Print Version|Feedback
Trump denounces Germany and Europe at NATO summit
நேட்டோ உச்சிமாநாட்டில் ட்ரம்ப் ஜேர்மனியையும் ஐரோப்பாவையும் கண்டனம் செய்கிறார்
By Alex Lantier
12 July 2018
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜேர்மனியையும் நேட்டோ கூட்டணியில் இருக்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளையும் கண்டனம் செய்த நிலையில், இரண்டு நாள் நேட்டோ உச்சிமாநாடு நேற்று ஒரு நெருக்கடியான சூழலில் புரூசெல்ஸில் தொடங்கியது. ஐரோப்பாவுக்கு எதிரான அமெரிக்க வர்த்தகப் போர் நடவடிக்கைகள் தொடர்பாக கடுமையான பதில்தாக்குதல்களுக்கு மத்தியில் கியூபெக்கில் ஜி7 பொருளாதார உச்சிமாநாடு பொறிவடைந்த ஒரு மாதத்திற்குப் பின்னர், வாஷிங்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான தூதரக மற்றும் இராணுவ உறவுகள் சிதைவுற்றுக் கொண்டிருக்கின்றன.
நேட்டோ பொதுச் செயலாளரான ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க் உடன் ட்ரம்ப் கூட்டாக காலை உணவு அருந்திய சமயத்தில் பெரும் ஐரோப்பிய ஒன்றிய சக்திகளுக்கு எதிராக ஒரு ஆவேசமான கண்டனவாசிப்பை செய்ததுடன் நாளைத் தொடக்கினார். இராணுவச் செலவினங்களுக்கு ஐரோப்பா கூடுதலாக செலவிட தொடர்ந்து அமெரிக்கா விடுக்கும் கோரிக்கைகள், சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்துவதற்கும், அமெரிக்க பொருளாதார நலன்களுக்கு பரந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சலுகைகள் கிடைக்கப் பெறுவதற்குமான கோரிக்கைக்குரிய ஒரு பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இருந்தன என்பதை அவர் தெளிவாக்கினார்.
ட்ரம்ப் இவ்வாறு தொடக்கினார், “இது வெளிப்படையானது. பல நாடுகள் அவை செலுத்த வேண்டிய அளவுக்கு செலுத்துவதில்லை. வெளிப்படையாக சொல்கிறேன், பல நாடுகளும் பல ஆண்டுகளாக எங்களுக்கு மிகப் பெரும் தொகைகளுக்கு கடமைப்பட்டுள்ளன, என்னைப் பொறுத்தவரை அவை கடன்பட்டவையே, ஏனென்றால் அவர்களுக்காக அமெரிக்கா தொகை செலுத்த நேர்ந்திருக்கிறது. ஒரு 10 அல்லது 20 வருடம் பின்னால் சென்றால், நீங்கள் எல்லாவற்றையும் மொத்தமாகக் கூட்டிக் கொள்ளலாம். மிகப் பிரம்மாண்டமான தொகையை கடன்பட்டிருக்கிறது. அமெரிக்கா தொகை செலுத்தியிருக்கிறது, வேறெவரொருவரையும் போலன்றி தொகைசெலுத்தத்தை அதிகப்படுத்தி வந்திருக்கிறது. இது பல தசாப்தங்களாக நடந்திருக்கிறது. பல ஜனாதிபதிகளின் கவனத்துக்கு இது போயிருக்கிறது. ஆயினும் நான் இதனை முன்னால் நிறுத்தியதைப் போல வேறெவரொருவரும் முன்னால் நிறுத்தியிருக்கவில்லை.”
வேலைகள் மற்றும் சமூக சேவைகள் மீதான ஆழமான தாக்குதல்களால் நிதியாதாரமளிக்கப் பெற்று, 2024க்குள்ளாக பாதுகாப்பில் கூடுதலாக 266 பில்லியன் டாலர் செலவிட ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் உறுதியளித்துள்ளதை, கொஞ்சமும் போதுமானதல்ல என்று கூறி ட்ரம்ப் நிராகரித்தார். அவர் கூறினார், “இந்த ஆண்டு, கடைசியாக நடந்த எங்களது கூட்டத்திற்குப் பின்னர், மற்ற நாடுகள் 40 பில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை செலவிடுவதற்கு உறுதியளித்துள்ளன. அது முன்னேற்றம் தான், ஆயினும் அது மிகச் சிறியதொரு அடியே.”
