Print Version|Feedback
Hundreds of neo-Nazis chant anti-Semitic slogans in Dortmund, Germany
ஜேர்மனியின் டோர்ட்மூண்டில் நூற்றுக் கணக்கான நவ-நாஜிக்கள் யூத-எதிர்ப்பு கோஷங்களை முழங்குகின்றனர்
By Ulrich Rippert
24 September 2018
தொழிலாள வர்க்க ஜேர்மன் நகரமான டோர்ட்மூண்ட் குடியிருப்பு பகுதி வழியாக வெள்ளிக்கிழமை மாலை அணிவகுத்து சென்ற பல நூறு நவ-நாஜிக்கள், கருப்பு-வெள்ளை-சிவப்பு வைமார்குடியரசு கொடிகளை அசைத்தவாறு, நவ-நாஜி கோஷங்களை முழங்கி சென்றனர். “ஜேர்மனியை நேசிப்பவர்கள் யூத-எதிர்ப்பாளர்கள்" என்பதே அவர்களின் பிரதான கோஷமாக இருந்தது. “போலிஸ், ஜனநாயகம், உங்களால் ஒருபோதும் எங்களை உடைக்க முடியாது" என்றும், “தேசிய சோசலிசமே [நாஜிசம்] இப்போது!” (Polizei, Demokratie, ihr brecht uns nie und Nationaler Sozialismus jetzt!) என்றும் முழங்கினர். நாஜிக்களைப் போலிஸ் தொந்தரவின்றி விட்டு வைத்ததுடன், எந்த தலையீடும் செய்யவில்லை.
அதே நாளில், தீவிர வலதுசாரியினர் மீண்டுமொருமுறை கெம்னிட்ஸ் நகரம் வழியாக அணிவகுத்தனர். சாக்சோனி மாநில சட்டமன்றத்தில் பல உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் இடது கட்சியின் அலுவலகங்களை “கெம்னிட்ஸ்-ஆதரவு" கூட்டணி ஆதரவாளர்கள் தாக்கியதாக ஊடக செய்திகள் குறிப்பிட்டன. அந்த வலதுசாரி அணிவகுப்பின் போது ஒரு பத்திரிகையாளரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
டோர்ட்மூண்ட் அணிவகுப்பின் ஒரு காட்சி: [புகைப்படம்: Marcus Arndt]
சனிக்கிழமையன்று, பாவேரிய நகரமான பம்பேர்க்கில், அகதிகளுக்கான "இடைத்தங்கு மையம்" (anchor centre) என்றழைக்கப்படுவது நெருப்பிட்டு எரிக்கப்பட்டது. அதை அணைத்து, நூற்றுக் கணக்கான தஞ்சம் கோருவோரை வெளியேற்ற பல மணி நேரம் ஆனது. நெருப்பு பற்றியதற்கான காரணம் தெரியவில்லை என்றும், அது தீவைப்பு சம்பவம் என்பதற்கு எந்த ஆதாரமோ அல்லது வெளிநாட்டவர் விரோத தாக்குதலோ இல்லை என்றும் போலிஸ் தெரிவித்தது.
இத்தகைய வலதுசாரி தாக்குதல்களின் யூத-எதிர்ப்புவாத குணாம்சம் உலகெங்கிலும் சீற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகஸ்ட் இறுதியில், ஒரு டஜன் நவ-நாஜிக்கள் கெம்னிட்ஸில் கற்கள், போத்தில்கள் மற்றும் எஃகு குழாய்களைக் கொண்டு "ஷலோம்" (Shalom) என்ற யூத உணவகத்தைத் தாக்கி, அதன் உரிமையாளரை வார்த்தையில் அவமானப்படுத்தி இருந்தனர். நியூ யோர்க்கில், உலக யூத மாநாட்டுக்கான ஒரு செய்தி தொடர்பாளர், யூத-எதிர்ப்பு தாக்குதல்கள் அதிகரித்திருப்பதற்கு எதிராக தலையிடுமாறு ஜேர்மன் அரசாங்கத்திடம் கோரியிருந்தார்.
