Print Version|Feedback
Military-style immigration raids: Coming to a workplace near you
புலம்பெயர்ந்தோர் மீது இராணுவ பாணியிலான வேட்டையாடல்கள்: உங்கள் அருகே வேலையிடத்திற்கே வருகிறது
Eric London
26 July 2018
ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்கா எங்கிலும் ஆயிரக் கணக்கான வேலையிடங்களைப் போலிஸ் கண்காணிப்பின் கீழ் நிறுத்தி வருவதுடன், புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கைது செய்து நாடு கடத்துவதற்கு இராணுவ-பாணியிலான வேட்டையாடல் திட்டங்களைக் கடுமையாக விரிவாக்கி வருகிறது.
புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்க இலாகா (ICE) அக்டோபர் 2017 இல் இருந்து ஜூலை 2018 வரையில் ஒன்பது மாதங்களில் 984 வேலையிடங்களில் புலம்பெயர்ந்தோரைக் கைது செய்திருப்பதாக செவ்வாயன்று அறிவித்தது, இது அதற்கு முந்தைய 12 மாதங்களை விட அண்மித்து ஆறு மடங்கு அதிகமாகும், இந்நடவடிக்கைகளின் போது அரசாங்கம் 172 பேரை நாடு கடத்துவதற்காக அவர்களின் வேலையிடங்களில் இருந்து இழுத்துச் சென்றது.
புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்க இலாகா (ICE) அதன் "இரண்டாம் கட்ட" நடவடிக்கை என்று அது குறிப்பிட்டதில், மலைப்பூட்டும் அளவுக்கு கடந்த வாரத்தில் மட்டும் 2,738 நிறுவனங்களுக்குத் தணிக்கை குறிப்பாணைகளை அனுப்பி இருப்பது உட்பட, இந்தாண்டு இதுவரையில் 5,200 நிறுவனங்களுக்கு தணிக்கை குறிப்பாணைகளை அனுப்பியிருப்பதாக அது அறிவித்துள்ளது. இதன் அர்த்தம் பெடரல் முகவர்கள் தற்போது தொழிலாளர்களின் சம்பள பட்டியல்களைத் துலாவிக் கொண்டு, பத்து அல்லது நூறாயிரக் கணக்கான தொழிலாளர்களின் குடியுரிமை அந்தஸ்தைச் சோதித்து வருகின்றனர். இதற்கு முந்தைய நிதியாண்டில் அது மேற்கொண்ட 1,716 வேலையிட விசாரணைகளுடன் ஒப்பிடுகையில், அக்டோபர் 2017 இல் இருந்து ஜூலை 2018 வரையில், அது "6,093 வேலையிட விசாரணைகளை மேற்கொண்டிருந்ததாக" ICE குறிப்பிடுகிறது.
அரசு இந்த ஆலைகளின் ஒரு சிறிய பகுதியில் சோதனைகளை நடத்தினாலும் கூட, கைது செய்யப்படும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை பத்தாயிரக் கணக்கில் இருக்கும். ஜூன் மாதம் ஓகியோவின் சாண்டஸ்கி மற்றும் கன்டனில் நடத்தப்பட்ட சோதனைகள் போன்றவை, என்ன வரவிருக்கின்றன என்பதற்கு ஒரு புரிதலைத் தருகின்றன. SWAT-பாணியிலான அந்த தாக்குதல்களின் போது, நூற்றுக் கணக்கான புலம்பெயர்வு இலாகா அதிகாரிகள், ஹெலிகாப்டர்கள், நாய்கள் மற்றும் சுட்டுத்தள்ளும் நீண்டத் துப்பாக்கிகளுடன் ஒரு நாற்று வளர்ப்பு பண்ணையிலும் மற்றும் மாமிசம் பொட்டலமிடும் ஆலைக்குள்ளும் அதிரடியாக நுழைந்து, சுமார் 300 தொழிலாளர்களை, அதுவும் அமெரிக்காவில் பிறந்த அவர்களின் சக தொழிலாளர்கள் அந்த முகவர்களுக்குக் கண்டனம் தெரிவித்து கூச்சலிட்ட போதும், கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ICE இலாகாவின் அறிவிப்பு ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு பகிரங்க அச்சுறுத்தலாகும். இது, ஆசிரியர்கள், வாகனத்துறை தொழிலாளர்கள், தொலைதொடர்பு தொழிலாளர்கள், UPS தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மற்ற முக்கிய பிரிவுகள் 2018 இன் முதல் மாதங்களில் நடத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்ததற்கு விடையிறுப்பாக உள்ளது.
