ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UK: Ian Paisley suspension exposes efforts to assist cover-up of Sri Lankan bloodbath

ஐக்கிய இராச்சியம்: இயான் பேஸ்லி இடைநீக்கம் இலங்கை இரத்தக்களரியை மூடிமறைப்பதில் உதவ நடந்த முயற்சிகளை அம்பலப்படுத்துகிறது

By Steve James
28 July 2018

பிரிட்டனின் மக்களவை நிர்ணயங்கள் குழு (House of Commons Standards Committee), வட அயர்லாந்தில் இருக்கும் வடக்கு ஆண்ட்ரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான இயான் பேஸ்லி ஜூனியரை செப்டம்பர் 4 முதலான 30 நாட்களுக்கு இடைநீக்கம் செய்திருக்கிறது. “மக்களவைக்கு அவமதிப்பை கொண்டுவரும் விதமான” நடவடிக்கைகளின் மூலமாக “தீவிர நடத்தைத்தவறினை” பேஸ்லி இழைத்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 1949க்குப் பின்னர் இத்தகையதொரு நீண்டகாலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்ற மூன்றே மூன்று எம்பிக்களில் பேஸ்லியும் ஒருவராகியிருக்கிறார்.

இந்த நடவடிக்கையானது, நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு பேஸ்லியின் கட்சியான பிரெக்ஸிட் ஆதரவு ஜனநாயக ஒன்றியவாதக் கட்சியை (Democratic Unionist Party - DUP) சார்ந்திருக்கும் தெரசா மேயின் எளிதில் உடைந்துநொருங்கத்தக்க பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஆபத்தில் நிறுத்தியிருக்கிறது. “மேலதிக விசாரணை நிலுவையில்” இருக்கின்ற நிலையில் DUP கட்சியில் இருந்தும் பேஸ்லி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

பாராளுமன்றத்தில் இருக்கும்போதே பதவியிலிருந்து திருப்பியழைப்பு இடைத்தேர்தல் சவாலுக்கு முகம்கொடுக்கப் போகும் முதல் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினராகவும் அவர் அநேகமாக இருக்ககூடும். நாடாளுமன்ற மறுஅழைப்பு சட்டத்தின் படி, திருப்பியழைப்பு மனுக்கள் வடக்கு ஆண்ட்ரிம் தொகுதி வாக்காளர்களுக்கு ஆறு வார காலத்திற்கு கையெழுத்திடுவதற்கு கிடைக்கும்படி செய்யப்பட வேண்டும். வாக்காளர்களில் 10 சதவீதம் பேர் ஒரு திருப்பியழைப்பு இடைத்தேர்தலுக்கு ஆதரவாக வாக்களிப்பார்களேயானால், ஒரு பொதுத்தேர்தல் அடுத்த ஆறு மாதங்களுக்குள் நடைபெறாத பட்சத்தில், அந்த இடைத்தேர்தல் கட்டாயம் நடத்தப்பட்டாக வேண்டும்.

அவருக்கு இலங்கை அரசாங்கத்தின் செலவில் வழங்கப்பட்ட இரண்டு ஆடம்பர விடுமுறைகளை பேஸ்லி குறிப்பிடத் தவறியிருந்ததை நிர்ணயங்கள் குழு கண்டறிந்தது. 2013 பயணங்களில் “முதல்தர-வகுப்பு விமானப் பயணம், உயர்தர நட்சத்திர அந்தஸ்து விடுதிகளில் தங்கும் ஏற்பாடு, ஹெலிகாப்டர் பயணங்கள் மற்றும் திரு.பேஸ்லிக்கும் அவரது பெரிய குடும்பத்தாருக்கும் சுற்றுலாத் தலங்களுக்கான பயணங்கள்” ஆகியவை இடம்பெற்றிருந்ததாக குழு தெரிவிக்கிறது.

அதற்குப் பின்னர், 2014 இல், இலங்கையில் இரத்தம்தோய்ந்த உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களின் சமயத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்திற்கு பிரிட்டன் ஆதரவளித்ததை விமர்சனம் செய்து, பிரதமர் டேவிட் கேமரூனுக்கு எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் பேஸ்லியும் கையெழுத்திட்டிருந்தார்.

இலங்கையின் பல தசாப்தங்கள் நீண்ட மோதலானது, 2009 இல், பல பத்தாயிரக்கணக்கிலான முக்கியமாக தமிழ் மக்களும், அவர்களுடன் பிரிவினைவாத விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களும் அரசாங்கப் படைகளால் படுகொலை செய்யப்படுவதில் சென்று முடிவடைந்தது. “மோதலின் இரு தரப்பிலும் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட மீறல்கள் குறித்த உண்மையை வெளிக்கொணர ஒரு சர்வதேச விசாரணைக்கு” UNHRC தீர்மானம் அதிகாரமளித்தது.

பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களின் 2014 கடிதமானது “இலங்கையின் உள் விவகாரங்களையும், அதன் மோதலுக்குப்பிந்தைய நிகழ்முறையையும் சர்வதேசிய விவகாரமாக்குவதற்கான HMG [Her Majesty’s Government – மகாகனம் பொருந்திய அரசாங்கம்] இன் முடிவை எச்சரிப்புடன்” குறிப்பிட்டிருந்தது.

தான் எது தொடர்பாக பேசுகிறார் என்பது பேஸ்லி ஜூனியருக்கு நன்றாகத் தெரியும். பேஸ்லி ஜூனியர் புரொட்டஸ்டாண்ட் வார்த்தையாடியும், கடும்-வலது குழுவைச் சேர்ந்த சகிப்பற்ற மனிதரும் வட அயர்லாந்தின் முன்னாள் பிரதமருமான இயான் பேஸ்லி பாதிரியாரின் புதல்வராவார். மூத்த பேஸ்லி வட அயர்லாந்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் குறுங்குழுவாத “அழுக்குப் போர்” இல் உதவுவதற்கு பிரிட்டிஷ்-ஆதரவு அரசு விசுவாச துணைஇராணுவக் குழுக்களது ஒரு அரசியல் கூட்டாளியாகவும் குரலாகவும் DUP ஐ ஸ்தாபித்தார். அவரது ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையுமே அயர்லாந்தின் உழைக்கும் வர்க்கத்தில் மதவாதப் பிளவுகளை வலுப்படுத்துவதற்காய் கத்தோலிக்கர்களுக்கு எதிரான புரொட்டஸ்டாண்ட் தப்பெண்ணங்களை கிளறி விடுவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

பிரிட்டிஷ் ஆயுத மற்றும் உளவுப் படைகள் நடத்திய பெரும் கொடூரமானதும் நிகரற்ற கேடுகெட்டதுமான ஒரு பல தசாப்த கால போர் 3,000க்கும் அதிகமான உயிர்களை காவு வாங்கியிருந்தது. 1998 இல் வட அயர்லாந்தில் பிரிட்டிஷ்-கட்டுப்பாட்டிலான நிர்வாகத்தில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்கு ஐக்கியவாதிகள் மற்றும் தேசியவாதிகள் இருவருக்குமே பாதை வகுத்துத் தந்த புனித வெள்ளி உடன்பாட்டுடன் தான் இந்த “கலவரங்கள்” முடிவுக்கு வந்தன.

“வட அயர்லாந்திலான மோதல் சர்வதேசிய பிரச்சினையாக்கப்படுவதை சரியானவிதத்திலும் உறுதியாகவும்” ஐக்கிய இராச்சியம் எதிர்த்திருந்ததாக மட்டும் எம்பிக்களது கடிதம் குறிப்பிட்டது. இதே அணுகுமுறை இலங்கை விடயத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த முன்னாள் பிரிட்டிஷ் காலனியானது “பல தசாப்தங்களாக ஐக்கிய இராச்சியத்தின் நட்பு நாடாக இருந்து வருவதாக” சுட்டிக்காட்டிய அந்தக் கடிதம் “அந்நாட்டின் அரசாங்கம் பால்க்லாந்தினை பாதுகாப்பதில் ஐக்கிய இராச்சியத்தை ஆதரித்தது, நாம் அவர்களுடன் கூடுதல் இசைவுடன் நடந்து கொள்ள வேண்டும்” என்றது.

“அவர்கள் 40 ஆண்டு கால மோதலில் இருந்து எழுந்து வந்திருக்கின்றனர்” ஆகவே “கடந்த காலத்தில் இருந்து மீண்டு வருவதற்கு அவர்களுக்கு போதுமான அவகாசம் அளிக்கப்பட வேண்டும் அத்துடன் ஐ.நா கூறுவதைப்போல் அச்சுறுத்தி பணிய வைப்பதாக இல்லாமல், மோதலுக்கான தீர்வினைப் பின்பற்றுவதற்கு அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்” என்று அக்கடிதம் தொடர்ந்தது.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மஹிந்த இராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கம் போரின் இறுதிக்கட்டங்களில் ஒழுங்கமைத்த மற்றும் அமுல்படுத்திய இரத்தக்களரியை விசாரணை செய்வது அப்போதைய மஹிந்த இராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கத்திடமே விடப்பட்டிருக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்க்க விரும்பிய அந்த UNHRC அறிக்கை 2015 இல் வெளியிடப்பட்டது. 261 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கை, “ஒட்டுமொத்த குடும்பங்களும் கொல்லப்படும்படியான குண்டுவீச்சுகளது படுகொலை, இரத்தக்களரி மற்றும் உளவியல்ரீதியான மனஅதிர்ச்சி குறித்த ... மனதை உறையச் செய்யும் விவரிப்புகளை” பற்றிக் குறிப்பிட்டது.

