Print Version|Feedback
Arsène Tchakarian (1916–2018): The Manouchian Group’s resistance struggle
அர்ஸென் சக்காரியோன் (1916-2018): மனூச்சியோன் குழுவின் கிளர்ச்சிப் போராட்டம்
By Francis Dubois and Alex Lantier
30 August 2018
எதிர்ப்புப் போராளிகளின் அரசியல் தோற்றுவாயும் இராணுவ செயல்வரலாறும்
மனூச்சியோன் குழுவில் உயிரோடிருந்த ஒரேயொருவரான ஆர்ஸென் சக்காரியோன், ஆகஸ்டு 4, 2018 அன்று, அவரது 101 வது வயதில், காலமானார். அதன் தலைவராக இருந்த மிசாக் மனூச்சியோன் பெயரில் இயங்கிய இந்தக் குழு, லியோன் ட்ரொட்ஸ்கியின் அனுதாபிகளைக் கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் பிரான்சின் மீதான நாஜி ஆக்கிரமிப்பின் போது, ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) கட்டுப்பாட்டில் இயங்கிய குறிபார்த்து சுடுவோர் மற்றும் ஈடுபாட்டாளர்களது (Francs-tireurs et partisans – FTP) கிளர்ச்சி வலைப்பின்னலின் புலம்பெயர்ந்த தொழிலாளர் படை (main-d'œuvre immigrée – MOI) பிரிவின் மிகப் பிரபலமான அமைப்பாக இது இருந்தது.
கம்யூனிஸ்டுகளைக் கொல்வதையே இலக்காகக் கொடுக்கப்பட்டிருந்த பிரெஞ்சு போலிஸ் உளவு அமைப்பின் (Renseignements généraux - RG) இரண்டாவது சிறப்புப் பிரிவு 1943 நவம்பரில் நடத்திய கைதுவேட்டைகளின் போது சக்காரியோன் மயிரிழையில் தப்பியிருந்தார். 23 கைதிகள் மீது ஒரு கண்துடைப்பு விசாரணை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், ஒல்கா பன்சிக்கை (Olga Bancic) தவிர மற்ற அனைவரையும் மோண்ட்-வலேரியன் (Mont-Valérien) சிறையில் 1944 பிப்ரவரி 21 அன்று கெஸ்டபோ (Gestapo நாஜி ஆட்சியின் கீழ் ஜேர்மன் இரகசிய பொலிஸ்) சுட்டுக் கொன்றது, அவர் மட்டும் 1944 மே 10 அன்று ஸ்ருட்கார்ட்டில் தலைதுண்டித்துக் கொல்லப்பட்டார். மோன்ட்-வலேரியன் தண்டனை நிறைவேற்றங்களுக்குப் பின்னர் பிரெஞ்சு ஒத்துழைப்புவாதிகளும் நாஜி அதிகாரிகளும் இழிபுகழ்பெற்ற யூத-விரோத “சிவப்பு சுவரொட்டி”யை பரவலாக விநியோகித்தனர், இது மனூச்சியோன் குழுவை யூதர்கள் மற்றும் வெளிநாட்டினர் கொண்ட ஒரு “குற்றப் படை”யாக கண்டனம் செய்தது.
1944 இல் ஆர்ஸென் சக்காரியோன்
மனூச்சியோன் தண்டனைக்கொலைகளுக்கு முக்கால் நூற்றாண்டின் பின்னர், ஸ்ராலினிசத்தின் மீதான ட்ரொட்ஸ்கியின் விமர்சனங்களை வரலாறு முழுமையாக ஊர்ஜிதம் செய்திருக்கிறது. சோவியத் ஒன்றியத்தில் 1991 இல் முதலாளித்துவத்தை மீட்சி செய்யவிருந்த சோவியத் அதிகாரத்துவத்தின் பக்கம் அணிசேர்ந்து, ஐரோப்பிய ஸ்ராலினிஸ்டுகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பாசிச முதலாளித்துவம் தூக்கிவீசப்படுவதைத் தடுத்துவிட்டனர். இப்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அரவணைப்பின் கீழ், பிரெஞ்சு முதலாளித்துவமானது, நாஜி ஆக்கிரமிப்பில் இருந்தான விடுதலையின் சமயத்தில் தொழிலாளர்களால் வெற்றிகாணப்பட்டிருந்த சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளில் எஞ்சியிருப்பவற்றைக் கிழித்தெறிந்து கொண்டிருக்கிறது; நவ-பாசிசத்திற்கு மறுநிவாரணமளித்துக் கொண்டிருக்கிறது.
இது, மனூச்சியோன் குழுவின் போராட்டங்களுக்கும், நாஜி-விச்சி ஒடுக்குமுறைக்கு முகம்கொடுத்த சமயத்தில் அது முன்வைத்த தைரியமான உதாரணத்திற்கும் புதுப்பிக்கப்பட்ட சமகால முக்கியத்துவத்தை அளிக்கிறது.
