ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

පොලිස් වෙඩි තැබීමකින් උතුරේ තවත් තරුනයෙක් මරා දැමෙයි

இலங்கை பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் வடக்கில் இன்னொரு இளைஞர் கொல்லப்பட்டார்

By our correspondent 
2 July 2018

ஜூன் 17 மாலை, வடக்கில் யாழ்ப்பாணம் மல்லாவி அருகில் பாக்கியராசா சுதர்ஷன் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். சுதர்சன் மிகவும் நெருக்கமாக பின்புறம் சுடப்பட்டிருப்பதாக அரச மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். அறிக்கையின்படி, குண்டு ஒன்று நுரையீரல் ஊடாக நுழைந்துள்ளதுடன் தோள்பட்டையில் ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.


பாக்கியராசா சுதர்சன்

குளமங்கால் கிராமத்தைச் சேர்ந்த 32 வயது இளம் தொழிலாளியான சுதர்சன், "நல்லிணக்கம்" மற்றும் "ஜனநாயகத்தை" உருவாக்குவதாக போலி வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமெரிக்க சார்பு அரசாங்கத்தின் கீழ், வடக்கில் பொலிசாரால் கொல்லப்பட்ட ஐந்தாவது இளைஞராவார்.

2016 அக்டோபர் 2 அன்று கொக்குவில் பகுதியில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டனர். 2017 ஜூலை 9 அன்று வடமராட்சி துன்னாலை கிராமத்தில் ஒரு மணல் லொரியில் பயணம் செய்த இளைஞர் கொல்லபட்டார். மற்றும் அதே ஆண்டில் அக்டோபர் மாதம், மற்றொரு இளைஞர் யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் வைத்து பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேசன் வேலை செய்யும் சுதர்சன் கட்டாரில் வேலைக்கு சென்று இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் இலங்கைக்கு திரும்பியிருந்தார். 1995ல் இடம்பெயர்ந்த அவரது குடும்பம், சமீபம் வரையில் சாவகச்சேரி பகுதியில் ஒரு அகதி முகாமில் வாழ்ந்து கொண்டிருந்தது. அவர்கள் தங்களே கட்டிக்கொண்ட ஒரு மண் குடிசை வீட்டில் குடியிருக்கிறார்கள். சுதர்சனே குடும்பத்தில் பிரதான வருமானம் தேடியவராவர். 64 வயதான அவரது தந்தை ஜோர்ஜ் பாக்கியராசா ஊடகங்களுக்கு கூறியதாவது: "நான் ஒரு இதய நோயாளி. நான் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னால் வேலை செய்ய இயலாது, முற்றிலும் என் மகனிலேயே தங்கி இருந்தேன். இப்போது தாச்சியில் இருந்து அடுப்புக்குள் விழுந்துவிட்டேன்."

சுதர்ஷன், சகாயமாதா தேவாலய திருவிழா வேளையில் அவரது உறவினர் டெஸ்மன் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியபோது, அவரைக் காப்பாற்ற முயற்சிக்கையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். டெஸ்மனின் கூற்றுப்படி, ஒரு வன்முறைக் கும்பலிடம் இருந்து தப்புவதற்காக இருவர் தேவாலயத்தின் பக்கமாக ஓடினர். ஓடியவர்களின் பின்னால் வந்த அந்த கும்பல் டெஸ்மனை சுற்றிவளைத்து தாக்கியதாக நேரில் கண்டவர்கள் கூறினார்.

குண்டர்கள் பொல்லுகளும் வாள்களும் வைத்திருந்தனர். கலக சத்தம் கேட்டு சுதர்சன் தேவாலயத்திலிருந்து வெளியே வந்தார். தனது உறவினரான டெஸ்மனை ஒரு பொலிஸ் அதிகாரி துப்பாக்கியால் குறிவைப்பதை கண்ட ​​அவர் உடனடியாக டெஸ்மனை அரவணைத்து அந்த இடத்தில் இருந்து அகற்ற முற்பட்டார். அப்போது துப்பாக்கியை நீட்டிக்கொண்டிருந்த பொலிஸ் அவரை புறமுதுகில் சுட்டுக் கொன்றனர். தான் பிடித்து வைத்திருந்த ஒரு கலகக்காரரை பொலிஸ் அதிகாரி விடுவித்து அனுப்பியதாக டெஸ்மன் ஊடகத்திற்கு தெரிவித்திருக்கிறார்.

