Print Version|Feedback
දේශපාලන අර්බුදය සහ පන්ති අරගල වර්ධන වෙද්දී ආන්ඩුව මරන දඬුවම බලාත්මක කිරීමට තීන්දු කරයි
இலங்கை: அரசியல் நெருக்கடியும் வர்க்கப் போராட்டங்களும் வளர்ச்சியடையும் நிலையில் அரசாங்கம் மரண தண்டனையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது
W.A. Sunil
14 July 2018
இலங்கையில் "போதைப் பொருள் கடத்தலையும் குற்றங்களையும் கட்டுப்படுத்தும்” சாக்குப்போக்கின் கீழ், மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த அமைச்சரவை ஜூலை 10 அன்று ஏகமனதாக தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவும் இந்த முன்மொழிவை அமைச்சரவைக்கு முன்வைத்தனர்.
மரண தண்டனையை நிறைவேற்றும் அரசாங்கத்தின் முடிவை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தனது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது.
அமைச்சர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தின் மத்தியில் மரண தண்டனையை நடைமுறைப்டுத்துவதற்கு தேவையான மசோதா ஒன்றை வரைவதற்கு நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவுக்கு சிறிசேன உத்தரவு வழங்கியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்போது மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பட்டியலை வழங்குமாறு சிறிசேன உத்தரவிட்டுள்ளார். அந்த எண்ணிக்கை 19 ஆகும்.
ஜூலை 11 அன்று கண்டி, கடம்பேவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், அவர் தனது முடிவைப் பற்றி பெரும் உற்சாகத்துடன் குறிப்பிட்டதாவது: "முழு சமூகத்துக்காகவும் நாட்டுக்கும் நாளை பிறக்கவுள்ள குழந்தைகளுக்காகவும் அமைச்சரவைக்கு நான் ஒரு முன்மொழிவைக் கொண்டு வந்தேன். போதை பொருள் காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னரும் பரந்தளவிலான போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவபர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அனுமதி கொடுத்து எனது கையொப்பத்தை வைக்க வேண்டும் என நான் நேற்று மாலை நீதித்துறை அமைச்சை கேட்டுக்கொண்டேன்.
போதைப் பொருள் வியாபாரத்தை அடக்கும் சாக்குப் போக்கில் அரசாங்கம் இராணுவத்தின் முப்படைகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படைகளை நாடெங்கிலும் கட்டவிழ்த்துவிட்டுள்ளதோடு இரண்டு வருடங்களுக்கு அவர்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடிவெடுத்துள்ளது. இது மக்களுடைய ஜனநாயக உரிமைகளை நசுக்கும் ஒரு எதேச்சதிகார பொலிஸ் அரசிற்கான உறுதியான நடவடிக்கை ஆகும்.
சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு அரசாங்கத்தின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குற்றம் மற்றும் படுகொலை செய்யப்படும் முறையை கருத்தில் கொள்ளாமல், எந்தவொரு சூழ்நிலையிலும் மரண தண்டனையை திணிப்பதை சர்வதேச மனித உரிமை அமைப்பு முழுமையாக எதிர்க்கின்றது, என அதன் தெற்காசிய பிரதி இயக்குனரான தினுஷிகா திஸாநாயக்க ஜூலை 11 அன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“அரசாங்கம் கொலை செய்யும் எந்தவொரு திட்டத்தையும் உடனடியாக நிறுத்துதல், அனைத்து மரண தண்டனைகளையும் இடைநிறுத்துதல் மற்றும் முற்றிலும் அதை இரத்துச் செய்வதன் முதல் நடவடிக்கையாக, மரண தண்டனை விதிப்பது உத்தியோகபூர்வமாக நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்," என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
வெகுஜனங்களை ஏமாற்றுவதற்காக வெள்ளை ஆடை அணிந்துகொண்டு பௌத்த வணக்க ஸ்தலங்ளுக்கு சென்று ஆன்மீகம் பேசும் ஜனாதிபதி சிறிசேனவின் கொடூரத்தனம் மற்றும் துஷ்டத்தனம் அவரது இந்த தீர்மானங்கள் மற்றும் முடிவுகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
அவர் நாட்டில் நடந்த போர்க் குற்றங்களுக்கு நேரடியாக பொறுப்புக் கூற வேண்டியவராவார். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் கடைசிக் கட்டத்தில் நாட்டின் பதில் பாதுகாப்பு அமைச்சராக அவர் இருந்தார். அப்போது பாதுகாப்புப் படைகளால் பல்லாயிரக் கணக்கான சாதாரண தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக் கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதுன் கடத்தல்களுக்கும் பலியாகினர். சிறிசேன இந்த போர்க் குற்றங்கள் மற்றும் அவற்றுக்கு பொறுப்பாளிகளாக இருந்த இராணுவ அதிகாரிகளையும் பாதுகாக்கின்றார்.
