Print Version|Feedback
Ten years after Lehman: New financial crises in the making
லேஹ்மனுக்குப் பின் பத்து ஆண்டுகள்: புதிய நிதி நெருக்கடிகள் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
By Nick Beams
17 September 2018
2008, செப்டம்பர் 15 அன்று முதலீட்டு வங்கியான லேஹ்மன் பிரதர்ஸின் திவால்நிலையால் வெளிவந்த உலகளாவிய நிதி நெருக்கடி நடந்து பத்தாண்டுகள் நிறைவடைவதை அடுத்து வெளியாகியிருக்கும் ஏராளமான வருணனைகளில் இரண்டு குணாம்சங்கள் மேலோங்கி நிற்கின்றன.
முதலாவது, பொறிவு குறித்த எந்த விஞ்ஞானபூர்வமான விளக்கமும் இல்லாமலிருப்பது. இரண்டாவது, பொறிவுக்கான காரணங்களை கடந்துவந்ததற்கெல்லாம் அப்பால், ஒரு புதிய நெருக்கடி மிகவும் உருவாகிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் குறித்த அச்சம் வெளிப்படுவது.
விஞ்ஞானபூர்வமான பகுப்பாய்வு இல்லாதிருக்கிறது என்பதற்கு மிகத் தெளிந்த உதாரணத்தை வழங்கியிருப்பவர், அந்த சமயத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவராக இருந்தவரும் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களது பிணையெடுப்புக்கு தலைமை நிறுவனருமாக இருந்தவருமான பென் பெர்னான்கே. வரிசெலுத்துவோரின் பணத்திலிருந்து 700 பில்லியன் டாலர் எடுத்து வோல் ஸ்ட்ரீட்டுக்கு கையளிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து பொறிவுக்கு முதல் காரணமாய் எது இருந்ததோ அந்த ஊகவணிகத்தின் ஒரு விரிவாக்கத்திற்கு உத்தரவாதம் அளித்து, நிதி அமைப்புமுறைக்குள்ளாக டிரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சிய, பண இறைப்பு வேலைத்திட்டம் பின்தொடர்ந்தது.
இப்போது ப்ரூக்கிங்ஸ் கல்விநிறுவனத்தில் கல்விக்குழு உறுப்பினராகவும் இரண்டு முதலீட்டு குழுமங்களுக்கு ஆலோசகராகவும் இருந்து வருகின்ற பெர்னான்கேவுக்கு, அவர் தலைமையின் கீழ் நடந்த நிகழ்வுகளை ஆழ யோசிப்பதற்கு ஒரு தசாப்த காலம் இருந்திருக்கிறது, அத்துடன் Fed, பல்கலைக்கழகங்கள் மற்றும் செழிப்பான-நிதியாதாரம் பெறுகிற சிந்தனைக் குழுமங்களது ஆராய்ச்சி வளங்கள் அத்தனையும் அவருக்கு துணையிருந்திருக்கின்றன. அவர் என்ன முடிவுக்கு வந்திருக்கிறார்?
ஆண்டுதினத்தை ஒட்டி புரூக்கிங்ஸ்க்கு அவர் தயாரித்திருக்கும் ஒரு ஆராய்ச்சியறிக்கையில், அமெரிக்க நில-மனை சந்தையின் பொறிவு நிதிப் பொறிவில் ஒரு இரண்டாம் நிலைக் காரணியாக மட்டுமே இருந்ததாக தொடர்ந்து கூறுகிறார். “நெருக்கடி ஒரு மந்தநிலைக்கு இட்டுச் சென்றதற்கான” இரண்டாவதும் பெரியதுமான காரணமாக இருந்தது “ஒரு தீவிர நிதிரீதியான அச்சம் வங்கிகள், மற்றும் முக்கியமாக, முதலீட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போன்ற வங்கிசாரா கடனளிப்பாளர்களும் உள்ளிட கடன் வழங்குவோரின் மீதான அமைப்புரீதியான நெருக்கடியாகும்.” நிதி அமைப்புமுறையில் இருந்த “நிலையற்றதன்மை” ஒரு “பீதியிலும் கடன் முடக்கத்திலும்” சென்று முடிந்தது.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பீதி மற்றும் நம்பிக்கையிழப்பின் வடிவத்தை எடுத்த நெருக்கடிக்கு பிரதான காரணமும், பீதியும் நம்பிக்கையிழப்பும் ஆகும்.
