Print Version|Feedback
The G7 summit collapses
ஜி7 உச்சிமாநாடு தோல்வியடைந்தது
Alex Lantier
11 June 2018
உலக பொருளாதாரத்தின் மிகமுக்கிய பங்கு வகிக்கும் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக போர் நடவடிக்கைகள் மற்றும் கடுமையான பரஸ்பர குற்றஞ்சுமத்தல்களுக்கு இடையே, முன்னொருபோதும் இல்லாத சம்பவமாக, கியூபெக்கின் சார்லுவுவா இல் சனியன்று நடந்த ஜி7 பேச்சுவார்த்தைகள் முறிந்தன. ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீதான பில்லியன் கணக்கான டாலர்கள் வரிகளைத் திணிக்க வாஷிங்டன் அச்சுறுத்தியதன் மீது தீர்க்கவியலாத மோதல்கள் வெடித்தன.
பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அமெரிக்காவைத் தவிர்த்து விட்டு "6 நாடுகள் உடன்படிக்கை" ஒன்றை கையெழுத்திட வீராவேசத்துடன் முன்மொழிந்த நிலையில், அம்மாநாட்டிற்கான முன்நாட்களிலேயே கசப்புணர்வுகள் கலந்திருந்தன. அந்த உச்சிமாநாட்டில் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் ட்ரம்பை நோக்கி மேசையில் கையூன்றியபடி முறைத்து பார்த்த புகைப்படங்கள் வெளியாயின, ட்ரம்ப் காலநிலை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தவிர்த்து விட்டு, அம்மாநாட்டிலிருந்து முன்கூட்டியே புறப்பட்டு சென்றார்.
பாதுகாப்புவாதத்தைக் கண்டித்து, ஆனால் அமெரிக்க குறைகூறல்களுக்கு ஒத்த விதத்தில் உலக வர்த்தக அமைப்பின் மீது ஒருசில விமர்சனங்களை வைத்து, ஜி7 உச்சிமாநாட்டில் வழமையாக செய்யப்படுவதைப் போல, அந்த உச்சிமாநாடு இந்த மோதல்கள் மீது ஓர் இறுதி அறிக்கையை ஆவணப்படுத்தி வெளியிட்டது. அமெரிக்கா கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ட்ரம்ப், வட கொரிய ஜனாதிபதி கிம் யொங்-உன் உடனான சந்திப்புக்கு சிங்கப்பூருக்கு செல்லும் வழியில் கனேடிய பிரதம மந்திரி ஜஸ்டீன் ட்ரூடோவின் உச்சிமாநாட்டுக்கு பிந்தைய பத்திரிகையாளர் சந்திப்பின் பேச்சுக்களைச் செவிமடுத்து, சரமாரியாக ட்வீட் செய்திகளை வீசினார், அவை ஜி7 பேச்சுவார்த்தைகள் உணர்வுபூர்வமாக முறிந்துவிட்டதை சமிக்ஞை செய்தன.
அந்த அறிக்கை பாதுகாப்புவாதத்தை விமர்சித்திருப்பதாகவும், கனடா பதிலடி நடவடிக்கையாக, இரண்டாம் உலக போருக்குப் பின்னர் இறக்குமதி மீதான அதிகபட்ச கனேடிய வரியாக அமெரிக்க பண்டங்கள் மீது 16 பில்லியன் டாலர் இறக்குமதி வரிகள் விதிக்கப்படுமென ட்ரூடோ தெரிவித்ததும், ட்ரம்ப் "பிற நாடுகள்" இறக்குமதி வரி விதிப்பதை "அனுமதிக்க முடியாது" என்று எச்சரித்து, ட்ரூடோ மீது கடுஞ்சொற்களை வீசினார். அமெரிக்காவின் பெயரளவிலான நெருங்கிய கூட்டாளிகள் அமெரிக்காவை இலக்கில் வைத்ததற்காக, "பல தசாப்த கால வர்த்தக துஷ்பிரயோகம் இருந்ததாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும் இந்தளவுக்கு நீண்டகாலம் இருந்தே போதும்” என்றார்.
