Print Version|Feedback
Seventeen years after 9/11: from “war on terror” to “great power conflict”
9/11 சம்பவத்தின் பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர்: “பயங்கரவாதத்தின் மீதான போர்" முதல் "வல்லரசுகளுக்கு இடையிலான மோதல்" வரையில்
Andre Damon
12 September 2018
“பயங்கரவாதத்தின் மீதான போர்" மற்றும் குறைந்தபட்சம் ஒரு மில்லியன் மக்களின் உயிர்கள் விலையாக கொடுக்கப்பட்ட பல தொடர்ச்சியான இரத்தந்தோய்ந்த மோதல்களுக்கு உத்தியோகபூர்வ சாக்குபோக்காக மாறியிருந்த, செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர், வாஷிங்டன், அல்கொய்தாவுடன் தொடர்புள்ள சக்திகளைப் பாதுகாப்பதற்காக சிரியாவில் ஒரு பாரிய புதிய இராணுவ தாக்குதலைத் தொடங்கும் தறுவாயில் உள்ளது.
2003 ஈராக் படையெடுப்பை ஒழுங்கமைத்தவர்களில் ஒருவரான அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் திங்களன்று கூறுகையில், அமெரிக்கா சிரியா அரசாங்கத்திற்கு எதிராக ஓர் இராணுவ தாக்குதலைத் தொடங்க செயலூக்கத்துடன் தயாரிப்பு செய்து வருகிறது என்றார். சிரிய அரசாங்கம் ஓர் இரசாயன தாக்குதலை நடத்தியது என்ற சாக்குபோக்கு இதற்காக பயன்படுத்தப்பட்டு வருவதுடன், எதிர் வரவிருக்கும் நாட்களில் இதற்கு சிறிது காலமெடுக்குமென பென்டகன் கூறுகின்றது.
“நாங்கள் பிரிட்டன் மற்றும் பிரான்சுடன் கலந்தாலோசித்து வருகிறோம், இவை [ஏப்ரலில் நடத்தப்பட்ட சிரிய அரசாங்கத்திற்கு எதிரான] இரண்டாவது தாக்குதலில் இணைந்தன, மேலும் இன்னொரு முறை இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் இன்னும் அதிக பலமான விடையிறுப்பு இருக்கும் என்பதிலும் அவை உடன்படுகின்றன,” என்று போல்டன் எச்சரித்தார்.
சிரிய அரசாங்கம் ஏற்கெனவே என்ன செய்துவிட்டதாக வாஷிங்டன் வாதிடுகிறதோ அது அதற்காக விடையிறுக்கவில்லை, மாறாக எதிர்காலத்தில் என்ன செய்யவிருக்கிறதோ அதற்காகவே அது விடையிறுத்து வருவதை வாஷிங்டன் தெளிவுபடுத்தி வருகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இரசாயன ஆயுதங்களின் ஒரு "தாக்குதல்" செய்யுமாறு கூறப்படுகின்றது.
சிரிய அரசாங்கத்திற்கு எதிராக ஜோடிக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள், 2017 இல் கான் ஷேகுன் இரசாயன தாக்குதல்கள் மற்றும் இந்தாண்டு ஆரம்பத்தில் டூமாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதல்களின் போது அமெரிக்க வாதிட்ட கூற்றுகளை விட ஆணவமான வெட்கக்கேடான வாதங்களாக உள்ளன. அந்த சம்பவங்களே கூட சிஐஏ இன் இஸ்லாமியவாத பினாமி குழுக்களால் நடத்தப்பட்டிருக்கலாமென முக்கிய புலனாய்வு பத்திரிகையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஈராக்கில் "பாரிய பேரழிவுகரமான ஆயுதங்கள்" குறித்த புஷ் நிர்வாகத்தின் பொய்களின்படி ஒருபோதும் அவ்வாறு நடந்திருக்கவில்லை என்றபோதும் கூட, அமெரிக்காவின் தலையீட்டை தீவிரப்படுத்துவதற்காக வாஷிங்டன் பயன்படுத்தும் ஜோடிக்கப்பட்ட இந்த சாக்குப்போக்குகள் அமெரிக்க பத்திரிகைகளிலும் ஒளிபரப்பு ஊடகங்களிலும் கேள்வியின்றி மற்றும் சவாலின்றி விடப்பட்டுள்ளன.