சக்காரியோன், ஓட்டோமான் சாம்ராஜ்யத்தில் இருந்த சபாண்ட்ஜாவில் 1916 டிசம்பர் 21 அன்று பிறந்தார், முதலாம் உலகப் போரின் சமயத்தில் ஆர்மீனியர்கள் துருக்கிய ஆட்சியால் படுகொலை செய்யப்பட்டதற்கு மத்தியில் அவரது பெற்றோர் அங்கிருந்து தப்பி ஓடி வந்திருந்தனர். ஒரு கம்யூனிஸ்ட் குடும்பத்தில் இருந்து வந்த அவர், 1936 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்தில் CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) இன் ஒரு அங்கத்தவராக பங்கேற்றிருந்தார்.
அங்கேதான் அவருக்கு மிசாக் மனூச்சியோன் குறித்து தெரியவந்தது, ஆர்மினியக் கவிஞரும் Citroën வாகன உற்பத்தித் தொழிலாளியாகவும் இருந்த மனூச்சியோன், 1934 பிப்ரவரி 6 அன்று பிரான்சில் ஒரு பாசிச கவிழ்ப்புக்கு முயற்சி நடந்திருந்த பின்னர், கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருந்தார். கம்யூனிஸ்ட் தொழிலாளர்களது ஒரு குழு அவரைச் சூழ்ந்து இருந்தது. இந்தக் குழுவில் இறுதியில் ஆர்மீனிய தொழிலாளர்கள் மட்டுமல்லாது, முசோலினி மற்றும் பிராங்கோவின் பாசிச ஆட்சிகளுக்கு எதிராகப் போராடியிருந்த இத்தாலிய மற்றும் ஸ்பானியத் தொழிலாளர்களும், அவர்களுடன் போலந்து, ஹங்கேரி மற்றும் ருமேனியாவில் இருந்தான பல யூதத் தொழிலாளர்களும் இளைஞர்களும் கூட இடம்பெற்றனர். இறுதியாக அந்தக் குழுவில் 100க்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் இடம்பெற்றிருந்தனர்.
மிஸாக் மனூச்சியோன்
மனூச்சியோன் குழு, PCF அதிகாரத்தின் கீழ் இருந்த அதேநேரத்தில், ஸ்ராலினிசக் கொள்கை குறித்து விமர்சன ரீதியாக இருந்தது. ஸ்பானிய உள்நாட்டுப் போரிலும் பிரான்சின் பொது வேலைநிறுத்தத்திலும் ஸ்ராலினிஸ்டுகள் வகித்த எதிர்ப்புரட்சிகரப் பாத்திரத்தின் காரணத்தால் புரட்சிகர சூழ்நிலைகள் கழுத்து நெரிக்கப்பட்டதன் பின்னர், இதன் உறுப்பினர்கள் 1939 இல் உண்டான ஸ்ராலின்-ஹிட்லர் வலிந்து தாக்கா ஒப்பந்தத்தை எதிர்த்தனர். ஹிட்லர் ஆட்சிக்கான அத்தனை எதிர்ப்பையும் கைவிடுவதன் மூலமாக சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி படையெடுப்பை நிறுத்திவிடலாம் என்று ஸ்ராலின் செய்த அரசியல் ரீதியாக பிற்போக்குத்தனமானதும் இறுதியில் வெற்றிதராமல் முடிந்ததுமான ஒரு முயற்சியாக அது இருந்தது.
மாஸ்கோ விசாரணைகளின் போதும் பெருங் களையெடுப்புகளின் (Great Purges) போதும் ட்ரொட்ஸ்கியின் மீதும் அக்டோபர் புரட்சியின் மற்ற பழைய போல்ஷிவிக் தலைவர்களின் மீதும் —இவர்கள் அனைவருமே ஸ்ராலினால் கொல்லப்படவிருந்தனர்— ஸ்ராலினிச அவதூறுகளும் பொய்களும் மழையென பொழியப்பட்டிருந்த நிலையிலும் கூட, மனூச்சியோன் குழு ட்ரொட்ஸ்கிக்கு மிகவும் நெருக்கமான ஒருவரைக் கொண்டிருந்தது.