ஆனால் அதுபோன்ற கோரிக்கைகளுக்கு ஜேர்மன் அரசாங்கம் ஒரு தவறான முகவரியாகும். நாஜிக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், அதையடுத்து ஐரோப்பாவில் நடந்த பாசிசவாத பயங்கரங்களில் 6 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டு 85 ஆண்டுகளுக்குப் பின்னர், இன்று, நாஜி கும்பல்கள் மீண்டும் வீதிகளில் அணிவகுத்து செல்கின்றன என்பதுடன் போலிஸ் கண் முன்னாலேயே யூத-எதிர்ப்பு முழக்கங்களை உச்சரிக்கின்றன என்பது ஜேர்மன் அரசாங்க கொள்கையின் விளைபொருளாகும். கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள் (CDU/CSU) மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் (SPD) இந்த மகா கூட்டணிதான் நாஜி கும்பலின் மீள்வரவுக்குப் பொறுப்பாகின்றன.
இந்த மகா கூட்டணியில் உள்ளடங்கிய அனைத்து கட்சிகளது வாக்குகளும் கடந்த ஆண்டு பொது தேர்தலில் வீழ்ச்சியடைந்ததுடன், ஆழமாக வெறுக்கப்படும் நிலையில், இக்கூட்டணி அதன் அகதிகள் கொள்கையை வழிநடத்தும் தொனியாக "வெளிநாட்டவர்களே வெளியேறுங்கள்!” என்ற நவ-நாஜிக்களின் கோஷத்தை ஏற்றுள்ளது. இந்த அரசாங்கம் அகதிகளை அடைத்து வைக்க, அதிகாரரீதியில் பீதியூட்டி, சாத்தியமானளவுக்கு விரைவாக அவர்களை நாடு கடத்துவதற்காக மனிதாபிமானமற்ற சித்திரவதை முகாம்களின் அமைப்புமுறையை அமைத்துள்ளது.
உள்துறை அமைச்சர் சீகோவர் (CSU) குறிப்பிடுகையில், புலம்பெயர்வு தான் "அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலக்காரணம்" என்றார். ஆகஸ்ட் இறுதியில், தீவிர வலதுசாரி குண்டர்கள் கெம்னிட்ஸில் வெளிநாட்டவர்களைத் தாக்கி வேட்டையாடியதுடன், ஒரு யூத உணவகத்தையும் தாக்கிய போதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தான் "அக்கறை கொண்ட குடிமக்கள்" என்று கூறிய சீகோவர், கெம்னிட்ஸின் ஒரு குடிமகனாக அவரும் வீதியில் இறங்கி இருந்திருக்க வேண்டும் என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
அப்போதைய இரகசிய சேவை தலைவர் ஹன்ஸ்-கியோர்க் மாஸன் உடன் சேர்ந்து, உள்துறை அமைச்சர் அச்சம்பவங்களைக் குறைத்துக் காட்டினார். கெம்னிட்ஸில் அகதிகள் "வேட்டையாடப்படவில்லை" என்று மறுத்ததன் மூலமாக மாஸன் நவ-நாஜிக்களுக்கு அவர் பாதுகாப்பை வழங்கி இருந்தார். இறுதியில் சரியான தருணத்தில், சீகோவர் மாஸனைப் பதவியிலிருந்து நீக்க மறுத்தார்; அதற்கு பதிலாக, அவர் உள்துறை அமைச்சகத்தின் ஒரு செல்வாக்கான பதவிக்கு பதவிஉயர்வு செய்யப்பட்டார்.
மாஸன் வலதுசாரி வட்டாரங்களில் நெருக்கமான தொடர்புகள் கொண்டிருப்பவர். அவர், பகிரங்கமாகவே நவ-பாசிசவாத பிரிவைக் கொண்டுள்ள ஜேர்மனிக்கான மாற்றீட்டின் (AfD) ஓர் ஆதரவாளர் ஆவார். AfD தலைவர்களுடன் பல விவாதங்களை நடத்தியிருந்த அவர், இரகசிய சேவையால் தயாரிக்கப்பட்ட வருடாந்தர அரசியலமைப்பு பாதுகாப்பு அறிக்கையில் அக்கட்சி ஒரு வலதுசாரி தீவிரவாத அமைப்பாக குறிப்பிடப்படாமல் இருப்பதை உத்தரவாதப்படுத்தினார். அதற்கு பதிலாக அதிவலதை எதிர்ப்பவர்கள் அனைவரும் அந்த அறிக்கையில் "இடதுசாரி தீவிரவாதிகளாக" முத்திரை குத்தப்பட்டிருந்தனர்.
டோர்ட்முண்ட் பேரணியில் ஒரு காட்சி: [புகைப்படம்: Marcus Arndt]
இந்த வலதுசாரி சூழ்ச்சியில் சமூக ஜனநாயக கட்சி (SPD) ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளது.