அமெரிக்க பாதுகாப்புச் செயலரான ஜேம்ஸ் மாட்டிஸ், வெள்ளை மாளிகையின் அலுவலர் தலைவரான ஜான் கெல்லி, அமெரிக்க வெளியுறவுச் செயலரான மைக் பொம்பியோ, மற்றும் நேட்டோவுக்கான அமெரிக்க தூதர் கே பெய்லி ஹட்சின்சன் ஆகியோர் புடைசூழ இருந்த ட்ரம்ப், அதன்பின் ஜேர்மனிக்கு எதிராக ஒரு அசாதாரணமான கண்டன மழையைத் தொடுத்தார்.
அவர் கூறினார், “ரஷ்யாவுக்கு எதிராக நீங்கள் விழிப்புடன் இருக்க எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், ஜேர்மனி ரஷ்யாவுடன் ஒரு பாரிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஒப்பந்தத்தை செய்யும்போது, வருடத்திற்கு பில்லியன் பில்லியன் கணக்கிலான டாலர்களை ஜேர்மனி ரஷ்யாவிற்கு கொடுக்கச் செல்கிறது எனும்போது அது மிகவும் சோகத்திற்குரியது என்றே நான் கருதுகிறேன். நாங்கள் ஜேர்மனியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். பிரான்சை பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். இந்த நாடுகள் அத்தனையையுமே பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். பின் இந்த நாடுகளில் ஏராளமானவை போய் ரஷ்யாவுடன் ஒரு பைப்லைன் ஒப்பந்தம் செய்து கொள்கின்றன, ரஷ்யாவின் கஜானாவுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை இறைத்துக் கொண்டிருக்கின்றன.”
பால்டிக் கடல் வழியாக ரஷ்யாவில் இருந்து ஜேர்மனிக்கான நோர்ட்ஸ்ட்ரீம்-2 எரிவாயு பைப்லைன் ஒப்பந்தத்தை ட்ரம்ப் முன்னதாக தாக்கியிருந்தார், ஐரோப்பா அமெரிக்காவிடம் இருந்து கூடுதல் செலவிலான இயற்கை எரிவாயுவை வாங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சென்ற ஆண்டில், நோர்ட்ஸ்ட்ரீம் திட்டத்தில் பங்குபெற்றிருந்த ஜேர்மன் மற்றும் ஆஸ்திரிய நிறுவனங்களின் மீது தடைகள் விதிக்க மிரட்டவும் கூட செய்திருந்தார். நேற்று ட்ரம்ப் எச்சரித்தார், “ஜேர்மனி முழுக்க ரஷ்யாவால் கட்டுப்படுத்தப்படுகிறது, ஏனென்றால் அவர்கள் ரஷ்யாவிடம் இருந்தும் ஒரு புதிய பைப்லைன் மூலமாகவும் தமது எரிசக்தி தேவையில் 60 முதல் 70 சதவீதம் வரையில் பூர்த்தி செய்ய இருக்கிறார்கள்.”
நேட்டோவின் பொதுச் செயலாளர் நேட்டோவின் ஐக்கியத்திற்காக ஒரு சிறு விண்ணப்பம் செய்தபோது ட்ரம்ப் அதனை ஒதுக்கித் தள்ளினார், ஸ்டோல்டன்பேர்க் கூறினார்: “நாம் பிரிந்திருப்பதை விடவும் சேர்ந்திருக்கும் போது தான் வலிமை பெறுகிறோம் என்பதையே இரண்டு உலகப் போர்களும் பனிப் போரும் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கின்றன என்று நான் கருதுகிறேன்.... ரஷ்யாவை நாம் கையாளும் சமயத்திலும், நாம் ஒன்றாய் நிற்கும்போது தான் நாம் வலிமை பெறுகிறோம்.”
