Print Version|Feedback
Egypt’s military junta condemns 75 coup protesters to death
எகிப்தின் இராணுவ ஆட்சிக்குழு 75 ஆட்சிக்கவிழ்ப்பு போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்கிறது
Chris Marsden
30 July 2018
ஒரு கெய்ரோ நீதிமன்றம் 75 பிரதிவாதிகளுக்குத் தூக்கு தண்டனை வழங்க ஒப்புதல் வழங்குமாறு எகிப்தின் தலையாய மதகுருமார்களுக்குச் சனிக்கிழமை பரிந்துரை செய்தது. இந்த 75 நபர்கள் அனைவரும், அதே அதிகபட்ச தண்டனையை முகங்கொடுக்கின்ற 739 பிரதிநிதிவாதிகள் மீதான ஒரு பாரிய வழக்கின் பாகமாக இருப்பவர்கள்.
தளபதி அப்தெல் பதாஹ் அல்-சிசி இன் கீழ், முஸ்லீம் சகோதரத்துவத்தின் ஜனாதிபதி மொஹமத் மொர்சி அரசாங்கத்தைப் பதவியிலிருந்து நீக்கிய, எகிப்தின் ஆளும் இராணுவ ஆட்சிக்குழுவின் ஜூலை மாத ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு எதிராக ஆகஸ்ட் 2013 போராட்டத்தில் பங்கெடுத்ததற்காக தண்டிக்கப்பட இருந்த முதல் குழுவிலிருந்து இரண்டு பிரதிவாதிகள் மட்டும் தவிர்க்கப்பட்டிருந்தனர், அவர்கள் இருவரும் அமெரிக்க குடிமக்களாவர்.
மரண தண்டனைக்குப் பரிந்துரை செய்யப்பட்டவர்களில் பலர் இப்போது தடை செய்யப்பட்டுள்ள முஸ்லீம் சகோதரத்துவத்தில் முன்னணி பிரமுகர்கள் ஆவர், ஆனால் சட்டத்திற்குப் புறம்பாக ஒன்றுகூடியமை, ஆயுதங்கள் வைத்திருந்தமை மற்றும் படுகொலை ஆகியவையும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இது யதார்த்தத்தைத் தலைகீழாக்குகிறது. மொர்சிக்கு ஆதரவாக கெய்ரோவின் ரப்பா அல் அதாவியா சதுக்கத்தில் நடந்த மறியல் போராட்டம் மீதான காட்டுமிராண்டித்தனமான இராணுவத் தாக்குதல் 1,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்றது.
கெய்ரோவில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மீதான இந்த வழக்கு, அப்போதிருந்து தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஒடுக்குமுறை நடவடிக்கையின் சமீபத்திய அட்டூழியம் மட்டுமேயாகும், அப்போதிருந்து அரசியல் குற்றங்களின் பேரில் 60,000 க்கும் அதிகமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், ஆயிரக் கணக்கானவர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர், பாதுகாப்பு சேவைகளால் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் "காணாமல்" ஆக்கப்பட்டுள்ளனர்.
சித்திரவதை மற்றும் பெரும் எண்ணிக்கையிலானவர்களின் படுகொலைகளோடு சேர்ந்து, “ஸ்திரமின்மையைப் பரப்பும்,” “பொது ஒழுங்கைப்" பாதிக்கும் அல்லது "தேசிய நலன்களுக்கு" இடர் உண்டாக்கும் பத்திரிகையாளர்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் 500 க்கும் அதிகமான வலைத் தளங்களை இலக்கில் வைத்த திட்டமிட்ட தணிக்கையும் "பொய் செய்திகளை" எதிர்க்கிறோம் என்ற பெயரில் நடத்தப்படுகின்றது.
