Print Version|Feedback
Israel’s Nation-State Law and the dead end of Zionism
இஸ்ரேலின் தேசிய-அரசு சட்டமும் சியோனிசத்தின் முட்டுச்சந்தும்
Barry Grey
21 July 2018
அரசின் சட்ட அடித்தளமாக யூத மேலாதிக்கத்தை புனிதப்படுத்தும் “தேசிய-அரசு சட்டம்” வியாழனன்று இஸ்ரேல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமையானது இஸ்ரேலை உலுக்கிக் கொண்டிருக்கும் நெருக்கடியில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் மட்டுமே “ஒரே ஜனநாயகம்” என்பதாக கூறப்பட்டு வந்த ஏற்கனவே மதிப்பிழந்திருந்த கூற்றை இது முடிவுக்குக் கொண்டுவருகிறது. இந்த வெளிப்படையான இனவாத “அடிப்படைச் சட்டம்” அமலாக்கப்படுவதன் மூலம், அரசின் சட்ட அடித்தளமானது ஒரு ஒட்டுமொத்த மக்களையும் -பாலஸ்தீனியர்கள்- கொடூரமாக ஒடுக்குவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு இராணுவத்துருப்புகளது அரசின் யதார்த்தத்துடன் ஒரேவரிசையில் நிற்கும்படி கொண்டுவரப்படுகிறது.
“இஸ்ரேல் அரசில் தேசிய சுய-நிர்ணயத்தை பிரயோகிக்கின்ற உரிமை யூத மக்களுக்கு மட்டுமே பிரத்யேகமானதாகும்” என்று அந்த சட்டம் அறிவிக்கிறது. இஸ்ரேலின் “முழுமையான மற்றும் ஐக்கியப்பட்ட” தலைநகராக இது ஜெருசலத்தை பிரகடனம் செய்கிறது.
அரசு-ஆதரவுடன் பிரத்யேக யூத சமூகங்களில் இருந்து அரேபியர்கள் பிரிக்கப்படுவதற்கும் ஒதுக்கப்படுவதற்கும் இது ஒப்புதல் அளித்து அறிவிக்கிறது, “யூதக் குடியேற்ற அபிவிருத்தியை ஒரு தேசிய விழுமியமாக அரசு காண்கிறது ஆகவே அதன் ஸ்தாபகத்திற்கும் வலுப்படலுக்கும் ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் அது செயல்படும்.” இது இனச் சுத்திகரிப்பின் ஒரு வெடிப்புக்கும் இஸ்ரேலின் எல்லைகளுக்குள்ளாகவே பாலஸ்தீனியர்களை உரிமைகள் இழக்கச் செய்வதற்கும் பச்சைக் கொடி காட்டுவதாக இருக்கிறது.
மக்கள்தொகையில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் இஸ்ரேலின் யூதர்களற்ற குடிமக்களைப் பற்றியோ, அல்லது ஜனநாயகம் மற்றும் சமத்துவம் பற்றியோ இந்தச் சட்டம் எதுவும் கூறவில்லை.
யூத மக்களின் ஐக்கியம் என்ற பேரில், அரபிக்கு உத்தியோகபூர்வ அரசு மொழிக்கான அந்தஸ்தை இது அகற்றுகிறது, ஹூப்ரூவுக்கு மட்டுமே இந்த அந்தஸ்தை அளிக்கிறது. “ஹதிக்வா” (Hatikva) ஐ தேசிய கீதமாக அறிவித்ததன் வாயிலாக உட்பட, யூத அடையாளங்களுக்கு இது உத்தியோகபூர்வ மற்றும் தனித்துவ அந்தஸ்தை அளிக்கிறது.
