Print Version|Feedback
Unprecedented monsoonal floods kill over 370 in southwest India
தென்மேற்கு இந்தியாவில் உருவான முன்நிகழ்ந்திராத அளவிலான பருவமழை வெள்ளத்தில் 370 க்கும் அதிகமானோர் பலி
By Sathish Simon
20 August 2018
தென்மேற்கு இந்திய மாகாணமான கேரளாவில் ஆகஸ்ட் 8 அன்று பெய்யத் தொடங்கிய கடுமையான பருவமழை விளைவித்த திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 370 க்கும் அதிகமானவர்கள் பலியானதோடு, சுமார் இரண்டு மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இம்மாகாணத்தின் 14 மாவட்டங்களில் பன்னிரண்டு மாவட்டங்கள் கடும் வெள்ளத்தில் மூழ்கிப்போன நிலையில், 1924 ஆம் ஆண்டிற்கு பிந்தைய கேரளாவின் மிக மோசமான பேரழிவாக இது விவரிக்கப்படுகிறது. இந்த வெள்ளத்தால், 20,000 வீடுகள் மற்றும் 40,000 ஹெக்டர் பரப்பளவிலான விவசாயப் பயிர்கள் அழிந்து போயின, மேலும் குறைந்தபட்சம் 83,000 கிமீ அளவிலான சாலைகளும் பழுந்தடைந்து போயின என்ற வகையில் பயிர் மற்றும் சொத்து சேதம் என்பது கிட்டத்தட்ட 80 பில்லியன் ரூபாய் ($US 1.146 billion) அளவிற்கு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பேரழிவுகர நிலச்சரிவுகளால் ஒட்டுமொத்தமாக அழிந்துபோன கிராமப்புறங்களில் தான் பெரும்பாலான இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன. இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் 4,000 க்கும் அதிகமான மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மாநில அரசு அதிகாரிகளின் கருத்துப்படி, ஆற்றங்கரையோர நகரமான செங்கனூரில் சிக்கித்தவிக்கும் 5,000 க்கும் மேற்ப்பட்டவர்கள் உட்பட, இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். மேலும், வயிற்றுப்போக்கு, காலரா, வயிற்றுக்கடுப்பு, தைஃபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நீரினால் பரவும் நோய்கள் உருவானால் அதனாலும் அதிக உயிர்கள் பலியாகக்கூடும் என்றும் அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
ஞாயிறன்று பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துபோன நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் விடுக்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ “சிவப்பு எச்சரிக்கை” அறிவிப்புகள் தளர்த்தப்பட்டாலும், அணை நீர் மட்டங்கள் இன்னும் அபாயகரமானதாகவே உள்ளன. மேலும் குறிப்பாக, இடுக்கி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் போன்ற மாவட்டங்களில் இன்னும் கனமழை இருக்கக்கூடும் என்ற வானிலை முன்னறிவிப்புடன், ஆகஸ்ட் 23 வரையிலும் அம்மாநிலத்தில் மழைப் பொழிவு தொடரும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை (Indian Meteorological Department) எச்சரித்துள்ளது. அதிலும், இடுக்கி மாவட்டத்தில், ஜூன் மாதம் தொடங்கி 321 சென்டிமீட்டருக்கு அதிகளவிலான மழை பெய்து, தற்போது மாநிலத்தின் மற்ற பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் அம்மாவட்டம் உள்ளது.
இப்பேரழிவின் அளவைக் குறைத்துக்காட்டும் ஒரு முயற்சியில், இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் (Stalinist Communist Party of India-Marxist) அல்லது CPM கட்சியின் கேரள முதலமைச்சர் விஜயன் ஊடகத்திற்கு இவ்வாறு தெரிவித்தார்: “கேரளாவில் நிலைமைகள் கட்டுக்குள் உள்ளன… என்பதுடன், இங்கு நிலைமைகள் பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளன.”
விஜயனின் கூற்றுக்கள் இவ்வாறு இருந்தாலும், மாநிலம் எங்கிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் வெள்ளத்தால் சூழப்பட்ட தங்களது வீடுகளில் சிக்கித் தவிக்கின்றனர் அல்லது மீட்பு முகாம்களில் உணவு, குடி தண்ணீர் மற்றும் மருத்துவ உதவி போன்ற அத்தியாவசிய தேவைகளைப் பெற வழியின்றி தவிக்கின்றனர் என்பதுதான் உண்மை.
திருச்சூர் மாவட்ட தேவாலயத்தில் தற்போது தஞ்சமடைந்துள்ள 20 வயதான வெள்ளத்தில் தப்பிய இந்திரஜீத் குமார் என்பவர் AFP நிருபரிடம் பின்வருமாறு தெரிவித்தார்: “எங்களைச் சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து இருந்தாலும், தற்போது இங்கு மின்சாரம் கிடையாது, உணவு மற்றும் குடி தண்ணீர் கூட எங்களுக்கு கிடைக்காது என்ற நிலையில், இவை எங்கள் வாழ்க்கையின் மிக பயங்கரமான நேரங்களாகும்…..”
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீதான இந்திய உயரடுக்கின் அலட்சியத்தைக் காட்டும் தெளிவான ஒரு அறிகுறியாக, மத்திய அரசாங்கம் வெறும் 5 பில்லியன் ரூபாய்களை ($US 72 million) நிவாரண உதவியாக வழங்கும் என அறிவித்தார். அதாவது, மாநில அரசாங்கம் கோரிய நிவாரணத் தொகையான 12 பில்லியனில் பாதிக்கும் குறைவானதாகவே அது உள்ளது. மேலும், பிரதம மந்திரியின் வழமையான நடைமுறையாக, வெள்ளியன்று, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ஹெலிகாஃப்டரில் பறந்து அவர் பார்வையிட்டார்.