இந்த இட்டுக்கட்டப்பட்ட நியாயப்பாடுகளின் நிஜமான நோக்கம் தெளிவாக உள்ளது. சிரிய அரசாங்கம், அதன் கூட்டாளிகளான ரஷ்யா மற்றும் ஈரானின் உதவியோடு, இப்லிப் மாகாணத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கான ஒரு புதிய மிகப்பெரிய தாக்குதலை நடத்த உள்ளது. அமெரிக்க தலையீட்டைக் கடந்து அதில் அது வெற்றி பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. அது நடைமுறையளவில் அந்த ஒட்டுமொத்த நாட்டையும் சிரிய அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் என்பதோடு, இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுடன் கூட்டணி சேர்ந்து அமெரிக்காவின் ஏழாண்டு கால ஆட்சி மாற்ற முயற்சியின் முடிவான தோல்வியை அது குறிப்பதாக இருக்கும்.
இது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு மிகப்பெரிய தோல்வியை எடுத்துக்காட்டும், வாஷிங்டன் அதுபோன்றவொரு விளைவை ஏற்க தயாராக இல்லை, அதுவும் சிரியாவின் ரஷ்ய மற்றும் ஈரானிய கூட்டாளிகளைச் சுட்டுத்தள்ளும் போரை அது அர்த்தப்படுத்தும் என்றாலும் கூட.
ரஷ்ய இராணுவப் படைகள் சிரியாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்திற்கு அருகில் உள்ள ISIS இடங்களைத் தாக்குவதற்கு அனுமதி கோரியதும், சனிக்கிழமை அந்த தளங்களை மீளப்பலப்படுத்த 100 கடற்படை வீரர்களின் ஒரு படையை அமெரிக்கா அனுப்பியது.
அமெரிக்க படைகள் ரஷ்ய துருப்புகளைக் கையாள முழு தயாரிப்புடன் இருப்பதாக பென்டகன் தெளிவுபடுத்தியது. “அமெரிக்கா ரஷ்யர்களுடன் சண்டையிட விரும்பவில்லை,” என்று கூறிய பென்டகன் செய்தி தொடர்பாளர், “ஆனால், அமெரிக்க படைகளை, கூட்டணி அல்லது பங்காளியின் படைகளைப் பாதுகாக்க பொருத்தமான அளவின் அடிப்படையில் அவசியமானால் படைகளைப் பயன்படுத்த தயங்காது,” என்றார்.
2011 இல் அமெரிக்க ஆட்சி மாற்ற நடவடிக்கை தொடங்கியதில் இருந்து, சிஐஏ மற்றும் பென்டகன் அல் கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசுடன் தொடர்புபட்ட இஸ்லாமிய போராளிகள் குழுக்களைப் பயிற்றுவித்து, ஆயுதமேந்த செய்துள்ளன, அவற்றை அது சிரிய அரசாங்கத்தைத் தூக்கியெறியும் முயற்சியில் அதன் அதிரடிப்படை துருப்புகளாக பயன்படுத்தியது.
இப்போது, செப்டம்பர் 11, 2001 சம்பவத்திற்கு 17 ஆண்டுகளுக்குப் பின்னர், வாஷிங்டன் உலக வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக அது குற்றஞ்சாட்டிய அதே அமைப்புகளின் வரிசையில் நிற்கும் போராளிகளைப் பாதுகாக்க ஒரு புதிய மிகப்பெரிய போருக்குத் தயாரிப்பு செய்து வருகிறது.
