Print Version|Feedback
Washington allies with ISIS as great power conflict trumps “war on terror”
வல்லரசு மோதல் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" முழக்கம் செய்கையில், ISIS உடன் வாஷிங்டன் கூட்டு சேர்கிறது
Bill Van Auken
7 August 2018
“பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர்" என்றழைக்கப்படுவதன் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய அண்மித்து இரண்டு தசாப்த கால ஒருங்குவிப்பு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக இந்தாண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்ட "தேசிய பாதுகாப்பு மூலோபாய" ஆவணம் பட்டவர்த்தனமாக அறிவித்தது. அதன் இடத்தில், “வல்லரசு" மோதலுக்கு, அதாவது அணுஆயுதமேந்திய ரஷ்யா மற்றும் சீனாவுடனான மோதலுக்குத் தயாரிப்பு செய்வதன் அடிப்படையில் ஒரு புதிய மூலோபாய நோக்குநிலை அறிமுக்கப்படுத்தப்பட்டது.
கடந்த ஒரு தசாப்தத்தில் பென்டகன் வெளியிட்ட இத்தகைய முதல் பாதுகாப்பு மூலோபாயமான இது, மூன்றாம் உலக போருக்கான தயாரிப்புகளை வாஷிங்டன் எந்தளவுக்கு அவசரகதியில் காண்கிறது என்பதைத் தெளிவுபடுத்தியது.
இக்கொள்கை மாற்றத்தின் குறிப்பிடத்தக்க மூர்க்கமான மற்றும் குற்றகரமான விளைவு, அமெரிக்க படைகள் செயலூக்கத்துடன் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மூன்று பிரதான அரங்குகளில் அதிகரித்தளவில் வெளிப்படையாக வெளிப்பட்டு வருகிறது. அமெரிக்காவும் அதன் உள்நாட்டு பினாமிகளும் வாஷிங்டனின் பரந்த மூலோபாய நலன்களைப் பின்பற்றுவதில் ISIS மற்றும் அல் கொய்தா கூறுபாடுகளின் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றன மற்றும் அவற்றின் சேவைகளுடன் தங்களைக் கூட்டு சேர்த்து வருகின்றன என்பதற்கு யேமன், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் செய்திகள் உறுதியான ஆதாரங்களை வழங்குகின்றன.
யேமனில், நெகழ்வான சர்வதேச அல் கொய்தா வலையமைப்பின் "மிக ஆபத்தான" துணை அமைப்பாக அமெரிக்க அரசால் முத்திரைக் குத்தப்பட்ட, அரேபிய தீபகற்ப அல் கொய்தாவின் (AQAP), ஆயிரக் கணக்கானவர்கள் இல்லையென்றாலும், நூற்றுக் கணக்கான போராளிகள், அரபு உலகின் நெருக்கமான வாஷிங்டன் கூட்டாளிகளான சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றால், 2015 க்குப் பின்னர் இருந்து வறிய நாடான யேமனுக்கு எதிராக இந்த பாரசீக வளைகுடா எண்ணைய் முடியாட்சிகள் தொடுத்து வரும் அமெரிக்க ஆதரவிலான இனப்படுகொலைக்கு நெருக்கமான போரில் தரைப்படை சிப்பாய்களாக சண்டையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.
அசோசியேடெட் பிரஸ் திங்களன்று வெளியிட்ட ஒரு புலனாய்வு அறிக்கையின்படி, சவூதி தலைமையிலான கூட்டணி "அல் கொய்தா போராளிகளுடன் இரகசிய உடன்படிக்கைகள் ஏற்படுத்தி கொண்டு, முக்கிய சிறுநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் இருந்து வெளியேற சிலருக்கு நிதி வழங்கி உள்ளது மற்றும் சிலரை ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணப் பொக்கிஷங்களுடன் தப்பிச் செல்ல அனுமதித்துள்ளது… நூற்றுக்கும் அதிகமானவர்கள் இந்த கூட்டணியிலேயே இணைய நியமிக்கப்பட்டார்கள்.”
அது தொடர்ந்து குறிப்பிடுகையில், “அந்த உடன்பாட்டிற்காக பங்குபற்றிய முக்கியஸ்தர்கள், அமெரிக்காவுக்கு இந்த ஏற்பாட்டுகள் தெரியும் என்றும், எந்தவித டிரோன் தாக்குதல்களையும் அது நிறுத்தி வைத்திருப்பதாகவும் கூறினர்,” என்று குறிப்பிட்டது.