நில-மனை சந்தையிலான, எல்லாவற்றையும் விட துணை-அடமானக் கடன் துறையிலான, பொறிவு நெருக்கடி வெடிப்பதற்கும் அதற்குப் பின்வந்த மிகப்பெரும் மந்தத்திற்குமான ஒரு தூண்டலாக மட்டுமே இருந்தது என்ற அதேவேளையில், அதில் இருந்து கவனத்தைத் திருப்புவதில் பெர்னான்கேவுக்கு ஒரு நிலையான நலன் இருக்கிறது. அதாவது பிரச்சினைகள் அத்துறையில் எழத் தொடங்கிய சமயத்தில், அவை எந்தவொரு பெரிய தாக்கத்தையும் கொண்டிருக்கும் என்பதை அவர் மறுத்திருந்தார்.
“விரிந்த வீட்டுக்கடன் சந்தையில் உள்ள துணை-அடமானக் கடன் பிரிவிலான பிரச்சினைகள் வரம்புக்குட்பட்டிருக்கும் என்றே நாங்கள் நம்புகிறோம், துணை-அடமானக் கடன் சந்தையில் இருந்தான கணிசமான பாதிப்புகள் பொருளாதாரத்தின் எஞ்சிய பகுதிக்கோ அல்லது நிதியமைப்பு முறைக்கோ பரவும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்று அவர் மார்ச் 2007 இல் கூறியிருந்தார்.
முதலாளித்துவ பொருளாதாரத்தின் தலைமையில் இருப்பதாகச் சொல்லப்படும் நிறுவனங்களது உயரிய மட்டங்களிலேயே கூட அதன் செயல்படுவிதம் குறித்த எந்தவொரு சீர்மையான புரிதலும் இருக்கவில்லை என்பதை அம்பலப்படுத்தியிருப்பது தான் -கவனியாமல் இருந்ததில் சந்தேகமில்லை- ப்ரூக்கிங் ஆய்வறிக்கையின் திகைப்பூட்டும் அம்சங்களில் ஒன்றாய் இருக்கிறது.
இது நீண்டகால அரசியல் விளைவுகளை கொண்டதாகும். ‘அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் சமூகத்தை ஒழுங்கமைக்க அனுமதிக்கப்பட முடியும், ஏனென்றால் அவர்கள் மட்டுமே பரந்த எண்ணிக்கையிலான உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ள இயலுமானதற்கு அப்பால் சிறப்பு அறிவைப் பெற்றுள்ளனர், பரந்த மக்கள் வெறுமனே தங்கள் மீது சுமத்தப்பட்டதை ஏற்றுக் கொண்டாக வேண்டும்’ என்ற கருத்தாக்கத்தை வலுப்படுத்தும் வகையில் பொருளாதார நிகழ்சிபோக்குகளை புதிர்ப்படுத்திக் காட்டுவது முதலாளித்துவ சித்தாந்தத்தின் ஒரு முக்கிய பாத்திரமாகும்.
உண்மையில், பேரரசர் ஆடையில்லாமல் நிற்கிறார், அந்த அம்மணநிலை பெர்னான்கேவின் ஆய்வறிக்கையில் ஒரு திகைப்பூட்டும் பத்தியில் வெளிப்படுத்தப்படுகிறது.
“நெருக்கடிக்கு முன்பாக”, அவர் எழுதுகிறார், “மத்திய வங்கிகள் மற்றும் முற்கணிப்பாளர்களால் பயன்படுத்தப்பட்ட பரந்ததுறை பொருளாதார (macroeconomic) மாதிரிகள் -Fed இன் மிகுந்த பயன்மிக்க (workhorse) மாதிரி உள்ளிட- கடன் சந்தை சீர்குலைவுகள் சம்பந்தமாக எப்படி சிந்திக்க வேண்டும் என்பது குறித்த வழிகாட்டல்களை அதிகமாய் வழங்கியிருக்கவில்லை.”
