Print Version|Feedback
Sri Lankan unions sell out railway workers and call off strike
இலங்கை தொழிற்சங்கங்கள் இரயில் தொழிலாளர்களை விற்றுத்தள்ளி வேலைநிறுத்தத்தை முடித்துக்கொண்டன
By W.A. Sunil
13 August 2018
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புகையிரத சேவைக்கான அமைச்சரவை துணைக் குழு உறுப்பினர்களுடன் காலையில் நடத்திய சந்திப்பிற்கு பின்னர், நேற்று புகையிர தொழிற்சங்கத் தலைவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஒருதலைப்பட்சமாக முடிவுக்கு கொண்டுவந்தனர். தொழிலாளர்களின் கோரிக்கைகள் எதுவும் கிடைக்காததோடு காட்டிக்கொடுப்பு பற்றி கலந்துரையாட எந்தவொரு வெகுஜன கூட்டமும் நடத்தப்படவில்லை.
இந்த வேலைநிறுத்தம் கட்டுப்பாட்டை மீறி விரிவடைவதுடன் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரையும் உள்ளீர்த்து, கொழும்பின் சமூக சிக்கன நடவடிக்கைகள் மற்றும் செலவு-வெட்டு தனியார்மயமாக்கல் நிகழ்ச்சி நிரலை சவால் செய்யும் என்று அரசாங்கம் பீதியடைந்திருந்தது போலவே, அச்சமடைந்திருந்த புகையிரத தொழிற்சங்க தலைவர்கள், அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைக்கும் முடிவு கட்ட தருணம் பார்த்திருந்தனர்.
ஞாயிறு காலை அவசரமாக கூட்டப்பட்ட இந்தக் கூட்டம், சிறிசேனவின் பாரம்பரிய தேர்தல் தொகுதியான பொலன்னறுவையில் உள்ள அவரது சொந்த வீட்டிலேயே இடம்பெற்றது.
கூட்டத்தின் பின்னர் சிறிசேனவின் இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய புகையிரத தொழிற்சங்க தலைவர்கள், "ஜனாதிபதி எங்களது கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்க வாக்குறுதியளித்துள்ளார்" என தங்களது வழக்கமான பரிதாபகரமான கூற்றுக்களையே மீண்டும் கூறினர். கடந்த சில ஆண்டுகளாக, புகையிரத தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடித்துக்கொள்வதற்காக சுமார் அரை டசின் முறை இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், அரசாங்க அமைச்சரும் அமைச்சரவை துணைக் குழு பேச்சாளருமானு சரத் அமுனுகம, தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டுள்ள நிபந்தனைகளை விவரித்தார். இந்த விற்றுத்தள்ளும் ஒப்பந்தத்தில் பின்வரும் நிபந்தனைகள் அடங்கியுள்ளன:
1) புகையிரதம், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் நெருக்கமான சேவைகளாக மாற்றப்படும். இந்த மாற்றங்களுக்கான உறுதியான பிரேரணைகள் அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு முன்வைக்கப்படும்.
2) இரு தரப்பினருக்கும் இடையேயான அடுத்த கலந்துரையாடல் நடக்கும் வரை, புகையிரத துறையில் புதிய ஆட் சேர்ப்பு மற்றும் பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது.
3) நிர்வாக பிரச்சினைகள் மற்றும் புகையிரத அதிகாரிகளின் சம்பளப் பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள், சம்பந்தப்பட்ட தொழிற்சங்க அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்படும்.
4) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது.
5) புகையிரத வேலை நிறுத்தம் உடனடியாக கைவிடப்பட வேண்டும்.
இந்த நிபந்தனைகள் சம்பந்தமான ஒரு கரிசனையான பார்வை கூட, காட்டிக்கொடுப்பின் கோரமான தன்மையை தெளிவுபடுத்துகிறது.
முதல் நிபந்தனை, புகையிரத சேவையை தனியார்மயமாக்கும் முன்னெடுப்பின் ஆரம்ப நடவடிக்கையாக அமைச்சரவை துணை குழுவினால் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட ஒரு பரிந்துரை ஆகும்.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தொடங்கிய புகையிரத திணைக்களம் எப்போதும் அரசுக்கு சொந்தமான நிறுவனமாகவே இருந்து வந்தது. சர்வதேச நாணய நிதியத்தினால் கோரப்படும் இலங்கை புகையிரத சேவையின் தனியார்மயமாக்கலை புகையிரத தொழிலாளர்களால் கடுமையாக தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்றனர்.
