Print Version|Feedback
Why the US ruling class mourns John McCain
ஜோன் மெக்கெயினுக்காக அமெரிக்க ஆளும் வர்க்கம் ஏன் கவலைப்படுகின்றது
Patrick Martin
27 August 2018
இறந்தவரை பற்றி கூடாத வார்த்தைகளை கூறாதீர்கள் என்று இலத்தீன் வழக்கு மொழியில் ஒரு பிரபலமான பழமொழி உண்டு. ஆனால் ஒருவரின் மரணம், அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களால் இந்தளவுக்கு எல்லாவிடத்திலும் பெருமைப்படுத்தப்படும் தருணமாக மாறும் போது, அரிசோனா செனட்டர் ஜோன் மெக்கெயின் விடயத்தைப் போல, அதை திருத்தம் வேண்டியதாகின்றது. இப்போது இறந்து போனவர் ஓர் இராணுவவாதியாகவும் மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்தின் ஆதரவாளராகவும் மற்றும் அதுபோன்ற கொள்கைகளை கூடுதலாக ஊக்குவிப்பதற்காக வெளிப்படையாகவே புகழ்ந்துபாடிய ஒரு நீண்ட முன்வரலாறைக் கொண்டிருந்தார் எனும்போது இது இன்னும் இன்றியமையாத விதத்தில் அவசியமாகி விடுகிறது.
ஞாயிற்றுக்கிழமை ஐந்து தொலைக்காட்சி வலையமைப்புகளின் நேர்காணல் நிகழ்ச்சிகளில் பெரும்பான்மை, செல்வசெழிப்பான பத்திரிகையாளர்கள், பெருவணிக அரசியல்வாதிகள், ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியினரால் மெக்கெயின் வாழ்க்கை மற்றும் தொழில்வாழ்வு குறித்து பேசுவதற்கும், மனதார அவரைப் பற்றிய பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதற்குமாக அர்பணிக்கப்பட்டிருந்தன. “Meet the Press” நிகழ்ய்ச்சியை நடாத்தும் சுக் ரோட் தனது நிகழ்ச்சியில் தனது 36 வருட அரசியல் வாழ்வில் மக் கெயின் 73 தடவை தோன்றியதாக குறிப்பிட்டார்.
மெக்கெயின் ஒரு வலதுசாரி குடியரசு கட்சியாளராக இருந்தார், ஆனால் அவரது அரசியல் முன்வரலாறு மீதான இந்த பலமான நினைவஞ்சலியோ ஜனநாயக கட்சியினரிடம் இருந்து வருகிறது. செனட் சபையின் சிறுபான்மை பிரிவு தலைவர் சார்ல்ஸ் ஸ்கூமர் அமெரிக்க செனட்டின் ருஸ்செல் அலுவலக கட்டிடத்தைப் பெயர் மாற்ற முன்மொழிந்தார். ஜிம் குரோவ் இனப்பாகுபாட்டைப் பாதுகாத்த ஜனநாயக கட்சியாளர் ஜோர்ஜியாவின் ரிச்சார்ட் ருஸ்செல் இன் பெயருக்குப் பதிலாக, வியட்நாம், மத்திய அமெரிக்கா, யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா, யேமன், இதர பிற நாடுகள் மீதான போரைப் பாதுகாத்த ஒரு குடியரசு கட்சியினரின் பெயர் இப்போது அக்கட்டிடத்திற்கு வைக்கப்படலாம்.
பிரதிநிதிகள் சபை சிறுபான்மை பிரிவு தலைவர் நான்சி பிலோசி ABC இன் "இந்த வாரம்" நிகழ்ச்சியில் பேசுகையில், “இப்போது நான் மனமுடைந்துள்ளேன். இந்த மாமனிதரின் இழப்பால் அமெரிக்காவே கண்ணீரில் மூழ்கியுள்ளதாக நினைக்கிறேன்,” என்றார். “ஜோன் மெக்கெயின் ஓர் அமெரிக்க மாவீரர், கண்ணியம் மற்றும் மரியாதை கொண்ட மனிதர் என்பதோடு என் நண்பரும் ஆவார். அவர் அமெரிக்க செனட்டுக்கு மட்டும் இழப்பல்ல, மாறாக நல்லிணக்கம் மற்றும் சுதந்திரத்தை மதிக்கும் எல்லா அமெரிக்கர்களுக்கும் இழப்பாக இருக்கும்,” என்று செனட் உறுப்பினர் பேர்ணி சாண்டர்ஸ் ட்வீட் செய்தார்.
