Print Version|Feedback
Preface to the thirtieth anniversary edition of The Heritage We Defend
நாம் காக்கும் மரபியம் முப்பதாவது ஆண்டு பதிப்புக்கான முன்னுரை
By David North
21 June 2018
டேவிட் நோர்த் எழுதிய நாம் காக்கும் மரபியம்: நான்காம் அகிலத்தின் வரலாறுக்கான ஒரு பங்களிப்பு எனும் நூலின் முப்பதாவது ஆண்டுதினப் பதிப்பை ஆகஸ்ட் 5 அன்று, மேஹ்ரிங் புக்ஸ் வெளியிடவிருக்கிறது. இந்தப் புத்தகத்தை இப்போதே மேஹ்ரிங் புக்ஸ் இல் முன்பதிவு செய்துகொள்ளலாம். புதிய பதிப்புக்கான நோர்த்தின் முன்னுரையை இங்கே நாங்கள் வெளியிடுகிறோம்.
* * * * * *
நாம் காக்கும் மரபியம்
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக, 1988 இல், பிரிட்டனின் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்து பிரிந்து சென்றதற்குப் பிந்தைய சமயத்தில், நாம் காக்கும் மரபியம் வெளியிடப்பட்டது. அடுத்துவந்த காலத்தில் அனைத்துலகக் குழு ஏராளமான ஆவணங்களில் நிரூபணம் செய்தவாறாக, WRP விட்டோடியதானது, எந்த ட்ரொட்ஸ்கிசக் கோட்பாடுகளை பாதுகாப்பதில் அது ஒருகாலத்தில் இன்றியமையாத பாத்திரத்தை வகித்திருந்ததோ அந்தக் கோட்பாடுகளில் இருந்து, ஒரு தசாப்தத்திற்கும் மேலாய் நீண்ட ஒரு காலகட்டத்திற்கு, அது பின்வாங்கியிருந்ததன் விளைபொருளாக இருந்தது.[1] 1973 இல் ஸ்தாபிக்கப்பட்டிருந்த WRP, 1953 இல் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) மற்றும் பிரெஞ்சு சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சி (Parti Communiste Internationaliste - PCI) ஆகியவற்றுடன் இணைந்து அனைத்துலகக் குழுவை உருவாக்கியிருந்த பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வழிவந்த அமைப்பாக இருந்தது. WRP இன் தலைவரான ஜெர்ரி ஹீலி (1913-1989), நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தில் பப்லோ-மண்டேல் செய்த திருத்தங்களைக் கண்டனம் செய்து, ஜேம்ஸ் பி. கனன் (1890-1974) எழுதிய வரலாற்றுச் சிறப்புமிக்க “உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு ஒரு பகிரங்கக் கடிதம்” என்பதில் கையெழுத்திட்டிருந்தார். 1953 நவம்பரில் விநியோகிக்கப்பட்ட இந்த “பகிரங்கக் கடிதம்” ICFI இன் ஸ்தாபகக் கோட்பாடுகளை எடுத்துரைத்தது:
1. முதலாளித்துவ அமைப்புமுறையின் மரண ஓலமானது, மோசமடையும் மந்தநிலைகள், உலகப் போர்கள் மற்றும் பாசிசம் போன்ற காட்டுமிராண்டித்தன வெளிப்பாடுகளின் மூலமாக மனித நாகரிகத்தை அழிவுக்கு அச்சுறுத்துகிறது. அணு ஆயுதங்களின் தயாரிப்பு இன்று அந்த அபாயத்தை சாத்தியமான மிக மரணகரமான விதத்தில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
2. முதலாளித்துவத்தை உலகளாவிய மட்டத்திலான திட்டமிட்ட சோசலிச பொருளாதாரத்தை கொண்டு பிரதியிடுவதன் மூலமும், இவ்வாறாக முதலாளித்துவ அபிவிருத்தின் ஆரம்ப நாட்களின் அதனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முன்னேற்றச் சுழற்சியை தொடர்வதன் மூலமும் மட்டுமே பாதாளத்தை நோக்கிய சரிவு தடுத்து நிறுத்தப்பட முடியும்.
3. இத்தகைய பணி, சமுதாயத்தின் ஒரேயொரு உண்மையான புரட்சிகர வர்க்கமான தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் மட்டுமே இது செய்துமுடிக்கப்பட கூடியதாகும். தொழிலாளர்கள் அதிகாரத்தை நோக்கிய பாதையை எடுப்பதற்கு சமூக சக்திகளிடையேயான உலகளாவிய உறவு முன்னொருபோதும் இல்லாதவாறு இன்று சாதகமாக இருக்கின்ற போதிலும் கூட, தொழிலாள வர்க்கமானது அதன் தலைமை நெருக்கடி ஒன்றுக்கு முகம் கொடுத்திருக்கிறது.
4. சர்வதேச அளவில் இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க குறிக்கோளை நிறைவேற்றும் வகையில், ஒவ்வொரு நாட்டிலும், லெனின் உருவாக்கிய மாதிரியான புரட்சிகர சோசலிச கட்சிகளை அமைக்கவேண்டும். அவை ஜனநாயகத்தையும், மத்தியத்துவத்தையும் இயங்கியல் ரீதியாக ஒன்றிணைத்து போராடக்கூடிய ஒரு கட்சியாக இருக்கவேண்டும். அதாவது முடிவுகளை எடுப்பதில் ஜனநாயகரீதியானதாகவும், நடைமுறைப்படுத்துவதில் மத்தியத்துவமும், தலைமையை கட்சியின் அங்கத்தவர்கள் கட்டுப்படுத்தக் கூடியதாகவும், நெருக்கடியான நிலைமைகளில் அம்முடிவுகளை மிகவும் கட்டுப்பாடான முறையில் கட்சியின் அங்கத்தவர்கள் நடைமுறைப்படுத்தக் கூடியவர்களாகவும் இருக்கவேண்டும்.
5. இதற்கு பிரதான தடைக் கல்லாக இருப்பது ஸ்ராலினிசம்; ரஷ்யாவில் நடந்த 1917 அக்டோபர் புரட்சியின் மதிப்பை சுரண்டிக் கொள்வதன் மூலமாக தொழிலாளர்களை ஈர்க்கும் இது, பின்னர், அவர்களது நம்பிக்கையைக் காட்டிக்கொடுத்து, சமூக ஜனநாயகத்தின் கரங்களுக்குள்ளோ, அல்லது எதுவும்பற்றிய அக்கறையற்ற நிலைக்குள்ளோ, அல்லது மீண்டும் முதலாளித்துவத்தின் பிரமைகளுக்குள்ளோ அவர்களை திருப்பி விடுகிறது. இந்த காட்டிக்கொடுப்புகளுக்கான அபராதம் பாசிச அல்லது முடியாட்சி சக்திகள் வலுப்படுவதின் வடிவத்திலோ, அல்லது முதலாளித்துவத்தால் உரம்போடப்பட்டு தயாரிப்பு செய்யப்படுகின்ற போர்களது புதிய வெடிப்புகளின் வடிவத்திலோ உழைக்கும் மக்களால் விலை செலுத்தப்படுவதாக இருக்கிறது. நான்காம் அகிலமானது, அதன் ஸ்தாபிதம் முதற்கொண்டே, சோவியத் ஒன்றியத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஸ்ராலினிசத்தை புரட்சிகரமாகத் தூக்கிவீசுவதை தனது முக்கிய பணிகளில் ஒன்றாக அமைத்துக் கொண்டிருக்கிறது.
6. நான்காம் அகிலத்தின் பல பிரிவுகளும், அதன் வேலைத்திட்டத்திற்கு ஆதரவை தெரிவிக்கும் கட்சிகள் மற்றும் குழுக்களும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் நெகிழ்வான தந்திரோபாயத்திற்கான அவசியமானது, ஸ்ராலினிசத்திற்கு சரணடையாமல் ஏகாதிபத்தியத்தையும் அதன் அத்தனை குட்டி-முதலாளித்துவ முகமைகளையும் (தேசியவாத உருவாக்கங்கள் அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் போன்றவை) எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதையும்; மறுமுகமாக ஏகாதிபத்தியத்திற்கு சரணடையாமல் ஸ்ராலினிசத்தை (இறுதி ஆய்வில் இது ஏகாதிபத்தியத்தின் ஒரு குட்டி-முதலாளித்துவ முகமையாக இருக்கிறது) எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதையும் அவை அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பதை மிகவும் கட்டாயமானதாக ஆக்குகிறது.[2]
இந்த “பகிரங்க கடிதம்” பப்லோவாலும் மண்டேலாலும் மறுதலிக்கப்பட்டிருந்த ட்ரொட்ஸ்கிசத்தின் மூலோபாயக் கருத்தாக்கங்களை இரத்தினச்சுருக்கமாக எடுத்துரைத்திருந்தது. ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஸ்ராலினிசத்தை எதிர்ப்புரட்சிகரமாக குணாம்சப்படுத்தியிருந்ததை பப்லோவாதமானது, கிரெம்ளின் அதிகாரத்துவத்திற்கும் அதன் முகமைகளுக்கும் வரலாற்றுரீதியாய் முற்போக்கானதும் புரட்சிகரமானதுமான ஒரு பாத்திரத்தை வழங்குகின்ற ஒரு தத்துவத்தைக் கொண்டு பிரதியீடு செய்தது. ஒரு தொடர் அரசியல் புரட்சிகளில் ஸ்ராலினிச ஆட்சிகளைத் தூக்கிவீசுவதற்கு செயல்படுவதற்குப் பதிலாக, பப்லோவாதிகள் அதிகாரத்துவம் தானாக சீர்திருத்திக் கொள்கின்ற ஒரு நிகழ்ச்சிப்போக்கை எதிர்பார்த்திருந்ததுடன், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஸ்ராலினிச தலைவர்களுக்கு ஆலோசகர்களைப் போல செயல்பட்டு அவர்களை கூடுதலாய் இடது நோக்கிய ஒரு பாதையை எடுப்பதற்கு வலியுறுத்த வேண்டும் என்றனர். கிரெம்ளின் ஆட்சியின் அந்தந்த நாட்டு ஸ்ராலினிச முகவர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த கிழக்கு ஐரோப்பாவின் “ஊனமுற்ற தொழிலாளர் அரசுகள்” (deformed workers states) பல நூற்றாண்டுகளுக்கு நீடித்திருக்கும் என பப்லோவும் மண்டேலும் கருதினர்.
கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்திருப்பவற்றின் வெளிச்சத்தில் பார்த்தால் இவை விசித்திரமானதாகத் தென்படக்கூடும் என்றபோதிலும், ஸ்ராலினிசத்துக்கு வக்காலத்து வாங்குவதாக இருந்த இந்த அணுகுமுறைதான், 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கிழக்கு ஐரோப்பாவின் அதிகாரத்துவ ஆட்சிகள் உருக்குலைந்து சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுகின்ற வரையில் பப்லோவாத அமைப்புகளது முன்னோக்காக தொடர்ந்து இருந்து வந்திருந்தது. நான்காம் அகிலத்தின் வேலைத்திட்ட பாரம்பரியத்தை —எல்லாவற்றையும் விட, ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தின் மீது அது வலியுறுத்தியதை— அனைத்துலகக் குழு பாதுகாத்தமையானது அதன் பப்லோவாத எதிரிகளால் “குறுங்குழுவாதம்” எனக் கூறி பரிகசிக்கப்பட்டது. ஆயினும், நாம் காக்கும் மரபியம் வெளியாகி ஒரு ஆண்டுக்கும் சற்று அதிகமான காலத்திலேயே, இந் நூலில் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுப் பகுப்பாய்வு, தத்துவார்த்தக் கருத்தாக்கங்கள், மற்றும் வேலைத்திட்டம் ஆகியவை கிழக்கு ஐரோப்பா முழுமையிலும் மற்றும் ரஷ்யாவிற்குள்ளேயும் கூட வெடித்த அரசியல் நிகழ்வுகளால் சரியானதாக நிரூபணமாயின.
ஸ்ராலினிசத்திடம் பப்லோவாதிகள் சரணடைந்ததனால், அவர்கள் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை கைவிட்டமை அதில் ஒரு அம்சம் மட்டுமே. அதற்குமேலாக தொழிலாள வர்க்கத்தினுள் மார்க்சிச நனவுக்கும் ஏகாதிபத்தியத்தின் அத்தனை தேசிய முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ முகமைகளில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்கும் ஆன போராட்டத்தையும் அவர்கள் நிராகரித்தனர்.
அமெரிக்க SWP, அனைத்துலகக் குழுவில் இருந்து முறித்துக் கொண்டதற்கும் 1963 இல் பப்லோவாதிகளுடனான மறுஇணைவுக்கும் அவர்கள் காட்டிய எதிர்ப்பினூடாக 1950கள் மற்றும் 1960களில் நான்காம் அகிலத்தின் பாதுகாப்பில் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் முக்கியமான பாத்திரத்தை வகித்திருந்த போதும், திருத்தல்வாதத்தை நோக்கி அவர்களும் சரிந்து சென்று கொண்டிருந்தமை 1970களில், குறிப்பாக 1973 நவம்பரில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஸ்தாபகத்திற்குப் பின்னர், மென்மேலும் அதிக வெளிப்படையாகிக் கொண்டிருந்தது. 1960களின் ஆரம்பத்தில், சோசலிச தொழிலாளர் கழகத்தின் (SLL - WRP இன் முன்னோடி) பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள், பிடெல் காஸ்ட்ரோவின் தீவிரமயமான தேசியவாதத்தை SWP புகழ்ந்து போற்றியதை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருந்தனர், சோசலிசத்துக்கான பாதை, தொழிலாள வர்க்கத்தை அடித்தளமாகக் கொண்ட மற்றும் அதில் வேரூன்றியதொரு ட்ரொட்ஸ்கிசக் கட்சியைக் கட்டியெழுப்புவதை அவசியமாக்கவில்லை என்பதை கியூப தலைவரின் குட்டி-முதலாளித்துவ கெரில்லா இராணுவம் நிரூபித்திருந்ததாகக் கூறப்பட்டதை நிராகரித்திருந்தனர்.
ஆனால் 1970 களின் மத்தியில், WRP, பப்லோவாதிகளின் ட்ரொட்ஸ்கிச-விரோத கொள்கைகளுக்கு மிக நெருக்கமான விதத்தில், பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) மற்றும் லிபியாவில் மும்மார் கடாபியின் தீவிரமயப்பட்ட தேசியவாத ஆட்சி போன்ற மத்திய கிழக்கின் முதலாளித்துவ தேசிய இயக்கங்களின் ஏகாதிபத்திய-எதிர்ப்பு வேலைத்திட்டத்தை மிகைப்படுத்தத் தொடங்கியது. பப்லோவாதத்திற்கு WRP திரும்பியமை வெறுமனே தனிப்பட்ட தலைவர்களது தனிமனிதத் தவறுகளால் விளைந்ததன்று. உலகெங்கிலும் ஒழுங்கமைந்த தொழிலாளர் இயக்கமானது, அப்போதும் ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளாலும் தொழிற்சங்கங்களாலுமே ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்த நிலைமைகளின் கீழ், ட்ரொட்ஸ்கிச அமைப்புகள் 1960கள் மற்றும் 1970களின் ஆரம்பத்தில் குட்டி-முதலாளித்துவத்தின் பரந்த பிரிவுகள், குறிப்பாக மாணவர் இளைஞர்கள் பாரிய அளவில் தீவிரப்பட்டதில் இருந்து செலுத்தப்பட்ட சமூக மற்றும் சித்தாந்த அழுத்தத்தின் முன்னே பலவீனமானவையாக இருந்தன.
குட்டி-முதலாளித்துவத் தட்டில் இருந்து வென்றெடுக்கப்பட்டிருந்தவர்களை ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் ஒருங்கிணைக்கின்ற சவாலானது, ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களுக்கு எதிரான சளைக்காத போராட்டத்தின் அடிப்படையிலான, தொழிலாள வர்க்கத்தை நோக்கிய ஒரு உறுதியான அரசியல் மற்றும் நடைமுறைரீதியான நோக்குநிலையை மட்டும் அவசியமாக்கவில்லை. பப்லோவாதிகளால் ஊக்குவிக்கப்பட்ட போலி-மார்க்சிசத்தின் பல வடிவங்கள் —குறிப்பாக குட்டி-முதலாளித்துவ தீவிரப்பட்ட சிந்தனை மற்றும் அரசியலின் மிகப் பரவலாய் கொண்டாடப்படும் வடிவங்களை மட்டும் பெயர் குறிப்பிடுவதானால், “பிராங்பர்ட் பள்ளி” (அதாவது, ஹோர்கைமர், அடோர்னோ, பெஞ்சமின், புளோக், ரைய்ச் மற்றும் மார்க்கூஸ), “மேற்கத்திய மார்க்சிசம்” (கிராம்சி போன்றவர்கள்), ட்ரொட்ஸ்கிச-விரோத “அரசு முதலாளித்துவவாதிகள்” மற்றும் “புதிய வர்க்க” தத்துவாசிரியர்கள் (லுஃபோர், கஸ்ரோரியாடிஸ் மற்றும் ஜிலாஸ்), இவற்றுடன் தீவிர தேசியவாதத்தின் எண்ணற்ற வடிவங்கள் (காஸ்ட்ரோவாதம், குவேராவாதம், ஃபனோன் இன் எழுத்துக்கள் மற்றும் மால்கம் எக்ஸ் இன் பேச்சுக்கள்)— மீது இடைவிடாத ஒரு விமர்சனத்தையும் அது கோரியது. இந்த நீண்ட பட்டியலில், எண்ணிலடங்கா குட்டி-முதலாளித்துவ புத்திஜீவிகளால் தழுவிக் கொள்ளப்பட்டு, உலகெங்கிலும் தொழிலாளர்களை இரத்தக்களரியான தோல்விகளுக்கு ஒன்றன்பின் ஒன்றாய் இட்டுச் சென்ற, ஸ்ராலினிசத்தின் ஒரு மோசமான பிற்போக்குத்தன வகையான மாவோயிசத்தின் செல்வாக்கையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.
WRP இன் சந்தர்ப்பவாதக் கொள்கைகள் அனைத்துலகக் குழுவுக்குள்ளாக எதிர்ப்பை எதிர்கொண்டன. 1982 க்கும் 1984 க்கும் இடையில், அமெரிக்க ட்ரொட்ஸ்கிச அமைப்பான வேர்க்கர்ஸ் லீக் WRP இன் நவ-பப்லோவாதக் கொள்கைகள் மீதான ஒரு திறம்பட்ட விமர்சனத்தை அபிவிருத்தி செய்தது. ஹீலி, மைக்கல் பண்டா (1930-2014) மற்றும் கிளிஃப் சுலோட்டர் (1928-) ஆகியோர் கொண்ட WRP இன் பிரதான தலைமை, வேர்க்கர்ஸ் லீக் அதன் விமர்சனங்கள் குறித்து அனைத்துலகக் குழுவுக்குள்ளாக விவாதங்களை ஒழுங்கமைக்க செய்த முயற்சிகளை ஒடுக்கியது. [3] இந்த கோட்பாடற்ற முயற்சிகள் 1985 இலையுதிர் காலத்தில் WRPக்குள்ளாக ஒரு அரசியல் நெருக்கடிக்கு இட்டுச் சென்றது. WRP இன் உடைவின் கீழ் அமைந்திருந்த தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்த விவாதத்தில் இருந்து நழுவுவது என்பதில் அப்போதும் தீர்மானத்துடன் இருந்த, சுலோட்டரும் பண்டாவும் முந்தைய தசாப்த காலத்தின்போது பிரிட்டிஷ் பிரிவு பின்பற்றியிருந்த சந்தர்ப்பவாதப் பாதைக்கு அனைத்துலகக் குழுவின் மீது பழிபோட முயன்றனர்.
