Print Version|Feedback
In defense of the Red Hen
ரெட் ஹென்னின் பாதுகாப்பிற்காக
Andre Damon
26 June 2018
வேர்ஜினியாவின் லெக்சிங்டன் உணவு விடுதி ஒன்றில், வெள்ளிக்கிழமை, வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்புத்துறை செயலர் சாரா ஹக்கபீ சாண்டர்ஸ் க்கு உணவு பரிமாற முடியாதென பணியாளர் நிராகரித்ததைத் தொடர்ந்து, ரெட் ஹென் (Red Hen) உணவக உரிமையாளர் விடுதியை விட்டு வெளியேறுமாறு அப்பெண்மணியை கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வு ஒரு செவ்வாய்கிழமை சம்பவத்தைப் பின்தொடர்ந்து நடந்திருந்தது, அதில், உள்நாட்டு பாதுகாப்புத்துறை செயலர் கிர்ஸ்ஜென் நீல்சன் வாஷிங்டன் டி.சி. உணவுவிடுதி ஒன்றில் இரவு உணவை அருந்திக் கொண்டிருந்தபோது, ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒரு கூட்டம், “குழந்தைகளால் நிம்மதியாக சாப்பிட முடியாவிட்டால், நீங்களும் நிம்மதியாக சாப்பிட முடியாது!” என்று கோஷமிட்டனர். இரண்டு நாட்களுக்குப் பின்னர், மற்றொரு உணவுவிடுதியில் இருந்த ஒரு வாடிக்கையாளர், வலதுசாரி சித்தாந்தவாதியும், வெள்ளை மாளிகை ஆலோசகருமான ஸ்டீபன் மில்லரை ஒரு பாசிசவாதி என கண்டனம் செய்தார்.
இத்தகைய சம்பவங்கள், ஐக்கிய நாடுகள் சபையால் சித்திரவதையாக கண்டிக்கப்பட்ட ஒரு நடைமுறையான, புலம்பெயர்ந்த பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகளைப் பிரிக்கும் ட்ரம்ப் நிர்வாக கொள்கை மீது மில்லியன் கணக்கான அமெரிக்கர்களிடையே நிலவும் மிதமிஞ்சிய மனக்குமுறலையும், அதிர்ச்சியையும் பிரதிபலிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிதி சேகரிப்பவர்களுக்கு நூறாயிரக் கணக்கானவர்கள் நிதி வழங்கி உள்ளனர், இது பேஸ்புக்கில் ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தி உள்ளது, குரூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான நடைமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நாடெங்கிலும் நடைபெற்றன.
ஐயத்திற்கிடமின்றி, ரெட் ஹென் விடுதியின் பணியாளர்களும், அத்துடன் அதன் உரிமையாளரும், ட்ரம்பின் அருவருக்கத்தக்க அந்த ஊதுகுழல் வந்திருக்கையில் நியாயமாகவே வெறுப்படைந்திருந்தனர், அவர் ஜனாதிபதியின் குற்றவியல் கொள்கைகளை நியாயப்படுத்த நாளுக்கு நாள் பொய்களை உமிழ்ந்து வருகிறார். அவர்கள் பண்பான முறையில் அப்பெண்மணியை வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர்.
இத்தகைய தனித்தனி நடவடிக்கைகள் ட்ரம்பை எதிர்த்து போராடுவதற்கான ஒரு மூலோபாயத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்று யாரும் வாதிட முடியாது என்றாலும், அவை வறுமைப்படுத்தப்பட்ட அகதிகளை மனிதாபிமின்றி கையாள்வது மீது மட்டுமல்ல, மாறாக சமத்துவமின்மை, போர், சமூகத்தை இராணுவமயப்படுத்துவது மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றிற்கு எதிராகவும் பரந்த மற்றும் ஆழ்ந்த சமூக கோபத்தைப் பிரதிபலிக்கின்றன.