முதலாளித்துவ பொருளாதாரத்தின் செயல்பாடுகளில் கடனும் நிதியும் வகித்த அதிமுக்கியமான பாத்திரத்தை கொண்டு பார்த்தால், இது ஒரு ஆச்சரியமூட்டும் ஒப்புதலாகும். வெள்ளத் தடுப்பு அமைப்புமுறை ஒன்றின் வடிவமைப்பாளர்கள், ஒரு பெருநாசம் நடந்து முடிந்த பிறகு, தாங்கள் வகுத்த திட்டங்களில், நீரைக் கணக்கில் எடுக்க மறந்து விட்டிருந்ததை கண்டுபிடித்ததாக கூறினால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது இது.ஆனால் இந்த விடுபடலைச் செய்தது வெறுமனே பெர்னான்கே மட்டுமோ Fed இன் உயர்மட்டத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் “அறிவாளிகள்” மட்டுமோ இல்லை. இது முதலாளித்துவப் பொருளாதாரத்திலேயே வேரூன்றியதாக இருக்கிறது. அதன் மிக ஆரம்ப காலத்தில் இருந்தே அது, பணத்தையும், அதன் மேலதிக வளர்ச்சியான கடனையும், வெறுமனே ஒரு தொழில்நுட்ப சாதனமாக மட்டுமே, நடத்தி வந்திருக்கிறது.
பண்டம் என்ற முதலாளித்துவத்தின் மூலக்கூறு வடிவத்திலேயே இருக்கின்ற முரண்பாட்டில் இருந்து, ஒரு பண்டத்தின் பயன்மதிப்புக்கும் பரிவர்த்தனை மதிப்புக்கும் இடையிலான முரண்பாட்டில் இருந்துதான் பணம் உதயமாகிறது என்ற மார்க்சின் பகுப்பாய்வை முதலாளித்துவப் பொருளாதாரம் எப்போதும் எதிர்த்து வந்திருக்கிறது. பயன் மதிப்பு என்பது நுகரும் பொருட்களின் உற்பத்தியைக் குறிப்பிடுகிறது. ஆனால் முதலாளித்துவப் பொருளாதாரமானது, மனிதத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பொருட் செல்வத்தை உற்பத்தி செய்வதன் மூலமாக செலுத்தப்படாமல், மாறாக இலாபத்திற்கான மூலவளமாய் இருக்கும் பரிவர்த்தனை மதிப்பை விரிவாக்கம் செய்வதைக் கொண்டு செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
உயர்மட்டத்தில் இருப்பவர்கள் கட்டுப்பாடைக் கொண்டிருக்கிறார்கள் என்ற பிரமையைக் காப்பாற்றுகின்ற எப்போதுமான ஆர்வத்தில், பெர்னான்கே, இந்த நெருக்கடியானது “விரிந்த அளவில் பொருளாதாரத்தில் கடன் காரணிகள் கொண்டிருக்கும் முக்கியத்துவம் குறித்த பொருளாதார அறிஞர்களின் பார்வைகளை கணிசமாக மாற்றியிருக்கிறது” என்றும் பரந்ததுறை பொருளாதார முற்கணிப்பு மற்றும் பகுப்பாய்வில் கடனின் பாத்திரத்தை இணைத்துக்கொள்ள அவர்கள் விழைகிறார்கள் என்றும் மறுஉறுதி வழங்குகிறார்.
ஆயினும் இது எதற்கும் தீர்வு சொல்லவில்லை, ஏனென்றால் மார்க்ஸின் பகுப்பாய்வு காட்டியவாறாக, முதலாளித்துவத்தின் நெருக்கடிகள் நிதிய அமைப்புமுறையிலான சீர்திருத்தங்கள் மூலமாக வெல்லப்பட முடியாது, ஏனென்றால் அவை அவசியமாய் அங்கே தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்ற போதிலும், அவை வேரூன்றியிருப்பது முதலாளித்துவ பொருளாதாரத்தின் மிக அடித்தளங்களில், அதன் மரபணுவில் என்று சொல்லலாம்- அதாவது இலாபம் மற்றும் சந்தை அமைப்புமுறையை அடிப்படையாகக் கொண்ட சமூக உறவுகளில் ஆகும்.
ஆகவே, மேம்பட்ட “மாதிரி”களால் வழிநடத்தப்படுகின்றதாக இருக்கும் நிதிய அமைப்புமுறையிலான சீர்திருத்தங்கள், சில பிரச்சினைகளை தணிக்கலாமே தவிர, கீழமைந்திருக்கும் முரண்பாடுகள் தவிர்க்கவியலாமல் வெளிப்பட்டே தீரும் என்று அவர் வரையறை செய்தார்.
