Print Version|Feedback
වතු කම්කරුවෝ වැඩි වැටුප් ඉල්ලා විරෝධතාවයේ යෙදෙති
தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்
M. Thevarajah
23 August 2018
சம்பளம், போதியளவு சமூக மற்றும் வேலை நிலைமைகளை கோரி, அக்கரப்பத்தனை வேவர்லி தோட்டத்தைச் சேர்ந்த கருப்பையா தர்மலிங்கம், கிளாஸ்கோ தோட்டத்தினைச் சேர்ந்த சுப்பையா சத்தியோந்திரராஜா ஆகிய இரு தொழிலாளர்கள் ஆகஸ்ட் 11 அன்று ஆரம்பித்த போராட்டத்துக்கு ஆதரவாக, அத்தோட்டத்தைச் சேர்ந்த 2,000 தொழிலாளர்கள் ஆகஸ்ட் 14 அன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் டயகம–தலவாக்கலை பாதையை மூடி ஒரு மணிநேரம் மறியல் போராட்டமும் நடத்தினர்.
அடிப்படைச் நாள் சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரி, தோட்டக் கம்பனிகளுக்கு சாதகமாக உள்ள சம்பள கூட்டு ஒப்பந்தத்தை அகற்று, தோட்டத் தொழிற்சாலைகளை மூடுவதை நிறுத்து, போதியளவு சமூக நலன்புரி வசதிகள் வேண்டும், நோயாளர் ஊர்தி வேண்டும் போன்ற கோரிக்கைகளை இந்த தொழிலாளர்கள் முன்வைத்துள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களின் தற்போதைய அடிப்படை ஊதியம் 500 ரூபாவாகும். பெரும்பான்மையான தோட்டத் தொழிலாளர்கள் மலசல கூடம், சுத்தமான குடிநீர், வாழ்க்கை நடத்த பொருத்தமான வீட்டு வசதிகள் கூட இல்லாத நிலையில் வாழ்கின்றனர். ஆபத்தான நிலையிலுள்ள நோயாளர்கள் தோட்ட லாரிகளிலேயே பிரயாணம் செய்ய வேண்டியுள்ளது.
2016ல் தோட்டக் கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன், தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபா அடிப்படைச் சம்பளத்துக்கான கோரிக்கையை முன்வைத்திருந்தனர். அதற்காக தொழிலாளர்கள் நடத்திய பிரச்சாரப் போராட்டங்களை தொழிற்சங்க தலைமைகள் குழப்பியடித்தனர். தொழிலாளர்களின் கோரிக்கைக்கு மாறாக, 450 ரூபாயாக இருந்த அடிப்படைச் சம்பளத்தை வெறும் 50 ரூபாவால் அதிகரிப்பது மற்றும் உற்பத்தி திறனை உயர்த்துவது என்ற கடுமையான நிபந்தனைகளுடன் சம்பள கூட்டு ஒப்பந்தம் ஒன்றை தொழிற்சங்கங்களும் தோட்டக் கம்பனிகளும் தொழிலாளர்கள் மீது திணித்தன.
வேவர்லி மற்றும் கிளாஸ்கோ தோட்ட தொழிலாளர்களின் பிரச்சாரம், ஏனைய தொழிலாளர்களிடையே பரவக்கூடும் என பீதியுற்ற தொழிற்சங்க தலமைகள், வேலை நிறுத்தத்தினை முடித்து வைக்க தலையீடு செய்தனர். அமைச்சரவை அமைச்சர் பி.திகாம்பரம் மற்றும் இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் ஊடாக அரசாங்கத்தின் உதவியுடன் இருவார காலத்துக்குள் தொழிலாளர்களுக்கு தீர்வு வாங்கித் தருவதாக மலையக மக்கள் முன்னணி தலைவர் ஆர். ராஜாராம் வாக்குறுதி வழங்கியுள்ளார்.
திகாம்பரம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் (தொ.தே.ச.) தலைவராக உள்ளார். மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) தலைவராக இராதாகிருஷணன் உள்ளார். இவர்கள் அமைச்சரவைக்குள்ளும் பாராளுமன்றத்துக்குள்ளும் குந்தியிருப்பது தொழிலாளர்களின் கோரிக்கை சார்பாக அல்ல. முதலாளித்துவ வர்க்கத்தினதும் முதலாளிகளினதும் தேவையை நிறைவேற்றும் பொருட்டேயாகும்.
ஆகையினால் தோட்டத் துறையிலும், ஏனைய துறையிலும் தொழிலாளர்களின் போராட்டங்களைக் குழப்பியடிப்பதற்காக அரசாங்கமும், தொழிற்சங்க தலைமைகளும் வழங்கிய ஆயிரக்கணக்கான பொய் வாக்குறுதிகளுள் ராமராஜன் வழங்கிய வாக்குறுதியும் அடங்கும்.
