Print Version|Feedback
David North warmly welcomed on his arrival in Sri Lanka
இலங்கை வந்த டேவிட் நோர்த்துக்கு உளமார்ந்த வரவேற்பு அளிக்கப்பட்டது
28 September 2018
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவரான டேவிட் நோர்த், வியாழனன்று காலை கொழும்பு விமான நிலையம் வந்துசேர்ந்த போது, அவருக்கு இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சி சார்பாக உளமார்ந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. நான்காம் அகிலத்தின் எண்பதாவது ஆண்டு மற்றும் இலங்கை SEP இன் ஐம்பதாவது ஆண்டுக் கொண்டாட்டத்தில் SEP ஆல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக் கூட்டங்களில் உரையாற்றுவதற்காக நோர்த் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கிறார்.
கொழும்பில் உள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொதுச் செயலாளர் விஜே டயஸ் தலைமையிலான SEP உறுப்பினர்களின் ஒரு வலுவான பிரதிநிதிகள் குழுவால் நோர்த் பகிரங்கமாக வரவேற்கப்பட்டார். “உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த்துக்கு நல்வரவு” எனும் ஒரு பதாகையை அவர்கள் ஏந்தியிருந்தனர். டயஸ் நோர்த்துக்கு மலர்மாலை அணிவித்து வரவேற்றார், SEP அரசியல் குழு உறுப்பினரான விலானி பீரிஸ் நோர்த்தின் மனைவி ஹெதருக்கு ஒரு மலர்க்கொத்தை வழங்கி வரவேற்றார்.
விஜே டயஸ் இலங்கை வந்திருந்த டேவிட் நோர்த்தை வரவேற்கிறார்
அரசாங்கத் தொலைக்காட்சியான ரூபவாஹினி மற்றும் தனியார் தொலைக்காட்சியான டெரானா ஆகியவற்றின் காணொளிச் செய்தியாளர்கள் நோர்த்தின் வருகையை பதிவுசெய்தனர். ரூபவாஹினியின் ஒரு செய்தியாளர் வரவிருக்கும் SEP பொதுக் கூட்டங்களின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து நோர்த் மற்றும் டயஸிடம் நேர்காணல் செய்தார்.
நோர்த் கூறினார்: ”நான்காம் அகிலத்தின் வரலாறு குறித்து உரையாற்றுவதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். இந்த ஆண்டு லியோன் ட்ரொட்ஸ்கியால் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதன் எண்பதாவது ஆண்டாகும். இது சர்வதேச அளவிலும் அத்துடன் இலங்கையிலும் மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஆண்டு நிகழ்வாகும்.”
“இலங்கையில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அபிவிருத்தியில் ட்ரொட்ஸ்கிசம் ஒரு செறிவான பாத்திரத்தை வகித்திருக்கிறது என்பதை பலரும் அறிவர் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இலங்கையின் தொழிலாளர்கள் சோசலிசத்துக்கான போராட்டத்தில் ஒரு பெருமிதமிக்க வரலாற்றைக் கொண்டிருக்கின்றனர், ஆகவே இங்கே பேசுவதில், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சமூக-உறுதிப்பாடு கொண்ட புத்திஜீவிகளுடன் உரையாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். எனது உரைகள் மிக நல்ல வரவேற்பைப் பெறும் என்று நான் நம்புகிறேன்.”
இலங்கை நிருபர்களிடம் டேவிட் நோர்த் பேசுகிறார்
இரண்டு பகிரங்க விரிவுரைகளை வழங்குவதற்காக டேவிட் நோர்த் சோசலிச சமத்துவக் கட்சியால் அழைக்கப்பட்டிருந்தார். இதில் ஒன்று பேராதனை பல்கலைக்கழகத்தின் கலை அரங்கில் அக்டோபர் 3 அன்று மாலை 4.30 மணியளவிலும், இன்னொன்று கொழும்பு புதிய நகர மண்டபத்தில் அக்டோபர் 7 அன்று மாலை 3 மணியளவிலும் இடம்பெறும், என டயஸ் விளக்கினார்.
“இலங்கையில் மட்டுமல்லாது பிராந்தியத்திலும் மற்றும் உலகம் முழுவதிலுமான வர்க்கப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட வரலாற்றுப் பிரச்சினைகளை நாங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்” என்று டயஸ் தெரிவித்தார்.
“மிக உயரிய வர்க்கப் பதட்டங்களின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்திற்கும் இளைஞர்களுக்கும் ஒரு புரட்சிகர முன்னோக்கு அவசியமாய் உள்ளது. ஆகவே தான் இலங்கையில் SEP இந்த பொது விரிவுரைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது; நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற அத்துடன் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் அடிப்படையில் ஒரு உலக புரட்சிகர முன்னோக்குக்கான போராட்டத்தில் ஒரு உரைகல்லாய் திகழ்கின்ற ஒரு சர்வதேசத் தோழருக்கு இங்கே பேசுவதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது.
நோர்த் “உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு விடயத்திலான ஒரு புகழ்பெற்ற எழுத்தாசிரியர், குறிப்பாக இந்த வரலாற்றை சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் இளைஞர்களின் ஒரு புதிய தலைமுறைக்கு விளக்குவதில் அவர் காட்டி வரும் ஈடுபாட்டினால் அறியப்படுபவர்” என்று டயஸ் ஊடகங்களிடம் கூறினார்.
ரூபவாஹினி அதன் வியாழன் மாலை செய்தி அறிக்கையில் நோர்த்தின் வருகை பற்றிய ஒரு காணொளி பகுதியை ஒளிபரப்பியது.