மார்க்சின் பகுப்பாய்வின் வெளிச்சத்தில், அத்தகையதொரு அபிவிருத்திக்கான வாய்ப்பு ஆண்டுதினத்தை ஒட்டிய மற்ற எழுத்தாளர்களின் கண்ணோட்டங்களில் பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நியூ யோர்க் டைம்ஸில் வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில் நிதி நெருக்கடி செய்திகளை கையாண்டவரான ஆண்ட்ரூ ரோஸ் ஸோர்கின், அந்த செய்தித்தாளில் சமீபத்தில் எழுதிய ஒரு வருணனைக் கட்டுரையில், “நாம் இன்னொரு நெருக்கடியை சந்திக்க வேண்டி வருமா?” என்ற கேள்வியை அவர் அடிக்கடி எதிர்கொள்வதாக எழுதுகிறார்.
“பதில், நிச்சயமாக, ஆம் என்பது தான்” என்று அவர் எழுதுகிறார். “ஆனால் நான் கவலைப்படுவது ஒரு வோல் ஸ்ட்ரீட் நெருக்கடியை குறித்தல்ல” அவர் மேலும் சேர்த்துக் கொள்கிறார், “அதனினும் பெரியவை குறித்தே நான் கவலை கொள்கிறேன்.”
தோல்வியடைய முடியாத அளவுக்குப் பெரியது (Too Big to Fail) என்கிற புத்தகத்தை தான் எழுதிய போது, நிதி நிறுவனங்கள் தொடர்பாகவே அந்த சொல்லாடலை தான் பயன்படுத்தியதாக ஸோர்கின் குறிப்பிடுகிறார். “இன்றோ, அது பெருநகரங்கள், மாநகராட்சிகள், அரசுகள் மற்றும் நாடுகளைக் குறிப்பிடுவதற்காய் பயன்படுத்தப்படுகிறது. கடன் பெருக்கத்தை நீங்கள் கவனித்தால், அதுவே நீங்கள் ஒரு கண் வைத்திருக்க வேண்டிய இடமாக இருக்கிறது.”
ஃபைனான்சியல் டைம்ஸ்க்கு எழுதும் பொருளாதார வருணனையாளரான, மார்ட்டின் வொல்ஃப், நிதிப் பொறிவுக்குப் பிந்தைய காலத்தில் மிக சிறிதாகவே மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்ற உண்மையைக் கூறி புலம்புகிறார். அவர் எழுதுகிறார், “நிதி நெருக்கடியானது, பல நாடுகளில் சமத்துவமின்மையின் அதிகரிப்பு காலகட்டம் ஒன்று பின்தொடரும் வகையில் நடந்த, சுதந்திர சந்தையின் ஒரு உலுக்கும் தோல்வியாகும்.” இப்போது சமத்துவமின்மை குறித்த அக்கறை வெளிக்காட்டப்படுகிறது, ஆயினும் உண்மையில் வெகு கொஞ்சமாகவே செயலில் காட்டப்பட்டிருக்கிறது.
”கொள்கை உருவாக்குநர்கள் முன்னெப்போதினும் அதிகரித்துச் சென்று கொண்டிருக்கும் கடன் மீது அபாயகரமான விதத்தில் சார்ந்திருப்பதை பெரும்பாலும் கவனிக்கத் தவறுகிறார்கள்.. சிலர் மட்டுமே, நிதித் துறை நடவடிக்கைகளை பரந்த அளவுகளில் நாம் தொடர்ந்தும் கொண்டிருப்பதன் மதிப்பைக் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள், அல்லது இனிவரத்தக்க பெரும் நிதி நெருக்கடிகளது அபாயங்களை உணர்ந்திருக்கிறார்கள்.”
அர்த்தமுள்ள சீர்திருத்தத்திற்கான எந்த முன்னோக்கும் இல்லாமலிருப்பதை ஒப்புக்கொள்ளும் விதமாய், அவர் எழுதுகிறார்: “பெரும்பாலும் நெருக்கடிக்கு-முந்தைய பழைய அறிவின் மீதே விடாப்பிடியாக விசுவாசம் கொண்டிருப்பது திகைப்பூட்டுகிறது... இன்னும் அதிர்ச்சி தரக்கூடியதாய் இருப்பது என்னவென்றால், இன்னுமொரு பெரிய நெருக்கடியைக் கூட விடுங்கள், இன்னுமொரு பெரிய மந்தநிலையைக் கூட திறம்படக் கையாளக்கூடிய நம்பிக்கை வெகு குறைவாகவே இருக்கிறது என்பது தான்.”