மாஸன் பதவி உயர்த்தப்பட்டமை பரந்த மக்கள் பிரிவுகளிடையே கோபப் புயலைத் தூண்டிய போதும், SPD தலைவர் ஆண்ட்ரியா நஹ்லெஸ் அரசுக்குள் இந்த AfD ஆதரவாளரின் அதிகரித்து வரும் அரசியல் செல்வாக்கை சாத்தியமானளவுக்கு மூடிமறைத்து வைப்பதை உறுதிப்படுத்துவதற்காக, "மாஸன் விடயத்தை" “மீண்டும் பேசி தீர்க்க வேண்டுமென" அறிவுறுத்தினார். சமீபத்திய உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அவர் இனி அரசு செயலராக இருக்கப் போவதில்லை, ஆனால் உள்துறை அமைச்சகத்தின் ஒரு "சிறப்பு ஆலோசகராக" இருந்து, மாதத்திற்கு பத்தாயிரக் கணக்கான யூரோக்களுக்கும் அதிகமாக அவரது முழு சம்பளத்தைத் தொடர்ந்து பெறுவார்.
அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பின் முன்னால் நஹ்லெஸ் இந்த மகா கூட்டணியைப் பதவியில் தக்க வைக்க முயன்று வருகிறார். அப்பெண்மணி, SPD உறுப்பினர்களுக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில், மேர்க்கெல், சீகோவர் மற்றும் கூட்டாளிகளுடன் தொடர்ந்து கூட்டுறவு பேணுவதைப் பின்வருமாறு நியாயப்படுத்துகிறார்: “ஐரோப்பா ஒரு கடுஞ்சோதனையை முகங்கொடுத்து வருகிறது, அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக போர் அச்சுறுத்தல் உள்ளது, சிரியா சம்பந்தமான நிலைமைக்கு நமது அனைத்து இராஜாங்க திறமையும் அவசியப்படுகிறது. இதனால் தான் ஓர் ஆற்றல் வாய்ந்த கூட்டாட்சி அரசாங்கத்தைப் பேணுவது SPD க்கு முக்கியமாக உள்ளது,” என்றார்.
இந்த வசந்த காலத்தில் மகா கூட்டணியைத் தொடர விருப்பமுற்ற சமூக ஜனநாயகக் கட்சி, இப்போது அதன் முழு பலத்துடன் அதை பாதுகாக்க முயன்று வருகிறது ஏனென்றால் நஹ்லெஸ் உறுப்பினர்களுக்கான அவரின் கடிதத்தில் குறிப்பிட்ட அதே நெருக்கடியில், ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய நலன்களைப் பின்தொடர்வதற்காக இந்த அரசாங்கத்தை அரசியல் கருவியாக அது கருதுகிறது. அப்பெண்மணி அதிகரித்த ஜேர்மன் மேலாதிக்க கொள்கையைக் கொண்டு ஐரோப்பிய நெருக்கடிக்கு விடையிறுத்து வருகிறார் என்பதோடு, அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் வர்த்தக போரை பாரிய இராணுவ மீள்ஆயுதமயமாக்கும் வேலைத்திட்டத்திற்கு அழுத்தமளிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி வருகிறார்.
Der Spiegel இன் புதிய பதிப்பில் முன்னாள் SPD தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சிக்மார் காப்ரியல் உடனான ஒரு பேட்டி இதை தெளிவுபடுத்துகிறது. “உலகில் ஜேர்மனியின் இடம் குறித்து கவலைப்படுத்தும் பெரிய கேள்வி" பதிலளிக்கப்படாமல் இருப்பதாக அவர் எச்சரிக்கிறார்.
டொனால்ட் ட்ரம்பின் ஜனாதிபதி பதவிகாலத்தில், அமெரிக்கா மேற்கு உலகில் அதன் தலைமை பாத்திரத்தைக் கைவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். “முற்றிலும் வித்தியாசமான ஓர் உலகில் ஐரோப்பாவின் இறையாண்மைக்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்,” என்றார். ஆனால் காப்ரியலின் கருத்துப்படி, “ஐரோப்பியர்கள் அவர்களின் தலைவிதியை அவர்களின் சொந்த கரங்களில் எடுப்பது நல்ல விடயமாகவும் இருக்கிறது.” ஜேர்மனியிலிருந்து வெளிப்படும் இன்றைய அபாயம், இராணுவம் மேலாதிக்கம் அல்ல, மாறாக "செயலின்மையின் மேலாதிக்கமாகும்" என்றார்.
