Print Version|Feedback
Who is to blame for the neo-Nazi rampage in Chemnitz, Germany?
ஜேர்மனியின் கெம்னிட்ஸில் நவ-நாஜி அட்டூழியத்திற்கு யார் பொறுப்பு?
Johannes Stern
30 August 2018
ஞாயிறு மற்றும் திங்களன்று முன்பு காரல்-மார்க்ஸ்-நகரம் (Karl-Marx-Stadt) என்று பெயர் கொண்டிருந்த கிழக்கு ஜேர்மனியின் கெம்னிட்ஸ் என்ற நகரத்தின் வீதிகளில், 7,000க்கும் அதிகமான நவ-நாஜிக்கள் அணிவகுப்பு நடத்தி, வெளிநாட்டினரைத் தாக்கி, தேசியவாத முழக்கங்கள் எழுப்பியதோடு நாஜி வணக்கம் செய்தனர்.
“இனவாத மனோநிலை கொண்டிருந்த பெரும் எண்ணிக்கையிலானோரை நான் பார்த்தேன்” என்று கண்ணால் கண்ட ஒருவர் Deutsche Welle செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். “அது ஒரு வலது-சாரி கும்பல். அவர்கள் நகரின் மையத்தில் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்தனர். குடியேறியவர்களைத் துரத்தினர்... நகரத்தையே கையில் எடுத்துக்கொண்டு விட்டிருந்தனர்”. இது அத்தனையும் நடந்து கொண்டிருந்த சமயத்தில், போலிஸ், பாசிஸ்டுகளது கலகத்தை தடுத்து நிறுத்துவதற்குக் கூட வேண்டாம், அதனைக் கட்டுப்படுத்துவதற்கும் கூட எதுவும் செய்யவில்லை.
மக்கள் இப்போதும் நாஜிசத்திற்கு ஆழ-வேரூன்றிய கடும் வெறுப்பைக் கொண்டிருக்கின்ற ஜேர்மனிக்குள்ளாக இந்த சம்பவங்கள் ஒரு ஆழமான அதிர்ச்சியை உண்டுபண்ணியிருக்கின்றன.
வார இறுதியில் மேலதிக ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு அதிவலதுகள் திட்டமிட்டிருக்கும் நிலையில், சான்சலர் அங்கேலா மேர்க்கெல் தலைமையில் அரசாங்கத்திற்குள் இருக்கும் முன்னணி ஆளுமைகள், நடந்ததற்கான எந்த பொறுப்பில் இருந்தும் தங்களை விடுவித்துக் கொள்கின்ற ஒரு முற்றிலும் கபடவேடமான மற்றும் நேர்மையற்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
“அங்கே இனரீதியான பொறிவேட்டை இருந்தது, அங்கே கலகங்கள் நடந்தன, வீதிகளில் வெறுப்பு நிலவியது என்பதற்கு எங்களிடம் காணொளிக் காட்சிகள் இருக்கின்றன, அதற்கும் எங்களது ஆட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை” என்றார் மேர்கெல்.
சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவரான பிராங்-வால்டர் ஸ்ரைன்மையர் “இந்த அதி வலது-சாரி தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன்” என்று மேலும் சேர்த்துக் கொண்டார்.
சக்ஸோனி மாநிலத்தின் தலைவரும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் ஒரு உறுப்பினருமான மிகையில் கிறிட்ச்மர் மாநில அரசாங்கத்தின் சார்பாக ஒரு செய்தியாளர் சந்திப்பில் பின்வருமாறு கூறினார், “அரசியல் அதி-வலது தீவிரவாதிகளால் கருவியாக்கப்படுவது என்பது வெறுப்பூட்டக் கூடியதும் நாங்கள் நிராகரிப்பதுமாகும்… சுதந்திரமான சக்ஸோனி மாநிலத்தில் இனவாதம் மற்றும் வெளிநாட்டினர் வெறுப்புக்கு எதிரான ஒரு தீர்க்கமான போராட்டத்தை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம்.”
இந்த மனிதர்கள் இப்போது கண்டனம் செய்கின்ற அதே பாசிச சக்திகளை அவர்கள் தான் திட்டமிட்டு கட்டியெழுப்பியிருக்கின்றனர் என்பதை எவரொருவரும் கவனித்திருக்கவில்லை என்றே நினைத்துக் கொள்கிறார்கள்.
சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) மகா கூட்டணி அரசாங்கமானது பாசிச ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) இன் வெளிநாட்டினர் வெறுப்பு அகதிகள்-விரோதக் கொள்கைகளையே முற்றாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. அகதிகளைத் தடுத்து வைப்பதற்கான முகாம்களது ஒரு அமைப்புமுறை நாடெங்கிலும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, பாரிய நாடுதிருப்பியனுப்பல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, அத்துடன் ஊடகங்களும் அத்தனை ஸ்தாபகக் கட்சிகளும் அகதிகளுக்கு எதிராக ஆவேசமாய் வெறுப்பை தூண்டிக் கொண்டிருக்கின்றன.
ஊடகங்களால் “அகதி சான்சலர்” என்று நெடுங்காலமாக கூறப்பட்டு வந்திருக்கின்ற மேர்க்கெல், இப்போது ஒவ்வொரு அரசாங்க அறிக்கையிலும், “2015 போன்ற [ஜேர்மனி ஆயிரக்கணக்கில் அகதிகளை ஏற்றுக் கொண்டதைப் போன்ற] சூழ்நிலை இனி மறுபடியும் நிகழ முடியாது” என்பதையும் “ஜேர்மனியில் நாட்டிற்கு திருப்பியனுப்புகின்ற ஒரு செயல்படுகின்ற கலாச்சாரத்தை”யும் -அதாவது அகதிகளை பாரிய எண்ணிக்கையில் திருப்பியனுப்புவது- வலியுறுத்துகிறார்.
வெறும் 14 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த AfD ஐ ஜேர்மன் நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக அமரவைப்பதற்கு எடுக்கப்பட்ட நனவான முடிவும் மகா கூட்டணி அரசாங்கத்தின் உருவாக்கத்திலேயே இடம்பெற்றிருந்தது.
கெம்னிட்ஸ் சம்பவங்களும் ஜேர்மனியில் உத்தியோகபூர்வ அரசியல் செல்லும் பயணப்பாதையும், ஹிட்லரின் ஆட்சி ஒரு விதிவிலக்கு மட்டுமே என்றும், அது முதலாளித்துவ சமுதாயத்தின் நெருக்கடியின் பின்விளைவல்ல என்றும், அது வைய்மார் குடியரசை ஸ்திரம்குலையச் செய்த ஜனநாயக-விரோதமான “இடது-சாரி தீவிரவாத”த்திற்கு அளிக்கப்பட்ட பதிலிறுப்பு என்றும் வக்காலத்து வாங்கிய வரலாற்றாசிரியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரது கூற்றுகளையும் திட்டவட்டமாக அம்பலப்படுத்துகின்றன.
ஜேர்மனியில் அரசியல்ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட வெகுஜன சோசலிச இயக்கம் இப்போது இல்லை என்ற நிலையிலும், நாஜிசம் மீண்டும் ஒரு அரசியல் பிரசன்னத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறது. அதன் வளர்ச்சியானது பிரதான அரசியல்கட்சிகளின் கொள்கைகளாலும் ஊடகங்களின் ஆதரவுடனும் ஊக்குவிக்கப்பட்டுக் கொண்டும் ஆதரிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறது என்பது மறுக்கமுடியாததாகும்.
அதி வலதின் எழுச்சியும் AfD இன் கொள்கைகள் மகா கூட்டணியாலும் உண்மையில் அத்தனை ஸ்தாபகக் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதும், சித்தாந்தரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் திட்டமிட்டு தயாரிப்பு செய்யப்பட்டிருந்ததாலாகும்.
2013 தொடங்கி கடந்த ஐந்து ஆண்டுகளாக, அதி வலதுகளுக்கு சித்தாந்த அங்கீகரிப்பை கொடுப்பதற்காக வரலாற்றை திருத்துவதற்கும், இந்த வலது-சாரி பிரச்சாரத்தை அம்பலப்படுத்த முனைபவர்கள் மீது, குறிப்பாக சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei (SGP) மீது கொடூரமாகத் தாக்குதல் செய்வதற்குமான ஒரு இடைவிடாத பிரச்சாரம் இருந்து வருகிறது.
