ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

NATO, at war with itself, rearms for war with the world

நேட்டோவிற்குள்ளேயே மோதல் நிலவுகின்ற நிலையில், உலகுடன் போருக்கு மீள்ஆயுதமேந்துகிறது

Andre Damon
12 July 2018

வெள்ளை மாளிகை கடந்த மாதம் தொடங்கி வைத்த சர்வதேச வர்த்தக போர் அதிகரித்து வருவதற்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் வாஷிங்டனின் இராணுவ கூட்டாளிகளுக்கும், குறிப்பாக ஜேர்மனிக்கும் இடையே ஆழமடைந்து வரும் பதட்டங்களே இவ்வார நேட்டோ மாநாடு குறித்த ஊடகப் பதிவுகளில் மேலோங்கி இருந்தன.

அவரின் "கடமை தவறிய" நேட்டோ கூட்டாளிகள் இராணுவ செலவுகளை அதிகரிக்க வேண்டுமென்ற ட்ரம்பின் மாஃபியா-உறுப்பினர் போன்ற கோரிக்கைகளுக்குப் பின்னால், பிளவுகள் கண்கூடாக இருப்பதற்கு இடையே, பாரிய இராணுவ மீள்ஆயுதமயப்படுத்தலுக்கு அவர்கள் பொறுப்பேற்றிருப்பதை அக்கூட்டணியின் அனைத்து உறுப்பு நாடுகளும் மீளவலியுறுத்தின. இதற்கான விலையாக அரசாங்க கட்டமைப்பு மீதான அதிகரித்த வெட்டுக்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும்.

நேட்டோவின் பொதுச் செயலளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் அம்மாநாட்டின் முடிவில் அறிவிக்கையில், “ஆண்டுக்கணக்கான குறைப்புக்குப் பின்னர், அப்போதெல்லாம் கூட்டாளிகள் பில்லியன் செலவினை வெட்டி வந்திருந்தனர், இப்போது அவர்கள் பில்லியன்களை செலவிட்டு வருகின்றனர்,” என்றார். கடந்த ஒன்றரை ஆண்டில், “ஐரோப்பிய கூட்டாளிகளும் கனடாவும் அவர்களின் பாதுகாப்பு செலவுகளுக்காக கூடுதலாக 41 பில்லியன் டாலர்களை அதிகரித்துள்ளதாக அவர் பெருமை பீற்றினார்.

அறிவிப்பு கொடுத்த உடனேயே ரஷ்யாவையோ அல்லது வேறெந்த நாட்டையோ தாக்குவதற்கு உயர்மட்ட தயார்நிலையில் ஆயத்தமாக இருக்கும் இராணுவப் படைகளின் எண்ணிக்கையை விரிவாக்குவதற்கான நேட்டோவின் திட்டமே இந்த மாநாட்டின் மிகவும் உடனடியாக மற்றும் கண்கூடான விளைவாக இருந்தது. “கூட்டாளிகள், படைகளுக்கு ஒத்துழைப்பாக, 30 நாட்களுக்குள் அல்லது அதற்கு குறைந்த நாட்களுக்குள் தயார்நிலையில் இருக்ககூடிய, கூடுதலாக 30 பிரதான கடற்படை போராளிகளை, 30 கனரக அல்லது மத்தியரக நடவடிக்கைகளுக்கான படைப்பிரிவுகள் மற்றும் 30 கெனடிக் ரக வான்வழி போர்விமானங்களை வழங்குவார்கள் என்று அம்மாநாட்டு தீர்மானம் அறிவித்தது.

“தேசிய உள்நாட்டு பாதுகாப்பு படைகளோடு சேர்ந்து செயல்படக்கூடிய, அக்கூட்டணி முழுவதிலிருந்தும் 4,500 க்கும் அதிகமான துருப்புகள்" உட்பட, “எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா மற்றும் போலாந்தில்", ரஷ்யாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் இருந்து சில நூறு மைல்களுக்குள், போருக்கு-தயாரான மற்றும் படைப்பிரிவு-அளவிலான நான்கு பன்னாட்டு படைக்குழுக்களை" நிறுத்துவதற்குரிய நேட்டோவின் நகர்வுகளை அத்தீர்மானம்  மீளவலியுறுத்தியது.

