Print Version|Feedback
තැපැල් සේවක අරගලය: කම්කරු ක්රියාකාරී කමිටු ගොඩ නගනු! සමාජවාදී වැඩපිලිවෙලට සටන් කරනු !
இலங்கை தபால் ஊழியர் போராட்டம்: தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பு! சோசலிச வேலை திட்டத்திற்காகப் போராடு!
W.A. Sunil
08 June 2018
இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர்கள் 4,000 பேர் அரசாங்கத்தின் கெடுபிடிக்களுக்கும் தொழிற்சங்கங்களின் வரையறுப்புகளுக்கும் மத்தியில் ஜூன் 5 அன்று முடிவுற்ற இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துக்கொண்டனர். ஜூன் 11ம் திகதி பல்லாயிரக்கணக்கான ஏனைய தபால் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
சம்பளம் மற்றும் சேவை நிலைமைகளை வென்றெடுக்கவும் அதேபோல் தனியார்மயப்படுத்தலை குறியாக கொண்டு அரசாங்கம் நடைமுறைப்படுத்த உள்ள வேலைத் திட்டத்திற்கும் எதிராக தாம் போராடத்தயார் என்பதையே தபால் ஊழியர்கள் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர்.
தபால் மற்றும் தொலைத் தொடர்பு அலுவலர்களின் சங்கத்தின் (த.தொ.அ.ச.) கருத்துக்களின் படி, முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தின் பின்னர், ஜூன் 11 நடத்தவுள்ள வேலை நிறுத்தத்தையும் இடையில் கைவிடப்போவது போல் தெரிகிறது. த.தொ.அ.ச. மற்றும் தபால் தொழிற்சங்க கூட்டணி, ஊழியர்களைப் பிளவுபடுத்த நனவாக செயற்படுகிறது. தபால் ஊழியர்கள் இந்த பிளவுப்படுத்தலை எதிர்க்க வேண்டும். உரிமைகளை வென்றெடுக்கும் தொடர் போராட்டத்திற்கு அனைவரையும் பாங்குபெற செய்வதற்கும், தம்மை போன்றே அரசாங்கத்தினதும் முதலாளிகளதும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள அனைத்து தொழிலாளர்களதும் ஆதரவை அதற்குப் பெற்றுக்கொள்ளவும் தபால் ஊழியர்கள் முன்வர வேண்டும்.
கடந்த 12 வருட காலமாக மேற்கொண்ட எதிர்ப்பு போராட்டங்களின் மூலம் தபால் ஊழியர்கள் பெற்றுள்ள அனுபவமானது, தமது உரிமைகளை வென்றெடுக்கவும் உறுதிப்படுத்திக்கொள்ளவும் அரசாங்கத்தின் கொள்கைகளை தோற்கடிக்கும் அரசியல் போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்துகின்றது; எனினும் அவ்வாறானதொரு போராட்டத்தை தொழிற்றசங்களுக்கு ஊடாக முன்னெடுக்க முடியாது என்பதும் அவர்களது அனுபவமாகவுள்ளது.
அண்மைய இரண்டு நாள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து த.தொ.அ.ச. வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்படுவதாவது: "தபால் ஊழியர்களாக எமது குழுவினர்கள் அனைவரும் முகம்கொடுத்துள்ள பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கும், 2006ல் இருந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரையிலும் நிர்வாகத்தால் நியாயமான தீர்வினை வழங்க முடியவில்லை." இந்த தோல்விகரமான பிரகடனத்தில், அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கங்களுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்ற பொறியினுள் தொழிலாளர்களை இறுக்கி த.தொ.அ.ச. மற்றும் ஏனைய தபால் சங்கங்களும் முன்னெடுத்துச் சென்ற துரோக செயற்பாடே நிர்வாணத்திற்கு வந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் 27-28ம் திகதிகளில் தபால் எதிர்ப்பு போராட்டமானது இன்னுமொரு வேலை நிறுத்தத்தினை செய்வதாக வாய்ச்சவடால் விடுத்து தொழிற்சங்க அதிகரத்துவத்தினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் நாட்டில் "நிலவும் அரசியல் சூழலினால்", அதாவது உள்ளுராட்சி மன்றத் தேர்தலினால், ஜனவரி 10 நடைபெறவிருந்த வேலைநிறுத்தத்தை கைவிடுவதாக தபால் தொழிற்றசங்கங்களின் கூட்டு முன்ணனியின் தலைவர்கள் கூறினர். தேர்தல் காலத்தில் போராட்டங்களை நிறுத்துமாறு அரசாங்கம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஊடாக விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே அவ்வாறு செய்தனர். தொழிற்சங்கங்களும் அவற்றின் அதிகாரத்துவமும் பிரதிநித்துவம் செய்வது, தொழிலாளர்களின் நலன்களை அன்றி, முதலாளித்துவ அரசாங்கத்தினதும் ஆளும் வர்க்கத்தினதும் தேவையையே ஆகும்.