இந்த குழப்பமிக்க திருப்பமாக தெரிவது, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றழைக்கப்பட்டதன் நிஜமான இயல்பை வெளிப்படுத்துகிறது. 9/11 தாக்குதல்களைச் சுற்றியிருந்த விவரிக்கப்படாத சூழல்களை விட்டுவிட்டாலும் கூட, அதன் ஆரம்பத்திலிருந்தே மக்கள் கருத்தை வாஷிங்டன் நீண்டகாலமாக திட்டமிட்டு வந்த ஆக்கிரமிப்பு போர்களுக்குப் பின்னால் இழுப்பதை அது அர்த்தப்படுத்தியது.
9/11 தாக்குதல்களுக்கு மறுநாள், உலக சோசலிச வலைத் தளம் விவரிக்கையில், “அமெரிக்க அரசின் நிலைப்பாட்டிலிருந்து, பயங்கரவாதத்திற்கு எதிரான சிலுவைப்போர் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதற்கான ஒரு மனச்சாட்சிபூர்வ முயற்சியாக இருந்ததை விட கூடுதலாக உலகெங்கிலும் அமெரிக்க இராணுவ வன்முறையை நியாயப்படுத்துவதற்கான ஒரு பிரச்சார நடவடிக்கை என்பதாக உள்ளது.”
அடுத்தடுத்த சம்பவங்கள் இந்த பகுப்பாய்வை முற்றிலும் ஊர்ஜிதப்படுத்தின. இந்த “பயங்கரவாதத்தின் மீதான போர்” ஆப்கானிஸ்தானில் 2001 படையெடுப்பு தொடங்கப்பட்டமை, 2003 இல் ஈராக் படையெடுப்பு, லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போர்கள், மற்றும் உலகெங்கிலும் டஜன் கணக்கான்ன நாடுகளில் அமெரிக்காவின் இரகசிய படுகொலை மற்றும் சித்திரவதைகளை உள்ளடக்கிய பாரியளவிலான ஏகாதிபத்திய நவ-காலனித்துவத்தை மீளமைப்பதற்கான பாசாங்குத்தனமாக இருந்தது.
இந்த அத்துமீறலின் நோக்கம், பத்திரிகையாளர் செமோர் ஹெர்ஸ் இன் சமீபத்திய நூலில் அவரால் மேற்கோளிடப்பட்ட ஓர் இரகசிய நவ-பழமைவாத மூலோபாய ஆவணத்தில் தொகுத்தளிக்கப்பட்டது. ஈராக்கிய போர் "அமெரிக்காவை மத்திய கிழக்கின் மேலாதிக்க சக்தியாக மாற்றத் தொடங்கும். அப்பிராந்தியம், அது உள்ளவாறே, அமெரிக்க நோக்கம் மற்றும் தீர்மானத்திற்கு முக்கியத்துவமானதாக மாற்றுவதற்கு, நிச்சயமாக, எவ்வாறு என்று கூற முடியாவிட்டாலும், ஒன்றுக்கொன்று தொடர்புடைய காரணமாக உள்ளது,” என்று அது குறிப்பிட்டது. மத்திய கிழக்கில் அமெரிக்க நோக்கங்களை எதிர்ப்பவர்கள், “அவர்களின் உயிருக்காக போராடவேண்டி இருக்கும். அமெரிக்க ஆளுமைக்கான நோக்கம் அதன் வழியில் நகரத்தொடங்கிவிட்டது. இது அவர்களின் அழிவை முன்கூட்டியே கூறுகின்றது”
“பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பெயரில் தொடங்கப்பட்ட மத்திய கிழக்கு போர்களின் இறுதி இலக்கு என்பது, ரஷ்யா மற்றும் சீனாவுக்கான "வல்லரசு" போட்டியாகவும், அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்த அமெரிக்காவின் சமீபகாலம் வரையிலான "கூட்டாளிகளாளுக்கு" எதிரானதாகவும் உள்ளன. அதன் அத்தியாவசியமான எரிசக்தி மற்றும் போக்குவரத்து தொடர்புகளுடன், யுரேஷியாவின் இதயதானத்தைக் கட்டுப்பாட்டில் கொள்வதன் மூலமாக, உலகளாவிய பொருளாதரம் மீதான அதன் மேலாதிக்கம் பலவீனமடைந்தாலும் கூட, இராணுவ வழிகளைக் கொண்டு அதன் புவிசார் அரசியல் மேலாதிக்கத்தை மீளப் பெற முடியும்.