அந்த மாநாடு இரண்டு புதிய கட்டளையக தலைமையகங்களை உருவாக்கவும் கூடுதலாக உடன்பட்டது: ஒன்று, “அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு இடையிலான தகவல்தொடர்புகளை பாதுகாப்பதில் கவனத்தை செலுத்தும்" வகையில் வேர்ஜினியாவின் நோர்ஃபோல்க்கில் அமைக்கப்படும், மற்றொன்று "ஐரோப்பாவில் இருந்தும், ஐரோப்பா எங்கிலும் இருந்தும் துருப்புகளையும் தளவாடங்களையும் விரைவாக நகர்த்துவதற்கு உதவியாக, பின்புல பகுதியில் நீடித்த நடவடிக்கைக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு" ஜேர்மனியில் புதிய கட்டளையக மையம் ஒன்று அமைக்கப்படும்.

அந்த உச்சிமாநாடு தீர்மானம் நேட்டோவின் அணுஆயுத தளவாடங்களை விரிவாக்குவதற்கு மீளவலியுறுத்துகிறது, “அணுஆயுதங்கள் இருக்கும் வரையில், நேட்டோ ஓர் அணுசக்தி கூட்டணியாகவே தொடரும். இக்கூட்டணியின் மூலோபாய படைகள், குறிப்பாக அமெரிக்காவினது போன்றது, கூட்டாளிகளின் பாதுகாப்பைத் தலையாய விதத்தில் உத்திரவாதப்படுத்துகின்றன.”

மசடோனியா, உக்ரேன் மற்றும் ஜோர்ஜியாவை ரஷ்ய-விரோத கூட்டணிக்குள் இணைப்பதற்கான நேட்டோவின் திட்டங்களைப் பலமாக வலியுறுத்தி, அது நேட்டோவின் கிழக்கை நோக்கிய விரிவாக்கத்தைத் தொடரவும் கூடுதலாக சூளுரைத்தது.

ஐரோப்பா முழுவதிலும் பாரிய இராணுவ ஆயத்தப்படுத்தலுக்கு, சமூக பாதுகாப்பு வலைப்பின்னலை கலைப்பதன் மூலமாக, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அரசாங்கம் வழிகாட்டியதைப் போல, அரசு தொழிலாளர்களுக்கான கூலிகள் மற்றும் சலுகைகளில் வெட்டுக்கள் மற்றும் அரசு சொத்துக்களைத் தனியார்மயமாக்குதல் போன்ற தொழிலாள வர்க்கம் மீதான அதிகரித்த தாக்குதல்களைக் கொண்டு செலவிடப்படும்.

ஐரோப்பிய இராணுவ செலவுகளை அதிகரிக்க வேண்டுமென்ற அவரின் கோரிக்கையானது, சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் மூன்றாவது ஏற்றுமதியாளரான ஜேர்மனி உடனான அமெரிக்காவின் வர்த்தக சமநிலையை மேம்படுத்தும் நோக்கில், அவரின் வணிக பொருளாதார கொள்கைகளுடன் பிரிக்கவியலாதவாறு பிணைந்துள்ளது என்பதை ட்ரம்ப் தெளிவுபடுத்தினார்.

ரஷ்யாவில் இருந்து இயற்கை எரிவாயு கொள்முதல் செய்வதற்காக ஜேர்மனியை அவர் கண்டித்தமை அந்த மாநாட்டின் மைய ஒருகுவிப்பு புள்ளியாக ஆகியிருந்தது. ட்ரம்பின் பார்வையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதை விட இரண்டு மடங்கு அதிகமாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் ஜேர்மனி, அமெரிக்க இராணுவத்திடம் இருந்து அது "பாதுகாப்பை" பெற வேண்டுமானால் அது நிர்ணயிக்கும் வழமையானதைவிட அதிகவிலையில் அமெரிக்க எரிவாயுவை வாங்க வேண்டும் என்றிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து "கடுமையாக" பிரிட்டன் வெளியேறுவதை ஆதரித்து அறிக்கை அளித்ததைப் போலவே, ஜேர்மனி உடனான அவரது வர்த்தக மோதலைப் பின்தொடர்வதில், ட்ரம்ப், நனவுபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்தை நிலைகுலைக்க முயன்றார். அவர் அதிவலது, யூரோ மீது ஐயுறவு கொண்ட அரசியல் இயக்கங்களை ஊக்குவித்தார், “புரூசெல்ஸ் அதிகாரத்துவம்" மீதான இவற்றின் கண்டனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் மேலாதிக்க சக்தியாக விளங்கும் ஜேர்மனி மீதான தேசிய விரோதங்களை மூடிமறைக்கவில்லை.

