Print Version|Feedback
As Greece exits bailout, EU demands further austerity
கிரீஸ் பிணையெடுப்பு முடிவடைகின்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் கூடுதல் சிக்கன நடவடிக்கைகள் கோருகிறது
By Robert Stevens
21 August 2018
ஐரோப்பிய ஒன்றியம்/சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) எட்டாண்டு கால சிக்கன நடவடிக்கை திட்டங்களில் இருந்து கிரீஸ் திங்களன்று நள்ளிரவு உத்தியோகபூர்வமாக வெளியில் வந்தது.
2010 இல் கிரீஸின் தேசியக் கடன் 330.57 பில்லியன் யூரோவாக இருந்த நிலையில், பெற்ற கடன்களை திருப்பி செலுத்துவதன் பேரில் அதற்கு பிரதியீடாக மூன்று கடுமையான சிக்கன திட்டங்களை 2010 இல் இருந்து நான்கு கிரேக்க அரசாங்கங்கள் மேற்பார்வையிட்டுள்ளன. ஆனால் வங்கி பிணையெடுப்புகளுக்குச் செலவிடப்பட்ட 289 பில்லியன் யூரோவில் ஒரேயொரு சதம் கூட கிரேக்க கடன்களைக் குறைக்கவில்லை. அண்மித்து ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், கிரீஸின் கடன் ஏறக்குறைய 350 பில்லியன் யூரோவாக—அதாவது கிரீஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 180 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. பெறப்பட்ட கடன் தொகைகள் கிரீஸ் க்கு கடன் கொடுத்தவர்களுக்குச் செலுத்துவதற்காக, குறிப்பாக ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் வங்கிகளுக்குச் சென்றன.
முன்கூட்டிஅனுமானிக்கக்கூடிய விதத்தில், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இத்தருணத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பெருந்தன்மைக்கு நன்றி கூறி, நன்நாட்கள் வரவிருப்பதாக வாக்குறுதியை முன்வைக்க முயன்றனர். ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் டொனால்ட் டஸ்க் இவ்வாறு ட்வீட் செய்தார்: “நீங்கள் செய்து காட்டிவிட்டீர்கள்! நிதியுதவி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக கிரீஸ் மற்றும் அதன் மக்களுக்கு வாழ்த்துக்கள். பெரும் முயற்சிகள் மற்றும் ஐரோப்பிய நல்லிணக்கத்துடன் நீங்கள் இந்நாளை உங்கள் நாளாக்கி உள்ளீர்கள்.”
பொருளாதார மற்றும் நிதிய விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் பியர் மொஸ்கோவிச்சி கூறுகையில், “மிக நீண்டகாலமாக நீடித்திருந்த ஒரு நெருக்கடியை இறுதியாக கிரீஸ் திருப்பிவிட்டுள்ளது. மோசமானவை எல்லாம் முடிந்துவிட்டன,” என்றார்.
அப்பட்டமான உண்மை என்னவென்றால் கிரீஸ் அதன் கடன்களில் உள்ள இந்த நூறு பில்லியன் கணக்கான யூரோக்களை இப்போதிருந்து 42 ஆண்டுகளுக்கு 2060 முடிய இன்னமும் செலுத்த வேண்டியிருக்கும் என்று வங்கிகள் கணக்கிடுகின்றன. இந்த பிணையெடுப்பு திட்டம் முடிந்துவிட்டது என்பதானது, கிரேக்க அரசு அதன் கடன்களுக்கு நிதி வழங்க அது தனியார் கடன் வழங்குனர்களிடம் இருந்து பணம் வாங்க முடியுமென ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கிறது என்பதை மட்டுமே குறிக்கிறது. நடைமுறையில், சிரிசா அரசாங்கம் (“தீவிர இடது கூட்டணி") வங்கிகளுக்கு கிரேக்க தொழிலாளர்களை கொண்டு செலுத்தவைப்பதில் சார்ந்திருக்கும் என்பதே நிதியியல் சந்தைகளின் நம்பிக்கையாக உள்ளது.
கிரீஸில் தொழிலாளர்களின் நிலைமைகளில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்படுவது என்பது, பிணையெடுப்புக்கு முன்னதாக இருந்ததைப் போலவே இப்போதும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற்போக்குத்தனமான போலி-இடது சிரிசா அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் அணிதிரள்வதன் மீதே தங்கியுள்ளது.
