ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Amidst Turkish crisis Indian rupee falls to all-time low

துருக்கி நெருக்கடியின் மத்தியில் இந்திய ரூபாயின் மதிப்பு என்றுமில்லா மட்டத்திற்கு வீழ்ச்சி

By Deepal Jayasekera 
18 August 2018

துருக்கிய லீரா சம்பந்தப்பட்ட தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் செவ்வாயன்று, இந்திய ரூபாயின் மதிப்பு என்றுமில்லா அளவிற்கு ஒரு வீழ்ச்சியைக் கண்டது. அமெரிக்க டாலர் மீதான இந்திய நாணயத்தின் மதிப்பு அன்று 70.1 ரூபாய் என்ற மட்டத்திற்கு குறைந்து அந்நாளின் முடிவில் 69.93 ரூபாய் என்றளவிற்கு வீழ்ச்சியில் முடிந்தது, அத்துடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் அதற்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஒரு-நாளைய வீழ்ச்சியாகவும் அது பதிவானது.

இந்திய பொருளாதாரமும் அதன் நாணயமும் எதிர்கொள்ளும் நெருக்கடியின் தீவிரத்தைக் குறைத்துக்காட்ட இந்திய அதிகாரிகள் முயன்றனர். இந்நிலையில், பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்தர் கார்க் செவ்வாயன்று, “ரூபாயின் வீழ்ச்சிக்கு “வெளிப்புற காரணிகள்” தான் காரணம் என்பதால் அதுபற்றி “இந்தக் கட்டத்தில் கவலைப்படத் தேவையில்லை” என்று ஊடகத்திற்கு தெரிவித்தார். மேலும், இந்தச் சரிவைத் தாங்கி நிற்க போதுமானளவு அந்நியச் செலாவணியை இந்தியா கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அதே நேரத்தில், இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India- RBI) இந்த வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் சில மட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது என்பதையும் கார்க் ஒப்புக்கொள்கிறார். மேலும், “மற்ற பொருளாதாரங்களின் நாணயங்களின் மதிப்புகளும் சரிந்து வரும் இந்தக் கட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி தலையீடு செய்து நாட்டிற்குள்ளேயே டாலர்களை விற்று அதன் மூலமாக ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்த பெரியளவில் உதவுவது என்பதும் தற்போது சாத்தியமில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தின் மீதான “வெளிப்புற காரணிகளை” கட்டுப்படுத்த தங்களுக்கு திறன் இல்லை என்று ஒப்புக்கொள்ளுமாறு இந்திய அதிகாரிகள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். கார்க் இன் கருத்துப்படி, ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்தும் தனது முயற்சியில் இந்த ஆண்டில் இதுவரை கிட்டத்தட்ட 23 பில்லியன் அமெரிக்க டாலர் ($US 23 billion) வரை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) செலவு செய்துள்ளது என்றறியப்படுகிறது.

ஒப்பீட்டளவில் மலிந்த டாலர்-மதிப்புடைய கடன்களின் போக்கு மாறியிருப்பதால், வட்டி விகிதங்களை உயர்த்தும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் இன் நடவடிக்கைகளின் மூலம் அதன் “அளவு தளர்த்துதல்” என்பது முடிவுகட்டப்பட்ட நிலையில் அதற்கு பதிலிறுப்பாக, பல மாதங்களுக்கும் மேலாக இந்திய ரூபாயின் வீழ்ச்சி கட்டவிழ்ந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை இந்திய நாணயம் 8 சதவிகிதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது. இப்போது, துருக்கிய லீராவின் கடுமையான வீழ்ச்சிக்கு மத்தியில் இந்திய ரூபாயின் சரிவு முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், வளர்ந்துவரும் சந்தைகள் என்றழைக்கப்படுவனவற்றின் மீதான அமெரிக்க ஃபெடரல் நகர்வுகளின் விளைவாக ஏற்பட்ட டாலரின் ஏறுமுக இயக்கம் கொண்டுள்ள தொலைநோக்குத் தாக்கங்களை அது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்திய ரூபாயின் வீழ்ச்சியில் அந்நிய முதலீட்டாளர்களின் பங்கு பற்றி குறிப்பிட்டு, ICICI வங்கியின் குழு நிர்வாகி மற்றும் தலைவர் பி.பிரசன்னா பின்வருமாறு தெரிவித்தார்: “வெளிநாட்டு வர்த்தக முதலீட்டாளர்களின் (foreign portfolio investor-FPI) வெளியேற்றத்தினாலும் மற்றும் சந்தையில் ஏற்கனவே நிலவுகின்ற குறுகிய டாலர் நிலைமைகளை தக்கவைத்துக் கொள்ளும் அவசியம் இருந்ததாலும் கடந்த 69 இல் நிகழ்ந்த விரைவான (பண) மதிப்பீட்டு நகர்வு என்பது, உண்மையான இறக்குமதியாளர்களின் தேவை என்பதற்கு மாறாக உலகளாவிய சந்தை உணர்வுகளால் அது உந்தப்பட்டது.”