இதனால் தான், அமெரிக்க மக்களிடையே ரெட் ஹென்னுக்கு கிடைத்துள்ள பொதுவான அனுதாபம் மற்றும் ஆதரவுக்கு மத்தியில், ஜனநாயகக் கட்சி மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் விடையிறுப்பானது, ரெட் ஹென் உரிமையாளர் மற்றும் பணியாளர்களுக்கு "மரியாதை" குறித்து பகட்டாரவாரத்துடன் பாசாங்குத்தனமாக உபதேசம் செய்வதை உள்ளடக்கத்தில் கொண்டுள்ளது.
செனட் சபையின் சிறுபான்மை தலைவர் சார்ஸ் சூமர் (நியூ யோர்க்கில் இருந்து வந்த ஜனநாயகக் கட்சியாளர்) திங்கட்கிழமை செனட் தளத்திலிருந்து, “அரசியல் எதிர்ப்பாளர்களைத் துன்புறுத்த யாரும் அழைப்புவிடுக்கக்கூடாது. அது சரியானதல்ல. அது அமெரிக்க பாணியல்ல,” என்று அறிவித்தார்.
பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியின் சிறுபான்மை தலைவர் நான்சி பெலோசி, ட்ரம்பின் அதிகாரிகளைத் "தொல்லைக்கு உட்படுத்துவதை" “ஏற்கவியலாது,” என்று கண்டித்ததுடன், “நல்லிணக்கத்தை எட்டும் விதத்தில், நாம் வழிவகைகளை செய்ய வேண்டும்,” என்றார்.
இது போலவே, “உணர்வுகள் மேலோங்கி இருக்கின்றன…" என்றாலும் "திருமதி. ஹக்கபீ… நிம்மதியாக இரவு உணவு அருந்த அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்,” என்று ஒரு தலையங்கத்தில் குறிப்பிட்டு வாஷிங்டன் போஸ்ட் அதன் கண்டனத்தையும் சேர்த்துக் கொண்டது. அது தொடர்ந்து குறிப்பிடுகையில், “நாகரீகமற்றத்தன்மையை நியாயப்படுத்தும் ஒரு பிரத்யேக தருணத்தில் நாம் இருக்கிறோம் என்று வலியுறுத்துபவர்கள், எத்தனை அமெரிக்கர்கள் அவர்களின் சொந்த பிரத்யேக தருணத்தைக் காணக்கூடும் என்பதை யோசிக்க வேண்டும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டது.
ட்ரம்ப் மந்திரிசபை உறுப்பினர்கள் "குண்டர்களால்" அவமானப்படுத்தப்பட்டு வருவதாக மற்றொரு செய்தி கட்டுரையில் போஸ்ட் குறை கூறியது.
ட்ரம்ப் மற்றும் அவரின் கூட்டாளிகளின் உணர்வுகளுக்காக ஜனநாயகக் கட்சியினர் திடீரென கவலை கொள்வதை எந்த கணக்கில் எடுப்பது?
கடந்த இரண்டாண்டுகளாக, ஜனநாயகக் கட்சியும், போஸ்ட் மற்றும் நியூ யோர்க் டைம்ஸூம், 2016 அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு இருந்தது என்றும் மற்றும் மாஸ்கோவுடன் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரக் குழு நயவஞ்சக கூட்டு வைத்திருந்தது என்றும் இத்தகைய குற்றச்சாட்டுக்களை மையப்படுத்தி ட்ரம்ப் க்கு எதிராக ஒரு கன்னைவாத சண்டையை நடத்தி வந்துள்ளன. ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது, ட்ரம்பின் முன்னாள் தேர்தல் பிரச்சார குழு நிர்வாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அவரது வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் வீட்டில் மத்திய விசாரணை குழு சோதனை நடத்தி உள்ளது. ஒரு தொடர் நடவடிக்கையாக, பத்திரிகைகள் ஆபாசப்பட நடிகர்கள் மற்றும் விபச்சாரிகள் சம்பந்தப்பட்ட பாலியல் மோசடிகளைப் பரப்புகின்றன. ஆளும் உயரடுக்கிற்குள் வெளியுறவு கொள்கை மீதான சர்ச்சைகளை மையமிட்ட ஓர் அரண்மனை சதி என்றளவுக்கு மோதலின் தன்மை இருந்த நிலையில், வேறெதுவும் இந்த குற்றச்சாட்டு அளவுக்கு அருவருப்பாக பரப்பப்பட்டிருக்கவில்லை.
