Print Version|Feedback
UN report on food security
One in every nine human beings goes hungry
உணவு பாதுகாப்பு குறித்த ஐநா அறிக்கை
மனிதரில் ஒன்பது பேருக்கு ஒருவர் பட்டினியாய் இருக்கிறார்
By Patrick Martin
13 September 2018
உலகில் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 2017 இல் 821 மில்லியனை எட்டியிருக்கிறது, அதாவது ஒன்பது பேருக்கு ஒருவர் பட்டினியாய் விடப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), உலக சுகாதார அமைப்பு, UNICEF மற்றும் மற்ற குழுக்களால் செவ்வாயன்று ரோமில் வெளியிடப்பட்ட “உலகின் உணவுப் பாதுகாப்பு மற்றும் சத்தூட்டத்தின் நிலை – 2018” என்ற அறிக்கை இதனைத் தெரிவித்துள்ளது.
புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியூட்டக்கூடியவையாக உள்ளன: ஐந்து வயதுக்குக் குறைவான 151 மில்லியன் குழந்தைகள் –உலகின் மொத்த மக்கள்தொகையில் 22 சதவீதம்- ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ”வளர்ச்சிக் குறைபாடு” கொண்டுள்ளனர்; ஆசியாவில் பத்து குழந்தைக்கு ஒன்று, உயரத்துக்கு ஏற்ற எடையில் இருந்து மிகக் குறைவான எடை கொண்ட ”சத்தற்ற நோஞ்சான்” (“wasting”) குழந்தையாக வருணிக்கப்படுகிறது; குழந்தை சுமக்கும் வயது கொண்ட மூன்று பெண்களுக்கு ஒருவர் இரத்தசோகையால், பெரும்பாலும் சரியான உணவு ஆகாரம் இல்லாத காரணத்தால், பாதிக்கப்பட்டுள்ளனர்.
”உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்துச் செல்வது மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டின் வெவ்வேறு வடிவங்களது உயரிய மட்டங்கள் ஆகியவற்றின் எச்சரிக்கையூட்டும் அறிகுறிகளை” குறித்து இந்த அறிக்கையின் ஆசிரியர்கள் எச்சரிக்கின்றனர், ஆயினும் உணவுப் பாதுகாப்பின்மைக்கு பிரதான காரணமாக இருக்கின்ற உள்நாட்டுப் போர்கள் உள்ளிட்ட இராணுவ மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு கூடுதலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கும், இரண்டாவது மிக முக்கியமான காரணமாக இருக்கின்ற காலநிலை மாற்றத்திற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைக்கும் கருணையுடன் விருப்பம் வெளியிடுவதைத் தவிர்த்து, ஆழமடைந்து செல்லும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அவர்கள் எந்த பரிந்துரையும் வழங்க முடியவில்லை.
உலகில் பட்டினியாக இருக்கும் 821 மில்லியன் பேரில் ஆசியாவில் சுமார் 515 மில்லியன் பேரும், ஆபிரிக்காவில் 256.5 மில்லியன் பேரும், இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் 39 மில்லியன் பேரும், உலகின் எஞ்சிய பகுதிகளில் 20 மில்லியன் பேரும் இடம்பெற்றிருக்கின்றனர்.
முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் பட்டினியும் ஊட்டச்சத்துக் குறைபாடும் இல்லவே இல்லை என்று கூறுவது பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற காரணத்தால், கடைசியான எண்ணிக்கை ஒரு அப்பட்டமான குறைமதிப்பீடு என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பட்டினியின் விளிம்பில் வாழுகின்ற எண்ணிக்கை குறித்த துல்லியமான புள்ளிவிவரத்தைப் பெறமுடிவதாய் இருந்தால், உலகின் மொத்த பட்டினிவாழ் மக்களின் எண்ணிக்கை 1 பில்லியனைத் தாண்டும்.
Credit: World Food Program
இந்தப் புள்ளிவிவரங்கள் முதலாளித்துவ அமைப்புமுறையின் அப்பட்டமான தோல்வியை விளங்கப்படுத்துகின்றன. உற்பத்தி சக்திகள் –நிலம், எந்திரங்கள், விவசாயத் தொழில்நுட்பம் ஆகியவை- மனித குலத்திற்கு முழுக்க உணவளிக்கத் தேவையானதை விடவும் அதிகமாகவே இருக்கின்றன. இந்த பூமிக்கோளத்தில் உணவு அபரிமிதமாக இருக்கிறது. ஆனால் பிரம்மாண்டமான விவசாய-வணிக பெருநிறுவனங்களது இலாபமுனைப்பும், மனித குலத்தை செயற்கையான மற்றும் முழுக்க காலாவதியாகிப் போன எல்லைக்கோடுகளால் பிளவுபடுத்துகின்ற பிற்போக்குத்தனமான தேசிய-அரசு அமைப்புமுறையும், ஒரு பில்லியன் மனிதர்களுக்கு ஒரு கண்ணியமான உயிர்வாழ்க்கைக்கு குறைந்தபட்ச நிபந்தனையாக அவசியப்படுகின்ற உணவு கிடைக்காமல் தடுத்து வைத்திருக்கின்றன.