முதலாளித்துவ பொருளாதாரத்தின் தீயவிளைவுகளை குறைப்பது சாத்தியம் என்பதான பிரமையைக் காப்பாற்றுகிறதான எப்போதுமான பதட்டத்துடன், வொல்ஃப், நிதி அமைப்புமுறையின் செயல்பாடுகளில் மாற்றங்கள் செய்வதற்கு “சிறந்த யோசனைகளது” ஒரு பட்டியலை வழங்குகிறார், ஆயினும் அவற்றில் எதுவுமே, அதன் அடிப்படை செயல்பாடுகளை மாற்றுவதாயில்லை.
பிரான்சில் முன்னைய ஆட்சி குறித்த விவரிப்புகளையும் 1789 புரட்சியின் சமயத்தில் சீர்திருத்தங்களை செய்வதற்கு அது துடிப்பான திறனற்று இருந்ததையும் நினைவுக்குக் கொண்டுவரத்தக்கதான கருத்துக்களில், அவர், வரம்புபட்ட மாற்றத்திற்கும் கூட அதிக சாத்தியம் இருப்பதாகக் கூறமுடியவில்லை, ஏனென்றால் “ஒரு சுதந்திர சந்தையாக முகமூடி அணிந்து கொண்டிருக்கும் இன்றைய வாடகை-பிழிந்தெடுக்கும் பொருளாதாரமானது, எப்படிப் பார்த்தாலும், அரசியல் செல்வாக்குடைய உள்ளிருப்போருக்கே அதிக ஆதாயமளிப்பதாய் இருக்கிறது.”
“மையத்தின் மெத்தனம்” என்று அவர் குறிப்பிடக்கூடிய விடயம் “தீவிரவாதக் கோபாவேசத்திற்கு” அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறது என்றும், “சந்தைப் பொருளாதாரத்திலும் தாராளவாத ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்கள் உயரிய கொள்கைகளுடன் வரவில்லை என்றால், வாய்வீச்சாளர்கள் அவற்றை துடைத்தெறிந்து விட்டுப் போய்விடுவார்கள்” என்றும் அவர் எச்சரிக்கை செய்கிறார்.
ஃபைனான்சியல் டைம்ஸ், செப்டம்பர் 13 அன்று வெளியான ஒரு தலையங்க குழு அறிக்கையில், வரிசையான எச்சரிக்கைகளை விடுத்திருந்தது. நெருக்கடியை ஒட்டிய சமயத்தில் வங்கியமைப்புமுறை மேம்பட்ட விதத்தில் “புயலுக்கு-பாதிக்காததாய்” இருந்ததாக அது தெரிவித்த அதே நேரத்தில், அடுத்த நெருக்கடி வேறெங்கோ இருந்து -அதிகப்பட்சமாய் வங்கிகள் மீதான கூடுதல் கட்டுப்பாடுகளது ஒரு விளைவாகவும் கூட- தோன்றக் கூடும் என்று எச்சரித்தது.
"வங்கி மேற்பார்வையை இறுக்குவது அபாயத்தை இடம்மாற்றியிருக்கிறது” ஃபைனான்சியல் டைம்ஸ் எழுதுகிறது, “குறிப்பிடத்தக்கவிதமாக, கடன்கொடுப்பதில் இருந்து சந்தை உருவாக்கம் வரை, வங்கிகளின் வேலையை செய்யக் கூடிய நிழல் வங்கித் துறைக்கு, அல்லது வங்கி-சாரா நிதி நிறுவனங்களுக்கு இடம்மாற்றியிருக்கிறது. சொத்து மேலாளர்கள், துணிகர நிதிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களும் இப்போது வங்கிகளின் பாதுகாப்பிலானதாக இருந்து வந்திருக்கக் கூடிய அபாய வகைகளை சுமந்து நிற்கின்றன.”
நிதி அமைப்புமுறையை ஸ்திரப்படுத்துவதற்காக என்று சொல்லி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே இன்னுமொரு பொறிவுக்கான சாத்தியத்தை அதிகரிக்கும் விளைவைக் கொண்டிருக்க முடியும் என்பதே நிச்சயமாக அதன் ஆழமான நெருக்கடிக்கான ஒரு அளவுகோலாக இருக்கிறது.
