Print Version|Feedback
Allies no more: Trump escalates threats against Europe
இனி கூட்டாளிகளில்லை: ஐரோப்பாவுக்கு எதிரான அச்சுறுத்தல்களை ட்ரம்ப் தீவிரப்படுத்துகிறார்
Andre Damon
10 July 2018
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்க-ஐரோப்பிய உறவுகளில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடிக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (NATO) ஒரு உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக செவ்வாய்கிழமையன்று, புரூசெல்ஸ் வந்தடையவுள்ளார்.
“முதன்முறையாக ஐரோப்பியக் கரைகளில் ஒரு அமெரிக்க ஜனாதிபதியின் வருகையானது நடுக்கத்துடனும் இன்னும் அச்சத்துடனும் கூட எதிர்நோக்கப்படுகிறது” என்று பைனான்சியல் டைம்ஸ் எழுதியது.
ட்ரம்ப் நிர்வாகம், சென்ற மாதத்தில் ஐரோப்பிய உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிகளின் மீது சுங்கவரிகளை விதித்ததன் மூலமாக ஒரு உலகளாவிய வர்த்தகப் போருக்கு ஆரம்பமளித்திருந்தது. அதற்கு பத்துநாட்களுக்குப் பின்னர் G7 உச்சிமாநாட்டின் பிரகடன அறிக்கையில் கையெழுத்திட மறுத்ததன் மூலமாக அதனைத் தகர்த்திருந்தது என்பதால், நேட்டோ உச்சிமாநாட்டையும் ட்ரம்ப் தகர்க்கக் கூடும் என்று ஐரோப்பிய சக்திகள் கவலையடைந்திருக்கின்றன. ஜேர்மனியில் இருந்து அமெரிக்க துருப்புகளை திரும்பப் பெறுவதை அறிவிப்பது முதலாக, கூட்டணியில் இருந்தே வெளியேற அச்சுறுத்துவது வரையில் இந்நிகழ்வில் ட்ரம்ப் எதனையும் செய்யக் கூடும் என்பதாய் பெயர் கூற விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
வர்த்தகம், புவியரசியல் மற்றும் தூதரக உறவு ஆகியவற்றில் ட்ரம்ப்பின் பரிவர்த்தனைரீதியான “அமெரிக்கா முதலில்” அணுகுமுறையானது அமெரிக்காவுக்கும் அதன் நெருங்கிய கூட்டாளிகளுக்குமான உறவுகள் உள்ளிட அத்தனை சர்வதேச உறவுகளையுமே குழப்பத்திற்குள் தள்ளியிருக்கிறது. ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான ஹேய்கோ மாஸ் சமீபத்தில் குறிப்பிட்டதைப் போல, “நம்பகத்தன்மையின் பழைய தூண்கள் நொருங்கிக் கொண்டிருக்கின்றன.”
உலக உறவுகளின் காட்சியில், ட்ரம்ப் ஏதோ தற்செயலான அல்லது போக்குவரத்து விபத்து போன்றவரல்ல என்ற உண்மை ஐரோப்பியத் தலைவர்களுக்கு புரிகின்றது. அவரது அரசியலின் மாதிரி -வெளிப்படையான சுயநலத்தின் அடிப்படையிலான தீவிர தேசியவாதம்- அமெரிக்காவால் மட்டுமல்லாது, ஐரோப்பிய சக்திகளாலும் கூட தழுவப்பட்டிருக்கின்ற ஒரு புதிய உலக ஒழுங்கை குறிக்கிறது.
நேட்டோவின் மறுஆயுதமயமாகலுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூடுதலாக பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கோரிக்கையில், “கூட்டாளிகள்” மற்றும் எதிராளிகள் இருதரப்பும் கொண்ட மொத்த உலகத்தில் இருந்தும் சலுகைகளைப் பிழிந்தெடுக்க அமெரிக்க முதலாளித்துவம் மேற்கொள்கின்ற வேட்டை முனைப்பை அவர் வெளிப்படுத்துகிறார். சமூகப் பாதுகாப்பு வலையமைப்பையும் தொழிலாளர்களது வாழ்க்கைத் தரங்களையும் அழிக்காமல் இந்த மட்டத்திலான மறுஆயுதமயமாகல் நடத்தப்பட முடியாது. இதுவே ட்ரம்ப்பின் திட்டநிரலின் மையமான நோக்கமாகும். இது தற்செயலான துணைவிளைபொருள் கிடையாது. மொத்தத்தில், ஐரோப்பிய சக்திகள் ஐரோப்பாவில் இயங்குகின்ற அமெரிக்க பெருநிறுவனங்களுக்கு தொழிலாளர் செலவுகளைக் குறைப்பதற்காக தொழிலாள வர்க்கத்தின் மீதான அவற்றின் தாக்குதல்களை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்பதை வெள்ளை மாளிகை அவற்றுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது.