நாஜி ஆட்சியை, சோவியத் ஒன்றியமும் போல்ஷிவிசமும் முன்நிறுத்திய அச்சுறுத்தலுக்கான ஒரு நியாயமான பதிலிறுப்பாக சித்தரித்து மூன்றாம் ரைய்கின் வரலாற்று நியாயப்படுத்தலுக்கு அங்கீகரிப்பை உண்டாக்கும் ஒரு முயற்சியில் ஊடகங்கள் ஈடுபட்டு வந்திருக்கின்றன.
பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் வலது-சாரி வரலாற்றாசிரியரான ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி தான் இந்தப் பிரச்சாரத்தின் பிரதான சித்தாந்தத் தலைவராகவும் ஆதாயமடைபவராகவும் இருந்து வந்திருக்கிறார். அவர் ஜேர்மனியின் மாபெரும் கல்வியறிஞராக ஊடகங்களால் பாராட்டப்பட்டிருப்பதோடு விவாத-நிகழ்ச்சிகளின் மற்றும் ஊடகங்களின் ஒரு பிரபலமாகவும் மாற்றப்பட்டிருக்கிறார். “ஹிட்லர் கொடூரமானவர் இல்லை” என்று 2014 இல் Der Spiegel க்கு பார்பெரோவ்ஸ்கி அளித்த ஆத்திரமூட்டும்படியான அறிவிப்பு, கண்டுகொள்ளப்படாது விடப்பட்டிருந்திருக்கிறது இல்லையேல் நியாயப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
அதேசமயத்தில், பார்பெரோவ்ஸ்கியையும் ஜேர்மன் வரலாற்றைத் திருத்துவதற்கும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை அற்பமானதாய் காட்டுவதற்குமான திட்டமிட்ட முயற்சியையும் அம்பலப்படுத்துகின்ற அந்தக் காரணத்திற்காகவே துல்லியமாய் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) ஊடகங்களில் இடைவிடாத ஒரு அவதூறு பிரச்சாரத்திற்கான இலக்காக இருந்து வந்திருக்கிறது.
இந்த வலது-சாரிப் பிரச்சாரத்திற்கு ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் நிர்வாகமும் ஏற்பளித்திருக்கிறது, பார்பெரோவ்ஸ்கியே கூட அகதிகள்-விரோத வாய்வீச்சின் ஒரு முன்னணிக் குரலாக இருந்து வந்திருக்கின்ற நிலையிலும் கூட, இந்த நிர்வாகம் அவரை பாதுகாத்திருப்பதோடு அதி வலதுகளுடனான அவரது தொடர்புகளையும் மூடிமறைத்திருக்கிறது.
2016 மே மாதத்தில், மெய்யியல் துறையிலான ஒரு சர்வதேச விழாவான Phil.Cologne இல், பார்பெரோவ்ஸ்கி, வந்தேறிகளிடம் இருந்தான வன்முறையில் “ஜேர்மனியில் உள்ள ஆண்கள்” கையாலாகாத நிலையில் இருந்தனர், ஏனென்றால் அவர்கள் இனியும் போராட முடியாதவர்களாய் ஆகியிருந்தனர் என்று திட்டவட்டம் செய்தார். கொலோனில் 2016 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடந்ததாக சொல்லப்படும் தாக்குதல்களில் ஜேர்மன் ஆண்கள் தமது பெண்களைப் பாதுகாக்க முடியாததில் இது கண்கொண்டு பார்க்கக் கூடியதாக இருந்ததாக அப்போது அவர் தெரிவித்தார்.
“வன்முறையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஜேர்மனியில் இருக்கும் ஆண்களுக்கு இனியும் எந்த சிந்தனையும் இல்லை என்பதைப் பார்க்கிறோம்” என்று பார்பெரோவ்ஸ்கி வாதிட்டார். அவரது வசனங்கள் அமெரிக்காவின் Breitbart News மற்றும் பிற அதி வலது செய்தி ஊடகங்களில் பிரதானமாக மேற்கோளிடப்பட்டு, விளம்பரமளிக்கப்பட்டன.
