Print Version|Feedback
What is “our democracy”?
“நமது ஜனநாயகம்" என்றால் என்ன?
Eric London
20 July 2018
ரஷ்யாவும் அதன் ஜனாதிபதி விளாடிமீர் புட்டினும் "நமது ஜனநாயகத்தை" அச்சுறுத்துகின்றனர் என்ற வாதமே ஜனநாயகக் கட்சி தலைமையிலான ரஷ்ய-விரோத விஷமப் பிரச்சாரத்தின் இதயதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.
“நமது ஜனநாயகத்தின்" புள்ளிவிபரங்கள் தான் என்ன, இதை பலவீனப்படுத்த கிரெம்ளினின் தலைமை சூழ்ச்சியாளர்கள் இந்தளவுக்கு கடுமையாக செயல்படுகிறார்கள்?
சமத்துவமின்மையும் செல்வந்த தட்டுக்களும்
- ஜெஃப் பெஸோஸ் மற்றும் பில் கேட்ஸ் ஆகிய இரண்டு மிகப் பெரிய செல்வந்தர்கள், ஏறத்தாழ மொத்த மக்கள்தொகையில் வறிய பாதி மக்களின் செல்வத்திற்கு இணையான செல்வத்தைக் குவித்து கொண்டுள்ளனர்.
- மக்கள்தொகையில் மிகப் பணக்கார 5 சதவீதத்தினர் மொத்த செல்வவளத்தில் 67 சதவீதத்தைக் கொண்டுள்ளனர். மக்கள்தொகையில் மிக வறிய 60 சதவீதத்தினர் மொத்த செல்வவளத்தில் வெறும் 1 சதவீதத்தையே கொண்டுள்ளனர்.
- செல்வந்த அமெரிக்கர்களின் ஆயுள்காலம் அமெரிக்க ஏழைகளைக் காட்டிலும் சராசரியாக 20 ஆண்டுகள் கூடுதலாக உள்ளது.
- எழுபது சதவீத அமெரிக்கர்களிடம் 1,000 டாலருக்கும் குறைவான தொகையே சேமிப்பில் உள்ளது.
- வங்கிகள் 2004 க்குப் பின்னர் இருந்து 7 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளை ஜப்தி செய்துள்ளன.
- ஒவ்வொரு இரவிலும் அங்கே 554,000 வீடற்றவர்கள் உள்ளனர்.
- இந்நாட்டில் முதன்முதலில் வாழ்ந்த பூர்வீகக் குடியினர் மிகவும் வறியவர்களாகவும் ஜனத்தொகையில் மிகவும் சுரண்டப்படுபவர்களாகவும் உள்ளனர்.
- 10 மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், கருக்கலைப்புக்காக பெண்கள் 100 மைல்களுக்கும் கூடுதல் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது, இதுவும் இந்நூற்றாண்டில் மிக வலதுசாரி பெரும்பான்மை கொண்ட உச்ச நீதிமன்றத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது.
போலிஸ் ஒடுக்குமுறையும், பாரிய சிறையடைப்பும்
- வயதுக்கு வந்தவர்களில் மூன்று சதவீத அமெரிக்கர்கள், அதாவது 6.8 மில்லியன் பேர், சிறிய சிறையில் அல்லது பெரிய சிறைகளில் அல்லது பிணையில் அல்லது நன்னடத்தைக் காவலில் உள்ளனர்.
- அமெரிக்காவில் 1.2 மில்லியன் போலிஸ் அதிகாரிகள் உள்ளனர், இது ஏறத்தாழ நியூ ஹாம்ப்ஷைர் மாநில மக்கள்தொகைக்கு சமம்.
- 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இருந்து போலிஸ் 15,000 பேர்களைக் கொன்றுள்ளது.
- தற்போது 55,000 குழந்தைகள் சிறார் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- மாநிலங்களில் மூன்றில் ஒரு பங்கு மாநிலங்கள் ஒரு வகையான கடனாளிகளுக்கான சிறைக்கூடத்தைக் கொண்டுள்ளன, அபராதங்கள் அல்லது கடன்கள் செலுத்த தவறும் ஏழைகள் அங்கே அடைக்கப்படுகின்றனர்.
“பயங்கவாதத்திற்கு எதிரான போருக்கு" கொடுக்கப்பட்ட விலைகள்
- ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்டு வரும் போர்களில் அமெரிக்கா ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களைக் கொன்றுள்ளது.