ஹீப்ரூ மொழியையும் “ஹதிக்வா”வையும் தூக்கிப்பிடிப்பதன் மூலமாக யூத தேசிய அடையாளத்தை திட்டவட்டம் செய்வதற்கான முயற்சியானது ஒட்டுமொத்த சியோனிச திட்டத்தின் பலவந்த மற்றும் செயற்கைத் தன்மையை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பொஹீமியாவைச் சேர்ந்த இசைத் தொகுப்பாளரான பெட்ரிச் ஸ்மெட்னாவின் ஒரு இத்தாலிய நாடோடிப் பாடல் மறுவேலை செய்யப்பட்டதில் இருந்தான விளைபொருளே ஹதிக்வா ஆகும். அதேபோல, யூதர்களின் தேசிய மொழியாக சொல்லப்படுகின்ற ஹீப்ரு, செத்துப்போன ஒரு அர்ச்சனை மொழியை யிடிஷ் (Yiddish) மொழி வழக்கு கொண்ட ஒரு மக்களுக்கு மறுஉயிர்ப்பு செய்வதைக் குறிக்கிறது.
இந்த புதிய சட்டத்திற்கு இஸ்ரேலுக்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி யூதர்கள் மத்தியில் பரவலான எதிர்ப்பு இருக்கிறது. ஆயினும் எதிர்க் கட்சியான தொழிற் கட்சியின் கோழைத்தனம் மற்றும் உடந்தைத்தனத்தின் காரணத்தால் இந்த எதிர்ப்பு சட்டமன்றத்தில் எந்த வெளிப்பாட்டையும் காண இயலவில்லை.
தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளது பரந்த பிரிவுகளது அதிர்ச்சி கலந்த கோபத்தை பிரதிபலித்து பிராட்லி பேர்ஸ்டன் Haaretz இல் எழுதினார்: “சுற்றிப் பாருங்கள். நாடு அதேபோல் தென்படுகிறது. ஆனால் அதேபோல் உணரவில்லை. அதற்கு நெருக்கமாகக் கூட இல்லை.”
அவர் தொடர்ந்து எழுதினார், இந்த வாரம் “இந்த நாடு, நாமறிந்த விதத்தில் இருந்து, கிட்டத்தட்ட முடிந்து போனதைக் குறிக்கும் வாரமாகும்.... சமத்துவத்தைப் பற்றிய எந்த குறிப்பும் மறைந்து போனது. அதனிடத்தில், அரபி மொழிக்கு ஆகவே இஸ்ரேலின் அரபிக் குடிமக்களுக்கான அந்தஸ்தை கீழிறக்குவது உள்ளிட, உண்மையான இனவாத ஒடுக்குமுறையை நோக்கி இஸ்ரேலை செலுத்துகின்ற உத்தரவுகள் அமர்கின்றன.”
இந்த சட்டத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் டெல் அவிவ் வீதிகளில் பேரணி ஊர்வலங்கள் நடத்தினர். 14 அமெரிக்க யூத அமைப்புகளது ஒரு குழு இந்த மசோதா குறித்த ஆழ்ந்த கவலைகளை வெளியிட்டது, “அனைவருக்குமான உரிமைகளைப் பாதுகாப்பது என்ற ஒரு நவீன ஜனநாயகத்தின் வரையறுக்கும் குணாம்சத்தை” இது இல்லாது செய்துவிடும் என்று அது தெரிவித்தது.
கிட்டத்தட்ட மரணப்படுக்கையில் இருக்கும் இந்த நெருக்கடிக்கான “இரண்டு-அரசு” தீர்வின் —இது பாலஸ்தீனியர்களை வறுமைப்பட்டதும் இராணுவரீதியாக சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுமான பந்துஸ்தான் போன்றதொரு குட்டி-அரசான நிலைக்கு சபிப்பதாக இருக்கும்— மீது இந்த சட்டம் ஏற்படுத்தக் கூடிய பாதிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் “கவலை” வெளியிட்டது. திட்டவட்டமான கண்டனத்திற்கு அல்லது பதிலடியான எந்தவொரு நடவடிக்கையையும் சூசகம் செய்வதற்கு முன்பாக ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்திக் கொண்டது.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் வலைத் தளத்தில் எந்த பதிலிறுப்பையும் காண்பது சாத்தியமில்லாதிருந்தது. ஆயினும், ட்ரம்ப் நிர்வாகமானது, இரண்டு பிரதான கட்சிகளின் ஆதரவுடன், மே மாதத்தில் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றியதன் மூலமும் காஸா-இஸ்ரேல் எல்லையில் நிராயுதபாணியான ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதையும் காயப்படுத்தப்பட்டதையும் ஆதரித்ததன் மூலமும், இந்த சட்டத்திற்கு பாதை அமைத்துக் கொடுத்திருந்தது.
