Print Version|Feedback
Wealthiest 500 French people own 30 percent of the country’s GDP
500 பிரெஞ்சு செல்வந்தர்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்தைக் கொண்டுள்ளனர்
By Kumaran Ira
25 July 2018
2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் இருந்து, 500 பிரெஞ்சு செல்வந்தர்கள் குவித்து கொண்டுள்ள தனிப்பட்ட சொத்துக்களின் பொருளாதார சதவீதம் மும்மடங்காகி உள்ளது. 2009 இல் இருந்து 2018 வரையில், அவர்களின் கூட்டு செல்வவளம் பிரான்சின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 10 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்ந்து, ஒரு சாதனை மட்டத்திற்கு 650 பில்லியன் யூரோவை எட்டியிருப்பதாக Challenges சஞ்சிகையின் 2018 பட்டியல் தெரிவிக்கிறது. ஆனால் தேசிய உற்பத்தி மும்மடங்காகவில்லை, மாறாக அது 12 சதவீதம் மட்டுமே உயர்ந்தது.
இதில் பாரிய தொகைகள், 2008 க்குப் பின்னர் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் நாஜி ஆக்கிரமிப்பு மற்றும் ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியிடமிருந்து விடுதலை பெற்ற பின்னர் தொழிலாள வர்க்கம் ஸ்தாபித்திருந்த சமூக உரிமைகளை அழிப்பதற்காக, திணித்த சமூக செலவின குறைப்பு கொள்கைகள் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மூலமாக திரட்டப்பட்டிருந்தன.
இதுபோல செல்வவளங்களின் அதிகரிப்பானது, தொழிலாளர்களுக்கான சம்பளங்கள் மற்றும் சமூக சலுகைகளுக்கு அதிகமாக செலவாகிறது அதற்கு பணமில்லை என்பதால் அவர்கள் சம்பளங்கள் மற்றும் சமூக சலுகைகளில் வெட்டுக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அனைத்து வாதங்களையும் மறுத்தளிக்கின்றன. உண்மையில், சம்பளங்கள் மற்றும் தொழிலிட நிலைமைகள் மீதான தாக்குதல்கள் ஓர் ஒட்டுண்ணித்தனமான நிதியியல் செல்வந்த தட்டுக்களின் செல்வவளத்தை அதிகரிக்கவே சேவையாற்றுகின்றன, இவை தான் உத்தியோகப்பூர்வ அரசியலை அதி வலதுக்கு நகர்த்தி வருகின்றன.
ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஓய்வூதியங்கள், ஊதியங்கள், மருத்துவக் கவனிப்பு, மற்றும் வேலைவாய்ப்பின்மை காப்பீடு ஆகியவற்றின் மீதான அவர் தாக்குதல்களுக்கு எதிரான பரந்த பெரும்பான்மை பிரெஞ்சு மக்களின் எதிர்ப்பை காலில் இட்டு மிதித்து நசுக்கியே அவர்களின் செல்வவளங்களை அதிகரிக்க செய்துள்ளார். சமூக சேவைகளுக்காக பிரான்ஸ் செலவிடுவதை "அனாவசிய பணச் செலவு" என்றவர் தூற்றியமை, பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்தும் வங்கியாளர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்களின் கட்டுக்கடங்கா இறுமாப்பைப் பிரதிபலிக்கிறது.
மே மாதம் பிரசுரிக்கப்பட்ட புளூம்பேர்க் அறிக்கை ஒன்றின்படி, பிரான்சின் 13 மிகப்பெரிய செல்வந்தர்கள் 2018 தொடக்கத்தில் இருந்து 23.67 பில்லியன் யூரோ சேர்த்துள்ளனர். ஜனவரியில் இருந்து, பிரெஞ்சு பில்லியனர்கள் 12.2 சதவீத அளவுக்கு அவர்களின் செல்வவளத்தை அதிகரித்துள்ளனர், 100 செல்வந்தர்கள் கடந்த ஆண்டு 15 சதவீத அளவுக்கு அவர்களின் செல்வ வளத்தை அதிகரித்துக் கொண்டுள்ளனர்.
பிரான்சின் பில்லியனர்களில், பேர்னார்ட் அர்னோல்ட் இரண்டாவது ஆண்டாக உயர் அடுக்கில் முதலாவதாக இருந்தார். ஆடம்பர கூட்டுக் குழுமம் LVMH முதலாளியின் சொத்து மதிப்பு, 2008 இல் இருந்து 2018 க்குள், 18 பில்லியன் யூரோவில் இருந்து 73.2 பில்லியன் யூரோவுக்கு சென்றுள்ளது. அவர் சொத்து மதிப்பு தான் ஐரோப்பாவிலேயே மிக அதிகமானது, அது உலகிலேயே நான்காவது மிகப் பெரிய சொத்து மதிப்பாக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், அவர் சொத்து மதிப்பு 19.1 பில்லியன் யூரோ அளவுக்கு அதிகரித்துள்ளது, இது நாளொன்றுக்கு 52 மில்லியன் யூரோவாகும்.