ஆனால் அமெரிக்கா அதிகரித்தளவில் அல் கொய்தா தொடர்புபட்ட இஸ்லாமிய போராளிகள் குழுக்களைச் சார்திருக்க வந்ததும், முதலில் லிபியாவிலும், பின்னர் சிரியாவிலும், “பயங்கரவாதத்தின் மீதான போர்" இன் வெளிவேஷம் அதிகரித்தளவில் வெளுக்கத் தொடங்கியது. அந்த பாசாங்குத்தனம் இந்தாண்டின் பென்டகன் தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆவணத்தில் முற்றிலுமாக கைவிடப்பட்டது, “இப்போது அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கான பிரதான கவலையாக இருப்பது, பயங்கரவாதம் அல்ல, நாடுக்கு இடையிலான மூலோபாய போட்டியே,” என்றது குறிப்பிட்டது.
இந்த கருத்துருவை எதிரொலித்து, சிஐஏ துணை இயக்குனர் மைக்கெல் மொரெல், வாஷிங்டன் போஸ்டில், “நாம் 9/11 க்கு அவசரமாக விடையிறுத்தோம். இப்போது சீனாவுக்கு அவசரமாக விடையிறுக்க வேண்டியுள்ளது,” என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையோடு 9/11 இன் நேற்றைய நினைவுதினத்தைக் கொண்டாடினார்.
சீனா “உலகில் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் செல்வாக்கான நாடாக மாறுவதில் இருந்து" அமெரிக்கா அதை தடுக்க வேண்டுமென மொரெல் வலியுறுத்துகிறார். செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்களுக்கும் சீனாவுக்கும் என்ன சம்பந்தம் என்று மொரெல் அக்கட்டுரை நெடுகிலும் ஒரு இடத்திலும் எதையும் விளக்கவில்லை.
சீனா மற்றும் ரஷ்யாவுடன் அமெரிக்காவை மோதல் போக்கில் கொண்டு வந்து நிறுத்தி உள்ள, மத்திய கிழக்கு ஆக்கிரமிப்புக்கான தொடர்ச்சியான பல நவ-காலனித்துவ போர்களுக்கான பாசாங்குத்தனமாக ஒருவர் “பயங்கரவாதத்திற்கு எதிரான போரை” பார்த்தால் மட்டுமே அக்கட்டுரை அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
பெய்ஜிங்கும் மாஸ்கோவும், அவற்றின் பாகத்திலிருந்து, அமெரிக்க அச்சுறுத்தல்களை மரணகதியில் ஆழமானவையாக பார்க்கின்றன. அதன் அணுஆயுத தளவாடங்களை விரிவாக்க வேகமாக செயல்பட்டு வருகின்ற ரஷ்யா, கணிசமான சீன பங்களிப்புடன் சேர்ந்து, 37 ஆண்டுகளில் முதல்முறையாக, சுமார் 300,000 துருப்புகள் ஈடுபட்ட, அதன் மிகப்பெரிய இராணுவ ஒத்திகைகளை நடத்துவதற்கு மத்தியில் உள்ளது.
எப்போதும் விரிவாக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான போர்கள் மூலமாக இராணுவ வழிவகைகளைக் கொண்டு அதன் உலகளாவிய இடத்தை உயர்த்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் இரத்தந்தோய்ந்த ஒரு பேரழிவு மாற்றி மற்றொரு பேரழிவுக்கு இட்டுச் சென்றுள்ளன. ஆனால் உலகளாவிய ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டு அறையாக விளங்கும் வாஷிங்டன், ஒவ்வொரு பேரழிவுக்கும் வரிந்து கட்டிக்கொண்டு மீண்டும் சண்டைக்கு போவதன் மூலமாக விடையிறுத்துள்ளது. இப்போதைய இந்த போக்கு ஓர் அணுஆயுத சக்தியுடன் போரின் விளிம்புக்கு அதை கொண்டு செல்லுமானால், அது விளைவுகளை ஏற்க தயாராக இருப்பதாக வாஷிங்டன் தெளிவுபடுத்தி உள்ளது.
அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பார்ந்த வெளிப்பாடு பெரிதும் உள்நாட்டைக் கவனத்தில் கொண்டுள்ளது. தொழிலாள வர்க்க போராட்டங்களின் அதிகரிப்பு, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே சோசலிசத்திற்கு ஆதரவாளர்கள் அதிகரித்து வருவதற்கு இடையே, இணைய தணிக்கை, பத்திரிகைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் பிற சர்வாதிகார முறைகளைக் கொண்டு "தேசிய ஒற்றுமையை" நிலைநாடுவதற்கு அமெரிக்க ஆளும் உயரடுக்கு போரை ஒரு வழிவகையாக காண்கிறது. மொரெல் குறிப்பிடுவதைப் போல, “உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நம்மை பலவீனப்படுத்துவதற்கான ரஷ்யாவின் முயற்சிகள் உட்பட, எண்ணற்ற பல அச்சுறுத்தல்களுக்கு அமெரிக்கா விடையிறுக்கையில் தேசிய ஒற்றுமை இன்றியமையாததாகும்,” என்கிறார்.
நெருக்கடியில் சிக்கிய ட்ரம்ப் நிர்வாகம், அதன் பாகத்திலிருந்து, ஜனநாயகக் கட்சி மற்றும் உளவுத்துறை முகமைகளது உள்நாட்டு விமர்சனங்களைச் சாந்தப்படுத்த போரை ஒரு வழிவகையாக காண்கிறது, அவற்றின் கடுமையான கன்னை இந்த நிர்வாகத்துடன் மேற்கொண்டு வரும் சண்டை, ட்ரம்ப் சிரியாவில் ரஷ்யாவுக்கு எதிராக இன்னும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கைகளைச் சுற்றி சுழல்கிறது.
அமெரிக்கா, ஓர் அணுஆயுத சக்தியுடன் சுட்டுத்தள்ளும் போருக்கு இட்டுச் செல்லக்கூடிய ஓர் அத்துமீறலின் விளிம்பில் நிற்கின்ற நிலையில், ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபகமும் இராணுவ தீவிரப்பாட்டிற்கு ஆதரவாக அணி வகுத்துள்ளது. சிரியாவில் ஆட்சி மாற்றத்தை இன்னும் ஆக்ரோஷமாக அமெரிக்கா பின்தொடர வேண்டுமென தொடர்ந்து கோரி வருகின்ற சர்வதேச சோசலிச அமைப்பு போன்ற, ஜனநாயகக் கட்சியின் ஆதரவுவட்டத்தில் உள்ள நடுத்தர வர்க்க "இடதும்" இதில் உள்ளடங்கும்.
இந்த நாடி தளர்ந்த மற்றும் பிற்போக்குத்தனமான அரசியல் ஸ்தாபகத்தின் எந்தவொரு கன்னையில் இருந்தும் போருக்கு எதிரான இயக்கம் தோன்றாது. மாறாக, அது தொழிலாள வர்க்கத்திலிருந்து வரும், வர வேண்டும். அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் தொழிலாளர்கள், வாஷிங்டன் மாநில ஆசிரியர்கள் முதல் நாடுதழுவிய UPS தொழிலாளர்கள் வரையில், ஐரோப்பாவில் விமானச் சேவை தொழிலாளர்கள் வரையில், தொடர்ச்சியான மற்றும் கடுமையான வர்க்க போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் போராட்டத்தில் அணிதிரள்கையில், தொழிலாளர்கள் போருக்கு எதிரான போராட்டத்தை ஒரு சோசலிச எதிர்காலத்திற்கான போராட்டத்தை மத்திய அம்சமாக முன்னெடுக்க வேண்டும்.