1986 பிப்ரவரியில், WRP, ட்ரொட்ஸ்கிசத்துடன் தனது முறிவை அறிவிக்கும் ஒரு ஆவணத்தை வெளியிட்டது. மைக்கல் பண்டாவால் எழுதப்பட்ட அந்த ஆவணத்தின் தலைப்பு “ஏன் அனைத்துலகக் குழு குழிதோண்டி புதைக்கப்பட்டு நான்காம் அகிலம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதற்கான 27 காரணங்கள்” என்றிருந்தது. செவ்வியல் மார்க்சிசத்தில் இது தனக்கான இடத்தைப் பிடிக்கும் என்பதான எதிர்பார்ப்பில் பெரும் ஆரவாரத்துடன் WRP இந்த ஆவணத்தை வெளியிட்டது. ஆனால் உண்மையில், பண்டாவின் ஆவணமானது, அனைத்துலகக் குழுவை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த நான்காம் அகிலத்தின் வரலாற்றையுமே மதிப்பிழக்கச் செய்வதற்கான நோக்கமுடைய திரிப்புகள், அப்பட்டமான பொய்கள் மற்றும் அரைகுறை உண்மைகளது ஒரு கலவையாக இருந்தது. பண்டாவின் கட்டுரையின் தலைப்பே அதன் அரசியல் நேர்மையின்மையை அம்பலப்படுத்தியது. அவரது “27 காரணங்களில்” ஒரு பகுதி தாக்குப்பிடிக்கக் கூடியதாய் இருந்திருந்தாலும் கூட, நான்காம் அகிலத்தின் இருப்பு தொடர்வதற்கு நியாயம் கூறுவது சாத்தியமில்லாமல் போயிருக்கும். அவரது சொந்த வாதங்களில் இருந்து பிரிக்கவியலாமல் பிறந்த முடிவுகளைப் பின்தொடர்ந்து, பண்டா —அவரது ஆவணத்தை நிறைவு செய்து ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தின் பின்னர்— ட்ரொட்ஸ்கி மீதான வெறுக்கத்தக்க கண்டனத்தை வெளியிட்டார், அத்துடன் ஸ்ராலினுக்கு தனது வரம்பற்ற மரியாதையையும் அறிவித்தார். பண்டாவின் அரசியல் பரிணாமமானது, அவரது ஆவணத்தை வழிமொழிந்திருந்த WRP இன் தலைமை மற்றும் அங்கத்தவர்களில் இருந்த அத்தனை பேரினாலும் ட்ரொட்ஸ்கிசம் மறுதலிக்கப்பட எதிர்பார்த்திருந்தது. கணிசமான எண்ணிக்கையிலானோர் ஸ்ராலினிச இயக்கத்திலும் இணைந்தனர். மற்றவர்கள் ஏகாதிபத்திய முகாமுக்கு சென்று, அங்கு சேர்பியாவுக்கு எதிரான நேட்டோவின் போரின் செயலூக்கமான பங்கேற்பாளர்களாகி விட்டிருந்தனர். கிளிஃப் சுலோட்டரால் ஊக்கமளிக்கப் பெற்ற மிகப் பெரும் குழுவானது, புரட்சிகரக் கட்சி குறித்த லெனின்-ட்ரொட்ஸ்கி கருத்தாக்கத்தின் ஒட்டுமொத்த மரபையும் மறுதலித்தது, சோசலிசத்துக்கான போராட்டத்தைக் கைவிட்டது, அத்துடன் தமது சொந்த வாழ்க்கையை முடிந்த அளவுக்கு வசதியாக்கிக் கொள்வதில் கவனம் செலுத்தியது.
பண்டாவின் ஆவணம் கிடைத்த தருணத்தில் இருந்தே, ஒரு விரிவான பதில் அளிப்பதற்கு அவசியமிருந்ததை அனைத்துலகக் குழு புரிந்து கொண்டது. அந்தப் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்குள்ளாக, நாம் காக்கும் மரபியம் தொடர்ச்சியாக வாராந்த இடைவெளியில் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளால் வெளியிடப்பட்ட பத்திரிகைகளில் வெளியாகத் தொடங்கின. பண்டாவுக்கான பதில் 500க்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகமாகும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆயினும், பண்டாவின் ஆவணத்தை நான் படித்தபோது, நான்காம் அகிலத்தின் வரலாறு —குறிப்பாக ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட 1940 முதலாக பப்லோவாதிகளுடன் உடைவு கண்ட 1953 வரையான அதிமுக்கியமான ஆண்டுகளிலானவை— ஒருபோதும் போதுமான அளவுக்கு பகுப்பாய்வு செய்யப்பட்டிருக்கவில்லை என்பதோடு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் இப்போதிருக்கும் காரியாளர்களுக்கு பெருமளவில் தெரியாததாக அது இருக்கிறது என்ற உண்மையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள அவர் முயல்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். பண்டாவின் ஓடுகாலித்தனத்தைக் கண்டனம் செய்வது மட்டும் போதுமானதாக இருக்கவில்லை. நான்காம் அகிலத்தின் வரலாற்றைத் திறனாய்வு செய்வதும், இந்த அடிப்படையில், அனைத்துலகக் குழுவில் இருக்கும் அதன் காரியாளர்களுக்கு கல்வியூட்டுவதும் அவசியமாய் இருந்தன.
ஆரம்ப வெளியீட்டுக்கு மூன்று தசாப்தங்களின் பின்னர், நாம் காக்கும் மரபியம் காலத்திற்கு தாக்குப்பிடித்து நின்றிருக்கிறது என்றே நான் நம்புகிறேன். நான்காம் அகிலத்தின் வரலாற்றுக்கான அறிமுகமாக, கணிசமான சமகால மதிப்பைத் தக்கவைத்துக் கொள்கின்ற அதேவேளையில், சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியை கட்டியெழுப்புவதற்கான இன்றைய போராட்டத்திற்கு இப்போதும் மிகப் பொருத்தமானதாகத் திகழ்கின்ற, மார்க்சிசத் தத்துவம், வேலைத்திட்டம் மற்றும் மூலோபாயம் தொடர்பான பிரச்சினைகளையும் நாம் காக்கும் மரபியம் ஆராய்கிறது.
அரசியல் போக்குகளின் தோற்றம் மற்றும் அவற்றுக்கு இடையிலான போராட்டத்தை விளக்குவதில் வரலாற்றுச் சடவாத வழிமுறை பயன்படுத்தப்பட்டிருக்கின்ற நான்காம் அகிலத்தின் வரலாறு குறித்த ஒரேயொரு ஆவண நூல், நாம் காக்கும் மரபியம் மட்டுமே ஆகும். தனிப்பட்ட தலைவர்களது குணநலன்கள், அவர் நல்லவரா கெட்டவரா மற்றும் அவர்களது நோக்கங்கள் புனிதமானதா அல்லது மலினமானதா என்பதில் இருந்து ஆரம்பிக்கின்ற அகநிலைரீதியான அணுகுமுறையை (பண்டாவின் வசைமழை இதன் உதாரணவடிவம்) நிராகரித்து, நாம் காக்கும் மரபியம், உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் இருந்தும் ஏகாதிபத்திய இரண்டாம் உலகப் போரின் போதும் அதன் பின்னருமான உலகளாவிய மற்றும் தேசிய அளவிலான வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியில் இருந்தும் எழுகின்ற நான்காம் அகிலத்திற்குள்ளான மோதல்களுக்கு கீழமைந்திருந்த புறநிலையான சமூக மற்றும் அரசியல் நிகழ்ச்சிபோக்குகளை —உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் இருந்தும் ஏகாதிபத்திய இரண்டாம் உலகப் போரின் போதும் அதன் பின்னருமான உலகளாவிய மற்றும் தேசிய அளவிலான வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியில் இருந்தும் எழுகின்றவை— அடையாளம் காண்பதற்கு முனைகிறது. இந்த வரலாறு, தனது முக்கிய கவனத்தை, பிரதான அரசியல் தலைவர்களான கனன், பப்லோ, மண்டேல் மற்றும் ஹீலியின் அகநிலையாக சிந்திக்கப்பட்ட நோக்கங்களின் மீது வைக்கவில்லை, மாறாக, ஏங்கெல்ஸின் வார்த்தைகளைக் கொண்டு கூறுவதானால், “செயல்படும் பரந்த மக்களின் மற்றும் அவர்களது தலைவர்களின் —மகத்தான மனிதர்கள் எனப்படுபவர்களின்— மூளைகளில் நனவான நோக்கங்களாக பிரதிபலிக்கின்ற” வர்க்கப் போராட்டத்தின் உண்மையான புறநிலை உந்து சக்திகளின் மீது கவனம்குவிக்கிறது.” [4]
1953 நவம்பர் உடைவில் உச்சம் கண்டதாய் இருந்த 1951 மூன்றாம் உலக காங்கிரசைத் தொடர்ந்துவந்த போராட்டத்திற்கு கட்டியம் கூறியிருந்த நான்காம் அகிலத்திற்குள்ளான மோதல்களை, உலகப் போர் மற்றும் அதன்பின் வந்த சிக்கலான மற்றும் துரிதமாக மாற்றம் கண்ட நிலைமைகளின் உள்ளடக்கத்தினுள், நாம் காக்கும் மரபியம் பகுப்பாய்வு செய்கிறது. குட்டி-முதலாளித்துவ தீவிரப்பட்ட புத்திஜீவித்தட்டின் பெரும் பிரிவுகளது அரசியல் நோக்குநிலையில் ஏற்பட்ட வலதுநோக்கிய நகர்வைப் பிரதிபலித்த, 1940களில் எழுந்த திருத்தல்வாதப் போக்குகளுக்கு இந் நூல் கவனத்தை ஈர்க்கிறது.
1940களில் அபிவிருத்தி கண்ட மோதல்கள் சோசலிச தொழிலாளர் கட்சிக்குள்ளாக 1939-40 இல் நடந்த கன்னைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக சிறந்த விதத்தில் புரிந்துகொள்ளப்பட முடியும். ட்ரொட்ஸ்கி தனது வாழ்வின் இறுதி ஆண்டில், ஜேம்ஸ் பேர்ன்ஹாம் (1905-1987), மாக்ஸ் சாக்ட்மன் (1904-1972) மற்றும் மார்ட்டின் அபேர்ன் (1898-1949) ஆகியோரது “குட்டி-முதலாளித்துவ எதிர்ப்பு”க்கு எதிராக அவரது தலைமையில் நடத்திய போராட்டமானது, நான்காம் அகிலத்தின் வரலாற்றில் ஒரு தனித்துவமான மற்றும் தனி-முக்கியத்துவம் கொண்ட அத்தியாயமாக பொதுவாக கருதப்படும் மட்டத்திற்கு ஒரு செறிவான குணாம்சம் கொண்டதாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் வெடிப்புடன் 1939 செப்டம்பரில் தொடங்கிய அது, 1940 ஏப்ரல் வரையில் தொடர்ந்தது. சிறுபான்மையானது SWP இல் இருந்து பிரிந்து தொழிலாளர் கட்சியை உருவாக்கியது. ஒரு மாதத்திற்குப் பின்னர், அந்த சிறுபான்மையின் பிரதான தத்துவாசிரியராக செயலாற்றியிருந்த ஜேம்ஸ் பேர்ன்ஹாம் தொழிலாளர் கட்சியில் இருந்து இராஜினாமா செய்ததோடு மார்க்சிசம் மற்றும் சோசலிசத்தின் மீதான தனது மறுதலிப்பையும் அறிவித்தார்.
சோசலிச தொழிலாளர் கட்சிக்குள்ளான போராட்டத்திற்கு ட்ரொட்ஸ்கி வழங்கிய பங்களிப்பு அவரது மகத்தான எழுத்துக்களில் இடம்பிடிக்கத்தக்கதாகும். கோயோகானில் ஒரு கூண்டு போன்ற வில்லாவின் சுவர்களுக்குள் அடைபட்டு, GPU படுகொலையாளர்களது தொடர்ச்சியான துரத்தலின் அபாயத்திற்குட்பட்டிருந்த நிலையிலும், அவரது அரசியல் துல்லியப்பார்வை பாதிக்கப்படவில்லை. அவரது சமகாலத்தவர்களை விடவும் அதிக தூரத்திற்கு அந்த “வயதான மனிதரால்” எதிர்காலத்தை நன்கு பார்க்க முடிந்தது.
இந்த கன்னைப் போராட்டத்தில் மேலோங்கிய முக்கிய அரசியல் பிரச்சினையாக ”ரஷ்யப் பிரச்சினை”, அதாவது சோவியத் ஒன்றியத்தின் வர்க்கத் தன்மை குறித்த பிரச்சினை இருந்தது. சோவியத் ஒன்றியமானது, ஸ்ராலின் 1939 ஆகஸ்டின் பிற்பகுதியில் ஹிட்லருடன் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் (non-aggression pact) செய்துகொண்டதன் பின்னர், அதனைத் தொடர்ந்து போலந்தின் மீது நாஜி-ஸ்ராலினிச கூட்டு படையெடுப்பு நடந்திருந்த பின்னர், இனியும் அது ஒரு தொழிலாளர் அரசாக வரையறை செய்யப்பட முடியாது என்று சாக்ட்மன் வாதிட்டார். ஒரு புதிய வடிவிலான சுரண்டல் சமூகத்தின் தலைமையில் அமர்ந்திருக்கும் ஒரு ஆளும் வர்க்கமாக சோவியத் அதிகாரத்துவம் பரிணாம வளர்ச்சியடைந்திருந்ததாக அவர் கூறினார்.
நாஜி ஜேர்மனியுடன் செய்து கொண்ட பிற்போக்குத்தனமான கூட்டின் அடிப்படையில் சோவியத் ஒன்றியத்தை சாக்ட்மன் மறுவரையறை செய்ததை ட்ரொட்ஸ்கி எதிர்த்தார். ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமை நிச்சயமாக மறுக்கமுடியாத ஒரு துரோகமே. ஆயினும், “சோவியத் ஒன்றியத்தின் சமூக தன்மையானது, அது நட்பு கொண்டுள்ளது ஜனநாயகத்துடனா அல்லது பாசிசத்துடனா என்பதைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை” [5] என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். சோவியத் ஒன்றியம் குறித்த சரியான வரையறை மீதான சண்டையில் சம்பந்தப்பட்ட வரலாற்று முன்னோக்கு என்னும் அடியிலிருக்கும் பிரச்சினைக்கு அவர் கவனம் ஈர்த்தார்:
சோவியத் ஒன்றியப் பிரச்சினையானது, நமது காலத்தின் ஒட்டுமொத்த வரலாற்று நிகழ்ச்சிபோக்கில் இருந்து தனித்துவமானதாக தனிமைப்படுத்திப் பார்க்கப்பட முடியாது. ஒன்று ஸ்ராலின் அரசானது ஒரு இடைமருவல் உருவாக்கமாக, ஒரு பின்தங்கிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நாட்டில் ஒரு தொழிலாளர் அரசின் உருக்குலைந்த ஒன்றாக அது இருக்க வேண்டும், அல்லது ‘அதிகாரத்துவ கூட்டுறவுமயமாக்கல்’ (bureaucratic collectivism) என்பதுதான் உலகெங்கிலும் முதலாளித்துவத்தை பிரதியிடுகின்ற புதிய சமூக உருவாக்கமாக (ஸ்ராலினிசம், பாசிசம், புதிய ஒப்பந்தங்கள், போன்றவை) இருக்க வேண்டும். வார்த்தைப்பிரயோக பரிசோதனைகள் (தொழிலாளர் அரசா, தொழிலாளர் அரசு இல்லையா; வர்க்கமா, வர்க்கமில்லையா போன்றவை) இந்த வரலாற்று அம்சத்தின் கீழாக மட்டுமே ஒரு அர்த்தத்தைப் பெறுகின்றன. இரண்டாவதை தெரிவு செய்பவர், வெளிப்படையாகவோ அல்லது மௌனமாகவோ, உலகப் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சாத்திய ஆற்றல்கள் அனைத்தும் பிரயோகித்துத் தீர்க்கப்பட்டு விட்டன என்றும், சோசலிச இயக்கம் திவாலடைந்து விட்டது என்றும், பழைய முதலாளித்துவமானது ஒரு புதிய சுரண்டும் வர்க்கத்துடன் “அதிகாரத்துவக் கூட்டுறவுமயமாக்கலாக” தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறது என்றும் ஒப்புக்கொள்கிறார்.
இத்தகையதொரு முடிவின் மாபெரும் முக்கியத்துவமானது சுய-விளக்கம் கொண்டதாகும். இது உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மற்றும் மனிதகுலத்தின் ஒட்டுமொத்த தலைவிதி குறித்ததாகும். [6]
முன்கண்டிராத முதலாளித்துவ நெருக்கடி சகாப்தம் ஒன்றின் கடமைகளுக்கு நிகரான விதத்தில் ஒரு புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்புவதில் முன்னேறிய ஏகாதிபத்திய நாடுகளில் இருக்கும் தொழிலாள வர்க்கம் இன்னும் வெற்றியடைந்திருக்கவில்லை என்பதை ட்ரொட்ஸ்கி ஒப்புக்கொண்டார். ஆனால் அப்படியானதொரு கட்சியை உருவாக்குவது சாத்தியம் என்பதையே போல்ஷிவிசம் மற்றும் அக்டோபர் புரட்சியின் உதாரணம் விளங்கப்படுத்தியிருந்தது. ஆகவே, மாபெரும் வரலாற்றுப் பிரச்சினையானது “பின்வருமாறு நிற்கிறது” என்று ட்ரொட்ஸ்கி வாதிட்டார்:
புறநிலை வரலாற்று அவசியமானது, இறுதி முடிவில் தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் படையின் நனவில் தனக்கென ஒரு பாதையை கண்டுகொள்ளுமா; அதாவது, அது உருவாக்கும் போரும் மற்றும் ஆழமான அதிர்ச்சிகளின் போக்கில், பாட்டாளி வர்க்கத்தை அதிகாரத்தைக் கைப்பற்ற இட்டுச் செல்லும் திறனுடைய ஒரு உண்மையான புரட்சிகரக் கட்சி உருவாக்கப்படுமா?
இந்தக் கேள்விக்கு நான்காம் அகிலம், அதன் வேலைத்திட்ட உரையின் மூலமாக மட்டுமல்ல, அதன் இருப்பு என்ற அந்த உண்மையின் மூலமாகவே கூட, ஆம் என்றே பதிலளித்திருக்கிறது. போலி-மார்க்சிசத்தின் மனவுறுதி தொலைத்த மற்றும் மிரட்சிகண்ட பிரதிநிதிகளது பல்வேறு வகையினர் அனைவரும் இதற்குமாறாக, தலைமையின் திவால்நிலையானது பாட்டாளி வர்க்கம் அதன் புரட்சிகர இலட்சியத்தை நிறைவேற்றும் திறனற்று இருப்பதை ‘பிரதிபலிக்கிறது’ என்ற அனுமானத்தில் இருந்து முன்செல்கின்றனர். நமது எதிரிகள் எல்லாருமே இந்த சிந்தனையை தெளிவாக வெளிப்படுத்தி விடுவதில்லைத்தான், என்றாலும் அவர்கள் அனைவருமே —அதி-இடதுகள், மத்தியவாதிகள், அராஜகவாதிகள், சொல்லவும் அவசியமில்லை ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியினர்— தோல்விகளுக்கான பொறுப்பை தம்மிடம் இருந்து பாட்டாளி வர்க்கத்தின் தோள்களுக்கு இடமாற்றி விடுகின்றனர். இவர்களில் யாருமே துல்லியமாய் எந்த நிலைமைகளின் கீழ் பாட்டாளி வர்க்கமானது சோசலிச மாற்றத்தை சாதிக்கும் திறனுடையதாக இருக்கும் என்று சுட்டிக்காட்டுவதில்லை.