போதுமான அளவு உணவு இல்லாத மக்கள் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 2017 இல் அதிகரித்திருந்ததை ஐநா அறிக்கை கண்டது. 2014 இல் 783.4 மில்லியனாக இருந்ததில் இருந்து, மொத்தமாய் 38 மில்லியனுக்கும் அதிகமாய், இந்த எண்ணிக்கை அதிகரிப்பு கண்டிருந்தது. ஒரு குடும்பத்தில் உணவு இல்லாமல் போய் குறைந்தபட்சம் ஒரு தினமேனும் சாப்பிடாமல் கழிவது என வரையறுக்கப்பட்டிருக்கின்ற கடும் உணவுப் பாதுகாப்பின்மையானது 2017 இல் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா தவிர்த்து உலகின் ஒவ்வொரு பகுதியிலும் அதிகரித்திருந்தது.
ஊட்டச்சத்து குறைபாட்டிலான மிகக் கூர்மையான அதிகரிப்பு ஆபிரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும், அத்துடன் ஜெமன் நாட்டில் கிழக்கு ஆபிரிக்கா தொடங்கி செங்கடல் எங்குமான அரேபிய தீபகற்பத்திலும் –இப்பகுதி போரினாலும் அமெரிக்க ஆதரவுடன் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளால் திணிக்கப்பட்டிருக்கின்ற முற்றுகையினாலும் நாசம் செய்யப்பட்டிருக்கிறது- ஏற்பட்டிருந்தன. தெற்காசியாவிலும் ஊட்டச்சத்து குறைபாடு அதிக மட்டங்களில் இருப்பது கண்டறியப்பட்டது, என்றாலும் இவை 2016 முதல் 2017 வரையான காலத்தில் பெரிய அளவில் மாறியிருக்கவில்லை.
நீண்டதொரு கால இடைவெளி எடுத்துப் பார்த்தால், 2005 முதலாக, ஆபிரிக்காவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ளோரின் எண்ணிக்கை 60 மில்லியன் அதிகரித்திருந்தது, அதேவேளையில் ஆசியாவில் இந்த எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சிகண்டிருந்தது என்பதை FAO கண்டது.
குறிப்பாக அதிர்ச்சியூட்டக் கூடியது வட ஆபிரிக்காவில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றமாகும், ஒரு காலத்தில் வளமான பகுதியாக இருந்த இங்கு, ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்வோரின் எண்ணிக்கை 2000 இல் 9.7 மில்லியனாக இருந்ததில் இருந்து 2010 இல் 8.5 மில்லியனாக வீழ்ச்சி கண்டது, அது சென்ற ஆண்டில் 20 மில்லியனை எட்டியிருக்கிறது. இதேபோல, மேற்காசியாவில் –மத்திய கிழக்கு- ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு முகம்கொடுப்போரின் எண்ணிக்கை 2010 இல் 20.1 மில்லியனாக இருந்ததில் இருந்து 2017 இல் 30.2 மில்லியனாக அதிகரித்திருந்தது.
மொரோக்கோ தொடங்கி ஈரான் வரை விரிந்து செல்கின்ற இந்த பரந்த பிராந்தியத்திலான கூட்டான அதிகரிப்பு, லிபியா மீதான அமெரிக்க-நேட்டோ தாக்குதல், எகிப்தில் புரட்சிகர எழுச்சி மற்றும் அது குருதிகொட்ட ஒடுக்கப்பட்டமை, சிரியா மற்றும் ஜெமனில் நடந்து வரும் உள்நாட்டுப் போர்கள், மற்றும் ஈராக் போரின் பின்வந்த காலம் ஆகியவற்றின் சமகாலகட்டத்தில், பட்டினியில் விளிம்பில் இருப்போரது எண்ணிக்கையில் 20 மில்லியனுக்கும் அதிகமானோரை சேர்த்து விட்டிருக்கிறது.