“அமெரிக்கா யேமனில் என்ன செய்து கொண்டிருக்கிறதோ அதில் பெரும்பாலும், AQAP க்கு உதவி செய்து கொண்டிருக்கிறது என்பதோடு, அங்கே அது குறித்து நிறைய மனக்கவலைகள் உள்ளன என்பது அமெரிக்க இராணுவத்தின் கூறுபாடுகளுக்கு நன்றாக தெரியும்,” என்று சிஐஏ உடன் இணைப்பு கொண்ட வாஷிங்டன் சிந்தனை குழாமான ஜேம்ஸ்டவுன் பவுன்டேசனின் ஒரு மூத்த பகுப்பாய்வாளர் மிக்கெல் ஹோர்டன் அசோசியேடெட் பிரஸ் க்குத் தெரிவித்தார்.
“ஆனால், ஈரானிய விரிவாக்கவாதம் என்று அமெரிக்கா எதை பார்க்கிறதோ அதற்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவூதி அரேபிய முடியாட்சியை ஆதரிப்பதே AQAP உடன் சண்டையிடுவதை விட மற்றும் யேமனில் ஸ்திரப்பாட்டைக் கொண்டு வருவதைக் காட்டிலும் முன்னுரிமையில் வருகிறது,” என்பதையும் ஹோர்டன் சேர்த்துக் கொண்டார்.
இது முற்றிலும் நிலைமையை குறைத்துக் காட்டுவதாகும். மில்லியன் கணக்கான யேமன் மக்களை பட்டினியின் விளிம்பிற்கு கொண்டு வந்துள்ள ஒரு போருக்கு வாஷிங்டன் இன்றியமையா இராணுவ ஒத்துழைப்புகளை வழங்கி வருகிறது. அது அதன் மூலோபாய நிலைப்பாட்டைப் பலப்படுத்திக் கொள்வதற்காகவும், அமெரிக்க பிராந்திய மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தலாக உணரப்படும் ஈரானிய செல்வாக்கிற்கு எதிராக அது கூட்டு சேர்ந்துள்ள பிற்போக்குத்தனமான அரபு ஆட்சிகளுக்கு முட்டுக் கொடுப்பதற்காகவும் பெரும்பாலான யேமன் மக்களைத் துடைத்தழிக்க தயாரிப்பு செய்து வருகிறது.
யேமனிய செங்கடல் துறைமுக நகரமான ஹொதிதாஹ் மீது நடத்தப்பட்டு வரும் சமீபத்திய நாட்களின் முற்றுகையில் அப்போர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, இதற்கு ட்ரம்ப் நிர்வாகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இந்நடவடிக்கையில் இரண்டரை இலட்ச மக்களாவது உயிரிழப்பார்கள் என்றும், அதேவேளையில் மக்களில் குறைந்தபட்சம் 70 சதவீத மக்களுக்கு உணவு, எரிபொருள் மற்றும் மருத்துவ உதவிகளுக்கு ஒரே ஜீவநாடியாக விளங்கும் அத்துறைமுகத்தை அந்நாடு மூடினால் நாடெங்கிலும் இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் பட்டினியில் இறப்பார்கள் என்றும் ஐ.நா. எச்சரித்துள்ளது.
இந்த மிகப்பெரிய மற்றும் இரத்தந்தோய்ந்த போர் குற்றங்களில் யேமன் மக்களைப் பலி கொடுப்பதற்காக அல் கொய்தா போராளிகளை நியமிப்பதானது முற்றிலும் அமெரிக்க கொள்கையுடன் பொருந்தி உள்ளது.
இதற்கிடையே சிரியா சம்பந்தமாக, கடந்த வியாழனன்று ஓர் அறிக்கை வெளியிட்ட ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், சிரிய-ஈராக்கிய எல்லைக்கு அருகே, அல்-தனாஃப் ஐ சுற்றிய பகுதியில் ISIS அதன் படைகளை அதிகரித்தளவில் ஒன்றுதிரட்டி இருப்பதாகவும், அங்கே தான் அமெரிக்க இராணுவம் ஓர் இராணுவத் தளத்தை பேணி வருகிறது என்பதுடன் அதைச் சுற்றி 34 மைல்களுக்கு அது ஒருதலைபட்சமாக நுளைவு அனுமதி தடைசெய்யப்பட்ட மண்டலத்தை அறிவித்துள்ளது. அங்கிருக்கும் அமெரிக்க துருப்புகள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தை எதிர்க்கும் "கிளர்ச்சியாளர்கள்" எனப்படுபவர்களுக்கு பயிற்சி வழங்கி உள்ளதுடன், ISIS க்கு ஒரு பாதுகாப்பு மூடுதிரையை வழங்கி வருவதாக தெரிகிறது என்று எச்சரித்தது.