தோல்விகளுக்கான காரணம் பாட்டாளி வர்க்கத்தின் சமூக குணங்களிலேயே வேரூன்றியிருக்கிறது என்பதை உண்மையென்று நாம் ஒப்புக்கொள்வதானால் அதன்பின் நவீன சமூகத்தின் நிலையானது நம்பிக்கையற்ற ஒன்றாகவே ஒப்புக்கொள்ளப்பட வேண்டியிருக்கும்.[7]
சாக்ட்மன் மற்றும் பேர்ன்ஹாமுக்கு ஊக்குவிக்கும்சக்தியாக இருந்த வரலாற்று மற்றும் அரசியல் அவநம்பிக்கையை ட்ரொட்ஸ்கி அடையாளம் கண்டார். சாக்ட்மன்-பேர்ன்ஹாம் கன்னையை ட்ரொட்ஸ்கி “குட்டி-முதலாளித்துவ” அடைமொழியால் குணாம்சப்படுத்தியது வெறுமனே உருவகமன்று. அந்த சிறுபான்மையானது 1930களின் தோல்விகளால் விரக்திகண்டு தார்மீகரீதியில் ஐயுறவுவாதத்தால் நொருக்கப்பட்டு கிடந்த நடுத்தர-வர்க்க புத்திஜீவித் தட்டின் பரந்த பிரிவின் கண்ணோட்டங்களுக்கான அரசியல் வெளிப்பாட்டையே கொடுத்தது. நகைமுரணான விதத்தில், SWP இன் கன்னை மோதல் வெடித்த அந்த தருணத்தில்தான், பேர்ன்ஹாமும் சாக்ட்மனும், “பின்வாங்கும் புத்திஜீவிகள்” குறித்த ஒரு கொந்தளிக்கும் சித்திரத்தை வழங்கிய ஒரு கட்டுரையை, புதிய அகிலம் (The New International) இன் 1939 ஜனவரி பதிப்பில் இணைந்து எழுதியிருந்தனர்:
ஒரு புரட்சிகரத் தோல்வியைத் தொடர்ந்து வருகின்ற ஒவ்வொரு பிற்போக்குத்தனத்தின் காலகட்டமும் மார்க்சிசத்தை ”காலாவதி”யாகி விட்டதாக ஒதுக்கித் தள்ளுகின்ற பல்வேறு வகையான கற்பனையான மற்றும் தற்காலிகமான “புதிய” மற்றும் “நவநாகரிக” சித்தாந்தங்களை உருவாக்குகிறது. 1905 ரஷ்யப் புரட்சியின் தோல்வியைத் தொடர்ந்த “கன்னைப் போராட்டங்களது” வரலாற்றை சென்ற தசாப்தம் அல்லது அதனையொட்டிய காலத்தில் வந்த அவற்றின் இணையானவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் தெளிவூட்டக் கூடியதாக இருக்கும். இப்போதிருக்கும் மனச்சோர்வு, ஊக்கமின்மை, பாட்டாளி வர்க்கத்தின் மற்றும் அதன் புரட்சிகர இயக்கத்தின் மீண்டெழும் ஆற்றல்கள் மீது நம்பிக்கையின்மை ஆகியவற்றின் பிற்போக்குத்தனமான மனோநிலைகள் தான் புரட்சிகர மார்க்சிசத்திற்கு எதிரான பரவலான தாக்குதல்களாய் நியாயம் கற்பிக்கின்றன. தீவிரப்பட்ட புத்திஜீவிகள், அவர்களது அந்த சமூக இருப்பின் இயல்பின் காரணமாக, பொதுவாக இந்த மனோநிலைகளுக்கு வளைந்துகொடுக்கின்ற, அவற்றை வலிந்து எதிர்த்து நிற்பதற்குப் பதிலாக அவற்றுக்கு சரணாகதி அடைகின்ற, முதல் ஆட்களாய் இருக்கின்றனர். நிச்சயமாய் முற்றிலும் மாறுபட்டதொரு கோணத்தில் என்றாலும், ரஷ்யப் புரட்சி மீதான ஸ்ராலினிச சீரழிவும் பாசிசத்தின் தற்காலிக மேலெழுச்சியும் பிற்போக்குத்தனத்தின் வெகுநீண்ட நமது காலகட்டத்தின் விளைபொருட்களாக இருப்பதைப் போன்று, அவர்களும் அதற்குப் பலியானவர்களே.
இந்த புத்திஜீவிகளை பாதித்திருக்கும் முக்கியமான புத்திஜீவித்தன வியாதியை ஸ்ராலிசவெறுப்பு அல்லது கொச்சை ஸ்ராலினிச-எதிர்ப்பு என்று அழைக்கலாம். நன்கு வேரூன்றியிருக்கும் இந்த வியாதியானது ஜோடிப்புகள் மற்றும் களையெடுப்புகள் என்ற ஸ்ராலினின் படுபயங்கரமான அமைப்புமுறையின் மீது உண்டான வியாபகமான வெறுப்பினால் தூண்டப்பட்டிருந்தது. இதன் விளைவு என்னவாயிற்று என்றால், அதன்பின் இந்த விடயத்தில் எழுதப்பட்டிருக்கக் கூடிய அநேகமானவை திடமான சமூக பகுப்பாய்வின் விளைபொருளாக இருப்பது குறைவாகவும் மன அதிர்ச்சியின் விளைபொருளாக இருப்பதுதான் அதிகமாகவும் இருக்கிறது, அத்துடன் ஒரு பகுப்பாய்வு இருக்குமென்றாலும் கூட, அது விஞ்ஞானபூர்வமானதாக அல்லது அரசியல்பூர்வமானதாக இருப்பதைக் காட்டிலும் அதிகமாக தார்மீக நெறிப்பூர்வமானதாகவே இருக்கிறது.[8]
பேர்ன்ஹாமும் சாக்ட்மனும் புத்திஜீவித் தட்டை பாதித்திருந்த “புத்திஜீவித வியாதி”யை மிகத் துல்லியமாக விவரிக்க முடிந்ததன் காரணம் அவர்களே அதன் அறிகுறிகளை ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருந்தார்கள் என்பதால்தான் என்று ஒருவர் எண்ணினால் அது நியாயமே. அந்த ஆண்டு முடியும் முன்பாக, அவர்களை பாதித்திருந்த வியாதி அதன் முற்றிய நிலைக்கு முன்னேறி விட்டிருந்தது.
1939-40 போராட்டத்தில் எழுந்த திருத்தல்வாதத்தின் ட்ரொட்ஸ்கிச-விரோத வடிவத்தின் திகைப்பூட்டும் குணாதிசயங்களில் ஒன்றாக, மார்க்சிசத்தின் மெய்யியல் அடித்தளங்களை, வர்க்க அடிப்படையை, அரசியல் வேலைத்திட்டத்தை, மற்றும் வரலாற்று முன்னோக்கை என முழுமையாக அது மறுதலித்தமை இருந்தது. சோசலிசத்திற்கான புரட்சிகரப் போராட்டத்தை சீர்திருத்தி மாற்றுவதை நோக்கி செலுத்தப்பட்டதாக அது இல்லை, மாறாக, இலக்கையே நிராகரிப்பதை நோக்கி இருந்தது. “மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்தின்” மீது விமர்சனத்தை அபிவிருத்தி செய்த நிலையில், அது இனியும் எந்த மார்க்சிசக் கூறுடனும் உடன்பாட்டில் இல்லை என்பதான முடிவுக்கு அது இழுக்கப்பட்டிருந்தது.
அந்த சிறுபான்மையில் வெவ்வேறு தனிப்பட்ட மனிதர்களும் வெவ்வேறான சமயங்களில் இந்த முடிவுக்கு வந்துசேர்ந்தார்கள் என்பது உண்மையே. ஆயினும் பேர்ன்ஹாம்-சாக்ட்மன் எதிர்ப்பின் அடிப்படையான வலது-சாரி பயணப்பாதையானது 1940 மே 21 தேதியிட்ட, தொழிலாளர் கட்சியில் இருந்தான பேர்ன்ஹாமின் இராஜினாமா கடிதத்தில் தெளிவாக கூறப்பட்டிருந்தது. இந்த ஆவணமானது, திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் தனது நெருங்கிய அரசியல் கூட்டாளி தன்னை விட்டு விலகியதில், சாக்ட்மனுக்கு நேர்ந்த சங்கடம் என்பதற்கு மேலாய் ஒன்றுமில்லை என்பதைப் போல பொதுவாக பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் ஒரு பரந்த வரலாற்று மற்றும் அரசியல் உள்ளடக்கத்தில் பார்க்கும்போது, பேர்ன்ஹாமின் கடிதமானது நான்காம் அகிலத்துடன் உடைத்துக் கொண்ட பின்னர் மக்ஸ் சாக்ட்மனின் அரசியல் பரிணாமத்தை மட்டுமல்ல, 1940களில் நான்காம் அகிலத்திற்குள்ளும் சோசலிச தொழிலாளர் கட்சிக்குள்ளும் எழவிருந்த எதிர்ப்புப் போக்குகள் அத்தனையின் அரசியல் பரிணாமத்தையும் கூட வரையறை செய்திருந்தது மற்றும் முன்கணித்திருந்தது. பேர்ன்ஹாம் அறிவித்தார்:
மார்க்சிச இயக்கத்துடன் —அதன் சீர்திருத்தவாத வகையோ, லெனினிச வகையோ, ஸ்ராலினிச வகையோ அல்லது ட்ரொட்ஸ்கிச வகையோ எந்த வகையாயினும்— தொடர்புபடுத்தப்பட்டு வந்திருக்கின்ற மிக முக்கியமான நம்பிக்கைகளில், அதன் பாரம்பரியமான வடிவத்தில் கிட்டத்தட்ட எதுவொன்றையும் நான் ஏற்றுக் கொள்வது கிடையாது. இந்த நம்பிக்கைகளை பொய்யானவையாக அல்லது காலாவதியானவையாக அல்லது அர்த்தமற்றவையாக நான் கருதுகிறேன்; அல்லது ஒரு சில சந்தர்ப்பங்களில், உண்மையில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திருத்தப்பட்டதாக இருக்கின்ற வடிவத்தில் அவற்றை இனி முறைப்படி மார்க்சிசம் என்று அழைக்கப்பட முடியாது என நான் கருதுகிறேன். ....
’சோசலிசம் தவிர்க்கமுடியாதது’ என்று கூறுவது அர்த்தமற்றது என்றும் சோசலிசம் மட்டுமே ‘முதலாளித்துவத்திற்கான ஒரே மாற்றீடு’ என்பது பொய்யானது என்றும் நான் நம்புவது மட்டுமல்ல; இப்போது நம்மிடம் இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் சுரண்டல் சமூகத்தின் ஒரு புதிய வடிவம் (இதனை நான் ‘நிர்வாகரீதியான சமூகம்’ [managerial society] என்று அழைக்கிறேன்) முதலாளித்துவத்திற்கான மாற்றீடாவது சாத்தியம் என்பது மட்டுமல்ல அதுவே சோசலிசத்தைக் காட்டிலும் இப்போதைய காலகட்டத்தின் அநேகமான விளைபொருளாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். ....
கனன் சற்று நீண்ட காலமாய் புரிந்து கொண்டிருப்பதைப் போல, கட்சி குறித்த லெனினிசக் கருத்தாக்கத்துடன் நான் அப்பட்டமாகவும் முழுமையாகவும் முரண்படுகிறேன் — அந்த கருத்தாக்கத்தின் மீதான ஸ்ராலினின் அல்லது கனனின் திருத்தங்களுடன் மட்டுமல்ல, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியினுடையதின் மீதும் சேர்த்துத் தான்.....
இத்தகைய நம்பிக்கைகளின், மற்றும் இவற்றை ஒத்த மற்றவற்றின், வெளிச்சத்தில், நான்காம் அகில இயக்கத்தின் வேலைத்திட்ட ஆவணங்களில் (தொழிலாளர் கட்சியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட) கணிசமான பகுதியை நான் நிராகரித்தாக வேண்டும் என்பதை சொல்லாமலே விளங்கிக் கொள்ள முடியும். 'இடைமருவு வேலைத்திட்டம்’ என்னைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட தப்பும்தவறுமான அபத்தமாகவும், மிக அருமையான புத்திஜீவிப் பிரதிநிதியின் கைகளில் இருந்தாலுமே கூட சமகால வரலாற்றைக் கையாள்வதற்கு மார்க்சிசம் திறனற்று இருப்பதற்கான ஒரு முக்கியமான உதாரணமாகவுமே தெரிகிறது —முதன்முதலில் முன்வைக்கப்பட்டபோதும் தெரிந்த அதே விதத்தில். [9]
அவரது அரசியல் நிலைப்பாடுகள் “பின்வாங்கும் புத்திஜீவிகள்” இல் அவரும் சாக்ட்மனும் விவரித்திருந்த தனிமனித விரக்திக்கு தொடர்பில்லாதவை அல்ல என்பதை பேர்ன்ஹாம், இறுதியாய், ஒப்புக்கொண்டார்:
எந்தவொரு மனிதனும் தனது சொந்த நடவடிக்கைகளுக்கான நோக்கங்கள் மற்றும் உந்துசக்திகளை தெளிவாக அறிந்து வைத்திருப்பதாக கற்பனை செய்யுமளவுக்கு துடுக்கானவராக இருப்பதாக காட்டிக்கொள்ளும் கடைசி மனிதனாகத்தான் நான் இருப்பேன்- நானே இருக்க வேண்டும். இந்த ஒட்டுமொத்த கடிதமுமே ‘எனக்கு அரசியலை விட்டு விலகிவிட வேண்டும் போலிருக்கிறது’ என்ற ஒற்றை வரியைக் கூறுவதற்கான நீட்டிமுழக்கிய வழியாக தெரியலாம். கடந்த இருபதுக்கும் கூடுதலான ஆண்டுகளது தோல்விகள் மற்றும் காட்டிக்கொடுப்புகள் என்னைப் பாதித்திருக்கின்றன என்பது நிச்சயமான உண்மையே. மார்க்சிசம் நிராகரிக்கப்பட வேண்டும் என்ற எனது நம்பிக்கைக்கான ஆதாரத்தின் பகுதியை இவை உருவாக்குகின்றன: வரலாறு வழங்கிய பல சோதனைகளில் ஒவ்வொன்றிலுமே, மார்க்சிச இயக்கங்கள் சோசலிசத்தை தோல்வியடையச் செய்திருக்கின்றன அல்லது அதனை காட்டிக் கொடுத்திருக்கின்றன. அவை எனது உணர்வுகள் மற்றும் மனோபாவங்களையும் பாதிக்கின்றன, அதையும் நான் அறிவேன்.[10]
இந்த கடைசி வரி பேர்ன்ஹாம் தனது ஓடுகாலித்தனத்திற்கு காட்டிய ஒரு குறிப்பிடத்தக்க காரணநியாயமாக இருந்தது. சோசலிசத்தின் ஒரு வருங்காலத் தோல்வியில் அல்லது காட்டிக்கொடுப்பில் பங்கேற்பதைக் காட்டிலும், முந்திக் கொண்டு தானே புரட்சிகர இயக்கத்தில் இருந்து விலகி ஓடுவதற்கு பேர்ன்ஹாம் முடிவெடுத்தார். தொழிலாளர் கட்சியில் இருந்து இராஜினாமா செய்த பின்னர், பேர்ன்ஹாம் வெகு துரிதமாக முதலாளித்துவ கம்யூனிச-விரோத அரசியலின் அதி வலதின் பக்கம் நகர்ந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில், சோவியத் ஒன்றியத்தையும் கம்யூனிசத்தையும் எதிர்த்துப் போராட அமெரிக்காவால் மேலாதிக்கம் செலுத்தப்படுகின்ற “உலகக் கூட்டமைப்பு” ஒன்றை உருவாக்க அழைப்பு விடுத்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு மூலோபாயவாதியாக அவர் ஆனார். 1950களில், National Review ஐ ஸ்தாபிப்பதில் பரம பிற்போக்குவாதியான வில்லியம் F. பாக்லி. ஜூனியர் உடன் சேர்ந்து செயற்பட்டார். அமெரிக்காவில் நவ-தாராளவாதிகளது ஒரு முக்கியமான புத்திஜீவிதத் தலைவராக அங்கீகரிக்கப்பட்டு, 1983 இல் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனிடம் இருந்து சுதந்திர பதக்கம் (Medal of Freedom) பேர்ன்ஹாமுக்கு வழங்கப்பட்டது.
மார்க்சிசத்தின் மீதான பேர்ன்ஹாமின் மறுதலிப்பு சாக்ட்மன்வாதிகளால் மட்டுமல்லாது, 1940களில் SWPக்குள்ளும் நான்காம் அகிலத்திற்குள்ளும் எழுந்திருந்த மற்ற எதிர்ப்புப் போக்குகளாலும் எடுக்கப்படவிருந்த பாதையை முன்கணித்ததாக இருந்தது. ட்ரொட்ஸ்கி கூறிய ஒரு வசனத்தை சற்று மாற்றிச் சொல்வதானால், விரக்தியடைந்த குட்டி-முதலாளித்துவ முன்னாள்-ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எல்லோருமே பேர்ன்ஹாமாக ஆவதில்லை, ஆனால் ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து விரக்தியடைந்து ஓடுகின்ற ஒவ்வொரு ஓடுகாலியிலுமே பேர்ன்ஹாமின் அம்சம் கொஞ்சம் இருக்கிறது.[11]
Internationale Kommunisten Deutschlands (IKD) இல் இருந்து உருவான “மூன்று ஆய்வுத்தத்துவங்கள்” (Three Theses) குழு ([Retrogressionists] “பின்நோக்குவாதிகள்” என்றும் அறியப்படுகிறார்கள்) இந்தப் போக்குகளில் முதலாவதாகவும் மிக முக்கியமானதாகவும் இருந்தது. நாடுகடந்து வாழ்ந்த ஜேர்மன் ட்ரொட்ஸ்கிஸ்டுகளது இந்த அமைப்பு, ஜோசப் வேபர் (1901-1959) ஆல் தலைமை கொடுக்கப்பட்டிருந்தது. நாம் காக்கும் மரபியம் வெளியிடப்படுவதற்கு முன்பாக, நான்காம் அகிலத்திற்குள் ட்ரொட்ஸ்கிச-விரோத கருத்தாக்கங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதில் இக்குழு வகித்த முக்கியமான பங்கு கிட்டத்தட்ட மறக்கப்பட்டு விட்டிருந்தது. சற்றுகாலம் தள்ளி எழுந்த மொரோ-கோல்ட்மன் எதிர்ப்பு அணியின் தோற்றுவாய்கள் மற்றும் நிலைப்பாடுகளை, வேபர் எழுதிய ஆவணங்களின் உதவியின்றி புரிந்து கொள்வது சாத்தியமில்லாததாகும். IKD இன் அரசியல் இந்தத் தொகுதியின் 8வது அத்தியாயத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. ஆயினும், ஃபீலிக்ஸ் மொரோவும் (1906-1988) ஆல்பேர்ட் கோல்ட்மனும் (1897-1960) தீர்க்கதரிசிகள் போன்றும், கனனின் கரங்களில் அவர்கள் செய்த அரசியல் தியாகம்தான் ட்ரொட்ஸ்கிசத்தின் சாபக்கேட்டுக்கு வழிவகுத்தது என்றுமாய் விளம்பரப்படுத்துவதற்கு சமீபத்தில் முயற்சி நடக்கின்றதை (சற்றுகீழே அதனை நான் குறிப்பிடுகிறேன்) கணக்கிலெடுத்து, IKD இன் விரக்தியடைந்த, தோல்விவாத மற்றும் மார்க்சிச-விரோத முன்னோக்கினைப் பற்றிய ஒரு சுருக்கமான விவரிப்பை வழங்குவது அவசியமாகிறது.