ஆளும் உயரடுக்கிற்கு நாக்கைத் தொங்க போட்டு மண்டியிடும் மற்றொரு குணத்தைக் காட்சிப்படுத்தும் விதத்தில், “சோசலிசவாதி" Alexandria Ocasio-Cortez ட்வீட் செய்தார்: “ஜோன் மெக்கெயினின் மரபியம் மனித கண்ணியத்திற்கும், அமெரிக்க சேவைக்கும் ஓர் ஈடிணையற்ற எடுத்துக்காட்டைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. சென். கென்னடி உடனான அவரது ஆழ்ந்த நட்புறவில் இருந்து அரசாங்கத்தில் மனிதாபிமானத்தின் பலம் குறித்து பலவற்றை நான் ஒரு பயிற்சி பெறுநராக இருந்து கற்றுக் கொண்டேன். அவர் பலவற்றை, நிறைய தன்னகத்தே கொண்டிருந்தார். அவர் குடும்பத்துக்காக நான் பிரார்த்திப்பேன்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஜோன் மெக்கெயினின் "மரபியம்" எதை உள்ளடக்கி உள்ளது? "மனித கண்ணியம் மற்றும் அமெரிக்க சேவைக்கு ஓர் ஈடிணையற்ற எடுத்துக்காட்டை" அவர் எவ்வாறு வழங்கினார்?
மெக்கெயின் நான்காண்டுகள் பிரதிநிதிகள் சபையிலும் 32 ஆண்டுகள் அமெரிக்க செனட் சபையிலும் செலவிட்டவர், ஆனால் பரந்த பெருந்திரளான அமெரிக்க மக்களுக்கு சாதகமான ஒரேயொரு சட்டமசோதாவில் அவர் சம்பந்தப்பட்டிருந்ததை மேற்கோளிடுவது சாத்தியமில்லை. உள்நாட்டு விவகாரங்களைப் பொறுத்த வரையில், டாக்டர். மார்டீன் லூதர் கிங்கை கௌரவிக்கும் ஒரு தேசிய விடுமுறைக்கான சட்டமசோதாவுக்கு எதிராக அவர் (பிரதிநிதிகள் சபையில்) வாக்களித்ததற்காக நன்கறியப்பட்டவர். செனட்டில், “கீட்டிங் ஐவரில்" குடியரசு கட்சியைச் சேர்ந்த ஒரேயொருவராக இருந்தார், அந்த ஐந்து செனட்டர்களும் 1987 இல் கடன் மோசடி மற்றும் சேமிப்புகளில் மோசடி செய்த சார்லஸ் கீட்டிற்குச் சார்பாக மத்திய நெறிமுறை ஆணையகங்களில் ஆதரவை திரட்டியவராகும்.
