Print Version|Feedback
Remembrance Day in Sri Lanka exposes dead end of Tamil nationalism
இலங்கையில் நினைவுகூரல் தினம் தமிழ் தேசியவாதத்தின் முட்டுச்சந்தை அம்பலப்படுத்துகிறது
By K. Nesan
1 June 2018
மே 18 அன்று, இலங்கை இராணுவ படுகொலையின் ஒன்பதாவது நினைவு தினத்தில் முள்ளிவாய்காலில் ஐந்தாயிரம் பேர் கலந்து கொண்டனர். 26 ஆண்டுகால இலங்கை உள்நாட்டு போரை முடிவுக்குக் கொண்டு வந்த அந்த ஈவிரக்கமற்ற படுகொலையில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் உட்பட 40,000 க்கும் அதிகமான தமிழ் மக்களுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அப்போர் முடிந்து அண்மித்து ஒரு தசாப்தத்திற்குப் பின்னரும், வடக்கு இலங்கை மக்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் இன்னல்கள் அந்த நிகழ்வில் மேலோங்கி இருந்தது. வட இலங்கை தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது, அரசியல் கைதிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை, இலங்கையிலும் மற்றும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவவாதிகள் அதை மலிவு உழைப்புக்கான ஒரு சொர்க்கமாக காண்கிறார்கள். அது இராணுவத்தாலும் சர்வதேச நாணய நிதிய (IMF) சிக்கன நடவடிக்கைகளாலும் கண்காணிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் அரசால் கடத்தப்பட்ட பிள்ளைகளது பெற்றோர்களும் அங்கே அழுது புலம்பி கண்ணீர் விட்ட நிகழ்வில், இராணுவம் உணவு மற்றும் குடிநீர் வினியோகத்தை முடக்குவதற்காக உளவுத்துறை அதிகாரிகளை அனுப்பியதுடன், அஞ்சலி செலுத்த வந்தவர்களையும் துன்புறுத்தியது.
அந்நிகழ்வு, தமிழ் தேசியவாதத்தின் அரசியல் திவால்நிலைமையை அம்பலப்படுத்துகிறது. இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி கொழும்பு ஆட்சியைத் தளராது எதிர்த்து, இப்போராட்டத்தில் இலங்கை மற்றும் இந்திய துணைக்கண்டம் எங்கிலுமான தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த போராடி வருகின்ற அதேவேளையில், தமிழ் தேசியவாத குழுக்கள் தற்போது வாஷிங்டன் மற்றும் கொழும்பு ஆளும் உயரடுக்கின் முண்டுகோல்களாக சேவையாற்றுகின்றன.
வட இலங்கையில் முதலாளித்துவ தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதும், அதன் தலைமையிலான வட மாகாண சபை மீதும், இலங்கை அரசாங்கம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான அதன் ஒத்துழைப்பு மீதும் பரந்த அதிருப்தியும் வெடிப்பார்ந்த கோபமும் உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மாவை சேனாதிராஜா, சிறிதரன், அத்தோடு ஏனைய வட மாகாணசபை உறுப்பினர்களும் இந்த முக்கிய நிகழ்விலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அந்நிகழ்வை கூட்டமைப்பின் தலைமையிலான வட மாகாண சபை தனித்து ஏற்பாடு செய்வதை யாழ்பாண பல்கலைக்கழக மாணவர் சங்கம் எதிர்த்தது. என்றாலும், அந்நிகழ்வில் அவர்கள் கலந்து கொள்ள முடிவெடுத்து அறிவிக்கையில், “தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் இனப்படுகொலை சம்பந்தமாக,” வட மாகாண முதலமைச்சர் சி. விக்னேஸ்வரன் மீது அவர்கள் "நம்பிக்கை வைத்திருப்பதாக" அறிவித்தனர். அவர் அவ்வப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்கிறார் என்பதால், அங்கே நினைவாஞ்சலி செலுத்த வந்தவர்கள் அவர் உரையாற்றுவதை மட்டுமே ஏற்பார்கள் என்பதால் விக்னேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும் விக்னேஸ்வரனின் உரை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் குரலையே விசுவாசமாக எதிரொலித்தது, சர்வதேச நாணய சபையின் சிக்கன நடவடிக்கைகளுக்கும், சீனாவைத் தனிமைப்படுத்தும் நோக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினது "ஆசிய முன்னெடுப்புக்கும்" தமிழ் தேசிய கூட்டமைப்பு துணை நிற்கின்றது. இதையே அவர் இறுமாப்புடன் "சர்வதேச சமூகத்திடமிருந்து" உதவி பெறுவதற்கான ஒரு வழியாக எடுத்துக்காட்டினார்.