1941 அக்டோபரில் IKD வெளியிட்ட ஒரு அறிக்கை, உலக சோசலிசப் புரட்சியை அரசியல் பயணப்பாதையாகக் கொள்ளும் முன்னோக்கை நிராகரித்தது. ஐரோப்பாவில் பாசிசத்தின் வெற்றிகள், தொழிலாள வர்க்கத்தை 1848க்கு முந்தைய நிலைமைகளுக்கு தூக்கிவீசியிருந்தது என்றது. நவீன உலகமானது, சோசலிசத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கவில்லை, மாறாக காட்டுமிராண்டித்தனத்தை நோக்கி பின்னடைந்து கொண்டிருக்கிறது என்று அது வலியுறுத்தியது. ஒரு மார்க்சிசக் கட்சியின் தலைமையில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களது ஒரு புதிய மேலெழுச்சியின் மூலமாக தலைகீழாக்கப்படுவதற்கு, இந்த பின்னடைவு ஒன்றும் அரசியல் தோல்விகளது தற்காலிகப் பின்விளைவு அல்ல; மாறாக, இந்த பின்னடைவானது ஒரு தவிர்க்கவியலாத நிகழ்ச்சிபோக்காக புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்றது. மாற்றமுடியாத ஒன்றாக IKD நம்பிய நாஜிக்களது இராணுவ வெற்றியானது, உலக வரலாற்றில் ஒரு புதிய கட்டத்தைக் குறித்து நின்றதாகக் கருதியது.
சிறைச்சாலைகள், புதிய சேரிகள், கட்டாயத் தொழிலாளர்கள், வதை முகாம்கள் மற்றும் இன்னும் போர்க்கைதிகளது முகாம்களும் கூட இடைமருவல் அரசியல்-இராணுவ ஸ்தாபனங்கள் மட்டுமல்ல, அவை ஒரு நவீன அடிமை அரசை நோக்கிய அபிவிருத்தியுடன் சேர்ந்துவருகின்ற புதிய பொருளாதார சுரண்டலின் வடிவங்களாய் இருக்கும் மட்டத்திற்கு மனிதகுலத்தின் ஒரு கணிசமான சதவீதத்தினரின் நிரந்தரத் தலைவிதியாக இருக்ககூடிய ஒன்றாகின்றது.[12]
சோசலிசத்துக்கான போராட்டமானது, வரலாற்றுரீதியான பின்னோக்கிசெல்லும் ஒரு நிகழ்ச்சிபோக்கின் ஊடாக, “தேசிய சுதந்திரத்திற்கான உந்துதலை” கொண்டு விஞ்சப்பட்டிருந்ததாக ”மூன்று ஆய்வுத்தத்துவங்கள்” குழு முடிவுக்கு வந்தது. [13] 1943 இல் எழுதப்பட்டு 1944 அக்டோபரில் புதிய அகிலம் இல் (The New International - 1940 உடைவைத் தொடர்ந்து சாக்ட்மன்வாத சிறுபான்மையால் கைப்பற்றப்பட்டிருந்தது) பிரசுரமான ஒரு பிந்தைய ஆவணத்தில், IKD, இரண்டாம் அகிலத்தின் காட்டிக்கொடுப்புக்கு எதிரான போராட்டத்தில் லெனின் அபிவிருத்தி செய்திருந்ததும், போல்ஷிவிக் கட்சி 1917 இல் தனது மூலோபாய அடித்தளமாகக் கொண்டிருந்ததுமான ஏகாதிபத்திய சகாப்தம் குறித்த வரலாற்று பகுப்பாய்வை வெளிப்படையாக நிராகரித்தது. அது பின்வருமாறு வலியுறுத்தியது:
முதலாம் உலகப் போரையும் அந்த சமயத்தில் அதனுடன் சம்பந்தப்பட்ட மற்ற அத்தனை விடயங்களையும் இப்போது திரும்பிப் பார்த்தால், முதலாம் உலகப் போரானது, அதன் வெடிப்புக்கு இட்டுச் சென்ற அத்தனை காரணரீதியான தொடர்புகளுக்கு அப்பாலும், அது முதலாளித்துவத்தின் ஒரு வரலாற்று துரதிர்ஷ்டமும் மற்றும் வரலாற்றுரீதியாக அவசியமானதற்கு முன்கூட்டியே வரலாற்று அவசியத்தின் கட்டமைப்பினுள் முதலாளித்துவத்தின் பொறிவை அரங்கேற்றிய ஒரு விபத்தான நிகழ்வு என்பதற்கு அதிகமாய் ஒன்றுமில்லை என்பதை நாம் அங்கீகரித்தாக வேண்டும். [14]
ஆனால் உலகப் போர் ஒரு தற்செயலானால், இரண்டாம் அகிலத்தின் பொறிவும், அக்டோபர் புரட்சியின் வெற்றியும் கம்யூனிச அகிலத்தின் ஸ்தாபகமும் கூட தற்செயலானவையாகி விடுகின்றன. இவ்வாறாய், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியால் சூத்திரப்படுத்தப்பட்டவண்ணமான இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகர மார்க்சிச மூலோபாயத்தின் ஒட்டுமொத்த புறநிலை அடித்தளமும் கிட்டத்தட்ட மறுக்கப்பட்டது.
IKD அதன் அரசியல் அவநம்பிக்கையை மிகவும் அப்பட்டமான வார்த்தைகளில் சூத்திரப்படுத்தியது. ஒரு புரட்சிகர சக்தியாக தொழிலாள வர்க்கத்தின் கதை முடிந்ததாக அது அறிவித்தது. அது “சிதறி, சின்னாபின்னமாகி, உடைந்து, பல்வேறு அடுக்குகளிலும் ஒருவருக்கொருவர் எதிராய் நின்றுகொண்டு, அரசியல்ரீதியாக வெறுப்படைந்து, சர்வதேசரீதியாக தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் கட்டுப்படுத்தப்பட்டு...” இருந்தது என்றது.[15] முதலாளித்துவம் அழுகி நாற்றமெடுத்துக் கொண்டிருந்தபோதும், தொழிலாள வர்க்கம் அதனைத் தூக்கி வீசத் திறனற்று இருந்தது. “முதலாளித்துவத்தை மறுதலிப்பதை பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கடமையாக மட்டுமே சிந்திப்பதில்” ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ‘மிகப் பொதுவான தவறு’ இருந்தது, “மார்கிசத்தைப் பற்றி முழுமையாக தவறாகப்புரிந்துகொண்டதில் இருந்து” இது எழுந்திருந்தது என்று IKD திட்டவட்டம் செய்தது. ஒரு புரட்சிகர சக்தியாக தொழிலாள வர்க்கத்தின் கையாலாகாத்தனத்திற்கு முகம்கொடுக்கின்ற நிலையில், “நூற்றாண்டுகள் பழைய” ஜனநாயகத்திற்கான போராட்டத்திற்கு திரும்புவது மட்டுமே ஒரேயொரு அரசியல் வழியாக இருந்தது என்று IKD அறிவித்தது. [16] ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்துக்கு நான்காம் அகிலம் விடுத்த அழைப்பை அது எதிர்த்தது:
ஐரோப்பா “சோசலிச அரசுகளாக” ஒன்றிணைவதற்கு முன்பாக, அது முதலில் மீண்டும் தனித்தனியாய் பிரிந்த சுதந்திரமான தன்னாட்சியான அரசுகளாக தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும். முழுமையாக இது பிரிந்த, அடிமைப்பட்ட, திருப்பி தூக்கிவீசப்பட்ட மக்கள் மற்றும் பாட்டாளி வர்க்கம் தம்மை ஒரு தேசமாக உருவாக்கிக் கொள்வதான ஒரு விடயமாகும். ....
நாம் இந்தக் கடமையை பின்வருமாறு சூத்திரப்படுத்தலாம்: தடம் மாறிய ஒட்டுமொத்த அபிவிருத்தியையும் மறுபடியும் மீள்கட்டுமானம் செய்வது, முதலாளித்துவத்தின் அத்தனை சாதனைகளையும் (தொழிலாளர் இயக்கம் உள்ளிட) மீட்சி செய்வது, மிக உயரிய சாதனைகளை எட்டி அவற்றை விஞ்சுவது. ....
ஆயினும் தொழிற்துறை முதலாளித்துவம் மற்றும் விஞ்ஞான சோசலிசத்தின் ஆரம்பகட்டத்தைச் சேர்ந்த நூற்றாண்டு-பழைய பிரச்சினையான — அரசியல் சுதந்திரத்தை வெல்வது, ஜனநாயகத்தை ஸ்தாபிப்பது (ரஷ்யாவுக்கும்) ஆகியவை தான் தேசிய விடுதலை மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் ஸ்தாபகத்திற்கான தவிர்க்கமுடியாத முன்நிபந்தனையாக, மிக நெருக்குகின்ற அரசியல் பிரச்சினையாக இருக்கிறது. [17]
1848-க்கு முந்தைய சகாப்தத்திற்கு அரசியல் நாட்காட்டியைத் திருப்புவதற்கும், சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தைக் கைவிடுவதற்கும், தேசிய இறையாண்மை மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கான போராட்டத்திற்குத் திரும்புவதற்கும் அது விடுத்த அழைப்பு, அத்தனை நாடுகளுக்கும் பொருந்தக் கூடியது என IKD வலியுறுத்தியது.
பொருத்தமான திருத்தங்களுடன் இந்த பிரச்சினையானது [ஜனநாயகம் மற்றும் தேசிய விடுதலை குறித்தது] ஒட்டுமொத்த உலகத்திற்கும் பொருந்தக் கூடியதாகும்; சீனா மற்றும் இந்தியா, ஜப்பான் மற்றும் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து. ஒரே வார்த்தையில், மொத்த ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவுக்கும். சக்திவாய்ந்த தீவிரப்பட்ட ஜனநாயக மற்றும் தேசியப் பிரச்சினை கொண்டிராத ஒரேயொரு நாடும் கூட எங்குமில்லை, அரசியல்ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் இயக்கமும் எங்குமேயில்லை. [18]
“தேசிய விடுதலை” என்பதே கையிலெடுக்கப்பட வேண்டிய மையமான சுலோகமாகும் என்று IKD பிரகடனம் செய்தது.
இதன்மூலமாக நாங்கள் கருதுவது இதுதான்: தொழிலாளர் இயக்கத்தின் மீளமைப்புக்கும் சோசலிசப் புரட்சிக்கும் மூலோபாயரீதியான இடைமருவுப்புள்ளியாக அத்தியாவசியமாகின்ற வரலாற்று அத்தியாயங்களில் ஒன்றாக தேசியப் பிரச்சினை இருக்கிறது. இந்த வரலாற்று அவசியமான அத்தியாயத்தைப் புரிந்து கொள்ளாத, அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரியாத எவரொருவரும் மார்க்சிசம்-லெனினிசம் குறித்து எதனையும் அறிந்திருக்கவுமில்லை, புரிந்து கொண்டிருக்கவுமில்லை.[19]
உண்மையில் IKD தான் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் வேலைத்திட்டத்தை மறுதலித்துக் கொண்டிருந்தது. ஜனநாயகக் கோரிக்கைகளுக்கான போராட்டத்தை முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்கான போராட்டத்தில் இருந்து பிரிப்பது நிரந்தரப் புரட்சியின் தத்துவத்தையும் வேலைத்திட்டத்தையும் கைவிடுவது என்று அர்த்தப்படுகின்றது. பின்தங்கிய முதலாளித்துவ அபிவிருத்தி கொண்ட நாடுகளில், நிரந்தரப் புரட்சித் தத்துவமானது, “ஜனநாயகத்தையும் தேசிய விடுதலையையும் சாதிக்கின்ற அவற்றின் கடமைகளுக்கான முழுமையான மற்றும் உண்மையான தீர்வு என்பது, அந்த தேசத்திற்கு, எல்லாவற்றுக்கும் மேல் அதன் பரந்த விவசாய வெகுஜனங்களுக்கு தலைமை கொடுத்து பாட்டாளி வர்க்கம் செலுத்தக்கூடிய சர்வாதிகாரத்தின் மூலமாக மட்டுமே சிந்தித்துப் பார்க்கக் கூடியதாகும் என்பதைக் குறிப்பிடுகிறது” என்று ட்ரொட்ஸ்கி விளக்கினார். [20]
குறைவாக அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஜனநாயக மற்றும் சோசலிசக் கோரிக்கைகளைப் பிரிக்கின்ற அதேநேரத்தில், உலக முதலாளித்துவத்தின் முன்னேறிய மையங்களில் தேசிய விடுதலைக்கான முதலாளித்துவ வேலைத்திட்டத்திற்கு உயிர்கொடுப்பதற்கும், சோசலிசத்துக்கான போராட்டத்தை காலப்பொருத்தமற்றதாகக் கூறி நிராகரிப்பதற்கும் IKD செய்த முயற்சிகள் அரசியல் சீரழிவின் நோய்நிலையின் மட்டத்தை எடுத்துக்காட்டுவதாக இருந்தது. IKD இன் தலைவரான ஜோசப் வேபர் 1940களின் மத்தியில், ஐரோப்பாவிலான நாஜி ஆட்சி ஐம்பது ஆண்டுகளுக்கு இல்லாது போனால், குறைந்தபட்சம் முப்பது ஆண்டுகளுக்கேனும் தொடரும் என்பதான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தார் என அவருடன் இணைந்து இயங்கியவர்களும் நண்பர்களும் பின்னாளில் நினைவுகூர்ந்தனர். [21]
IKD இன் நிலைப்பாட்டை சாக்ட்மன்வாதிகள் வரவேற்றனர், ஊக்குவித்தனர். அக்டோபர் புரட்சியை காலப்பொருத்தமற்றது என்று கூறி நிராகரித்த IKD இன் வாதங்கள், சோவியத் ஒன்றியத்தை தொழிலாளர் அரசாக வரையறை செய்வதையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாப்பதையும் அவர்கள் நிராகரித்தற்கு இணக்கமானவையாக இருந்தன.
நான்காம் அகிலத்திடம் இருந்து அதனைப் பிரித்துக் காட்டிய IKD இன் விரக்திநிறைந்த முன்னோக்கு இறுதியில் 1944 இல் சோசலிச தொழிலாளர் கட்சிக்குள்ளாக ஒரு தனி எதிரணிக் குழுவாக உருவாகிய மொரோ-கோல்ட்மன் போக்கின் வடிவத்தில் சோசலிச தொழிலாளர் கட்சிக்குள்ளாக ஆதரவைக் கண்டது. நாம் காக்கும் மரபியம் எழுதப்படுவதற்கு முன்புவரை, இந்த வலது-நகர்வுடைய போக்கானது இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த சமயத்திலான கனனின் வறட்டுப்பிடிவாதமான, தகவலறிவு-குறைவான மற்றும் நடைமுறைசாத்தியமற்ற பதிலிறுப்பாக சொல்லப்பட்டதற்கான ஒரு தொலைநோக்கான பிரதியீடு என்பதாக தவறாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் இரண்டு பிரதான தலைவர்களும் நான்காம் அகிலத்திலும் மற்றும் அமெரிக்க கட்சியிலும் குறிப்பிடத்தக்க பாத்திரங்களை வகித்திருந்தனர். அல்பேர்ட் கோல்ட்மன் ட்ரொட்ஸ்கியின் வழக்கறிஞராக, 1937 இல் டுவே ஆணையத்தில் அவரின் சார்பாக வாதாடியவர் ஆவார். 1941 ஸ்மித் சட்ட விசாரணையில், கோல்ட்மன் தேசத்துரோக குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியிருந்த SWP அங்கத்தவர்களை பாதுகாத்தவராவார். அவர் பிரதிவாதிகளில் ஒருவராக, குற்றம் இழைத்ததாக கூறப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட பதினெட்டு கட்சி அங்கத்தவர்களில் ஒருவராகவும் இருந்தார். ஃபீலிக்ஸ் மொரோ SWP இன் அரசியல் குழுவின் அங்கத்தவராய் இருந்தார், பிரமாதமான சோசலிச பத்திரிகையாளரான அவர், ஸ்பெயினில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் (Revolution and Counter-Revolution in Spain) என்ற அவரது புத்தகத்தின் மூலமாக சிறந்த புகழ்பெற்றார். 1941 விசாரணையின் முடிவில் தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டவர்களில் அவரும் ஒருவராவர். மொரோ-கோல்ட்மன் கன்னையின் இன்னொரு முக்கியமான உறுப்பினர் ஜோன் வான் ஹெஜெனோர்ட் (Jean van Heijenoort, 1912–1986) ஆவார், இவர் 1930களின் போது ட்ரொட்ஸ்கியின் அரசியல் செயலராகவும் இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் நான்காம் அகிலத்தின் அறிவிக்கப்படாத செயலராகவும் பணியாற்றியிருந்தார்.
நாம் காக்கும் மரபியம் மொரோ-கோல்ட்மன் போக்கின் நிலைப்பாடுகளை விரிவாக திறனாய்வு செய்கிறது. ஆயினும், நாம் காக்கும் மரபியம் முதலாவதாக வெளியிடப்பட்டதன் பின்னர், SWP இன் உள்முக விவாத சுற்றறிக்கைகள் கிடைக்கப் பெற்றதானது (1986-87 இல் இவை எனக்கு கிடைத்திருக்கவில்லை) மொரோ-கோல்ட்மன் போக்கின் மீது, IKD செலுத்திய செல்வாக்கின் மட்டத்தை முழுமையாக புரிந்து கொள்வதை சாத்தியமாக்குகிறது. 1942 இல், மொரோ, கோல்ட்மன் மற்றும் வான் ஹெஜெனோர்ட் (மார்க் லோரிஸ் என்ற பெயரில் எழுதினார்) “மூன்றுஆய்வுத்தத்துவங்கள்” தீர்மானத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த வாதங்களை எதிர்த்திருந்தனர். ஆனால் 1943 இன் பிற்பகுதிக்குள்ளாக, அவர்களது நிலைப்பாடுகள் ஒரு தீவிர மாற்றத்திற்கு ஆட்பட்டிருந்தன. அடுத்த மூன்று ஆண்டுகளில் SWP மற்றும் நான்காம் அகிலத்திற்குள்ளாக அபிவிருத்தி கண்ட அரசியல் போராட்டத்தின் பாதையில், மொரோ, ஐரோப்பாவிலான சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்துடன் நான்காம் அகிலம் ஒட்டிக்கொண்டிருப்பதானது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நிலவிய நிலைமைகளில் அதனை அரசியல்ரீதியாக பொருத்தமற்றதாக்குவதாக வாதிட்டார். ஐரோப்பாவிலான —குறிப்பாக பிரான்ஸ் மற்றும் இத்தாலியிலான— நிகழ்வுகளுக்கு மிகவும் பழமைவாத மற்றும் தோல்விவாத விதத்தில் பொருள்விளக்கமளித்த மொரோ-கோல்ட்மன் கன்னை, சோசலிசப் புரட்சிக்கான எந்த சாத்தியமும் அங்கு சற்றும் இல்லை என்று வலியுறுத்தியது. சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பல்வேறு முதலாளித்துவ இயக்கங்களுடன் ஜனநாயகரீதியாக தொடர்புபட்ட, முதலாளித்துவ ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான ஒரு இயக்கமாக தன்னை மாற்றிக் கொள்வதைத் தவிர்த்த வேறெந்த சாத்தியமான அரசியல் தெரிவும் நான்காம் அகிலத்திற்கு இருக்கவில்லை என்று அது கூறியது.