ஆனால் இதுவொரு அபாயகரமான விளையாட்டு. நேட்டோ உச்சி மாநாட்டின் ஒரு பகுப்பாய்வில், ஸ்ட்ராட்ஃபோர் எச்சரிக்கையில், ஐரோப்பா "எதிர்விரோத போட்டிகளினால் பிளவுபட்டுள்ள" ஒரு கண்டம் என்றார்.

“ரஷ்யாவைக் கையாள்வதற்கான அமெரிக்க மூலோபாயமானது, அது ஐரோப்பிய கண்டத்தில் அதிகார சமநிலையை எவ்வாறு கையாள்கிறது என்பதுடன் பிரிக்கவியலாதவாறு  தங்கியிருக்கும்,” என்றது தொடர்கிறது. “ஐக்கிய இராஜ்ஜியம் அந்த அணியிலிருந்து விலகியதால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதனால், அது அக்கண்டத்தில் அதன் பாரம்பரிய சமநிலைப்படுத்தும் பாத்திரத்தை வகிக்கமுடியாது இருக்கும். அது மிகப்பெரும் ஐரோப்பிய சக்திகளது முக்கூட்டின் மூன்றாம் காலை முறித்து, அக்கண்டம் மிகவும்-பரிச்சயமான மோதல் வடிவத்திற்குள் வீழ்வதிலிருந்து தடுப்பதை, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் அவநம்பிக்கைமிக்க ஜோடியிடம் விட்டு வைக்கும்.”

ஸ்ட்ராட்ஃபோர் தொடர்ந்து குறிப்பிடுகிறது, “ஆனால் அதன் மிகவும் அவசியமானவற்றின் மீதான பார்வையை விட்டுவிடாமல் ஒரு அசௌகரியமான யதார்த்த மட்டங்களுக்குள் செயல்படவும் மற்றும் அங்கீகரித்து கொள்ளவும் அமெரிக்க ஜனாதிபதிக்கு ஒரு விடயம் உள்ளது: இப்போதும் ரஷ்யா மற்றும் சீனாவுடன் அதிகரித்து வரும் போட்டியைக் கையாளவும் மற்றும் எழக்கூடிய எந்தவொரு விளிம்போர விலகுதலைக் கையாளவும், ஐரோப்பாவில் அதிகார சமநிலையைப் பேணுவது அமெரிக்காவின் தகைமைக்கு இன்றியமையாததாகும். வர்த்தக தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பரிவர்த்தனை செய்வதன் மூலமாக ஒரு முரண்பட்டிருக்கும் அணியைச் சிதறடிப்பதை ஊக்குவிப்பது மற்றும் அக்கண்டத்தில் நீறு பூத்த நெருப்பாக இருக்கும் தேசியவாதத்தைச் செயலூக்கத்துடன் தூண்டிவிடுவது அடுத்த விடயமாகும். இரண்டாவது விடயம் நெருப்புடன் விளையாடுவதாகும்.”

ஆனால் "நெருப்புடன் விளையாடுவது" என்பது உள்நாட்டு அரசியலிலும் சரி சர்வதேச அரசியலிலும் சரி இரண்டிலுமே துல்லியமாக ட்ரம்பின் மூலோபாயமாக உள்ளது. பாதி குற்றத்தன்மை கொண்ட ஒரு ரியல் எஸ்டேட் ஊக வணிகரின் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தும் ட்ரம்ப், கூட்டாளிகள் என்றாலும் எதிராளிகள் என்றாலும்  ஒரேமாதிரியாக எவரையும் முரட்டுத்தனமாக அழைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளார்.

எட்வார்ட் லூசி வியாழனன்று பைனான்சியல் டைம்ஸ் இல் கருத்துரைக்கையில், “அவரது விமர்சகர்கள் நம்புவதை விட அதிகமாகவே தெரிந்துவைத்துள்ளார் என்பது ட்ரம்புக்கு தெரியும்" ஏனென்றால் "அவர் உள்ளுணர்வாகவே ஒவ்வொருவரின் அடிப்படை போக்குகளையும் உள்ளீர்த்துக் கொள்கிறார்,” என்று குறிப்பிட்டார். “அடியிலிருக்கும் யதார்த்தத்தை யாரொருவர் உள்ளீர்த்துக் கொள்கிறாரோ அவரே மிகவும் பயங்கரமான வாய்வீச்சாளர். அமெரிக்காவுக்கு ஐரோப்பா அவசியப்படுவதை விட ஐரோப்பாவுக்கு அமெரிக்கா அவசியப்படுகிறது என்பது திரு. ட்ரம்புக்கு தெரியும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