அமெரிக்க பெருநிறுவன ஊடகங்கள், இந்த செய்தியை பெரும்பாலான செய்தித்தாள்களின் கடைசிப் பக்கங்களுக்கு ஒதுக்கி விட்டதன் மூலமாகவும், தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சிகளில் அரிதாகவே இந்த செய்தியைக் குறித்து பேசியதன் மூலமும் தமது ஓசையற்ற ஆதரவை சமிக்கை செய்தன.
நியூ யோர்க் டைம்ஸ் அதன் வெள்ளிக்கிழமை அச்சுப்பதிப்பில் வெளியிட்டிருந்த ஒரு முன்பக்க கட்டுரை புதிய சட்டத்தை மிகவும் சாதகமான வெளிச்சத்தில் காட்டுவதற்கு முனைந்தது, “யூதர்களுக்கான உரிமைகளை இஸ்ரேல் புனிதப்படுத்துக்கிறது” என்று அது தனது தலைப்பை தேர்ந்தெடுத்திருந்தது. ஓர்வெல்லிய வகையான இத்தகைய செய்தியளிப்பைத் தொடர்ந்து, இஸ்ரேலிலும் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களிலும் அரபு மக்கள்தொகை பெருகுவதால் —இந்த எண்ணிக்கை விரைவில் யூத மக்கள்தொகையை விஞ்சி விடுமாம்— பிராந்தியத்தின் தன்மை மாறுவதானது இஸ்ரேலின் ஆளும் வர்க்கத்தின் முன்வைத்திருக்கின்ற சங்கடமான நிலை குறித்த ஒரு அனுதாபகரமான விவரிப்பு பின்தொடர்ந்தது.டைம்ஸ் எழுதியது: “புதிய சட்டத்தை முன்மொழிபவர்கள் தொடரும் பிராந்தியத்தன்மை அச்சுறுத்தல்களை மேற்கோளிடுகின்றனர். இஸ்ரேலின் அரபு சிறுபான்மையில் சிலர் கூட்டு உரிமைகளுக்கு கோரிக்கை வைப்பதோடு, ஏற்கனவே அவர்கள் வடக்கு கலிலி மாவட்டத்தில் ஒரு பெரும்பான்மையை உருவாக்குகின்றனர்.”
இஸ்ரேலிய தேசிய-அரசு சட்டமானது, “இனம் மற்றும் இரத்தத்தின்” அடிப்படையிலான தேசியம் என்ற கட்டுக்கதைகளை ஊக்குவிக்கின்ற தீவிர தேசியவாத அரசாங்கங்கள் மற்றும் கட்சிகளது எழுச்சியின் பகுதியாகவும், அவற்றை இன்னும் ஊக்கப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. இஸ்ரேலின் நெத்தனியாகு ஆட்சியானது, கிழக்கு ஐரோப்பாவிலும் அதனைத் தாண்டியும் இருக்கின்ற இத்தகைய சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.
இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்ட அதேநாளில், ஹங்கேரியின் பிரதமரான விக்டர் ஓர்பன் நெத்தனியாகுவுடன் நட்புரீதியிலான ஒரு சந்திப்புக்காக வந்திருந்தார், ஹங்கேரியில் யூதர்களை அழித்தொழிப்பதில் நாஜிக்களுடன் ஒத்துழைத்த இரண்டாம் உலகப் போர் சர்வாதிகாரி அட்மிரல் மிலோஸ் ஹோர்த்தியை அவர் ஏற்றுக்கொண்டதற்கு எதிரான வெகுஜனப் போராட்டங்களுக்கு அச்சமயத்தில் அவர் முகம்கொடுக்க நேரிட்டது.
இத்தகைய அரசியலுக்கு இஸ்ரேல் பகிரங்கமாக திரும்புவதானது இஸ்ரேலுக்கு வெளியில் யூதர்களது ஆபத்துக்கு இலக்காகக் கூடிய நிலையை மேலும் அதிகமாக்கும். பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் பயன்படுத்துகின்ற அதே தர்க்கம், ”வந்தேறிகள்” என்றும் “உள்ளூர் பாசம் அற்றவர்கள் (cosmopolitans)” என்றும் பாசிஸ்டுகளாலும் தீவிர தேசியவாதிகளாலும் பாரம்பரியமாக பொறிவேட்டைக்கு இலக்காக்கப்பட்டு வந்திருக்கும் யூதர்களுக்கு எதிராக திருப்பப்படுவதில் இருந்து எது தடுக்கப் போகிறது?