ஸ்டோல்டன்பேர்கை இடைமறித்து ட்ரம்ப் கூறினார்: “இல்லை, நீங்கள் ரஷ்யாவை பணம்கொழிக்கச் செய்கிறீர்கள். நீங்கள் ரஷ்யாவை கையாளவில்லை. நீங்கள் ரஷ்யாவை கூடுதல் வளமானதாக ஆக்குகிறீர்கள்.”
ஜேர்மனி தலைமையிலான ஐரோப்பிய சக்திகளுக்கு எதிராக அமெரிக்கா சண்டையிட்டிருந்த இரண்டு உலகப் போர்களை ஸ்டோல்டன்பேர்க் குறிப்பிட்டிருந்தபோதும் அதில் கொஞ்சம் திகைக்காமல், தனது கோரிக்கைகள் பேச இடமற்றவை என்பதை ட்ரம்ப் தெளிவாக்கினார். அவர் கூறினார், “உங்களது போலந்து போன்ற நாடுகள் எரிவாயுவை ஏற்றுக்கொள்ளவில்லை. சில நாடுகளை எடுத்துப் பாருங்கள், அவை ஏற்றுக் கொள்ளமாட்டா, ஏனென்றால் அவர்கள் ரஷ்யாவிடம் சிறைப்பட விரும்பவில்லை. ஆனால் ஜேர்மனி, என்னைப் பொறுத்தவரை, ரஷ்யாவிடம் சிறைப்பட்டுத்தான் இருக்கிறது, ஏனென்றால் அது தனது எரிசக்தி தேவையின் பெரும்பகுதியை ரஷ்யாவிடம் இருந்துதான் பெறுகிறது.”
இந்த அசாதாரணமான வசனங்களை உதிர்த்த பின்னர் எனினும், ட்ரம்ப், நேட்டோவுக்கான ஒரு விரிவான மற்றும் மூர்க்கமான உலகக் கொள்கையை விவரிக்கின்ற 20 பக்க பிரகடன அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டார். இந்த நீட்டிமுழக்கும் ஆவணம் ரஷ்யாவையும், சிரியாவையும், மற்றும் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் நேட்டோவின் போர்களுக்கு தப்பி வரும் மில்லியன் கணக்கான அகதிகளால் செய்யப்படும் “முறையற்ற குடியேற்ற”த்தையும் முக்கிய அச்சுறுத்தல்களாக முத்திரை குத்தியிருந்தது. ரஷ்யாவை இலக்காகக் கொண்ட வெடிப்பு ஏவுகணை தடுப்பு தளங்கள், ஆப்கானிஸ்தான், பால்கன்கள், உக்ரேன் மற்றும் காகசஸிலான நேட்டோ நடவடிக்கைகள், மற்றும் ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்கா எங்கிலும் அகதிகளுக்கான சிறை முகாம்களது பரந்த ஒரு பின்னல் ஆகியவற்றுக்கான திட்டங்களையும் இது விவரிக்கிறது.
நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பின்னர் ட்ரம்ப் பிரிட்டனுக்கு செல்கிறார், அதன்பின் ஹெல்ஸிங்கி செல்கிறார் அங்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் சந்திக்கிறார் என்பதால், வாஷிங்டனும் அதன் ஓரளவுக்கான ஐரோப்பியக் கூட்டாளிகளும் உடன்படும் பட்சத்தில் என்ன மாதிரியான ஏற்பாடுகளுக்கானதாய் அந்த உடன்பாடு இருக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆயினும், ஜி7 போல நேட்டோ உச்சிமாநாடு பொறிந்தாலும் சரி அல்லது கடிவாளமற்ற இராணுவவாதம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு ஆட்டம்காண்கின்ற கருத்தொற்றுமை எட்டப்பட்டாலும் சரி, உலகின் பெரும் இராணுவ மற்றும் பொருளாதார சக்திகளுக்கு இடையிலான உறவுகள் முறிந்து கொண்டிருக்கின்றன என்பது தெளிவு.