இந்த அத்தியாயத்தால் ஏற்பட்ட அரசியல் சங்கடம், அரசியல் தேர்தல் பிரச்சாரங்களுக்கான பெருநிறுவன பங்களிப்புகள் மீது குறைந்தபட்சம் அடையாள மட்டுப்படுத்தல்களை ஸ்தாபிப்பதற்கு ஒரு தசாப்த-காலம் நீண்ட முயற்சியில் அவர் சம்பந்தப்படுவதற்கு இட்டுச் சென்றது, இதில் செனட் நெறிமுறை குழுவின் தடையாணைகளை மெக்கெயின் மயிரிழையில் தடுத்தார். ஆனால் மெக்கெயின்-ஃபின்கோல்டு சட்டமசோதா, அது இவ்வாறு தான் அறியப்பட்டிருந்தது, இறுதியில் உச்சநீதிமன்றத்தால் அகற்றப்பட்டது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருநிறுவனங்களால் விலைக்கு வாங்கப்படுவது மீதிருந்த வரம்புகளை அது "பேச்சு சுதந்திர" மீறலாக கூறி நிராகரித்தது. மத்திய அரசின் சமூக செலவினங்களை வெட்டுவதற்கான Gramm-Rudman சட்டம், ஜனாதிபதி பில் கிளிண்டன் மீதான பதவிநீக்க குற்றவிசாரணை, பெருவணிகங்கள் மீதான நெறிமுறைகளைத் தளர்த்தும் மற்றும் செல்வந்தர்கள் மீதான வரிகளை வெட்டும் நடவடிக்கைகள் (ஒருசிலவற்றைத் தவிர) உட்பட, அவர் தொழில்வாழ்க்கை முழுவதும், மெக்கெயின் குடியரசு கட்சியின் வலதுக்கு ஒரு நம்பகமான வாக்காக விளங்கினார்.
எவ்வாறிருப்பினும் வெளியுறவு கொள்கையில் அவரது இயல்பான போர்வெறியே மெக்கெயினின் தொழில்வாழ்வில் மேலோங்கிய அம்சமாக இருந்தது. அவர், ஒரு போர் மாற்றி ஒரு போரை, ஒரு தலையீடு மாற்றி ஒரு தலையீட்டை ஆதரித்தார், எப்போதும் படைகளது பிரயோகத்தை அமெரிக்க வெளியுறவு கொள்கையின் பிரதான அம்சமாக ஊக்குவித்துக் கொண்டிருந்தார் என்பதோடு, பென்டகனுக்கு எரியூட்ட அதிகபட்ச ஆதாரவள ஒதுக்கீட்டிற்கு எப்போதும் வக்காலத்துவாங்கினார். இந்தாண்டுக்கு மேல் அவர் உயிர் பிழைப்பது சாத்தியமில்லை என்று அவரது மூளை புற்றுநோயை ஆய்வு செய்தவர்கள் தெளிவுபடுத்தியதும், அவரைக் கௌரவப்படுத்தும் விதத்தில், செனட்டின் அவரது சக-உறுப்பினர்கள், பென்டகன் வரவுசெலவு திட்டக்கணக்கு மசோதாவின் 2018 ஆம் ஆண்டு பதிப்புக்கு ஜோன் மெக்கெயின் தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் என்று பெயரிட்டனர்.
இராணுவவாதத்துடனான மெக்கெயினின் அடையாளம் அவரது குடும்ப பின்னணியுடன் தொடங்கியது: அவர் தந்தையும் பாட்டனாரும் இருவருமே அட்மிரல்கள், மேலும் அமெரிக்க கப்பல்படையில் அவர்களின் பெயரில் இப்போது போர்க்கப்பல்களும் உள்ளன. கப்பற்படை பயிலகத்திலிருந்து பட்டம் படித்து வந்த மெக்கெயின், ஒரு விமானி ஆனார், வியட்நாமில் அவர் பிடிபட்டு ஐந்தரையாண்டுகள் சிறையில் அடைக்கப்பட இது வழிவகுத்தது. அங்கே அவர் முகங்கொடுத்த சூழ்நிலைகள் மிகவும் கஷ்டமானது என்பதில் எந்த ஐயமும் இல்லை, ஆனால் பெரிதும் நிராயுதபாணியான மக்கள் மீது குண்டுவீசியதற்காக தான் அவர் போர் கைதியாக பிடிக்கப்பட்டார் என்ற உண்மை எந்தவொரு அனுதாபத்தையும் சிதைத்துவிடும், வரலாற்றில் மிகப்பெரிய போர் குற்றங்களில் ஒன்றான வியட்நாம் மீதான அமெரிக்காவின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் அவர் முன்னணி வரிசையில் பங்கெங்கெடுத்திருந்தார்.