இந்த வசந்த காலத்தில் ஓக்லோஹோமா மற்றும் அரிசோனா ஆசிரியர்கள் 10,000 இல் இருந்து 20,000 ஆக சம்பளங்களை உயர்த்த கோரிய போது, அவர்களுக்கு மில்லியன் கணக்கான தொழிலாளர்களிடமிருந்து பரந்த ஆதரவு கிடைத்தது. ஆசிரியர்கள் தங்களின் மனக்குறைகளையும் மற்றும் சம்பள உயர்வு கோரிக்கைகளையும் முன்னெடுக்க மாநில அரசாங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களை எதிர்க்க முனைந்ததைக் கண்டு மற்ற தொழிலாளர்களும் பாடம் கற்றுக் கொண்டனர்.
இன்னும் அதிக தொழிலாளர்கள் இதேபோன்ற கோரிக்கைகளை உயர்த்த தொடங்கி வருகிறார்கள் என்பதை இட்டு பெருநிறுவனங்கள் பீதியடைந்துள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதலானது, வர்க்க போராட்ட வளர்ச்சியை உடைத்து, தொழிலாளர் சக்தியைப் பணிந்து நடக்க செய்ய பீதியூட்டுவதற்கான முயற்சிகளின் தாக்குமுகப்பாகும்.
முதலாவதாக, சீரழிந்து வரும் சமூக நிலைமைகளுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பலிக்கடா ஆக்கி, இனம் மற்றும் தேசியவாதத்தின் அடிப்படையில் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதன் மூலமாக, ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் போர்குணம் மற்றும் வர்க்க ஒற்றுமை வளர்வதில் நஞ்சூட்டலாமென நம்புகிறது.
உள்நாட்டு பாதுகாப்பு விசாரணைகளுக்கான ICE இன் தற்காலிக நிர்வாக துணை இயக்குனர் டெரிக் பென்னர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கிரிமினல்களாக சித்தரித்ததுடன், ICE அறிவிப்பை உள்ளடக்கி இருந்த ஓர் அறிக்கையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அமெரிக்க குடிமக்கள் தொழிலாளர்களின் ஆதாயங்களைப் பறித்து கொள்வதாக தெரிவித்தார்:
“இது பாதிப்பற்ற குற்றமல்ல. அனுமதி பெறாத தொழிலாளர்கள் பெரும்பாலும் சட்டபூர்வ அமெரிக்க தொழிலாளர்களின் அடையாளங்களைத் திருடி பயன்படுத்துகின்றனர், இது பாதிக்கப்படுபவரின் கடன், மருத்துவ விபரங்கள் மற்றும் அவர்களின் அன்றாட வாழ்வின் மற்ற விபரங்களைத் திருடுவதால் அவர்களைக் குறிப்பிடத்தக்களவில் பாதிக்கும்,” என்றார்.
பென்னர் தொடர்ந்து தெரிவித்தார்:
“வேலையிட நடைமுறையானது, சட்டத்திற்குட்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ள அமெரிக்க குடிமக்களினதும் மற்றும் மற்றவர்களினதும் வேலைகளைப் பாதுகாக்கிறது" மற்றும் "தொழிலாளர் சுரண்டல், சட்டத்திற்கு புறம்பான சம்பளங்கள், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான மற்ற நடைமுறைகளை எதிர்த்து போராட உதவுகிறது.”
என்னவொரு பொய்கள்! பாதுகாப்பற்ற நிலைமைகள், குறைவூதியங்கள் மற்றும் "தொழிலாளர் சுரண்டலுக்கு" பழி சுமக்க வேண்டியவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்ல, மாறாக பெருநிறுவனங்கள் தான்!
