Print Version|Feedback
More than 200 people drown in the Mediterranean at the weekend
கடந்த வார இறுதியில் 200 க்கும் அதிகமானவர்கள் மத்திய தரைக்கடலில் மூழ்கி இறந்தனர்
By Marianne Arens
4 July 2018
அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் இயக்கும் மீட்பு கப்பல்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தீவிரமாக தடைசெய்ய தொடங்கிய பின்னர் மத்திய தரைக்கடல் பகுதி ஒரு மாபெரும் புதைகுழியாக மாறி வருகிறது. கடந்த வார இறுதியில் வெறும் மூன்று நாட்களில் 204 புலம்பெயர்ந்தவர்கள் அங்கு மூழ்கி இறந்துள்ளதாக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (International Organization for Migration-IOM) பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற போது கடலில் மூழ்கி இறந்தோர் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 28, வெள்ளியன்று, மூன்று குழந்தைகள் உட்பட 103 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர், அதனைத் தொடர்ந்து சனியன்று மேலும் 38 பேர் பலியாகினர். அவர்களும் மூழ்கி இறந்திருக்கலாம் அல்லது தொலைந்திருக்கலாம் என்று உயிர்தப்பியவர்கள் தெரிவித்தனர். மூன்று குழந்தைகளின் உடல்களை ஏந்திச் செல்லும் லிபிய கடலோரக் காவல்படை உறுப்பினர்களின் புகைப்படம் சமூக ஊடகங்கள் மூலம் பரவலாக பரவி விட்டது. ஞாயிறன்று, லிபிய கடலோரக் காவல்படையினர், கடலில் இருந்து 41 உயிர்தப்பியவர்களை மீட்டெடுத்து லிபியாவிற்கு திரும்பக் கொண்டு சேர்த்த பின்னர், மற்றொரு 63 பேர் மூழ்கி இறந்துள்ளதும் பதிவு செய்யப்பட்டது.
IOM, திரிபோலி அருகே அல்-கோம்ஸ் நகரில் உயிர்பிழைத்தவர்களிடம் அதன் அதிகாரிகள் பேசிய பின்னர் இந்த புள்ளிவிபரத்தை வெளியிட்டது. ஒரு வாரம் முன்பு, மத்திய தரைக்கடலில் 220 புலம்பெயர்ந்தவர்கள் மூழ்கி இறந்தமையானது இறந்தோர் எண்ணிக்கையை வெகு சில நாட்களில் 400 க்கும் அதிகமாக்கியது. இருப்பினும், IOM, பதிவு செய்யப்பட்டவற்றை மட்டும் ஆவணப்படுத்துகிறது என்ற நிலையில், உண்மையில் இறந்தோர் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கக்கூடும்.
அல்-கோம்ஸ் இல் உள்ள IOM பிரதிநிதி உதுமான் பெல்பெய்சி, மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தவர்கள் வெளியேறமுடியாத முகாம்களுக்கு அனுப்பப்பட்டு வந்தனர் என்பதுடன், அத்தகைய முகாம்களின் நிலைமைகளும் தொடர்ந்து மிகவும் மோசமடைந்து கொண்டிருந்ததால் IOM அதுபற்றி “மிகவும் கவலையடைந்தது” எனத் தெரிவித்தார். வெள்ளியன்று மீட்கப்பட்ட பதினாறு இளைஞர்கள் உடனடியாக தாஜூராவில் உள்ள ஒரு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் காம்பியா, சூடான், நைஜர், கினியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்கள். கடந்த சில நாட்களில், சுமார் ஆயிரம் பேரை லிபிய கடலோரக் காவல்படையினர் தடுத்து வைத்து, ஐரோப்பாவிற்குள் அவர்களை நுழையவிடாமல் தடைசெய்துள்ளனர்.
கடலில் மூழ்கி இறப்பவர்கள் எண்ணிக்கையின் இந்த பாரிய அதிகரிப்பு என்பது ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட சமீபத்திய முடிவுகளின் ஒரு நேரடி விளைவாகும். கடந்த வாரம், புரூசெல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களின் தலைவர்கள் கூட்டம், ஐரோப்பாவினுள் உள்ளேவரமுடியாது மூடி வைக்கவும், ஃபிரொன்டெக்ஸ் எல்லை பொலிஸை பாரியளவில் வலுப்படுத்தவும், மேலும் லிபிய கடலோரக் கடல்படையினருடன் இன்னும் நெருக்கமாக இணைந்து செயலாற்றவும் முடிவு செய்தது. எதிர்காலத்தில் ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் போது கைது செய்யப்படுபவர்கள் கண்கூடாகவே சித்திரவதை முகாம்களுக்குள் தள்ளப்படுவர். கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ரஸ் (சிரிசா) மற்றும் சமூக ஜனநாயகவாத பெட்ரோ சான்செஸ் (ஸ்பெயின்) மற்றும் ஜோசப் மஸ்கட் (மால்டா) உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் அரசியல்வாதிகளும் புரூசெல்ஸில் வகுக்கப்பட்ட இந்த குற்றவியல் கொள்கைக்கு ஆதரவளித்தனர்.