மற்றொரு ட்வீட் செய்தியில், அமெரிக்க ஜனாதிபதி, வாகன இறக்குமதிகள் மீதான தீர்வை வரிகளுடன் வர்த்த போர் நடவடிக்கைகளைப் பெரிதும் தீவிரப்படுத்த அச்சுறுத்தி, பேச்சுவார்த்தைகள் முறிந்துவிட்டதாக அறிவித்தார்: “ஜஸ்டீன் அவரின் செய்தியாளர் சந்திப்பில் அளித்த பொய்யான தகவல்கள் அடிப்படையிலும், கனடா நமது அமெரிக்க விவசாயிகள் மீது பாரிய தீர்வை வரிகளை விதித்து வருகின்றது என்ற உண்மையின் அடிப்படையிலும், அந்த அறிக்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டாமென நான் நமது அமெரிக்க பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன், அதேவேளையில் அமெரிக்க சந்தைக்குள் வெள்ளமென பாய்ந்து வரும் வாகனங்கள் மீது இறக்குமதி வரிவிதிக்க நாம் பரிசீலித்து வருகிறோம்!” என்றார்.
1975 இல் ஜி7 உச்சி மாநாடு தொடங்கியதில் இருந்து—ஆரம்பத்தில் அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றுடன் ஜி5 என்றிருந்தது—முதல்முறையாக அனைத்து அரசு தலைவர்களும் ஓர் அறிக்கையில் உடன்பட முடியாமல் ஆகியுள்ளது.
இங்கு என்ன கட்டவிழ்ந்து வருகிறது என்றால் பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான இராஜாங்க மற்றும் பொருளாதார உறவுகள் ஒரு வரலாற்றுரீதியில் தோல்வியடைந்து வருகின்றன. இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய ஒரு நூற்றாண்டில் மூன்று கால்பகுதியில், சர்வதேச அளவில் ஆளும் வர்க்கத்திடையே, 1930 களின் பெருமந்தநிலையின் வர்த்தக போர்கள் போரைத் தூண்டுவதில் ஒரு மிக முக்கிய பாத்திரம் வகித்தன என்பதிலும், என்ன விலை கொடுத்தாவது வர்த்தக போர்களைத் தடுக்க வேண்டுமென்றும் பரந்த கருத்தொற்றுமை இருந்தது. இந்த கருத்தொற்றுமை இப்போது முறிந்துள்ளது.
வெடிப்பார்ந்த மோதலும் நிச்சயமற்றத்தன்மையும் உலக பொருளாதாரத்தில் மேலாளுமை கொண்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவும் குறிப்பிட்டு கூறமுடியாதளவுக்கு இறக்குமதி பண்டங்களில் பில்லியன் கணக்கான டாலர் தாக்கம் ஏற்படுத்தும் வரிகளை விதிக்க தயாராகி வருகின்றன, இது உலகளவில் பத்து மில்லியன் கணக்கான வேலைகளை அச்சுறுத்துகிறது. ட்ரூடோ மற்றும் ட்ரம்பின் கருத்துக்கள் எடுத்துக்காட்டுவதைப் போல, அமெரிக்க இறக்குமதி வரிவிதிப்பு அச்சுறுத்தல்கள் நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய சுழற்சியான வரிவிதிப்புகளையும் எதிர்-வரிவிதிப்புகளையும் தீவிரப்படுத்தி இயக்கத்திற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
ஜி7 பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட குணநலன்களால் ஏற்பட்டதென விவரிக்க முடியாது. அதற்கு பதிலாக, இந்த வரலாற்று மைல்கல் உலக முதலாளித்துவத்தின் தீர்க்கவியலாத முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பெரும்பிரயத்தன முயற்சிகளின் ஒரு வெளிப்பாடாகும். ட்ரம்ப் மட்டுமல்ல, மாறாக பிரதான ஜனநாயக கட்சியாளர்களும் மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் மற்றும் ஆளும் உயரடுக்கின் மிகப் பெரிய பிரிவுகளும் அனைவருமே அவர்களது போட்டியாளர்களுக்கு எதிராக வர்த்தகப் போர் நடவடிக்கைகளுக்கு பொறுப்பின்றி அழைப்பு விடுத்து வருகின்றனர்.