அத்தகையதொரு இறுதிநிலைக்கு தூண்டுபொறியாக சாத்தியம் கொண்டிருப்பவற்றில் ஒன்றாக, வங்கிகளை ஒரு சரிந்து செல்லும் சந்தையில் அதிர்ச்சியை உறிஞ்சிக் கொள்பவையாக செயல்படத்தக்க பங்குகளின் பெரும் எண்ணிக்கைகளை வைத்திருக்க விருப்பம்குறைந்தவையாக நெறிமுறை மாற்றங்கள் ஆக்கியிருக்கின்றன என்ற உண்மையானது இருக்கிறது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. “செயல்பாட்டைப் பற்றி கவலைப்படாமல் குறியீடுகளை பின்தொடர்ந்து” செயல்படக் கூடிய செயலற்ற நிதிகளின் ஒரேயடியான வளர்ச்சியும் இன்னுமொரு சாத்தியமான குறித்த-நேரம்-வெடிக்கும் குண்டாக (டைம் பாம்) இருக்கிறது. இவை, “சந்தை வீழ்ச்சிகளின் விளைவுகளை உருப்பெருக்கிக் காண்பிக்கக் கூடும்” என அந்த பத்திரிகை எச்சரிக்கிறது.
சில அளவீடுகளின் படி பார்த்தால், அடுத்த நெருக்கடி “ஏற்கனவே வந்துவிட்டிருக்க வேண்டும் என்பதாகவே தென்படுகிறது” என்றது ஃபைனான்சியல் டைம்ஸ். கடன்நிலை 2008 பொறிவின் ஒரு பிரதான காரணியாக இருந்தது, அது இன்னும் அதிகரித்திருக்கிறது. உலகளாவிய கடன், சுமார் 250 டிரில்லியன் டாலர்களாக, லேஹ்மன் தோல்வியின் போது இருந்ததை விடவும் சுமார் 75 சதவீதம் அதிகமாக, இருக்கிறது. அத்துடன் சென்ற நெருக்கடிக்கான பதிலிறுப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த அந்த நடவடிக்கைகளே அடுத்த நெருக்கடிக்கான நிலைமைகளைத் தயாரிப்பதற்காய் வேலைசெய்திருக்கின்றன.
“மிக-இழக்கமான பணக் கொள்கையும் பண வாரிஇறைப்பும் வங்கியின் நிதிநிலை அறிக்கைகளை திருத்தும் பொருளாதார செயல்பாட்டை ஊக்குவிப்பதற்கும் உதவுகின்ற நியாயமான காரணத்தைக் கொண்டிருந்தன என்பதில் சந்தேகமில்லை” என்று அந்த பத்திரிகை எழுதுகிறது. “ஆனால் அவை கடன் பிரச்சினையை பெரிதாக்கின. குறைந்த வட்டிவிகிதங்களைக் கொண்டு, அதிக இலாபம் வழங்கும் ஆபத்தான சொத்துக்களில் முதலிட முதலீட்டாளர்களை ஊக்குவித்தமை புதிய குமிழிகளை பெரிதாக்கியிருக்கிறது. பங்குச் சந்தைகள் வரலாறுகாணா உச்சங்களை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. முக்கியமான உலக நகரங்களில் சொத்துக்களின் விலைகள் அங்கு வாழ்பவர்களது வருவாய்களின் முன்கண்டிராத மடங்கு பெருக்கங்களாய் இருக்கின்றன.”
கீழிருந்தான ஒரு வெடிப்பு குறித்து உலக பெருநிறுவன மற்றும் நிதி ஒருசிலராட்சியினர் மத்தியில் பெருகிச் செல்லும் அச்சங்களை பிரதிபலிக்கின்ற விதமாக, அரசியல் மற்றும் வணிக உயரடுக்கினருக்கு எதிராய் “நாம் Vs அவர்கள்” எனும் விதமான கிளர்ச்சியாக இப்போது உணரப்பட்டுக் கொண்டிருக்கும்” பெருகும் அதிருப்தியை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. “தாராளவாத ஜனநாயகம் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தின் அமைப்புமுறையானது, நன்கு-தொடர்புகள் கொண்ட உள்ளிருப்போரின் நலன்களுக்காக இயங்கும் ஒன்றாக, முன்னேறிய பொருளாதாரங்களில் உள்ள ஒரு கணிசமான சிறுபான்மையினரால் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது” ஏன்று அது எச்சரிக்கை செய்தது.