அரசியல்ரீதியாக ரறோவ் (Tarov) என்றும் மனூச்சியோன் குழுவில் மனுக்கியோன் (Manoukian) என்றும் அறியப்பட்டவரும், மொன்ட்-வலேரியானில் மனூச்சியோன் உடன் சேர்த்து சுட்டுக்கொல்லப்பட்டவருமான ஆர்பென் டவிசியன் (Arben Dawitian) 1920களில் சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக ட்ரொட்ஸ்கியால் தலைமை கொடுக்கப்பட்டிருந்த இடது எதிர்ப்பாளர்கள் அணியின் ஒரு உறுப்பினராக இருந்தவராவார். 1917 இல் போல்ஷிவிக்குகளுடன் இணைந்த அவர், செம்படையின் பொறுப்புகளில் பணியாற்றி இருந்தார். 1925 இல், இடது எதிர்ப்பாளர்களுக்கு அவர் ஆதரவளித்த காரணத்தால், டிரான்ஸ்கோகாசஸ் (Transcaucasus) இன் கம்யூனிஸ்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
ஆ. ரறோவ்
1928 இல் ஆயிரக்கணக்கான மற்ற இடது எதிர்ப்பாளர்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்டு, திருப்பியனுப்பப்பட்டு ஏழு ஆண்டுகளுக்கு சோவியத் ஒன்றியத்தில் தனிமைச் சிறைக்கும் சித்திரவதைக்கும் அவர் உட்படுத்தப்பட்டார். 1935 இல் ஈரானுக்கு தப்பி ஓடிய அவர் அங்கிருந்தபடி பிரெஞ்சில் எழுதிய “உலகப் பாட்டாளி வர்க்கத்திற்கு ஒரு தனிப்பட்ட விண்ணப்பம்” ஆங்கிலத்தில் “ஸ்ராலினின் சிறைகளில் உண்மையான போல்ஷிவிக்குகள் சித்திரவதை செய்யப்படுவதை ரறோவ் வெளிப்படுத்துகிறார்” என்ற தலைப்பில் வெளியானது. அந்த சமயத்தில் ஸ்ராலினிச ஆட்சி உலகப் பாட்டாளி வர்க்கத்தின் கண்களில் மறைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்த, இடது எதிர்ப்பாளர்கள் மீதான துன்புறுத்தலை அது உலகுக்கு வெளிப்படுத்தியது.
ரறோவுக்காக நிதி சேகரிக்க ட்ரொட்ஸ்கி அழைப்பு விடுத்ததன் பின்னர், ரறோவ் பாரிஸுக்கு பயணம் செய்து, அங்கு ட்ரொட்ஸ்கியின் மகனான லியோன் செடோவ் தலைமையில் இருந்த இடது எதிர்ப்பாளர்களது ரஷ்யக் குழுவில் இணைந்து கொள்ள முடிந்தது.
பெரும் விளம்பரம் பெற்ற ஒரு நிலையுடன், மாஸ்கோ விசாரணைகள் மீதான பாரிஸ் விசாரணை ஆணையத்திற்கு ரறோவ் வழங்கிய பிரமாண சாட்சியத்தை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் வெளியிட்டனர். ஆயினும், செடோவின் வட்டத்திற்குள் ஊடுருவி விட்டிருந்த ஸ்ராலினிச இரகசிய போலிசின் ஒரு முகவரான மார்க் ஸ்பொரோவ்ஸ்கி, ரஷ்ய தேர்மிடோரின் சிறைச்சாலைகளில் எனத் தலைப்பிடப்பட்ட ரறோவின் நினைவலைகள் புத்தகத்தை வெளியிடாமல் தடுத்து விட்டார். 1938 இல் ஸ்ராலினிஸ்டுகளால் செடோவ் படுகொலை செய்யப்பட்டதற்குப் பின்னர், ரறோவ்/மனுக்கியோன் ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடன் தொடர்பைக் கைவிட்டு விட்டார்.
ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தம் கையெழுத்தானதன் பின்னர், நாஜிக்களுக்கு எதிராக நடுநிலையைக் கடைப்பிடிக்கும்படி PCF அளித்த கட்டளைகளை மீறி, 1940 இல், நாஜி படையெடுப்புக்கு எதிராக பிரெஞ்சு இராணுவத்தின் வெளிநாட்டினர் பிரிவில் சக்காரியோன் மற்றும் மனூச்சியோன் இருவரும் போரிட்டனர். பிரெஞ்சு தோல்விக்குப் பின்னர் அங்கிருந்து பிரிந்து, சக்காரியோன், 1940 இன் முடிவு வாக்கில் மனூச்சியோன் குழுவில் இணைந்து, நாஜி-விரோத துண்டறிக்கைகளை இரகசியமாக விநியோகித்து வந்தார்.
1941 இல் சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி படையெடுப்புக்கு முகம்கொடுத்த நிலையிலும், அத்துடன் பிரெஞ்சு ஒத்துழைப்புவாத ஆட்சியால் யூதர்கள் மீது அதிகரித்த கொடுமையுடன் இறுதியில் இனப்படுகொலை போன்ற ஒன்று நடத்தப்பட்ட நிலையிலும், மனூச்சியோன் குழு ஆயுதமேந்த முடிவெடுத்தது. அதன் உறுப்பினர்கள் இந்த முடிவை சாதாரணமாக எடுக்கவில்லை. பிரான்சில் இருக்கும் ஜேர்மன் துருப்புகளில், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக இருந்திருந்த பல தொழிலாளர்களும் இருந்தனர் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆயினும், நாஜி மரண முகாம்களுக்கு அனுப்பப்படுவதற்காக செயலற்று காத்திருப்பதைக் காட்டிலும் ஆயுதத்தை ஏந்தி விடுவதே சிறந்தது என்று அவர்கள் முடிவெடுத்தனர்.
