Print Version|Feedback
Trump fires opening shot in trade war against China
சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போரில் ட்ரம்ப் முதல் வேட்டை தீர்க்கிறார்
By Nick Beams
6 July 2018
1974 அமெரிக்க வர்த்தக சட்ட பிரிவு 301 இன் கீழ் சீனப் பொருட்களுக்கு சுங்கவரிகளை விதிக்கின்ற தனது அச்சுறுத்தலுக்கு ட்ரம்ப் நிர்வாகம் செயல்வடிவம் கொடுத்திருக்கிறது, நள்ளிரவில் இருந்து 34 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்கள் மீது சுங்கவரிகள் விதிக்கப்பட்டன, அண்மைய வருங்காலத்தில் மேலும் 16 பில்லியன் டாலர் அளவுக்கு சீனப் பொருட்கள் இலக்கு வைக்கப்படவிருக்கின்றன.
சீனாவுக்கு எதிரான ஒரு நேரடியான வர்த்தகப் போரில் இந்த நடவடிக்கை முதல் அஸ்திரமாகும், இன்னும் நிறைய வரவிருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.
ஒபாமா நிர்வாகத்தில் பதவி வகித்த முன்னாள் அமெரிக்க வர்த்தக துணை பிரதிநிதியான ரோபர்ட் ஹோலிமான், மோதல் தீவிரப்படுவதன் தவிர்க்கவியலா நிலையை சுட்டிக்காட்டி, கூறினார்: “இந்த சுங்கவரிகள் அமலுக்கு வரத் தொடங்கி விட்டால், அப்போது மோதல் நிஜமாகி விட்டது என்பது நன்கு தெளிவாகி விடுகிறது. ஒரு வெளியேறும் வழியை நாம் கண்டுபிடிக்கவில்லை என்றால், மலையில் இருந்து உருண்டுவருகின்ற ஒரு பனிப்பந்து போல் இது வேகமெடுக்கும்.”
சீனா அது உடனடியாக “சம அளவில், சம தீவிரத்தில்” பதிலிறுக்கப் போவதாக கூறியுள்ளது, சோயாபீன்ஸ் மற்றும் விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள் (SUV) ஆகியவை முக்கிய இலக்குகளாய் இருக்கும்.
இரண்டு தரப்புகளில் இருந்தும் வெளியான பட்டியல்களின் படி, அமெரிக்க வரிவிதிப்பால் சீனாவில் இருந்தான 818 வகை பொருட்கள் பாதிப்புக்குள்ளாகும், அதேநேரத்தில் சீன நடவடிக்கைகளால் அமெரிக்காவில் இருந்தான 545 வகையான பொருட்கள் பாதிக்கப்படும்.
சீனாவின் பதில்-நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா எவ்வாறு பதிலிறுப்பு செய்யப் போகிறது என்பது இப்போதைய முக்கிய விடயங்களில் ஒன்றாக இருக்கிறது. இன்றைய நடவடிக்கைகளுக்கு முன்பாக நடந்திருந்த வார்த்தை யுத்தங்களில், அமெரிக்காவுக்கு சீனா பதிலடி கொடுக்குமானால் இன்னும் கூடுதலாய் 400 பில்லியன் டாலர் வரை மதிப்புள்ள சீனப் பொருட்களின் மீது கூடுதல் சுங்கவரி விதிப்பதற்கு ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.
இந்த இரண்டு மிகப்பெரும் பொருளாதாரங்களுக்கு இடையிலான இடைத்தொடர்புகள், தீவிரப்படும் வர்த்தகப் போர் உலகெங்கிலுமான நிறுவனங்கள் சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்பதை உணர்த்துவதாகும்.
அமெரிக்க விவசாயத் துறை பெருநிறுவனமான Cargill இல் மூத்த ஒரு செயலதிகாரியாக இருக்கும் புரூஸ் பிளேக்மன், இதன் பின்விளைவுகள் குறித்து எச்சரிக்கையில், கூறினார்: “இந்த வர்த்தக மோதலின் பாதிப்பானது பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை உருவாக்கம் ஆகியவற்றில் தீவிர விளைவுகளை ஏற்படுத்தும் என்பதோடு உலகெங்கிலும் விளிம்புநிலையில் உள்ளவர்களைப் பாதிக்கும்.”
சீனாவுக்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கின்ற நடவடிக்கைகள் அமெரிக்க மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களையும் பாதிக்கக் கூடிய அளவுக்கு மிகப்பெரும் பெருநிறுவனங்களது செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று பின்னியவையாக இருக்கின்றன. பெய்ஜிங்கில் நேற்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், சீனாவின் வர்த்தக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரான கவோ ஃபெங் கூறினார்: “அமெரிக்கா அதுவும் உள்ளடங்கியதாக இருக்கின்ற உலகைப் பார்த்து கணைகளை ஏவிக் கொண்டிருக்கிறது.”