வியட்நாமியர்களின் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகள் குறித்து 2000 இல் மெக்கெயின் அவர்களுக்கு சொற்பொழிவாற்ற முயன்றதும், உலக சோசலிச வலைத் தளம் ஒரு கருத்துரையில் பின்வருமாறு குறிப்பிட்டது:
மெக்கெயின் வியட்நாமியர்களுக்கு விளக்கப் பேருரைகளை வழங்குகின்ற வேளையில், அமெரிக்க இராணுவப் படைகள் பெருந்திரளான மக்களைப் படுகொலைகள் செய்ததை, அப்பாவி மக்கள் மீது குண்டுவீசியதை, அந்நாட்டின் அரைவாசி பகுதிகளைச் சின்னாபின்னமாக்கியதை, கற்பழிப்பு மற்றும் சித்திரவதைகள் மேற்கொண்டதை, கிராமங்களை எரித்தும், குழந்தைகளைச் சுட்டுக் கொன்றும், ஹெலிகாப்டர்களில் இருந்து கைதிகளைத் தள்ளிவிட்டும், இறந்தவர்கள் மற்றும் உயிருடன் இருந்தவர்களின் காதுகளைத் துண்டித்து அவற்றை நினைவுப்பொருட்களாக்கி மற்றும் அவற்றை பீர் கேன்களுக்கு பரிமாற்றம் செய்ததையும் நாம் நினைவுகூர்வோம். இதுபோன்ற குற்றங்களை ஒவ்வொரு சிப்பாயும் தனிப்பட்டரீதியில் நடத்தவில்லை என்றாலும், ஒட்டுமொத்தமாக அந்த இராணுவ தலையீடு ஒரு காட்டுமிராண்டித்தனமான, ஜனநாயக-விரோத, ஏகாதிபத்திய குணாம்சத்தைக் கொண்டிருந்ததால், அது தவிர்க்கவியலாமல் அதுபோன்ற வக்கிரமான நடவடிக்கையில் வெளிப்பாட்டைக் கண்டது.
வாஷிங்டன் மற்றும் ஹனாய்க்கு இடையே பாரீஸ் உடன்படிக்கையைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டதும், மெக்கெயின் ஒரு “போர் வீரராக” தாய்நாடு திரும்பினார். 1980 இல் அவர் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த பின்னர், மெக்கெயின் அரிசோனாவின் பல கோடி மில்லியனரான பீர் வினியோகஸ்தரின் மகள் Cindy Lou Hensley ஐ திருமணம் செய்து கொண்டார். இப்போது பணத்தில் மிதந்த மெக்கெயின் குடியரசு கட்சி அரசியலில் தொழில் வாழ்வைத் தொடங்க அரிசோனா நகர்ந்தார். 1982 இல் முதலில் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1983 இல் அமெரிக்காவின் கிரனாடா படையெடுப்பையும், எல் சால்வடார் மற்றும் குவாண்டிமாலாவில் படுகொலை சக்திகள் மற்றும் நிக்கரகுவா உடனான போரில் கொன்ட்ரா பயங்கரவாதிகள் உட்பட மத்திய அமெரிக்காவில் பாசிசவாத சக்திகளை ஆதரித்த ரீகன் நிர்வாக கொள்கையையும் ஆதரித்தார் (அவர் பல ஆண்டுகள் உலக கம்யூனிஸ்ட்-எதிர்ப்பு கழகத்தின் அமெரிக்க பிரிவான உலக சுதந்திரத்திற்கான அமெரிக்க கவுன்சிலில் இருந்தார்). 1986இல் அமெரிக்க செனட்டில் பாரி கோல்ட்வாட்டரை ஜெயித்து வந்ததும், அவர் முதலாம் புஷ் நிர்வாகத்தின் 1989 பனாமா படையெடுப்பையும், 1990-91 இல் ஈராக்கிற்கு எதிரான முழு அளவிலான அமெரிக்க போரையும் ஆதரித்தார், இதில் கட்டாய இராணுவச் சேவையில் சேர்க்கப்பட்ட நூறாயிரக் கணக்கான ஈராக்கியர்கள் அமெரிக்க குண்டுகள், ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளுக்கு எரிந்து சாம்பலானார்கள்.