புரூசெல்ஸில் இறங்கும் முன்பாகவே, ட்ரம்ப் வாய்வீச்சு குண்டுகளை வீசத் தொடங்கினார்: “உங்கள் செலவுக்கான தொகையை நீங்கள் கட்டத் தொடங்க வேண்டும் என்பதை நேட்டோவிடம் நான் சொல்லப் போகிறேன்” அமெரிக்கா ஒன்றையும் கவனத்திற்கு எடுக்கப்போவதில்லை, என்று சென்ற வாரத்தில் மோன்டானாவில் நடந்த ஒரு பிரச்சாரப் பேரணியில் ட்ரம்ப் தெரிவித்தார்.
ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்கெல் மீது அவமதிப்புகளை ட்ரம்ப் வீசினார். ”ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரும் நாடு ஜேர்மனி, அது ஒரு சதவீதம் கொடுக்கிறது. நான் கூறினேன், பாருங்கள் அங்கேலா, நான் உத்தரவாதம் சொல்ல முடியாது, ஆயினும் நாங்கள் உங்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம், இது எங்களைப் பாதுகாப்பதற்கும் அதிகமாக உங்களுக்கு முக்கியமானதாகும், ஏனென்றால் உங்களைப் பாதுகாப்பதன் மூலமாக எங்களுக்கு எவ்வளவு பாதுகாப்பு கிடைக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை.”
அமெரிக்காவின் ஐரோப்பிய ஒன்றியக் கூட்டாளிகள் பாதுகாப்புக்கு கூடுதலாக செலவழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான தீவிரப்படும் வர்த்தகப் போருடன் ட்ரம்ப் வெளிப்படையாக முடிச்சுப் போட்டார். திங்களன்று அவர் அறிவித்தார், “இது அத்தனைக்கும் மேல் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் 151 மில்லியன் டாலர் அளவுக்கான வர்த்தக உபரியைக் கொண்டிருக்கிறது, அமெரிக்க உற்பத்திப் பொருட்களுக்கு பெரும் வர்த்தக முட்டுக்கட்டுக்கட்டைகள் இருக்கின்ற நிலையில். அது நடக்காது!”
ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் ஐரோப்பிய சக்திகள் மற்றும் அமெரிக்கா இடையிலான புறநிலையான மற்றும் வளர்ந்துசெல்கின்ற பிளவை வெளிப்படுத்துகின்றன என்பதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடையே கருத்தொற்றுமை பெருகிக் கொண்டிருக்கிறது.
“இப்போது நாம் மேசையில் காண்பது, ஒரு முரட்டுத்தனமான வகையில், ஜனாதிபதி ட்ரம்ப்பினால் உருவாக்கப்பட்டதும் அல்லாத அத்துடன் ஜனாதிபதி ட்ரம்ப்பின் இந்த பதவிக்காலத்துடன் அல்லது மொத்த பதவிக் காலத்துடன் முடிந்து போகப் போவதும் அல்லாத ஒரு உண்மையான பிரச்சினையாகும்” என்று ஒரு முன்னிலை ஐரோப்பிய அதிகாரி கார்டியனிடம் தெரிவித்தார். “மேசையை சுற்றி உட்கார்ந்திருக்கின்ற நாம் அனைவரும் இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கின்ற அட்லாண்டிக்கடந்த உறவு உண்மையில் இல்லை.”