நான்காம் அகிலம் முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஒரு தொங்குசதையாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு, மொரோ, கோல்ட்மன், மற்றும் வான் ஹெஜெனோர்ட் சோவியத் ஒன்றியத்தை SWP பாதுகாத்ததையும் மறுதலித்தனர். 1943 மார்ச் வாக்கில் வரை மொரோ எழுதியிருந்தார்: “உலகெங்கிலும் மிகப்பெரும் எண்ணிக்கையிலான பரந்த மக்கள் செம்படையின் வெற்றிகளைக் கண்டு குதூகலிக்கின்றனர். ஒரு முழுமையடைந்த தத்துவ அடிப்படையில் இல்லையெனினும் அடிப்படையான வர்க்க விசுவாசத்துடன், அவர்கள் சோவியத்தின் வெற்றிகளை தம்முடைய வெற்றிகளாகப் புரிந்துகொள்கின்றனர். தொழிலாளர் அரசுக்கும் அதன் முதலாளித்துவ “கூட்டாளி”களுக்கும் இடையிலான வித்தியாசத்தை அவர்கள் நிச்சயமாக உணர்ந்தேயிருக்கின்றனர்.” [22] ஆனால், ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து முறித்துக் கொண்டு வலது நோக்கி ஓடுபவர்களது குணாதிசயமாக இருக்கக் கூடிய கண்ணிமைக்கும் வேகத்தில் மொரோ முற்றுமுதலாய் எதிர்கண்ணோட்டத்துக்கு தாவினார். நாஜிக்களை சோவியத் படை வெற்றி கண்டமையானது, ஐரோப்பாவின் பரந்த மக்களது அரசியல் தீவிரப்படலுக்கு பங்களித்திருந்தது என்ற SWP இன் வலியுறுத்தலை 1946 இல் அவர் கண்டனம் செய்தார், அவர் வாதிட்டார்: “சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாப்பதற்கு நாம் அளித்த அத்தனை காரணங்களும் காணாமல் போயிருக்கின்றன.”[23]
மொரோ-கோல்ட்மன் போக்கு சோவியத் ஒன்றியத்தை பாதுகாப்பதன் மீதான இவர்களது ஆரம்ப எதிர்ப்பு, “கம்யூனிச சர்வாதிபத்திய”த்திற்கு (“communist totalitarianism.”) எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போராட்டத்திற்கான முழுமுதல் ஆதரவாக துரிதமாக பரிணாம வளர்ச்சியடைந்து கொண்டிருந்த சாக்ட்மன்வாதிகளுடன் —சோவியத் ஒன்றியத்தை பாதுகாப்பதன் மீதான இவர்களது ஆரம்ப எதிர்ப்பு, “கம்யூனிச சர்வாதிபத்திய”த்திற்கு (“communist totalitarianism.”) எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போராட்டத்திற்கான முழுமுதல் ஆதரவாக துரிதமாக பரிணாம வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது— அரசியல் மறுஇணைவுக்கு அழைப்பு விடுத்தது. மொரோ மற்றும் கோல்ட்மனின் விரக்தியான முன்னோக்கினை நான்காம் அகிலமும் SWPயும் சக்தியுடனும் சரியாகவும் நிராகரித்தன.
ஐரோப்பாவிலான நிகழ்வுகளில் “சரியான பாதை” குறித்த வாதங்களின் மதிப்பீடு என்பது வெறுமனே மேலெழுந்தவாரியான புத்திஜீவிதப் பிரசங்கத்தின் ஒரு விடயமாக இருக்கவில்லை. போருக்குப் பிந்திய அரசியல் நெருக்கடியின் இறுதிவிளைவு கேள்விக்குறியாக இருந்த, மிகவும் திடமற்றதும் ஸ்திரமற்றதுமான ஒரு சூழ்நிலையில், அச்சூழ்நிலையில் இருந்த புரட்சிகர ஆற்றலுக்கு முழு வெளிப்பாடு கொடுப்பதற்கு ட்ரொட்ஸ்கிஸ்டுகள் முயற்சிசெய்து கொண்டிருந்தனர். முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்கு புறநிலையாக அப்போதிருந்த ஆற்றலின் அடிப்படையில், அவர்கள் தமது வேலையை அமைத்துக் கொண்டிருந்தனரே அன்றி, முதலாளித்துவ மறுஸ்திரமாகல் தவிர்க்கமுடியாதது என்ற பொதுவாய் தெரிந்த அனுமானங்களின் அடிப்படையில் அல்ல. ஹிட்லர் அதிகாரத்துக்கு வருவதற்கு முந்தைய மரணகரமான மணித்தியாலங்களில், ட்ரொட்ஸ்கியிடம், சூழ்நிலை “நம்பிக்கையற்றதாக” ஆகியிருந்ததா என்று கேட்கப்பட்டது. அவர் பதிலளித்த வார்த்தை, இது புரட்சியாளர்களின் வார்த்தைவழக்கில் இல்லாதது. “போராட்டம் தீர்மானிக்கும்” என்று அறிவித்தார் ட்ரொட்ஸ்கி. போருக்குப் பிந்தைய குழப்பம் மற்றும் அமளிக்கு மத்தியில், புரட்சிகர இலட்சியம் நம்பிக்கையற்றது என்றும் முதலாளித்துவத்தின் ஸ்திரப்படல் தவிர்க்கமுடியாதது என்றும் கூறியவர்களுக்கும் அதே பதிலே கொடுக்கப்பட வேண்டியிருந்தது. மொரோ மற்றும் கோல்ட்மன் அறிவுறுத்தியவாறு, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் முன்கூட்டியே தோல்வியை ஒப்புக் கொண்டிருப்பார்களேயாயின், முதலாளித்துவ மறுஸ்திரப்படலுக்கு சாதகமான காரணிகளில் ஒன்றாக அவர்கள் ஆகியிருப்பார்கள்.
எவ்வாறெனினும், இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டங்களின் போதும் அதற்கு உடனடிப் பிந்தைய காலத்திலும் ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் நிலவிய புறநிலமை குறித்த மொரோவின் பகுப்பாய்வு உலக முதலாளித்துவம் எதிர்கொண்டிருந்த நெருக்கடியின் ஆழத்தையும் வீச்சையும் பரந்த அளவில் குறைமதிப்பீடு செய்திருந்தது. 1947 இல் மார்ஷல் திட்டத்தின் அறிமுகத்தைத் தொடர்ந்து ஐரோப்பிய முதலாளித்துவம் இறுதியாக ஸ்திரப்பட்டு விட்டது என்ற சந்தேகமற்ற உண்மையானது, உலகப் போர் முடிவை நெருங்கிய சமயத்தில் நான்காம் அகிலத்தால் முன்வைக்கப்பட்ட முன்னோக்கினை செல்தகைமை இழக்கச் செய்துவிடவில்லை. மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் பெரும்பகுதியைச் சேர்ந்த முதலாளித்துவ வர்க்கமானது, அதன் பாசிச அட்டூழியங்களால் மதிப்பிழந்து போய், அரசியல் மண்டியிடும் ஒரு நிலையில் இருந்த சமயத்தில், தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இருந்த சாத்தியவளம் முதலாம் உலகப் போரின் முடிவின் சமயத்தில் இருந்ததை அற்பமாக்கும் அளவுக்கு மிகப்பெரிதாய் இருந்தது. பிரான்சிலும் இத்தாலியிலும் பரந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் ஆயுதபாணியாக முதலாளித்துவத்துடன் இறுதியாகக் கணக்குத் தீர்ப்பதற்கு கவனக்கூர்மையுடன் எதிர்பார்த்திருந்தனர். அங்கே பிரச்சினை “புறநிலையாக” ஒரு புரட்சிகர சூழல் இல்லாதது அல்ல. பரந்த மக்களின் மனோநிலை மிகவும் தீவிரப்பட்டதாய் இருந்தது என்பது மதிநுட்பம்மிக்க முதலாளித்துவ மூலோபாயவாதிகள் அனைவருக்குமே நன்கு வெளிப்பட்டதாய் இருந்தது. அமெரிக்க வெளியுறவுச் செயலராக ஆகவிருந்த டீன் ஏச்சிசன், இந்த நெருக்கடியை, “பழைய வேதாகமத்தில் (Genesis) முதல் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டிருக்கிற ஒன்றை விடவும் சில விதங்களில் பயங்கரமானது” என்று விவரித்தார். [24] ஏச்சிசன் ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டின் சிறப்பு உதவியாளராக இருந்த ஹாரி ஹாப்கின்ஸுக்கு 1944 டிசம்பரில் அனுப்பிய ஒரு குறிப்பில், ஐரோப்பாவெங்கிலும் வெகுசீக்கிரத்தில் ஒரு இரத்தஆறு ஓடும் நிலை குறித்து எச்சரித்தார். “விடுதலைபெற்ற நாடுகளின் மக்கள் உலகின் மிகவும் எரியூட்டப்படக்கடிய பொருட்களாக இருக்கின்றனர் ... வன்மமுறைமிக்கவர்களாகவும் அமைதியற்றவர்களாகவும் இருக்கின்றனர்.” ஐரோப்பாவை ஸ்திரப்படுத்துவதற்கான வழிமுறைகள் கண்டறியப்படவில்லை என்றால், தீவிரப்பட்டுச் செல்லும் “கிளர்ச்சியும் அமைதியின்மையும்” “அரசாங்கங்கள் தூக்கியெறியப்படுவதற்கு” இட்டுச் செல்லும் என்று கூறியிருந்தார். [25]
மார்ஷல் திட்டம் மற்றும் பனிப் போரின் மூலங்கள் குறித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில், வரலாற்றாசிரியர் பென் ஸ்ரைய்ல் எழுதுகிறார்:
மக்கள் அரசியல் மாற்றத்தையும் விரும்பினர். ஐரோப்பா முழுமையிலும் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் முதலாளித்துவத்திற்கு ஒரு தீவிரமயப்பட்ட மாற்றீட்டிற்கு வாக்குறுதியளித்துக் கொண்டிருந்தனர். வரலாறோ அவர்களுக்கு சார்பானதாக தெரிந்தது. சோவியத் ஒன்றியம் போரில் வெற்றி கண்டிருந்தது, அதுவே பெருமளவுக்கு கண்டத்தின் மிகவும் சக்திவாய்ந்த நாடாக இப்போது இருந்தது. 1945-46 இல் கம்யூனிஸ்டுகள் இத்தாலியில் 19 சதவீத வாக்குகளும், பின்லாந்தில் (இங்கு கம்யூனிஸ்டான மவுனோ பெக்கலா பிரதமரானார்) 24 சதவீத வாக்குகளும், பிரான்சில் 26 சதவீத வாக்குகளும் பெற்றனர். ஜேர்மனியில் (மேற்கு) தேசிய அளவிலான தேர்தல் எதுவும் 1949க்கு முன்பு நடக்கவில்லை எனினும், சில பிராந்திய அளவிலான தேர்தல்களில் கம்யூனிஸ்டுகள் 14 சதவீதம் வரை பெற்றனர். சோசலிஸ்டுகளுடன் சேர்த்துப் பார்த்தால், ஒட்டுமொத்தமான இடது-சாரி வாக்குகள் இத்தாலியில் 39 சதவீதமாகவும் பிரான்சில் 47 சதவீதமாகவும் இருந்தது. இத்தாலியில், புரட்சிகர இடதுதான் நாட்டின் கட்டுப்பாட்டைக் கையிலெடுக்கும் படியாக உள்ளது என்றே பலரும் கருதினர். ஜேர்மனியில் சோவியத் கட்டுப்பாட்டு பிராந்தியத்தில் இடது கட்சிகளின் இணைப்பானது பரந்த ஐரோப்பாவுக்கான ஒரு மாதிரிவடிவமாக பார்க்கப்பட்டது. [26]
தொழிலாள வர்க்கத்தை மட்டுப்படுத்துவதிலும், சக்திவாய்ந்த கிளர்ச்சிகர உந்துதல்களை ஒடுக்குவதிலும், அத்துடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அச்சமுற்றிருந்த ஐரோப்பிய உயரடுக்கினருக்கும் முதலாளித்துவ ஆட்சியைக் காப்பாற்றுவதற்கு அவர்களுக்கு அவசியமாயிருந்த அவகாசத்தை வழங்குவதிலும் தீர்மானகரமான காரணியாக இருந்தது, ஸ்ராலினிசக் கட்சிகளது தலைமையாகும். இத்தாலியில், ஸ்ராலினிசத் தலைவரான பல்மீரோ தொக்லியாட்டி இன் பாத்திரம் மிக முக்கியமானதாக இருந்தது. அக்காலகட்டம் குறித்த ஒரு சமீபத்திய ஆய்வு இவ்வாறு தெரிவிக்கிறது:
PCI (Partito Comunista Italiano) ஓரளவு செல்வாக்கு செலுத்தி தன்னெழுச்சியான நடவடிக்கைகளைத் தவிர்க்கும் என்ற ஸ்ராலினிசத் தலைமையின் நம்பிக்கை வீண்போகவில்லை. இந்த கொந்தளிப்பான அத்துடன் இன்னும் வெடிப்பானதும் கூடவான சூழ்நிலையைக் கொண்டு பார்த்தால், எதிர்ப்பு போராட்ட காலகட்டத்தின் போது கட்சிக்குள் தொடர்ச்சியாக எழுந்து வந்த புரட்சிகரக் கிளர்ச்சிகள் பெருமளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டதில் தொக்லியாட்டிக்கே பெயர் உரியதாகும். வடக்கு இத்தாலியின் விடுதலைக்குப் பின்னர் உடனடியாக ஒரு உள்நாட்டுப் போர் எழுந்துவிடாமல் தடுத்ததில் அவரது பங்கை குறைத்து மதிப்பிடப்பட்டு விடக்கூடாது. எதிர்ப்பு போராட்டக் காலகட்டத்தின் போது கட்சிக்குள்ளாக தொடர்ந்து மேலெழுந்து வந்த புரட்சிகர உந்துதல்கள் மட்டுப்படுத்தப்பட்டதற்கு பெருமளவுக்கு தொக்லியாட்டியின் சொந்த முயற்சிகளே காரணமாக இருந்தன. [27]
முதலாளித்துவ அரசை புரட்சிகர சோசலிசரீதியாக தூக்கிவீசுவதற்கு PCI இன் சாமானிய காரியாளர்கள் வைத்த கோரிக்கைகளுக்கு தொக்லியாட்டி காட்டிய எதிர்ப்பு குறித்த ஒரு தெளிவான விவரிப்பை வரலாற்றாசிரியர் போல் கின்ஸ்போர்க் வழங்குகிறார்:
சலேர்னோ (Salerno) நகருக்கு வந்ததும் தொக்லியாட்டி, குறிப்பிட்ட ஒரு திகைப்புக்கும் சில எதிர்ப்புக்கும் மத்தியில், அண்மைய வருங்காலத்தில் கட்சி பின்பற்ற வேண்டிய பாதையாக தான் கருதுகின்ற மூலோபாயத்தை, தனது தோழர்களிடம் சுருங்கக் கூறினார். கம்யூனிஸ்டுகள், அவர்களால் அடிக்கடி வெளிப்படுத்தப்பட்டு வந்திருக்கின்ற முடியாட்சிக்கான குரோதத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். பதிலாக, பாசிச-விரோத சக்திகள் அனைவரையும், இப்போது இத்தாலியின் தெற்குப் பகுதியான சலேர்னோவை கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் முடியாட்சி அரசாங்கத்தில் சேருவதற்கு ஊக்குவிக்க வேண்டும் என்றார். அரசாங்கத்தில் இணைவதே, நாஜிக்கள் மற்றும் பாசிஸ்டுகளுக்கு முகம் கொடுக்கின்ற நிலையில் தேசிய ஐக்கியம் பேணுவது என்ற அந்த காலகட்டத்தின் விஞ்சிநிற்கும் இலக்கினை எட்டுவதை நோக்கிய முதல் படியாகும் என்று தொக்லியாட்டி வாதிட்டார். ஒரு சோசலிசப் புரட்சியல்ல, இத்தாலியின் விடுதலையே கம்யூனிஸ்டுகளின் பிரதான இலக்காக இருக்க வேண்டும் என்றார். 1944 ஜூனில் கட்சிக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருந்த வழிகாட்டல்களில் தொக்லியாட்டி இதனை வெளிப்படையாக்கியிருந்தார்: ’எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நாம் விரும்புகின்ற கிளர்ச்சி ஒரு சோசலிச அல்லது கம்யூனிச அர்த்தத்தில் சமூக மற்றும் அரசியல் மாற்றங்களைத் திணிப்பதை நோக்கம் கொண்டதல்ல. மாறாக தேசிய விடுதலையும் பாசிசத்தை அழிப்பதுமே அதன் நோக்கமாகும். மற்ற அத்தனை பிரச்சினைகளும், நாளை, இத்தாலி விடுதலை அடைந்தபின்னர், ஒரு சுதந்திரமான மக்கள் வாக்கெடுப்பு மூலமாகவும் ஒரு அரசியல்நிர்ணய சபை தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலமும் மக்களால் தீர்க்கப்படும்.’
இந்த கடைசி வாசகமானது இத்தாலியில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை மறுஸ்தாபகம் செய்வதற்கு தொக்லியாட்டி கொண்டிருந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது. டிட்டோவை போலல்லாது, குறுகிய காலத்தில் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை அவரின் கட்சியின் நோக்கமாக ஆக்குகின்ற எந்த எண்ணமும் அவருக்கில்லை. அதேபோல பாசிசத்திற்கு முந்தைய வகைகளின் ஒரு நாடாளுமன்ற ஆட்சியை வெறுமனே நிறுவுவதும் அவருடைய இலட்சியமாக இருக்கவில்லை. [28]
பிரான்சில், கம்யூனிஸ்ட் கட்சியும் ஸ்ராலினிச தலைமை கொண்ட CGT இன் கட்டுப்பாட்டில் இருந்த தொழிற்சங்கங்களும் இதற்குச் சளைக்காத எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை ஆற்றின. கம்யூனிஸ்ட் கட்சி விரும்பினால், முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கிவீச அச்சுறுத்துகின்ற அளவுக்கு அதனிடம் போதுமான சக்தி இருந்தது என்பதை உணர்ந்து, அமெரிக்க தூதரக அதிகாரிகள் அதன் நடவடிக்கைகளை நெருக்கமாகக் கண்காணித்தனர். ஸ்ராலினிஸ்டுகள் அமெரிக்காவின் கரங்களில் விழுந்தனர்:
சர்வதேச பதட்டத்தணிப்பு மற்றும் சொந்தநாட்டில் அரசியல் ஒத்துழைப்பு என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மூலோபாயத்திற்கு இணங்க, CGT இன் தலைவர்களும் தனிப்பட்ட கம்யூனிஸ்டுகளும் 1945 முதல் 1947 வரை அமெரிக்க அதிகாரிகளுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டனர். கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் CGTயும் அமெரிக்கர்களுக்கு தகவல்களை அபரிமிதமாக வழங்கினர், இவற்றில் பெரும்பாலானவை அவர்களுக்கு நம்பிக்கை உறுதியூட்டுபவையாக இருந்தன... CGT சோசலிசத்துக்கான உடனடியான மாற்றத்தை எதிர்நோக்கியிருக்கவில்லை, அது தேசிய எதிர்ப்புக் கவுன்சிலின் (National Council of the Resistance) வரம்புபட்ட நோக்கங்களை ஆதரித்தது. CGT சிறு தொழில் உடமையாளர்களின் பாதுகாவலராக இருந்தது, உற்பத்தியை அதிகரிப்பதற்கான போராட்டம் தான் கம்யூனிஸ்ட் கொள்கையின் அடிப்படையாகத் திகழ்ந்தது, “நமது ஆட்களின்” கட்டுப்பாட்டில் இருக்கும் தொழிற்சாலைகள் அல்லது துறைமுகங்களில் எந்த வேலைநிறுத்தங்களும் நடைபெறாது. [29]
ஐரோப்பாவிலான வெடிப்பான சூழ்நிலையின் —கிட்டத்தட்ட காலனி நாடுகள் அத்தனையிலும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு போராட்டத்தின் விரிவடையும் அலையால் இது இன்னும் தீவிரப்பட்டது— உள்ளடக்கத்தில், நான்காம் அகிலம் தனது வேலைத்திட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் ஜனநாயகக் கோரிக்கைகளுடன் மட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற மொரோவின் வலியுறுத்தலானது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தை ஸ்ராலினிஸ்டுகள் காட்டிக்கொடுத்ததற்கு ட்ரொட்ஸ்கிச ஆதரவை வழங்குவதற்கும் முதலாளித்துவத்தின் மறுஸ்திரப்படலுக்கு வழிவகை செய்வதற்கும் அதிகமாக வேறொன்றும் செய்திருக்க முடியாது.
