ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Refugees ensnared in European dragnet

அகதிகள் ஐரோப்பிய பொறியில் சிக்கியுள்ளனர்

Johannes Stern and Andre Damon
9 July 2018

சான்சிலர் அங்கேலா மேர்க்கெல்லின் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU) மற்றும் அதன் சகோதர கட்சியான கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) ஆகியவை பேசி முடிவு செய்த அகதிகள் மீதான ஒரு மிகப்பெரும் ஒடுக்குமுறையை ஆதரிப்பதற்கு ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சி (SPD) கடந்த வெள்ளிக்கிழமை உடன்பட்டது.

இந்த உடன்பாடானது, ஜேர்மன் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான பாசிசவாத ஜேர்மனிக்கான மாற்றீட்டின் (AfD) இனவாத மற்றும் குற்றகரமான புலம்பெயர்வு கொள்கையை SPD மற்றும் CDU/CSU இன் பாரிய கூட்டணி அரசாங்கம் பிரதிநிதித்துவம் செய்யும் ஜேர்மன் அரசியல் ஸ்தாபகம் ஏற்றுக் கொண்டதைக் குறிக்கிறது.

புலம்பெயர்வோரைச் சுற்றி வளைக்கும் அதன் பொறியை பரிபூரணமாக்கும் விதத்தில், ஜேர்மன் அரசாங்கம் ஜேர்மனிக்கு உள்ளேயும் ஐரோப்பா எங்கிலும் அகதிகளுக்கான பாரிய அடைப்பு முகாம்களை ஸ்தாபிக்க ஒப்புக் கொண்டுள்ளது.

நாடெங்கிலும் அமைக்கப்பட உள்ள இந்த "நங்கூரமிடும் மையங்கள்" என்றழைக்கப்படுவை, பத்தாயிரக் கணக்கானவர்களை அல்லது நூறாயிரக் கணக்கானவர்களையே கூட 18 மாதங்களுக்கோ அல்லது அதற்கும் கூடுதலாகவோ போலிஸ் காவலின் கீழ் முறுக்குக்கம்பிக்குப் பின்னால் அடைத்து வைக்கக்கூடும்.

இந்த முகாம்கள், துரதிருஷ்டவசமாக அவர்களிடம் அகப்பட்டு கொண்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒவ்வொரு அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் மீறி, அடிப்படை சட்ட கட்டமைப்புகளுக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும். அதில் அடைக்கப்படுபவர்கள் அவர்களின் தஞ்சம் கோரும் உரிமையைக் கோருவதற்காக குற்றவாளிகளாக நடத்தப்பட்டு, மிகவும் அவமானகரமாக, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவார்கள்.

இந்த புதிய தடுப்புக்காவல் மையங்களில் அடைக்கப்படுபவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அடைக்கப்பட்டிருப்பார்கள் என்கின்ற நிலையில், ஜேர்மன் அரசாங்கமோ, இவை "அடைக்கப்பட்ட முகாம்களாக" இருக்காது என்று அறிவித்து, பெருந்திரளான மக்களை அடைத்து வைக்கும் ஜேர்மனியின் முந்தைய அனுபவங்களின் வரலாற்று சமாந்தரங்களில் இருந்து தன்னை விலக்கி கொள்ள முனைகிறது.

அது அதன் குற்றங்களை அதிகாரத்துவ வார்த்தைகளுக்குப் பின்னால் மறைத்துக் கொள்ள முயல்கிறது. மிக சமீபத்தில் நடந்து முடிந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டு தீர்மானங்கள் மீதான ஓர் அரசு ஆவணம் அறிவிக்கையில், “பொறியில் சிக்க வைக்கும் கட்டுப்பாடுகளை அதிகளவில் பயன்படுத்துவதும், இதர பிற புத்திசாலித்தனமான எல்லை போலிஸ் அணுகுமுறைகளும் யூரோடேக் [ஐரோப்பிய ஒன்றியத்தின் கைரேகை தரவுத்தளம் - EURODAC] எல்லைக்கு அருகே பிடிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும், இவர்கள் உடனடியாக சிறப்பு உள்நுழைவு விசாரணை கூடங்களில் விசாரணைக்கு அனுப்பப்படலாம்,” என்று குறிப்பிட்டது.