இலங்கை முழுவதும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களுக்கு எதிராக சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரிப்பது பற்றியோ அல்லது வளர்ச்சியடைந்துவரும் உலகப் போர் அபாயம் குறித்தோ விக்னேஸ்வரன் வாய் திறக்கவில்லை. இலங்கையில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிறைவேற்றப்படாத கொழும்பின் வாக்குறுதிகளையும், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை அது மதியாமல் இருப்பதைக் குறித்தும் விமர்சித்த அவர், ஐந்து முன்மொழிவுகளை முன்வைத்தார், அவற்றில் மூன்று கொழும்பில் தலையீடு செய்து மத்தியஸ்தம் செய்யுமாறு "சர்வதேச சமூகத்திற்கான" கோரிக்கைகளை கொண்டிருந்தன.
தனது கொள்கையை விவரித்து அவர் கூறினார்: “இத்தீவின் கடந்த 70 ஆண்டுகால வரலாற்றுடன் பரிச்சயமான எவரொருவரும், சர்வதேச சமூகத்தின் அழுத்தமோ அல்லது உள்நாட்டு அரசியல் அழுத்தமோ இல்லாமல், எந்த அரசாங்கமும் இந்த தேசிய பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வை முன்நகர்த்த தயாராகாது என்பதை அறிந்திருப்பர். நமது இலங்கை அரசாங்கம் அவர்களின் கடமைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கு சம்மதிக்க செய்ய, அவர்களுக்கு அரசியல் அழுத்தமளிக்க தீர்மானமெடுக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு இத்தருணத்தில் நான் தைரியமாக அழைப்புவிடுக்கிறேன்.”
“சர்வதேச சமூகத்திற்கு" விக்னேஸ்வரனின் "தைரியமான" முறையீடு, உழைக்கும் மக்களுக்கு ஒரு முட்டுச்சந்தாகும். இந்த "தைரியமான" முறையீடு, பிரிட்டனிடம் இருந்து 70 ஆண்டுகளுக்கு முன்னர் பெயரளவிலான சுதந்திரம் பெற்றதன் பின்னர் இருந்து தமிழ் தேசியவாத அரசியலின் முக்கிய பாகமாக இருந்து வருகிறது. இது, சிங்கள முதலாளித்துவ கட்சிகளுடன் அவ்வேளையில் அவர்கள் செய்த நாடாளுமன்ற சூழ்ச்சிகளின் போது பிரித்தானிய சார்பு தமிழ் முதலாளித்துவத்தின் நிலைப்பாட்டை ஒட்டியதாக இருந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று வகிக்கும் பாத்திரத்திலும் இதே கொள்கை தீர்க்கமாக எதிரொலிக்கின்றன. சீனாவுக்கு எதிரான "ஆசிய முன்னெடுப்புடன்" இலங்கையை அணிசேர்க்கும் ஒரு வேலைத்திட்டத்திற்காக 2015 இல், அமெரிக்க ஆதரவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறுவப்பட்ட பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சி ஆசனங்களில் இருந்து கொண்டே சிறிசேன ஆட்சியை ஆதரிக்கிறது. அது தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான எந்த போராட்டத்தையும் கைவிட்டதுடன், அதிகரித்து வரும் போராட்டங்கள் மற்றும் மக்கள் எதிர்ப்புக்கு இடையிலும் சிறிசேனவின் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. அது ஜனநாயக உரிமைகளுக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கும் கடும் விரோதமானது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது.
