Print Version|Feedback
The far right determine Europe’s refugee policy
ஐரோப்பாவின் அகதிகள் கொள்கையை அதிவலதுசாரிகள் தீர்மானிக்கிறனர்
By Peter Schwarz
15 June 2018
ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு அடுத்த ஆறாண்டு நிதியியல் காலத்தில், புலம்பெயர்வு தொடர்பான அதன் செலவுகளை 13 பில்லியன் யூரோவில் இருந்து 35 பில்லியன் யூரோவாக (15 இல் இருந்து 40.5 பில்லியன் அமெரிக்க டாலர்), அண்மித்து மூன்று மடங்கு அதிகரிக்க திட்டமிடுகின்றது.
இந்த பணம் அகதிகளை ஆதரித்து, அந்தந்தநாடுகளில் ஒருங்ணைப்பதற்காக செலவிடப்பட போவதில்லை, மாறாக ஐரோப்பாவின் வெளி எல்லைகளை மூடவும், கூட்டம் கூட்டமாக அகதிகளை நாடுகடத்தவும், உள்நுழைவதிலிருந்து அகதிகளைப் பயமுறுத்தும் நோக்கிலான ஏனாய நடவடிக்கைகளுக்கும் செலவிடப்பட உள்ளன. ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பு ஆணையமான Frontex இன் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை 1,000 இல் இருந்து 10,000 ஆக அதிகரிக்கப்பட இருப்பதுடன், உயர்-தொழில்நுட்ப, அதிநவீன, இராணுவ-பாணியிலான எல்லை போலிஸாக அது விரிவுபடுத்தப்பட உள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு அதன் இந்த திட்டங்களைக் கொண்டு, 28 ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளுக்கு இடையே அகதிகளை ஒதுக்கீடு முறை அடிப்படையில் பகிர்ந்து கொள்வதற்கான அதன் முந்தைய முயற்சிகள் தோல்வியடைந்ததற்கு எதிர்வினையாற்றி வருகிறது. ஹங்கேரி, போலாந்து மற்றும் செக் போன்ற அதிவலது தேசியவாத அரசாங்கங்கள் ஒரேயொரு அகதியைக் கூட ஏற்க மறுத்துள்ளன. அகதிகள் மீதான பிரச்சினையும், ஐரோப்பாவிற்குள்ளேயான எல்லை மூடுவது மீதான பிரச்சினையும் ஐரோப்பிய ஒன்றிய முறிவுக்கு அச்சுறுத்தியது.
இப்போது இந்நெருக்கடி, தீவிர வலது கொள்கைகளை ஏற்பதன் மூலமும் மற்றும் உள்நுழைய முடியாதவாறு வெளி எல்லைகளை மூடுவதன் மூலமும், அதேவேளையில் அகதிகளை ஈவிரக்கமின்றி அலைக்கழிப்பது, சிறையிலடைப்பது மற்றும் நாடு கடத்துவது ஆகியவற்றின் ஊடாக தீர்க்கப்பட உள்ளது. ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், பிரான்சின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளது தலைவர்களும் புரூசெல்ஸ் இற்கு முழு ஆதரவளிக்கின்றனர்.
மேர்க்கெல் புதனன்று பேர்லினில், வியன்னாவில் அதிவலது தீவிர சுதந்திர கட்சி (FPÖ) உடனான ஒரு கூட்டணியில் ஆட்சி செலுத்துகின்ற, ஆஸ்திரிய சான்சிலர் செபஸ்தியான் குர்ஸை சந்தித்தார். குர்ஸ் அவரே கூட மூர்க்கமான அகதிகள்-விரோத கொள்கைக்கு முன்னோடியாவார்.
ஜூலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பதவியை ஆறு மாதத்திற்கு ஏற்கவிருக்கின்ற ஆஸ்திரியா, “மிக முக்கியமாக பாதுகாப்பு பிரச்சினையில்" முக்கிய கவனம்செலுத்தும் என குர்ஸ் அதற்கு பிந்தைய பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்தார். “பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கொள்கையில் மிகப்பெரும் கூட்டுறவு"க்கு கூடுதலாக, “நமது ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்நாட்டு பாதுகாப்புக்காக புலம்பெயர்வோர் பிரச்சினைக்கு ஒரு தீர்வையும்" இது உள்ளடக்கி இருக்கும். ஆஸ்திரியா "வெளி எல்லை பாதுகாப்பு மீது கவனம் செலுத்தும்" மற்றும் "ஒரு இலக்கை பின்தொடரும்,” பெயரிட்டு கூறுவதானால் "ஐரோப்பாவுக்குள் சட்டவிரோத புலம்பெயர்வு, அகதிகளின் குடியேற்றம் பாய்வதை நிறுத்த" செயல்படும்.