ஜேர்மன் அரசாங்கத்தின் திட்டங்களின்படி, நாசூக்காக “அகதிகளின் விபர சேகரிப்பு மையங்கள்" என்றழைக்கப்படும் கிரீஸ் மற்றும் இத்தாலியில் உள்ள அகதி முகாம்கள் இப்போது ஐரோப்பா எங்கிலும் விரிவாக்கப்பட உள்ளன. ஜேர்மன் உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீகோவரின் "மாபெரும் புலம்பெயர்வு திட்டம்" என்ற வரைவு, “இத்தாலி மற்றும் கிரீஸின் வரவேற்பு மையங்களை உறுப்பு நாடுகள் போதுமான பணியாளர்களைக் கொண்டு விரிவாக்க ஒத்துழைக்க வேண்டும்,” என்று குறிப்பிடுகிறது.

“அகதிகளின் விபர சேகரிப்பு மைங்கள்,” “பொறி,” (dragnet) “மாபெரும் திட்டம்" என பெருந்திரளான அப்பாவி மக்களை அடைத்து வைப்பதற்கான இத்தகைய நாசூக்கான வழக்குமொழிகள், அவர்களால் அடைத்து வைக்கப்படுபவர்களுக்காக தயாரிக்கப்பட்டு வருகின்ற கொடூரங்களில் வெறும் ஒன்று மட்டுமே ஆகும்.

லெஸ்பொஸ் எனும் கிரேக்க தீவில் அமைக்கப்பட்டுள்ள ஓர் ஐரோப்பிய ஒன்றிய "அகதிகள் விபர சேகரிப்பு" முகாமான மொரியா முகாம் குறித்து Frankfurter Allgemeine Sonntagszeitung எழுதுகையில், “இரும்பு வடங்களைச் சதுரசதுரமாக ஒன்றோடொன்றை பின்னி, நான்கு, ஐந்து மீட்டர் உயரங்களுக்கு" இருப்பதாக எழுதியது. “வேலிகள் சுருள்சுருளான முறுக்குக்கம்பிகளால் சுற்றப்பட்டுள்ளன, முகாமின் எல்லா நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளன, மார்பை ஒட்டி கையிலேந்திய துப்பாக்கிகளோடு காவலர்கள் நிற்கின்றனர்.” அந்த முகாமுக்கு உள்ளேயும் கூட, 7,500 பேர் பாரியளவில் அளவுக்கதிகமாக குவிக்கப்பட்டு, கண்கூடாகவே ஒரு "நரகத்திற்கு" ஒத்துள்ளது, இதில் ஜெனீவா சாசனமும் அடிப்படை உரிமைகளும் கைத்துறக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கொடூரங்களை சீகோவர் ஒரு "மாபெரும் திட்டம்" என்றும், “நங்கூர மையங்கள்" என்றும் வர்ணிக்கிறார் என்றால், ஏற்கனவே ஹிட்லர் "இறுதி தீர்வு" மற்றும் "சித்திரவதை கூடங்கள்" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்பதால் தான்.

இந்த மகா கூட்டணியின் புதிய அகதிகள் திட்டமானது, சட்டதிட்டங்கள் எதுவுமில்லாத சிறை முகாம்களை உருவாக்குவதற்கான நடைமுறைக்கு அடித்தளத்தை வழங்குகிறது. திட்டமிட்டு "உள்நுழையும் நடைமுறைகளின்" போது, அந்நபர்கள் "ஜேர்மனிக்குள் சட்டபூர்வமாக நுழைவதில்லை" என்று அக்கூட்டணியின் ஆவணம் குறிப்பிடுகிறது. இந்த பிற்போக்குத்தனமான சட்டக் கட்டுமானத்தைக் கொண்டு, அமெரிக்காவின் குவாண்டனாமோ வளைகுடா சிறை முகாமைப் போலவே, சட்டப்பூர்வமாக நாட்டின் எல்லைப்பகுதிக்குள் இல்லாத, சட்டதிட்டங்கள் இல்லாத எல்லைப்புற மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, நடைமுறையளவில் சட்ட வெற்றிடத்தைக் கொண்டிருக்கும் அவற்றில் போலிஸிற்கு சுதந்திரமான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கும்.

முற்றிலுமாக மனித மதிப்பை அவமதிப்பது, மனித உரிமைகளை மிகவும் வெட்கமின்றி மீறுவது, அதிர்ச்சியில் உறைய வைக்கும் அதிகளவிலான குற்றங்களையே கூட மூடிமறைக்க அதிர்ச்சியூட்டும் அதிகார மொழிகளைப் பிரயோகிப்பது—இவை அனைத்திலும் 1930 களின் துர்நாற்றம் வீசுகிறது. ஐரோப்பாவில் முதலாளித்துவ ஜனநாயகம் முறிந்து வருகிறது என்பதோடு, அது அதிகரித்தளவில் சர்வாதிகார ஆட்சி வடிவங்களைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட்டு வருகிறது.