அரசுசாரா நிறுவனங்களின் கப்பல்களின் உதவிப்பணிகளை ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுமென்றே குற்றம்சாட்டுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய பொதுமக்கள் மீட்பு சேவைக்கு ஐரோப்பிய ஒன்றியம் இடையூறு செய்வதுதான் உண்மையில் கடலில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கையின் கடுமையான அதிகரிப்புக்கான நேரடி காரணமாக உள்ளது. அத்துடன், அரசுசாரா நிறுவனங்களின் கப்பல்கள் துறைமுகத்தை விட்டு வெளியேறுவதை ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் தடுத்து வருகின்ற காரணத்தால் புலம்பெயர்ந்தோரின் பாரிய படுகொலைக்கான மறைமுக காரணமாகவும் அவை உள்ளன.
மால்டாவில், அரசுசாரா நிறுவனங்களின் கப்பலான Lifeline, See Fox மற்றும் Sea-Watch 3 தற்போது துறைமுகத்திற்குள் வர தடை செய்யப்பட்டுள்ளன, அதே வேளையில், சில நாட்களுக்கு முன்பு ஸ்பெயினுக்கு செலுத்தப்பட்ட 600 க்கும் அதிகமான அகதிகளுடன் தத்தளித்த Aquarius மீட்பு கப்பல் தற்போது மார்செயில் நங்கூரமிட மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்தாலி, பிரான்ஸ் மற்றும் மால்டா என அனைத்து நாடுகளும் அவர்களது துறைமுகங்களுக்குள் அரசுசாரா நிறுவனங்களின் கப்பல்கள் நுழைய தடைவிதித்துள்ள நிலையில், 59 புலம்பெயர்ந்தோரை மீட்டுள்ள ஸ்பானிய அரசுசாரா நிறுவன கப்பலான Open Arms ஐ பார்சிலோனாவிற்கு நீண்டதூர பயணம் செய்யும் நிலைக்கு தள்ளியுள்ளது.
“பாதுகாப்பாளர்களை குற்றவாளிகளாக மாற்றியுள்ள நிலையில் நாம் எந்த வகையான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?” என்று வெலேட்டாவில், திங்களன்று, Lifeline கப்பல் கேப்டன் கிளாஸ்-பீட்டர் ரெய்ஸ்ச் கேள்வி எழுப்பினார். மேலும், மக்கள் இறப்பதை தடுப்பதை விட்டு, அவர்களின் பாதுகாப்பாளர்களுக்கு எதிராக இருக்கும் இந்த உலகம் எந்த வகையானது?” என்றும் கேட்கிறார்.
திங்களுக்கு பின்னர் மால்டாவில் இந்த 57 வயது ரெய்ஸ்ச் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதுடன், 10,000 யூரோக்கள் அபராதம் செலுத்தாவிட்டால் தீவை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளார். அவரது கடவுச்சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரது நிறுவனத்தின் கப்பலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, மேலும் மூன்று பேர் என மட்டுப்படுத்தப்பட்ட குழு மட்டுமே கப்பலுக்குள் நுழைய முடியும். அடுத்த விசாரணை ஜூலை 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒராண்டாக மட்டும் மத்திய தரைக்கடல் பகுதியில் தீவிரமாக செயலாற்றி வரும் Lifeline கப்பல், Dresden Mission Lifeline நிறுவனத்தின் மூலம் தனிப்பட்ட முறையில் இயக்கப்படும் மீட்பு கப்பலாகும். இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் அக்கப்பல் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கானவர்களின் உயிரை காப்பாற்றியுள்ளது. Dresden Opera House மற்றும் ஜேர்மன் பொப் பாடல் குழுவான Die Arzte இயங்கும் நிறுவனங்களால் பெறப்படும் நன்கொடைகள் மூலம் Mission Lifeline மீட்புக் கப்பல் நிதியளிப்பு பெறுகின்றது.