மனூச்சியோன் குழு பாரிஸ் கிளர்ச்சிப் போராட்டத்தில் மிகவும் செயலூக்கத்துடனான ஒன்றாக இருந்ததுடன், மாதத்திற்கு சராசரியாய் 15 தாக்குதல்களை ஒழுங்கமைத்து, நாஜிக்களது வெல்லவியலாத தன்மை என்ற விச்சிய கட்டுக்கதையை பலவீனம் செய்த, கெஸ்டபோ (Gestapo) மிகவும் அஞ்சிய ஒரு குழுவாகவும் இருந்தது. 1942 ஜூலை முதலாக 1943 நவம்பர் வரையிலும் அது 200க்கும் அதிகமான நடவடிக்கைகளை (கையெறி குண்டுவீசித் தாக்குதல், துப்பாக்கி தாக்குதல், படுகொலைகள், இரயில் கவிழ்ப்புகள், மற்றும் பிற சதி நடவடிக்கைகள்) ஆக்கிரமிப்பு துருப்புகளுக்கு எதிராக ஒழுங்கமைத்தது. இந்த நடவடிக்கைகள், கெஸ்டபோவினதும் பிரெஞ்சு போலிசினதும் கட்டுப்பாட்டில் இருந்த ஆக்கிரமிப்பு பாரிஸில் பட்டப்பகலில் நடத்தப்பட்டன.
1943 மேயில் FTP-MOI யில் மனூச்சியோன் ஒரு தலைமைப் பொறுப்புக்கு வந்தபோது, ஜூனுக்கும் செப்டம்பருக்கும் இடையில் சுமார் 115 நடவடிக்கைகளை நடத்திய “முக்கோண கமாண்டோக்கள்” என்ற ஒரு குழுவின் முதல் பிரிவுக்குத் தலைவராக சக்காரியோன் அறிவிக்கப்பட்டார். அலைஅலையான கைதுகள் மற்ற FTP குழுக்களை ஒன்றுமில்லாதவையாக ஆக்கி விட்ட பின்னரும், 1943 கோடையில் பாரிஸில் செயலூக்கத்துடன் எதிர்ப்பை நடத்திக் கொண்டிருந்த கடைசியான குழுவாக மனூச்சியோன் குழு மட்டுமே இருந்தது.
ஜேர்மன் போர்க் கருவிகள் தயாரிப்புத் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக பிரெஞ்சு தொழிலாளர்களை ஜேர்மனிக்கு அனுப்பிக் கொண்டிருந்த, வெறுப்பை சம்பாதித்திருந்த கட்டாய வேலைச் சேவை (Service du travail obligatoire - STO) என்ற ஒரு முகமையின் தலைவராக இருந்த SS ஜெனரல் ஜூலியுஸ் றிட்டார் 1943 செப்டம்பர் 28 அன்று படுகொலை செய்யப்பட்டமை அதன் மிகவும் கவனம்ஈர்த்த நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தது.
பிரெஞ்சு போலிசில் இருந்த அனுதாபிகளின் உதவியுடன், சக்காரியோன் 1943 நவம்பரில் கைதில் இருந்து தப்பினார். 1944 மேயில், பாரிஸ் பகுதியில் இருந்து அவர் போர்தோவுக்கு கொண்டுசெல்லப்பட்டார். 1944 ஜூனில், ஓர்லெயோன் பிராந்தியத்தில் மாக்கி டு லோறிஸ் (maquis de Lorris) இல் (கிராமப்புற கிளர்ச்சிப் போராளிகள்) அவர் இணைந்து, மொன்ரார்ஜி (Montargis) ஐ கைப்பற்றுவதில் பங்குபெற்றார்.
மனூச்சியோன் குழுவில் உயிர்தப்பியவர்கள், PCF இன் ட்ரொட்ஸ்கிச-விரோதக் கொள்கையை அடியொற்றி, முதலாளித்துவ ஆட்சியில் இருந்து பிரான்சையும் ஐரோப்பாவையும் விடுதலை செய்வதில் அல்லாமல், ஆளும் வர்க்கத்தின் குற்றங்களை மூடிமறைத்த போருக்குப் பிந்தைய முதலாளித்துவ ஆட்சி ஒன்றுக்கு அடித்தளம் அமைப்பதில் பங்கேற்கச் சென்றனர். போரின் முடிவில், சக்காரியோன் அதிகாரிப் பதவி நியமனத்தையும் பல்வேறு பதக்கங்களையும் பெற்றார். அதன்பின் அவர் பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ஒரு ஆராய்ச்சியாளராகவும் பணி செய்து கொண்டு, ஒரு தையல் தொழிலாளியாக தனது வேலைக்கும் திரும்பினார்.