“ட்ரம்ப்பின் கொள்கைகள் பற்றி நாம் கண்களைச் சுழற்ற பழக்கமாகியிருந்தோம், ஆனால் இப்போது நாம், அந்த பைத்தியக்காரத்தனம் மூலோபாயரீதியானதாக மாறுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த தூதர் ஒருவர் The Hill இடம் தெரிவித்தார். “நாம் இப்போது நமது இலக்குகளை முன்னெடுக்க அத்தனை விதமான கூட்டாளிகளையும் எதிர்நோக்கியாக வேண்டும்.” புரூசேல்ஸில் ட்ரம்ப் வருவதற்கு முன்பாக பேர்லினுக்கு சீனாவின் பிரதமர் லி கிகியாங் வந்து சென்றிருந்தார், அமெரிக்காவிடம் இருந்தான மிரட்டல்களை செயலிழக்கச் செய்வதற்குரிய ஐரோப்பிய ஒன்றிய-சீன கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
”ஐரோப்பாவில் இப்போது அமெரிக்கா, ஒரு மூலோபாயக் கூட்டாளி என்பதில் இருந்து மூலோபாயப் பிரச்சினையாக பரிணாம வளர்ச்சி கண்டு வருகிறது” என்று ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் ஒரு முன்னாள் ஆலோசகரான டான் பிரைஸ் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் தெரிவித்தார். ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவரான டொனால்ட் டஸ்க்கும் இதே மனோநிலைகளை எதிரொலித்தார், “ட்ரம்ப்பை குறைமதிப்பீடு செய்யக்கூடாது” ஏனென்றால் அவர் “திட்டமிட்டரீதியாய் செயல்படுபவராக, உறுதியானவராக இருப்பதோடு ஐரோப்பிய விழுமியங்களை... பலவீனப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையையும் கொண்டிருக்கிறார்” என்று அவர் அறிவித்தார்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆரம்ப அதிர்ச்சி மறைந்து விட்ட பிறகு, ஐரோப்பிய அதிகாரிகளே இப்போது பெருமளவில் ட்ரம்ப்பின் உலகக் கண்ணோட்டத்தின் ஒரு மறுபக்கத்திலிருந்தான வடிவத்தை பெருமளவில் தழுவிக் கொண்டு விட்டனர், சந்தைகள், வளங்கள் மற்றும் பொருளாதார அனுகூலங்களுக்கான தேடலில் அமெரிக்காவை ஒரு மூலோபாய போட்டியாளராக அவர்கள் காண்கின்றனர்.
ஆயினும், செலவின இலக்குகள் தொடர்பாக நேட்டோ அங்கத்தவர்கள் இடையே பரஸ்பர பதில்தாக்குதல்கள் இருந்தபோதிலும், கூட்டணியின் அத்தனை அங்கத்தவர்களுமே முழுமூச்சுடன் மறுஆயுதபாணியாகிக் கொண்டிருக்கின்றனர் என்ற உண்மையே நேட்டோ உச்சிமாநாட்டின் மையமான நகைமுரணாக இருக்கிறது.
நேட்டோவின் பொதுச் செயலரான ஜென்ஸ் ஸ்ரோல்டென்பேர்க் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் ஒரு கருத்துப் பக்கத்தில் எழுதியிருந்தார், “சென்ற ஆண்டு நேட்டோ கூட்டணியினர் தமது பாதுகாப்பு நிதி ஒதுக்கீடுகளை மொத்தமாய் 5.2 சதவீதம் வரை அதிகரித்திருந்தனர், இது உண்மையான எண்ணிக்கையில், கால்நூற்றாண்டு காலத்திலான மிகப்பெரும் அதிகரிப்பாகும். இப்போது 2018 ஆம் ஆண்டும் செலவின அதிகரிப்பின் தொடர்ச்சியான நான்காவது ஆண்டாக இருக்கும்.”
”2014 இல், கூட்டணியின் மூன்று பேர் மட்டுமே -அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம் மற்றும் கிரீஸ்- 2% இலக்கை எட்டின. இந்த ஆண்டில், எஸ்தோனியா, லாத்வியா, லித்வேனியா, போலந்து மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளும் இதில் இணைந்து இந்த எண்ணிக்கை எட்டாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.”
பிரான்சின் இரயில்வே தொழிலாளர்களுக்கு எதிரான பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் முட்டுமோதலான தாக்குதல் உதாரணமாக்கியிருக்கின்றவாறாக, நேட்டோவின் ஒவ்வொரு உறுப்பு நாடுமே, அதன் இராணுவ மீள்ஆயுதபாணியாகலுக்கு செலுத்துவதற்கு, சமூக செலவினத்தை வெட்டியிருப்பதோடு அதன் தொழிலாள வர்க்கத்தின்மீது ஒரு நேரடித் தாக்குதலை நடத்தியிருக்கிறது.
உக்ரேனில் அமெரிக்க/ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுடன் நடந்த பாசிச-தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து கிரீமியாவை ரஷ்யா அதனுடன் இணைத்துக் கொண்டது ஆகியவற்றுக்கான பதிலிறுப்பில் இந்தக் கூட்டணி அதன் இரண்டு சதவீத செலவின இலக்கை அமைத்தது. அப்போது முதலாக, நேட்டோ பால்டிக்ஸிலும் போலந்திலும் ஆயிரக்கணக்கான துருப்புகளை நிறுத்தியிருக்கிறது, அத்துடன் செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் இருந்து ஒரு சில நூறு மைல்கள் தொலைவில் வரிசையான ஆத்திரமூட்டல் போர் ஒத்திகைகளையும் அது நடத்தியிருக்கிறது.