இந்த ரஷ்ய-விரோத, ட்ரம்ப்-விரோத பிரச்சாரமானது, அரசியல் ஸ்தாபகம் மற்றும் செல்வச் செழிப்பான உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளுக்கு ஒத்திசைவாக இருக்கின்ற அதேவேளையில், பொதுவாக மக்களைக் கொதிப்பேற்றவில்லை. ஆனால் இப்போதோ, குழந்தைகள் மீதான சித்திரவதை மற்றும் சிறையடைப்பும்; தடுப்புக்காவல் முகாம்கள் கட்டமைக்கப்படுவதும்; விசாரணையின்றி நாடுகடத்துவதற்கான அச்சுறுத்தல்களும் என ட்ரம்ப் அரசாங்கம் நடத்தும் நிஜமான குற்றங்கள் மீது அதிகரித்து வரும் மக்கள் கோபம், ரஷ்ய-விரோத சொல்லாடலையே திடீரென ஒதுக்கித் தள்ளிவிட்டது.
ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பினது குற்றத்திற்கு உடந்தையாய் இருப்பவர்களுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டிக்கின்றனர், ஏனென்றால் முதலாளித்துவத்திற்கு பாதகமின்றி பிற்போக்கான வழிகளில் திசைதிருப்பி விட முடியாத தன்னெழுச்சியான மக்கள் கோபத்தின் எந்தவொரு வடிவத்திற்கும் அவர்கள் உள்ளார்ந்து விரோதமாக உள்ளனர். இராணுவவாதம் மற்றும் போர், சமூக செலவின குறைப்பு நடவடிக்கைகள், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் என அடிப்படை கொள்கை பிரச்சினைகளில், இவ்விரு கட்சிகளுக்கும் பெரிதாக ஒன்றும் வேறுபாடில்லை. உண்மையில், ட்ரம்ப் சரியாக குறிப்பிட்டவாறு மற்றும் முன்னாள் உள்நாட்டு பாதுகாப்புச் செயலர் ஜெஹ் ஜோன்சன் ஞாயிறன்று ஒப்புக் கொண்டவாறு, ஒபாமா நிர்வாகத்தின் கீழும் புலம்பெயர்ந்த குழந்தைகள் அவர்களின் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர்.
ஜனநாயகக் கட்சியினரும் ட்ரம்பும், அமெரிக்க சமூகத்தில் மேலாளுமை செலுத்தும் குற்றகரமான நிதியியல் செல்வந்த குழுக்களின் வெவ்வேறு கன்னைகளுக்காக பேசுகின்றனர்.
ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் சபை பெண்மணி மாக்சின் வாட்டர்ஸ் ட்ரம்ப் மந்திரிசபை உறுப்பினர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு எதிராக போராட்டங்களுக்கு அழைப்புவிடுத்த பின்னர், அவர் பெலோசி மற்றும் சூமரால் கண்டிக்கப்பட்டார். வாட்டர்ஸை பெலோசி தட்டிக் கழித்த 90 நிமிடங்களுக்குள், ட்ரம்ப் ஒரு ட்வீட் செய்தியில் பின்வருமாறு அறிவித்தார்:
“அசாதாரணமான குறைந்த சமயோசித புத்தி கொண்டவரான காங்கிரஸ் சபை பெண்மணி மாக்சின் வாட்டர்ஸ், நான்சி பெலோசி உடன் சேர்ந்து, ஜனநாயகக் கட்சியின் முகமாகி உள்ளனர். அவர் ஆதரவாளர்களுக்கு, அவர்களில் பலர், மீண்டும் அமெரிக்காவை மகத்தானதாக ஆக்குவோம் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த அழைப்பு விடுத்துள்ளார். மாக்ஸ் மீதான உங்கள் நல்லெண்ணங்கள் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்!”