மனூச்சியோன் குழுவைக் காட்டிக்கொடுத்தது யார்?
1980களில், பிரான்சுவா மித்திரோனின் சமூக ஜனநாயக/ஸ்ராலினிச கூட்டணி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகள் மற்றும் ஆலை மூடல்களுக்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தின் கோபம் பெருகிச் சென்றதன் மத்தியில், மனூச்சியோன் குழுவை ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) கையாண்ட விதம் தொடர்பாக ஒரு விவாதம் வெடித்தது. போலிஸால் நெருக்கமாக பின்தொடரப்படுகின்ற உண்மையை மனூச்சியோன் குழுவே கூட நனவுடன் அறிந்திருந்த நிலையில், PCF அதனைக் கைவிட்டிருந்ததாக மறைந்த மனூசியோனின் மனைவி மெலினேயும் மார்செலின் (மோன்ட்-வலேரியன் சிறையில் சுட்டுக் கொல்லப்பட்டவர்) சகோதரர் சிமோன் ராஜ்மனும் குற்றம்சாட்டினர்.
1943 இல், மனூச்சியோன் குழுவின் உறுப்பினர்கள், தெற்கு மாகாணங்களுக்கு தங்களை மாற்றுவதற்கு —போராட்டத்தை அங்கே தொடரும் வகையில்— வேண்டினர். PCF மறுத்து விட்டது. அவர்கள் முன்னினும் ஆபத்தான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உத்தரவிடப்பட்ட நிலையில், மனூச்சியோன் தனது கவலைகளை மனைவியிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். PCF இன் தலைமையைக் குறித்துக் கூறுகையில், “அவர்கள் எங்களை மரணத்திற்கு வழிநடத்திச் செல்ல விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன்” என்றார்.
கெஸ்டபோவினால் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சற்று முன்பாக, அவர் தன் மனைவிக்கு அனுப்பியிருந்த பிரபலமான கடிதத்தில், ஜேர்மன் மக்கள் குறித்து தனக்கு எந்த கெட்ட எண்ணமும் இருந்ததில்லை என்பதை வலியுறுத்தியிருந்தார். மனூச்சியோன் எழுதியிருந்தார்: “என்னை மனம்நோகச் செய்தவர்கள் மற்றும் மனம்நோகச் செய்ய விரும்பியவர்கள் அனைவரையும் நான் மன்னிக்கிறேன், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எங்களைக் காட்டிக்கொடுத்த அந்த மனிதனையும், எங்களை விலைபேசி விற்றவர்களையும் தவிர”, இது PCF இன் தலைமையைக் குறிப்பிட்டதாகவே கருதப்படுகிறது.
மெலினே அஸாடோரியோன் மனூச்சியோன்
ஓய்வில் பயங்கரவாதிகள் (Des terroristes à la retraite) என்ற Mosco Boucault இன் 1983 ஆம் ஆண்டு திரைப்படம் —இது தயாரிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிரெஞ்சு தொலைக்காட்சியால் தடை செய்யப்பட்டிருந்தது— மனூச்சியோன் முன்வைத்த, மற்றும் அவரது மரணத்திற்குப் பின்னர், மெலினே ஆல் மீண்டும் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை சரியென நிரூபணம் செய்தது.
PCF இன் தலைமறைவு கிளர்ச்சி இயக்கத் தலைவரான ஜாக் டுக்ளோவுக்கும் (Jacques Duclos) FTP-MOI தலைமைக்கும் இடையிலான ஒரு தொடர்பு அதிகாரியாக இருந்த லூயி குரோனோவ்ஸ்கி (Louis Gronowski), மனூச்சியோன் குழுவைத் தியாகம் செய்யும் முடிவை ஈவிரக்கமற்று பாதுகாத்துப் பேசினார்: “பாதுகாப்பு காரணங்களுக்காக, சில போராளிகளை ஒளிந்து கொள்ள நாங்கள் அனுப்பினோம். ... ஆனால் அங்கே நின்று சண்டையிடுவதற்கு சிலர் தேவையாக இருந்தது. ஆம், ஒவ்வொரு போரிலும் தியாகம் செய்யப்படுகின்ற சிலர் இருக்கவே செய்கிறார்கள்.”
இந்த விவாதத்தில், சக்காரியோன் PCF ஐ பாதுகாக்க தலையிட்டார். Les franc-tireurs de l’Affiche Rouge என்ற 1986 ஆம் ஆண்டு புத்தகத்தில், மெலினே மனூச்சியோனின் குற்றச்சாட்டுகளை அவர் எதிர்த்தார், அதற்குப் பதிலாய், மனூச்சியோனுக்கு முன்பாக பாரிஸ் FTP-MOI (Francs-tireurs et partisans – main-d'œuvre immigrée) இன் படைத் தலைவராக இருந்த போரிஸ் ஹோல்பன் தான் குழுவின் மறைவுக்கான முழுமையான பொறுப்பு என்ற கருத்தை அவர் முன்வைத்தார். சக்காரியோன் அதன்பின் FTP-MOI தொடர்பாக Les Fusillés du Mont-Valérien (1991) மற்றும் Les commandos de l’Affiche Rouge (2012) ஆகிய மேலும் இரண்டு புத்தகங்கள் எழுதினார்.