ட்ரம்ப் நிர்வாகத்தால் இலக்கு வைக்கப்பட்டிருப்பதில் 20 பில்லியன் டாலர் அளவுக்கான சீனத் தயாரிப்புப் பொருட்கள், அமெரிக்க நிறுவனங்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவையாகும் என்பதை கவோ சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவில் இயங்குகின்ற சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களும் இந்த மோதலுக்குள் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. Daimler மற்றும் BMW ஆகிய ஜேர்மன் நிறுவனங்கள் —இவை அமெரிக்காவில் உற்பத்தி செய்து சீனாவுக்கு SUVக்களை ஏற்றுமதி செய்கின்றன— இப்போது அவற்றின் தயாரிப்புகளில் 40 சதவீத சுங்கவரி விதிக்கப்படக் காணும், டொயோட்டோ போன்ற இப்பாதிப்புக்கு வெளியில் இருக்கும் போட்டி நிறுவனங்களுக்கு எதிராய் அவற்றின் நிலையை இது மோசமடையச் செய்யும்.
ஜேர்மன் நிறுவனங்களும் மற்ற வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் இன்னுமொரு பாதிப்பின் சாத்தியத்திற்கும் முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றன, இறக்குமதிகள் “அமெரிக்க பாதுகாப்பை” சங்கடத்திற்குள்ளாக்குகிறதா என்பதை ஆராய்வதற்கான ஒரு விசாரணையைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 25 சதவீதம் வரையான சுங்கவரி அவற்றின் மீது விதிக்கப்படலாம். 1962 வர்த்தக விரிவாக்கச் சட்டம் பிரிவு 232 இன் கீழான இந்த விசாரணையின் முடிவுகள் மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள்ளாக வெளியாகலாம் என்பதை ட்ரம்ப் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அமெரிக்காவில் உள்ள மிகப்பெரும் வணிக செல்வாக்கு குழுவான, வர்த்தகக் கூட்டமைப்பு (Chamber of Commerce), ட்ரம்ப் ஒரு உலகளாவிய வர்த்தகப் போரின் அபாயத்தில் இறங்கிக் கொண்டிருப்பதாக எச்சரித்தது.
“நிர்வாகம் எந்த பொருளாதார முன்னேற்றத்தை சாதிக்க கடுமையாக உழைத்து வந்திருக்கிறதோ, அதற்கு குழிபறிப்பதற்கு இப்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது” என்று ராய்ட்டர்ஸ்க்கு விடுத்த ஒரு அறிக்கையில் கூட்டமைப்பின் தலைவரான Tom Donohue கூறினார். “நாம் சுதந்திரமான மற்றும் நேர்மையான வர்த்தகத்தை எதிர்பார்க்க வேண்டும், ஆனால் அதற்கான வழி இதுவல்ல.”
அமெரிக்காவின் நடவடிக்கைகள், பெய்ஜிங் அதன் “சீனத் தயாரிப்பு 2025” (Made in China 2025) திட்டத்தின் கீழ் மதிப்பு சங்கிலியில் மேலுயரச் செய்கின்ற முயற்சிகளுக்கு ஒரு அடி கொடுக்க வேண்டும் என்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் திட்டத்தின் அடியொற்றி, சீனாவின் உயர்-தொழில்நுட்ப தொழிற்துறைகளைக் குறிவைத்திருக்கிறது.
வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகரும் முக்கியமான சீன-விரோத மூர்க்கமுடையவருமான பீட்டர் நவாரோ, “சீனா அமெரிக்காவின் வருங்காலத்திற்கான துறைகளை இலக்கு வைத்திருக்கிறது” என்றும் “இந்த வளர்ந்து வரும் துறைகளை சீனா வெற்றிகரமாக கைப்பற்றி விட்டால், அமெரிக்காவுக்கு பொருளாதார எதிர்காலமே இல்லாது போய்விடும் என்பதை வேறெவரொருவரை விடவும் ட்ரம்ப் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்” என்றும் தெரிவித்தார்.
பொருளாதாரப் பாதுகாப்பு தேசியப் பாதுகாப்புடன் பிரிக்கவியலாத தொடர்புடையது என்றும் உயர்-தொழில்நுட்ப அபிவிருத்தியிலான சீனாவின் வளர்ச்சி, அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்தை பலவீனப்படுத்த அச்சுறுத்துகிறது என்றும் நவாரோவும் நிர்வாகத்தில் இருக்கும் மற்றவர்களும் வலியுறுத்தியிருக்கின்றனர்.