எல்லையில் பெற்றோர்களையும் குழந்தைகளையும் பிரிப்பதற்கு எதிராக உள்ளார்ந்து வந்த மக்களின் ஆவேசம் தான் ட்ரம்ப் நிர்வாகம் பின்வாங்க இட்டுச் சென்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அது அக்கொள்கையை நிறுத்திக் கொள்வதாக ட்ரம்ப் வாக்குறுதியளிக்க இட்டுச் சென்றது. ஆனால் ஜனநாயகக் கட்சியினர் வாட்டர்ஸைக் கண்டிப்பதன் மூலம், காங்கிரஸின் ஓர் உறுப்பினருக்கு எதிரான ஓர் அச்சுறுத்தலில் —"மீண்டும் அமெரிக்காவை மகத்தானதாக ஆக்குவோம்" என்ற அடிப்படையில்—ட்ரம்ப், நாடாளுமன்ற அதிகாரங்களை மீறிய அவரது பாசிசவாத அடித்தளத்தில், மீண்டுமொருமுறை தாக்குதலுக்குச் செல்ல, அவருக்கு வாய்ப்பளிக்கின்றனர்.
ஒட்டுமொத்த அத்தியாயமும் அமெரிக்க அரசியலைக் குறித்து மறுக்கவியலாத சில யதார்த்தங்களை எடுத்துரைக்கின்றன. ஆளும் வர்க்கத்தினுள் ட்ரம்புக்கும் மற்றும் அவரது கன்னைவாத எதிர்ப்பாளர்களுக்கும் இடையே எந்தளவுக்கு கடுமையான பிளவுகள் உள்ளன என்பது விடயமே இல்லை, அவர்கள் அனைவரும் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா குறிப்பிட்டவாறு ஓர் "உள்கட்சி பூசல்களுக்குள்" தான் சம்பந்தப்பட்டுள்ளார்கள். போர் குற்றங்கள் மற்றும் தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமையுடன் மனிதயினத்திற்கு எதிரான குற்றங்கள் புரிவதற்கான அரசின் திறன் உட்பட, அடிப்படை வர்க்க பிரச்சினைகள் மீதான முக்கியத்துவத்தைப் பொறுத்த வரையில், ஆளும் உயரடுக்கின் அனைத்து கன்னைகளும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அணிதிரண்டுள்ளன.
ட்ரம்ப் அவரின் பாசிசவாத அடித்தளத்தை முடுக்கி விடுவதற்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி வருகின்ற நிலையில், ஜனநாயகக் கட்சியினரோ அவர்களின் விருப்பத்திற்குரிய பிரச்சினைகளான பாலியல் மற்றும் போர் கொள்கை மீதான பிரச்சினைகளில் மையமிடாமல், மாறாக அடிமட்டத்திலிருந்து புரட்சிகர பிரச்சினைகள் மீது மையமிட்ட ஓர் இயக்கம் அபிவிருத்தி அடைந்துவிடுமோ என்ற நிரந்தர பீதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறனர்.
உலக சோசலிச வலைத் தளம், "அரண்மனை சதியா அல்லது வர்க்கப் போராட்டமா: வாஷிங்டனில் அரசியல் நெருக்கடியும், தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயமும்" என்ற அதன் கடந்த ஜூன் மாத அறிக்கையில் விவரித்ததைப் போல, அரசுக்குள் நிலவும் ட்ரம்ப் எதிர்ப்பும் மக்களுக்குள் நிலவும் ட்ரம்ப் எதிர்ப்பும் முற்றிலும் வெவ்வேறான இயக்கங்களாகும், தீவிரமான வெவ்வேறு அணுகுமுறைகள், குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களுடன், ஒன்று உயர்மட்டத்திலிருந்து வருகிறது மற்றொன்று அடிமட்டத்திலிருந்து வருகிறது.
ஜனநாயகக் கட்சியினரின் அரண்மனை சதிக்கான அணுகுமுறைகளுக்கு வர்க்க போராட்ட அணுகுமுறைகளை எதிரீடாக நிறுத்த வேண்டும். ட்ரம்ப் எதன் ஒரு இழிவார்ந்த வெளிப்பாடாக விளங்குகிறாரோ, அந்த முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கிவீசும் நோக்கத்துடன் ஒரு சோசலிச மூலோபாய அடித்தளத்தில் தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதே, ட்ரம்ப் நிர்வாகத்தின் போர்வெறியூட்டல், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் தாக்குதலுக்கு எதிராக போராடுவதற்கான ஒரே வழியாகும்.