ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US Senate backs $708 billion military authorization

அமெரிக்க செனட் இராணுவத்திற்கான 708 பில்லியன் டாலர் ஒதுக்கீட்டை ஆதரிக்கிறது

By Patrick Martin
3 August 2018

அமெரிக்க செனட் சபை புதன்கிழமை 87 க்கு 10 என்ற வித்தியாசத்தில் வாக்களித்து, பென்டகன் செலவுகளுக்கான 708 பில்லியன் டாலர் முன்நகலான தேசிய பாதுகாப்பு அதிகாரச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. இந்த சட்டமசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவதில் நாற்பத்தி ஆறு குடியரசு கட்சியினருடன் 41 ஜனநாயக கட்சியினரும் இணைந்திருந்தனர், இச்சட்டமசோதா இப்போது ஜனாதிபதி ட்ரம்பின் கையெழுத்தைப் பெற வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆயுதத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதுடன், கணிசமானளவுக்கு துருப்புகளை ஆயத்தப்படுத்துவது மற்றும் அனைத்து பிரிவுகளிலும் சீருடை இராணுவத்தினரை 2.6 சதவீதம் அதிகரிப்பது ஆகியவற்றோடு, இச்சட்டமசோதா பாதுகாப்பு துறைக்கான கொள்கையை வகுக்கிறது, ஆனால் இந்த நிதி ஒதுக்கீடு நடைமுறையில் ஒப்புதலைப் பெற இன்னுமொரு பிரத்யேக நிதி ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்.

செனட் சபையில் ஜனநாயக கட்சி வேட்பாளர்களிடையே 41 க்கு 8 என்ற வித்தியாசம், பகுதியளவில் அரசியல் நிலைப்பாட்டால் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி வேட்பாளர் போட்டிக்கான நீரோட்டத்தைப் பரிசோதித்து வரும் ஜனநாயக கட்சியினர், 2020 ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு "இடது" தோரணை ஏற்க நோக்கம் கொண்டிருக்கும் இவர்கள், இராணுவ செலவின மசோதாவை எதிர்த்தனர்: பேர்ணி சாண்டர்ஸ், எலிசபெத் வாரென், கமலா ஹாரிஸ், கிர்ஸ்டன் கில்லிபிராண்ட் மற்றும் ஜெஃப் மெர்க்லெ ஆகியோர்.


புதிய ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் ரக விமானந்தாங்கி போர்க்கப்பல் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டையும் இந்த வரவு-செலவு திட்டக்கணக்கு உள்ளடக்கி உள்ளது

2016 இல் ட்ரம்ப் போட்டியிட்ட மாநிலங்களில் இந்தாண்டு மறுதேர்தல்கள் கோரி வரும் ஜனநாயக கட்சி செனட்டர்கள் அனைவருமே, இராணுவச் செலவின மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பதோடு, “ஜனாதிபதியோடு செயல்படுவதற்கான" அவர்களின் விருப்பத்திற்கு ஆதாரமாக ஐயத்திற்கிடமின்றி இதை அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தில் விளம்பரங்களாக பயன்படுத்துவார்கள். மேற்கு வேர்ஜினியாவின் ஜோ மன்சின், இண்டியானாவின் ஜோ டொன்னெல்லி, மொன்டானாவின் ஜொன் டெஸ்டெர், மிசோரியின் கிளையர் மெக்காஸ்கில், ஓகியோவின் ஷெர்ரொட் பிரௌன், விஸ்கான்சினின் டாமி பால்ட்வின் மற்றும் புளோரிடாவின் பில் நெல்சன் ஆகியோர் இதில் உள்ளடங்குவர்.

செனட் சபையின் ஜனநாயக கட்சி தலைவர் சக் சூமர் மற்றும் செனட்டில் உள்ள நடைமுறையளவில் ஒவ்வொரு மற்ற ஜனநாயக கட்சியினரும் தேர்தல் கணக்கீடுகளையும் கருத்திற்கொள்ளாமல் சாதனையளவிலான இராணுவச் செலவினங்களுக்கு வாக்களித்தனர். குடியரசு கட்சியில் உள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தீவிர ஆதரவாளர்களைப் போல அதேயளவுக்குத் தீவிரத்தை அவர்கள் தங்களின் வாக்குகளில் எடுத்துக்காட்டினர். அவர்கள் இதில், பிரதிநிதிகள் சபை ஜனநாயக கட்சியினரை முன்மாதிரியாக பின்தொடர்ந்தனர், அவர்கள் 139 க்கு 49 என்ற பெரும் வித்தியாசத்தில் பென்டகன் நிதி ஒதுக்கீட்டு மசோதாவை ஆதரித்திருந்தனர்.

செனட் சபை குடியரசு கட்சி தலைவர் மிட்ச் மெக்கொன்னெல் அறிவிக்கையில், “இந்த NDAA, இந்தாண்டு தொடக்கத்தில் இருகட்சியினது உடன்பாட்டுடன், 15 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ஆண்டு அதிகபட்ச அதிகரிப்புடன் அமெரிக்க ஆயுதப்படைகளுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கும் வரவு-செலவு திட்டக்கணக்கு மீது நாம் செய்திருந்த விரிவாக்கத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது,” என்றார்.

இதேபோல பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் அந்த வாக்குகளைப் புகழ்ந்துரைத்தார், அந்த மசோதா விரைவாக நிறைவேற்றப்பட்டமை "நமது இராணுவம் அனுபவித்து வரும் ஆழ்ந்த மற்றும் இணக்கமான இருகட்சி ஆதரவை எடுத்துக்காட்டுவதாக" கூறினார். உண்மையில் NDAA இன் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையின் விவாத கூற்று, எதிர்நோக்கும் செலவின மட்டங்களில் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் கோரியதை விட 30 பில்லியன் டாலர் அதிகமாக வைத்தது என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்திருக்கலாம், ஆனால் அவர் அதை குறிப்பிடவில்லை.

எளிதில் கையாள முடியாத கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக காட்டிக் கொண்டு, ஊடகங்கள், அமெரிக்க நாடாளுமன்றத்தை ஒன்றும் செய்யவியலாத ஓர் அமைப்பாக சித்தரிக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டதற்கு இடையே, NDAA நிறைவேற்றப்பட்டிருப்பதானது அக்டோபர் 1 இல் புதிய நிதியாண்டு தொடங்குவதற்கு முன்னரே பென்டகன் நிதி ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்ட தொடர்ச்சியான 58 வது ஆண்டைக் குறித்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்றியமையா நலன்கள் என்று வருகையில், இவ்விரு முதலாளித்துவ கட்சிகளாலும் சூழ்நிலைக்கேற்ப விரைவாகவும் திறமையாகவும் நகர முடியும். அதுவே உழைக்கும் மக்கள் அவசரகால நிலைமையை முகங்கொடுக்கையில்—DACA ஐ நீக்கியதால் நூறாயிரக் கணக்கான புலம்பெயர்ந்த இளைஞர்கள் பாதிக்கப்படுகையில், அல்லது கலிபோர்னியாவில் காட்டுத் தீயில் பலியாகும் போது அல்லது மிச்சிகனின் ஃப்ளின்ட் இல் மற்றும் வேறு பல பழைய தொழில்துறை மையங்களிலும் உள்கட்டமைப்பு சிதைந்து சேதமுற்றதை முகங்கொடுக்கையில்—இவ்விரு கட்சிகளின் தலைவர்களும் எதுவும் செய்வதற்கில்லை என்ற அறிவிப்புகளை வாந்தி எடுப்பார்கள்.

உலக சோசலிச வலைத் தளம் ஏற்கனவே பிரதிநிதிகள் சபை வாக்கெடுப்பு மீதான அதன் முந்தைய அறிக்கையில், இந்த மசோதாவின் வழிவகைகளில் சிலவற்றை, குறிப்பாக ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் வட கொரியா மீதான இணையவழி தாக்குதல்களுக்கு அதன் அச்சுறுத்தலான அங்கீகாரத்தை வழங்கியதை பகுத்தாராய்ந்துள்ளது.

இருப்பினும் இந்த இறுதி சட்டமசோதா அமெரிக்க ஆளும் உயரடுக்கின் முன்னுரிமைகள் குறித்து என்ன கூறுகிறது என்ற நிலைப்பாட்டில் இருந்து, இதை பகுத்தாராய்வது மதிப்புடையதாக இருக்கும்.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் இரண்டு இடங்களிலும் முழு-அளவிலான இராணுவ நடவடிக்கைகள் நடத்தப்பட்ட கடைசி ஆண்டான 2010 க்குப் பின்னர், டாலர் வரையறைகளில் இந்த 708 பில்லியன் டாலர் ஒப்புதலே மிகப் பெரிய தொகையாகும். இது 9/11 தாக்குதல்களுக்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட பென்டகனுக்கான புதிய அடித்தளத்தைப் பேணுகிறது. வழமையான பென்டகன் வரவு-செலவு திட்டக்கணக்கு 1990 களில் ஓராண்டுக்கு 300 பில்லியன் டாலர் என்பதிலிருந்து, கடந்த தசாப்தத்தில் ஓராண்டுக்கு 600 பில்லியன் டாலரை விட அதிகமாக, 2001 க்குப் பின்னர் இருந்து அண்மித்து இரட்டிப்பாகி உள்ளது. இதில், வெளிநாட்டு அவசர நடவடிக்கைகள் என கூறப்படுபவை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்கள், பின்னர் ISIS க்கு எதிரானவை ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் சேர்க்கப்படவில்லை.

2019 நிதியாண்டில் பென்டகனின் வழமையான நடவடிக்கைகளுக்கான தொகை 617 பில்லியன் டாலராக இருக்கும், இதற்கு கூடுதலாக வெளிநாட்டு அவசர நடவடிக்கைகளுக்கான 69 பில்லியன் டாலர் மற்றும் அணுஆயுத தளவாடங்கள் கட்டமைப்பதை மேற்பார்வையிடும் எரிசக்தித்துறையின் அணுஆயுத நடவடிக்கைகளுக்கான 22 பில்லியன் டாலர் இருக்கும்.