தாங்கள் எதிர்கொள்ளும் கடினமான வேலை நிலமை மற்றும் சமூக நிலைமை குறித்து வேவர்லி தோட்ட தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தள நிருபர்களுக்கு பின்வருமாறு விளக்கினர்;
“கடந்த கூட்ட ஒப்பந்தத்தால் எமது சம்பளம் வீழ்ச்சியுற்றுள்ளது. முழு சம்பளமும் 730 ரூபாயாக இருந்தாலும் எமக்கு 500 ரூபாய் மட்டுமே கிடைக்கும். 140 ரூபாய் உற்பத்தி ஊக்குவிப்புத் தொகை பெறுவதற்கு, தினமும் 18 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும். அவ்வாறு நாளாந்தம் பறிப்பதற்கு கொழுந்துகள் தோட்டத்தில் கிடையாது. 21 நாட்கள் வேலை செய்தால் மட்டுமே வருகைக்கான ஊக்குவிப்பு வழங்கப்படும். சுகயீனம் அல்லது வேறு காரணங்களினால் 21 நாட்களைப் பூர்த்தி செய்யாவிட்டால், வருகைக்கான ஊக்குவிப்புத் தொகை வெட்டப்படும். 16 கிலோவுக்கு குறைவான கொழுந்து பறித்தால், அடிப்படைச் சம்பளமான 500 ரூபாயிலும் வெட்டப்படும். ஒரு கிலோ கொழுந்துக்கு 28 ரூபாயே கிடைக்கும். ஆகையால் நாம் தற்போது உள்ள கூட்டு ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம். குறைந்தபட்சம் நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா எங்களுக்கு வழங்கப்படவேண்டும். சகலருக்கும் வாழ்வதற்கான வீட்டு வசதிகள் வழங்கப்பட வேண்டும். எமது கோரிக்கை சம்பந்தமாக தொழிற்சங்கங்களுக்கு கிஞ்சித்தும் கவலை இல்லை. தொழிலாளர்கள் என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்று கூடி எமது பிள்ளைகளின் வாழ்க்கைக்காகப் போராட வேண்டும்.”
களனிவலி தோட்டக் கம்பனிக்கு சொந்தமான, டிக்கோயாவில் டில்லரி தோட்டத்தை துண்டாடும் திட்டத்துக்கு எதிராக மேற்பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் 27 அன்று மறியல் போராட்டம் நடத்தினார்கள். வருமானம் பகிர்வு முறை, உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக உழைப்புச் சுரண்டலை தீவிரமாக்குவது மற்றும் தோட்டத் தொழிலாளர்களை குத்தகை விவசாயிகளாக மாற்றிவிடும் ஒரு வழிவகையாகும்.
இதுவரை களனிவெலி கம்பனிகளுக்குரிய பல தோட்டங்களில் இம்முறை புகுத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாத்தில் இருந்து, டிலரி தோட்ட மேற்பிரிவு தொழிலாளர் சகலருக்கும், தலா 6,000 தேயிலைக் கன்றுகள் கொண்ட அரை ஏக்கர் தோட்டம் வழங்கப்பட்டது. கொழுந்து பறித்தல், கவாத்து வெட்டுதல், பழைய கன்றுகளை அகற்றுதல், உரம் மற்றும் கிருமிநாசினி தெளித்தல் ஆகிய சகல பராமரிப்பு வேலைகளையும் தொழிலாளர்களே செய்ய வேண்டும்.
தோட்டத்தின் மேல் மற்றும் கீழ் பிரிவுகளில் சுமார் 300 தொழிலாளர்கள் வேலை செய்கின்றார்கள். கீழ்ப்பிரிவு துண்டாடப்படுவதை எதிர்த்து, மார்ச் 14 அன்று தோட்டத் தொழிற்சாலைக்கு முன்னால் தொழிலாளர்கள் மறியல் போராட்டம் செய்தனர். எனினும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தலைவர்களும் கம்பனிகளும், ஹட்டன் பிரதி தொழில் ஆணையாளருடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னர், தொழிலாளர்களது எதிர்ப்பையும் மீறி, கீழ்ப் பிரிவிலும் இம்முறை ஏப்ரல் மாதம் முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் கொழுந்தின் விலை, தோட்டக் கம்பனிகளாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் தொழிலாளர்களைத் திசை திருப்புவதற்காக, ஒரு கிலோ கொழுந்து 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டது. பின்னர், அது 65 ரூபாவாக வெட்டப்பட்டு, தற்போது கிலோ ஒன்றுக்கு 45 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. உரம் கிருமி நாசினிக்கான செலவு வெட்டப்பட்ட பின்னர், தொழிலாளர்களுக்கு கிடைப்பது ஒரு அற்ப தொகையேயாகும். தொழிலாளர்களை இந்நிலைக்கு கீழ்படுத்தி வைப்பதற்காக, தோட்டத் தொழிற்சங்க தலைவர்களுக்கு தலா ஒரு ஏக்கர் காணி இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களும் தோட்ட அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து, தம்மை ஏமாற்றி வருவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். “அவர்கள் இம்முறையினால் எமக்கு அதிக வருமானம் கிடைக்கலாமென்று கூறினர். ஆனாலும் 9 மாத அனுபவத்திலிருந்து பார்க்கும்போது, இது எமக்கு கால்கட்டுப் போடும் நடைமுறையேயாகும். முன்னர் எமக்கு கிடைத்த அற்ப சொற்ப சமூக நலன்புரி மானியம் கூட இப்போது எமக்கு இல்லை. சில தொழிலாளர்கள் 25 ஆயிரம் வரை நட்டப்பட்டுள்ளார்கள். அதனால் நாம் இம்முறையை கடுமையாக எதிர்க்கின்றோம். பழைய சம்பள முறையையே எமக்கு வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.”