அப்பாவி மக்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்த முழுமையான மதிப்பீடு எதுவும் சாத்தியமாகவில்லை, ஆயினும் “அநேகமாய் பல பத்தாயிரக்கணக்கானோர் தமது உயிரை இழந்திருக்கின்றனர்.” “சர்வதேசக் குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கக்கூடிய சாத்தியத்தை” சுட்டிக்காட்டுகின்ற விதமான “ஒட்டுமொத்தமான மனித உரிமை மீறல்களும் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் மீதான தீவிர மீறல்களும் இழைக்கப்பட்டமை, அவற்றின் திட்டமிட்ட தன்மையின் அடையாளங்கள், இவற்றுடன் தாக்குதல்கள் பரவலாக நடாத்தப்பட்ட தன்மை ஆகியவற்றின் மாதிரிவடிவங்கள்” குறித்து அறிக்கை விவரித்தது.

மோதலுக்குப் பிந்திய காலத்திலான, “நீதியமைப்புக்கு வெளியிலான கொலைகள், பலவந்தமாக காணாமல்போதல்கள், கடத்தல்கள், சட்டவிரோத கைதுகள் மற்றும் தன்னிச்சையான சிறையிலடைப்புகள், பல ஆண்டுகளாக அரசாங்கப் படைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய துணைஇராணுவ அமைப்புகள் தண்டனைப் பயமின்றி இழைத்து வருகின்ற சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை போன்வற்றின் விரிந்த மற்றும் சாதாரணமாகி விட்ட வடிவங்கள்” குறித்தும் அந்த அறிக்கை எச்சரித்தது.

உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களின் போதும் அதற்குப் பின்னரும் வெளிப்படையாக பொதுப்பணத்தில் ஊர்உலா வந்திருந்த பல பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பேஸ்லி ஒருவர் மட்டுமே. இவர்களில் மிகவும் செயலூக்கத்துடன் இருந்தவர் முன்னாள் RAF (Royal Air Force) மற்றும் நேட்டோவின் விமானியும், இஸ்லிங்டன் கவுன்சிலரும், டோரி எம்பியும், இப்போது வாழ்நாள் சாதனையாளர் (life peer) கவுரவம் அளிக்கப்பட்டிருப்பவருமான நேஸ்பி பிரபு (மைக்கல் மோரிஸ்) ஆவார். இலங்கையில் செய்யப்பட்ட  கொலைகளது அளவினையும் மற்றும் கொத்து குண்டுகள் உள்ளிட அதில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் கொடூரத்தையும் குறைத்துக்காட்டுவதற்கு நேஸ்பி திட்டமிட்டு முனைந்து வந்திருக்கின்றார்.

இதில் சம்பந்தப்பட்ட இன்னுமொரு முன்னணி பிரிட்டிஷ் டோரி, கேமரூன் அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலராக இருந்தவரும் இப்போது சர்வதேச வர்த்தகத்திற்கான வெளியுறவுச் செயலராக இருப்பவருமான லியாம் ஃபாக்ஸ் (Liam Fox) ஆவார். ஃபாக்ஸ், இராஜபக்ஷ அரசாங்கத்தினால் பலமுறை உபசரிக்கப்பட்டிருந்தார். வெஸ்ட்மினிஸ்டரில் அவர் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகப் பேசினார். அப்பாவி தமிழ் மக்களை அரசாங்கம் படுகொலை செய்ததற்கு மத்தியில் அவர் செய்த பயணங்கள் “அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிப்பதற்காக” மேற்கொள்ளப்பட்டவை என்று அவர் பிபிசி க்கு தெரிவித்தார்.