தமிழ் தேசியவாதத்தின் திவால்நிலைமைக்கு வரலாற்று மாற்றீடாக இருப்பது சோசலிச சமத்துவக் கட்சியின் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமாகும். ட்ரொட்ஸ்கிச முன்னோக்கு, லங்கா சம சமாஜக் கட்சியின் பப்லோவாத நிலைப்பாட்டினால் காட்டிக்கொடுத்ததன் காரணமாக, 1970 களில் தமிழ் முதலாளித்துவ தேசியவாதிகளது ஆயுதமேந்திய போராட்ட முன்னோக்கு மேலுயர்ந்தது. ஆனால் சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடி அமைப்பான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (RCL) ட்ரொட்ஸ்கிசத்தைப் பாதுகாத்து, தொழிலாள வர்க்க ஐக்கியத்திற்கான போராட்டத்தின் அடிப்படையில், இடதுசாரி நிலைப்பாட்டில் லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பை எதிர்த்தபோது, தமிழ் தேசியவாதிகளோ லங்கா சம சமாஜக் கட்சியினை வலதுசாரி அடித்தளத்தில் தாக்கினர்.
பெயரளவிலான சுதந்திரத்திற்குப் பின்னர், தமிழ் தேசியவாதிகளின் உக்கிரமான கம்யூனிச விரோத தாக்குதல்களுக்கு இடையிலும், லங்கா சம சமாஜக் கட்சி தமிழ் மக்கள் உள்ளடங்கலாக உழைக்கும் பெருந்திரளான மக்களிடையே பரந்த ஆதரவை வென்றிருந்தது. ஆனால் 1964 இல், ட்ரொட்ஸ்கிசத்துடனும் அக்டோபர் புரட்சியை வெற்றிக்கு இட்டுச் சென்ற முன்னோக்குடனும் முறித்துக் கொண்டு, அது சிறிமாவோ பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தினுள் நுழைந்ததுடன், சிங்கள பேரினவாத அரங்கினுள் பின்னோக்கி சென்றது. இது இனவாத தாக்குதல்களைப் பயன்படுத்தியும், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை மோதவிடுவதற்கு அழைப்புவிடும் முதலாளித்துவ வர்க்க மூலோபாயத்திற்கும் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் அடிபணிவதாக இருந்தது.
அது, தமிழ் மக்கள் உள்ளடங்கலாக அப்பிராந்தியம் எங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் மீது ஸ்ராலினிஸ்டுகளும், மாவோயிஸ்டுகளும் மற்றும் முதலாளித்துவ தேசியவாதிகளும் செல்வாக்கு செலுத்துவதற்கு வழிவகுத்ததோடு, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மாபெரும் அடியாக இருந்ததுடன், இறுதியில் இலங்கையில் ஓர் இரத்தந்தோய்ந்த உள்நாட்டு போர் வெடிப்பதற்கும் இட்டுச் சென்றது.
ஆரம்பத்தில் இருந்தே, தமிழீழ விடுதலை புலிகளின் இராணுவ மூலோபாயம், கொழும்பை பேரம்பேசும் மேசைக்கு வர நிர்பந்திப்பதற்காக "சர்வதேச சமூகத்தை" அணுகுவதையே மையமாக கொண்டிருந்தது. இதை, ஸ்ராலினிஸ்டுகளால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கும் மற்றும் 1991 இல் இந்தியா நிதி மூலதனத்திற்கு திறந்துவிடுவதற்கும் முன்னர், சில காலத்திற்கு, தமிழ் தேசியவாத இயக்கத்திற்குள் இருந்த அடுக்குகள், “முற்போக்கு” அரசுகளுடனான ஒரு "சோசலிச" கூட்டணியாக முன்வைக்க முடிந்ததது.
ஆனால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு ஒரு கால் நூற்றாண்டுக்குப் பின்னரும், ஓர் ஒடுக்கப்பட்ட அமைதியின் அண்ணளவாக ஒரு தசாப்தத்திற்குப் பின்னரும், தமிழ் தேசியவாதத்தின் முதலாளித்துவ-சார்பு மற்றும் ஏகாதிபத்திய-சார்பு நோக்குநிலை தொடர்ந்ததும் மறைக்க முடியாததாய் ஆகியுள்ளது. அமெரிக்க தூதர் அல்லது அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பை அல்லது விக்னேஸ்வரனை ஒவ்வொரு முறையும் சந்திப்பதானது, ஆசியாவில் அமெரிக்க இராணுவ மூலோபாயத்திற்கும் மற்றும் இந்தியப் பெருங்கடலின் பிரதான கப்பல் வழித்தடங்களை ஒட்டி இலங்கையின் மூலோபாய நிலைப்பாடுகளைச் சுரண்டுவதற்கான தமிழ் தேசியவாதிகளின் முயற்சிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை அடிக்கோடிடுகின்றன.