இந்த தொழிற்சங்கங்கள், அரசாங்கம் தபால் திணைக்களத்தை முழுமையாக தனியார்மயப்படுத்த திட்டமிட்டு வருகின்ற சூழலிலேயே, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து கோரிக்கைகளை வென்றெடுக்கலாம் என்ற பொறியை மீண்டும் மீண்டும் உருவாக்கின. தபால் மற்றும் தொலைத் தொடர்பு திணைக்களத்தை இரண்டாக்கி, தபால் திணைக்களத்தை கரைத்துவிடும் நடவடிக்கை 1997 இலேயே ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்க அரசாங்கத்தின் கீழ் தபால் திணைக்களத்தினை கூட்டுத்தாபனமாக மாற்றும் திட்டமொன்று முன்வைக்கப்பட்ட போதிலும் தொழிலாளர்களின் எதிர்ப்பினால் அது தற்காலிகமாக பின்தள்ளப்பட்டது.
எனினும், கடிதங்களையும் பொதிகளையும் விநியோகிப்பதற்கு தனியாருக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல், முகவர் தபால் நிலையங்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்குதல் மற்றும் தபால் நிலையங்களில் பேணப்பட்டு வந்த நிதி சேமிப்புமுறை இல்லாதொழிக்கப்பட்டமை போன்ற நடவடிக்கைகள் ஊடாக கடந்த இரண்டு தசாப்தங்களுக்குள் திணைக்களத்தினை கரைத்துவிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஊழியர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பினை கரைத்து விடுவதற்கே தொழிற்றசங்கங்கள் இடைஇடையே கர்ஜித்தன.
தற்போதைய அரசாங்கம், தபால் திணைக்களத்தில் "அமைப்பு ரீதியான மாற்றத்தினை செய்தல்" என்பதை பிரேரித்திருப்பது, ஆளும் வர்க்கத்தின் ஆழமடைந்துவரும் பொருளாதார அரசியல் நெருக்கடியின் மத்தியிலும் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ் அரச நிறுவணங்களை தனியார்மயப்படுத்தும் வேலைத்திட்டத்தினை விரைவுபடுத்துவதன் அடிப்படையிலும் ஆகும். அரசாங்கத்தின் இந்த பொருளாதார வேலைத் திட்டங்களும் அவற்றை நடைமுறைபடுத்த ஜனநாயக உரிமைகளை ஒடுக்க மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுடனேயே தபால் ஊழியர்களின் கோரிக்கைகள் மோதிக்கொள்கின்றன. இந்த வேலைதிட்டத்தினை தோற்கடிக்காமல் தொழிலார்களினதும் வறியவர்களினதும் உரிமைகளை பாதுகாத்துக்கொள்ளவோ வெற்றிகொள்ளவோ முடியாது.
இந்த போராட்டத்தின் இன்றியமையாத முதல் நடவடிக்கையாக, தபால் ஊழியர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடுவதற்கு தொழிற்சங்கங்களில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. தபால் ஊழியர்கள் தமது ஜனநாயக வாக்கின் முலம் தெரிவுசெய்துகொள்ளும் நடவடிக்கை குழுக்கள் ஊடாக, உரிமைகளுக்கான போராட்டத்தை ஒழுங்கமைக்கும் நடவடிக்கையை தமது கையில் எடுக்க வேண்டும். அவ்வாறான நடவடிக்கை குழுக்களை அமைப்பது, தொழிலாள வர்க்கத்தின் சகல பகுதியினருக்கும் இன்று தீர்க்கமான விடயமாகியுள்ளது.
சம்பளம் மற்றும் வேலை நிலைமைகள் சம்பந்தமான கோரிக்கைகளும், தனியார்மயப்படுத்தலுக்கு எதிரான போராட்டமும், முதலாளித்துவ வர்க்க ஆட்சிக்கு எதிரான போராட்டமாகும். முதலாளித்துவ வர்க்க ஆட்சியை தூக்கி வீசி, சோசலிச பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவராமல் தனியார்மயமாக்கங்களை நிறுத்தவோ அல்லது தொழில், சம்பளம் மற்றும் வேலை நிலைமைகள் தொடர்பான எந்தவொரு உரிமையையும் பாதுகாக்கவோ வெற்றிகொள்ளவோ முடியாது.
எனவே, முதலாளித்துவ அரசாங்கத்தின் திட்டங்களை தோற்கடிக்கவும் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்குமான குறிக்கோளைக் கொண்ட, அரச, தனியார் மற்றும் பெருந்தோட்டம் உட்பட அனைத்து துறைகளையும் சேர்ந்த தொழிலாள வர்க்கத்தின் சோசலிச அரசியல் இயக்கமொன்றை கட்டியெழுப்புவது இன்றியமையாததாகும். அதற்குள், முதலாளித்துவ அரசின் தாக்குதல்களுக்கு உள்ளாகும் கிராமப்புற ஏழை விவசாயிகள், நகர்ப்புற வறியவர்கள், மாணவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்களும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும். அத்தோடு இதேபோன்ற தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கும் அவற்றுக்கு எதிராக போராட்டங்களில் இறங்கி வரும் ஆசியா பிராந்தியத்திலும் மற்றும் உலகம் முழுதும் உள்ள தொழிலாள வர்கத்துடன் ஐக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த வேலைத் திட்டத்துக்காக போராடும் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) உடன் இணைந்து, அதை தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சியாக கட்டியெழுப்ப முன்வாருங்கள்.