விஞ்ஞானம் மற்றும் சமூகம் (Science and Society) என்ற சஞ்சிகையில் 2014 இல் வெளியான “ஒரு புரட்சிகர காலகட்டத்திலான மூலோபாயமும் தந்திரோபாயமும்: அமெரிக்க ட்ரொட்ஸ்கிசமும் ஐரோப்பியப் புரட்சியும், 1943-1946” என்ற தலைப்பிலான கட்டுரை ஒன்றில், வரலாற்றாசிரியர்கள் டானியல் கெய்டோவும் வெல்லியா லுப்பரேல்லோவும் மொரோ-கோல்ட்மன் போக்கிற்கான ஒரு முழுக்குரலிலான பாதுகாப்பை எழுப்புகின்றனர். இந்தக் கட்டுரையின் தலைப்பே பிரச்சினைக்குரியது. ஏனென்றால் கெய்டோ மற்றும் லுப்பரேல்லா வழிமொழிந்த மொரோ வாதத்தின் அடிப்படையான வரையறையே, அங்கு எந்த புரட்சிகர சூழ்நிலையும் நிலவவில்லை என்பதுதான். “இன்றைய நிலையில் ‘புறநிலையாக புரட்சிகர’ சூழல் என்ற கருத்தாக்கத்தின் அத்தனை சுவடுகளையும்” SWPயும் நான்காம் அகிலமும் கைகழுவ வேண்டும் என்ற மொரோவின் கோரிக்கையை அவர்கள் ஏற்புடன் மேற்கோளிடுகின்றனர். [30] நான்காம் அகிலத்திற்குள் நடந்த விவாதம் குறித்து ஒருதலைப்பட்சமான விதத்தில் அவர்கள் வழங்குகின்ற விவரிப்பு மொரோவின் மார்க்சிச-விரோத மற்றும் விரக்தியடைந்த முன்னோக்கை வழிமொழிகிறது:
உண்மையில் மொரோ, புரட்சி “சமூக நிகழ்ச்சிபோக்கின் ஒரு புறநிலை செயல்பாடாக இருக்கவில்லை” என்றும் ஐரோப்பாவிலான சூழ்நிலையானது எந்தவிதத்திலும் முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்து நிலையுடன் ஒப்பிடத்தக்கதாக இல்லை என்றுமே வாதிட்டார். “1917-1923 ஐ நாம் மறுமுறை செய்துகொண்டிருக்கவில்லை” என்று மொரோ எச்சரித்தார். 1945 சூழ்நிலை “இன்னும் மிகப் பின்தங்கியதாக” இருந்தது, ஏனென்றால், கிளர்ச்சிசெய்யும் பரந்த மக்களுக்கு போல்ஷிவிக் புரட்சி மற்றும் மூன்றாம் அகிலம் போன்ற ஒரு அணிதிரள்வுப் புள்ளி இல்லாத நிலையில், புரட்சிகரக் கட்சிகளின் அபிவிருத்தி மிகவும் மெதுவானதாய் இருந்தது, ஆகவே ஒட்டுமொத்த நிகழ்ச்சிபோக்கும் இன்னும் மிகவும் நீடித்துசெல்வதாக இருக்கும். [31]
ஆனால் போல்ஷிவிக் புரட்சியும் மூன்றாம் அகிலமும் எங்கேயிருந்து எழுந்தன? மென்ஷிவிக்குகளுக்கு எதிராகவும் போல்ஷிவிக் கட்சிக்குள்ளாக சூழல் புரட்சிகரமானதாக இல்லை என்றும் ஒரு முதலாளித்துவ ஜனநாயக வேலைத்திட்டத்தின் வரம்புகளைத் தாண்டிப் போகும் சாத்தியம் எதுவும் அங்கே இல்லை என்றும் கூறிக் கொண்டிருந்த கூறுகளுக்கு எதிராகவும் லெனினும் ட்ரொட்ஸ்கியும் 1917 முழுக்க ஒரு சளைக்காத போராட்டத்தை நடத்தியிருந்தனர். புற சூழ்நிலையில் அமைந்திருந்த புரட்சிகர ஆற்றலுக்கு முழுமையான வெளிப்பாட்டைக் கொண்டுவருவதற்காக போல்ஷ்விக்குகள் போராடினர். 'சோசலிசப் புரட்சிக்கான போராட்டம் சாத்தியமில்லாதது ஏனென்றால் சூழ்நிலை புறநிலைரீதியாக புரட்சிகரமானதாக இல்லை. ஆனால் சூழ்நிலை ஏன் புரட்சிகரமாக இல்லை என்றால் அங்கே புரட்சிகர நடவடிக்கைக்கான “அணிதிரள்வுப் புள்ளி” ஏதுமில்லை’ என்ற மொரோவின் தோல்விவாதத்தின் கீழமைந்திருக்கின்ற ஸ்தம்பிதமடைய செய்யும் மற்றும் சுய-முரண்பாடான குதர்க்கம் குறித்து கெய்டோவும் லுப்பரேல்லோவும் கண்டுகொள்ளவில்லை.
ஒரு தத்துவார்த்த நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால், கெய்டோ மற்றும் லுப்பரேல்லோ ஆல் முன்வைக்கப்படும் வாதங்களில் புதிதான எதுவும் அரிதாகவே இருக்கிறது. நான்கு தசாப்தங்கள் முன்பாக வெளியான இரண்டு கட்டுரைகளில் முன்வைக்கப்பட்ட ட்ரொட்ஸ்கிசம் மீதான அடிப்படையான சமூக-ஜனநாயக விமர்சனத்தையே அவை பெருமளவுக்கு பின்தொடர்கின்றன: ”ட்ரொட்ஸ்கியும் விதிவசவாத மார்க்சிசமும்” என்ற தலைப்பில் ஜெஃப் ஹாட்சன் 1975 இல் எழுதிய கட்டுரை, “ட்ரொட்ஸ்கிசம் எந்த இடத்தில் வழிதவறியது: இரண்டாம் உலகப் போரும் ஐரோப்பாவில் புரட்சிக்கான சாத்தியக்கூறும்” என்ற தலைப்பில் பீட்டர் ஜென்கின்ஸ் 1977 இல் எழுதிய இன்னொரு கட்டுரை. ஹாட்சன், —மிகவும் எட்வார்ட் பேர்ன்ஸ்டைன் போன்று ஒலிக்கின்றதான ஒரு தொனியில்— இந்த சகாப்தமானது இடைவிடாத பொருளாதார கொந்தளிப்புகளது, முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையின் உடைவு, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போர்கள் மற்றும் சோசலிசப் புரட்சிகளது சகாப்தம் என்ற ட்ரொட்ஸ்கியின் கருத்தாக்கம் அடிப்படையாகத் தவறு என்று கூறினார். நெருக்கடி மீதான ஒரு மிகைப்படுத்தப்பட்ட மற்றும் யதார்த்தமற்ற வலியுறுத்தலை நான்காம் அகிலத்துக்கு ட்ரொட்ஸ்கி ஆஸ்தியளித்து விட்டுச் சென்றிருந்தார் என்றார். இந்த தவறான முன்னோக்கை மொரோ சவால் செய்ததாக ஹாட்சன் எழுதினார்: “அதன் விளைவாய், மொரோவும் மற்றவர்களும் SWP இல் இருந்து வெளியே கலைக்கப்பட்டனர். [32]
ஹாட்சனை தொடர்ந்து, ஜென்கின்ஸ், நான்காம் அகிலத்தின் “புரட்சிகர பேரழிவுவாத”த்தை சவால் செய்வதற்காகவும், “ஐரோப்பாவில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் செல்தகைமையையும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் சீர்திருத்தவாத சிந்தனைகளின் வலிமையையும் குறைமதிப்பீடு செய்வதற்கு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் தொடர்ச்சியாக இருந்து வருகின்ற ஒரு போக்கின்” மீது ஆரம்பத்திலேயே ஒரு விமர்சனத்தை அபிவிருத்தி செய்வதற்காகவும் மொரோவைப் பாராட்டினார். [33] ட்ரொட்ஸ்கிசம் தன்னை ஒரு சமூக-ஜனநாயக சீர்திருத்தவாத இயக்கமாக உருமாற்றிக் கொள்ளத் தவறிய காரணத்தால் அது “தொலைந்து விட்டது” என்று ஜென்கின்ஸ் முடிவுகூறினார்.
மொரோ மற்றும் கோல்ட்மனின் தோல்வியானது “SWP தலைமையினாலும் நான்காம் அகிலத்தின் ஐரோப்பிய செயலகத்தாலும் பின்பற்றப்பட்டதும் அதனால், அந்நூற்றாண்டின் பெரும்பகுதிக்கு ட்ரொட்ஸ்கிசத்தை அரசியல் இயங்காநிலைக்கு இட்டுச்செல்ல உதவிய கொள்கைகளது, பின்விளைவுகள் குறித்த எந்த தீவிரமான பகுப்பாய்வையும் முன்கூட்டியே இல்லாது செய்துவிட்டது” என்று வாதிடுவதன் மூலமாக, கெய்டோவும் லுப்பரேல்லோவும் கூட அடிப்படையில் இதே முடிவுக்கே வருகின்றனர். [34] “அரசியல் கையாலாகாத்தனம்” என்று கெய்டோவும் லுப்பரேல்லோவும் துல்லியமாய் எதனைக் குறிப்பிடுகின்றனர்? அவர்களது வாதத்தின் சுற்றுஎல்லைக்குள்ளாக பார்த்தால், ட்ரொட்ஸ்கிச இயக்கமானது ஒரு சமூக-ஜனநாயக சீர்திருத்தவாத அமைப்பின் அரசியல் ஆளுமையையும் வேலைத்திட்டத்தையும் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தமாக இருக்க முடியும். முதலாளித்துவ நாடாளுமன்றவாதத்தின் சுற்றுஎல்லைக்குள்ளாக செல்வாக்கை ஈட்டுவதன் மூலமாக அது “அரசியல் கையாலாகாத்தன”த்தை தவிர்த்திருக்க முடியும் என்கின்றனர். ட்ரொட்ஸ்கியின் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியானது சமூக-ஜனநாயக சீர்திருத்தவாதத்தின் தேசியக் கட்சிகளாக மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர்.
1940 இல், சிறுபான்மையின் வாதங்களைப் பகுப்பாய்வு செய்கையில் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டார்: “சாக்ட்மன் ஒரு சிறுவிடயத்தை விட்டு விட்டார்: அவரது வர்க்க நிலைப்பாட்டை”. [35] அதே “சிறுவிடயம்” தான் கெய்டோ-லுப்பரேல்லோ கட்டுரையிலும் காணாமல் இருக்கிறது. மொரோ-கோல்ட்மன் போக்கின் உண்மையான வர்க்கத் தன்மை —அதாவது புறநிலையான சமூக-அரசியல் பயணப்பாதை— குறித்த எந்த பரிசீலனையும் முற்றிலுமாய் இல்லாதிருக்கிறது. மொரோவும் கோல்ட்மனும் எந்த வர்க்க நலன்களுக்காகப் பேசினார்கள் என்ற அடிப்படையான பிரச்சினையை அந்தக் கட்டுரை ஒருபோதும் பேசவேயில்லை. இது, அதுவும் மார்க்சிச இயக்கத்தின் வரலாறு குறித்த கவனிப்புக்குரிய களஞ்சிய வேலைகளில் பல வருடங்களாக ஈடுபட்டு வரும் பேராசிரியர் கெய்டோ விடயத்தில், ஒரு வருந்தத்தக்க விடுபடலாகும். பொதுவாக உள்ளநேர்மையுடன் எழுதுகின்ற இந்த அறிஞர் தனது கட்டுரையில் ஜோசப் வேபர் மற்றும் IKD இன் “மூன்றுஆய்வுத்தத்துவங்களுக்கு” வெறும் சம்பிரதாய குறிப்பை மட்டுமே சேர்த்திருக்கிறாரே அன்றி, ஃபிலிக்ஸ் மொரோ மீது அது செலுத்திய மிகமுக்கியமான செல்வாக்கிற்கு கவனத்தை ஈர்க்கவில்லை. மொரோ, கோல்ட்மன் மற்றும் வான் ஹெஜெனோர்ட் ஆகியோரது அரசியல் பரிணாம வளர்ச்சிக்கு கெய்டோ அலட்சியமான மனோபாவம் காட்டுவது இன்னும் அதை அதிகமாய் பாதுகாத்துப்பேச வழியற்றதாகும்.
மொரோ-கோல்ட்மன் போக்கின் அத்தனை முன்னிலைப் பிரதிநிதிகளும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை விட்டு விலகினர், சோசலிச அரசியலைக் கைவிட்டனர், அரசியல் வலதை நோக்கிக் கூர்மையாகத் திரும்பினர். இந்தப் பரிணாம வளர்ச்சியானது தர்க்கரீதியாக கன்னைப் போராட்டத்தில் அவர்கள் முன்னெடுத்திருந்த நிலைப்பாடுகளில் இருந்து அபிவிருத்தி கண்டதாகும் என்பது தெளிவு. அவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட ஜேம்ஸ் பேர்ன்ஹாமின் பயணப்பாதையையே பின்பற்றினர். வான் ஹேய்ஜெனூர்ட் நான்காம் அகிலத்தை விட்டு விலகினார், சோவியத் ஒன்றியத்தை ஒரு “அடிமை அரசு” (slave state) என்று கண்டனம் செய்தார், சோசலிச அரசியலில் தனது தனிப்பட்ட ஈடுபாட்டை முடித்துக் கொண்டார், ஒரு குறிப்பிடத்தக்க கணித வல்லுநரானார். கோல்ட்மன் SWP ஐ விட்டு விலகினார், சிறிதுகாலம் சாக்ட்மன்வாத இயக்கத்தில் இணைந்தார், பின் வெகு விரைவில், மார்க்சிசத்தை மறுதலித்தார். மொரோ, 1946 இல் SWP ஐ விட்டு வெளியேற்றப்பட்டு விட்ட பின்னர், சோசலிச அரசியலைக் கைவிட்டார், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பனிப் போரை ஆதரித்தார், அமானுஷ்ய இலக்கியங்களின் வசதிபடைத்த வெளியீட்டாளராக ஆனார்.
1976 நவம்பரில், லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை தொடர்பாக அனைத்துலகக் குழுவின் சார்பில் ஆய்வு செய்து கொண்டிருந்த சமயத்தில், நான் ஃபிலிக்ஸ் மொரோவை சந்தித்தேன். அப்போது அவருக்கு 71 வயது, நியூயோர்க்கின் ஒரு புறநகர்ப் பகுதியில் வாழ்ந்தார். 1943-46 கன்னைப் போராட்டத்தை நினைவுகூர்ந்த மொரோ, கனன் உடன் அரசியல் பேதங்கள் எத்தனை இருந்தபோதினும், அவர் ஒரு முக்கியமான விடயத்தில் மிகச் சரியாய் இருந்திருந்ததாக ஒப்புக்கொண்டார். மொரோ சோசலிசப் புரட்சியின் சாத்தியத்தில் அதற்குமேல் நம்பிக்கை கொண்டவராயில்லை. வெளியேற்றப்படுவதற்கு முன்பாக SWP அங்கத்தவர்களுக்கு அவர் வழங்கிய உரையில், கட்சியில் இருந்து தன்னை ஒருபோதும் பிரித்துவிட முடியாது என்று அறிவித்திருந்ததை மொரோ நினைவுகூர்ந்தார். ஆயினும், கூட்ட அரங்கை விட்டு வெளியே வந்ததும், தனது வாழ்வில் ஒரு கட்டம் முடிவுக்கு வந்திருந்தது என்பதையும் இனி ஒருபோதும் சோசலிச அரசியலில் செயலூக்கத்துடன் தான் இயங்கப் போவது கிடையாது என்பதையும் மொரோ உணர்ந்திருந்தார். கிட்டத்தட்ட ஒருபோதும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு உறுப்பினராக இருந்திராததைப் போன்று அவர் உணர்ந்தார். கடந்த காலம் குறித்த ஏதேனும் வருத்தம் இருக்கிறதா என்று மொரோவிடம் நான் கேட்டேன். ஒன்றே ஒன்று மட்டும் இருக்கிறது என்று அவர் பதிலளித்தார்: “ஸ்பெயினில் புரட்சியும் எதிர்ப்-புரட்சியும் என்ற எனது புத்தகத்திற்கான ஆதாய உரிமையை (royalties) பெறுவதற்கு நான் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும்.”
மக்ஸ் சாக்ட்மனைப் பொறுத்தவரையில், 1950களுக்குள்ளாக, அவர், படுதீங்கான கம்யூனிச-விரோத AFL-CIO தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒரு ஆலோசகராக ஆகியிருந்தார். 1960 களுக்குள்ளாக, சாக்ட்மன், கியூபா மீதான சிஐஏ ஒழுங்கமைத்த பன்றிகள்-வளைகுடா படையெடுப்பையும், அதன்பின், வியட்நாமிலான அமெரிக்க தலையீட்டையும் ஆதரித்தார்.
சாக்ட்மன், மொரோ, கோல்ட்மன் மற்றும் வான் ஹெஜெனோர்ட் ஆகியோரது அரசியல் பரிணாம வளர்ச்சியானது, பனிப்போர் காலநிலை, போருக்குப் பிந்தைய ஐரோப்பாவின் பொருளாதார மறுஸ்திரப்படல், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கம் அதிகாரத்துவத்தால் கழுத்துநெரிக்கப்பட்டமை ஆகியவை இடது குட்டி-முதலாளித்துவ புத்திஜீவித்தட்டின் அரசியல் கண்ணோட்டத்தைப் பாதித்த ஒரு பரந்த சமூக நிகழ்ச்சிபோக்கின் பகுதியாக இருந்தது. மார்க்சிசம் இருத்தலியல்வாதத்துக்கு வழிவிட்டது. சமூக நிகழ்ச்சிபோக்குகள் மீது முன்பிருந்த கவனக்குவிப்பு, தனிப்பட்ட பிரச்சினைகள் மீது நிலைகொள்ளலைக் கொண்டு பிரதியிடப்பட்டது. அரசியல் நிகழ்வுகளது விஞ்ஞானபூர்வ மதிப்பீடு உளவியலின் கோணத்தில் இருந்தான அவற்றின் பொருள்விளக்கத்திற்கு சாதகமாக கைவிடப்பட்டது. பொருளாதாரத் திட்டமிடலின் சாத்தியவளத்தின் அடிப்படையிலான வருங்காலம் குறித்த கருத்தாக்கங்கள் கற்பனாவாத பகல்கனவுக்கு வழிவிட்டது. தொழிலாள வர்க்கத்தின் மீதான பொருளாதாரச் சுரண்டலில் ஆர்வம் தேய்ந்தது. சூழலியல் பிரச்சினையானது, வர்க்க ஆட்சி மற்றும் பொருளாதார முறையின் பிரச்சினைகளில் இருந்து பிரிக்கப்பட்டு —— அதுபற்றி கூடிய ஆதிக்கம் செலுத்தப்படுவது மேலோங்கியது.