சிசியின் கரங்களிலான இரத்தம், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற ஏகாதிபத்திய அதிகாரங்களது பிரதான கட்சிகள் அனைத்தினது அரசியல் தலைவர்களின் உள்ளங்கைகளையும் நனைந்துள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம், எகிப்திற்கான இராணுவ உதவி மீதிருந்த தடையை நீக்கி, 195 மில்லியன் டாலர் வழங்குவதாக ஜூலை 25 இல் அறிவித்து, சனிக்கிழமை மரண தண்டனைகளுக்கு அது பாதை அமைத்து கொடுத்தது, அதேவேளையில் மூத்த இராணுவ பிரதிநிதிகள் குழு ஒன்று வாஷிங்டனுக்கு விஜயம் செய்துள்ளதுடன், உதவிகள் மீதான தடையை நீடிப்பது குறித்து பரிசீலிப்பதற்காக என்ற சாக்குபோக்கில் நாடாளுமன்ற விவாதம் ஒன்றும் நடந்து வருகிறது. குறைந்தபட்சம் 17 அமெரிக்கர்கள் இன்னமும் எகிப்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ட்ரம்ப் அவருக்கு முன்பிருந்த பராக் ஒபாமாவின் கொள்கையைத் தான் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த மரண தண்டனைகள் வழங்கப்பட்ட அதே நாள், மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக ஒபாமாவுக்கு சார்பான பத்திரிகை, நியூ யோர்க் டைம்ஸின் டேவிட் டி. கிர்க்பாட்ரிக் எகிப்து குறித்து வெளியிடவிருக்கும் அவரின் ஒரு நூல் குறித்த முன்-விரிவுரையைப் பிரசுரித்து, ஒபாமா நிர்வாகமே "சர்வாதிகாரிகளை ட்ரம்ப் அரவணைபதற்கு வழி வகுத்தது" என்பதை அதில் ஒப்புக் கொண்டிருந்தார்.
வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி மற்றும் பாதுகாப்புத்துறை செயலர் சக் ஹாகெல் உட்பட அப்போதைய ஜனநாயக கட்சி நிர்வாகத்தின் முன்னணி பிரமுகர்களால், சிசி இன் ஆட்சிக்கவிழ்ப்பு சதி மற்றும் முஸ்லீம் சகோதரத்துவம் மீதான ஒடுக்குமுறை பகிரங்கமாக ஆமோதிக்கப்பட்டதை கிர்க்பாட்ரிக் குறிப்பிடுகிறார்.
"திரு. மொர்சியின் நீக்கம் உண்மையில் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியே இல்லை என்று வெள்ளை மாளிகையில் அவர் வாதிட்டதாக கெர்ரி என்னிடம் கூறினார். தளபதி சிசி எகிப்தைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே மக்களின் விருப்பத்திற்கு அடிபணிந்தார்,” என்றவர் எழுதுகிறார். ஒபாமா "திரு. மொர்சி பதவியிலிருந்து நீக்கப்பட்டதை நடைமுறையளவில் ஏற்றுக் கொண்டு, அதுவொரு ஆட்சிக்கவிழ்ப்பு சதியா அல்லது ஆட்சிக்கவிழ்ப்பு சதி இல்லையா என்பதை தீர்மானிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்த" போது, அவரும் "அத்தகைய கண்ணோட்டங்களையே வழங்கினார்.”
இது ஒபாமாவுக்காக அற்பத்தனமாக வக்காலத்து வாங்குவதாக உள்ளது, 2015 இல் அவர் தான் முதன்முதலில் எகிப்து மீதான 2013 இராணுவ உதவி தடையை நீக்கினார்.
அதற்குப் பின்னர் அரசு-சாரா அமைப்புகள் மீதான சிசி இன் அடக்குமுறையால் தூண்டிவிடப்பட்டு சில காலம் தடை இருந்ததற்கு அப்பாற்பட்டு, இது இந்த மாதம் ட்ரம்பால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், வாஷிங்டன் சராசரியாக ஆண்டுக்கு 1.3 பில்லியன் டாலர் எகிப்துக்கு தொடர்ந்து நிதியுதவி வழங்கியுள்ளது—இது இஸ்ரேலுக்கு அடுத்து வேறெந்த நாட்டையும் விட அதிகமாகும்.