பெருமந்தநிலை வெடிப்பதற்கு ஓராண்டு முந்தைய 1929 இல் அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கையைப் பகுத்தாராய்ந்து ட்ரொட்ஸ்கி எச்சரித்தார்: “வளர்ச்சிக் காலகட்டத்தினை விடவும் நெருக்கடி காலகட்டத்தில்தான் அமெரிக்காவின் மேலாதிக்கமானது இன்னும் முழுமையாகவும், இன்னும் பகிரங்கமாகவும், இன்னும் மூர்க்கத்தனமாகவும் செயல்படும். அமெரிக்கா அதன் சிரமங்கள் மற்றும் துன்பங்களிலிருந்தும் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவற்றைக் கடந்து வர, ஐரோப்பாவை விலை கொடுக்க முயலும், இது ஆசியாவிலோ, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவிலோ எங்கே வேண்டுமானாலும் ஏற்படலாம், அமைதியான வழியிலோ அல்லது போர் மூலமாகவோ நடத்தப்படலாம்.”
இரண்டாம் உலக போருக்குப் பின்னர் மற்றும் 1971 இல் தங்கத்தை டாலருக்கு மாற்றீடு செய்வதை வாஷிங்டன் நிறுத்திக் கொண்ட பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஸ்தாபித்த தொழில்துறை மற்றும் பொருளாதார மேலாதிக்கம் வேகமாக தேய்ந்து போனதும், பிரதான சக்திகளுக்கு இடையிலான மோதல்களைக் கையாள ஜி7 உச்சிமாநாடுகள் தொடங்கப்பட்டன. அதன் ஐரோப்பிய மற்றும் சர்வதேச போட்டியாளர்களை இன்னமும் எட்டிப்பிடிக்க முடியாதளவுக்கு, அமெரிக்கா பல தசாப்தங்களாக ஐரோப்பா மற்றும் ஆசியாவில் அதன் போட்டியாளர்களுடன் முன்பினும் மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறைகளைக் கொண்டுள்ளது.
அமெரிக்க தலைமையிலான நவ-காலனித்துவ போர்களுக்கு பிரதான தடையை நீக்கும் வகையில், 1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், வாஷிங்டன் அதன் பொருளாதார பலவீனத்தை எதிரீடு செய்ய அதன் மிகப்பெரும் இராணுவ பலத்தைச் சார்ந்திருக்க முயன்றது.
ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் அதற்கு அப்பாலும் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட தசாப்தகால இரத்தந்தோய்ந்த நவ-காலனித்துவ போர்களின் மூலமாக, அமெரிக்கா எண்ணெய் வளமிக்க மத்தியக் கிழக்கில் ஒரு பலமான இராணுவ இடத்தை ஸ்தாபிக்க முயன்றுள்ளது. இந்த போர்கள், அதன் பிரதான பொருளாதார போட்டியாளர்களின் முக்கிய வர்த்தக மற்றும் எரிசக்தி வினியோக பாதைகளைத் தடுக்க அதன் படைகளை குறுக்கில் நிறுத்தியது.
ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டமையும், ஐரோப்பா, ஜப்பான் மற்றும் கனடாவினால் அமெரிக்காவின் மீது "வர்த்தக துஷ்பிரயோகம்" நடப்பதாக அவரது குற்றச்சாட்டுக்களும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே வர்த்தகத்தின் மீது மட்டுமே கடுமையான பிளவுகள் அதிகரித்து வரவில்லை, மாறாக ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையை முறித்துக் கொண்டு ஈரானை போர் கொண்டு அச்சுறுத்தி வரும் அமெரிக்க கொள்கை மீதான ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பின் மீதும் பிளவுகள் அதிகரித்து வருகிறது. தசாப்த கால பொருளாதார நெருக்கடி மற்றும் நவ-காலனித்துவ போர்களுக்குப் பின்னர், உலக பொருளாதாரம் போட்டி வர்த்தக அணிகளாக 1930 களின் பாணியில் சிதைந்து வரும் அபாயமும், அந்த தசாப்தத்தில், அவற்றிற்கு இடையே இராணுவ மோதல் வெடித்ததைப் போன்ற அபாயமும் வேகமாக அதிகரித்து வருகிறது.