IKD இன் தலைவரது பரிணாமவளர்ச்சி, புத்திஜீவித “பின்னடைவு” என்ற சமூகரீதியாக தீர்மானமாகின்ற நிகழ்ச்சிபோக்கினை எடுத்துக்காட்டுவதாக இருந்தது. IKD, நான்காம் அகிலத்துடன் தன் உறவைத் துண்டித்துக் கொண்டது, அதனைக் குறித்து ஜோசப் வேபர் மட்டற்ற அவமரியாதையுடன் எழுதினார். 1946 அக்டோபர் 11 தேதியிட்ட ஒரு கடிதத்தில் வேபர் திட்டவட்டம் செய்தார்: “நான்காம் அகிலம் இறந்து விட்டது, அத்துடன், அது ஒருபோதும் உயிரோடு இருந்திருக்கவில்லை.” ஒரு தவறான அடித்தளத்தின் மீது அது கட்டப்பட்டிருந்ததாகக் கூறிய அவர், அதன் ஆவணங்கள் ஏதோ “அரசியல் படிப்பறிவில்லாதவர்களுக்காக” எழுதப்பட்டவை போன்று இருந்தன என்றார். [36] வெகுவிரைவிலேயே வேபர் மார்க்சிச அரசியலுடன் முற்றிலுமாக முறித்துக் கொண்டார், சோவியத் ஒன்றியத்தை ஒரு அரசு முதலாளித்துவ சமூகம் (state capitalist society) என்று கண்டனம் செய்தார், இறுதியில் அரை-அராஜகவாத சூழலியல் கற்பனாவாதத்தின் தீர்க்கதரிசியாக ஆனார். அவரது முக்கியமான சீடர்களில் சோசலிச தொழிலாளர் கட்சியின் முன்னாள் உறுப்பினரான முர்ரே புக்சின் (1921-2006) ஒருவராவார், இவர் 1971 இல், Post-Scarcity Anarchism என்ற தனது புத்தகத்தை ஜோசப் வேபருக்கு அர்ப்பணம் செய்திருந்தார். மார்க்சிசத்தின் ஒரு கடுமையான எதிரியாக ஆகி விட்டிருந்த புக்சின், “இந்த புத்தகத்தில் அபிவிருத்தி செய்திருந்த கற்பனாவாத திட்டத்தின் வெளிவரைக் கோடுகளை இருபது ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்கு முன்பே சூத்திரப்படுத்தி இருந்த” தனது குருவுக்கு நன்றி கூறினார். [37] புக்சினின் எழுத்துக்கள், முதலாளித்துவ தேசியவாத குர்டிஷ் தொழிலாளர் கட்சி (PKK) இன் தலைவரான அப்துல்லா ஓச்சலான் (Abdullah Öcalan) இன் கவனத்திற்கு —அவர் 1999 இல் துருக்கிய அரசாங்கத்தால் பிடிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த சமயத்தில்— வந்தது. ஓச்சலான், புக்சினின் எழுத்துக்களில், தனது “ஜனநாயக கூட்டமைப்புவாத” ஆலோசனைகளுக்கு இணக்கமான சிந்தனைகளைக் கண்டார். புக்சின் இறந்தபோது, “20ஆம் நூற்றாண்டின் மாபெரும் சமூக விஞ்ஞானிகளில் ஒருவர்” என்று குர்டிஷ் தொழிலாளர் கட்சி அவருக்கு புகழாரம் சூட்டியது. [38]
அரசியல், வர்க்க நலன்களது தர்க்கத்தால் ஆளப்படுவதாகும். இந்த அடிப்படையான உண்மை அடிக்கடி, குறிப்பாக கல்விக்கூட அறிஞர்களால், மறக்கப்படுவதாக இருக்கிறது, அவர்கள் அரசியல் கன்னைகளை அகநிலை வகைப்பாட்டு அடிப்படையில் மதிப்பீடு செய்வதற்கு தலைப்படுகின்றனர். மேலும், அவர்களது தீர்மானங்கள், குறிப்பாக சந்தர்ப்பவாதிகள் மற்றும் புரட்சியாளர்கள் இடையிலான ஒரு மோதலை மதிப்பீடு செய்கின்றதான ஒரு விடயத்தின் போது, அவர்களது சொந்த சொல்லப்படாத அரசியல் பாரபட்சங்களால் செல்வாக்கு செலுத்தப்படுகிறது. குட்டி-முதலாளித்துவ கல்விக்கூட அறிஞரைப் பொறுத்தவரை, சந்தர்ப்பவாதிகள் அறிவுறுத்துகின்ற கொள்கைகள் புரட்சியாளர்கள் முன்வைப்பதைவிட கூடுதல் “யதார்த்தமானவை”யாகத் தான் பொதுவாகத் தெரியும். ஆனால், எப்படி அப்பாவித்தனமான மெய்யியல் என்று ஒன்று கிடையாதோ, அதைப்போல அப்பாவித்தனமான அரசியல் என்றும் எதுவுமில்லை. முன்னெதிர்பார்க்கப்பட்டதோ இல்லையோ, ஒரு அரசியல் வேலைத்திட்டமானது எப்போதும் புறநிலையான பின்விளைவுகளைக் கொண்டிருக்கும். வரலாற்றுக்கு அப்பாற்பட்ட ஒரு தேசிய விடுதலை மற்றும் அனைவருக்குமான ஜனநாயகத்திற்கான IKD இன் வேலைத்திட்டமானது சோசலிசத்துக்குக் குரோதமான மற்றும் எதிரான வர்க்க நலன்களது ஒரு வெளிப்பாடென்று, 1940களில், நான்காம் அகிலமும் SWPயும் சரியாக உணர்ந்துகொண்டன.
கெய்டோவும் லுப்பரேல்லோவும் தமது கட்டுரையின் முடிவில் எழுதுகின்றனர், “நான்காம் அகிலத்தின் நெருக்கடியானது, பெரும்பாலும் வாதிடப்படுவதைப் போல, 1953 இல் மிஷேல் பப்லோவின் ‘ஆழமான நுழைவுவாத’ தந்திரோபாயத்தினால் தூண்டப்பட்ட சர்ச்சையுடன் தொடங்கியது அல்ல, மாறாக, அதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, 1943 இல் முசோலினியின் வீழ்ச்சியின் ஒரு விளைவாய் ஐரோப்பாவில் அபிவிருத்தி கண்ட புதிய சூழ்நிலைக்குத் தக்கவாறு தனது தந்திரோபாயத்தை தகவமைத்துக் கொள்ள SWP திறனற்று இருந்ததில் இருந்தே தொடங்கி விட்டது...” [39] ட்ரொட்ஸ்கிச இயக்கம் 1940களிலேயே தன்னை கலைத்துக் கொண்டு விட்டிருக்க வேண்டும் என்பதே இந்த வாதத்தின் சாரமாய் இருக்கிறது. ஒரு யதார்த்தமில்லாத புரட்சிகர வேலைத்திட்டத்தை தாங்கிப் பிடிக்கின்ற அதன் சரிவர-சிந்திக்கப்படாத முயற்சிகளே அதனை “அரசியல் கையாலாகாத்தன”த்திற்குத் தள்ளியது, அத்துடன் நான்காம் அகிலத்தின் பின்னாள் நெருக்கடிகளுக்கான மூலவளமாகும் என்றது. நான்காம் அகிலத்தின் நெருக்கடிகளுக்கான பொறுப்பை ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கலைக்க முனைந்தவர்களின் தோள்களில் இருந்து அகற்றி அதனைப் பாதுகாக்க முனைந்தவர்களது தோள்களுக்கு மாற்றுவதே கெய்டோ மற்றும் லுப்பரேல்லோ முன்வைக்கின்ற புதிய விவரிப்பின் நோக்கமாய் இருக்கிறது.
பேர்ன்ஹாம் மற்றும் சாக்ட்மனின் பாதையைப் பின்பற்றி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிழற்குடையின் கீழான “ஜனநாயக”த்திடம் சரணடைவதற்கு அறிவுறுத்திய மொரோ-கோல்ட்மன் போக்குக்கு எதிராக, ட்ரொட்ஸ்கிசத்தின் உலக புரட்சிகர முன்னோக்கை பாதுகாத்ததன் மூலம், ஜேம்ஸ் பி. கனன் மகத்தான அரசியல் கௌரவத்திற்கு உரியவரானார். இந்த சரணாகதியாளர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு பின்வந்த காலத்தில், 1940களின் பிற்பகுதியிலும் 1950களின் ஆரம்பத்திலும் மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேலால் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்டம் மற்றும் தந்திரோபாயத்துடன் தொடர்புடைய இன்னுமொரு, அபாயத்தில் குறைவில்லாத, அத்துடன் உள்ளிருந்தே அழிக்கின்ற ட்ரொட்ஸ்கிச-விரோத திருத்தல்வாத வடிவத்தை நான்காம் அகிலம் எதிர்கொண்டது.
1940 க்கும் 1953 க்கும் இடையில் நான்காம் அகிலத்திற்குள்ளாக எழுந்த திருத்தல்வாதத்தின் இரண்டு பிரதான வடிவங்களது (பேர்ன்ஹாம்-சாக்ட்மன் மற்றும் பப்லோ-மண்டேல்) வேலைத்திட்டம் மற்றும் நோக்குநிலைகளுக்கு இடையில் எத்தனை வித்தியாசங்கள் இருந்தபோதினும், அவற்றின் கீழமைந்த வரலாற்றுக் கருத்தாங்களில் ஒரு குறிப்பிடத்தக்க தொடர்பு இருக்கவே செய்கிறது. 1940கள் மற்றும் 1950களின் சர்வதேசிய சமூக மற்றும் அரசியல் உள்ளடக்கத்திற்குள்ளாக, சாக்ட்மன்வாதிகளை (மற்றும் “மூன்று ஆயுவுத்தத்துவங்கள்” குழு மற்றும் மொரோ-கோல்ட்மன் போக்கில் இருந்த அவர்களது வழிவந்தவர்களை) சற்று பின்னால் எழுந்த பப்லோவாத திருத்தல்வாதத்துடன் தொடர்புபடுத்திய அடிப்படையான அரசியல் கருத்தாக்கமாக, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர ஆற்றலை நிராகரித்தல் இருந்தது. இந்த நிராகரிப்பு எடுத்த துல்லியமான வடிவங்கள் வேறுபட்டன. சோவியத் ஒன்றியம், ஒரு புதிய ஆளும் வர்க்கமாக ஆகும் நிகழ்ச்சிபோக்கில் இருந்த, அல்லது ஆகி விட்டிருந்த ஒரு அதிகாரத்துவ உயரடுக்கினால் கட்டுப்படுத்தப்பட்ட “கூட்டுற்பத்தி” சமூகத்தின் ஒரு புதிய வடிவத்தைக் குறித்ததாக சாக்ட்மனும் பேர்ன்ஹாமும் ஊகித்தனர். சோவியத் ஒன்றியம் “அரசு முதலாளித்துவ”த்தின் ஒரு வடிவமாய் இருந்தது என்பது சாக்ட்மன்வாத தத்துவத்தின் ஒரு பிரிவுவகையாக இருந்தது. “மூன்றுஆய்வுத்தத்துவங்கள்” குழுவும், அதனைப் பின்பற்றிய மொரோ-கோல்ட்மன் போக்கும், சோசலிசப் புரட்சி, வரலாற்றுரீதியாக ஒரு தொலைந்து போன இலட்சியம் என்ற முடிவுக்கு வந்தடைந்திருந்தன.
1940களின் பின்பகுதியில் எழுந்த பப்லோ மற்றும் மண்டேலின் திருத்தல்கள், ட்ரொட்ஸ்கிசத்தை தாங்கள் கைவிட்டதை ஒரு கற்பனையான இடதுசாரி வாய்வீச்சைக் கொண்டு மறைத்தன. ஆனால் அவர்களது முன்னோக்கில், சோசலிசத்தை ஸ்தாபிப்பதில் தலைமை சக்தியாக ஸ்ராலினிச அதிகாரத்துவம் இருந்ததே தவிர, தொழிலாள வர்க்கம் இல்லை. பப்லோவாத தத்துவம் சாக்ட்மன்வாத தத்துவத்தை ஒரு விசித்திரமான வகையில் தலைகீழாக்கிய ஒன்றாகும். சுரண்டலான “அதிகாரத்துவ கூட்டுற்பத்தி” (bureaucratic collectivist) சமூகம் ஒன்றின் ஒரு புதிய வடிவத்தின் கர்த்தா என்று ஸ்ராலினிச ஆட்சியை சாக்ட்மன்வாதிகள் கண்டனம் செய்தார்கள் என்றால், பப்லோவாத போக்கோ, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்தாபிக்கப்பட்ட அதிகாரத்துவ ஸ்ராலினிச ஆட்சிகள்தான் முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்தை நோக்கிய வரலாற்று உருமாற்றத்திற்கு அத்தியாவசியமான வடிவமாக இருக்கப் போகின்றவை என பிரகடனம் செய்தது. இந்த அத்தனை போக்குகளுமே, ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த விதத்தில் என்றபோதிலும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரமற்ற பாத்திரத்தை தமது அரசியல் முன்னோக்கிற்கு அடிப்படையாகக் கொண்டன. வரலாற்று நிகழ்ச்சிபோக்கில் அது தீர்மானகரமானது என்பதை விடுங்கள், ஒரு செயலூக்கமான சக்தியாகக் கூட இல்லை என்று அது கருதியது.
பப்லோவாத திருத்தல்வாதத்தின் கீழமைந்த அவநம்பிக்கை —அதனை விரக்தி என்றும் கூட ஒருவர் விவரிக்கலாம்— 1951 மூன்றாம் உலக காங்கிரசுக்கு முன்பாக அபிவிருத்தி செய்யப்பட்ட “போர்-புரட்சி” என்ற தத்துவத்தில் நிறைவான வெளிப்பாட்டைக் கண்டது. “நமது இயக்கத்தைப் பொறுத்தவரை”, அந்த பப்லோவாத ஆவணம் அறிவித்தது, “புறநிலை சமூக யதார்த்தம் என்பது அடிப்படையாக முதலாளித்துவ ஆட்சியையும் ஸ்ராலினிச உலகையும் உள்ளடக்கியிருக்கிறது.” சோசலிசத்துக்கான போராட்டம் இந்த இரண்டு முகாம்களுக்கு இடையிலான ஒரு போரின் வடிவத்தை எடுக்கும், அதில் ஸ்ராலினிச அமைப்புமுறையே வெற்றிகரமானதாக வெளிவரும். ஒரு அனல்-அணுப் போரின் சாம்பல்களில் இருந்து எழுந்து வருகின்ற ஸ்ராலினிஸ்டுகள் —கிழக்கு ஐரோப்பாவில் ஏற்கனவே அப்போது நிலவிக் கொண்டிருந்தவற்றைப் போன்ற— “ஊனமுற்ற தொழிலாளர் அரசுகளை” ஸ்தாபிப்பார்கள், அவை பல நூற்றாண்டுகள் நீடிக்கும். இந்த விநோதமான சூழ்நிலையில், தொழிலாள வர்க்கத்துக்கோ அல்லது நான்காம் அகிலத்துக்கோ அங்கே எந்த சுயாதீனமான பாத்திரமும் இருக்கவில்லை. அதன் காரியாளர்கள் ஸ்ராலினிசக் கட்சிகளுக்குள் நுழைந்து அவற்றுக்குள் ஒரு இடது அழுத்தமளிக்கும் குழுவாக செயல்படுவதற்கு அறிவுறுத்தப்பட்டனர். இந்த கலைப்புவாத முன்னோக்கு ஸ்ராலினிசக் கட்சிகளுக்குள்ளான நுழைவுடன் மட்டும் மட்டுப்படுத்திக் கொண்டிருக்கவில்லை. இந்த தொகுதியின் 15வது அத்தியாயத்தில் விளக்கப்பட்டவாறாக:
ஸ்ராலினிசத்துக்கு தகவமைத்துக் கொண்டதுதான் பப்லோவாத கண்ணோட்டத்தின் ஒரு மையமான அம்சமாக இருந்தது, ஆனால் இதனை மட்டுமே அதன் அத்தியாவசிய குணாம்சமாகக் காண்பது தவறாகி விடும். பப்லோவாதம் முழுக்க முழுக்க கலைப்புவாதமாக இருந்தது (இருக்கிறது): அதாவது, சோசலிசப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் மேலாதிக்கத்தினதும், தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தின் நனவான வெளிப்பாடாக நான்காம் அகிலம் உண்மையாக, சுயாதீனமாக இருப்பதை மறுதலிப்பதுமாகும். போர்-புரட்சி என்ற தத்துவமானது இந்த மைய கலைப்புவாத ஆய்வுத்தத்துவத்தை எடுத்துரைப்பதற்கான ஆரம்ப புள்ளியை வழங்கியது: அதாவது நான்காம் அகிலத்தின் பிரிவுகள் இயங்கிய நாடுகளில் மேலாதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த தொழிலாளர் அல்லது பரந்துபட்ட வெகுஜன இயக்கத்தினுள் ட்ரொட்ஸ்கிசக் கட்சிகள் அனைத்தும் கலைக்கப்பட்டாக வேண்டும் என்றது.
1953 நவம்பரில் நடந்த உடைவு, சோசலிச இயக்கத்தின் வரலாற்றில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். அதில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் உயிர்வாழ்க்கைக்கு அதாவது, சோசலிசத்துக்கான போராட்டத்தின் ஒட்டுமொத்த பாரம்பரியத்தின் நனவான மற்றும் அரசியல்ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட வெளிப்பாடு பணயத்தில் இருந்தது. நான்காம் அகிலத்தின் வரலாற்றின் அந்த மிக முக்கியமான தருணத்தில், கனனின் “பகிரங்க கடிதம்”, இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகள் மற்றும் எதிர்ப்புரட்சிகளது மூலோபாயப் படிப்பினைகளில் இருந்து தேற்றம் செய்யப்பட்ட ட்ரொட்ஸ்கிசத்தின் அடித்தளக் கோட்பாடுகளை தெளிவாக மறுபிரகடனம் செய்தது. நான்காம் அகிலம் கலைக்கப்பட்டிருந்தால் ஏகாதிபத்தியத்திற்கும் ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் முதலாளித்துவ தேசியவாதக் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்குமான அரசியல்ரீதியாக ஒழுங்கமைப்பட்ட ஒரு மார்க்சிச எதிர்ப்பு முடிவுக்கு வந்ததாகவே அர்த்தப்பட்டிருக்கும். இது ஊகிப்பு அனுமானமல்ல. இது வரலாற்று உண்மையான விடயமாகும், கிட்டத்தட்ட ஒவ்வொரு கண்டத்திலும், பப்லோவாதத்தின் கலைப்புவாதக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பல நாடுகளில் அதன் அழிவுகரமான பின்விளைவுகளை ஆராய்வதன் மூலமாக இது சரியானதா என்பதை கண்டுகொள்ளமுடியும்.