குற்றவியல் சட்டத்தில் மரண தண்டனை உள்ளடங்கியிருந்தாலும், 1976ல் இருந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. முதலாளித்துவ ஆளும் வர்க்கமானது அதன் நெருக்கடி தீவிரமடைந்துள்ளதாலும் வர்க்கப் போராட்டம் வளர்ச்சியடைவதாலும் அதற்கு பிரதிபலிப்பாக கடந்த இரண்டு தசாப்தங்களில் மரண தண்டனை நிறைவேற்றத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் முயன்று வந்துள்ளன.
அதிகரிக்கும் குற்றங்களுக்கு எதிராக, "சட்டம் ஒழுங்கை" பாதுகாக்கும் சாக்குப் போக்கின் கீழ், 1999ல் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினாலும் 2003ல் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலும் 2012ல் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தாலும் 2015ல் "சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் கொலைகளை" கட்டுப்படுத்துவதன் கீழ் ஜனாதிபதி சிறிசேனவினாலும் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த முயற்சிக்கப்பட்டு வந்துள்ளது. மக்களதும் மனித உரிமைகள் அமைப்புகளதும் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அதை ஒத்திவைக்க முதலாளித்துவ ஆளும் வர்க்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது.
ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தினதும் ஏழைகளதும் போராட்டம் வளர்ச்சியடைந்து வரும் நிலையிலேயே, தற்போதைய அரசாங்கம் மரண தண்டனையை நிறைவேற்றுவதை மீண்டும் செயல்படுத்த முயற்சிக்கின்றது. சிறிசேன அண்மைய பல சமயங்களிலும், தனது அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள "ஜனநாயக சுதந்திரத்தை" சட்டவிரோதமாக பயன்படுத்தி, நாட்டை ஸ்திரமின்மைக்கு உள்ளாக்குவதாக தொழிலாளர்களையும் மாணவர்களையும் மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த துஷ்டத்தனமான முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் மத உயர் பீடங்களதும் ஆதரவு ஏற்கனவே கிடைத்துள்ளது.
"தண்டனை கொடுக்கும் ஒரு வடிவமாக மரண தண்டனையை நிறைவேற்றுவது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றால், அதை செயல்படுத்துவதில் சிக்கல் கிடையாது," என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஜூலை 11 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
போலி இடது நவ சம சமாஜக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி (FSP), ஐக்கிய சோசலிச கட்சி மற்றும் தொழிற்சங்கங்களும் அரசாங்கம் முடிவினைப் பற்றி இதுவரை ஒரு வார்த்தை தன்னும் பேசாமல் இருப்பது அவை அதற்கு மௌனமாக ஒப்புதல் கொடுத்துள்ளதை காட்டுகிறது.
முன்னால் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) இது தொடர்பாக இன்னமும் ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிடாவிட்டாலும், நாட்டில் “ஒழுக்கம் சீரழிவதற்கு”, "குற்றங்கள் அதிகரிப்பதற்கு" "போதை மருந்து கடத்தல் அதிகரிப்பதற்கு" எதிராக ஒரு "சட்டத்தை அமுல்படுத்துவதில்" தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கத்திற்கு எதிராக அது முன்னெடுக்கும் பிரச்சாரத்தின் நோக்கம், வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கு இத்தகைய கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கத்தை நெருக்குவதே ஆகும்.
அரசாங்கத்தின் முடிவுக்கு பெளத்த மதகுருமார்களதும் அனுமதி கிடைத்துள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜூலை 11 நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கூறியதாக டெய்லி மிரர் செய்தி கூறுகிறது.
"சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கடும் குற்றவாளிகள் அங்கு இருந்துகொண்டு சண்டித்தனத்தையும் குண்டர்தனத்தையும் காட்டினால் தூக்குத் தண்டனையை அமுல்படுத்துவதில் பிழை இல்லை என கார்டினல் மால்கம் ரஞ்சித் கூறியுள்ளார்.
சகல முதலாளித்துவ ஊடகங்களும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு சார்பாக பிரச்சாரத்தில் குதித்துள்ளன.
ஜூலை 13, டெய்லி நியூஸ் ஆசிரியர் தலையங்கம் கூறியதாவது: "போதைப் பொருள் சம்பந்தமான குற்றங்கள் வேகமாக அதிகரிக்கும் நிலையில், மரண தண்டனையை நிறைவேற்றுவதை மீண்டும் அமுல்படுத்த ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு, பின்னோக்கி இழுபடாமல் இறுதி முடிவாக எடுக்கப்பட்டுள்ளது என்பது எமக்கு நிச்சயம்"… "அர்த்தமற்ற இரத்தக்களரியை முடிவுக்கு கொண்டுவரவும் நாடு அராஜக நிலைக்கு செல்வதை தடுக்கவும் கடுமையான நிவாரணம் ஒன்றை அறிமுகம் செய்யும் போது, ஜனாதிபதி முழுமையாக நியாயமானவர்."