உள்நாட்டில், பாலஸ்தீனியர்கள் மீதான தீவிரப்பட்ட தாக்குதலுடன் அனைத்து தொழிலாளர்களது -யூதர்கள், பாலஸ்தீனர்கள் பேதமின்றி- சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதிகரித்த தாக்குதலுடன் கைகோர்க்கவிருக்கிறது. நெத்தனியாகு ஏற்கனவே எதிர்ப்பான ஊடகங்களின் மீது ஒடுக்குமுறையை நடத்திக் கொண்டிருப்பதோடு அரசியல் எதிர்ப்பை குற்றமாக்க முனைந்து கொண்டிருக்கிறார்.
யூத ஐக்கியம் குறித்த பேச்சுகள் அத்தனையும் இருந்தாலும் இஸ்ரேல் வர்க்கக் கோடுகளின் பாதையிலேயே கடுமையாகப் பிளவுபட்டிருக்கிறது. தேசிய-அரசு சட்டம் நிறைவேற்றப்பட்டதிலும், அத்துடன் சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு ஈரானுடன் ஒரு இராணுவ மோதலுக்கு இஸ்ரேல் நெருங்குவதிலும், நாட்டிற்குள்ளாக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு பெருகியிருப்பது ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. பொருளாதார ரீதியாக மிகவும் சமத்துவமின்மை கொண்ட நாடுகளில் ஒன்றாக இஸ்ரேல் இருக்கிறது, வறுமை விகிதம் 21 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறது, இது வளர்ந்த நாடுகளில் மிக அதிகமான எண்ணிக்கையாகும். சமீப மாதங்கள் தொழிலாள வர்க்க ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களில் ஒரு அதிகரிப்பைக் கண்டிருக்கிறது, ஆட்சியானது இந்த இயக்கத்தை மட்டுப்படுத்துவதற்கும் அதனை அரபு-விரோத இனவாதம் மற்றும் யூதப் பேரினவாதத்தின் ஒரு கொள்கையின் பின்னால் திருப்பிவிடுவதற்கும் முனைந்து கொண்டிருக்கிறது.
இனவாதக் கொள்கைகளை நோக்கிய வெளிப்படையான திருப்பமானது இரண்டு முக்கிய காரணிகளின் விளைபொருளாய் இருக்கிறது: சியோனிச அரசின் கூர்மையான நெருக்கடி மற்றும் சியோனிச தர்க்கமேயும் கூட.
சியோனிசம் என்பது வரலாற்றுவழியாக யூத மக்களின் மிகச்சிறந்த கூறுகளாக குணாம்சப்படுத்தப்பட்டு வந்திருக்கும் முற்போக்கு மற்றும் அறிவொளிக் கருத்தாக்கங்கள் மீதான ஒரு கொடூரமான கேலிக்கூத்தாகும். துன்புறுத்தல் மற்றும் பலவந்தமான தனிமைப்படுத்தலுக்கு இலக்கான காரணத்தால், யூதர்கள் பொதுவாக கிறிஸ்தவர்களுக்கு நிகரான முழுமையான குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்காய் பாடுபட்டவர்கள். ஐரோப்பியக் கலாச்சாரத்தின் மாபெரும் சாதனைகளாலும் சகலருக்குமான ஜனநாயகம் என்பதை அது ஊக்குவித்ததிலும் ஆதர்சம் பெற்றவர்கள். இதுவே சோசலிச இயக்கத்தின் விகிதாச்சாரமீறிய பகுதியாக ஆவதற்கு அவர்களை செலுத்தியது.