தமிழ் முதலாளித்துவவாதிகளின் ஒரு சிறிய அடுக்கினது வர்க்க நலன்களே தமிழ் தேசியவாதத்திற்குப் பின்னால் இருக்கும் உந்துசக்தியாகும். அவர் உரையாற்றிய பின்னர் அடுத்த நாள் வெளியிட்ட ஓர் அறிக்கையில் விக்னேஸ்வரன் இதை தெளிவாக்கினார். அவர் இவ்வாறு சாடினார்: “J.R. இன் திறந்த பொருளாதாரம் பாரிய பொருளாதார அபிவிருத்திகளையும் வாய்ப்புகளையும் திறந்துவிட்டது, பல தமிழ் வணிக பெருமக்களும் தொழில் ஆரம்பிக்க நாட்டிற்குத் திரும்ப விரும்பினர், ஆனால் என்ன நடந்தது?”
ஜே. ஆர். ஜெயவர்த்தன 1977 தேர்த்தல் வெற்றியுடன் ஒரு "திறந்த பொருளாதாரத்தை" ஊக்குவிக்க பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார், அவர் உருவாக்கிய சுதந்திர வர்த்தக வலையங்கள் சர்வதேச மூலதனத்திற்குக் கணிசமான விட்டுக்கொடுப்புகளை வழங்கியதோடு, தொழிலாள வர்க்கத்தின் மீது வரம்பில்லா சுரண்டலை அனுமதித்தது. 1980 இல் ஒரு மாபெரும் பொதுத்துறை வேலைநிறுத்தம் உள்ளடங்கலாக தொழிலாளர்களிடையே பாரியளவிலான எதிர்ப்பை முகங்கொடுத்த ஜெயவர்த்தன அரசாங்கமும் ஐக்கிய தேசிய கட்சியின் மந்திரிகள் தலைமையிலான குண்டர்களும் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை ஒழுங்கமைத்தனர். இது ஜூலை 1983 இல் இலங்கையில் உள்நாட்டு போர் வெடிப்பதற்கு இட்டுச் சென்றது.
எனினும் ஜெயவர்த்தனவின் வரலாற்றை திரும்பி பார்க்கையில், விக்னேஸ்வரனின் முக்கிய குற்றச்சாட்டானது தமிழர்கள் மீதான அவரது இனவாத தாக்குதல் கொள்கை அல்ல, மாறாக ஜெயவர்த்தன இலங்கை தொழிலாளர்கள் மீது நடத்திய தாக்குதலில் கிடைத்த இலாபங்களில் தமிழ் வணிகப் பெருமக்கள் தங்கள் பங்கைப் பெற முடியவில்லையே என்பதுதான் அவரின் பிரதான குற்றச்சாட்டாக இருக்கிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் கொழும்பு ஆட்சிக்கும் அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பானது, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினமும் அதன் தொடர்ச்சியான சோசலிச சமத்துவக் கட்சியினதும் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தை நிரூபணம் செய்கிறது. தமிழ் சிறுபான்மையினர் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக போராடுவதில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும், சோசலிச சமத்துவக் கட்சியும் ஒரு கறைபடியாத முன்வரலாறைக் கொண்டுள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் நிலைகுலைவுக்கு மத்தியில், இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் சரியான தன்மையை மீளவலியுறுத்துகிறது, அதாவது: பெருந்திரளான மக்களின் ஜனநாயக உரிமைகளையும் விவசாய சீர்திருத்தங்களையும் தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் சர்வதேச சோசலிசப் புரட்சியின் மூலம் அதிகாரத்திற்காக போராடுவதனூடாக மட்டுமே அடைய முடியும்.
தமிழ் தேசியவாதத்தின் முட்டுச்சந்திலிருந்து தொழிலாளர்களும் இளைஞர்களும் வெளிவருவதற்கான பாதை, சோசலிச சமத்துவக் கட்சியை (SEP) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பைக் (IYSSE) கட்டமைப்பதற்கு போராடுவதாகும்.