காப்ரியல் பின்வருமாறு அறிவித்து "அதிக மூலோபாய விவாதங்களுக்கு" அழைப்பு விடுக்கிறார்: “தார்மீக பிடிப்புடன் இருப்பது தார்மீக கைத்துறப்பின் அளவுக்கு தவறானது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்,” இங்கே அவர் அரசியல் விஞ்ஞானி ஹெர்பிரட் முன்ங்லெரின் கருத்துக்களை எதிரொலிக்கிறார். “ஜேர்மனியர்களாகிய நாம் எப்போதும் தார்மீக பொறுப்பைத் தாங்கிப் பிடித்து திருப்தி அடைந்து கொள்கிறோம். நமது நலன்களும் உள்ளன என்பதை நாம் ஒப்புக் கொள்வது தான் சிறந்தது,” என்று அந்த ஹம்போல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
உலக அரசியலில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கும் வகையில், “நடுவில் நிற்கும் அதிகாரமான" ஜேர்மனியை "ஐரோப்பாவின் பாதுகாவலனாக" ஆகுமாறு முன்ங்லெர் அழைப்புவிடுத்தார். ஜேர்மன் மீள்ஆயுதமயமாக்கலுக்கு ஜேர்மனியின் கடந்த கால குற்றங்களைப் மூடிமறைப்பது அவசியம் என்பது அந்த பேராசிரியருக்கு நன்கு தெரியும். அவர் கூறினார், “எல்லாவற்றுக்கும் நம்மீது தான் பழிசுமத்த வேண்டும் என்ற கருத்து உங்களுக்கு இருந்தால், ஐரோப்பாவில் எந்த பொறுப்பான கொள்கையும் இருக்காது. 1914 ஐ பொறுத்த வரையில் [முதலாம் உலக போரின் வெடிப்பின் போது], அதுதான் ஜாம்பவானாக இருந்தது,” என்றார்.
ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் அவர் சக கூட்டாளியான, கிழக்கு ஐரோப்பிய வரலாற்றுக்கான பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி நாஜி குற்றங்களைக் குறைத்துக் காட்டும் பணியை ஏற்றார். அவர் அதே ஆண்டு, நாஜி அனுதாபியாக ஜேர்மன் வரலாற்றாளர்களிடையே நன்கறியப்பட்ட ஏர்ன்ஸ்ட் நோல்ட ஐ பாதுகாத்தார், மேலும் அடோல்ஃப் ஹிட்லரைப் பாதுகாக்கும் அளவுக்கும் சென்றார். “ஹிட்லர் ஒரு மனநோயாளி கிடையாது, அவர் வக்கிரமானவர் இல்லை. யூதர்களை நிர்மூலமாக்குவது குறித்து அவர் மேசையில் பேசுவதைக் கூட அவர் விரும்பவில்லை,” என்றவர் மிகவும் பிரபல ஜேர்மன் பத்திரிகையான Der Spiegel க்கு தெரிவித்தார்.
ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei – SGP) மற்றும் அதன் இளைஞர் அமைப்பான IYSSE மட்டுமே இந்த வரலாற்று பொய்மைப்படுத்தலை எதிர்த்த ஒரே அரசியல் அமைப்புகளாக இருந்தன. “வரலாற்றுரீதியில் பொய் வனப்புரையை நிறுவுவதற்கான முயற்சிகள் ஜேர்மன் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையுடன் பொருந்தி உள்ளன,” என்று பெப்ரவரி 2014 இல் SGP மற்றும் IYSSE குறிப்பிட்டது, ஜேர்மனியின் தசாப்தகால இராணுவ கட்டுப்பாடுகள் இப்போது முடிந்துவிட்டதாக கூட்டாட்சி அரசாங்கத்தின் அறிவிப்பை அவை சுட்டிக்காட்டின. “ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகைக்கு, நாஜி சகாப்தத்தின் குற்றங்களைக் குறைத்து காட்டும் வகையில் வரலாற்றின் ஒரு புதிய பொருள்விளக்கம் அவசியப்படுகிறது.”
சமீபத்திய சம்பவங்கள் இந்த மதிப்பீட்டின் சரியான தன்மையை உறுதிப்படுத்தி உள்ளன. ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகை கடந்த காலத்தின் அனைத்து பூதங்களுக்கும் புத்துயிரூட்டி உள்ளது. ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதே நாஜிசம் மற்றும் ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் மீள்வரவைத் தடுப்பதற்கான ஒரே வழியாகும்.