குர்ஸை மேர்க்கெல் ஆதரித்தார். புலம்பெயர்வு மீதான அவர் கண்ணோட்டங்கள் "முன்மாதிரிக்கும் மேலானதா அல்லது அச்சுறுத்தும் முன்னுதாரணமானதா" என வினவியதும், ஜேர்மன் சான்சிலர் "நாம் வெளி எல்லை பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டியுள்ளது,” என்பதில் அவர் உடன்படுவதாக கூறி விடையிறுத்தார். இதுவரையில் அப்பெண்மணி "ஆஸ்திரிய [ஐரோப்பிய ஒன்றிய] தலைமையின் நடவடிக்கைகளை" நம்புகிறார். ஒரு முன்மாதிரியாக, துருக்கியுடன் எட்டப்பட்ட குடியேற்ற உடன்படிக்கையை மேற்கோளிட்டார், அது இனி ஐரோப்பாவுக்குள் அகதிகள் நுழையாமல் இருப்பதை உறுதிப்படுத்த சூளுரைத்துள்ளது.
அதிவலதின் கொள்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பது, இன்னும் அதிகமாக கோருவதற்கு அவர்களை ஊக்குவிக்கிறது.
ஜேர்மன் சான்சிலரைச் சந்தித்த பின்னர், அதற்கடுத்த நாள் குர்ஸ் ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீகோவரைச் சந்தித்தார். பழமைவாத பவேரிய கிறிஸ்துவ சமூக ஒன்றியத்தின் (CSU) தலைவராகவும் உள்ள சீகோவர், மேர்க்கெலின் அகதிகள் கொள்கையை பல முறை வலதிலிருந்து விமர்சித்துள்ளார். தற்போது, மேர்க்கெலும் சீகோவரும் கூர்மையாக பிளவுபட்டுள்ளனர், ஏனென்றால் மற்றொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் பதிவு செய்துள்ள அகதிகளை எல்லையிலேயே தடுத்துநிறுத்த வேண்டுமென சீகோவர் விரும்புகிறார். மேர்க்கெல் இந்த நடவடிக்கை நிராகரிக்கிறார் ஏனென்றால் அது ஐரோப்பிய ஒன்றியத்தைப் பிளவுபடுத்துமென அவர் அஞ்சுகிறார்.
குர்ஸ் மற்றும் சீகோவர் ஒருவரையொருவர் பாராட்டுக்களில் மூழ்கடித்துக் கொண்டதுடன், பாதுகாப்பு, பயங்கரவாதம் மற்றும் புலம்பெயர்வு பிரச்சினைகளில் அவர்கள் இத்தாலிய உள்துறை அமைச்சர் மத்தேயோ சல்வீனியுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்தனர். லெகா கட்சியின் தலைவரான சல்வீனி ஒரு வலதுசாரி தீவிரவாதியும் இனவாதியும் ஆவார். இவர் வெறும் மூன்று நாட்களுக்கு முன்னர் தான், 629 அகதிகளை ஏற்றி வந்த Aquarius மீட்பு கப்பலை இத்தாலி துறைமுகத்தில் நுழைய அனுமதிக்க மறுத்து, ஐரோப்பா எங்கிலும் மக்களின் சீற்றத்திற்கு எரியூட்டினார்.
ஆஸ்திரிய உள்துறை அமைச்சர் ஹெர்பேர்ட் கிக் (FPÖ), இவரும் சுயமாக அவரே ஒப்புக்கொண்ட ஒரு அதிதீவிர வலதுசாரியாவார். இவர் இவரது இனவாத, முஸ்லீம்-விரோத பிரச்சார கோஷங்களுக்காக அவமதிப்பைப் பெற்றுள்ளார். இவர் இந்தாண்டு ஜனவரியில் அறிவிக்கையில், தஞ்சம் கோருவோர்கள் "ஒரேயிடத்தில் ஒன்றுகுவிக்கப்பட" வேண்டும் என்றார்—இது தெளிவாக கொடூர நாஜி சிறை முகாம்களை அர்த்தப்படுத்துகிறது.
குர்ஸ் அகதிகளுக்கு எதிராக திட்டமிட்ட கூட்டுறவை, முதலாம் மற்றும் இரண்டாம் உலக போர்களின் இராணுவ கூட்டணிகளின் பழைய வரையறைகளில் விவரித்தார். அவர் "விரும்புவர்களின் அச்சை" (axis of the willing) நம்புவதாக தெரிவித்தார். அவர் "ரோம், வியன்னா மற்றும் பேர்லினுக்கு இடையிலான நல்ல கூட்டுறவை" குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், புலம்பெயர்வோரை இன்னும் சிறப்பாக கையாள ஒரு நல்ல பங்களிப்பு செய்வதற்கேற்ப நாம் அதை கட்டமைக்க வேண்டுமென்றார்.