அமெரிக்காவில் மிக அதிக செல்வவளம் மிக்க இரண்டு பேர்—ஜெஃப் பெஸோஸ் மற்றும் பில் கேட்ஸ்—அமெரிக்காவில் மிக வறிய 160 மில்லியன் மக்கள் கொண்டிருக்கும் அந்தளவிற்கு அண்மித்த செல்வத்தைக் கொண்டிருக்கிறார்கள். பெஸோஸ் விடயத்தைப் பொறுத்த வரையில், மிகவும் அற்ப கூலிகளுக்காக, மிகக் குறைந்த சலுகைகளோடு, மிகவும் அபாயகரமான வேலையிட நிலைமைகளின் கீழ் உழைத்து வரும் உலகெங்கிலுமான 500,000 அமசன் தொழிலாளர்களைச் சுரண்டியே அவர் அவரது 150 பில்லியன் டாலர் தொகையைக் குவித்துக் கொண்டுள்ளார்.
தொழில்துறை எங்கிலும், மந்தமடைந்துள்ள அல்லது வீழ்ச்சி அடைந்து வரும் கூலிகள் பெருநிறுவன செல்வந்த தட்டுக்களிடையே பாரியளவில் செல்வவளம் அதிகரிப்பதற்கு எரியூட்டியுள்ளன. 2016 இல் இருந்து 2017 வரையில் மட்டுமே, உலக பில்லியனர்களின் (2,574 பேர்) செல்வ வளம் 9.2 ட்ரில்லியன் டாலராக 24 சதவீதம் அதிகரித்தது, அல்லது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதமாக அதிகரித்தது.
இரண்டாவதாக, தொழிலாள வர்க்கம் மீதான அதீத-சுரண்டலுக்கு எதிராக சமூக எதிர்ப்பு எழும் சாத்தியக்கூறுக்கு அஞ்சி, இந்த மிகப் பெரிய செல்வந்தர்கள் தொழிலாள வர்க்கத்தை உளவுபார்க்கவும் மற்றும் சரீரரீதியில் நசுக்கவும் ஒரு போலிஸ்-இராணுவ உள்கட்டமைப்பை ஸ்தாபித்து வருகின்றனர்.
வேலைகளை வேகப்படுத்தல், பாதுகாப்பற்ற நிலைமைகள், ஊதிய திருட்டு மற்றும் உயர்ந்து கொண்டே இருக்கும் பெருநிறுவன இலாபங்களுக்கு எரியூட்டும் ஏனைய சுரண்டல் வடிவங்களை எதிர்ப்பதிலிருந்து தொழிலாளர்களை அச்சுறுத்தி வைப்பதே இந்த இராணுவ தேடல் வேட்டை அச்சுறுத்தலின் உத்தேசம். அதேநேரத்தில், அரசும் முதலாளிமார்களும் இன்னும் கடுமையான நடவடிக்கைகளுக்கு தயாரிப்புகளைச் செய்து வருகின்றனர். தொழிலாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்: அரசு ஒரு வேலையிடத்தில் தேடல் வேட்டை நடத்தி, தொழிலாளர் ஒருவரை "சட்டவிரோதமாக" புலம்பெயர்ந்தவர் என்பதற்காக இழுத்துச் செல்ல முடியுமென்றால், "சட்டவிரோத" வேலைநிறுத்தங்கள் அல்லது போராட்டங்களில் பங்கெடுத்தற்காக அல்லது "சட்டவிரோத" துண்டறிக்கைகளை அல்லது இணைய கட்டுரைகளை வினியோகித்ததற்காக அதையே ஏனைய தொழிலாளர்கள் மீதும் அது செய்யக்கூடும்.
மூன்றாவதாக, பாரிய தேடல் வேட்டைகளின் அச்சுறுத்தல்களும் மற்றும் "அமெரிக்க குடிமக்கள் தொழிலாளர்களின்" நிலைமைக்கு புலம்பெயர்ந்தவர்கள் மீது பழிபோடும் முயற்சிகளும், அரசியல் ஆதரவுக்காக ட்ரம்ப் சார்ந்துள்ள ஒரு பாசிசவாத அடித்தளத்தை முடுக்கி விடுவதையும், வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபடும் தொழிலாளர்களைப் பீதியூட்டவும் மற்றும் அவர்கள் மீது போலிஸ் நடவடிக்கை எடுப்பதற்கு அவற்றை பயன்படுத்தவும் நோக்கமாக கொண்டுள்ளன.