வளர்ந்துவரும் சந்தைகள் என்று அழைக்கப்படுவதற்கு அப்பால்,  முதலீட்டாளர்களின் உலகளாவிய உந்துதல் என்பதன் ஒரு பாகமாகவே இந்திய ரூபாயின் சரிவு உள்ளது. சிங்கப்பூர் DBS வங்கியின் பொருளாதார நிபுணரான ராதிகா ராவ், “ரூபாயின் வீழ்ச்சி என்பது தனிமைப்படுத்தப்பட்டது அல்ல, மாறாக, அது வளர்ந்துவரும் சந்தைகளின் நாணயங்களின் பரந்த விற்பனையின் ஒரு பாகமாகும்” என்று கூறினார்.

இந்திய உயரடுக்கு எதிர்கொண்டிருக்கும் வளர்ந்துவரும் பொருளாதார நெருக்கடியின் ஒரு கூடுதல் அறிகுறியாக, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை ஜூன் மாதம் 16.6 பில்லியன் டாலராக இருந்ததில் இருந்து கடந்த மாதம் 18 பில்லியன் டாலருக்கு உயர்வு கண்டது. எண்ணெய் விலைகள் அதிகரிப்பு தான் அதற்கான முக்கிய காரணியாக இருந்தது. அத்துடன், இந்தியா அதன் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமானதை இறக்குமதி செய்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய பெருவணிகத்தின் சில பிரிவுகள், உலகச் சந்தையில் நாட்டின் தயாரிப்புகளை போட்டிபோட்டு மலிவானதாக்கும் என்று வாதிட்டு, ஏற்றுமதிக்கான ஒரு சாதகமான காரணியாக பலவீனமான ரூபாயை வரவேற்கின்றன. வாகனங்களில் இருந்து கட்டுமான உபகரணங்கள் வரை காப்பீடு செய்வதை வரையறுப்பதில் ஆர்வம் கொண்டுள்ள மஹிந்திரா குரூப்பின் நிர்வாகத் தலைவரான ஆனந்த் மஹிந்திரா பின்வருமாறு ட்வீட் செய்தார்: “உலகளவிலான மற்றும் ஏற்றுமதியை குவிமையப்படுத்தும் தயாரிப்புக்கு இந்தியாவை மாற்றுவதற்குரிய இந்த நேரத்தில் இந்தியாவின் ஏற்றுமதி போட்டித்தன்மைக்கு ஏற்ற இந்த ஊக்கத்தைக் கொண்டு உலகளாவிய நிறுவனங்களை நாம் இப்போது இணங்கவைக்க முடியுமா?”     

இருப்பினும், மஹிந்திரா வாதிட்டது போல், ஒரு பலவீனமான ரூபாய் என்பது இந்திய தொழில்துறையின் அனைத்து பிரிவுகளுக்கும் சாதகமானதாக இல்லை. இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்கள், கூறு பாகங்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றில் தங்கியுள்ள அவை, ரூபாய் மதிப்பில் அவற்றின் உற்பத்திச் செலவுகளில் அதிகரிப்புகளையே எதிர்கொள்ளும்.

அனைத்திற்கும் மேலாக, கச்சா எண்ணெய், பண்டங்கள், மின்னணுப் பொருட்கள் மற்றும் பொறியியல் உபகரணங்களின் இறக்குமதிக்கான விலைகள் அதிகரிக்கும் நிலைமைகளின் கீழ், பலவீனமான ரூபாய் என்பது அதிக பணவீக்கத்திற்கு வழிவகுக்கும். இந்திய எண்ணெய் அமைச்சகத்தைப் பொறுத்தவரை, அமெரிக்க டாலருக்கு ஈடான பரிமாற்ற விகிதத்தில் ஒவ்வொரு ரூபாய்க்கான மாற்றமானது நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி விலை மதிப்பில் 108.8 பில்லியன் ரூபாய் (1.58 பில்லியன் டாலர்) என்றளவிலான ஒரு மாற்றத்தை உருவாக்கியது, அதாவது ஒரு வருடத்திற்கு முந்தைய நிலையை விட 57.4 சதவிகிதம் அதிகமாகி ஜூலையில் 12.4 பில்லியன் டாலரை அது எட்டியது.