Chanel நிறுவனத்தின் கூட்டு முதலாளிமார்கள் Alain மற்றும் Gérard Wertheimer இன் சொத்து மதிப்பு 40 பில்லியன் யூரோவை எட்டி, பட்டியலில் ஆறாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு உயர்ந்துள்ளது. இதனை அடுத்து Hermès இன் நிர்வாகி ஆக்செல் டுமாஸ் (39.6 பில்லியன் யூரோ), L’Oréal பெருநிறுவனத்தின் முதலாளி Françoise Bettencourt-Meyers (39.3 பில்லியன் யூரோ) ஆகியோரின் சொத்து மதிப்புகள் வருகின்றன. ஆச்சன் பெருநிறுவனத்தின் Gérard Mulliez (38 பில்லியன் யூரோ) மற்றும் ஆடம்பர பங்குடைமை கெரிங் நிறுவனத்தின் François Pinault (30.5 பில்லியன் யூரோ) ஆகியவை ஐந்தாம் மற்றும் ஆறாம் இடத்தில் உள்ளனர்.
இந்த பில்லியனர்கள் எல்லாம் உயர்மட்ட வரி விகித பிரிவில் வரும் செல்வந்தர்களுக்கான மக்ரோனின் பாரிய வரி வெட்டுக்களில் (ISF) இருந்தும், தொழிலாளர் விரோத இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளுக்கான அரசு மானியங்களில் இருந்தும் ஆதாயமடைந்துள்ளனர்.
அர்னோல்ட் குடும்பம் வடக்கில் ஒரு பிராந்திய கட்டுமான நிறுவனத்தைச் செயல்படுத்த தொடங்கியதுடன், ஜவுளித் தொழில்துறையை மறுகட்டமைப்பு செய்து சுருக்குவதற்காக அதன் அரசியல் தொடர்புகள் மற்றும் அரசு மானியங்களைப் பயன்படுத்தி அதன் சொத்து மதிப்பை உயர்த்தியது. இறுதியில் அது 1980 களில் LVMH ஐ விலைக்கு வாங்கியதுடன், அதனையொட்டி ஆலைகளை மூடி வடக்கு பிரான்ஸ் எங்கிலுமான சமூகங்களைச் சீரழித்ததில் முன்னோடியாக இருந்தது. அப்பிராந்தியம் இப்போது நவ-பாசிசவாத தேசிய முன்னணியின் பிரதான வாக்காளர் அடித்தளங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
அர்னோல்ட், பல்வேறு நவநாகரீக ஆடம்பர நிறுவனங்களைத் தந்திரமாக விலைக்கு வாங்கியதன் காரணமாக செல்வ செழிப்பான செல்வந்தராக ஆகியுள்ள இவர், கடந்த ஆண்டு தேர்தலில் மக்ரோனை ஆதரித்தார்.
முன்னொருபோதும் இல்லாதளவில் இந்த செல்வவள திரட்சி ஒரு சர்வதேச நிகழ்வுபோக்காகும். 2017 இல், உலகில் உருவாக்கப்பட்ட செல்வ வளத்தில் 82 சதவீதம் உலக மக்கள்தொகையில் செல்வ செழிப்பான 1 சதவீதத்தினால் கைப்பற்றப்பட்டது. மனிதயினத்தின் மிக வறிய அரைவாசி பேர் அவர்களின் செல்வ வளத்தில் எந்த உயர்வும் காணவில்லை.
உலகளவில் பில்லியனர்கள் எண்ணிக்கை 2016 க்குப் பின்னர் 15 சதவீதம் அதிகரித்து, 2,754 ஐ எட்டியிருப்பதாகவும், இந்த பில்லியனர்களின் செல்வ வளம் “24 சதவீதம் உயர்ந்து சாதனையளவுக்கு 9.2 ட்ரில்லியன் டாலரை எட்டி” உள்ளதாகவும் Wealth-X அறிக்கை கண்டறிந்தது. இது ஒட்டுமொத்த உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதமாகும்.