சிரிசாவின் பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பிலிருந்து வெளியேறி இருப்பதைப் பெருமைப்படுத்தி இன்று ஓர் உரை வழங்க உள்ளார். அதிலிருந்து வெளிவந்திருப்பது குறித்தோ அல்லது அதை கிரீஸின் ஒரு முன்னேற்ற படி என்று சித்தரிக்க முயன்றோ நேற்று அவர் எந்த பகிரங்க அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கிரீஸின் மத்திய வங்கி ஆளுநர், யானிஸ் ஸ்ரோனாரஸ் Kathimerini க்கு கூறுகையில், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளைத் தொடர்வதே முன்னே உள்ள வழி என்றார். “கிரீஸ் இன்னும் நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது,” என்று கூறிய அவர், “நாம் என்ன உடன்பட்டுள்ளமோ அதிலிருந்து, இப்போதோ அல்லது எதிர்காலத்திலோ, எந்தவொரு பின்நகர்வு இருந்தாலும், சந்தைகள் நம்மைக் கைவிட்டுவிடும், நீண்டகால கடன் வரையறைகளில் முதிர்ந்த கடன்களுக்கு நம்மால் மறுநிதி வழங்க இயலாமல் போய்விடும்,” என்று எச்சரித்தார்.
சில புள்ளிவிபரங்கள் கிரீஸில் திணிக்கப்பட்ட கடுமையான நிலைமைகளுக்கு ஓர் அறிகுறியை வழங்குகின்றன:
- 2010 க்குப் பின்னர் இருந்து, ஒரு சிறிய எண்ணிக்கையிலான வெறும் சுமார் 11 மில்லியன் மக்களுக்கு எதிராக 72 பில்லியன் யூரோ சிக்கன நடவடிக்கைகள் திணிக்கப்பட்டுள்ளன. இது கிரீஸின் ஒட்டுமொத்த ஆண்டு பொருளாதார வெளியீட்டில் சுமார் 40 சதவீதத்திற்கு சமம். கிரீஸின் நிஜமான மொத்த உள்நாட்டு உற்பத்தி 25 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதுடன், பாரிய சிக்கன நடவடிக்கைகள் தொடங்கப்படுவதற்கு முன்னர் இருந்ததை விட ஏறத்தாழ 64 பில்லியன் யூரோ சரிந்துள்ளது.
- குடும்ப வருமானங்கள் 30 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்துள்ளன, அத்துடன் 20 சதவீதத்திற்கும் அதிகமான மக்களால் வாடகை, மின்சாரம் மற்றும் வங்கி கடன்கள் போன்ற அடிப்படை செலவுகளைச் செய்ய இயலாமல் போயுள்ளது.
- இன்று, ஒரு சராசரி கிரேக்க தொழிலாளர் எட்டாண்டுகளுக்கு முன்னர் அவர் பெற்ற கூலிகளை விட 23 சதவீதம் குறைவாக பெறுகிறார். வேலையில் உள்ள மூன்றில் ஒருவர் பகுதி-நேர வேலையிலும் இருக்கிறார், கிரீஸின் குறைந்தபட்ச கூலி 22 சதவீத அளவுக்கு குறைந்துவிட்டது — ஏற்கனவே குறைவாக 751 யூரோவாக இருந்ததில் இருந்து 586 யூரோவாக குறைந்துவிட்டது, 25 வயதுக்குக் குறைந்த தொழிலாளர்களது கூலிகள் 511 யூரோவா 32 சதவீத அளவுக்கு குறைந்துவிட்டது.
- ஓய்வூதியங்கள் 50 சதவீத அளவுக்கு வெட்டப்பட்டன, அரசின் சமூக செலவுகளும் கொடுப்பனவுகளும் குறைக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
- பொதுத்துறை செலவுகள் 26 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது, பொது சுகாதார வரவு-செலவு திட்டம் 50 சதவீத அளவுக்கு குறைக்கப்பட்டது, பொதுக் கல்வி செலவுகள் அண்மித்து 36 சதவீத அளவுக்கு வெட்டப்பட்டது, மற்றும் நலன்புரி செலவுகள் 70 சதவீத அளவுக்கு வெட்டப்பட்டன.
- மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் உத்தியோகபூர்வமாக வறுமை அல்லது சமூகத்திலிருந்து ஒதுக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். 2012 அளவில், 400,000 கிரேக்கர்கள் அன்றாடம் இலவச உணவகங்களை எதிர்நோக்கி செல்கிறார்கள் என்று மதிப்பிடப்படுகிறது.