தான் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திலிருந்து வந்ததாக பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார். தனது இலக்கத் தகட்டை காட்டிய அவர், சுதர்சனை தானே சுட்டுக் கொன்றேன் என கூறியதோடு, உன்னையும் சுடுவேன் என இன்னொரு இளைஞனை அச்சுறுத்தியும் உள்ளார். இரண்டு போலீஸ்காரர்கள் அங்கு வந்து கோபமடைந்திருந்த மக்களிடம் இருந்து சுட்டவரை அழைத்துச் சென்றனர்.

பிரதேசவாசிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கேசன்துறை வீதியை மறித்து பொலிசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அரசாங்கம் போராடத்தை அடக்குவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை உட்பட, ஒரு பெரிய பொலிஸ் படையை அனுப்பியது.

பின்னர் அங்கு வந்த மல்லாகம் நீதவான் A. ஜுட்சன், பொல்லு ஒன்றை வைதிருந்ததாக டெஸ்மனை குற்றஞ்சாட்டியதுடன் அவரை கைது செய்யுமாறு பொலிசுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் இருந்த ஒருவர் நீதவானின் நடவடிக்கை சம்பந்தமாக நியாமான கோபத்தை வெளிப்படுத்தி சத்தமிட்டார்: "அவர்கள் ஆகாயத்தில் சுட்டிருக்கலாம், இது அநியாயம், இது மனித உரிமை மீறல். நீங்கள் அது அப்படி இல்லை என்று சொல்கிறீர்கள், நியாப்படுத்துகிறீர்கள்."

குற்றம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இலங்கை சட்டத்தின் படி, இத்தகைய படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால், பொலிஸ் அதிகாரியானாலும் அவரை கைது செய்ய வேண்டும்.

மாறாக, வடக்கு மாகாண உப பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ, கொல்லப்பட்ட நபர் வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர் என சித்தரித்து, படுகொலையை நியாயப்படுத்த முயன்றார். "இறந்த நபர் உட்பட இரண்டு வன்முறை கும்பல் தேவாலயத்துக்கு அருகே மோதலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது... அத்தகைய வன்முறைக்கு பிரதிபலிக்கும் போது, சட்டத்தின் படி தம்மையும் மக்களையும் பாதுகாக்க அதிகபட்ச அதிகாரத்தை பயன்படுத்த முடியும். அதைத்தான் பொலிஸ் செய்துள்ளது" என்று அவர் கூறினார்.

"கிராமத்தவர்கள் வேறு விதமாக கூற முடியும்” எனக் கூறிய அவர், “இறந்தவர் போதையில் இருந்ததாக” சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையிலும் உள்ளது என்று அவர் கூறினார். இலங்கைப் பொலிஸ் மற்றும் இராணுவம் நபர்களை கொல்வதில் மட்டுமன்றி அதை நியாயப்படுத்த பொய் சொல்வதிலும் பேர்போனவை ஆகும். அதிகாரத்தில் இருந்து வந்த அரசாங்கங்கள், குறிப்பாக புலிகளுக்கு எதிரான போர் காலத்தில் இருந்தே, பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு தப்பிக்கொள்வதற்கு நீதிக்குமாறான விலக்களிப்புக்களை கொடுத்து வந்துள்ளன.


சுதர்சனின் தந்தை பாக்கியராசா மற்றும் அவரது சகோதரி

பொலிசின் குற்றச்சாட்டை நிராகரித்த சுதர்சனின் உறவினர்களும் நண்பர்களும் அவருக்கு கலகக்காரர்களுடன் எந்த தொடர்பும் கிடையாது என மறுத்துள்ளதுடன் அவர் எந்த சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்றும் கூறினர்.

"அவர் சிறுவர் பருவத்திலிருந்து நம்முடன் வாழ்ந்துள்ளார். அவருக்கு எந்த கும்பலுடனும் தொடர்பு இல்லை. படுகொலையை நியாயப்படுத்தவே பொலிசார் குற்றம் சாட்டுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் சில பத்திரிகைகளும் பொலிஸைப் பாதுகாத்து எம்மிடம் கேட்காமல் பொலிஸ் சொன்னதை எழுதி வைத்துள்ளன. இது ஒரு பக்கச் சார்பு வேலை. அதை விசாரித்திருக்க வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் துன்னாலை படுகொலைக்கும் என்ன நடந்தது. அதுதான் எங்களுக்கும் நடக்கும்," என சுதர்சனின் மாமா உலக சோசலிச வலைத் தள நிருபரிடம் கூறினார்.