சோவியத் ஒன்றியத்தின் தலைவிதியைப் பொறுத்தவரை, ஸ்ராலினிச ஆட்சி முடிவுக்கு வருகின்ற நாள் வரையிலும் கூட, பப்லோவாதத் தலைவர்கள், அதிகாரத்துவ சுய-சீர்திருத்தம் என்ற தத்துவத்தையே இறுகப்பற்றிக்கொண்டிருந்தனர் என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும். அனைத்துலகக் குழு, 1986 இலேயே, மிக்கையில் கோர்பச்சேவ் அதிகாரத்துக்கு வந்ததும், அவரது மறுகட்டமைப்பு (perestroika) சீர்திருத்தங்கள் அமலாக்கப்படுவதும் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவம் மீட்சி செய்யப்படுவதற்கான இறுதித் தயாரிப்பைக் குறித்ததாக இருந்தது என்று எச்சரித்த நிலையில், பப்லோவாதிகளோ, இந்த பிற்போக்குத்தனமான கொள்கைகளை சோசலிசத்தை நோக்கிய ஒரு தீர்மானகரமான முன்னேற்றமாக பாராட்டினர். ஏர்னெஸ்ட் மண்டேல் கோர்பச்சேவை ஒரு “பெருமைக்குரிய அரசியல் தலைவர்” என்று 1988 இல் வருணித்தார். கோர்பச்சேவின் கொள்கைகள் முதலாளித்துவம் மீட்சி செய்யப்படுவதற்கு இட்டுச் சென்று கொண்டிருந்ததாய் எச்சரிக்கப்பட்டதை “அபத்தம்” என்று கூறி நிராகரித்த மண்டேல் அறிவித்தார்: “ஸ்ராலினிசமும் பிரஷ்னேவிசமும் நிச்சயமாக ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. சோவியத் மக்களும், சர்வதேசியப் பாட்டாளி வர்க்கமும், ஒட்டுமொத்த மனிதகுலமும் ஒரு பெரும் நிம்மதிப் பெருமூச்சு விட முடியும்.” [40]
மண்டேலிடம் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த பிரிட்டிஷ் பப்லோவாதி தாரிக் அலி, கோர்பச்சேவ் ஆட்சியினது கொள்கைகளில் இன்னும் கட்டுக்கடங்காத உற்சாகம் காட்டினார். 1988 இல் வெளியான மேலிருந்தான புரட்சி: சோவியத் ஒன்றியம் எங்கே செல்கிறது? என்ற அவரது புத்தகத்தில், தாரிக் அலி, ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு மட்டற்ற ஆதரவு, அவலட்சணமான அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் அரசியல் யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கு முற்றிலும் திறனற்றிருக்கும் தன்மை ஆகிய பப்லோவாதத்தின் பல குணாதிசயங்களையும் கலந்து கொடுத்திருந்தார். அவரது முன்னுரையில், அலி, புத்தகத்தின் ஆய்வுமொழிவினை இவ்வாறு சுருங்கக் கூறியிருந்தார்:
சோவியத் உயரடுக்கிற்குள் ஒரு முற்போக்கான, சீர்திருத்தவாத நீரோட்டத்தை கோர்பச்சேவ் பிரதிநிதித்துவம் செய்கிறார், அவரது வேலைத்திட்டமானது, வெற்றிபெறுமாயின், உலகளவில் அது சோசலிஸ்டுகளுக்கும் ஜனநாயகவாதிகளுக்கும் ஒரு மிகப்பெரும் அனுகூலத்தைக் குறிப்பதாக அமையும் என்று மேலிருந்தான புரட்சி வாதிடுகிறது. கோர்பச்சேவின் செயல்பாட்டின் வீச்சு, உண்மையில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒரு அமெரிக்க ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கனின் முயற்சிகளை நினைவுக்குக் கொண்டுவருகிறது என்றார்.[41]
வெளிப்படையாகவே, கோர்பச்சேவை ஆபிரகாம் லிங்கனின் உயரத்திற்கு ஏற்றியது ஸ்ராலினிசத்திற்கான தனது அர்ப்பணிப்பின் முழுமையான வீச்சை போதுமான அளவு வெளிப்படுத்தியிருக்கவில்லையோ என்ற கவலையில், தாரிக் அலி தனது புத்தகத் தொகுதியை, ”சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு முன்னணி உறுப்பினரும், அவரது அரசியல் தீரத்தால் நாடெங்கிலும் ஒரு முக்கியமான அடையாளமாக மாறியிருப்பவருமான போரிஸ் யெல்ட்சினுக்கு” பணிவுடன் அர்ப்பணித்தார்.[42]
மிக்கையில் கோர்பச்சேவ் மற்றும் போரிஸ் யெல்ட்சின் ஆகிய சோவியத் ஒன்றியத்தின் இறுதி அழிவின் இரண்டு மையமான வடிவமைப்பாளர்களுக்கு பப்லோவாதத் தலைவர்கள் வழங்கிய ஒளிவுமறைவற்ற ஆதரவானது, பப்லோவாதத்தின் பிற்போக்குத்தனமான தன்மைக்கும் ஏகாதிபத்தியத்தின் இந்த படுதீய குட்டி-முதலாளித்துவ அரசியல் முகமைக்கு எதிராக அனைத்துலகக் குழு பல தசாப்தங்களாக நடத்தியிருந்த போராட்டத்தின் நியாயத்திற்கும் மறுக்கவியலாத ஒரு வரலாற்று நிரூபணத்தை வழங்கியது.
* * * * * *
1988 இல் நாம் காக்கும் மரபியம் வெளியானதற்குப் பின்னர், உலகம் ஆழமான பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் சமூக மாற்றங்களை —வெடிப்பான அரசியல் அபிவிருத்திகளையும் என்பதை கூறவும் அவசியமில்லை— கண்டிருக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு, சோவியத்துக்குப் பிந்தைய ஏகாதிபத்திய வெற்றிக்களிப்புவாதத்தின் நாட்களில் வாக்குறுதியளிக்கப்பட்டவாறு “வரலாற்றின் முடிவு” ஐ கூட விட்டுவிடுவோம், ஒரு புதிய அமைதி சகாப்தத்தை கூட கொண்டுவந்து விடவில்லை. உலகம் ஒரு “நெருக்கடி”யில் இருக்கிறது என்று கூறுவது குறைமதிப்பீடான வாசகமாக இருக்கும். “பெருங்குழப்பநிலை”யில் இருக்கிறது என்பதே கூடுதல் பொருத்தமான விவரிப்பாய் இருக்கும். கடந்த கால் நூற்றாண்டு காலமானது இடைவிடாத போரினால் உலுக்கப்பட்டு வந்திருக்கிறது. உலகின் முன்னெப்போதினும் அதிகமான பகுதிகள் ஏகாதிபத்திய புவியரசியல் மோதலின் சுழல்மையத்திற்குள்ளாக இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1991 க்குப் பின்னர் உலகை ஆட்சி செய்வதற்கு எதிர்பார்த்து ஏமாற்றம் கண்டிருக்கின்ற அமெரிக்கா, அதன் இராணுவ நடவடிக்கைகளை முன்னெப்போதினும் பெரும் பொறுப்பற்ற தன்மையுடன் தீவிரப்படுத்த தள்ளப்பட்டிருக்கிறது. ஆயினும், ஏகாதிபத்திய உலக ஒழுங்கின் ஆழமான அடித்தளங்கள், இரண்டாம் உலகப் போரின் பேரழிவில் இருந்து அவை எழுந்தபடியான நிலையில் இருந்து, நொருங்கி விழுந்து கொண்டிருக்கின்றன. ரஷ்யா மற்றும் சீனாவுடன் அமெரிக்கா மோதல்களைத் தீவிரப்படுத்திக் கொண்டிருப்பதன் மத்தியிலும் கூட, அமெரிக்காவுக்கும் அதன் முக்கிய ஏகாதிபத்திய “கூட்டாளி”களுக்கும், குறிப்பாக ஜேர்மனிக்கும் இடையிலான அரசியல் உறவுகள் துரிதமாக மோசமடைந்து கொண்டிருக்கின்றன.
பொருளாதார முனையில், முதலாளித்துவ அமைப்புமுறை ஒரு நெருக்கடியிலிருந்து மற்ற நெருக்கடிக்கு தாவிக் கொண்டிருக்கிறது. 2008 பொருளாதாரப் பொறிவின் விளைவுகள் இன்னும் கடந்துவரப்படவில்லை. இந்த பொறிவு முக்கியமாக விட்டுச்சென்றுள்ள தீவிரமடைகின்ற சமூக சமத்துவமின்மை, ஜனநாயகத்தின் கட்டமைப்பிற்குள் கட்டுப்படுத்தமுடியாத மட்டத்தை அடைந்துள்ளதுதான் இந்தப் பொறிவின் பிரதான ஆஸ்தியாக இருந்து வந்திருக்கிறது. ஒரு சிறிய உயரடுக்கிற்குள்ளாக மலைக்க வைக்கும் அளவுக்கு செல்வம் குவிந்திருப்பது என்ற உலகளாவிய நிகழ்வுப்போக்கு முதலாளித்துவ அரசாங்கங்களின் பெருகும் அரசியல் ஸ்திரமின்மையின் கீழமைந்திருக்கிறது. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் வர்க்க மோதல் மேலே எழுந்து கொண்டிருக்கிறது. முதலாளித்துவ உற்பத்தியினது மற்றும் நிதியப் பரிவர்த்தனைகளது உலகமயமாக்கமானது சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை ஒரு பொதுவான போராட்டத்துக்குள் இழுத்துக் கொண்டிருக்கிறது.
புற நிலைமைகள், புரட்சிகர வர்க்கப் போராட்டத்தின் ஒரு தீவிர விரிவாக்கத்திற்கு உந்துசக்தி அளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த புறநிலையான உந்துசக்திகள் அரசியல்ரீதியாக நனவான நடவடிக்கையாக மாற்றப்பட்டாக வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் தலைமை குறித்ததான எல்லாவற்றினும்-முக்கியமான பிரச்சினையை இது மேலே கொண்டுவருகிறது.
உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையின் தீவிரமான நெருக்கடி மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் மிக உயரிய மட்டங்களுக்குள்ளாக பொதுவாக நிலவுகின்ற அரசியல் குழப்பம் ஆகியவை நிலவுகின்ற போதிலும், ஒரு முன்னோக்கிய பாதையைக் காண்பதற்கு தொழிலாள வர்க்கம் செய்கின்ற முயற்சிகள், அதன் மீதான தங்கள் செல்வாக்கைப் பிரயோகம் செய்து அதன் இயக்கத்தை மட்டுப்படுத்துகின்ற மற்றும் வழிதவறச் செய்கின்ற கட்சிகள் மற்றும் அமைப்புகளால் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஆனாலும், கடந்த இரண்டு தசாப்தங்களது அனுபவங்கள் பரந்த மக்களின் நனவில் அவற்றின் சுவடுகளை பதித்திருக்கின்றன. உத்தியோகபூர்வ “சோசலிச” கட்சிகளது திவால்நிலை பரவலாக உணரப்படுகிறது. ஆனால், கிரேக்கத்தில் சிரிசா போல, சமூகப் பிரச்சினைகளுக்கு சற்று கூடுதல் தீவிரப்பட்ட அணுகுமுறையை வாக்குறுதியளிக்கின்ற புதிய அமைப்புகளை நோக்கி பரந்த மக்கள் திரும்புகின்ற சமயத்தில், அவர்களது வாக்குறுதிகளின் வெற்றுத்தன்மை துரிதமாக அம்பலப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களது ஒரு அலையின் மீது அதிகாரத்திற்கு கொண்டுவரப்பட்ட சிரிசா, அதனை ஆதரித்தவர்களுக்கு அது அளித்திருந்த ஒவ்வொரு வாக்குறுதியையும் மறுதலிப்பதற்கு சில மாதங்களே பிடித்தன. ஸ்பெயினில் பொடேமோஸோ (Podemos) அல்லது பிரிட்டனில் கோர்பினோ அல்லது அமெரிக்காவில் சாண்டர்ஸோ பதவிக்கு வந்தாலும், முடிவு வேறுவிதமாக இருக்கப் போவது கிடையாது.
புரட்சிகரத் தலைமை விடயத்திலான நெருக்கடியைத் தீர்ப்பதே தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கின்ற மையமான வரலாற்றுக் கடமையாக இருக்கிறது. இப்போது கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளாக இருந்து வருகின்ற நான்காம் அகிலத்தின் ஒட்டுமொத்த வரலாற்று அனுபவங்களையும் உள்வாங்கிக் கொண்ட ஒரு சர்வதேசக் கட்சியால் மட்டுமே இந்த தலையாய பணி வழிநடத்தப்பட முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே அதன் ஒட்டுமொத்த வரலாறு குறித்தும் அரசியல்ரீதியாக முரணற்றதும் சீரானதுமான ஒரு கணக்கை வழங்கும் திறம் உடையதாகும். அதன் நடைமுறையானது உலக சோசலிசப் புரட்சிக்கான லியோன் ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தினது தத்துவார்த்த மற்றும் அரசியல் பாரம்பரியத்தை நனவுடன் பாதுகாப்பதில் வேரூன்றியிருக்கிறது. முதலாளித்துவத்தின் புறநிலை நெருக்கடியால் தீவிரப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது ஒரு புதிய தலைமுறையை நான்காம் அகிலத்தின் வரலாறு, வேலைத்திட்டம் மற்றும் பாரம்பரியங்களில் புரட்சிகரக் கல்வியூட்டுவதில் நாம் காக்கும் மரபியம் இன் மறுவெளியீடு பங்களிப்பு செய்யும் என்று நான் நம்புகிறேன்.
டேவிட் நோர்த்
டெட்ராயிட்
ஜூன் 20, 2018
குறிப்புகள்:
[1] A detailed analysis of the opportunist degeneration of the British section is provided in How the Workers Revolutionary Party Betrayed Trotskyism 1973 –1985, published in Fourth International, Vol. 13, no. 1, Summer 1986. All the major documents of the split with the WRP are available in the Autumn 1986 edition of Fourth International (Vol. 13, no. 2).
[1] பிரிட்டிஷ் பிரிவின் சந்தர்ப்பவாத சீரழிவு குறித்த ஒரு விரிவான பகுப்பாய்வு
தொழிலாளர் புரட்சிகரக் கட்சி (WRP) ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது 1973-1985 என்ற நான்காம் அகிலம், தொகுதி, 13, எண்.1, கோடை 1986 இதழில் வெளியான ஆவணத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. WRP உடனான உடைவு சம்பந்தமான அத்தனை முக்கிய ஆவணங்களும் நான்காம் அகிலம் 1986 இலையுதிர்கால பதிப்பில் (தொகுதி. 13. எண். 2) இடம்பெற்றுள்ளன.
[2] See pp. 231–32 of this volume.
[3] The documents of the Workers League are published in The ICFI Defends Trotskyism 1982–1986, in Fourth International, Vol. 13, no. 2, Autumn 1986.
[3] வேர்க்கர்ஸ் லீக் ஆவணங்கள் ட்ரொட்ஸ்கிசத்தை ICFI பாதுகாக்கிறது 1982-1986 என்ற நான்காம் அகிலம் 1986 இலையுதிர்கால பதிப்பில் (தொகுதி. 13. எண். 2) வெளியிடப் பெற்றுள்ளன.
[4] Karl Marx and Frederick Engels, Collected Works, Vol. 26 (Moscow: Progress Publishers, 1990), p. 389.
[5] Leon Trotsky, “A Letter to James P. Cannon,” September 12, 1939, In Defense of Marxism (London: New Park Publications, 1971), p. 1.
[6] Ibid., pp. 1–2.
[7] “The USSR in War,” In Defense of Marxism, p. 15.
[8] James Burnham and Max Shachtman, “Intellectuals in Retreat,” The New International, Vol. 5, no. 1, January 1939. Available at www.marxists.org/history/etol/writers/burnham/1939/intellectuals/index.htm
[9] Trotsky, In Defense of Marxism, pp. 257–58.
[10] Ibid., p. 261.
[11] I am referencing the phrase: “Not every exasperated petty bourgeois could have become Hitler, but a particle of Hitler is lodged in every exasperated petty bourgeois.” [Leon Trotsky, “What is National Socialism?,” The Struggle Against Fascism in Germany (New York: Pathfinder Press, 1971), p. 523.
[11] இங்கே நான் குறிப்புகாட்டுகின்ற வசனம்: “குட்டி-முதலாளித்துவத்தின் கோபமுற்றிருந்த ஒவ்வொருவரும் ஹிட்லராகியிருக்க முடியாது, ஆனால் குட்டி-முதலாளித்துவத்தின் கோபமுறுகிற ஒவ்வொருவரிலும் ஹிட்லரின் ஒரு துகள் உட்கார்ந்து கொள்கிறது.” [லியோன் ட்ரொட்ஸ்கி, “தேசிய சோசலிசம் என்பது என்ன?”, ஜேர்மனியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டம் (New York: Pathfinder Press, 1971), பக். 523.
[12] “The National Question in Europe: Three Theses on the European Situation and the Political Tasks,” dated October 19, 1941, published in the December 1942 edition of Fourth International, pp. 370–372. Available at www.marxists.org/history/etol/newspape/fi/vol03/no12/3theses.htm.
[13] Ibid.
[14] “Capitalist Barbarism or Socialism,” The New International (Vol. 10, no. 10), October 1944 (emphasis in the original). Available at www.marxists.org/history/etol/newspape/ni/vol10/no10/ikd.htm
[15] Ibid.
[16] Ibid., (emphasis in the original).
[17] Ibid., (emphasis in the original).
[18] Ibid., (emphasis in the original).
[19] Ibid., (emphasis in the original).
[20] Leon Trotsky, The Permanent Revolution (London: New Park Publications, 1962), p. 152, (emphasis in the original).
[21] Marcel Van Der Linden, “The Prehistory of Post-Society Anarchism: Josef Weber and the Movement for a Democracy of Content (1947–1964),” Anarchist Studies, 9 (2001), p. 131.
[22] Felix Morrow, “The Class Meaning of the Soviet Victories,” Fourth International, Vol. 4, no. 3, March 1943, available at www.marxists.org/archive/morrow-felix/1943/03/soviet.htm
[23] SWP Internal Bulletin, Vol. 8, no. 8, July 1946, p. 28.
[24] Cited in Benn Steil, The Marshall Plan: Dawn of the Cold War (New York: Simon & Schuster), p. 26.
[25] Ibid., pp. 18–19.
[26] Ibid., pp. 19–20.
[27] Elena Agarossi and Victor Zaslavsky, Stalin and Togliatti: Italy and the Origins of the Cold War (Washington, D.C.: Woodrow Wilson Center Press, 2011), p. 95.
[28] Paul Ginsborg, A History of Contemporary Italy: 1943 – 80 (Penguin Books Ltd. Kindle Edition), p.43.
[29] Irwin M. Wall, The United States and the Making of Postwar France, 1945– 47 (Cambridge, Cambridge University Press, 1991), p. 97.
[30] Daniel Gaido and Velia Luparello, “Strategy and Tactics in a Revolutionary Period: U.S. Trotskyism and the European Revolution, 1943–1946,” Science & Society, Vol. 78, no. 4, October 2014, p. 504.
[31] Ibid., p. 503.
[32] Geoff Hodgson, Trotsky and Fatalistic Marxism, (Nottingham: Spokesman Books, 1975), p. 38.
[33] Peter Jenkins, Where Trotskyism got lost: The restoration of European democracy after the Second World War, (Nottingham: Spokesman Books, 1977). Available at www.marxists.org/history/etol/document/fi/1938-1949/ww/essay01.htm
[34] Gaido and Luparello, p. 508.
[35] Trotsky, In Defense of Marxism, p. 131.
[36] Joseph Weber, Dinge der Zeit, Kritische Beiträge zu Kultur und Politik (Hamburg: Argument, 1995), p. 21, (translation by David North).
[37] Murray Bookchin, Post-Scarcity Anarchism, (Montreal: Black Rose Books, 1986), p. 32.
[38] Joris Leverink, “Murray Bookchin and the Kurdish Resistance,” ROAR magazine, August 9, 2015, available at https://roarmag.org/essays/bookchin-kurdish-struggle-ocalan-rojava/
[39] Gaido and Luparello, p. 508.
[40] Ernest Mandel, Beyond Perestroika (London: Verso Books, 1989), p. xvi.
[41] Tariq Ali, Revolution From Above: Where is the Soviet Union Going?(Surry Hills, Australia: Hutchinson, 1988). p. xiii.
[42] Ibid.