புலம்பெயர்ந்தவர்கள் மீது ட்ரம்ப் அவரின் வக்கிரமான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியமை, இந்த வசந்த கால தொடக்கத்தில் வேலைநிறுத்தங்கள் அதிகரித்திருந்ததுடன் பொருந்தி இருந்தன.
மே மாத தொடக்கத்தில், ஆசிரியர்கள் வேலைநிறுத்தமும் போராட்டங்களும் வடக்கு கரோலினா, வேர்ஜினியா மற்றும் கொலராடோவுக்கு பரவிய போதுதான், ட்ரம்ப் புலம்பெயர்ந்த குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து, தனித்தனி கூடாரங்களில் அவர்களை அடைத்து வைக்கும் அவரின் "பூஜ்ஜிய சகிப்புத்தன்மை" கொள்கையை நடைமுறைப்படுத்தினார். அதற்கு பின்னர், ட்ரம்ப் குழந்தைகளை விடுவிக்குமாறு ஒரு நீதிமன்ற உத்தரவை அவதித்துள்ளதுடன், அவர்களை அவர்களின் பெற்றோர்களிடம் மீண்டும் ஒப்படைப்பதற்கான இறுதி காலக்கெடுவை இன்று முகங்கொடுக்கிறார். ஏற்கனவே அண்மித்து 500 பெற்றோர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர், அவர்களில் பலர் மீண்டும் அவர்களின் குழந்தைகளை ஒருபோதும் சந்திக்க முடியாமலேயே போகலாம்.
அமெரிக்க வேலையிடங்களை இராணுவமயப்படுத்த உதவுவதில் தொழிற்சங்கங்கள் விருப்பத்திற்குரிய பங்காளியாக சேவையாற்றும். சமீபத்திய பல பத்தாண்டுகளில், அரசு 5 மில்லியன் நபர்களை நாடு கடத்தி உள்ளது, அவர்களில் பெரும்பான்மையினர் தொழிலாளர்கள் என்பதோடு, அவர்களில் பலர் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தான். தொழிற்சங்கங்கள் ஒரேயொரு குறிப்பிடத்தக்க வேலைநிறுத்தத்திற்கு கூட அழைப்புவிடுக்க மறுத்துள்ளதுடன், அதற்கு பதிலாக அவை பெருநிறுவனங்கள் வேலைகளை அயல்நாடுகளிடம் ஒப்படைப்பதற்காகவும் மற்றும் கூலிகளைக் குறைத்து வருவதற்காகவும் சீனா மற்றும் மெக்சிகோவின் தொழிலாளர்கள் மீது பழிபோடுவதன் மூலமாக அமெரிக்க தேசியவாதத்தைக் கொண்டு தொழிலாளர்களை நஞ்சூட்டி வருகின்றன.
வேலையிடங்களில் புலம்பெயர்ந்தோர் மீதான ட்ரம்பின் தேடல் வேட்டைகளைக் குறித்து ஜனநாயக கட்சியினர் ஒன்றுமே கூறவில்லை. பிரிக்கப்பட்ட குடும்பங்களின் 460 க்கும் அதிகமான பெற்றோர்களை நாடு கடத்தி இருப்பதாக புதனன்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ள போதும் கூட, ஜனநாயக கட்சியினர் ரஷ்யாவை இராணுவரீதியில் ட்ரம்ப் எதிர்கொள்ள தவறியதற்காக அவரைக் கண்டிப்பதற்கான வலதுசாரி பிரச்சாரத்தின் மீதே தங்களின் எல்லா முயற்சிகளையும் ஒருங்குவித்துள்ளனர். ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதிலிருந்து விலகி, இப்பிரச்சாரமானது, தேசியவாதத்தையும், ரஷ்ய-விரோத பகட்டாரவாரத்தையும் ஊக்குவிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது.
பிளவுபடுத்தி, வெற்றி கொள்ளும் உத்தி மூலமாக தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக நிலைமையைத் தாக்குவதற்கான இருகட்சியினது செயல்திட்டத்தையும் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். எந்த நாட்டு குடியுரிமை கொண்டிருந்தாலும் அல்லது எந்த நாட்டில் பிறந்தவராக இருந்தாலும், அரசாங்கம் மற்றும் பெருநிறுவனங்களுக்கு எதிராக போராடுவதற்குத் தயாரிப்பு செய்வதில், தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையே வாழ்வா-சாவா கேள்வியாக உள்ளது.