Print Version|Feedback
Indian government threatens to end citizenship for millions of Assam residents
மில்லியன் கணக்கான அசாம் குடியிருப்பாளர்களின் குடியுரிமைக்கு முடிவு கட்டப் போவதாக இந்திய அரசாங்கம் அச்சுறுத்தல்
By Rohantha De Silva
9 August 2018
இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி (BJP) தலைமையிலான அரசாங்கம், வடகிழக்கு மாநிலமான அசாமில் மில்லியன் கணக்கான குடியிருப்பாளர்களின் குடியுரிமைகளை அகற்றப் போவதாக அச்சுறுத்தி வருகிறது. பிஜேபி இன் வகுப்புவாத திட்டத்திற்கு ஒத்ததாகவே இந்த ஜனநாயக விரோத தாக்குதலும் உள்ளது.
அசாம் உடன்படிக்கை விதிகளின் கீழ் தேவைப்படும் ஆவணங்களை குடிமக்கள் தேசிய பதிவு (National Register of Citizens-NRC) அலுவலகத்திற்கு அசாமில் உள்ள 32 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சமீபத்தில் சமர்ப்பித்துள்ளனர். ஜூலை 30 அன்று NRC புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டபோது, உத்தியோகபூர்வ பட்டியலில் இருந்து 4 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் பதிவுகள் அகற்றப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை இந்தியாவின் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையருமான (India’s Registrar General and Census Commissioner) ஸ்ரீ சைலேஷ் மூலமாக உறுதி செய்யப்பட்டது.
33 வருடங்களுக்கு முன்னர் 1985 இல் இந்தியப் பிரதமரும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ராஜீவ் காந்தியால் அசாம் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இது, அனைத்து அசாம் மாணவர் ஒன்றியம் (All Assam Students Union-AASU) மற்றும் அனைத்து அசாம் ஞான சங்க்ராம் பரிஷத் (All Assam Gana Sangram Parishad- AAGSP) ஆகிய புலம்பெயர்ந்தோர் விரோத அமைப்புகள் உடனான நீண்ட பேச்சுவார்த்தைகளை பின்பற்றியது.
இந்திய நாட்டுடன் 4,096 கிமீ அளவு எல்லையை பகிர்ந்து கொள்ளும் பங்களாதேஷில் இருந்து “சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்கள்” என்று அழைக்கப்படுபவர்களுக்கு எதிராக அசாம் கிளர்ச்சி என்றறியப்பட்ட ஆறு ஆண்டுகால வன்முறைமிக்க போராட்டங்களை AASU வும் AAGSP யும் நடத்தியுள்ளன. அசாம் குடியிருப்பாளர்களிடமிருந்து “வளங்களைக் கொள்ளையடித்தனர்” என்றும் “வேலைகளைப் பறித்துக்கொண்டனர்” என்றும் புலம்பெயர்ந்தவர்கள் குற்றம்சாட்டப்பட்டனர். 1,800 க்கும் அதிகமானவர்கள், முக்கியமாக புலம்பெயர்ந்த ஏழை முஸ்லீம் மக்கள் பேரினவாதக் கும்பல்களால் வன்முறைமிக்க இனவாத தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.
அசாம் உடன்படிக்கையைப் பொறுத்தவரை, மார்ச் 24, 1971 க்கு –அண்டை நாடான பங்களாதேஷூக்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்ட ஆண்டு- முன்னர் அவர்கள் அல்லது அவர்களது குடும்பங்கள் இந்தியாவில் வாழ்ந்துள்ளனர் என்பதை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் நபர்கள் மட்டுமே அசாம் குடியிருப்பாளர்களாக அங்கீகரிக்கப்படுகிறார்கள். அதாவது, குறிப்பிட்ட அந்த தேதிக்குப் பின்னர் மாநிலத்திற்குள் நுழைகின்ற எவரும் ஒரு அன்னியராகவே வகைப்படுத்தப்படுவார்.