ஈராக் மற்றும் சிரியாவில் ISIS ஐ “நிர்மூலமாக்குவதை” செய்து வருகிறோம் என்ற சாக்குபோக்கில் தொடங்கப்பட்ட, சிரியாவில் அமெரிக்காவின் சட்டவிரோத இராணுவத் தலையீடானது, ISIS சுற்றி வளைக்கப்பட்ட நகரங்களில் இருந்து மீண்டும் மீண்டும் அவர்கள் தப்பிப்பதற்கு அமெரிக்காவும் அதன் உள்ளூர் பினாமிகளும் உதவி செய்வதைக் கண்டுள்ளது. மிகவும் இழிவார்ந்த சம்பவம் ரக்காவில் நடந்தது, அங்கே 4,000 ISIS போராளிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும், அத்துடன் அவர்களின் ஆயுதங்கள், படைத்தளவாடங்கள் மற்றும் வெடிகுண்டுகளையும் ஏற்றிக் கொண்டு கிழக்கு சிரிய பாலைவனத்திற்குள் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்துச் சென்றன.
இந்த போராளிகளை அரசு துருப்புகளுக்கு எதிராக திருப்பி விடுவதும், போரால் சீரிழந்த அந்த நாட்டின் மறுகட்டமைப்பிற்கு அத்தியாவசியமாக விளங்கும் சிரியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களின் மீது டமாஸ்கஸிடம் இருந்து கட்டுப்பாட்டைப் பறிப்பதற்கான அமெரிக்க நடவடிக்கைக்கு ஒத்துழைக்குமாறு செய்வதுமே குறிக்கோளாகும். சிரியாவில் அமெரிக்காவின் நோக்கம் ஈரானுக்கு எதிரான போருக்குப் பரந்த தயாரிப்புகளைச் செய்வதோடு மட்டுமல்ல, மாறாக ரஷ்யாவுக்கு எதிராகவும் தயாரிப்புகளைச் செய்வதுடன் பிணைந்துள்ளன.
இறுதியாக, ஆப்கானிஸ்தான் சம்பந்தமாக, அங்கே அமெரிக்கா அண்மித்து 17 ஆண்டுகள் போர் தொடுத்துள்ளது, “ISIS போராளிகள் ஆப்கான் அரசின் கைதிகளா அல்லது கௌரவமான விருந்தாளிகளா?” என்று தலைப்பிட்டு நியூ யோர்க் டைம்ஸ் ஞாயிறன்று ஒரு கட்டுரை பிரசுரித்தது.
வடக்கு ஆப்கானிஸ்தானில் தாலிபானால் தோற்கடிக்கப்படுவதைத் தடுப்பதற்காக, ISIS இன் இரண்டு மூத்த தளபதிகளும், அவர்களுடன் 250 போராளிகளும், எவ்வாறு அமெரிக்க ஆதரவிலான ஆப்கான் தேசிய இராணுவத்திடம் சரணடைந்தார்கள் என்பத்தைக் குறித்து அக்கட்டுரை அறிவித்தது.
“ஆனால் அவர்கள் கைதிகள் என்றாலும், அவ்வாறு கூற முடியாது இருந்தது,” என்று டைம்ஸ் குறிப்பிட்டது. “அரசு ஷெபர்கான் மாகாண தலைநகரில் அவர்கள் தங்குவதற்கு விருந்தினர் மாளிகை ஏற்பாடு செய்தது. அம்மாகாண ஆளுநரின் தகவல்படி, அந்த கிளர்ச்சியாளர்களை அடைத்து வைப்பதற்காக அதைச் சுற்றி பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டிருக்கவில்லை, மாறாக அவர்களின் எதிரிகளாக இருக்கக்கூடியவர்களைத் தடுத்து வைப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்தார்கள். அந்த போராளிகள் நிராயுதபாணியாக இருந்தார்கள் என்றாலும், அவர்கள் தங்களின் செல்போன்களையும், ஏனைய தனிப்பட்ட உடைமைகளையும் வைத்திருக்க அனுமதிக்கப் பட்டிருந்தார்கள்.”