20 ஆம் நூற்றாண்டின் தலைச்சிறந்த மார்க்சிஸ்டுகளால் உலக போருக்கான காரணங்களாக அடையாளம் காணப்பட்ட உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகள்—அதாவது பூகோளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்திற்கும் தேசிய அரசு முறைக்கும் இடையிலான, மற்றும் சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் தனிநபர்களின் இலாப திரட்சிக்கும் இடையிலான இந்த முரண்பாடுகள்—இன்று பகிரங்கமாக வெடிக்கின்றன.
ஐரோப்பிய சக்திகள் பதிலடி நடவடிக்கைகளை அதிகரிக்கும் அச்சுறுத்தல்களைக் கொண்டு ட்ரம்புக்கு விடையிறுத்துள்ளன. இந்த உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ், தங்களின் "நலன்களை இன்னும் அதிக ஆக்ரோஷமாக" பாதுகாப்பதற்காக, ஐரோப்பிய சக்திகள் "ஒருங்கிணைந்து" விடையிறுக்க வேண்டுமென அழைப்புவிடுத்தார்.
வரலாற்றுரீதியில், வர்த்தக போர் இராணுவ மோதலுக்கு ஒரு முன்னோட்டமாக இருந்துள்ளது. இந்த உச்சிமாநாட்டுக்கு முன்னதாக, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ட்ரம்பின் அச்சுறுத்தலான தடையாணைகளுக்கு கோபமாக விடையிறுக்கையில், “இந்த முடிவு சட்டவிரோதமானது மட்டுமல்ல மாறாக பல அம்சங்களில் இது தவறாக உள்ளது. பொருளாதார தேசியவாதம் போருக்கு இட்டுச் செல்கிறது. இது தான் துல்லியமாக 1930 களில் நடந்தது,” என்றார்.
அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு இடையே, ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் வேகமாக மீள்ஆயுதமேந்தி வருகின்றன. ஜி7 உச்சி மாநாட்டுக்கு வெறும் ஒரு வாரத்திற்கு முன்னர் தான், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா ஒரு கூட்டு ஐரோப்பிய பாதுகாப்பு படையை உருவாக்கவும், பிரிட்டன் அதில் பங்கெடுப்பதற்கு திறந்துவிடவும், நேட்டோவிலிருந்து அது சுதந்திரமாக இருப்பதற்கும் மக்ரோன் முன்வைத்த முன்மொழிவுகள் மீது அவரது ஆதரவை சமிக்ஞை செய்தார்.
அதிகரித்து வரும் வர்த்தக போர் மற்றும் இராணுவ போர் அச்சுறுத்தலுக்கு ஒரே நம்பகமான விடையிறுப்பு, முதலாளித்துவம் மற்றும் போர் அபாயத்திற்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதாகும். அமெரிக்காவில் ஆசிரியர்களிடையே, ஜேர்மனி மற்றும் துருக்கியில் உலோக தொழிலாளர்களிடையே மற்றும் பிரான்சில் மக்ரோனின் சமூக செலவின குறைப்பு கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களின் பரந்த இயக்கம் என உலகெங்கிலும் வேலைநிறுத்தங்களும் வர்க்க போராட்டமும் வெடித்து வருகையில், இந்த எதிர்ப்புக்குத் தலைமை கொடுக்கக்கூடிய சமூக சக்தி முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையில் ஒரு சர்வதேச, சோசலிச, போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பது தான் இப்போது செய்ய வேண்டியதாகும்.