கடைசியாக கூறப்பட்ட மதிப்பீட்டில் ஒருவருக்கு என்ன கருத்துவேறுபாடு வரக் கூடும் என்றால், அது ஒரு சிறுபான்மையாக இருப்பதைக் காட்டிலும், பெருகிச் செல்லும் பெரும்பான்மையாக இருக்கிறது என்பது தான்.
2008 பொறிவின் புவி-அரசியல் பின்விளைவுகள் -இவற்றில் சில இப்போது தான் மேற்பரப்புக்கு வந்து கொண்டிருக்கின்றன- அவை இன்னொரு நிதி நெருக்கடியுடன் குறுக்கிடும் பட்சத்தில் பெரும் பின்விளைவுகளைக் கொண்டிருக்க அச்சுறுத்துகின்றன. “தேசியவாதமும் பாதுகாப்புவாதமும்...சென்ற நிதிப் பொறிவை மட்டுப்படுத்த உதவிய சர்வதேச ஒத்துழைப்பின் அதே அமைப்புமுறையை சிதைத்துக் கொண்டிருக்கின்றன. இது அடுத்த நெருக்கடியின் பின்விளைவுகளுக்கு கூடுதல் மரணகரமான தன்மையைக் கொடுக்கக் கூடும்.”
“பிரதான நீரோட்ட அரசியல்வாதிகள்” தமது கொள்கைகள் பயனளிக்கின்றன என்பதைக் காட்டமுடியவில்லை என்றால், “இன்றைய ஜனரஞ்சகவாதிகளால் -அல்லது ஓரங்களில் காத்திருக்கக் கூடிய இன்னும் மோசமானவர்களால் அவர்கள் மங்கிப்போகச் செய்யப்பட்டு விடுவார்கள்” என்று அந்த தலையங்கம் நிறைவுசெய்கிறது. இதுவே “நமது காலத்தின் மையமான அரசியல் யுத்தம்” என்று அறிவிக்கும் அது, “அந்த யுத்தம் வெல்லப்படத் தொடங்கும் முன்பே அடுத்த நிதிப் பேரிடர் தாக்கிவிடக் கூடும்” அபாயமும் உடனிருப்பதாகக் கூறுகிறது.
மற்ற பல ஊடக வருணனைகள் போலவே, ஃபைனான்சியல் டைம்ஸ் தலையங்கமும் வலது-சாரி ஜனரஞ்சகவாதிகள் மீதே கவனம்குவிக்கிறது. ஆனால் “ஓரங்களில் காத்திருக்கும் இன்னும் மோசமானவர்கள்” என்று குறிப்பிடுவதில் சுட்டிக்காட்டப்படுகின்றவாறாக, அதன் மிகப்பெரும் அச்சமாக இருப்பது வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியே -இந்த ஆண்டில் அமெரிக்காவிலும் பிறவெங்கிலும் தொழிலாளர்கள் போராட்டங்களது வரிசை பெருகிச் செல்வதில் காண்கின்றவாறாக- ஆகும். நெருக்கடிக்குப் பிந்தைய பத்து ஆண்டுகளில், மிக சக்திவாய்ந்த அரசியல் இயக்கமாக இருப்பது ஜனரஞ்சக சக்திகளின் மேலெழுச்சி அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தால் முன்னிலை கொடுக்கப்பட்ட 2011 எகிப்துப் புரட்சியே ஆகும்; இது என்ன வரப் போகிறது என்பதற்கான ஒரு சோற்றுப் பதமாக இருக்கிறது.
ஒரு தெளிவான சோசலிச முன்னோக்கும் புரட்சிகரத் தலைமையும் இல்லாதிருந்த காரணத்தால் அந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்டு ஒரு கொடூரமான இராணுவ ஆட்சி திணிக்கப்பட்டது. உலக முதலாளித்துவத்தின் இப்போது நடந்து கொண்டிருக்கும் பொருளாதார நிலைமுறிவால் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான வர்க்க யுத்தங்களுக்கு தலைமையைக் கட்டியெழுப்புவதும் அபிவிருத்தி செய்வதும் “நமது காலத்தின் முக்கியமான அரசியல் யுத்தம்” ஆகும்.