மனூச்சியோன் குழுவை PCF கையாண்ட விதத்தை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகளின் பின்னால், அங்கே சக்திவாய்ந்த வர்க்க நலன்கள் இருந்தன, இப்போதும் இருக்கின்றன. விடுதலையின் (Liberation) புரட்சிகரப் போராட்டங்களையும் 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்தையும் காட்டிக்கொடுத்திருந்த நிலையில் PCF, முதலாளித்துவ ஆட்சியின் ஒரு அத்தியாவசியமான அடிக்கல் ஆகியிருந்தது. நாஜிசத்திற்கு எதிரான போராட்டத்தை, பிரெஞ்சு ஏகாதிபத்திய அரசியல்வாதிகளுடனான கூட்டணிகளுக்கு இணக்கமான விதத்தில் வெறுமனே ஒரு தேசிய விடுதலைப் போராட்டமாக தவறாக சித்தரித்ததன் மூலமாக, PCF, தொழிலாளர்களின் தன்னெழுச்சியான பாசிச-விரோத மனோநிலைகளை முன்னாள் விச்சி ஆட்சி அதிகாரியான மித்திரோனின் வலது-சாரிக் கொள்கைகளுக்கு கீழ்ப்படுத்துவதற்கு விழைந்தது.
கிளர்ச்சி (Résistance) அமைப்பில் PCF இன் செயல்பாட்டையும் ட்ரொட்ஸ்கிசத்திற்கு அது கொண்டிருந்த குரோதத்தையும் விமர்சனம் செய்வதென்பது, ஒத்துழைப்புவாத முதலாளித்துவங்களை காப்பாற்றுவது என்ற மேற்கு ஐரோப்பிய ஸ்ராலினிஸ்டுகளது கொள்கையை கேள்விகேட்பதையும், ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கான வரலாற்று மாற்றீடாக சோசலிசத்தை முன்வைப்பதையும் உடன் கொண்டதாக ஆகி விடுவதான அபாயத்தை கொண்டிருப்பதாகிறது.
மனூச்சியோன் குழுவின் மறைவைச் சூழ்ந்த அரசியல் மௌனத்தைப் பராமரிப்பதில் ட்ரொட்ஸ்கிசத்துடனும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடனும் முறித்துக் கொண்ட குட்டி-முதலாளித்துவப் போக்குகள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன. பப்லோவாத புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (Ligue communiste révolutionnaire - LCR) மற்றும் பியர் லம்பேரின் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (Organisation communiste internationaliste - OCI) ஆகியவை விடுதலையின் போதான சமூக-ஜனநாயக/ஸ்ராலினிசக் கூட்டணியின் ஒரு தொலைதூர எதிரொலியாக, PS-PCF இடதுகளின் கூட்டை (l’Union de la gauche) ஆதரிப்பது என்ற பிழையான, தேசியவாத முன்னோக்கினை தழுவிக் கொண்டன. மனூச்சியோன் குழுவைப் பற்றிய அவற்றின் எழுத்துக்களில், PS மற்றும் PCF உடனான தமது கூட்டணிகளைத் தொந்தரவு செய்யாத விதத்தில், இடது எதிர்ப்பாளர்கள் உடன் அக்குழு கொண்டிருந்த தொடர்புகளை அவை தணிந்தகுரலில் பேசின அல்லது மூடி மறைத்து விட்டன.
PCF மற்றும் FTP கட்சித் தலைமைகள் ஏன் மனூச்சியோன் குழுவைத் தியாகம் செய்ய முடிவெடுத்தன என்பது இன்னும் முழுமையாக தெளிவுபடுத்தப்படாத பிரச்சினையாக இருக்கிறது. எப்படியிருப்பினும் அது, மாஸ்கோ விசாரணைகளின் போதான அவதூறுப் பிரச்சாரத்திற்குப் பின்னர், ட்ரொட்ஸ்கியின் படுகொலையிலும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய PCF இன் தேசியவாத, முதலாளித்துவ-ஆதரவு கொள்கையிலும் உச்சம்கண்டதாக இருந்த, ஸ்ராலினிசத்தை எதிர்த்த மார்க்சிச மற்றும் சர்வதேசிய எதிர்ப்பை குறிவைத்து நடத்தப்பட்ட அரசியல் படுகொலைகளது பரந்த பிரச்சாரத்தின் பகுதியாக இருந்தது.