இது எல்லா பிரதான சக்திகளுக்கும் பொருந்தும், ஆயுதபேர உடன்படிக்கைகள் மற்றும் உதவிகளைத் திரட்டுவதற்காக கொலைபாதகர் சிசி, பேர்லின், இலண்டன், பாரீஸ் மற்றும் ரோம் க்கு இராஜாங்க விஜயம் மேற்கொண்டிருந்தார். இம்மாத ஆரம்பத்தில், 1.3 பில்லியன் மதிப்பில் குறைந்தபட்சம் எட்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ஆயுத விற்பனைகள் மூலம் சிசி இன் ஒடுக்குமுறைக்குப் பிரான்ஸ் உதவியுள்ளதாக மனித உரிமைகள் அமைப்புகள் பிரான்ஸைக் குற்றஞ்சாட்டி இருந்தன, “கருத்து மாறுபட்ட குடிமக்கள் மீது அனைத்து வடிவத்திலான நடவடிக்கைகளையும் களைந்தெறிவதற்குப் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர்வெல்லியன் பாணியிலான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்பை ஸ்தாபிக்க உதவியுள்ள" “சக்தவாய்ந்த டிஜிட்டல் கருவிகளும்" அதில் உள்ளடங்கும்.
இரண்டு விரிவார்ந்த பரிசீலனைகள், எகிப்திய சர்வாதிகாரத்தை நோக்கிய ஏகாதிபத்திய சக்திகளின் மனோபாவத்தைக் காட்டுகின்றன.
ஒன்று, ஈரானுடன் இராணுவ மோதலுக்கான திட்டங்கள் உள்ளடங்கலாக, எண்ணெய் வளம் மிக்க மத்தியக் கிழக்கின் மேலாதிக்கத்திற்காக தீவிரமடைந்து வரும் போட்டி.
நேட்டோவை மாதிரியாக கொண்ட, மத்திய கிழக்கு மூலோபாய கூட்டணி குறித்த ட்ரம்பின் அறிவிப்பு, இஸ்ரேல், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை எகிப்துடன் ஒரு கூட்டணியில் கொண்டு வர முனைகிறது—இந்த ஆட்சிகள் பாலஸ்தீனர்களுக்கு எதிராகவும் மற்றும் யேமனிலும் சிசி அளவுக்கு மூர்க்கமாக ஒடுக்குமுறை நடத்தியுள்ளன. சமூக மற்றும் அரசியல் அதிருப்தியை நசுக்குவதற்கான காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையானது, மத்திய கிழக்கில் மட்டுமின்றி, ஒரு போருக்கான அதுபோன்றதொரு திருப்பத்தை ஏற்றிருக்கும்.
இதனினும் மிக அடிப்படையானது தொழிலாள வர்க்கத்தால் முன்நிறுத்தப்படும் அச்சுறுத்தலாகும்.
2011 இன் "அரபு வசந்தத்தில்" எகிப்திய புரட்சி முக்கிய சம்பவமாக இருந்தது, அது பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் வெடிப்பைக் கண்டது, அவை முதலில் துனிசியாவில் ஜைன் எல் அபிடைன் பென் அலியின் வீழ்ச்சிக்கும், பின்னர் பெப்ரவரியில் ஹோஸ்னி முபாரக் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கும் இட்டுச் சென்றன.
ஆனால் எகிப்திய தொழிலாள வர்க்கம் அதன் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிக்காமலும் மற்றும் அதற்கு தலைமை கொடுக்க ஒரு புரட்சிகர கட்சி இல்லாமலும், அது தாராளவாத மற்றும் இஸ்லாமிய முதலாளித்துவ சக்திகளால் அரசியல்ரீதியில் நிராயுதபாணியாக இருந்தது, அது தலைமையை எதிர்பார்த்து இருந்தது. இந்த காட்டிக்கொடுப்பில் புரட்சிகர சோசலிஸ்டுகள் (RS) போன்ற போலி-இடது குழுக்கள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன, இவை நெடுகிலும் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்தின் ஏதேனும் ஒரு கன்னையுடன் கூட்டணி வைத்து, "ஜனநாயகத்திற்கான" ஒரு போராட்டத்தில் தன்னைத்தானே மட்டுப்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தின.