ஐஸாக் டொச்ஷர் அவரின் “யூதமயப்படாத யூதனின் செய்தி” இல் எழுதினார்: “யூதத்தை கடந்து செல்கின்ற யூத மரபுத்தன்மை யூத பாரம்பரியத்துக்கு உரியதாகும்... அவர்கள் அனைவரும் யூத எல்லைகளைக் கடந்து சென்றார்கள். அவர்கள் அனைவரும் -ஸ்பினோசா, ஹேய்ன், மார்க்ஸ், ரோசா லுக்செம்பேர்க், ட்ரொட்ஸ்கி மற்றும் ஃபிராய்ட்- யூதத்தை மிகவும் குறுகியதாக, மிகவும் பழையதாக, மிகவும் குறுக்குவதாகக் கண்டனர். இலட்சியங்களுக்கும் அதனைத் தாண்டி பூர்த்தி செய்வதற்கும் அவர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர், நவீன சிந்தனையில் மகத்தானவையாக இருக்கின்ற பெரும்பாலானவற்றின் மொத்தத்தையும் மற்றும் சாரத்தையும், கடந்த மூன்று நூற்றாண்டுகளில் மெய்யியல், சமூகவியல், பொருளாதாரம் மற்றும் அரசியலில் நடந்திருக்கக் கூடிய மிக ஆழமான எழுச்சிகளது மொத்தத்தையும் மற்றும் சாரத்தையும் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்....
“அவர்கள் விளிம்புகளில் அல்லது தத்தமது தேசங்களின் மூலைகள் முடுக்குகளில் வாழ்ந்தனர். அவர்கள் சமூகத்தில் எல்லாமுமாய் இருந்தனர் ஆயினும் அதில் இல்லாதிருந்தனர். இதுதான் அவர்களை தமது சமூகங்களைக் காட்டிலும், தமது தேசங்களைக் காட்டிலும், தமது காலங்கள் மற்றும் தலைமுறைகளைக் காட்டிலும் உயர்ந்து எழுவதற்கும், பரந்த புதிய தொடு எல்லைகளுக்குள்ளும் வருங்காலத்திற்குள் வெகுதூரத்திற்கும் எண்ணரீதியான வீச்சு உண்டாக்குவதற்கும் அவர்களுக்கு வழிவகை தந்தது.”
பூர்வகுடி அரபு மக்களது உரிமைகளை வன்முறையில் பறிப்பதன் மூலமாக ஒரு யூத அரசை ஸ்தாபிப்பதை நியாயப்படுத்துவதற்காக இனரீதி, மதரீதி மற்றும் மொழிரீதி மேலாதிக்க பிரத்யேகவாத கருத்தாங்களின் அடிப்படையிலான பத்தொன்பதாம் நூற்றாண்டின் இன-தேசியவாத சித்தாந்தத்தை கைவசப்படுத்திக் கொண்டதன் விளைமுடிவாக இஸ்ரேல் இருக்கிறது. யூதப் படுகொலையின் பயங்கரங்களே இன்னொரு மக்களை ஒடுக்குவதற்கான நியாயமாக ஆனதென்பது இஸ்ரேலின் மூலத் தோற்றுவாயில் இருக்கின்ற துன்பியலான நகைமுரணாய் உள்ளது.
தேசிய-அரசு சட்டமானது சியோனிசத் திட்டத்தின் மற்றும் இதுபோன்ற அத்தனை தேசியவாத வேலைத்திட்டங்களின் வரலாற்றுத் திவால்நிலையையும் பிற்போக்குத்தன உச்சத்தையும் குறிக்கிறது.
தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய எழுச்சி தொடங்கிக் கொண்டிருக்கிறது, சியோனிச அரசையும் பல்வேறு அரபு முதலாளித்துவ ஆட்சிகளையும் தூக்கிவீசி பிரதியிட்டு மத்திய கிழக்கின் சோசலிச அரசுகளின் ஒன்றியத்தை உருவாக்குவதற்கான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் வடிவத்தில் முன்நோக்கிய வழியை யூத மற்றும் அரபுத் தொழிலாளர்களின் பரந்த எண்ணிக்கையினருக்கு ஒரேபோல அது சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறது. இதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு போராடி வந்திருந்த நிரந்தரப் புரட்சியின் முன்னோக்கு ஆகும். இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு அவசியமான தலைமையை வழங்க இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு எங்கிலும் ICFI இன் பிரிவுகள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.