- ஈராக்கில் "பாரிய பேரழிவுகரமான ஆயுதங்கள்" இருந்ததாக உளவுத்துறை முகமைகள் குடிமக்களுக்கு பொய்யுரைத்தன.
- உலகெங்கிலும் "நிழலுலக தளங்களான" சிஐஏ சித்தரவதை வளாகங்களின் ஒரு வலையமைப்பைச் செயல்படுத்தி வந்த அமெரிக்கா, தொடர்ந்து குவாண்டனமோ வளைகுடா சிறைச்சாலையில் காலவரையின்றி டஜன் கணக்கானவர்களைச் சிறையில் அடைத்துள்ளது.
- ஒபாமா நிர்வாகம் 2011 இல் ட்ரோன் தாக்குதல் ஒன்றில் அன்வர் அல்-அவ்லாகியைப் படுகொலை செய்தபோது, அது எந்தவித நீதி விசாரணையும் இன்றி அமெரிக்க குடிமக்களைப் படுகொலை செய்வதற்கான உரிமை இருப்பதாக வலியுறுத்தியது.
- அமெரிக்கா 2001 இல் இருந்து மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா போர்களில் ஏறத்தாழ 6 ட்ரில்லியன் (6,000,000,000,000) டாலர்கள் செலவிட்டுள்ளது.
இராணுவம்-தொழில்துறை கூட்டு
- வரவு-செலவு திட்ட (விருப்புடை மானிய) செலவினங்களில் பாதிக்கும் மேலானவை இராணுவ செலவுகளின் கணக்கில் வருகின்றன — இது பெடரல் வீட்டுவசதி செலவுகளை விட 10 மடங்கும், கல்வி செலவுகளை விட ஒன்பது மடங்கும் அதிகமாகும்.
- பாதுகாப்புத்துறை, இப்போது 700 பில்லியன் டாலருக்கும் கூடுதலான ஆண்டு வரவு-செலவு திட்டக்கணக்குடன், 2.1 மில்லியன் பணியாளர்களுடன், தேசத்தின் மிகப்பெரிய தொழில்வழங்குனராக உள்ளது, மேலும் அமெரிக்க இராணுவம் 150 நாடுகளில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிப்பாய்களை கொண்டுள்ளது.
தேர்தல்களும், அரசு மீதான பெருநிறுவன கட்டுப்பாடும்
- பெருநிறுவனங்கள் அரசாங்கத்தின் ஆதரவை நாட 2017 இல் மட்டும் சுமார் 3 பில்லியன் டாலர்கள் செலவிட்டுள்ளன.
- 2016 தேர்தலில் செல்வாக்கு செலுத்த ஆறு பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டன — இதில் பெரும்பான்மையை பெருநிறுவனங்களும் செல்வந்தர்களும் வழங்கினர், இவர்கள் வரம்பின்றி நன்கொடை வழங்கலாமென 2010 இல் உச்சி நீதிமன்றம் Citizens United v. FEC. தீர்ப்பு வழங்கி இருந்தது.
- தேர்தல் கட்டுப்பாடுகள், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் மேலாளுமையை மூன்றாம் கட்சிகள் சவால் விடுக்க சாத்தியமில்லாது செய்கின்றன.
- முப்பத்தி மூன்று மாநிலங்கள் வாக்காளர் அடையாள சட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளன, இச்சட்டங்கள் மக்கள்தொகையில் 6 சதவீதத்தினரை வாக்களிக்க முடியாமல் தடுப்பதாக ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல்
- அமெரிக்க கடற்படை 120,000 புலம்பெயர்ந்தவர்களை அடைத்து வைக்க சித்திரவதை கூடங்களைக் கட்டமைக்க திட்டமிட்டு வருகிறது.
- 2001 இல் இருந்து 5.4 மில்லியன் புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர், மேலும் 1 மில்லியன் பேர் இப்போது அமெரிக்காவில் நாடு கடத்தப்படுவதற்கான உத்தரவுகளை முகங்கொடுத்துள்ளனர்.
- 2,900 க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு, வாரக் கணக்கில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
- தடுப்புக்காவலில் புலம்பெயர்ந்தவர்கள் மீது பரவலாக சரீரரீதியிலும், பாலியல் மற்றும் மனரீதியிலும் துஷ்பிரயோகம் நடக்கிறது.