- செப்டம்பர் 2009 இல் இருந்து ஜூலை 2013 வரையில், அண்மித்து 1.1 மில்லியன் வேலையிழப்புகள் ஏற்பட்டன. அந்த நெருக்கடி தொடங்கியதற்குப் பின்னர் இருந்து, இன்று 740,000 கிரேக்கர்கள் வேலையின்றி உள்ளனர். பொதுத்துறை தொழிலாளர்களில் இருபத்தி ஐந்து சதவீதம் பேர் நீக்கப்பட்டனர். மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒருவராவது வேலைவாய்ப்பற்ற அங்கத்தவராக உள்ளார். வேலைவாய்ப்பற்ற 10 இல் அண்மித்து ஏழு பேர் ஓராண்டுக்கும் அதிகமாக வேலைவாய்ப்பின்றி உள்ளனர் மற்றும் ஒரு மில்லியனில் கால்வாசி பேர் "பொருத்தமற்ற வேலையில்" இருப்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களால் வழமையான முழு-நேர வேலைவாய்ப்பைப் பெற முடியவில்லை. சுமார் 122,000 தொழிலாளர்கள் "நம்பிக்கை இழந்தவர்களாக" வகைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதோடு, வேலை தேடுவதையே கைவிட்டுள்ளனர். பெரும்பாலான புதிய வேலைகள் வறுமை மட்ட சம்பளத்தில் பகுதி-நேர வேலைவாய்ப்பாக உள்ளன. இன்று அண்மித்து 360,000 பகுதி-நேர வேலைகள் உள்ளன, இது நெருக்கடி தொடங்கியதற்குப் பின்னர் இருந்ததை விட 100,000 அதிகமாகும்.
- யூரோ மண்டலத்திலேயே மிக அதிகபட்ச விகிதமாக உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை இன்னமும் சுமார் 20 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும் நிலைமைகளின் கீழ், அதுவும் இளைஞர்களிடையே இது இரட்டிப்பாக உள்ள நிலையில், சுமார் 500,000 இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.
கிரீஸ் அதன் பெருவாரியான கடன்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஸ்திரப்பாட்டு இயங்குமுறையின் (European Stability Mechanism - ESM) இயக்குனர் கிளவுஸ் ரெக்லிங், அந்நாட்டில் தொடர்ந்து சிக்கன நடவடிக்கைகளை உன்னிப்பாக மேற்பார்வை செய்ய சூளுரைத்தார்: “ஒரு அமைப்பாக ESM உம் மற்றும் அதன் அங்கத்துவ நாடுகளும் அவற்றின் கடமைப்பாடுகளில் தவறாது இருப்பதை மிகவும் தீவிரமாக ஏற்கின்றன. நாங்கள் மிகவும் பொறுமையான கடன் வழங்குனர்கள். ஆனால் வாங்கிய கடனை எங்களுக்குத் திரும்ப கொடுத்தாக வேண்டும். ஆகவே கிரீஸின் அபிவிருத்திகளை நாங்கள் மிகவும் உன்னிப்பாக பின்தொடர்வோம்,” என்றார்.
அதாவது, ஐரோப்பிய ஒன்றிய ஆய்வாளர்கள் சிக்கனக் கொள்கைகளைத் திணிக்கவும் மற்றும் வரவிருக்கும் பல தசாப்தங்களுக்கு மக்களிடமிருந்து பாரிய வரவு-செலவு திட்டக்கணக்கு உபரிகளை கிரீஸ் உறிஞ்சி எடுக்கவும் சிப்ராஸ் அரசாங்கத்தைத் தொடர்ந்து வழமையாக சந்தித்து வருவார்கள்.