உணவுப் பாதுகாப்பு குறித்த FAO இன் 2017 அறிக்கையானது, பட்டினிக்கு முகம்கொடுப்போரின் எண்ணிக்கையை உயர்த்துவதில், இந்தப் போர்களும், அத்துடன் காங்கோ ஜனநாயகக் குடியரசு, தெற்கு சூடான் மற்றும் சோமாலியாவிலான இதேபோன்ற மோதல்களும் ஏற்படுத்திய தாக்கத்தின் மீது பெருமளவு கவனம் செலுத்தியது. இந்த முகமையின் 2018 அறிக்கையானது, இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் பட்டினிக்கு இரண்டாவது மிக முக்கியமான காரணியாக இருக்கின்ற, காலநிலை மாற்றத்தின் மீது பிரதான கவனம் குவிக்கிறது.
“காலநிலையின் மாறுதன்மையானது –அதீத வறட்சிகள் மற்றும் வெள்ளங்கள்- மிதவெப்ப மற்றும் வெப்பப் பிராந்தியங்களில் கோதுமை, அரிசி மற்றும் சோளத்தின் உற்பத்தியை ஏற்கனவே பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறது, வெப்பநிலைகள் உயர்ந்து மிகவும் அதீதமானதாக ஆகும்போது இந்த நிலை இன்னும் மோசமடையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அறிக்கை தெரிவிக்கிறது.
“மழைப்பொழிவு, வெப்பநிலை மாறுதன்மை மற்றும் கடும் வறட்சி ஆகியவற்றால் எளிதாகப் பாதிக்கத்தக்க விவசாய அமைப்புமுறைகளைக் கொண்டிருக்கின்ற, அத்துடன் மக்கள்தொகையின் மிகப்பெரும் பகுதியினரது வாழ்வாதாரம் விவசாயத்தைச் சார்ந்ததாக இருக்கின்ற நாடுகளில் பட்டினிநிலை கணிசமான அளவு மோசமாய் இருக்கிறது” என்று அது தொடர்ந்து தெரிவித்தது.
காலநிலை மாற்றத்துடன் தொடர்புபட்ட வானிலை போக்குகளிலான நீண்ட-கால மாற்றங்களுக்கு தொடர்புடைய வறட்சியானது நான்கு வெவ்வெறு மக்கள்தொகை செறிந்த பகுதிகளை நாசம் செய்திருக்கிறது: தென்னாபிரிக்கா, Lesotho மற்றும் Swaziland தனிப்பகுதிகள், மொசாம்பிக், சிம்பாப்வே, மலாவி மற்றும் மடகாஸ்கார் ஆகியவை உள்ளிட்ட தெற்கு ஆபிரிக்கா; எத்தியோப்பியா, சோமாலியா, கென்யா, தெற்கு சூடான் மற்றும் உகாண்டா ஆகியவை உள்ளிட்ட ஆபிரிக்க கொம்புப் பகுதி; மாலி முதல் செனகல் வரையான மேற்கு ஆபிரிக்கா; மற்றும் இந்திய துணைக்கண்டத்தின் பகுதிகள், குறிப்பாக மக்கள்தொகை செறிந்த பாகிஸ்தானின் சிந்து மாகாணம் மற்றும் இந்தியாவில் அதனை ஒட்டி இருக்கும் பகுதிகள்.
சத்தின்மை (Wasting) என்பது குறுகியகாலத்திற்கும் நீண்டகாலத்திற்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிக ஆபத்தான விளைவைக் கொண்ட ஒரு நோய்க்குறியாகும். சத்தின்மையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 2013 இல் –ஆய்வுகள் கடைசியாக கிடைக்கத்தக்கதாக இருக்கின்ற ஆண்டு- 875,000 உயிரிழப்புகளைக் கண்டிருந்தன, ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளின் மொத்த இறப்பு எண்ணிக்கையில் இது 12.6 சதவீதமாகும். இவர்களில், 516,000 உயிரிழப்புகள் தீவிர சத்தின்மையுடன் தொடர்புபட்டிருந்தன; அடிப்படையாக பட்டினியாலோ அல்லது அது தொடர்பான நோய்களாலோ உண்டாகியிருந்தன.
சத்தின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்துக் குழந்தைகளில் பாதிப்பேர் தெற்காசியாவில் இருக்கின்றனர், 15 சதவீதம் அல்லது அதற்கு அதிகமாகக் கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் இலங்கையும் இடம்பெற்றுள்ளன. பபுவா நியூகினியா, ஜெமன், மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் இருக்கும் எரித்ரியா, ஜிபூட்டி, தெற்கு சூடான் மற்றும் சூடான் ஆகிய நான்கு நாடுகள் ஆகியவையும் இதே வகைப்பாட்டில் வருகின்றன.