அவசர சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இதுபோல எந்த ஆதாரவளங்களும் ஒன்று திரட்டப்படுவதில்லை என்கின்ற நிலையில், அவசர சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நிதி தேவைகளுடன் இந்த மசோதாவின் வழிவகைகளை ஒப்பிட்டுப்பார்ப்பது பயனுள்ளது.

வழமையான பென்டகன் செலவுகளுக்கான இந்த 617 பில்லியன் டாலர் என்பது அமெரிக்காவில் உள்ளாட்சிகள், மாநில அரசாங்கங்கள் மற்றும் மத்திய அரசாங்கம் சேர்ந்து மொத்தமாக பொதுக் கல்விக்காக செலவிடும் (2016 இல் 620 பில்லியன் டாலர்) அந்தளவிற்கான தொகையாகும். இது ரஷ்யா அதன் இராணுவத்திற்காக செலவிடுவதை (61 பில்லியன் டாலர்) விட 10 மடங்கு அதிகமாகும்.

சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களுக்கான, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு எங்கிலுமான டிரோன் போர்முறைகளுக்கான 69 பில்லியன் டாலர் என்பது உலகில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய மொத்தம் 862 மில்லியன் மக்களுக்கு உணவளிக்க அவசியப்படும் பணத்தின் (30 பில்லியன் டாலர்) இரண்டு மடங்கை விட கூடுதலாகும்.

அந்த சட்டமசோதா, 13 புதிய போர்க்கப்பல்கள் கட்டுதல் உட்பட கப்பல்கட்டுவதற்காக 24.1 பில்லியன் டாலர் ஒப்புதல் வழங்குகிறது, இவற்றில் ஒரு அணுஆயுத மேந்திய விமானந்தாங்கி போர்க்கப்பல் மற்றும் அணுஆயுதமேந்திய அணுசக்தியில் செயல்படும் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களும் உள்ளடங்கும்.

இந்தளவிலான பணத்தைக் கொண்டு, 24.1 பில்லியன் டாலர், அமெரிக்காவில் வீடற்ற ஒவ்வொருவருக்கும் கண்ணியமான வீடு வழங்கலாம் (20 பில்லியன் டாலர்), எஞ்சிய தொகையில் மிச்சிகனின் ஃப்ளின்டில் நஞ்சு கலந்த குடிநீர் உள்கட்டமைப்பை மாற்றி அமைக்க முடியும்.

77 புதிய F-35 கூட்டு தாக்குதல் போர் விமானங்களுக்கான 7.6 பில்லியன் டாலர், குறுகிய தூரத்தில் மேலெழும்பும் மற்றும் செங்குத்தாக தரையிறங்கும் F-35B மின்னல்வேக II கூட்டு தாக்குதல் போர் விமானங்களுக்காக (கப்பற்படைகளுக்கானது) 2.3 பில்லியன் டாலர் மற்றும் கடற்படையில் பயன்படுத்துவதற்கான ஒன்பது F-35C ரக போர்விமானங்களுக்காக 1.1 பில்லியன் டாலர் உட்பட, இந்த சட்டமசோதா 12 பில்லியன் டாலர் வழங்குகிறது.

இந்தளவிலான பணம், வளரும் உலக நாடுகளின் ஒவ்வொரு தாய்மாருக்கும் பிரசவ கால மற்றும் கர்ப்ப கால கவனிப்பை வழங்கக் கூடியதாகும் (13 பில்லியன் டாலர்). இது மலேரியாவால் 4 மில்லியன் பேர் உயிரிழப்பதைத் தடுப்பதற்கான சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்துகளை வழங்க தேவையான தொகையை விட இரட்டிப்பாகும் (6 பில்லியன் டாலர்).

தொழிலாள வர்க்கம் இராணுவத்திற்காக மிகப்பெரியளவில் தொகைகள் வாரியிறைக்கப்படுவதை எதிர்க்க வேண்டும் ஏனென்றால் அது அவசர சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஆதாரவளங்களை மிக அதிகளவில் வீணடிக்கிறது என்பதற்காக மட்டுமல்ல, மாறாக இந்த பாரிய இராணுவ-உளவுத்துறை எந்திரத்தைக் கட்டமைப்பது ஜனநாயக உரிமைகளுக்கும் மற்றும் ஒட்டுமொத்த மனிதயினத்தின் உடல்ரீதியிலான உயிர்வாழ்வுக்கும் இரண்டுக்கும் ஒரு மரணகதியிலான அச்சுறுத்தலாகும்.

இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிராக ஒரு சோசலிச மாற்றீடுக்காக பெருந்திரளான மக்களின் சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே, அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும், உழைக்கும் மக்கள் முகங்கொடுக்கும் மிக அவசர பணியாகும்.