இரண்டாவது நிபந்தனை, வேலைச் சுமைகளை குறைப்பதன் பேரில் திணைக்களத்தில் அனைத்து வேலைவாய்ப்புகளும் நிரப்பப்பட வேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கைக்கு எதிரானதாக உள்ளது. ஆட்சியில் இருந்த இலங்கை அரசாங்கங்களும் புகையிரத நிர்வாகமும் இந்த வேலை வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு மறுத்துவிட்டன. திணைக்களத்தில் ஊழியர்கள் அதிகம் உள்ளதாகவும் இது தனியார் கொள்வனவாளர்களின் ஆர்வத்தை கெடுக்கிறது என்றும் அவை கூறிக்கொள்கின்றன.
மூன்றாவது நிபந்தனை, கடந்த வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கூட்டு தொழிற்சங்க அமைப்பான புகையிரத தொழிற்சங்க கூட்டணியை (RTUA) பிளவுபடுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகள் இயந்திர சாரதிகள், நிலைய அதிபர்கள், புகையிரத பாதுகாவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களை வேறுபடுத்தும்.
கடந்த வார வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க அதிகாரிகளுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எதுவும் இல்லை என்ற நான்காவது நிபந்தனை, நீண்ட காலத்திற்கு முன்னர் தொழிலாளர்கள் வென்றெடுத்த ஒரு அடிப்படை ஜனநாயக உரிமையாகும்.
ஜனாதிபதி சிறிசேன "வாக்குறுதியளித்த தீர்வு" என தொழிற்சங்கங்கள் மீண்டும் சுமந்து வந்த, இப்போது புகையிரத தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன பிற்போக்கு நிபந்தனைகள் இவையே.
ஆரம்பத்தில் இருந்தே, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் வேலைநிறுத்தத்தை தோற்கடிக்க உறுதிகொண்டிருந்ததுடன், புகையிரத தொழிலாளர்களின் கோரிக்கைகளில் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்தியிருந்தது.
நிதியமைச்சர் மங்கள சமரவீர, "வேலைநிறுத்தங்களுக்கு பயந்து ஊதியங்களை அதிகரிக்க முடியாது" என அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியதோடு இளைஞர் விவகார மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சகலா ரத்நாயக்க, வேலைநிறுத்தத்தை "ஒரு பயங்கரவாத செயல்" என கண்டித்தார்.
"பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட” அதே வழியில் இந்த வேலைநிறுத்தம் நசுக்கப்படும், “இந்த அசிங்கமான தொழிற்சங்க பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக அனைத்து சாத்தியமான நடவடிக்கையையும் எடுப்போம்" என ரத்நாயக்க தெரிவித்தார்.
அதேவேளை, "வேலைநிறுத்தம் அரசாங்கத்தை பாதிக்கும்" என்று தொழிலாளர்கள் நினைத்திருந்தால் "அது ஒரு கற்பனை" என்று சிறிசேன அறிவித்தார்.
இரயில்களை இயக்க அனைத்து சம்பந்தப்பட்ட ஓய்வுபெற்ற புகையிரத தொழிலாளர்களை அழைக்குமாறு புகையிரத அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்ட அதேவேளை, இலங்கை போக்குவரத்துச் சபை வழங்கும் வீதிப் போக்குவரத்துக்கு மேலதிகமாக போக்குவரத்தை வழங்க இலங்கை இராணுவம் சாரதிகள் மற்றும் போக்குவரத்து வாகனங்களை வழங்கியது. வேலைநிறுத்தத்திற்கு எதிராக பொதுமக்களை தூண்டிவிடும் இழிவான ஆத்திரமூட்டும் பிரச்சாரத்தை முன்னெடுக்க அரசாங்கம் மற்றும் தனியார் ஊடக பிரிவுகள் அறிவுறுத்தப்பட்டிருந்தன.
தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை தவிர்க்க முடிந்த அனைத்தையும் செய்ததோடு, அது சாத்தியமில்லாத போது முதல் வாய்ப்பாக வேலை நிறுத்தத்தை காட்டிக்கொடுத்தது. இந்த நிகழ்ச்சிநிரல் புகையிரத தொழிற்சங்க கூட்டணியின் திவால் மற்றும் தொழிலாள வர்க்க விரோத தன்மையை மட்டும் வெளிப்படுத்தவில்லை, தேசிய ரீதியிலும் சர்வதேச அளவிலும் தொழிற்சங்கங்கள் ஆற்றும் பிற்போக்குப் பாத்திரத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.
சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் வேலைநிறுத்த உடைப்பு மற்றும் வர்க்கப் போர் நடவடிக்கைகளுக்கு எதிராக, அதே சீரழிந்து வரும் சமூக நிலைமைகளுக்கு முகங்கொடுக்கும் மற்றைய இலங்கை தொழிலாள வர்க்கம் ஒருபுறமிருக்க, ஏனைய புகையிரத ஊழியர்களின் ஆதரவை அணிதிரட்டக் கூட புகையிரத தொழிற்சங்க கூட்டணி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொழிலாளர்களின் ஊதியங்கள், நிலைமைகள், வேலைகள் மற்றும் சமூக நல சேவைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களின் பின்னால் இருப்பது, உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் தீவிர பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியே ஆகும். அது இலங்கையில் தெளிவாக வெளிப்பாட்டுள்ளது.
சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் ஏற்றுமதி வருவாய் வீழ்ச்சி மற்றும் 50 பில்லியன் டாலர் பாரிய வெளிநாட்டு கடனிலும் மூழ்கி பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது.
ஜூலை மாதம், மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி, இலங்கை தற்போதைய கடன் தவணை மற்றும் வட்டிக்காக அடுத்த நான்கு வருடங்களுக்கு சராசரியாக 3.9 பில்லியன் டாலர்களை ஒரு ஆண்டுக்கு செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதன் அர்த்தம், நாடு குறைந்தபட்சம் 2.5 பில்லியன் டாலர்களை ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச சந்தையிலிருந்து கடன் வாங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
"எமக்கு சமாளிப்பதற்கு மிகவும் சிறிய வாய்ப்பே உள்ளதுடன் நாம் நிதி ஒழுக்கத்தை இழந்து சரவதேச நாணய நிதியத் திட்டத்தை இழந்தால், நாங்கள் தரப்படுத்தல் முகவர்களால் கீழ் இறக்கப்படுவோம்," என குமாரசாமி தெரிவித்தார்.
இந்த ஆண்டு, மற்றொரு 1.5 பில்லியன் டாலர்களை சீனாவிடம் இருந்தும், ஆசியா அபிவிருத்தி வங்கியில் இருந்து 250 மில்லியன் டாலர்களையும் கடனாகப் பெறுவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
நேற்று சண்டே டைம்ஸ் தலையங்கம் தெரிவித்ததாவது: "அரசாங்கம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருப்பது தெளிவு. இத்தகைய சூழ்நிலைகளில் உயர் ஊதியங்களைக் கோருவது நியாயமற்றது. நாட்டின் வெளிநாட்டு நாணய இருப்பு, வெறுமனே அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயை தூக்கி நிறுத்துவதற்கே, நாளுக்கு நாள் சுருங்கி வருகின்றது."
நிதி மூலதனம், நெருக்கடியின் முழு சுமையையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்த கோருகிறது. உலகெங்கிலும் உள்ள ஏனைய முதலாளித்துவ ஆட்சியாளர்களைப் போலவே சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நோக்குநிலை இந்த புறநிலை யதார்த்தத்தையும் ஒரு புதிய அரசியல் வேலைத்திட்டத்தையும் புரிந்து கொள்வதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
புகையிரத தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் சம்பந்தமாக ஆகஸ்ட் 11 அன்று சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்ட அறிக்கை, பின்வரும் வேலைத் திட்டத்தையே அபிவிருத்தி செய்ததுடன், புகையிரத தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பின் மூலம் அது நிரூபிக்கப்பட்டுள்ளது.
"இரயில் தொழிலாளர்கள் முன்முயற்சி எடுத்து, அனைத்து புகையிரத ஊழியர்களினதும் ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஏற்பாடு செய்ய உறுப்பினர்களின் நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதோடு அரச, தனியார் மற்றும் தோட்ட தொழிற்துறையில் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் செயலூக்கமான தொழில்துறை மற்றும் அரசியல் ஆதரவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
"புகையிரத தொழிலாளர்கள் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் மற்றும் இலங்கை ஆளும் உயரடுக்கின் ஏனைய பிரிவுகளுக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் சோசலிச குடியரசு ஒன்றியங்களை நிறுவும் பரந்த முன்னோக்கின் பாகமாக, சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் மட்டுமே முன்னோக்கி செல்ல முடியும்.
"இதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டமாகும். நாம் வர்க்க நனவு கொண்ட அனைத்து சமூகங்களின் தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்."