இந்த அத்தனை நாடுகளுக்கும் பொதுவானது என்னவென்றால் –இதைப் பற்றி ஐநா அறிக்கையில் ஒரு வார்த்தையும் கூட இல்லை என்கிறபோதும்- தொடர்ந்தும் உலகப் பொருளாதாரத்தில் மேலாதிக்கம் செலுத்தி வருகின்றதும், நேரடி முதலீடுகள் மற்றும் கடன்கள் மூலமோ அல்லது சர்வதேச நாணய நிதியத்தால் திணிக்கப்படும் சிக்கன நடவடிக்கைக்கான கோரிக்கைகள் மூலமோ “வளர்ச்சி குன்றிய நாடுகளின்” ஆதாரவளங்களை சுரண்டி வருகிறதுமான உலகின் ஏகாதிபத்திய சக்திகளது முன்னாள் காலனி நாடுகளாக இவை இருக்கின்றன என்பதாகும்.
ஏகாதிபத்தியப் போர்களுக்கும் ஏகாதிபத்திய-தூண்டுதலிலான உள்நாட்டுப் போர்களுக்கும் –இவற்றில் சில ஒரு தலைமுறைக்கும் அதிகமான காலத்திற்கு நீண்டவையாக இருந்திருக்கின்றன- இலக்கான ஏமன், சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா போன்றவை படு-மோசமான நிலையில் இருக்கும் நாடுகளில் இடம்பிடிக்கின்றன.
ஊட்டச்சத்து பிரச்சினை உலக மக்களின் பெரும்பான்மையாக இருக்கும் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் வாழும் பில்லியன் கணக்கான மக்களுக்கு மட்டுமல்ல, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வாழுகின்ற –இங்கு வாழ்க்கைத் தரங்கள் மூன்றுக்கும் அதிகமான தசாப்தங்களாய் கீழிறக்கப்பட்டு வந்திருக்கின்றன- தொழிலாள வர்க்கத்திற்கும் கவலை கூட்டிச் செல்கின்ற விடயமாகும்.
இரண்டாவது பெரும் ஊட்டச்சத்து நெருக்கடி, குறிப்பாக வட அமெரிக்காவில், உடல் பருமனின் பரவல் தொடர்பானதாக இருப்பதாக ஐநா அறிக்கை தெரிவிக்கிறது. இதுவும் வறுமையின் ஒரு வியாதியே ஆகும். “உணவுப் பாதுகாப்பின்மையானது எடைமிகுதலுக்கும் உடல் பருமனுக்கும் அத்துடன் ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கும் கூட பங்களிப்பதாக இருக்கிறது, ஊட்டச்சத்து குறைபாட்டின் இந்த வடிவங்களது உயரிய விகிதங்கள் பல நாடுகளில் ஒன்றாக இருக்கின்றன” என்று அந்த அறிக்கை விளக்குகிறது. “உணவு பாதுகாப்பின்மைக்கும் மிகைஎடை மற்றும் உடல்பருமனுக்கும் இடையிலான தொடர்பானது, உணவுப்பழக்கம் உணவின் விலையால் பாதிக்கப்படுவதில் கொண்டிருக்கிறது. சத்தான, பசுமையான உணவுகள் பெரும்பாலும் விலை அதிகமானவையாக இருக்கின்றன. ஆகவே, உணவுக்கான வீட்டு ஆதாரங்கள் பற்றாக்குறையாகும்போது, குறிப்பாக நகர்ப்புற அமைவுகளில் மற்றும் உயர்-நடுத்தர மற்றும் உயர்-வருவாய் நாடுகளில், மக்கள் பெரும்பாலும் கலோரி அடர்த்தி மிகுந்த ஆனால் ஊட்டச்சத்து குறைந்த விலைகுறைந்த உணவுகளை தெரிந்தெடுக்கின்றனர்.”
உலகின் வயதுவந்தவர்களில் சுமார் 13 சதவீதம் பேர், அல்லது 672 மில்லியன் பேர், அதாவது கிட்டத்தட்ட எட்டு பேருக்கு ஒருவர், மருத்துவரீதியாக உடல்பருமனுடையவர்களாய் உள்ளனர், இதில் மிக உயரிய விகிதங்கள் அமெரிக்காவில் தான் இருக்கின்றன. ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் மிகக் குறைந்த விகிதத்தில் –அங்கும் விகிதங்கள் துரிதமாக உயர்ந்து வருகின்றன என்றபோதும்- உடல்பருமன் விகிதங்கள் உள்ளன.