கிரேக்க தொழிலாளர்களால் சிரிசா வெறுக்கப்பட்டாலும், உலகளாவிய நிதியியல் செல்வந்த தட்டுக்களைப் பொறுத்த வரையில், சிப்ராஸ் அரசாங்கம் ஒரு ஈடிணையற்ற வெற்றிக் கதையாக விளங்குகிறது. அது இதற்கு முந்தைய வலதுசாரி அரசாங்கங்களால் நடைமுறைப்படுத்த முடியாத, பத்து பில்லியன் கணக்கான யூரோ கூடுதல் வெட்டுக்களை நடத்தி உள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய சிக்கனத் திட்டங்களை நிறுத்துவோம் என்று சிரிசா சூளுரைத்ததால், பெருந்திரளான மக்கள் ஆதரவுடன் 2015 ஜனவரியில் அவர்கள் பதவிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகின்றன. சிரிசா அந்த தேர்தல் வாக்குறுதிகளை காலில் இட்டு நசுக்கியது. ஜூலை 2015 க்கு பின்னர் இருந்தே, அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளைத் திட்டமிட்டு திணித்து வருகின்றனர். கடந்த மாதம், சிரிசா தலைமையிலான அரசாங்கம், சுமார் 15 பில்லியன் யூரோ கடன் நிலுவைத்தொகைக்குப் பிரதிபலனாக ஒரு சுற்று கூடுதல் சமூக வெட்டுக்கு கையெழுத்திட்டது, இது அடுத்த இரண்டாண்டுகளுக்குக் கிரீஸின் கடன் கடமைப்பாடுகளை அரிதாகவே ஈடுசெய்ய உதவும்.
ஆளும் உயரடுக்கின் இந்த நாசகரமான கட்சி புதிய ஓய்வூதிய வெட்டுக்களை மேற்கொள்வதுடன், சில ஓய்வூதியங்கள் அடுத்த ஆண்டு கூடுதலாக மாதத்திற்கு 314 யூரோ வெட்டுக்களை முகங்கொடுக்கின்ற நிலையில், இது சமூகத்தில் மிகப் பெரும் செல்வந்தர்களுக்கு ஒரு பாரிய வெகுமதியை வரைந்தளித்தது. இதில் வணிகங்களுக்கான 700 மில்லியன் யூரோ வரி வெட்டு தொகுப்பும் உள்ளடங்கும், அதேவேளையில் இலாபங்களுக்கான வரி விகிதம் 29 சதவீதத்தில் இருந்து 26 சதவீதத்திற்குக் குறைக்கப்படும். வரிசெலுத்தும் தனிநபர்களுக்கான அதிகபட்ச வரி, வருமான பிரிவில் செய்யப்பட்ட குறைப்பால் 2020 இல் 877 மில்லியன் யூரோ வரிக்குறைவு ஏற்படும், 2021 மற்றும் 2022 இல் இது 997 மில்லியன் யூரோவாக இருக்கும்.
கருத்துக்கணிப்புகளில் சிரிசா வேகமாக செல்வாக்கிழந்து வருவதற்கு இடையே, என்ன விலை கொடுத்தாவது அதை எவ்வாறு பதவியில் வைத்திருப்பது என்று ஆளும் வட்டாரங்கள் இப்போது விவாதித்து வருகின்றன என்றளவுக்கு, அது செல்வந்தர்களின் கட்டளைகளைச் செயல்படுத்தி உள்ளது.
கிரேக்க நாளிதழ் To Vima கடந்த வெள்ளியன்று புதிய ஜனநாயகத்தின் (ND) ஐரோப்பிய நாடாளுமன்ற அங்கத்தவர் Giorgos Kyrtsos இன் கருத்துக்களைப் பிரசுரித்தது, கிரீஸ் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் செல்வாக்கு கொண்டுள்ள ஐரோப்பிய அதிகாரிகள், இரண்டு மிகப்பெரிய கட்சிகளின் புரிந்துணர்வுக்குப் பிந்தைய கூட்டுறவை ஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்தார். அந்த பத்திரிகை அறிவித்தது, “புரூசெல்ஸில் தனது சக கூட்டாளி மீண்டும் மீண்டும் எழுப்பிய ஒரு கேள்வியை Kyrtsos குறிப்பிட்டார், அதாவது, 'புதிய ஜனநாயகத்திற்கும் சிரிசாவுக்கும் இடையிலான கூட்டுறவு எவ்வாறு இருக்கும்?'”
“கிரேக்க வேலைத்திட்டம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வாக, நமது ஐரோப்பிய பங்காளிகள் ஆய்வு செய்து வரும் வெள்ளோட்டங்களில் ஒன்று தான், ஆளும் கூட்டணி,” என்பதை அவர் தெரிவித்தார்.
கட்டுரை ஆசிரியரின் பரிந்துரை:
Syriza and EU plan decades of austerity measures and privatizations
[28 June 2018]