ரூபாயின் கீழ்நோக்கிய அழுத்தங்களுக்கு எதிரான ஒரு பின் உந்துதலை கொடுக்க நாட்டின் வெளிநாட்டு இருப்புக்கள் போதுமானதாக உள்ளது என்று இந்திய அதிகாரிகள் பெருமையடித்துக் கொண்டாலும், தற்போதைய அளவான சுமார் 402 பில்லியன் டாலரைக் கொண்டு ஒரு ஆண்டுக்கான இறக்குமதிச் செலவினங்களை சமாளிக்க முடியாது என்பது தான் உண்மை.

உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகள் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடியை இன்னும் தீவிரமாக்கும். இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சி (Bharatiya Janatha Party-BJP) அடுத்த ஆண்டு தேசிய தேர்தல்களை சந்திக்கவுள்ளது. இந்நிலையில், அதற்கு இருக்கும் ஆதரவை தக்கவைத்துக் கொள்ளும் ஒரு முயற்சியில், சில ஒப்பனை சமூகக் கொள்கைகளுக்காக செலவிடுவதற்கு ஒதுக்கீடு செய்யும் அதன் திறன் என்பது அதிகரித்தளவில் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியினால் விளையும் அதிக பணவீக்கம், எரிபொருள், உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்புகள் என்ற வடிவங்களிலான உழைக்கும் மக்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மீதான ஏற்கனவேயுள்ள பாரிய சுமைகளை இன்னும் கடுமையாக்கும். இது, வர்க்கப் போராட்டம் மேலும் வேகமாக விரிவடைவதற்கு வழிவகுக்கும்.

இந்த ஆண்டு, தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் குறிப்பிட்ட பிரிவினர், தங்களது ஊதியம், வேலைகள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான தேசியளவிலான பிஜேபி அரசாங்கத்தின் மற்றும் மாநில அளவிலான நிர்வாகங்களின் தாக்குதல்கள் குறித்து வேலைநிறுத்தங்கள் மற்றும் பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதில், நாடு முழுவதிலுமான வங்கி ஊழியர்கள், தென் மாநிலமான தமிழ்நாட்டின் பொதுத்துறை பேருந்து ஊழியர்கள், முக்கிய டாக்ஸி நிறுவனங்களான உபெர் மற்றும் ஓலா உடன் இணைந்த வாகன ஓட்டுநர்கள், இந்தியாவின் மேற்கு, கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் போன்றவர்கள் அடங்குவர்.

வறுமை மற்றும் பரந்த சமூக சமத்துவமின்மை காரணமாக ஏற்கனவே நிலவுகின்ற ஆழ்ந்த வர்க்க விரோதங்கள், 1991 க்கு பின்னர் வந்த தொடர்ச்சியான அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டாளர் சார்பு பொருளாதாரச் சீர்திருத்தங்களால் விளைந்தவையே. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் முதல் ஒரு சதவிகிதத்தினர் ஒட்டுமொத்த வருவாயில் கிட்டத்தட்ட கால் பங்கை அனுபவிக்கின்றனர் என்பதோடு, நாட்டின் மொத்தச் செல்வ வளத்தில் 60 சதவிகிதத்தை சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர், இச்சூழ்நிலையில், கிட்டத்தட்ட 70 சதவிகித மக்கள் நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைவான வருவாயுடன் வாழ்கின்றனர். மேலும், பெரும் முதலாளித்துவத்தின் ஒரு சிறிய சிறுபான்மையினர் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற பிரிவினர் மட்டுமே, பலதரப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் இழப்பில் உருவான பொருளாதாரச் சீர்திருத்தங்களால் கால் நூற்றாண்டு காலத்திற்கும் அதிகமாக பயனடைந்துள்ளனர்.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் மற்றும் ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சிகளும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் (Communist Party of India-Marxist-) அல்லது CPM மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India-CPI) - முதலீட்டாளர் சார்பு பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அதனுடன் இணைந்த சிக்கன நடவடிக்கைகளையும் திணிப்பதில் இருந்த அவர்களது பங்கின் காரணமாக தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே மதிப்பிழந்த நிலைமைகளின் கீழ், இந்தியாவின் சமூக வெடிமருந்து கிட்டங்கி வெடிப்புறும் விளிம்பில் உள்ளது. எனவே, கடந்த காலத்தைப் போல தொழிலாள வர்க்க எதிர்ப்பை இந்த அமைப்புகளால் அவ்வளவு எளிதாகக் கட்டுப்படுத்த முடியாது.