சில ஆரம்ப தயக்கங்களுக்குப் பின்னர், மெக்கெயின் சேர்பிய படைகள் மீது குண்டுவீசுவது உட்பட பொஸ்னியா மீதான கிளிண்டன் நிர்வாகத்தினது இராணுவ அச்சுறுத்தல்களை ஆதரித்தார், பின்னர் 1999 இல் சேர்பியா மீதான முழு அளவிலான குண்டுவீச்சுக்கு உற்சாகத்தை வெளிப்படுத்திய அவர், கொசோவோவில் அமெரிக்க நலன்களை ஆதரிப்பதில் அதன் இராணுவ நடவடிக்கைகள் மீது எந்த மட்டுப்படுத்தல்களையும் அது ஏற்காது என்று அறிவித்தார்: “நாங்கள் அதில் ஈடுபட்டுள்ளோம், அதை நாங்கள் வென்றே ஆக வேண்டும். இதன் அர்த்தம், நாங்கள் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தியாக வேண்டும்,” என்றார்.
நடைமுறையளவில் ஒவ்வொரு ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியாளரைப் போலவே, இவரும் அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட போரான, இப்போது அதன் 17 ஆம் ஆண்டின் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு போரைத் தொடங்கிய, ஆப்கானிஸ்தான் மீதான 2001 படையெடுப்பை ஆதரித்தார்.
இரண்டாம் ஈராக்கிய போரில் தான் மெக்கெயின் மிகவும் முக்கியமான மற்றும் பிற்போக்குத்தனமான பாத்திரம் வகித்தார், ஜனநாயக கட்சியாளர் ஜோ லெபர்மன் உடன் சேர்ந்து 1998 ஈராக் விடுதலை சட்டத்திற்கு உடனிருந்து ஆதரவளித்த இவர், முதலில் கிளிண்டன் பின்னர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் கீழ் ஈராக் மீதான குண்டுவீச்சை ஆமோதித்ததுடன், 2003 படையெடுப்புக்கு முன்னிலையிலிருந்து உற்சாகப்படுத்தி, பின்னர் நீடித்த அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது இன்னும் ஆக்ரோஷமாக படைகளைப் பிரயோகிக்க அழுத்தமளித்தார், இது 2006-2007 இல் கூடுதல் துருப்புகளை அனுப்புவதற்கான புஷ்ஷின் "கொதிப்புக்கு" வித்திட்டது.
சதாம் உசேனுக்குப் பயங்கரவாதத்துடன் தொடர்பிருந்ததாக கூறப்பட்டதற்கும்; அவர் "பாரிய பேரழிவு ஆயுதங்களை" வைத்திருந்தார் என்பதற்கும்; ஈராக்கில் "ஜனநாயகத்தை" ஸ்தாபிப்பதற்கான விருப்பம்; இறுதியில் "ஸ்திரப்பாட்டை" காப்பாற்ற வேண்டியிருக்கிறது என்பதற்கும், அதாவது அமெரிக்காவின் ஈராக் அழிப்பின் விளைவுகளை ஒரு செயல்படும் சமூகமாக கையாள்வதற்கு, புஷ் நிர்வாகம் அதன் போர் பிரச்சாரத்திற்கு அடித்தளமாக எந்தெந்த பொய்யைத் தேர்ந்தெடுத்தாலும் மெக்கெயின் அதற்கு முழு மூச்சுடன் ஆதரவளித்தவர்களில் ஒருவராக இருந்தார்.