கனிமங்கள், பெட்ரோலியம் மற்றும் காடுகள் போன்ற இயற்கை வளங்கள் நிரம்பிய மாநிலமாக அசாம் உள்ள போதிலும், இந்திய மற்றும் உள்ளூர் செல்வந்தத் தட்டினர் நாட்டின் செல்வ வளத்தை பெருமளவில் தன்னகப்படுத்திக் கொண்டுள்ள நிலையில், வறுமையும் வேலைவாய்ப்பின்மையும் அங்கு பரவலாக காணப்படுகிறது. இந்த நிலைமைகளின் கீழ், பிஜேபி யும் இதர வகுப்புவாத அமைப்புகளும், உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் புலம்பெயர் விரோத தாக்குதல்களைத் தூண்டிவிட்டுள்ளன. 100,000 க்கும் அதிகமான அரசு பணியாளர்கள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க அரசு வளங்கள் வாக்குரிமை பறிப்பு திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
NRC பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில் பல்லாயிரக்கணக்கான கிராமத்தினர் தங்களது ஆவணங்களைச் சரிபார்க்க அரசாங்க மையங்கள் மற்றும் இணைய சாவடிகளை நாடி ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டதால் பரந்தளவிலான கோபத்திலும் வருத்தத்திலும் அசாம் மூழ்கியது.
NRC புள்ளிவிபரங்கள் அரசாங்க வலைத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த போதிலும், புறநகர் பகுதியைச் சார்ந்த பலரும் அவர்களது குடியுரிமை நிலையை தீர்மானிக்க இணைய வசதியை அணுக முடியாத நிலையில், அரசாங்க அலுவலகங்களையும் சாவடிகளையும் நாட வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில், அரசாங்க விரோத ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தில், இந்த வசதிகளைப் பாதுகாக்க பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
சில பரம்பரை இந்துக்கள் மற்றும் பிற நீண்டகால அசாம் குடியிருப்பாளர்களின் விபரங்களும் NRC பட்டியலில் இருந்து விலக்கப்பட்டிருப்பதை அதிகாரத்துவ குளறுபடி காட்டினாலும், விலக்கப்பட்டிருந்தவர்களில் முக்கியமாக முஸ்லீம்கள் தான் அதிகமாக உள்ளனர். பதிவு செயல்முறை பாரபட்சமற்ற முறையில் நடந்ததென இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறிய போதிலும், பிஜேபி, அசாம் மாநிலம் மற்றும் அது ஆட்சி செய்யும் மாநிலங்கள் என்றல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவிலும் இந்து பேரினவாதத்தைத் தூண்டி வருகிறது.
2014 பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிஜேபி இன் பிரதமர் பதவி வேட்பாளரான நரேந்திர மோடி, இந்தியாவில் இருந்து “பங்களாதேஷ் வாசிகளை” வெளியேற்றுவேன் என்று வாக்குறுதியளித்தார். “நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளலாம்,” என்று கூட ஏப்ரல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார். மேலும், “மே 16 க்கு பின்னர் (தேர்தல் தினம்), இந்த பங்களாதேசத்தினர் தங்களது பெட்டிகளைக் கட்டித் தயாராக இருப்பது நலம்” என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
அதிகாரத்திற்கு வந்த பின்னர், பிஜேபி, நாட்டின் புலம்பெயர்வு விரோத உள்கட்டமைப்புக்கு ஊக்கமளித்ததுடன், பங்களாதேஷில் இருந்து தஞ்சம்புகும் இந்து புலம்பெயர்வோர்களுக்கு தானாகவே அனுமதியளிக்கும் குடியுரிமை (திருத்த) மசோதா, 2016 ஐ அறிமுகப்படுத்தியது. இந்திய பாராளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்படாமல் இன்னும் நிலுவையில் உள்ளது.
அசாமில் நிலவும் பதட்டமான அரசியல் சூழலை அமைதிப்படுத்தும் முயற்சியாக, ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 28 தேதிகளுக்கு இடையில் உரிய ஆவணங்களுடன் பெயர் விபரங்களை மீண்டும் சமர்ப்பிக்கலாம் அல்லது வெளிநாட்டவர்கள் தீர்ப்பாயத்திடம் முறையீடு செய்யலாம் என்று இந்திய அரசாங்கம் அறிவித்தது.
இது குறித்து கவலைப்படவோ அல்லது பயப்படவோ தேவையில்லை என்றும், “பெயர் விடுபட்டவர்கள் அவர்களது ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க இயலும்” என்றும் இந்திய உள்துறை அமைச்சர் சிங் ஊடகத்தில் தெரிவித்தார். மேலும் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையருமான சைலேஷ், “தடுப்பு முகாம்களுக்கோ அல்லது வெளிநாட்டவர் தீர்ப்பாயத்திற்கோ எவரையும் அழைத்துச் செல்வது பற்றி கேள்விக்கே இடமில்லை” என்று தெரிவித்தார்.