- புலம்பெயர்ந்தவர்களைச் சிறையிலடைப்பதும் நாடு கடத்துவதும் ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க பெருநிறுவன தொழில்துறையாக உள்ளது.
- 20,000 எண்ணிக்கை கொண்ட புலம்பெயர்வு மற்றும் சுங்க அமுலாக்க முகவர்களின் ஓர் படையை அரசாங்கம் கட்டமைத்துள்ளது, 45,000 எண்ணிக்கையிலான சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு முகவர்கள் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்த மற்றும் சிறையிலடைக்க உள்ளனர்.
- புலம்பெயர்ந்தவர்களுக்கு கலந்தாலோசிப்பதற்கான உரிமை இல்லை, பலர் நீதிபதியின் முன்னால் கொண்டு வரப்படுவதே இல்லை.
தணிக்கை மற்றும் அரசு கண்காணிப்பு
- நாட்டின் 90 சதவீத ஊடக அமைப்புகள் ஐந்து ஊடக நிறுவனங்களுக்குச் சொந்தமானவையாக உள்ளன.
- டிசம்பர் 2017 இல், பெடரல் தொலைத்தொடர்பு ஆணையம் இணைய நடுநிலைமையை நீக்குவதற்கு தீர்ப்பு வழங்கி, பெருநிறுவனங்களும் அரசாங்கமும் இணைய அணுகலைத் தணிக்கை செய்யலாம் கட்டுப்படுத்தலாமென உரிமை வழங்கியது.
- தேசிய பாதுகாப்பு ஆணையம் 2017 இல் அமெரிக்க தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களிடம் இருந்து 534 மில்லியன் தொலைபேசி அழைப்புகளையும், குறுஞ்சேதிகளையும் குறித்த விபரங்களைச் சேகரித்தது—இது 2016 இல் சேகரிக்கப்பட்டதை விட மும்மடங்காகும்.
- எதிர்ப்பு கண்ணோட்டங்கள் கொண்டவர்களாக கருதப்படுபவர்களை மட்டுப்படுத்த, கூகுள் மற்றும் பேஸ்புக் அவற்றின் மென்பொருள் வழிமுறை அல்காரிதங்களில் மாற்றங்கள் செய்து, சோசலிச, போர்-எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்களை தேடல் முடிவுகளில் பின்னுக்குத் தள்ளி அவற்றை தணிக்கை செய்து வருகின்றன.
- அமெரிக்க போர் குற்றங்கள் மற்றும் பெருந்திரளான மக்கள் மீதான கண்காணிப்புகள் குறித்த விபரங்களை அம்பலப்படுத்தியதற்காக செல்சியா மேனிங், எட்வார்ட் ஸ்னோவ்டென் மற்றும் ஜூலியான் அசான்ஜ் போன்ற பகிரங்கப்படுத்தும் நபர்கள் மீது அரசாங்கம் குற்றஞ்சாட்டி, வழக்கில் இழுத்து அழுத்தமளித்துள்ளது அல்லது வேறு நாடுகளிடம் ஒப்படைக்க முனைந்துள்ளது.
இதுதான் "நமது ஜனநாயகத்தின்" யதார்த்தம், மேலும் திரு. புட்டின் என்னதான் செய்திருந்தாலும், மேற்கூறிய நிலைமைகளில் எதுவொன்றுக்கும் அவர் மீது பழி போட முடியாது. இந்த சீரழிவுக்கான வேர்கள் முதலாளித்துவ அமைப்புமுறையிலும் மற்றும் சமூக சமத்துவமின்மை மட்டங்கள் முன்னொருபோதும் இல்லாதளவில் வளர்ந்திருப்பதிலும் தங்கியுள்ளன.
“நமது ஜனநாயகத்திற்குள் ரஷ்யாவின் தலையீடு" மீது ஆளும் வர்க்க கன்னைகளுக்கு இடையிலான ஆழ்ந்த அரசியல் உள்மோதலானது, ஆளும் வர்க்கத்தினுள் ஜனநாயக உரிமைகளுக்காக எந்த அரசியல் வட்டாரமும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. ஜனநாயக ஆட்சி வடிவங்களை அவர்கள் கைவிடுவதானது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மிகப் பெரிய அபாயத்தை முன்னிறுத்துகிறது. ஏகாதிபத்திய போர், சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக போராடுவது மட்டுமே ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரே வழியாகும்.