“சிதைந்து வரும்" கூட்டணிகள் "வாஷிங்டனின் உலகளாவிய பலத்தைக் குறைக்கிறது" என்றாலும், “ஐரோப்பாவே மிகப்பெரிய இழப்பாளியாக இருக்கும். அதன் உயிர்பிழைப்பு அமெரிக்காவின் உத்தரவாதங்களைச் சார்ந்துள்ளது,” என்றார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உள்ளபடியே "வழக்கத்திற்கு மாறான" ட்ரம்பின் நடவடிக்கைகள், உலக புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்கமைப்பில் அமெரிக்காவினது நிலைப்பாட்டின் ஏதோவொரு நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது. உலகளாவிய ஏகாதிபத்தியத்தின் பிற்போக்குத்தனமான உயிர்நாடியாக அமெரிக்கா பாத்திரம் வகிக்கிறது என்பதை அங்கீகரிக்கும் விதத்தில், புவிசார் அரசியல் ஒழுங்கின் ஸ்திரப்பாட்டை விலை கொடுத்தாலும் பரவாயில்லை என்று, ட்ரம்ப் "கூட்டாளிகளிடம்" இருந்து "கப்பம்" செலுத்தக் கோரி வருகிறார்.

கடந்த மாத சூறாவளி போன்ற நிலைமையில், அமெரிக்க ஜனாதிபதி ஜி7 உச்சி மாநாட்டில் முட்டுக்கட்டை அமைத்தார், ஐரோப்பா மற்றும் சீனாவுக்கு எதிராக வர்த்தக போர் தொடங்கினார், வட கொரியாவைச் சீனாவுக்கு எதிராக திருப்பும் நம்பிக்கையில் ஒரு சந்திப்பை நடத்தினார், ஈரானுக்கு எதிராக ரஷ்யாவைத் திருப்பும் நோக்கில் விளாடிமீர் புட்டின் உடன் ஒரு சந்திப்பை நடத்தும் விளிம்பில் உள்ளார், "கூட்டாளிகளிடம்" இருந்தும் சரி "எதிரிகளிடம்" இருந்தும் சரி ஒருபோல அதிகபட்ச வர்த்தக, பொருளாதார மற்றும் இராணுவ விட்டுக்கொடுப்புகளைப் பெறும் நோக்கில், அவர் அனைத்து சர்வதேச கூட்டணிகளையும் காற்றில் பறக்கவிட்டுள்ளார்.

ஒரு நாள் கூட்டணிகளின் முடிவில்லா அணிவகுப்பும் அடுத்த நாளே அது கலைக்கப்படுவதுமாக, இந்த கொந்தளிப்பான மற்றும் குழப்பமான உலக ஒழுங்கமைப்பு அதிகளவில் 1930 களின் புவிசார் அரசியலைத் தவிர வேறொன்றையும் நினைவூட்டவில்லை. அக்காலக்கட்டத்தில், உருவாக்கப்பட்ட ஒவ்வொரு கூட்டணியும், உடைக்கப்பட்ட ஒவ்வொரு கூட்டணிக்கும் குறைவின்றி, உலக போர் வெடிப்புக்கான முன்னறிவிப்பாக இருந்தது.

மேலும் 1930 களில், இப்போது போலவே, வர்த்தக போர் வெடிப்பு மற்றும் ஐரோப்பா எங்கிலும் பாசிசவாத இயக்கங்களின் வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றிற்கு மத்தியில், ஒவ்வொரு நாடும் மீள்-ஆயுதமயப்பட்டு வந்தன.

பாரிய மீள்ஆயுதமயப்படல் மற்றும் வெடிப்பார்ந்த பிளவுகளின் வினோத கலவையோடு சேர்ந்து, நேட்டோ உச்சி மாநாட்டின் விளைவு, கணிசமானளவுக்கு உலகப் போர் அபாயத்தை உயர்த்துகிறது. அதுபோன்றவொரு மோதலில், பெயரளவுக்கு என்ன காரணத்திற்காக, யார் யாருடன் சண்டையிடுவார்கள் என்று முன்கூட்டி கூற முடியாது. ஆனால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டபோது, இனி நேட்டோ ஒரு "சமாதானமான" மற்றும் "ஜனநாயக" கூட்டணியாக மாற்றப்படும் என்று வாதிட்டவர்கள் அனைவரும் பாசாங்குக்காரர்களாக அம்பலமாகி உள்ளனர்.