அத்தகைய மீள் உறுதிமொழிகள் யாவையும் பயனற்றவையே. ஏனென்றால், என்ன நடக்கும் என்பது பற்றியோ, மேலும் quint.com இன் படி, ஏற்கனவே 2,000 க்கும் அதிகமானவர்கள் ஆறு மாநில அளவிலான தடுப்பு முகாம்களில் தங்கியிருக்கின்றனர் என்பது பற்றியோ அசாம் குடியிருப்பாளர்களுக்கு எதுவும் தெரியாது.
NRC பட்டியிலில் இருந்து விலக்கப்பட்டவர்கள் இந்தியாவில் இருந்து நாடுகடத்தப்படுவார்களா? இந்தியாவில் அவர்களுக்கு ஏதேனும் அரசியல் உரிமை உள்ளதா? தற்போது அவர்கள் வாழும் இடங்களில் தொடர்ந்து தங்கியிருக்க முடியுமா அல்லது புலம்பெயர்வு சித்திரவதை முகாம்களுக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டு சிறைவைக்கப்படுவார்களா? என்பது போன்ற கேள்விகளால் அசாமில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
தர்ராங் மாவாட்டத்தைச் சேர்ந்த 45 வயதான நூர் பானு என்பவர், “குடியுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள எங்களது பெயர் விபரங்களை அறிய மீண்டும் நாங்கள் விண்ணப்பிக்கலாம் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, எங்களது எதிர்காலத்தைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்” எனத் தெரிவித்தார். ஏனென்றால், அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேரின் பெயர்களும் அந்த பட்டியலில் விடுபட்டிருந்தன.
அசாம் முஸ்லீம் சிறுபான்மையினரின் அச்சங்களை சுரண்டிக் கொள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி முயன்று கொண்டிருக்கிறது. பிஜேபி “முஸ்லீம்களை தனிமைப்படுத்த முயற்சித்து வந்தது” என்றும், “நாங்கள் அதை எதிர்த்து போராடி வெளியேற்றவிருக்கிறோம்” என்றும் அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா சிடுமூஞ்சித்தனமாக அறிவித்தார்.
உண்மையில், “சட்டவிரோதமாக” புலம்பெயர்ந்தவர்கள் என்றழைக்கப்படுபவர்களின் வாக்களிக்கும் உரிமையை பறிப்பதை ஒப்புக்கொண்ட பிற்போக்குத்தனமான 1985 அசாம் உடன்படிக்கை என்பது ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் அரசாங்கத்தின் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
மில்லியன் கணக்கான அசாம் குடியிருப்பாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு அடிப்படைத் தாக்குதலை ஏற்படுத்திய அசாம் உடன்படிக்கையும் மற்றும் NRC நடைமுறைகளும், இனவாத வழியில் இந்தியத் துணைக் கண்டத்தை பிரித்த 1947 பிரிவினையின் முற்றிலும் பிற்போக்குத்தனமான குணாம்சத்தை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தப் பிரிவினை, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகளின் தீவிர ஆதரவுடனும் மற்றும் இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் ஒப்புதலுடனும் நாட்டை விட்டு விலகிச் செல்லவிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களால் அபிவிருத்தி செய்யப்பட்டது.
இரு நாடுகளிலும் தொடர்ந்து நிலைத்திருக்கும் சமூக மற்றும் அரசியல் குற்றங்களுக்கான அரசியல் பொறுப்புக்களை இந்த அனைத்து அமைப்புகளும் கொண்டிருக்கின்றன. முதலாளித்துவ அமைப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் மற்றும் தெற்காசியாவின் ஐக்கிய சோசலிச அரசுகளை ஸ்தாபிப்பதற்கும் ஒரு புரட்சிகர சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டுகின்ற தொழிலாள வர்க்கத்தின் மூலமாக மட்டுமே இந்தியாவில் வகுப்புவாதப் படுகொலைகளின் வேரில் புதைந்து கிடக்கும் ஜனநாயகப் புரட்சியின் தீர்க்கப்படாத பணிகளுக்குத் தீர்வு காண முடியும்.