அவர் பாதையில், மெக்கெயின் 2003 இல் வட கொரியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை, 2007 இல் ஈரானில் அமெரிக்க தலையீடு, 2008 இல் ரஷ்யா மற்றும் காகசஸ் குடியரசுக்கு இடையிலான போரில் ஜோர்ஜியாவுக்கான அமெரிக்க ஆதரவு (இவ்வேளையில் ஆதரவைக் காட்டுவதற்காக அவர் மனைவி சின்டியை Tbilisi க்கு அனுப்பி வைத்தார்) ஆகியவற்றுக்கு வக்காலத்து வாங்கவும் அவருக்கு நேரமிருந்தது.
இறுதியில் 2008 இல், மெக்கெயின் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நின்றார். ஏற்கனவே மோசமான உடல்நிலையில் இருந்த அந்த 71 வயது வேட்பாளர், பாசிசவாத முட்டாள் சாரா போலினை அவரது உதவி ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்து அவரின் "தேச பக்தியை" எடுத்துக்காட்டினார்.
மெக்கெயினின் 2008 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் தோற்கடிக்கப்பட்டது, பகுதியாக இது ஏனென்றால் ஈராக் போருக்கு மக்களிடையே எதிர்ப்பு இருந்த நிலையில், அதனுடன் அவர் மிகவும் அடையாளம் காணப்பட்டிருந்தார், மேலும் செப்டம்பர் 2008 நிதியியல் நெருக்கடியின் போது, வங்கிகளுக்கு முழு அளவிலான மத்திய அரசின் பிணையெடுப்புக்கான வோல் ஸ்ட்ரீட் கோரிக்கைகளுக்கு ஒபாமா அளவுக்கு அதே வேகத்தில் விடையிறுத்தார் என்பதும் அவர் தோல்விக்கு பகுதியாக காரணமாக இருந்தது.
ஒபாமா நிர்வாகம் நெடுகிலும், ஜனநாயக கட்சியின் அந்த ஜனாதிபதி லிபியாவில் இராணுவ பலத்தைப் பயன்படுத்திய போதும், அல்லது தென் சீனக் கடலில் அதை அச்சுறுத்திய போதும் மெக்கெயின் அவரின் ஓர் உறுதியான ஆதரவாளராக இருந்தார் என்பதோடு, சிரியாவில் ஒபாமா பின்வாங்கிய போது அக்கொள்கை மீதான ஒரு விமர்சகராக இருந்தார். மெக்கெயினும் ஜோன் கெர்ரியும் லிபியாவில் போர் நடாத்தும் உத்தரவு ஆணைக்கு ஒரு செனட் தீர்மானத்தை அறிமுகப்படுத்தியதோடு, மெக்கெயின் "இன்னும் பலமான பாதையைப்" பயன்படுத்துவதற்காக அமெரிக்க விமான பலத்திற்கு அழைப்புவிடுத்தார். செப்டம்பர் 2013 இல், சிரியாவில் "போர்களத்தின் வேகத்தை மாற்றும்" மற்றும் பஷர் அல்-அசாத் ஆட்சியை எதிர்க்கும் படைகளைப் பலப்படுத்தும் இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ஆதரவை வழங்குவதற்கான செனட் வெளியுறவு விவகாரக் குழு நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தை மெக்கெயின் ஆதரித்தார். அவர் ஈராக் மற்றும் சிரியாவில் மீண்டும் மீண்டும் ISIS க்கு எதிரான அமெரிக்க ஆதரவிலான போருக்கு "அதிக தரைப்படைகளை" கோரினார்.
அக்டோபர் 2016 இல், ஜனநாயக கட்சி அதன் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ரஷ்யா "குறுக்கிட்டதாக" குற்றஞ்சாட்டுவதில் ஒருமுனைப்பட்டிருந்த வேளையில், மெக்கெயின் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் ஒரு துணை-தலையங்க கட்டுரை எழுதினார், அதில் அவர் "ஈவிரக்கமின்றி கண்மூடித்தனமாக குண்டுவீசி" ரஷ்யா சிரியாவில் "எண்ணற்ற அப்பாவி பொதுமக்களைப் படுகொலை" செய்திருப்பதாக குற்றஞ்சாட்டினார். ஒரு மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்றதுடன் மெக்கெயினால் உத்வேகத்துடன் ஆதரித்திருந்த "அதிர்ச்சியூட்டி அச்சுறுத்தும்" ஈராக் நடவடிக்கையுடன் ஒப்பிடுகையில் ஒரு சிறிய பாதிப்பே ஏற்படுத்தியிருக்கும் தாக்குதலுக்காக வடக்கு வியட்நாம் மீது குண்டு வீசிய அந்த முன்னாள் குண்டுவீச்சாளர் ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டுவதைவிட குறைந்த எதிர்முரணானதானது எதுவும் இருக்கமுடியாது.