இந்தக் கண்ணோட்டத்தையே ஜனநாயகக் கட்சியின் முன்னணி உறுப்பினர்களும் பகிர்ந்து கொள்கின்றனர். செனட் சிறுபான்மையின் தலைவரான சார்லஸ் சூமர் சீனா மீது கடுமையாக நடந்து கொள்ளாததற்காக ட்ரம்ப் நிர்வாகத்தை விமர்சனம் செய்தார். பெய்ஜிங் அதன் நடத்தையை மாற்றிக் கொள்ளத் தவறுவது “அடுத்து வரப்போகும் பல தலைமுறைகளுக்கு” அமெரிக்கப் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடும் என்று அவர் அறிவித்தார்.
ஆயினும், இறுதியான தயாரிப்புப் பொருளை உற்பத்தி செய்கையில் உதிரிப்பாகங்கள் எல்லைகளைக் கடந்தாக வேண்டிய நிலை இருக்கும் உயர்-தொழில்நுட்ப அபிவிருத்தியின் ஒருங்கிணைந்த தன்மையானது, வர்த்தகப் போர் நடவடிக்கைகளால் அமெரிக்க நிறுவனங்களும் பாதிப்புக்குள்ளாகும் என்றே அர்த்தமளிக்கக் கூடியதாகும்.
இந்த வரிவிதிப்பு நடவடிக்கைகள் அமெரிக்க சிப் தயாரிப்பாளர்களுக்கு (chipmakers) நம்பிக்கையூட்டுவதற்காக என்றால், பைனான்சியல் டைம்ஸில் வந்த ஒரு செய்தி அவை தோல்வியடைந்திருக்கின்றன என்றது. “செமிகண்டக்டர் (semiconductor) விநியோக சங்கிலியின் சிக்கலான தன்மையின் காரணத்தால், இந்த வரிவிதிப்பின் காரணமாக சீன நிறுவனங்களை விட அதிகமாக அமெரிக்க நிறுவனங்களே பாதிக்கப்படும் என்று வாஷிங்டனில் உள்ள செமிகண்டக்டர் துறை கூட்டமைப்பு கூறுகிறது” என்று அச்செய்தி தெரிவித்தது.
உயர்-தொழில்நுட்ப அபிவிருத்தியை நோக்கிய சீனாவின் நடவடிக்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டாக வேண்டும்தான் என்ற அதேநேரத்தில், கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அதன் கூட்டாளிகளாக கருதப்படக் கூடிய நாடுகளுக்கு எதிராக வரிவிதிப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக நிர்வாகம் அதன் நிலையை இக்கட்டில் நிறுத்திக் கொள்கிறது என அமெரிக்க தொழிற்துறையின் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் முக்கிய பிரிவுகள் வலியுறுத்துகின்றன.
நேற்று பைனான்சியல் டைம்ஸில் ஓஹியோவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆளுநரான ஜோன் காஸிச் எழுதியிருந்த ஒரு கருத்துக்கட்டுரையில் இந்தக் கண்ணோட்டம் சுருங்கக் கூறப்பட்டிருந்தது. அவர் எழுதியிருந்தார்: “அமெரிக்காவின் முதல் போர் —அதன் சுதந்திரத்திற்கான போர்— ‘அதன் துப்பாக்கிசுடும் சத்தம் உலகெங்கிலும் கேட்க’ தொடங்கியிருந்தது. ஆனால் சோகத்திற்குரியதாக, இப்போதைய போரோ —அமெரிக்க பொருளாதார சுதந்திரத்தைப் பாதுகாக்க என்று சொல்லி நடத்தப்படுகின்ற ஒரு வர்த்தகப் போர்— அதன் கால்நோக்கி சுடுவதுடன் தொடங்கிக் கொண்டிருக்கிறது.”
“அறிவுசார் சொத்துரிமைகளுக்கு சீனா காட்டும் அலட்சியம்” என்று காஸிச் அழைத்த ஒன்றும் அத்துடன் மற்ற நாடுகள் “சாதகமான துறைகளுக்கு சமமற்ற பாதுகாப்பு” கொடுப்பதும் களத்தின் தன்மையை மாற்றி விட்டிருந்ததாகவும் அவை முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆயினும் அத்தகைய நடவடிக்கை மற்றவர்களுடன் சேர்ந்தே எடுக்கப்பட வேண்டும் என்றார். “நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில்” இருந்து நிவாரணம் கிடைக்கின்ற விதத்தில் உலக வர்த்தக அமைப்பின் நடைமுறைகள் நவீனமயமாக்கப்பட வேண்டும் என்றார்.