“அன்னை" அங்கேலா மேர்க்கெல் தலைமையில் அதன் "வரவேற்கும் கலாச்சாரம்" எனப்படுவதோடு சேர்ந்து, ஜேர்மனியில் எது உண்மையாக இருக்கிறதோ அதுவே ஒட்டுமொத்த உலகிலும் உண்மையாக உள்ளது. இத்தாலியில், மத்தேயோ சல்வீனியின் நவ-பாசிசவாத அரசாங்கம் ரோமா மக்களின் கூட்டம் கூட்டமாக சுற்றி வளைப்பதற்கான தயாரிப்பில் அவர்களைக் கணக்கெடுத்து வருகிறது. அமெரிக்காவில், புலம்பெயர்ந்த குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு, கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிரீஸில், “தீவிர இடது" சிரிசா அரசாங்கத்தின் கீழ், ஐரோப்பா எங்கிலுமான அகதிகள் பாரிய தடுப்புக்காவல் முகாம்களில் சுற்றி வளைத்து அடைக்கப்பட்டுள்ளனர்.

உலகெங்கிலும், ஒவ்வொரு முதலாளித்துவ தேசிய-அரசின் துளைகளில் இருந்து இதே அழுகிய அருவருப்பான நாற்றமும், குற்றகரத்தன்மையின் இதே துர்நாற்றமும் தான் வீசிக் கொண்டிருக்கிறது. நிராயுதபாணியான நூற்றுக் கணக்கான பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்களை இஸ்ரேல் படுகொலை செய்தமை பகிரங்கமாக பாதுகாக்கப்படுகிறது, அமெரிக்காவின் ஆதரவுடன் சவூதி அரேபியாவால் நூறாயிரக் கணக்கான யேமன் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை சர்வசாதாரணமாக புறக்கணிக்கப்படுகிறது.

1930 களில் லியோன் ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில் கூறுவதானால், ஆளும் வர்க்கங்கள் உலகை ஒரு "வெறுப்புமிக்க சிறைக்கூடமாக" மாற்றிக் கொண்டிருக்கின்றன.

முதலாளித்துவ கட்சிகளின் இத்தகைய குற்றகரமான கொள்கைகள் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் மனித உணர்வுகளுடன் கூர்மையாக முரண்பட்டு நிற்கின்றன. பாசிசவாதிகளின் அகதிகள் கொள்கையை இந்த மகா கூட்டணி தழுவியமை ஞாயிறன்று ஜேர்மனி எங்கிலும் பத்தாயிரக் கணக்கானவர்களின் போராட்டங்களைச் சந்தித்தது, அதேவேளையில் அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகம் அகதிகளைக் காட்டுமிராண்டித்தனமாக கையாள்வதற்கு எதிராக அங்கே நூறாயிரக் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றினர்.

உலகெங்கிலுமான தொழிலாளர்களின் மனிதாபிமான மற்றும் ஜனநாயக உணர்வுகளை, அவர்களின் சமூக நலன்களை வெளிப்படுத்தும் ஓர் அரசியல் வேலைத்திட்டத்துடன் இணைப்பதே இப்போதைய பணியாகும். புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளின் பாதுகாப்பை போர், சமூக சமத்துவமின்மை, வீழ்ச்சி அடைந்து வரும் கூலிகள் மற்றும் சமூக திட்டங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான எதிர்ப்புடன் இணைக்கப்பட வேண்டும்.

நான்காண்டுகளுக்கு முன்னர், முதன்முதலில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei—SGP) தான், “ஹிட்லர் வக்கிரமானவர் அல்லர்" என்று அறிவித்த ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி போன்ற கல்வியாளர்களை உத்தியோகபூர்வமாக ஊக்குவிப்பதன் மூலமாக ஸ்தாபக கட்சிகள் நவ-பாசிசவாத அரசியலைத் தழுவுகின்றன என்பதைக் குறித்து எச்சரிக்கை ஒலி எழுப்பியது.

மனிதயினத்தை 1930 களின் பாசிசவாத சாக்கடைக்குள் இழுத்து சென்று கொண்டிருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கியெறிய சோசலிச வேலைத்திட்டத்தை ஒரு மத்திய கொள்கையாக ஏற்று, அகதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில், இப்போது ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) இந்த மகா கூட்டணிக்கு எதிரான எதிர்ப்பை ஒழுங்கமைக்கும் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்து வருகிறது.