இது, எகிப்திய இராணுவம் அதன் ஆட்சியை மீட்டமைக்கவும் மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் அவர்களின் போர், ஒடுக்குமுறை கொள்கைகளையும், லிபியா, சிரியா மற்றும் ஈராக் உட்பட அப்பிராந்தியத்தில் சுரண்டலுக்கான தங்களின் கொள்கைகளை மீண்டும் தொடங்கவும் அனுமதித்தது. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் நீண்டகால பரந்த புரட்சிகர தாக்குதலுக்கு எகிப்து ஒரு முன்னறிவிப்பாக மட்டுமே இருந்தது, இந்த முறை அது ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் மூழ்கடிக்குமோ என்ற அச்சம் இன்னமும் நீடிக்கிறது.
சிசி, அவரின் அடக்குமுறையை நடத்துவதற்கு பிரதான சக்திகள் வரம்பிலா அதிகாரங்களை மட்டும் வழங்கி இருக்கவில்லை, மாறாக அவை வரம்பில்லா நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவையும் வழங்குகின்றன, ஏனென்றால் அவை உள்நாட்டில் இதே போன்ற நடவடிக்கைகளை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தயாரிப்பு செய்து வருகின்றன அல்லது செயலூக்கத்துடன் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
ஒரு சமீபத்திய பேட்டியில், சிசி அவர் அரசாங்கத்தின் நீண்டகால திட்டத்தை அறிவித்தார், “ஒவ்வொன்றும் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புடன் தொடர்புபட்டுள்ளது. நாம் ஸ்திரமின்மை குறித்த கூர்மையான அச்சத்தை அபிவிருத்தி செய்ய வேண்டுமென நான் விரும்புகிறேன்,” என்றார்.
இந்த கருத்து சர்வசாதாரணமாக ட்ரம்ப், ஹிலாரி கிளிண்டன், இமானுவல் மக்ரோன், தெரேசா மே அல்லது அங்கேலா மேர்க்கெலின் வாயிலிருந்தும் வரக் கூடியது தான்.
பெரும் நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்கும், வாழ்வதற்கே போராடி வரும் பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் இடையிலான இடைவெளி ஆரோக்கியமற்ற பரிமாணங்களை எட்டியுள்ளது. சமூக கோபம் பட்டவர்த்தனமாக உள்ளது. 2011 க்குப் பின்னர் முதல்முறையாக, தொழில்துறை போராட்டங்களும் ஏனைய வடிவத்தில் பெருந்திரளான மக்கள் போராட்டமும் மீளெழுச்சி பெற்று வருகின்றன.
மக்களுக்கு எதிராக பொலிஸ்-இராணுவ நடவடிக்கைகளுக்குத் திரும்புதல், பாரிய கண்காணிப்பு, தணிக்கை, ஜனநாயக சுதந்திரங்கள் மீதான தாக்குதல்கள், வேண்டுமென்றே அதிவலது சக்திகளை விதைப்பது, சமூக திட்டங்கள் மீதான வெட்டுக்கள் மற்றும் அதிகரிக்கப்பட்ட இராணுவ செலவினங்கள் என ஒவ்வொரு இடத்திலும் ஆளும் உயரடுக்கின் விடையிறுப்பு ஒரே மாதிரியாக தான் உள்ளன.
புவியை அதிர செய்த 2011 சம்பவங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த துயரங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ள மத்திய படிப்பினையாக இருப்பது, முதலாளித்துவ அரசு மற்றும் ஏகாதிபத்தியத்தைத் தூக்கியெறிவதற்கான ஒரு சர்வதேச புரட்சிகர போராட்டத்திற்கு நனவுபூர்வமாக தயாரிப்பு செய்வதன் அவசியமாகும்.
தொழிலாள வர்க்கத்தால் அரசு அதிகாரம் கைப்பற்றப்பட்டு, சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகள், சர்வாதிகாரம் மற்றும் போருக்காக முடுக்கிவிடப்பட்ட சாட்டையை முறிக்கவும் மற்றும் உலக மக்கள் அனைவரது அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்யவும், ஒரு சோசலிச பொருளாதார அமைப்புமுறையைக் கட்டமைப்பதே இலக்காக இருக்க வேண்டும்.
இதைச் செய்வதற்கான ஒரே அடித்தளம், எகிப்திலும் உலகெங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளைக் கட்டமைப்பதாகும்.