அதேநேரத்தில், உலகெங்கிலும், தொழிலாளர்களும் வறிய மக்களும் உலகின் அரசாங்கங்களது பொருளாதார முடிவுகளில் எதையும் கூற முடியாதவர்களாக உள்ளனர். அரசு, பில்லியனர்களைக் கொழிக்க வைக்கும் கொள்கைகளை ஏற்கின்ற வேளையில், மில்லியன் கணக்கான மக்களோ ஒவ்வொரு ஆண்டும் வறுமை மட்டத்திற்கு கீழே சென்று கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே 2010 இல், பிரான்சில் உயர்மட்ட 10 சதவீதத்தினர் தேசிய செல்வ வளத்தில் 62 சதவீதத்தைச் சொந்தமாக்கி கொண்டிருந்தனர், அதேவேளையில் அடிமட்ட 50 சதவீதத்தினர் செல்வ வளத்தில் வெறும் 5 சதவீதமே கொண்டிருந்தனர்.
பிரெஞ்சு மக்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் வறுமையில் வீழ்வோமோ என்று பயப்படுவதாகவும், 55 சதவீதத்தினர் அவர்கள் முன்னர் சம்பாதித்ததை விட குறைவாக சம்பாதிக்க நேரிடுமோ என்று அஞ்சுவதாகவும் Atlantico நிறுவனத்தின் Ifop கருத்துக்கணிப்பு கண்டறிந்தது. அரசியல் பகுப்பாய்வாளர் கிறிஸ்தோப் பௌதின் Atlantico க்கு கூறுகையில், “ஒப்பீட்டளவில் குறைந்த சதவீதங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் தான், ஒட்டுமொத்த பிரெஞ்சு மக்களில் இந்த 55 சதவீத மதிப்பை உருவாக்கியவர்கள், அதேநேரத்தில் இன்னமும் வேலை செய்யும் வயதில் உள்ள பிரெஞ்சு மக்கள் சராசரியாக 60 சதவீதத்திற்கு நெருக்கத்திற்கு இட்டுச் சென்றுள்ளனர்,” என்று தெரிவித்தார். வேலைவாய்ப்பற்றோரைப் பொறுத்த வரையில், 82 சதவீதத்தினர் வறுமையில் விழுவோமோ என்று அஞ்சுகின்றனர்.
பிரெஞ்சு முதலாளித்துவம், அது ஒப்பீட்டளவில் மென்மையாக, சமரசமாக மற்றும் நெறிமுறைக்குட்பட்ட சமூக ஒழுங்கில் இருந்துவதாக பாசாங்குத்தனத்திற்கு மத்தியில், ஒட்டுமொத்தமாக உலக முதலாளித்துவத்தைப் போலவே அதே தீர்க்கவியலாத சமூக முரண்பாடுகளால் கிழிந்து தொங்குவதை Challenges அறிக்கை அடிக்கோடிடுகிறது.
இந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட சமூக சமத்துவமின்மை முதலாளித்துவம் மீதும், மற்றும் குறிப்பாக பிரான்சில் "இடதைப்" பிரதிநிதித்துவம் செய்வதாக நீண்டகாலமாக கூறி வந்த அமைப்புகள் மீதும், வைக்கப்படும் ஓர் அரசியல் குற்றப்பத்திரிகையாகும். சுதந்திரத்தின் போது, தேசிய எதிர்ப்பு கவுன்சில் (CNR), பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் பாசிசத்தின் குற்றங்களுக்கு மத்தியிலும், பிரான்ஸ் எப்போதும் ஒரு சமூக குடியரசாக இருக்குமென வாக்குறுதியளித்து, பிரான்சில் முதலாளித்துவ ஆட்சி பேணுவதை நியாயப்படுத்தியது. CNR இல் இருந்த ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் கோலிச கூறுபாடுகள் அனைத்தும் பிரான்சில் "பொருளாதார மற்றும் நிதியியல் பிரபுத்துவங்களை" இல்லாதொழிக்க வாக்குறுதி அளித்தன.
சுதந்திரத்தின் போது நிதியியில் பிரபுத்துவம் உயிர்பிழைத்ததோடு மட்டுமின்றி, மாறாக 1930 களின் பெருமந்தநிலை மற்றும் இரண்டாம் உலக போரின் இருண்ட கணங்களுக்குப் பின்னர் இருந்து பல தசாப்தங்களாக அவை அனுபவித்து வந்துள்ள பொருளாதார மேலாதிக்க அந்தஸ்தை ஸ்தாபித்துக் கொண்டுள்ளன. அரசியல்ரீதியில் சட்டவிரோதமாக இத்தகைய சொத்துகளும், தொடர்ந்து சமூக சமத்துவமின்மையும் மற்றும் ஒடுக்குமுறையும் அதிகரிப்பதையும் முகங்கொடுக்கும் தொழிலாளர்கள், இறுதியாக முறையற்ற வகையில் சேர்த்த இத்தகைய சொத்துக்களைப் பறிமுதல் செய்வதைத் தவிர அவர்களுக்கு முன்னால் வேறெந்த வழியும் காண மாட்டார்கள்.