வடக்கு பிரான்சில் FTP யின் ஒரு முன்னாள் தளபதியான Roger Pannequin, போருக்குப் பிந்தைய கிளர்ச்சியில் புலம்பெயர்ந்தவர்களது பாத்திரத்தை தணித்துக் காட்டிய PCF இன் முடிவை விமர்சனம் செய்தார்: “உண்மையில், குறுகிய தேசியவாதக் காரணங்களுக்காகவே, குடியேற்றக் குழுக்களது அனுபவம் தணித்துக் காட்டப்பட்டது. இது "FTPF" தான் கிளர்ச்சி செய்தது என்ற கூற அனுமதித்தது. ஆயினும் FTPF ஒருபோதும் இருந்திருக்கவில்லை என்பதை நாம் வலியுறுத்திக் கூறியாக வேண்டும். FTP தான் இருந்தது. நாங்கள் விசுவாசம் குறையாத முழு தேசியவாதிகளாக இருந்ததாகக் காட்டுகின்ற ஒரு முயற்சியில், விடுதலைக்குப் பின்னர் இறுதியில் இருக்கும் 'F' சேர்க்கப்பட்டு விட்டது.
FTPயின் புலம்பெயர்ந்தோர் MOI பிரிவுகளை கையாண்டவிதம் உள்ளிட ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தத்தை மூடிமறைப்பதற்கு PCF செய்த சிடுமூஞ்சித்தனமான சூழ்ச்சித்தந்திரங்களையும் Pannequin விமர்சனம் செய்தார்: “ஒரு தகவல் பரிவர்த்தனை அவசியமென்றபோது, அதைச் செய்வதற்கு MOI பையன்கள் தான் அனுப்பப்பட்டார்கள். …. காட்டிக்கொடுப்பையும் ஹிட்லர்வாதிகளுடனான ஒத்துழைப்பு என்ற ஓசையில்லாத ஆனால் நிஜமான கொள்கையையும் மக்கள் மறக்கச் செய்வதற்காகத்தான், 1942 இல் நடவடிக்கைக்கு முதலில் தலையை விடுவதற்கும், பைத்தியக்காரத்தனமிக்க நடவடிக்கைகள், எல்லாருக்கும் முதலில், புலம்பெயர்ந்தவர்களால் நடத்தப்படுவதற்கும், உத்தரவளிக்கப்பட்டது.
ஸ்ராலினிச தலைமை ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு எதிரான அதன் கொலைவெறித்தனமான பழிவாங்கலை போர் மற்றும் நாஜி ஆக்கிரமிப்பு சமயத்துடன் நிறுத்திக் கொண்டு விடவில்லை. மனூச்சியோன் குழுவின் கூறுகளது ட்ரொட்ஸ்கிச அனுதாபங்கள் குறித்து 1943 ஆகஸ்டில் எச்சரிக்கப் பெற்று, முன்னாள் PCF நிர்வாகியான Auguste Lecoeur கூறுவதன் படி, PCF இன் தலைவர்கள், தொழிலாள வர்க்கத்தில், ஸ்ராலினின் குற்றங்களுக்குக் குரோதமான ஒரு பாரிய கிளர்ச்சி இயக்கம் எழுந்து விடும் அபாயத்தை நசுக்குவதற்கு எதனையும் செய்வதற்கு ஆயத்தமாகவே இருந்திருந்தார்கள்.
உண்மையில், ஸ்ராலினிச கிளர்ச்சிப் பிரிவின் தலைவராக இருந்த ஜாக் டுக்ளோ, ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கும் அவரது காரியதரிசிகளான லியோன் செடோவ், ருடோல்ஃப் கிளெமெண்ட் மற்றும் எர்வின் வொல்ஃப் ஆகியோரது படுகொலைகளுக்கும் இட்டுச் சென்ற நான்காம் அகிலத்திற்கு எதிரான படுகொலை தயாரிப்பில் இணைந்து இரகசிய நடவடிக்கைகளில் பயிற்சியளிக்கப்பட்டவராக இருந்தார்.
பியேத்ரோ திரெஸோ
இந்தப் படுகொலைகள், இரண்டாம் உலகப் போரின் சமயத்தில், பிரெஞ்சு கிளர்ச்சிக்குழுவுக்குள்ளாக (French Resistance), இத்தாலிய ட்ரொட்ஸ்கிஸ்டான பியேத்ரோ திரெஸோ (Pietro Tresso) வின் ஸ்ராலினிசப் படுகொலை குற்றங்களுடன் தொடர்ந்தது. பிலாஸ்கோ (Blasco) என்று அறியப்பட்ட அவர், அண்டோனியோ கிராம்சி உடன் சேர்ந்து, இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு ஸ்தாபக உறுப்பினராய் இருந்தார். இடது எதிர்ப்பாளர்கள் உடன் இணைந்திருந்த அவர், 1942 இல் பிரெஞ்சு போலிசால் கைது செய்யப்பட்ட சமயத்தில், அவர் பிரான்சில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு உறுப்பினராக இருந்தார்.