அவருடைய 31 வயது சகோதரி கூறியதாவது: "என்னுடைய சகோதரர் எப்போதும் எங்கள் குடும்பத்தைப் பற்றி அக்கறை காட்டி வந்தார். அவர் தேவையில்லாத எதையும் செய்யவில்லை. அவர் பணம் சம்பாதிக்க வெளிநாடு செல்ல வேண்டி வந்தது. எங்கள் பிரச்சனைகளுக்காகவே அவர் மத்திய கிழக்கு சென்றார். அவர் கடனை செலுத்தினார். ஆனால் ஒரு வீட்டைக் கட்ட முடியாமல் போனது. எம்மை தூக்கி நிறுத்தவும் பாதுகாக்கவும் அக்கறை காட்டியதால் அவர் திருமணம் கூட செய்து கொள்ளவில்லை. அவர் கொல்லப்பட்டது அநியாயமானது."

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண இணைப்பாளர் டி. கனகராஜ், பொலிசாரால் (தமிழ் பேசம்) சந்தேகநபர்களிடம் இருந்து "சிங்கள" மொழியில் பெறப்பட்டுள்ள வாக்குமூலங்களும் அவர்கள் ஆணைக்குழுவுக்கு கொடுத்துள்ள வாக்குமூலங்களும் வேறுபட்டதாக இருப்பதாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார். மனித உரிமைகள் ஆணைக்குழு, அவர்களது வாக்குமூலங்களை தமிழில் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

வடக்கில் இத்தகைய சம்பவங்கள் பல நடந்துள்ளன. சமீபத்தில் மனித உரிமைகள் நிறுவனத்தில் இருவர் பொலிஸ் சித்திரவதை செய்தது சம்பந்தமாக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளனர். சுந்தரலிங்கம் கங்காரூபன், குகதாஸ் விஜயதாஸ் ஆகிய இருவரும் வல்வெட்டித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிசார் அவர்களை தெருவில் வைத்து தாக்கியதாகவும், பின்னர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையத்தில் வைத்து தடியால் அடித்ததாகவும் கால்களால் உதைத்ததாகவும் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நாட்கூலி வேலை செய்யும் கங்காரூபன் போலீஸ் சித்திரவதையை அடுத்து தன்னால் உட்கார கூட முடியாதுள்ளது என்றார்.

ஜூன் 22 அளவில், மோதல்கள் சம்பந்தமாக 12 சந்தேக நபர்களை பொலிஸ் கைது செய்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்ற அடிப்படையில் 40 பேரின் பட்டியலை பொலிஸ் வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஜூன் 20 அன்று ஒரு அரசாங்க ஊழியர் கைது செய்யப்பட்டார்.

ஜூன் 29, நடந்த விசாரணையில் சந்தேக நபர்களை விடுதலை செய்வதை பொலிஸார் எதிர்த்தனர். அடுத்த விசாரணை ஜூலை 12 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர்கள், துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் உத்தியோத்தரை ஏன் கைது செய்யவில்லை என கேட்ட போது, பொலிசார் அதற்கு எதுவுமே கூறவில்லை. பொலிஸ் விசாரணையில் திருப்தி இல்லை என்று வழக்கறிஞர்கள் கூறிய போது, ​​தேவையெனில் வேறு பொலிஸ் படைக்கு விசாரணை ஒப்படைக்கப்படும் என்றே நீதிபதி பதில் கூறினார்.

பொலிஸ் இறுதியில் நீதித்துறையின் ஆதரவுடன் உண்மையை மறைத்துவிடும் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுவது உண்மையாகியுள்ளது. மாணவர்களின் படுகொலைக்கு காரணமான ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விடுவிக்கப்பட்டு சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். கடந்த வாரம், அவர்களில் மூன்று பேர் சட்டமா அதிபரால் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். துன்னாலையின் இளைஞர் படுகொலைக்குப் பின்னர், பொதுமக்கள் கோபத்தில் இருந்து தப்பிக்க தலையிட்ட பொலிஸ், மறுபக்கம் திரும்பி, பெரும் வேட்டையாடலை கட்டவிழ்த்துவிட்டு, 40 பேர் வரை கைது செய்து கொடூரமான தாக்குதலுக்கும் வழக்குகளுக்கும் இரையாக்கியது.

வடக்கில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சமாந்தரமாக தென் மாகாணங்களிலும் இரவில் பொலிஸ் நடவடிக்கைகளை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாதாள உலகத்தினரை நசுக்குவதன் பேரில் சட்டங்களை மதிக்காது பொலிஸ் படுகொலைகள் அதிகரித்து உள்ளன. சில வாரங்களுக்கு முன்னர், பாதாள உலகத்தினரை நசுக்குவதற்காக பொலிஸ் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும்பண்டார அறிவுரை வழங்கியுள்ளார். அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் நாடு பூராகவும் வேகமாக கட்டியெழுப்பப்படும் பொலிஸ்-அரச வழிமுறைகளையே இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் சமிக்ஞை செய்கின்றன.