இந்த வாரத்தின் உச்சிமாநாடு இந்தக் கொள்கைகளை 30 தரைப்படை பட்டாளங்கள், 30 கப்பல்கள் மற்றும் 30 போர்விமானத் தொகுப்புகளை 30 நாள் அறிவிப்பில் நிறுத்துகின்ற “30 தடவை நான்கு” திட்டத்தை உருவாக்குவதும் இதில் அடங்கும்.
“கடல்வழி இராணுவ வலுப்பாடு உள்ளிட்ட கடற்பகுதிப் பிரச்சினைகளில் கவனம் குவிப்பதற்காக நோர்ஃபோல்க்கில் ஒன்றும், ஐரோப்பாவெங்கிலும் துருப்புகள் நகர்வு தளவாடப் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக ஜேர்மனியில் ஒன்றுமாய்” இரண்டு கூடுதல் நேட்டோ கட்டளையகங்களையும் இந்த உச்சிமாநாடு அமைக்கவிருக்கிறது என்று Foreign Affairs குறிப்பிட்டது.
ஆச்சரியமளிக்காதவிதமாக, நேட்டோ அங்கத்தவர்களது மறுஇராணுவமயமாக்கத்திலான துரித வேகமானது அவர்களை ஐக்கியப்படுத்தி கொண்டுவரவில்லை. மாறாக, 2014 முதலான நான்கு ஆண்டுகளில், நேட்டோ அங்கத்தவர்கள் தங்களுக்குள் -அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் மட்டுமல்லாது, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயும் கூட- இணைசொல்ல முடியாத பிளவுகளைக் கண்டிருக்கின்றன, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் 2016 வாக்களிப்பு மூலமாக இது மிக நேரடியாக வெளிப்பட்டது.
பிரெக்ஸிட்டை தொடர்ந்து, ஐக்கிய இராஜ்ஜியம் அடுத்தடுத்த நெருக்கடிகளால் உலுக்கப்பட்டு வந்திருக்கிறது, இரண்டு உயர்-மட்ட அமைச்சரவை அங்கத்தவர்களின் வெளியேறல் மற்றும் மே அரசாங்கம் விழக்கூடும் என்பதான வதந்திகளில் இது உச்சம் கண்டிருக்கிறது. இதனிடையே, எஞ்சிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடுகள், அகதிகள் கொள்கையில் ஒன்றையொன்று முந்திக் கொண்டு வலது நோக்கி அவை பாய்கின்ற நிலையில், பரஸ்பர பதில்தாக்குதல்களில் அவை அடைந்து கிடக்கின்றன.
வேறுவார்த்தைகளில் சொல்வதானால், ஒவ்வொரு நெருக்கடிக்கும் நேட்டோவின் உறுப்பு நாடுகள் இராணுவ மீள்ஆயுதபாணியாகல், வர்த்தகப் போர், எல்லைகளை மூடுவது மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில் பெற்று சொல்வதானால் “துப்பாக்கிகூர்முனைகளுக்குப் பின்னால் பின்னடைவது” ஆகியவற்றின் மூலமாக பதிலிறுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் வலது நோக்கிய ஒவ்வொரு நகர்வும் புதிய நெருக்கடிகளுக்கும் மோதல்களுக்குமான நிலைமைகளையே உருவாக்கியிருக்கின்றன.
ட்ரம்ப்பின் ஜனாதிபதி பதவிக் காலம் ஒன்றரை வருடத்தைக் கடந்திருக்கின்ற நிலையில், வெள்ளை மாளிகையில் இப்போதிருப்பவர் முதலாளித்துவ அரசியலது இயல்பில் இருந்தான விலகலைக் குறிக்கவில்லை, மாறாக அதன் மிகத்துல்லியமான வெளிப்பாட்டையே குறிக்கிறார் என்பது இப்போது தெளிவாக இருக்கிறது. உலகளாவிய போர், வர்த்தக மோதல், வெளிநாட்டவர்வெறுப்பு, தேசியவாதம், அகதிகள் மீதான தாக்குதல், ஜனநாயக உரிமைகளை அகற்றுவது, என ட்ரம்ப்பின் அடையாளமுத்திரைகளாக இருக்கும் அனைத்துமே உண்மையில் அழுகி சிதைந்து கொண்டிருக்கின்ற முதலாளித்துவத்தின் அடையாளமுத்திரைகளாகும்.