொறுப்புக்களை தங்களது அரசியல் போட்டியாளர்கள் மீது சுமத்துவதன் மூலமாக பொது மக்கள் எதிர்ப்பை திசை திருப்புவதற்கு முயன்று வருகின்றன.
உதாரணமாக, சிபிஎம் தலைமையிலான கேரள மாநில அரசாங்கம், அண்டை மாநிலமான தமிழ்நாடு தான் இந்த வெள்ளத்திற்குக் காரணம் என்று குற்றம்சாட்டுகிறது. ஆகஸ்ட் 23 அன்று, இந்திய உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு பிரமாணப் பத்திரத்தில், கேரள மாநில தலைமைச் செயலர் டோம் ஜோஸ் பின்வருமாறு தெரிவித்துள்ளார்: “பெரியார் பள்ளத்தாக்கின் மூன்றாவது மிகப்பெரிய நீர்த்தேக்க நிலையான முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திடீரென நீர் திறந்துவிடப்பட்ட காரணத்தால் தான், அதன் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள (கேரளா) இடுக்கி நீர்த்தேக்கத்தில் இருந்து அதிகளவு தண்ணீரை விடுவிக்கும் நிலை ஏற்பட்டது, இது இந்த பிரளயத்திற்கான காரணங்களில் ஒன்றாகும்.”
கேரள அரசாங்கத்தின் இத்தகைய குற்றச்சாட்டுக்களை தமிழ்நாடு மாநில அரசாங்கம் நிராகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை கேரளாவில் அமைந்துள்ளது என்றாலும், அதன் செயல்பாடுகள் தமிழ்நாடு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இதுவே, இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான பல தசாப்தகால பிராந்திய பேரினவாத மோதலின் ஆதாரமாக விளங்குகிறது.
மேலும், இந்தப் பெரும் வெள்ளப் பெருக்கு குறித்து, காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி, “கடைசி நிமிடம் வரை” இடுக்கி அணையில் இருந்து நீரை திறந்துவிடாமல் இருந்தது தான் “உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பெரும் சேதத்தை” விளைவித்தது என்று தற்போதைய சிபிஎம் தலைமையிலான மாநில அரசாங்கத்தை குற்றம்சாட்டினார்.
அதற்கு பதிலடியாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “அணைகள் திறக்கப்படுவதற்கு முன்பு” அவசரகால எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன என்ற நிலையில், இக்குற்றச்சாட்டுக்கள் “தவறானவை,” மற்றும் “ஆதாரமற்றவை” என்று கூறி அவற்றை நிராகரித்தார்.
சாண்டியின் கூற்றுக்கள் என்னவாக இருந்தாலும், அவரது காங்கிரஸ் கட்சி தலைமையிலான முந்தைய கேரள மாநில அரசாங்கமும் இந்தப் பேரழிவிற்கு சம அளவு பொறுப்பாளியாக உள்ளது. 2011ல் மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியல் நிபுணர் குழுவின் (Western Ghats Ecology Expert Panel-WGEEP) பரிந்துரைப்புக்களை ஏற்பதற்கு இரண்டு மாநில அரசாங்கங்களுமே மறுத்துவிட்டன. அதேபோல, இந்திய அரசாங்கம் நியமித்த ஒரு நிறுவனமும் எதிர்கால வெள்ள அபாயம் பற்றி விபரங்களைக் கண்டறிந்ததுடன், புவியடி பாறைச் சுரண்டல்கள், கனிமச் சுரங்கத் தோண்டல்கள், சட்டவிரோதமாக காடுகளை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்துதல் மற்றும் உயர்ந்தளவிலான கட்டிடங்களை கட்டமைத்தல் போன்றவற்றிற்கு கடும் தடைகளை விதிப்பதற்கும் அழைப்பு விடுத்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிஜேபி தலைமையிலான மத்திய அரசாங்கம் அவசரகால உதவியாக 20 பில்லியன் ரூபாயை ($287 million) வழங்கிட வேண்டுமென கேரள அரசாங்கம் கோரியது. இருந்தாலும், வெறும் 6 பில்லியன் ரூபாயை ($86 million) மட்டுமே மோடி வழங்கியுள்ளார். அத்துடன், ஒரு வெளிநாட்டு அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு உதவியையும் இந்தியா ஏற்றுக் கொள்ளாது என்றும், பேரழிவை சமாளிக்கப் போதுமான வளங்களை அது கொண்டுள்ளது என்றும் தெரிவித்து, ஐக்கிய அரபு அமீரகத்தால் (United Arab Emirates) வழங்கப்பட்ட 100 மில்லியன் டாலர் நிதியுதவியையும் நிராகரித்து விட்டார்.
கடந்த புதனன்று, வெளி விவகாரங்களுக்கான இந்திய அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான ரவீஸ் குமார், “தற்போதுள்ள கொள்கைக்கு ஏற்ப, உள்நாட்டு முயற்சிகள் மூலமாக நிவாரணம் மற்றும் புனர்வாழ்வுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்று ஊடகத்திற்கு தெரிவித்தார்.
சிபிஎம் தலைமையிலான கேரள மாநில அரசாங்கம், பிஜேபி அரசாங்கத்தின் பதிலைக் கண்டனம் செய்துள்ளது. மேலும், கேரள மாநில நிதியமைச்சரான தோமஸ் ஐசக், மத்திய அரசாங்கத்தின் பிரதிபலிப்பு “ஒரு இடதுசாரி அரசாங்கத்திற்கு” எதிரான “அரசியல் பாரபட்சமாக” இருந்தது என்று ஊடகத்திற்குத் தெரிவித்தார்.
மனோரமா செய்திச் சேனலின் “Liveathon” நிகழ்ச்சியில் தோன்றி, கேரள சிபிஎம் கட்சி முதலமைச்சர் விஜயன், வெள்ளத்தால் சேதமடைந்த மாநிலத்தை மறுகட்டமைக்க உதவுவதற்கு ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக வழங்கிடுமாறு கேரளப் பிரதேசவாசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். “வீடுகளை இழந்து நிற்கும் அனைவருக்கும் புதியதொரு வீடு வழங்கப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார். மேலும், “சேதமடைந்த வீடுகளை சரிசெய்ய வேண்டும். இருப்பினும், அரசாங்கம் மேற்கொள்ளும் அதன் சொந்த முன்னெடுப்புகள் மூலமாக மட்டும் இந்தப் பணிகளை நிறைவேற்றிவிட முடியாது” என்றும் குறிப்பிட்டார்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், கேரளாவில் வெள்ளத்தில் இருந்து உயிர்தப்பிய மில்லியன் கணக்கானவர்களுக்காக வீடுகளையும் அடிப்படை வசதிகளையும் சரிசெய்வதற்கான பொருளாதாரச் சுமை தொழிலாள வர்க்கத்தின் முதுகில் வைக்கப்படும் என்பது தான் உண்மை.