“இஸ்லாமிக் அரசு சரணடைவில் உள்ள போலி இயல்பு தாலிபான்களுக்கான ஒரு பிரச்சார வெகுமதி என்பதை நிரூபித்துள்ளது,” என்பதையும் டைம்ஸ் சேர்த்துக் கொண்டது.
அப்பத்திரிகை இந்த “பிரச்சாரத்தின்” இயல்பைக் குறித்து எந்த விபரங்களையும் வழங்கவில்லை, மாறாக ISIS போராளிகள் “சாலைகளில் செல்வது அபாயகரமான பயணமாக இருக்கலாம் என்பதால் அதை தவிர்த்து, போர்க்களத்தில் இருந்து ஆப்கான் இராணுவ ஹெலிகாப்டர்களில் பயணித்தனர்" என்றது குறிப்பிடுகிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களைத் தாக்கியும், அப்பிராந்தியத்தில் அமெரிக்க புவிசார்-மூலோபாய நலன்களுக்குச் சேவை செய்யாத, மோதல் சம்பந்தமாக எந்தவொரு பேச்சுவார்த்தை தீர்மானமும் நடைமுறைக்கு வராதவாறு செய்யும் நோக்கில் அட்டூழியங்களை நடத்தியும், அங்கே ISIS ஓர் அமெரிக்க சொத்திருப்பாக செயல்பட்டுள்ளது என்பதே இந்த விபரங்களில் இருந்து கிடைக்கும் வெளிப்படையான தீர்மானமாக உள்ளது.
மூன்று கண்டங்களில் பல்வேறு அமெரிக்க இராணுவ தலையீடுகளில் ஒரு பிரதான இலக்காக கூறப்பட்ட ISIS க்கும் பென்டகனுக்கும் இடையே அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இந்த பகிரங்க கூட்டணி, பெரிதாக ஒன்றும் ஒரு புதிய கொள்கை இல்லை, இது, அனைத்து மிகப்பெரிய "போலி செய்தி" கதைகள், “பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர்" ஆகிய இட்டுக்கட்டப்பட்ட வாய்சவடால்களுக்கு மத்தியில், ஒருபோதும் முழுவதுமாக கைவிடப்பட்டிராத ஒரு பழைய கொள்கையின் புதுப்பிப்பே ஆகும்.
இந்த முடிவில்லா போரில் உண்மையில் பரம எதிரியாக காட்டப்பட்ட அல் கொய்தா, 1980 களில் சோவியத் ஆதரவிலான அரசாங்கத்திற்கு எதிராக ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய முஜாஹிதீன் க்கு சிஐஏ மற்றும் அமெரிக்கா வழங்கிய ஆதரவின் நேரடியான விளைபொருளாகும். அப்போதிருந்து, இந்த கூறுபாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இரண்டு விதத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளன, ஒரு கட்டத்தில் இவை ஆட்சி மாற்றத்திற்கான போர்களில் பினாமி சக்திகளாக சேவையாற்றி உள்ளன, மற்றொரு விதத்தில் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுகிறோம் என்ற பெயரில் அமெரிக்க தலையீடுகளுக்கு ஒரு சாக்குபோக்காக சேவையாற்றி உள்ளன.
“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற கவசத்தின் கீழ், அடுத்தடுத்து வந்த அமெரிக்க அரசாங்கங்கள், ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் ஒன்றுபோல, மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்ட போர்களை மட்டும் நடத்தவில்லை, மாறாக உள்நாட்டு உளவுப்பார்ப்பு தொடங்கி இணைய தணிக்கை வரையில் ஜனநாயக உரிமைகள் மீதான சளைக்காத தாக்குதலையும் நடத்தி உள்ளன.
பென்டகன் மற்றும் ISIS க்கு இடையே எழுந்து வரும் சர்வதேச கூட்டணி இத்தகைய கொள்கைகளின் அடியிலிருக்கும் உண்மையான நலஙன்களை அம்பலப்படுத்த மட்டுமே சேவையாற்றுகின்றன, இவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஒப்புயர்வற்ற நிலை வீழ்ச்சி அடைவதை சரிகட்டவும் மற்றும் அதன் முடமாகி வரும் உலகளாவிய மேலாதிக்கத்தைப் பாதுகாக்கவும், மற்றும் நவீன அமெரிக்க வரலாறில் மிக அதீத சமத்துவமின்மையால் குணாம்சப்பட்ட ஒரு சமூக ஒழுங்கமைப்பை பேணுவதற்காக உள்நாட்டில் ஒடுக்குமுறையை நடத்தவும் போர் தொடுப்பதுடன் பிணைந்துள்ளன.