சீகோவர் கண்கூடாகவே மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். கிறிஸ்துவ சமூக ஒன்றியமும் மேர்க்கெலின் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியமும் (CDU) ஜேர்மன் நாடாளுமன்றத்தில் இடம் பிடித்துள்ள அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) இல் இருந்து உத்தியோகபூர்வமாக தங்களை விலக்கி வைத்துள்ளன. யதார்த்தத்தில், சீகோவர் AfD உடன் இணைந்துள்ள கட்சிகளுடன் ஐரோப்பிய மட்டத்தில் மிகவும் நெருக்கமாக செயல்பட்டு வருகிறார். AfD ஐ ஜேர்மன் அரசாங்கத்திற்கு ஏற்றுக் கொள்வதென்பது வெறும் நேரம் சார்ந்த விடயம் மட்டுந்தான். “ஐரோப்பாவில் நமது நிலைப்பாடுகளுக்கு நிறைய எதிர்ப்பு இருக்கலாம், ஆனால் இப்போதோ நம்மை ஆதரிக்கும் இந்த குழு மிகப்பெரியதாக வளர்ந்துள்ளது,” என குர்ஸ் தெரிவித்தார்.
அதிவலதின் அகதி கொள்கைகளுக்கான ஆதரவு, CSU மற்றும் CDU இன் வலதுசாரியோடு மட்டுப்பட்டு விடவில்லை. சமூக ஜனநாயக கட்சியின் (SDP) தலைவர் ஆண்ட்ரியா நஹ்லெஸ், அகதிகள் வரும் மஹ்ரெப் [வட ஆபிரிக்க] அரசுகளைத் பாதுகாப்பான நாடுகளாக அறிவிக்கப்பட வேண்டுமென சமீபத்தில் கோரினார். "நம்மால் ஒவ்வொருவரையும் ஏற்றுக் கொள்ள முடியாது," என்று ஆத்திரத்துடன் கூறி, அகதிகளை வேட்டையாடும் அனைவருக்கும் மடைக்கதவுகளைத் திறந்துவிட்டார். தேசிய அரசாங்கத்தில் CDU மற்றும் CSU இன் கூட்டணி பங்காளியாக விளங்கும் SDP, மேர்க்கெலின் அகதி கொள்கையை முழுமையாக ஆதரிக்கிறது.
எதிர்கட்சிகள் என்றழைக்கப்படுபவற்றை பொறுத்த வரையில், அவையும் வலதுசாரி அகதிகள் கொள்கைகளை ஆதரிக்கின்றன. சுதந்திர ஜனநாயக கட்சியின் பிரச்சாரம், AfD இன் பிரச்சாரத்தில் இருந்து அரிதாகவே வேறுபடுகிறது. Tübingen நகரின் பசுமை கட்சி நகரசபை தலைவர் போரிஸ் பால்மர் Frankfurter Allgemeine Zeitung இல் எழுதுகையில், “குற்றகரமான வேற்றுகிரகவாசிகளுக்கு" எதிராக கடுமையாக விடையிறுக்குமாறு சமீபத்தில் கோரினார். இடது கட்சியைப் பொறுத்த வரையில், அகதி கொள்கையில் AfD இன் நிலைப்பாட்டைப் பகிர்ந்து கொள்ளும் கட்சி தலைவர் சாரா வாகன்கினெக்ட் உடன் ஒன்றுபடுமாறு அழைப்புவிடுப்பது தான் அதன் கடந்த வார மாநாட்டில் முக்கிய கவலையாக இருந்தது.
நடப்பு அபிவிருத்திகள், வாரக்கணக்கில் ஜேர்மன் ஊடங்களில் சீறிக் கொண்டிருக்கும் வெளிநாட்டவர் விரோத பிரச்சாரத்தின் பின்புலத்தில் நடந்துள்ளன. மதிக்கத்தக்க பத்திரிகையாளர்கள் என்று கூறப்படுபவர்களும் கூட, மனசாட்சியோடு உண்மையைச் செய்தியாக வெளியிடும் அடிப்படை கோட்பாடுகளுக்கான எல்லா விசுவாசத்தையும் குழிதோண்டி புதைத்துள்ளனர். புலம்பெயர்வு மற்றும் அகதிகளுக்கான நடுவண் அலுவலகத்தின் (Bamf) பிரேமன் நகர கிளை முறையற்ற மற்றும் குற்றகரமான தஞ்சம் வழங்கும் முடிவுகள் என்ற குற்றஞ்சாட்டுகளுடன் இணைந்து, துயரகரமான ஒரு 14 வயது சிறுமி கொலைப்பட்ட சம்பவம் இதற்கு சாதகமாக்கப்பட்டு வருகிறது. இந்த குற்றச்சாட்டுக்கள் தவறானவை மற்றும் நயவஞ்சகமானவை என்பதாக இப்போது அறியப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள் அகதிகளுக்கு எதிராக மட்டும் திருப்பப்படவில்லை. இவை ஜனநாயக உரிமைகளை அழிப்பதற்கும், உளவுத்துறை மற்றும் போலிஸ் சேவைகளைக் கட்டமைப்பதற்கும் மற்றும் வலதுசாரி தீவிரவாத சக்திகளைப் பலப்படுத்துவதற்குமான ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தின் பாகமாக உள்ளன. கடந்த நூற்றாண்டைப் போலவே, ஆளும் வர்க்கம் மீண்டுமொருமுறை சமூக சமத்துவமின்மை மற்றும் இராணுவவாதத்திற்கு அதிகரித்து வரும் எதிர்ப்பை நசுக்கும் முயற்சிகளுக்கு தயாரிப்பு செய்து வருகிறது.