Lifeline கப்பல் நுழைய ஐரோப்பிய துறைமுகங்கள் அனுமதி தர மறுத்த நிலையில் மத்திய தரைக்கடலில் ஒரு ஆறு நாள் ஆபத்தானபயணத்தின் பின்னர், இறுதியாக ஜூன் 28 அன்று, மால்டாவின் தலை நகரம் வெலேட்டாவில் ரெய்ஸ்ச் ஆல் கப்பலை தரையிறக்க முடிந்தது. இந்நிலையில், மால்டா அதிகாரிகள், ஒரு பதிவு செய்யப்படாத கப்பலை மால்டிஸ் கடல்பகுதியை கடந்து ரெய்ஸ்ச் கொண்டு வந்துள்ளார் என அவர் மீது குற்றம் சாட்டினர். உண்மையில், இந்த Lifeline கப்பல், ராயல் டச்சு நீர் விளையாட்டு சங்கத்தில் (Royal Dutch Water Sports Association) பதிவு செய்யப்பட்டுள்ளது, இது டச்சு கொடியின் கீழ் 500 டன் எடையுடன் பயணிக்க கப்பலை அனுமதிக்கிறது.
கேப்டன் ரெய்ஸ்ச் ஐ பொறுத்தவரை, அவருக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுக்கள் வெறுமனே ஒரு சாக்குப்போக்காகத் தான் உள்ளன. “நான் 234 உயிர்களை காப்பாற்றியுள்ளேன். நான் எனது உயர் அதிகாரிகளுடன் இந்த வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்கவிருக்கிறேன், மேலும் அதனால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.” உண்மையில், அரசியல் காரணங்களுக்காக ஆயிரக்கணக்கான அகதிகள் இறந்து போகும் நிலைக்கு தள்ளிய ஐரோப்பிய ஒன்றியம் தான் குற்றவாளியாகும். “நாங்கள் இயங்கமுடியாது இருக்கும் அதே வேளையில் மத்திய தரைக்கடலில் மக்கள் மூழ்கி இறப்பது இன்னும் தொடர்கிறது” என்று ரெய்ஸ்ச் கூறினார். அவர் மால்டிஸ் நீதித்துறையை விமர்சித்ததுடன், தொடர்ந்து குடியேறுபவர்களை கொலை செய்வதற்கு பொறுப்பாகவுள்ள லிபிய கடலோரக் காவல்படைக்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். லிபிய கடலோரக் காவலர் தனது குழுவை ஏற்கனவே அச்சுறுத்தி வருவதுடன், சமீபத்தில் அவர்களை கொன்றுவிடவும் அச்சுறுத்தியுள்ளனர்.
லிபிய கடலோரக் காவல்படையைப் பொறுத்தவரை, ஐரோப்பிய ஒன்றியமும், மால்டா அரசாங்கமும், இத்தாலிய உள்துறை மந்திரி மத்தேயு சல்வீனி (லெகா), ஐந்து நட்சத்திர இயக்கத் தலைவர் லூய்கி டி மாயோ மற்றும் ஜேர்மன் உள்துறை மந்திரி ஹோர்ஸ்ட் சீஹோவர் (கிறிஸ்துவ சமூக ஒன்றியம், CSU) ஆகியோரின் தர்க்கத்தை ஏற்றுக் கொண்டன. இந்த தர்க்கத்தின் படி, லிபிய கடலோரத்தில் சேதத்தில் சிக்கி தத்தளித்த அந்த கப்பலை NGO க்கள் மீட்டனர் என்றாலும் கூட, அவர்கள் ஒரு வடிவிலான கடத்தல்காரர்களாகவே செயல்படுகின்றனர் என்பதாகும். “மத்திய தரைக்கடல் டாக்சிகள்” (டி மாயோ), “லிபியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே செலுத்தப்படும் கப்பல்” (சீஹோவர்), மற்றும் “மனித இறைச்சியை” சுமக்கும் போக்குவரத்துக்காரர்கள் (சல்வீனி) என்ற வகையில் NGO கப்பல்கள் கண்டனம் செய்யப்பட்டுள்ளன. லிபிய கடலோரப் பகுதிகளில் தன்னார்வலர்களின் அனைத்து கடல் மீட்பு நடவடிக்கைகளை நிறுத்தவும், லிபிய கடலோரக் காவல்படையை அங்கு சுதந்திரமாக இயங்க அனுமதிக்குமாறும் பதிலடி கொடுக்கவும் தன்னார்வலர்களை அரசியல்வாதிகள் கோருகின்றனர்.