ஜனநாயக கட்சியில் அவரது எதிர்ப்பாளர்கள் என்பவர்களும் கூட மெக்கெயினின் மரபியத்தை அரவணைப்பதை நாம் குறிப்பிட்டுள்ளோம். இது, 2016 அமெரிக்க தேர்தல்களில், ஜனநாயக கட்சி மற்றும் பெரும்பான்மை இராணுவ-உளவுத்துறை எந்திரத்தால் முடுக்கிவிடப்பட்டு, ரஷ்யா குறுக்கிட்டதாக கூறப்படும் போலி குற்றச்சாட்டுக்களை வெறுமனே மெக்கெயின் ஆதரித்தார் என்பதால் மட்டுமல்ல, அங்கே கெர்ரி மற்றும் மெக்கெயினுக்கு இடையே பின்புல விவாதங்களும் இருந்தன, அதில் அந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோர்ஜ் டபிள்யு. புஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை எதிர்க்க, இரண்டு கட்சிகளின் சார்பான ஒரு ஜனாதிபதி வேட்பாளரை கொண்டு வருவதற்கும், மெக்கெயினை துணை-ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட செய்வதற்கும் அறிவுறுத்தி இருந்தார். மெக்கெயின் இந்த யோசனையை ஏற்றுக் கொள்ளவிருந்தார் என்றாலும், இறுதியில் குடியரசு கட்சியினருடனேயே இருக்க முடிவெடுத்தார்.
2007 இல், குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளராக நிற்பதற்கான அவரது இரண்டாவது பிரச்சாரம் அதன் ஆரம்ப கட்டத்திலேயே தடுமாறிக் கொண்டிருந்த போது, ஈராக் போருக்கான எதிர்ப்பு அதிகரித்து வருவது குறித்து CBS இன் "60 நிமிடங்கள்" நிகழ்ச்சியில் மெக்கெயின் நேர்காணல் செய்யப்பட்டார். “நீங்கள் யோசிப்பது சரியென்பதை நிறுத்துவிட்டு, பெரும்பான்மை அமெரிக்க மக்கள் விரும்புவதை நீங்கள் எந்த தருணத்தில் செய்யத் தொடங்குவீர்கள்?” என்று அவரிடம் கேட்கப்பட்டது. “பெரும்பான்மை அமெரிக்க மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதில் நான் உடன்படவில்லை,” என்றவர் பதிலளித்தார். இன்றியமையாத விதத்தில் ஜனநாயகத்தின் அடித்தளமே மக்களின் இறையாண்மை என்பதை நிராகரித்த இந்த பதிலை, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் "மெக்கெயினின் அருமையான தருணம்" என்று குறிப்பிட்டு பாராட்டியது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பாதுகாப்பதற்கான இந்த கேள்விக்கிடமற்ற அர்ப்பணிப்பிற்குத்தான் ஒட்டுமொத்த அமெரிக்க ஆளும் உயரடுக்கும் மெக்கெயினை நேசித்து நிற்கிறது, இதனால் தான் அது முகஸ்துதியை இவ்வாரயிறுதியில் வாரியிறைத்துக் கொண்டிருக்கிறது.
கட்டுரை ஆசிரியர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:
McCain in Vietnam: the ugly face of American imperialism
[3 May 2000]
John McCain in Ann Arbor: a cowardly evasion on US war crimes
[9 December 2005]
John McCain at VMI: A blunt statement of US imperialism’s stake in Iraq
[13 April 2007]