தொழிலாளர்களது எதிர்ப்பை சமாளிப்பதற்காக, 55 தொழிலாளர்களுக்கு 30 ஏக்கர் காணி தற்காலிகமாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. எனினும் சில தினங்களுக்குப் பின்னர், பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளில் வேலைசெய்யுமாறு பொலிசாரைக் கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சம்பள முன்பணம் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் சில தொழிலாளர்கள் அதனை நிராகரித்துள்ளதுடன், சொற்ப தொழிலாளர்களே தமக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளில் வேலை பார்க்கின்றனர்.
இந்த முறையினால் தான் கடும் சிரமத்துக்குள் தள்ளப்பட்டுள்ளதாக ஒரு பெண் தொழிலாளி தெரிவித்தார்.
“நாளாந்த கூலிக்கு வேலை பார்க்கையில், குறிப்பிட்ட தினங்களில் சம்பள முற்பணம், சம்பளப் பாக்கி என்பன கிடைத்தன. அயலவர்களிடமிருந்தும் கைமாற்றுக் கடன் பெறக் கூடியதாய் இருந்தது. புதிய முறையில் சம்பளம் கிடைப்பது எந்த தேதியில் என்பது கூற முடியாதபடியால் கைமாற்றுக் கடன் பெற முடியாது உள்ளது. 25ம் திகதி சம்பள முற்பணம் கிடைக்காததனால், கையில் காசு கிடைக்கவில்லை. அதனால் எனது பிள்ளைகள் இருவரும் இன்று பாடசாலைக்கு செல்லவில்லை. தோட்ட அதிகாரிகள், அவர்களுக்கு வேண்டிய வித்தத்தில் கொழுந்து விலையை நிர்ணயிக்கின்றார்கள். அவர்களது தீர்மானத்தின் பிரகாரமே எமது சம்பளம் கிடைக்கும்.”
தேயிலைக் கன்று கவாத்து வெட்டிய பின்னர், குறைந்தது மூன்று மாதங்களுக்காவது கொழுந்து பறிக்க முடியாது. அந்த மூன்று மாதங்களுக்கு 25,000 ரூபாவை வட்டிக் கடனாக நிர்வாகம் கொடுக்கும். கிடைத்த வருமானத்தில், அதனைக் கழித்த பின்னர் தொழிலாளர்களுக்கு சீவிப்பதற்கே கையில் பணம் மிஞ்சாது. அதானல் அவர்கள் கடனாளியாக மாற்றப்படுகின்றார்கள்.”
அக்கரைப்பத்தனை மற்றும் டிக்கோயா தோட்ட பிரச்சாரமானது கடினமான வேலை நிலைமைகள் மற்றும் வாழ்வதற்கு ஏற்ற வருமானம் கிடைக்காத நிலைமையின் கீழ், தோட்டத் தொழிலாள்கள் மத்தியில் மீண்டும் பரந்தளவில் வளர்ச்சியடைந்து வரும் எதிர்ப்பின் வெளிப்பாடு ஆகும். தோட்ட கம்பனியைப் போலவே, தொழிற்சங்கத் தலைவர்களும் இதைப் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளனர். இதன் காரணமாகவே, கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் போது, எந்தவொரு சம்பள கோரிக்கையையும் முன்வைக்காமல் இருக்க தொழிற்சங்க அதிகாரத்துவம் முடிவெடுத்துள்ளது. சம்பள கோரிக்கை ஒன்றை முன்வைத்தால், அதனால் தொழிலாளர்கள் மத்தியில் தம்மால் கட்டுப்படுத்த முடியாதளவில் சம்பளப் போராட்டமொன்று தூண்டிவிடப்படக் கூடும் என்பதை தொழிற்சங்கத் தலைவர்கள் நன்கு அறிவர்.
அதற்கு மாறாக, சம்பள வெட்டையும் அவர்களின் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ள வருமானப் பங்கீடு முறையையும் முழுமையாக தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்கான இரகசிய பேச்சுவார்த்தைகளில் தொழிற்சங்கங்களும் கம்பனிகளும் ஈடுபட்டுள்ளன.