காஸிச் மேலும் சேர்த்துக் கொண்டார்: “நவீனமயப்படுத்த ஏதோ ஒன்று விட்டுவைக்கப்பட்டிருந்தால் மட்டுமே உலக வர்த்தக அமைப்பு நவீனமயமாக்கப்படுவது சாத்தியமாகும். அமெரிக்கா ஸ்தாபிக்க உதவிய விதிமுறைகளின் அடிப்படையிலான அமைப்புமுறைக்கு, நிர்வாகம் காட்டுகின்ற அலட்சியமும், நண்பர்கள் மீதும் எதிரிகள் மீதும் ஒரேமாதிரியாக முழுமூச்சாகத் தாக்குவதும் கத்திச்சண்டையில் கடைசியாக உயிரை விடுபவர் ’வெற்றி’ என்பதைப் போன்றிருக்கிறது. ஒரு அத்தியாவசியமான உள்கட்டமைப்பை சின்னாபின்னமாக்கப்பட்ட நிலையில் விடுகின்ற ஒரு அபாயத்தை அது எடுக்கிறது.”
“அறுவைச்சிகிச்சைக்கு எப்போதும் நோயாளியை முதலில் கொல்வது அவசியமாக இருக்கிறது” என்ற வெள்ளைமாளிகையின் மனப்போக்கு “ரஷ்யா மற்றும் சீனா போன்றவற்றுக்கு எதிராக ஜனநாயகத்தின் அத்தியாவசியமான சுதந்திரங்களை பாதுகாப்பதற்கு” மிகக்குறைந்த கூட்டாளிகளையே அமெரிக்காவுக்கு விட்டுவைக்கிறது.
இந்த கண்ணோட்டத்தின் படி, அமெரிக்க மேலாதிக்கத்திற்கு எதிரேவரக் கூடிய பொருளாதார மற்றும் இராணுவ அச்சுறுத்தல்கள் சண்டையிடப்பட வேண்டும், ஆனால் ட்ரம்ப் நிர்வாகம் அதைத் தவறான விதத்தில் செய்து கொண்டிருக்கிறது.
அமெரிக்க தேசியப் பாதுகாப்பை ஊக்குவிப்பதான பேரில் “தாராளவாத ஒழுங்கின் மீது ட்ரம்ப் நடத்துகின்ற போரின்” தாக்கங்கள் குறித்து புதன்கிழமையன்று பைனான்சியல் டைம்ஸ் பொருளாதார வருணனையாளரான மார்ட்டின் வொல்ஃப் ஒரு பத்தி எழுதியிருந்தார். வர்த்தக மோதல்கள் “வணிகப் பாதுகாப்புக்கும் தேசியப் பாதுகாப்புக்கும் இடையிலான பிரிப்பை முறித்து, மோதலின் கணிசமான தீவிரப்படலின் அபாயத்தை எழுப்புகிறது” என்று சர்வதேசப் பொருளாதாரத்திற்கான பீட்டர்சன் நிறுவனத்தின் ஆடம் போசன் எச்சரித்திருந்ததை அவர் மேற்கோள் காட்டியிருந்தார்.
வேறு வார்த்தைகளில் சொன்னால், பொருளாதார உறவுகளை தேசியப் பாதுகாப்புடன் கலப்பது இராணுவ மோதலின் அபாயத்தினை அதிகப்படுத்துகிறது.
“அறியாமையாலும் அதிருப்தியாலும் செலுத்தப்படுவதாக இருக்கின்ற ட்ரம்ப்பின் குறுகிய பரிவர்த்தனைரீதியான அணுகுமுறை பேரழிவுக்கான ஆபத்தைக் கொண்டதாகும்” என்றும் “போருக்குப் பிந்திய பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒழுங்கின் அடித்தளங்கள் ... இப்போது சந்தேகத்தில் இருக்கின்றன” என்றும் வொல்ஃப் எழுதினார்.
ஆயினும் “பேரழிவு” அச்சுறுத்தல் வெள்ளை மாளிகையில் இப்போதிருப்பவரின் மனோநிலையில் இருந்து வருவதில்லை. உலகளாவிய உற்பத்தி —உலகெங்கிலுமான தொழிலாளர்களது உழைப்பின் சிக்கலான ஒருங்கிணைப்பு— உலகம் போட்டி தேசிய அரசுகளாகப் பிளவுபட்டிருப்பதுடன் —இதன்மூலமாக பெரும் சக்திகள் தமது “மூலோபாயப் போட்டியாளர்களுக்கு” எதிராக தமது நிலையை மேம்படுத்திக் கொள்ளப் பார்க்கின்றன— மோதலுறுவதாக இருக்கும் முதலாளித்துவ உலக ஒழுங்கின் முரண்பாடுகளில் இருந்து இது எழுகின்றது.
இந்த முரண்பாடுகள் இன்று ட்ரம்ப்பால், சீனாவுக்கும் அமெரிக்காவின் மற்ற போட்டிநாடுகளுக்கும் எதிராக, தொடக்கமளிக்கப்பட்டிருக்கும் வர்த்தகப் போர் நடவடிக்கைகளில் தமது வெளிப்பாட்டைக் கண்டிருக்கின்றன, மற்ற நாடுகளும் விரைவில் இதே பாதையைப் பின்தொடர இருக்கின்றன.