“வன்முறை” மீதான பார்பெரோவ்ஸ்கியின் கல்வியக பிரதிபலிப்புகள் கெம்னிட்ஸிலான நாஜிக்களது அட்டூழியங்கள் மூலமாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இரகசிய உளவுச்சேவை என்று அழைக்கப்படும்அரசியலமைப்பு பாதுகாப்புக்கான ஜேர்மனியின் மத்திய அலுவலகத்தின் (BfV), , சதி அமைப்புகளது உத்தியோகபூர்வ பட்டியலில் SGP ஐ வைத்திருப்பதானது அதி-வலதுகளை அது அம்பலப்படுத்துவதை ஒடுக்குவதற்கான முயற்சிகளது நேரடியான விளைவு ஆகும். உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீஹோஃபரின் (CSU) முன்னுரையுடன் ஜூலையில் வெளியிடப்பட்ட இப்போதைய BfV அறிக்கையானது, SGP, “தேசியவாதம், ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவவாத”த்திற்கு எதிராக போராடுகிறது அத்துடன் வலது-சாரி தீவிரவாதத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறது என்ற காரணத்தால், அதனையும் “கண்காணிப்பதற்குரிய இலக்கு”களில் ஒன்றாக சேர்த்திருக்கிறது.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், கூட்டணி அரசாங்கம் மற்றும் BfV இன் -இது AfDயுடன் நெருக்கமான தொடர்பை பராமரிக்கிறது- கண்ணோட்டத்தின் படி, நவ-நாஜிக்கள் அல்ல மாறாக அவர்களது எதிரிகளாய் இருக்கும் மக்களின் பரந்த பெரும்பான்மையினர் தான் உண்மையான பிரச்சினை.
ஞாயிறும் திங்களும் வலது-சாரி தீவிரவாதக் கும்பல் போலிசினால் தொந்தரவு செய்யப்படாமல் கெம்னிட்ஸ் முழுமையும் அணிவகுப்பு நடத்த முடிந்ததென்பது எந்தவிதத்திலும் தற்செயலானது அல்ல. சக்ஸோனியில், வலது-சாரி தீவிரவாதிகள், போலிஸ் மற்றும் அரசாங்கத்திற்கு இடையிலான நெருக்கமான தொடர்புகள் எண்ணிமாளாதவை. அரசில் உயர்மட்ட ஆதரவு இருக்கிறது என்ற நம்பிக்கையில், நாஜிக்கள் தமது அரசியல் ஆத்திரமூட்டல்களை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
1933-45க்கு இடையில் நாஜிக்கள் இழைத்த அத்தனை குற்றங்களுக்குப் பின்னரும், ஜேர்மன் ஆளும் உயரடுக்கானது எப்போதுமான பிற்போக்குத்தனத்துடனும், ஜேர்மன் ஜனநாயகமானது எப்போதுமான நொருங்குநிலையிலும் தான் இருந்து கொண்டிருக்கின்றன என்பதையே ஜேர்மனியிலான ஆபத்தான அபிவிருத்திகள் காட்டுகின்றன. வரலாற்றின்பாதையில் அதன் இயல்பான சாய்வு என்பது எப்போதும் அதிவலதுகளின் பக்கமே இருந்து வந்திருக்கிறது, மக்களின் அதிருப்தியை அது உணர்கின்ற போதும் அத்துடன் தனது ஏகாதிபத்திய மூலோபாய அபிலாசைகளுக்கு புத்துயிர் கொடுப்பதற்கான தேவையை காண்கிற போதும் இச்சாய்வு மென்மேலும் அதிகரிக்கிறது.
ஆயினும், ஜேர்மனியில் மட்டுமல்லாமல், ஐரோப்பா முழுமையிலும் மற்றும் உலகமெங்கிலும் பாசிசம் மறுபடியும் அணிவகுத்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையானது, இந்த உலகளாவிய நிகழ்ச்சிபோக்கு, ஒரு தற்செயலாக இருப்பதற்கு அப்பாற்பட்டு, முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படையான போக்கின் வெளிப்பாடு என்பதையே தெளிவாக்குகிறது.
ஒரு உண்மையான புரட்சிகர சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதன் வழியில்லாமல் நாஜிசமும் ஏகாதிபத்திய இராணுவவாதமும் மறுஉயிர் பெறுவதை தோற்கடிப்பதற்கு வேறு எந்த வழியும் கிடையாது. முழுமையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவாலும் அதன் பிரிவுகளாலும் மட்டுமே பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்ற மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லுக்செம்பேர்க், லீப்னெக்ட், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் மகத்தான பாரம்பரியங்களுக்கு புத்துயிரூட்டுவதற்கான சமயம் வந்திருக்கிறது. SGP அதன் பொறுப்புகளில் கரம்கோர்ப்பதற்கும் முதலாளித்துவம், பாசிசம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தைக் கையிலெடுப்பதற்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது.