Print Version|Feedback
French President Macron lays out road map for military escalation
பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் இராணுவ விரிவாக்கத்திற்கான வரைபடத்தை முன்வைக்கிறார்
By Francis Dubois
13 July 2018
ஜூலை 10 அன்று, வேர்சையில் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் கூடுவதற்கு முன்பாக, தொழிலாள வர்க்கத்தின் மீதான சமூகத் தாக்குதல்களைக் கொண்டு நிதியாதாரம் அளிக்கப்படுகின்ற இராணுவ செலவினத்திலான ஒரு பெரும் அதிகரிப்பை, இமானுவல் மக்ரோன் அறிவித்தார். நவ-பாசிச வேட்பாளர் மரின் லு பென்னுக்கு எதிராய் ஜனநாயகத்தின் காவலராக பாராட்டப்பட்டு அவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒரு வருடத்திற்கு பின்னர், மக்ரோன், இராணுவவாதம், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை சமூக தேட்டங்களை ஒழிப்பது ஆகியவை கொண்ட ஒரு அதி-வலது கொள்கையை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்.
அவரது உரைக்கு சில நாட்களுக்கு முன்பாக, தொழிலாள வர்க்கத்தினுள் சமூக எதிர்ப்பு அதிகரித்துச் செல்வது குறித்து ஊடகங்கள் கவலை வெளியிட்டன. “பிரெஞ்சு மக்களின் பொறுமை எல்லையை எட்டிவிட்டிருக்கிறது” என்று RTL அறிவித்தது, Elabe கருத்துக்கணிப்பு ஒன்றில் 75 சதவீதம் பேர் மக்ரோனின் கொள்கையை “நியாயமற்றது” என்றும் 65 சதவீதம் பேர் “பலனளிக்காதது” என்றும் கூறியிருந்ததை அது சுட்டிக்காட்டியது. Europe1 திங்களன்று காலையில், மக்ரோனின் உரை “பொதுமக்களது கருத்தை திருப்திப்படுத்துவதற்கு சற்றும் உதவாது” என்று அப்பட்டமாகக் கணிப்பு கூறியதுடன் கருத்துக்கணிப்புகளில் மக்ரோனின் “வீழ்ச்சி”யையும் அது சுட்டிக்காட்டியது. இன்னுமொரு கருத்துக்கணிப்பில் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் 14 சதவீத ஆதரவை இழந்து விட்டதன் பின்னர், அவரது செல்வாக்கு மட்டம் 34 சதவீதமாக இருக்கிறது.
இன்னுமொரு கருத்துக்கணிப்பு பிரெஞ்சு மக்களில் 55 சதவீதம் பேர் வறுமைக்குள் தள்ளப்படும் அச்சத்தில் உள்ளனர் என்றும், உழைக்கும் வயதில் உள்ளவர்களில் 60 சதவீதத்திற்கு அதிகமானோர் இதில் இடம்பிடிக்கின்றனர் என்றும் கண்டதை அடுத்து, வரிசெலுத்துவோருக்கு 500,000 யூரோ செலவில் நடத்தப்படும் இந்த உரையை கேட்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வேர்சாய் செல்லத் துணியவில்லை. வலது-சாரி பிரதிநிதிகளில் ஒருவரான ஃபாபியான் டி பிலிப்போ, உரையை புறக்கணிக்கும் தனது முடிவுக்கு இவ்வாறு விளக்கமளித்தார்: “அது வெறுமனே 500,000 யூரோ மக்கள்தொடர்பு வேலை. மரியாதை காரணமாக, நான் போகவில்லை.” "இது 500,000 யூரோக்களிலான அரசியல் தொடர்பு, மரியாதை இல்லை, நான் போகமாட்டேன்."
ஆளும் வட்டாரங்களிலான இத்தகைய கவலைகளைக் காண்கின்ற மக்ரோன், சம்பிரதாய கவலையுடனான ஒரு வசனத்தை செய்தார், “என்னால் எல்லாவற்றையும் செய்துவிட முடியாது என்று எனக்குத் தெரியும், என்னால் எல்லா இடங்களிலும் வெற்றிகண்டு விட முடியாது என்பது எனக்குத் தெரியும்”, கூறியதற்குப்பின் தனது பரந்த மக்கள்விரோதக் கொள்கைகளில் மீண்டும் தொடர்ந்து முன்னேறத் தொடங்கினார்.
பரவுகின்ற மத்திய கிழக்குப் போர்கள், வாஷிங்டனுடனான உறவுகளில் பொறிவு, மற்றும் பெரிய-அளவிலான போரின் அபாயம் என்ற வெடிப்பான சர்வதேச சூழலை அவர் சுருக்கமாய் சுட்டிக்காட்டினார். பிரெஞ்சு மக்கள் “பெரும் மாற்றங்களைக் கண்டு, உலகின் குழப்பங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள்: ஈரானுடனான பதட்டங்கள், அமெரிக்காவால் தொடங்கப்பட்டிருக்கும் வர்த்தகப் போர், ஐரோப்பாவுக்குள்ளான பிளவுகள்” என்று போகிறபோக்கில் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் போருக்காக பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை முற்றுமுழுதாக ஆயுதபாணியாக்குவதற்கு சமூக செலவினங்களையும் ஊதியங்களையும் வெட்டுவது என்பதுதான் மக்ரோன் தனது உரையில் முன்வைத்த ஒரே தீர்வாக இருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களை இவ்வாறு அவர் பாராட்டினார், “புதிய மற்றும் முன்கண்டிராத இலட்சியத்துடனான ஒரு இராணுவத் திட்டமிடல் சட்டத்தின் மூலமாக பிரான்சுக்கு அதன் இராணுவத் திறங்களை நீங்கள் மீண்டும் கொடுத்திருக்கிறீர்கள். காலாவதியானதும் பொருத்தமற்றதுமாய் இருந்த ஒரு தொழிலாளர் சட்டத்தால் உருவாக்கப்பட்டிருந்த உழைப்புச் சந்தை தடையை நீங்கள் உடைத்திருக்கிறீர்கள்.”
ஆரம்பம் முதலே, மக்ரோன் சமூக உரிமைகள் மீதான அவரது தாக்குதல்களை அவரது இராணுவவாதத் திட்டங்களுடன் முடிச்சுப் போட்டார்: “அபாயத்தில் இருக்கும் நமது ஐரோப்பாவிற்கான மற்றும் உலகத்திற்கான பிரான்சின் திட்டமானது... வலிமையாக இருப்பதற்கு நம்மை நிர்ப்பந்தம் செய்கிறது. அதனால் தான் நாம் நமது பொருளாதாரத்தை வலுப்படுத்தியாக வேண்டியிருக்கிறது என்பதை நாம் அறிவோம்…. அதனால் தான் நமக்கு ஒரு சிறந்த இராணுவம், ஆகச் சிறந்த பாதுகாப்பு அமைப்புகள் தேவையாக இருக்கின்றன.”
இளைஞர் யுவதிகளுக்கு கட்டாய இராணுவச் சேர்ப்பை மீண்டும் அறிமுகம் செய்யும் தனது உறுதிமொழியை மக்ரோன் மீண்டும் உறுதிசெய்தார்.
இந்த இராணுவத் திட்டங்களுக்கு நிதியாதாரம் பெறுவதற்கு அந்நிய முதலீட்டை பிரெஞ்சு முதலாளித்துவம் எவ்வாறு ஈர்க்கவிருக்கிறது என்பதை அதன்பின் அவர் விளக்கினார்: சர்வதேச மூலதனத்துக்கு மலிவு-கூலி உழைப்பாளர்களின் அந்தஸ்துக்கு குறைக்கப்பட்ட தொழிலாளர்களை வழங்குவதன் மூலமாக. கல்வி மற்றும் பயிற்சி வேலைத்திட்டங்கள் இந்த திட்டநிரலுக்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பொது மற்றும் சமூக சேவைகளை முழுமையாக செல்வந்தர்களது இலாபங்களை அதிகபட்சமாக்குவதற்கும் இராணுவத்தை மறுஆயுதபாணியாக்குவதற்கும் கீழ்ப்படியச் செய்வது என்ற தனது நோக்கங்களை பிரெஞ்சு ஜனாதிபதி தெளிவாக்கினார். அவர் கூறினார், “ஒருபக்கம் பொருளாதாரக் கொள்கை மறுபக்கத்தில் சமூகக் கொள்கை என்று இல்லை. இலட்சியம் ஒன்றுதான்: வலிமையாக ஆவது; அப்போதுதான் நம்மால் நியாயமாக இருக்க முடியும்.”
சமூக நலன்களில் பிரான்ஸ் “பைத்தியக்காரத்தனமான அளவுக்கு பணம் செலவிடுவதை” கண்டனம் செய்த ஒரு முன்னாள் ரோத்ஸ்சைல்ட் வங்கியாளராக மக்ரோன் தனது அகம்பாவம் அனைத்தையும் பிரயோகித்து, ஒரு ஆழமான சிக்கன நடவடிக்கைக்கு கோரிக்கை வைத்தார். “நமது தொடர்ச்சியான செலவின அதிகரிப்புகள் மெதுவாகாமால்” முதலீட்டிற்கு நம்மால் சுதந்திரமளிக்க முடியாது, இதற்கு “வலிமையான மற்றும் தீரமான முடிவுகள்” அவசியமாயிருக்கின்றன. “அது பிரான்சில் வேலைகளை உருவாக்கியிருக்கவில்லை அல்லது எவரது நிலைமைகளையும் மேம்படுத்தியிருக்கவில்லை” என்று கூறி செல்வந்தர்களுக்கு வரி குறைக்கப்பட்டதை வெட்கமற்று அவர் பாதுகாத்தார்.
அதனுடன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான ஒடுக்குமுறையின் ஒரு சட்டம்-ஒழுங்கு கொள்கையையும் அவர் உடன்சேர்த்தார். “பாதுகாப்புத்தான்” ஜனநாயகத்தின் முதல் தூண் என்று கூறிய அவர் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற மந்திரத்தை உச்சரித்தார், தொழிலாள வர்க்கப் பகுதிகளில் பரவலாக வெறுக்கப்படுவதாக இருக்கின்ற போலிஸ் தான் அரசின் மனித முகமாக இருக்கப் போவதாக அவர் கூறினார்.
அவர் கூறினார்: “சுற்றுப்புற பகுதிகளது பாதுகாப்பு போலிஸார், மக்களுக்கும் போலிசுக்கும் இடையில் நெருக்கத்தை மீண்டும் கொண்டு வருவார்கள், அவர்கள் அதிகாரத்திற்கு ஒரு மனித முகத்தை அளித்து, மக்கள் குடியரசினதாக இல்லாமல் இருக்கின்ற சட்டங்களுக்கு ஆட்படும் சமயத்தில் அவர்கள் நிராதரவான உணர்வைப் பெறுவதில் இருந்து மீள்வதற்கு உதவுகிறார்கள்.” போலிசை பாராட்டிய அவர் “நமது பாதுகாப்புப் படைகளுக்கு புதிய ஆதாரவளங்களை அளிக்கத் தொடங்குவதற்காக” நாடாளுமன்றத்திற்கும் நன்றி கூறினார்.
புலம்பெயர்ந்தவர்களை அடைத்து வைப்பதற்கான சிறை முகாம்களது ஒரு பரந்த வலைப்பின்னலை கட்டியெழுப்புவது உள்ளிட அவர்கள் மீதான தாக்குதல்களை பாரிய அளவில் தீவிரப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிடுகின்ற நிலையில், மக்ரோன், “சட்டவிரோத குடியேற்றத்திற்கு” எதிரான போராட்டம் என்ற நவ-பாசிஸ்டுகளது விருப்பமான விடயத்தை, “குடியரசு ஒழுங்கின்” பேரில் கையிலெடுத்துக் கொண்டார். “பொருளாதாரக் காரணங்களுக்காக, தமது நாட்டை விட்டு வெளியேறி நமது நாட்டிற்கு வருபவர்கள்” மற்றும் மக்ரோனின் கருத்துப்படி தஞ்சத்திற்கான உரிமை மறுக்கப்படக் கூடியவர்கள் மீது “கண்டிப்பான விதிகளை” திணிப்பதற்கு அவர் சூளுரைத்தார்.
இந்தக் கொள்கைகளின் மூலமாக “21 ஆம் நூற்றாண்டில் மீண்டும் ஒரு சக்தியாக ஆகும் வழிவகை பிரான்சுக்கு உள்ளது” என்று கூறி தனது உரையை அவர் நிறைவு செய்தார்.
மக்ரோனின் இந்த பிற்போக்குத்தனமான உரையை அங்கிருந்த நாடாளுமன்றப் பிரதிநிதிகளும் செனட்டர்களும் இடிமுழக்கம் போன்ற ஆரவாரத்துடனும் ஒரு எழுந்து நின்றான ஆமோதிப்புடனும் வரவேற்றனர்.
ஒடுக்குமுறை இராணுவவாதத்திற்கு நாடாளுமன்றவாதிகள் காட்டுகின்ற உற்சாகத்திற்கும் -இது நவ-பாசிஸ்டுகளினுடையதில் இருந்து கிட்டத்தட்ட பிரித்தறிய முடியாததாக இருக்கின்றது- தொழிலாளர்களுக்கும் இடையில் ஒரு வர்க்கப் பிளவு பிரித்து நிற்கிறது. பிரான்சிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் ஒரு இராணுவவாத மற்றும் எதேச்சாதிகாரவாத ஆட்சியை திணிப்பதற்கு எதிர்ப்பாக எழவிருக்கின்ற ஒரே சக்தி தொழிலாள வர்க்கமாக மட்டுமே இருக்கும். மக்ரோனின் சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டத்தை எதிர்ப்பதற்கு, பிரான்ஸ் உள்ளிட்ட அத்தனை ஏகாதிபத்திய சக்திகளது போரை நோக்கிய முனைப்புக்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்த அது நிர்ப்பந்தம் பெறும்.
மக்ரோனது அதி-வலது உரை -இதன் பிரதான வரிகள் உண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய சக்திகள் அத்தனையிலும் இருக்கின்ற அத்தனை வண்ணமான அரசாங்கங்களாலும் பகிர்ந்து கொள்ளப்படுவதாகும்- 2017 ஜனாதிபதி தேர்தலில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான, சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste - PES) எடுத்த நிலைப்பாடுகளை சரியென நிரூபணம் செய்கிறது.
இறுதிச்சுற்றில் இருந்த இன்னொரு வேட்பாளரான நவ-பாசிச மரின் லு பென்னைக் காட்டிலும் மக்ரோன் எந்தவிதத்திலும் சளைத்த தீமை அல்ல என்று ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றுக்குப் பின்னர் PES சரியாக எச்சரித்தது. இரண்டு வேட்பாளர்களுக்கும் சமரசமற்ற குரோதத்தை காட்டுவதை சுட்டிக்காட்டுவதற்கு, இரண்டாம் சுற்றில் ஒரு செயலூக்கமான புறக்கணிப்புக்கு PES அழைப்பு விடுத்தது, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தைப் பராமரிப்பதற்கும் பிற்போக்குத்தனமான வேட்பாளர்களில் எவர் தேர்தலில் ஜெயிக்கின்றபோதும் அவருக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு போராடுவதற்குமான ஒரே வழியாக அது மட்டுமே இருந்தது.
மக்ரோனுக்கு எதிராக எந்த தெளிவான நிலைப்பாட்டையும் எடுக்க மறுத்த, புதிய-முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோன் போன்ற போலி-இடது கட்சிகள், அதன்மூலம் மறைமுகமாக அவரது கொள்கைகளில் தங்களை உடந்தையாக்கிக் கொண்டன. மிக முக்கியமாக இரயில்வேயின் தனியார்மயமாக்கம் மற்றும் இரயில்வே தொழிலாளர்களது ஊதியங்களிலான வெட்டுக்கள் உள்ளிட சிக்கன நடவடிக்கைகளை மக்ரோனுடன் பேரம்பேசி வந்திருக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் அவை கூட்டணி வைத்து வந்திருக்கின்றன. அதற்குப் பின் இந்தத் தாக்குதல்களுக்கு எதிரான வேலைநிறுத்த நடவடிக்கையை கழுத்துநெரிப்பதிலும் அவை உதவின.
மக்ரோனின் சமூக-விரோத திட்டநிரலுக்கு எதிராகப் போராடுவதற்கு இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான அவசியம், மக்ரோனின் பதவிக்காலத்தில் ஒரு ஆண்டு முடிந்திருப்பதன் பின்னர், முன்னெப்போதினும் தெளிவாக மேலெழுந்து கொண்டிருக்கிறது.