நீண்ட கால பொருளாதார வீழ்ச்சியின் காரணத்தால் அமெரிக்க உலக மேலாதிக்கம் நொருங்குவதில் அதிருப்தியடைந்திருக்கும் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒரு பரந்த கன்னைக்காக ட்ரம்ப் பேசுகிறார். அமெரிக்காவின் தொழிற்துறை பலவீனத்தை இராணுவ பலத்தைக் கொண்டு சரிக்கட்டுவது என்ற, சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய கால் நூற்றாண்டு காலமாக, அவர்கள் பின்பற்றி வருகின்ற கொள்கையானது தோல்வியடைந்திருக்கிறது. இந்த முடிவற்ற போர்கள் “பயங்கரவாதத்தின் மீதான போர்” ஆக இருக்கவில்லை, மாறாக, இருபதாம் நூற்றாண்டின் உலகப் போர்களைப் போலவே, சந்தைகள், இலாபங்கள் மற்றும் மூலோபாய அனுகூலத்தை பங்குபோடுவதில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான ஒரு கடுமையான சண்டையாகவே இருந்தது என்பது முன்னெப்போதினும் தெளிவாக இப்போது எழுந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய போர்கள், இருபதாம் நூற்றாண்டில் போல, பெரும் சக்திகளுக்கு (இந்த முறை அணு ஆயுதங்கள் கொண்டிருக்கின்றன) இடையிலான ஒரு உலகப் போராக தீவிரப்படக் கூடும் என்ற அபாயமானது ஆளும் வட்டாரங்களில் மிகப்பெரும் அளவில் ஒப்புகொள்ளப்படுவதாக இருக்கிறது. ஏப்ரலில் சிரியா மீது அமெரிக்க-ஐக்கிய இராச்சிய-பிரெஞ்சு கூட்டு குண்டுவீச்சுக்குப் பின்னர், உயர் ஜேர்மன் அதிகாரிகளது ஒரு குழு கையெழுத்திட்டிருந்த Weizsäcker அறக்கட்டளையின் ஒரு அறிக்கை அறிவித்தது: “முதலாம் உலகப் போருக்கு இட்டுச் சென்றிருந்த கட்டுமான காரணங்களில் எதுவொன்றும் உண்மையில் மறைந்து விட்டிருக்கவில்லை.”
முன்னெப்போதினும் பகிரங்கமாக வெளியாகிக் கொண்டிருப்பது முதலாளித்துவத்தின் வரலாற்று திவால்நிலை ஆகும். கிழக்கு ஐரோப்பாவெங்கிலும் இராணுவ ஒத்திகைகளும் நிலைநிறுத்தங்களும் அதிகரித்துக் கொண்டிருப்பதன் மத்தியில், ரஷ்யாவைக் குறிவைத்தான நேட்டோ நடவடிக்கைகள் ஒரு உலகளாவிய மோதலை தூண்டக் கூடும் என்ற அபாயமானது, மிக உண்மையானதாகும். ஆயினும், நேட்டோ சக்திகளுக்கு இடையிலான கடுமையான பிளவுகளே இந்த உச்சிமாநாட்டில் மேலோங்கியிருக்கின்றன.
ட்ரம்ப், ஜேர்மனி மீது தான் கொண்டிருக்கும் நீண்டகால குரோதத்தை மறைக்க சிரமப்படவில்லை, அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் சமயத்தில் அமெரிக்காவுக்கான ஜேர்மன் கார் ஏற்றுமதிகளை “மோசமான விடயம்” என்று முத்திரை குத்தியிருந்தார். ட்ரம்ப் தேர்வானதற்குப் பின்னர் ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல் முதன்முறையாக வாஷிங்டன் வந்திருந்த சமயத்தில் அவரிடம் ட்ரம்ப், “அங்கேலா, நீங்கள் எனக்கு 1 டிரில்லியன் டாலர் கடன்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறி வரவேற்றதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஞாயிறன்று செய்தி வெளியிட்டிருந்தது.