அதே நாள், டெய்லி மிரர் ஆசிரியர் தலையங்கம், அரசாங்கத்தின் முடிவை தூக்கிப் பிடிக்கும் அதேவேளை, மேலும் ஏனைய குற்றங்களுக்கு எதிராகவும் இது விரிவாக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. "போதைப்பொருள் கடத்தல் மட்டுமன்றி, உள்வீட்டு மோதல்கள் காரணமாக நடக்கும் கொலைகளைத் தடுப்பதற்காக மரண தண்டனையை விரிவாக்குவதற்கு, மக்களில் பெரும்பான்மையானவர்கள் அனுமதி கொடுப்பதற்கு பெருமளவில் வாய்ப்பு இருக்கின்றது. இந்த நாட்டின் அதிகாரிகள், மனிதன் தனது இனத்தின் ஏனையவர்களை மதிக்கும் கலாச்சாரம் ஒன்றை நாட்டில் ஸ்தாபிக்கும் உயர்ந்த சந்தர்ப்பம் இது என தலையங்கத்தில் டெய்லி மிரர் எழுதியுள்ளது.
இனவாத மற்றும் தொழிலாளர் விரோத திவயின பத்திரிகையின் தலையங்கம், சர்வதேச மனித உரிமை அமைப்பின் அறிக்கை மீது பாய்ந்து, அதன் எதிர்ப்பை புறக்கணித்துவிட்டு முடிவு சம்பந்தமாக சளையாமல் இருக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளது. "போதைவஸ்துக்காரர்களை மட்டுமன்றி, கற்பழிப்பு குற்றவாளிகளையும் சிறுவர் துஷ்பிரயோகம் செய்பவர்களையும் தூக்கிலிட வேண்டும் என கோருவோம். சர்வதேச மன்னிப்புச் சபை குரைக்கும் குரைப்புக்கு வளைந்து கொடுக்க வேண்டாம் என ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுப்போம்," என அந்த தலையங்கம் குறிப்பிடுகிறது.
போதை பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலக உறுப்பினர்களுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.), ஐ.தே.க. ஆகிய இரு பிரதான கட்சிகளின் சில முக்கிய அரசியல்வாதிகளுக்கும் இடையே நெருக்கமான உறவுகள் இருப்பது இரகசியமானதல்ல. மேலும், சில அரசியல்வாதிகள் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சில அரசியல்வாதிகளின் தனிப்பட்ட பாதுகாவலர்கள் பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் போன்று ஏனைய குற்றங்களும், முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் இலாப அமைப்பால் துஷ்பிரயோகம் மற்றும் நோய்க்குள் தள்ளப்பட்ட ஒரு சமூகத்தின் விளைவுகளே ஆகும். இந்த விளைவுகளே மறுபுறம் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தால் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுடைய ஜனநாயக உரிமைகளை அழிக்கவும், அவர்களுக்கு எதிராக பொலிஸ் அரச திட்டங்களை முன்னெடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்த கால யுத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார மற்றும் சமூக பேரழிவினால் நாட்டில் வேலையின்மை, வறுமை அதிகரிப்பு மற்றும் சமூக சமத்துவமின்மை விரிவாக்கம், சமூக விரோத மற்றும் குற்றவியல் செயல்பாடுகளின் அதிகரிப்புக்கும் இட்டுச் சென்றுள்ளது.
15 மற்றும் 24 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை 22 சதவீதம் ஆகும். சுமார் 60,000 வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் இளைஞர்கள் போதைப்பொருட்களையும் பிற சமூக விரோத நடவடிக்கைகளையும் நாடுவதற்கு முக்கிய காரணியாக உள்ளது. முதலாளித்துவ ஊடகங்களால் மிகைப்படுத்திக் காட்டப்படும் வீட்டு வன்முறை இந்த சமூக சீரழிவின் விளைவே ஆகும்.
போதைப் பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களை அடக்கும் போர்வையில், மரண தண்டனையை நிறைவேற்றுவதை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள முடிவு, முதலாளித்துவ அமைப்பினாலேயே உருவாக்கப்பட்ட சமூக பேரழிவில் இருந்து மக்களின் அவதானத்தை திசைதிருப்புவதற்கும் மற்றும் அரசியல் எதிரிகளை குறிப்பாக உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்குமான நடவடிக்கையே ஆகும். எனவே, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக மற்றும் மனித உரிமைகளை மதிக்கும் அனைவரும் இதை எதிர்க்க வேண்டும்.
ஊழல் நிறைந்த, நெருக்கடியில் மூழ்கிப் போயுள்ள முதலாளித்துவத்தை தூக்கியெறிவதோடு, ஒரு சோசலிச சமுதாயத்தை ஸ்தாபிப்பதன் மூலம் மட்டுமே போதைவஸ்துகள் மற்றும் சகல குற்றங்களும் நிறுத்தப்பட முடியும்.