ஐ.நா. பேச்சாளர் ஸ்டீபன் துஜாரிக் இந்த பேரழிவு குறித்து அவர் மிகுந்த “வருத்தமுற்றதாக” அறிவித்தார், என்றாலும், நிவாரணத் தொகை எதையும் ஐ.நா. வழங்குமா என்று கேட்கப்பட்டபோது, குறிப்பாக எந்தவித உதவியையும் இந்தியா கோரவில்லையே என்று அவர் கூறினார்.
இந்நிலையில், கேரளா முழுவதிலும் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் ஒருங்கிணைந்து, நிவாரண முகாம்களுக்கு அனுப்புவதற்காக உணவு, மருந்துகள், உடைகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை சேகரித்து வருகின்றனர் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் ஒரு மதிப்பீட்டின் படி, கேரள கடற்கரைப் பகுதிகளைச் சார்ந்த 600 மீனவர்கள் கூட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் அறியப்படுகிறது.
ஆண்டின் இந்த குறிப்பிட்ட காலத்தில் இந்த மாநிலத்தில் வழக்கமாக சுமார் 1,649 மில்லி மீட்டர் வரையிலான மழைப் பதிவு இருக்கும், என்றாலும் இந்த ஆண்டில் ஏற்கனவே 2,344 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்துவிட்டது. இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவின் மட்டங்கள் என்பது முன்நிகழ்ந்திராத ஒன்று என்பதுடன், இது ஒரு “இயற்கையான” நிகழ்வு அல்ல.
அரசியல் வர்ணம் பூசிய அனைத்து இந்திய அரசாங்கங்களும் – மோடியின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சி (BJP) முதல் அதன் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி அல்லது தற்போது ஆட்சியில் இருக்கும் ஸ்ராலினிச சிபிஎம் கட்சி வரை – தற்போதைய இந்த மனிதப் பேரழிவிற்கு பொறுப்பாளிகள் ஆவர். ஏனென்றால், வெளிநாட்டு மற்றும் உள்ளூர் மூதலீட்டாளர்களின் இலாபங்களை பெருக்கும் நோக்கத்தில் திளைத்த இந்த அரசாங்கங்கள், அவசியமான வெள்ள நிவாரணத்தையும் அவசரகால மீட்புக்கான உள்கட்டமைப்பையும் வழங்க மறுத்துவிட்டன என்பது தான் காரணம்.
ஆற்றுப் படுகைகள் மீது எழுப்பப்பட்ட சட்டவிரோதமான கட்டிடங்கள் மற்றும் அங்கீகாரமற்ற புவியடி பாறைச் சுரண்டல்கள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி, தற்போதைய கேரள வெள்ளம் என்பது “மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பேரழிவே” என்று சுற்றுச்சூழலியல் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
இந்திய அரசாங்கம் நிறுவிய மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியல் நிபுணர் குழுவின் (Western Ghats Ecology Expert Panel-WGEEP) முன்னாள் தலைவரான 76 வயதான சுற்றுச்சூழல் வல்லுநர் மாதவ் காட்கில், கேரளாவில் பொதுவாக பருவகால மழைப் பொழிவு என்பது கடுமையாக இருக்கும் என்றாலும், தற்போதைய வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவுகளும் இதற்கு முன்னர் அனுபவித்திருந்திராதவையாக உள்ளன என்று ஊடகத்திற்கு தெரிவித்தார்.
2011 இல், WGEEP, கேரளாவில் பல பகுதிகளை சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை என வகைப்படுத்த பரிந்துரைத்தது. மேலும், புவியடி பாறைச் சுரண்டல்கள், கனிமச் சுரங்கத் தோண்டல்கள், காடுகளின் மறுபயன்பாட்டிற்கு சட்டவிரோதமாக திட்டமிடுதல் மற்றும் உயர்ந்தளவிலான கட்டிடங்களைக் கட்டமைத்தல் போன்றவற்றால் அங்கு பல பகுதிகள் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் என்றும் இந்த அறிக்கை கூறியிருந்தது. அத்துடன், இத்தகைய ஆபத்தான நடைமுறைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் அழைப்பு விடுத்திருந்தது.
2011 முதல் 2016 வரையிலான காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் முதலாக 2016 க்கு பிந்தைய ஸ்ராலினிச சிபிஎம் கட்சி தலைமையிலான அரசாங்கம் வரையிலான கேரள மாநில அரசாங்கங்கள், இந்தப் பரிந்துரைகளை நிராகரித்ததுடன், WGEEP கண்டறிந்த சுற்றுச்சூழல் சார்ந்த அபாயகரமான நடைமுறைகளை தொடர்வதற்கும் அனுமதித்து வந்துள்ளன.
“இந்த வெள்ளம் நிச்சயமாக, ஏற்கனவேயுள்ள சட்டவிரோதமான கல் சுரங்கங்கள் அல்லது ஆற்றுப்படுகைகளில் கட்டப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் ஆகியவற்றைப் பற்றி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது,” என்று காட்கில் கூறினார். மேலும், “இந்த அர்த்தத்தில் பார்த்தால், அங்கு பெய்யும் கடுமையான மழையும், மனிதத் தலையீடும் தான் மிகுந்த மோசமான இப்பேரழிவை உருவாக்கியுள்ளன என்ற வகையில் நிச்சயமாக இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேராபத்தே.”