கிளர்ச்சிப் பிரிவு, Puy-en-Velay சிறையில் இருந்து டசன்கணக்கிலான போராளிகள் மொத்தமாய் தப்பிப்பதற்கு ஒழுங்கமைத்த பின்னர், PCF இன் உத்தரவில் —ஸ்ராலினே உத்தரவிட்டிருக்க சாத்தியமிருந்தது— 1943 அக்டோபரில் கொல்லப்பட்டு பிளாஸ்கோ மரணமடைந்தார். Pierre Salini-Ségal, Abram Sadek மற்றும் Jean Reboul ஆகிய இன்னும் மூன்று ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அவருடன் சேர்த்து கொல்லப்பட்டனர், அவர்கள் மலைப்பகுதியான Auvergne பிராந்தியத்தில் Wodli யின் FTP maquis (கிராமப்புற கிளர்ச்சிப் படை) இல் சேர்ந்து போராடிக் கொண்டிருந்தனர்.
பிளாஸ்கோவும் அவரது தோழர்களும் கொலை செய்யப்பட்டபோது, PCF மனூச்சியோன் குழுவை "தியாகம் செய்ய" முடிவு செய்தது. ஒரு மாதத்திற்குப் பின்னர், மனூச்சியோன் குழு, இராணுவ ஒழுங்கை மீறியதற்காக தண்டிக்கப்படுவதற்கு ஆளாகத்தக்க நிலையிலும் பாரிஸிலேயே தொடர்ந்து இருக்கும்படி PCF ஆல் உத்தரவிடப்பட்டு, பிரெஞ்சு உளவுத்துறையால் சிறைப்பிடிக்கப்பட்டது.
சக்காரியோனின் வாழ்க்கையின் இறுதியிலான அவரது அரசியல் தலைவிதி, நவ-பாசிசத்தின் எழுச்சிக்கு முகம்கொடுக்கும் சமயத்தில், ஸ்ராலினிசமும் பப்லோயிசமும் எவ்வாறு தொடர்ந்தும் இன்று பரந்த மக்களை நிராயுதபாணியாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதனை விளங்கப்படுத்துகிறது.
ஆர்ஸென் சக்காரியோன் 2017 ஆம் ஆண்டில்
2005 இல், சக்காரியோன் மரியாதைக்குரிய படையணி (Légion d’honneur) விருதை ஏற்றுக் கொண்டார், 2012 இல் நிக்கோலோ சர்க்கோசியால் —விச்சியின் வாரிசான நவ-பாசிச தேசிய முன்னணியின் கொள்கைகளையும் புலம்பெயர்ந்தோர்-விரோத வாய்வீச்சையும் கையிலெடுத்துக்கொள்வதில் வித்தகராய் இருந்த வலது-சாரி ஜனாதிபதி— ஒரு Légion d’honneur அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். 2017 ஏப்ரலில் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டினால் —யூதர்களுக்கும் கிளர்ச்சிப் போராளிகளுக்கும் எதிராய் விச்சி ஆட்சியால் பயன்படுத்தப்பட்டதான “குடியுரிமை பறிப்பு” நடவடிக்கையை மீண்டும் பிரான்சின் அரசியல்சட்டத்தில் பொறிப்பதற்காய் விரும்பியவர்— Légion d’honneur இன் ஒரு தளபதியாக சக்காரியோன் நியமிக்கப்பட்டார்.
ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்புகள் மற்றும் அதனால் உருவாக்கப்பட்ட குழப்பத்தையும் தாண்டி, மனூச்சியோன் குழு புகழுக்கு நற்தகுதி பெற்றதாகவே இன்றும் திகழ்கிறது.
அதன் சர்வதேசியவாதமும் இடது எதிர்ப்பாளர்கள் உடன் அது கொண்டிருந்த தொடர்புகளும், வரவிருக்கும் காலகட்டத்தில், போராட்டத்தில் நுழைகின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது கவனத்தை அதிகமாய் ஈர்ப்பதாக அமையும். உலக முதலாளித்துவத்தின் 1930களுக்குப் பிந்தைய மிக ஆழமான பொருளாதார மற்றும் புவியரசியல் நெருக்கடியின் மத்தியில், பிரெஞ்சு அரசியல் ஆட்சியின், மற்றும் ஸ்ராலினிச மற்றும் பப்லோவாத சக்திகளின் திவால்நிலையானது, முன்னெப்போதினும் தெளிவாகி இருக்கிறது. மனூச்சியோன் குழுவின் ஆரம்பகால கம்யூனிச விசுவாசங்களும், அதன் அரசியல் போராட்டமும் மற்றும் தியாகங்களும், புரட்சிகர தீரம் மற்றும் மனஉறுதிக்கான ஒரு சக்திவாய்ந்த உதாரணமாய் இப்போதும் திகழ்கின்றன.