இது, கைதிகளை சித்திரவதைக்கு உட்படுத்திய, துஷ்பிரயோகம் செய்த, அடிமைப்படுத்திய, அத்துடன் அவர்களைக் கொன்று குவித்ததுமான, “பூமியில் நரகம்” என இழிபுகழ்பெற்ற லிபிய தடுப்புக் காவல் மையங்களில் இயங்கும் அதே கடலோரக் காவல்படை ஆகும். அத்தகைய நிலையங்களில் “சித்திரவதை முகாம் போன்ற நிலைமைகள்” நிலவுகின்றன. அது நைஜர் தலைநகரம் நயமேயில் உள்ள தடுப்பு மையங்கள் மீதான ஜேர்மனிய தூதரின் ஒரு அறிக்கையை சுட்டிக்காட்டிய ஜேர்மன் வெளியுறவு அலுவலகத்தின் உத்தியோகபூர்வ தகவலில் இருந்து இந்த சொற்கள் வெளிவருகின்றன. ஜேர்மனிய அதிபர் அலுவலகத்திற்கும் இந்த அறிக்கை கிடைக்கக்கூடியது தான் என்பதுடன், ஐரோப்பிய ஒன்றிய அரசியல்வாதிகளுக்கும் இது நன்கு தெரியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
லிபிய அரசாங்கம் மற்றும் கடலோரக் காவல்படை ஆகியவற்றிற்கு நிதியளிப்பதன் அடிப்படையில் எல்லா வகையிலும் அகதிகள் ஐரோப்பாவை அடைய முடியாமல் தடுத்து வைக்கும் ஐரோப்பிய ஒன்றிய கொள்கை என்பது தெளிவாக சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். இது, சர்வதேச அகதிகள் சட்டத்தின் ஒரு முக்கிய கூறுபாடான நாடு கடத்தலுக்கு (non-refoulement) தடை விதிக்கிறது, கடுமையான மனித உரிமை மீறல்களை மக்கள் எதிர்கொள்ளும் நாடுகளுக்கு அவர்களை திருப்பி அனுப்பக் கூடாதென இது தெரிவிக்கிறது. ஜெனீவா அகதிகள் மாநாடு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய மாநாடு இரண்டிலும் இது குறித்து ஆழமாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிய கொள்கை மீதான கோபமும் எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது. திங்களன்று வெலேட்டாவில், Lifeline வழக்கு விசாரணை நடைபெறும் நீதிமன்ற வாயிற் பகுதியில் பதாகைகள் வரிசையாக ஏந்தப்பட்டிருந்தன. ஒன்றில் “மீட்பு கப்பல்கள் தடுக்கப்பட்டுள்ளனர் — விளைவு 400 க்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர்” என்றும், மற்றொன்றில் “கடலில் மீட்பு என்பது ஒரு குற்றம் அல்ல” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
வெள்ளியன்று, ஜேர்மன் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடாத்தும் பிரபல்யமான ஜான் போமர்மான், Lifeline வழக்கிற்காக ஒரு நிதி திரட்டல் பிரச்சாரத்தை தொடங்கினார். “உண்மையில் 230 க்கும் அதிகமான உயிர்களை அவர்கள் காப்பாற்றியுள்ளனர்” என்றாலும், உள்துறை மந்திரி சீஹோவரின் ஊக்குவிப்பினால், கேப்டனும் குழுவினரும் ஜேர்மனியில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளக்கூடும் என போமர்மான் சுட்டிக்காட்டினார். வெறும் மூன்றே நாட்களில், வழக்கறிஞர் கட்டணங்களுக்காக 88,000 யூரோக்களுக்கு கூடுதலான நிதியை அவர் திரட்டினார்.
மேலும் வெள்ளியன்று, ரோமில் ஒலிம்பியா அரங்கில் ராக் பேண்ட் பேர்ல் ஜாம் இசைக்குழு ஒரு கச்சேரி வழங்கியது. இசைக்குழுவின் தலைவர் எட்டி வேடர், ஜோன் லெனன் எழுதிய “இமேஜின்” பாடலை பாடிய போது, 70,000 பார்வையாளர்கள் கடல் பாதுகாப்பு குழுவினர் உடனான தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்த அவர்களது கைத்தொலைபேசி விளக்குகளை ஒளிரச் செய்தனர், அப்போது திரையில் Aprite i porti (துறைமுகங்களை திறவுங்கள்) என்ற வாசகம் தோன்றியது. Aprite I porti பிரச்சாரம், சல்வீனியின் பதவியேற்பு நிகழ்வின்போது தொடங்கப்பட்டது என்பதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின், ஐரோப்பிய கோட்டை கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களுக்கும், உள்ளிருப்பு போராட்டங்களுக்கும் அது அழைப்பு விடுக்கிறது.