பிரிட்டிஷ் தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான அன்டி லவ் (Andy Love) இதேபோன்றதொரு பாத்திரத்தை வகித்ததாக, இலங்கை பிரச்சாரம் என்ற மனித உரிமைகள் குழு கூறுகிறது. இலங்கையின் செலவில் பயணம் செய்தவர்களில் இப்போதைய மற்றும் முன்னாள் எம்பிக்களில், டோரிக்கள் ஜேம்ஸ் வார்ட்டன், எய்டன் பேர்லி, மாத்யூ ஓஃபோர்ட் மற்றும் டேவிட் மோரிஸ் ஆகியோரும் இடம்பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தமிழ் கார்டியன் தெரிவிக்கிறது.

2012க்குள்ளாக, அப்போது 28 வயதாகியிருந்த வார்ட்டன், இலங்கைக்கு நான்கு முறை பயணம் செய்து இராஜபக்ஷவை சந்தித்து வந்திருந்ததாக இண்டிப்பென்ன்ட் எழுதியது. இலங்கையுடன் அதற்கு முன்பாக எந்த சம்பந்தமும் இல்லாமலிருந்தமையால் ஒரு புறநிலையான கண்ணோட்டத்தை எடுக்க தனக்கு இவ்வாறான பயணங்கள உதவியதாக வார்ட்டன் கூறிக்கொண்டார். இருப்பினும், மனித உரிமை மீறல்களை விவரிக்கின்ற ஒரு முந்தைய ஐ.நா. அறிக்கை குறித்து மக்களவையில் அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார், “இந்த அறிக்கை ஒரு சுருக்கமான விவரிப்பை முன்வைத்து நியாயமான கவலைகளை எழுப்புகின்ற அதேசமயத்தில், அது ஒரு உண்மைவிவரங்களது அறிக்கையாக எடுக்கப்பட்டு விடக் கூடாது என்பது தெளிவாகத் தெரியவில்லையா?”.

பேஸ்லி, உள்ளபடியே, இலங்கை அரசாங்கத்தின் போர்க் குற்றங்கள் மீதான ஒரு சர்வதேச விசாரணையை ஒடுக்க முயன்றதற்காக இடைநீக்கம் செய்யப்படவில்லை, மாறாக அவரது விடுமுறைகளை அறிவிக்காததற்காகவே இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 660 பவுண்டுகளுக்கு மேலான மதிப்பு கொண்ட பரிசுப்பொருட்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் பெற்றால் பதிவுசெய்யப்படுவது அவசியமாகும். பேஸ்லியின் இரண்டு இலங்கை பயணங்கள் 100,000 பவுண்டுகளுக்கும் அதிகமான செலவுக்குரியவையாக மதிப்பிடப்படுகின்றன.

இந்த வட அயர்லாந்து அரசியல்வாதியின் ஆழ்ந்த ஊழல்மிக்க நடவடிக்கைகள் வட அயர்லாந்தில் DUP வகித்த பாத்திரத்திற்கு பொருந்தியதாகவே இருக்கின்றன. 2007 இல் Sinn Fein கட்சியுடன் சேர்ந்து அதிகாரத்திற்கு வந்தது முதலாக இக்கட்சி வரிசையான நிதி ஊழல்களில் சிக்கி வந்திருக்கிறது.

இலங்கையின் போர்க் குற்றங்களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உடந்தையாயிருந்தமை எடுத்துக்காட்டப்படுகையில், பேஸ்லியின் இடைநீக்கம் குறித்த ஊடகச் செய்திகளோ கிட்டத்தட்ட முழுக்கவும், அவர் தனக்கு கிடைத்த ஆதாயங்களை பதிவு செய்யவேண்டும் என்ற நாடாளுமன்ற கோரிக்கைகளை பற்றி மாற்றிக் கூறியதன் மீதே முழுமையாகக் கவனம்குவித்தன. எந்த அட்டூழியத்தை மறைப்பதற்கு பேஸ்லிக்கு அத்தனை செலவளிக்கப்பட்டது என்பது குறித்து அரிதாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. தி டெலிகிராப் பத்திரிகை, பேஸ்லி “இந்த செய்தித்தாளுக்கு அல்லது அவரது சக நாடாளுமன்றவாதிகளுக்கு விடவும் அவரது வாக்காளர்களுக்கு அதிக நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்” என்பதாய் மென்மையாகக் கடிந்து கொண்டது.

ஆசிரியர் பின்வரும் கட்டுரையையும் பரிந்துரைக்கிறார்:

இலங்கையின் உள்நாட்டுப் போர் தமிழ் மக்களை படுகொலை செய்வதில் முடிந்ததற்குப் பிந்தைய ஒன்பது ஆண்டுகள் [PDF]