ஜேர்மனி நோர்ட்ஸ்ட்ரீம்-2 ஐ கைகழுவ வேண்டும் என்பதான ட்ரம்ப்பின் கோரிக்கைக்கு ஜேர்மன் அதிகாரிகள் அளித்த ஆரம்ப பதிலிறுப்பு அவர்கள் ட்ரம்ப்புக்கு எந்த சலுகையும் அளிக்கப் போவது கிடையாது என்பதை சுட்டிக்காட்டின. “ஜேர்மனியின் ஒரு பகுதி சோவியத் ஒன்றியத்தால் ஆக்கிரமிக்கப்படுவதை நானே கூட அனுபவித்திருக்கிறேன்” என்று புரூசெல்ஸ் உச்சிமாநாட்டிற்கு வந்துசேர்ந்த மேர்கெல் தெரிவித்தார். “இன்று ஜேர்மன் கூட்டாட்சி குடியரசாக சுதந்திரமாக நாங்கள் ஒன்றுபட்டு நிற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆகவே எங்களது சுயாதீனமான கொள்கைகளை உருவாக்கவும் எங்களது சொந்த சுயாதீனமான முடிவுகளை மேற்கொள்ளவும் எங்களால் முடியும்.”
ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சரான ஊர்சுலா வொன் டெர் லெயன் ட்ரம்ப்பின் விமர்சனங்களை நிராகரித்து பிபிசியிடம் பின்வருமாறு தெரிவித்தார்: “நாங்கள் அதனை சமாளித்து விட முடியும். முன்னர் அவர் பேசியதைக் கேட்டிருக்கிறோம் ட்வீட்களை பார்த்திருக்கிறோம். எங்களுக்கு ஒரு சுயாதீனமான எரிசக்தி விநியோகம் இருக்கிறது, நாங்கள் ஒரு சுதந்திரமான நாடு, நாங்கள் பன்முகப்படுத்துகிறோம், அவ்வளவு தான்.”
பெருகிச் செல்லும் அமெரிக்க-ஜேர்மன் மோதலானது, ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற நாடுகளும் அமெரிக்காவுடன் போட்டி போட இயலும் விதத்தில் இராணுவப் பெருக்கத்தை மேற்கொள்வதற்கு, நிதியாதாரம் திரட்ட தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரேயடியான தாக்குதல்களை நடத்துவதற்கான ஜேர்மனியின் முனைப்பை தீவிரப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஜேர்மன் ஜனாதிபதி பிராங்-வால்டர் ஸ்ரைன்மர் Neue Osnabrücker Zeitung இடம் கூறினார், “ஐரோப்பியர்களாகிய நாம் நமக்காக கூடுதல் பொறுப்பெடுத்தாக வேண்டும்... ஐரோப்பாவில் ஒரு மாற்றமடைந்த பாதுகாப்பு சூழ்நிலையை கொண்டிருக்கிறோம், ஐரோப்பிய-அமெரிக்க உறவுகளில் மாற்றங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.”
அதேநேரத்தில், ட்ரம்ப் நிர்வாகம் ஐரோப்பாவில் ஜேர்மனியின் மூலோபாய நிலையை பலவீனப்படுத்த மூர்க்கத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரிட்டனின் உறவுகளை துண்டிப்பதற்கு ட்ரம்ப் ஒரு “கடுமையான பிரெக்ஸிட்” கொள்கையை வழிமொழிந்திருப்பவராவார்.
மேலும், ஏப்ரலில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் வாஷிங்டனுக்கு விஜயம் செய்தசமயத்தில், பிரான்சும் —ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்திற்கான பேர்லினின் திட்டத்தில் அதன் முன்னணிக் கூட்டாளி— ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறலாம் என்பதான ஒரு வெடிப்பான கருத்துமொழிவை ட்ரம்ப் செய்ததாகவும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. பிரதிபலனாக பிரான்சுடன் நெருக்கமான உறவுகளையும் அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் மேம்பட்ட ஷரத்துகளையும் அளிக்க ட்ரம்ப் முன்வந்தார்.
இந்த செய்திகள் குறித்து கருத்துக் கூற மறுத்த மக்ரோன், “அறைக்குள் சொல்லப்பட்டது அறைக்குள்ளேயே தங்கி விடுகிறது” என்றார்.